வியாழன், 24 பிப்ரவரி, 2011

நினைவோட்டம் 40

நான் முன்பே சொல்லியிருந்தபடி, நண்பர் கிருஷ்ணன்
படிப்பில் சூட்டிகையாக இருந்தும், Composite கணிதம்
படிக்கவேண்டும் என்பதற்காகவே, S.S.L.C
படிக்கும்போது என் அண்ணனிடம் கணித மற்றும்
ஆங்கில பாடங்களுக்காக ‘டியூஷன்’ படித்தார்.

(கிருஷ்ணனைப்போலவே, அவரது இரு மகன்களும்,
மகளும் படிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்கள் பள்ளியில்
நன்றாக படித்து கணிதத்தில் நூற்றுக்கு நூறு
மதிப்பெண்கள் பெற்றபோதும், என் அண்ணனிடம்
அவர்களையும் டியூஷன் படிக்க வைத்தார்.
காரணம் அவருக்கு அவரது ஆசிரியர் மேல் இருந்த
மதிப்பு,நம்பிக்கை ஏன் பக்தி என்று கூட சொல்லலாம்.
அவர்கள் இப்போது மருத்துவராகவும் பொறியாளராகவும் இருக்கிறார்கள்)

கிருஷ்ணனும் நானும் பள்ளிப்படிப்பை முடித்தபின்
மருத்துவம் படிக்க நினைத்தோம். நான் முன்பே
எழுதி இருந்தபடி, எனக்கு மருத்துவக்கல்லூரியில்
இடம் கிடைக்கவில்லை. அவருக்கும் கிடைக்காததால்,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேதியல்
பட்டபடிப்பில் சேர்ந்தார். ஓராண்டு முடிந்ததும்
திரும்பவும் மருத்துவக்கல்லூரியில் படிக்க முயற்சித்து,
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தும் விட்டார்.

ஆனால் விடுதியில் இருந்தால், படிக்கமுடியாது
என்று புரசைவாக்கத்தில் ‘ராக்ஸி’ திரை அரங்கம்
(தற்போது அது இடிக்கப்பட்டு அங்கே சரவணா
ஸ்டோர்ஸ் வந்துவிட்டது) அருகே உள்ள ஒரு
தங்கும் விடுதியில் இருந்து படித்தார்.
அவர் மருத்துவம் படித்து முடிப்பதற்குள்
(அப்போது மருத்துவ படிப்பை 5 ஆண்டுகள்
படிக்கவேண்டும்) நான் வேலையில் சேர்ந்துவிட்டேன்.

நான் எப்போது டில்லியிலிருந்தோ அல்லது
பெங்களூருவிலிருந்தோ சென்னை வந்தாலும்,
என்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்து
அழைத்துவந்து, அவருடன் தங்கவைத்து
திரும்பவும் எழும்பூர் இரயில் நிலையம்
வந்து வண்டி ஏற்றிவிடுவார்.

மருத்துவம் படித்து முடித்து அரசு பணிக்கு
செல்லாமல், விருத்தாசலத்தில் அவரது தந்தையார்
(அவரும் ஒரு புகழ் பெற்ற குழந்தை நல மருத்துவர்)
நடத்திவந்த குழந்தை நல மருத்துவ மனையில்
சேர்ந்து அவருடைய தந்தையாருடன் மருத்துவ
சேவையை செய்ய ஆரம்பித்தார். அவரது
தந்தை மறைவுக்கு பிறகு அந்த மருத்துவ
மனையை அவர்தான் நடத்திவருகிறார்.

கிருஷ்ணனுடைய மருத்துவ மனையில்
எப்போது கூட்டம் தான். அதற்கு காரணம்
டாக்டர் கிருஷ்ணனுடைய அணுகுமுறை தான்.
அவரிடம் வரும் பெற்றோர்களிடம், குழந்தைக்கு
மருத்துவம் செய்வதோடு அவர்களுடைய
குறைகளைக்கேட்டு அவர்களுக்கு ஆறுதல்
சொல்வதால்,அவர்கள் ஒரு மருத்துவரிடம்
வந்ததுபோல் உணராமல் தங்களது உறவினரைக்
காண வந்தது போல் தங்களது சொந்த
கஷ்டங்களையும் சொல்லி ஆறுதல் பெறுவதை
நான் நேரில் கண்டிருக்கிறேன்.

பணவசதி இல்லாதவர்களையும்‘கசக்கி பிழியும்’
இந்த காலத்தில் மிக குறைந்த கட்டணத்தில்
மருத்துவம் பார்ப்பதால் இவரை நாடி வருவோர்
அதிகம்.

