வியாழன், 25 மார்ச், 2010

நினைவோட்டம் 19

நான் படித்த பள்ளி எனது பெரியம்மா வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தது. தினம் காலையில் 9 மணி அல்லது 9.15 மணிக்கு கிளம்பி பள்ளிக்கு செல்வேன்.

பள்ளியில் போதிய இடம் இல்லாததால் மூன்று பிரிவுகளை கொண்ட எட்டாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு மட்டும் பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு தனியார் கட்டிடத்தில் வகுப்பறைகள் ஒதுக்கியிருந்தார்கள். காலையில் பள்ளியில் 9 .45 மணிக்கு இறைவணக்கம் முடிந்ததும் நாங்கள் எங்களது வகுப்புக்கு செல்வோம்.

காலையில் 10 மணியிலிருந்து 1மணிவரை நான்கு பாடங்களும் மதியம் 2 மணியிலிருந்து 4.15 மணிவரை மூன்று பாடங்களும் இருக்கும்.(அப்போதெல்லாம் ஒரு பாடத்திற்கு 45 மணித்துளிகள் தான்.) மதிய இடைவேளை 1 மணியிலிருந்து 2 மணிவரை. அதற்குள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஆசிரியர்கள்நடந்துதான் பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் பள்ளியிலிருந்து எங்கள் கட்டிடத்திற்கு நடந்து வருவதற்கே பத்து மணித்துளிகள் ஆகிவிடும். அப்போது அனேகமாக யாரும் கைக்கெடிகாரம் அணியும் வழக்கம் இல்லாததால், நேரம் முடிந்தது தெரியாமல் பாடம் நடத்திக்கொண்டு இருப்பார்கள்.

பள்ளியில் ஒரு வகுப்பு முடிந்ததும் அடிக்கும் மணிச்சத்தம் எங்கள் கட்டிடம் வரை கேட்காதென்பதால் அடுத்த பாடம் எடுக்கும் ஆசிரியர் வந்தவுடன் தான் பாடம் நடத்துவதை முடிப்பார்கள். இதில் எங்களுக்கு என்ன கஷ்டம் என்றால் காலையில் கடைசி வகுப்பு எடுக்கும் ஆசிரியர் நேரம் போனது தெரியாமல் 2 மணிக்குள் முடிக்காவிட்டால் நாங்கள் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக சென்று சாப்பிட்டுவிட்டு வரவேண்டும்.

ஆனால் மதியம் கடைசி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் சிலபேர் தோராயமாக நேரத்தை கணக்கிட்டு எங்களை விட்டுவிடுவார்கள். அதனால் பல நாட்கள் நாங்கள் சீக்கிரமே வீட்டிற்கு வந்தது உண்டு. விளையாட்டு வகுப்பு இருக்கும் நாட்களில் நாங்கள் பள்ளிக்கு வந்துவிடுவோம்.அதுவுமல்லாமல் கைத்தொழில் வகுப்புக்கும் பள்ளிக்குத்தான் வரவேண்டும்.


அரியலூர் பள்ளியில் இரண்டு வருடம் தச்சு வேலையை கைத்தொழில் பாடமாக எடுத்து படித்த நான், பெண்ணாடத்தில் அந்த பிரிவு இல்லாததால் நெசவு பாடத்தை படிக்கவேண்டியதாயிற்று. அதுவும் ஒரு வருடம்தான். அதனால் அவைகள் இரண்டையுமே முழுவதாய் கற்றுக்கொள்ளவில்லை.


'தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா'வால்நடத்தப்பட்ட 'பிராத்மிக்' தேர்வு எழுதுவதற்காக, எங்கள் இந்தி ஆசிரியரால் பள்ளி முடிந்தபின் நடத்திய இந்தி வகுப்பில் நான் சேர்ந்திருந்ததால், நான் மட்டும் மாலையில் பள்ளிக்கு வந்து இந்தி 'டியூஷன்' முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவேன்.

எனக்கு அப்போது தெரியாது, பின்னால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இந்தி திணிப்பை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளபோகிறோமேன்று!


நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி

7 கருத்துகள்:

  1. அந்த காலங்களில் பள்ளிகளில் இந்தி வகுப்பு நடந்தது என்றவுடன்
    ஏறத்தாழ என் வயதினரை ஒத்தவராக இருக்குமோ என்று எண்ணினேன்.
    சரிதான். நானும் 1955 முதல் 1961 வரை இந்தி படித்து இந்தி போராட்டத்தில்
    ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தபோது காலிலே தடி அடியும் வாங்கியிருக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சூரி அவர்களே! தமிழ் நாட்டில் ஹிந்தி தேவை இல்லை என்றாலும் தமிழ் நாட்டை விட்டு அடுத்த மாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தெரிந்தால் சமாளித்துக்கொள்ளலாம் என்பதை பின்னால் பணியில் இருந்தபோது தெரிந்துகொன்டேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  4. தங்களது வாழ்த்துக்கு நன்றி. தங்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவன் அருள் புரிவானாகுக!

    பதிலளிநீக்கு
  5. தங்களது வாழ்த்துக்கு நன்றி. தங்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவன் அருள் புரிவானாகுக!

    பதிலளிநீக்கு
  6. இந்தி படிக்கிறீர்கள் என்ற போதே நினைத்தேன்.

    எப்படி எதிரியானீர்கள் என்று.

    ஒன்றை அறியாமல் கருத்துச் சொல்வதைவிட அதை அறிந்து சொல்வது இன்னும் வலிமையானது.

    இன்னொரு மொழி கற்றல் எப்போதும் சுகம்தான்.

    அதற்காக தன்மொழியை விட்டுக் கொடுப்பதே துரோகம்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
    வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமே. அதனால் தான் வங்கியில் பணியில் இருக்கும்போது கர்நாடகத்தில் கன்னடத்தையும், டில்லியில் இந்தியையும், கேரளாவில் மலையாளத்தையும் கற்றுக்கொண்டேன்.
    ஆனால் அந்த மொழி நம் தாய்மொழியின் மேல் ஆதிக்கம் செலுத்துவதையோ அல்லது நம் மொழியை புறந்தள்ள முயல்வதையோ பொறுத்துக்கொள்வது எனக்கு உடன்பாடில்லை தான்.

    பதிலளிநீக்கு