ஒரு தடவை எனது அண்ணன் திரு சபாநாயகம்
அவர்கள் கிருஷ்ணனைப்பார்க்க போயிருந்தார்.
அப்போது அவரால் குணப்படுத்தப்பட்ட
குழந்தையின் பெற்றோர் வந்து ‘டாக்டர் ஐயா,
எங்கள் குழந்தை பிழைத்தது உங்களால்தான்.
நீங்கள் தான் எங்களது சாமி’ என்றபோது
கிருஷ்ணன் எனது அண்ணனைக்காட்டி,
‘உங்கள் நன்றியை இவருக்கு சொல்லுங்கள்.
எல்லாம் இவர் போட்ட பிச்சைதான்.இவர் மட்டும்
கண்டிப்பாக பாடம் சொல்லிக்கொடுக்காமல்
இருந்திருந்தால் நான் இப்படி இருந்திருக்க
மாட்டேன்’ என்று அடக்கமாக சொல்லி
தனது ‘குரு பக்தி’யை வெளிச்சம்போட்டு
காண்பித்தபோது, என் அண்ணனுக்கே
என்னவோல் போல் ஆகிவிட்டதாம்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய
பிள்ளைகளுக்கு கல்வி தருவதற்காக
ஒரு பள்ளியையும் நிறுவி உள்ளார்.

அந்த பள்ளி ஆரம்பித்த புதிதில் எனது
அண்ணனை ஆலோசகராக போட்டு
அவரிடம் பள்ளியை சிறப்பான முறையில்
நடத்து பற்றி ஆலோசனை கேட்டதும் உண்டு.

அந்த பள்ளியை அவரது துணைவியார்
கவனித்து வந்தாலும், பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, அவரே அறிவியல்
பாடங்களை நடத்துவதும் உண்டு.

ஒரு தடவை எங்களது அம்மா உடல் நிலை
சரி இல்லாதபோது டாக்டர் கிருஷ்ணனிடம்
காட்டி சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான
கட்டணத்தை கொடுத்தபோது அதை வாங்க
மறுத்ததோடு, ‘சிகிச்சை பார்த்தது
நடனமாயிருந்தால் (என்னை ‘நடனம்’
என்று அழைப்பதுண்டு)பணம் கொடுத்திருப்பீர்களா?
என்று கேட்டாராம். இதை எங்கள் அம்மா
இறக்கும் வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கும் நேரம் பாராது, உழைத்துக்கொண்டுதான்
இருக்கிறார். காலையில் 7 மணிக்கு பள்ளிக்கு சென்று
மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, 10 மணிக்கு
மருத்துவ மனை வந்தால்,மதியம் 3 மணி வரை
நோயாளிகளை கவனித்துவிட்டு சாப்பிட செல்கிறார்.
திரும்பவும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்
அவரது சேவை 10 மணி தாண்டி கூட இருக்கும்.

குமரகுருபரரின்

மெய்வருத்தம்பாரார்
பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும்
மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார்
அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்


என்ற பாடல் கிருஷ்ணனுக்காகவே
பாடியதாக எண்ணுகிறேன்.


காலையிலிருந்து இரவு வரை
(இடையே சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு)
முகம் கோணாமல் பணிபுரிந்து கொண்டிருக்கும்
மருத்துவர் கிருஷ்ணன் எனது நெருங்கிய நண்பர் என்று
சொல்லிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

சனி, 19 பிப்ரவரி, 2011

எத்தனைக்காலம்தான்... ? 3

சிறிது நேரம் கழித்து வண்டி கிளம்பியதும்,
அய்யய்யோ, அவர் வரவில்லையே என்ற
ஆதங்கத்தோடு கதவருக்கே சென்று வருகிறாரா
எனப்பார்த்தேன். அவர் வரவில்லை.

சரி அடுத்த பெட்டியில் ஏறி இருப்பார் வண்டி
நிற்கும்போது மாறி வந்துவிடுவார் என
நினைத்துக்கொண்டு திரும்பவும்
திரு ஜெகந்நாதன் அவர்களுடன் பேச்சைத்
தொடங்கினேன்.ஒரு மணி நேரம் கழித்து
வேறொரு ஊரில் வண்டி நின்று
கிளம்பியபோதும் அவர் வரவில்லை.

அப்போதுதான்,எனக்குள் ஏதோ ஒரு‘பொறி’
தட்டியது.நான் திரு ஜெகந்நாதன் அவர்களிடம்
‘சார் நீங்கள் கொடுத்த சில்லறைக்கு நூறு ரூபாய்
நோட்டு வாங்கிக்கொண்டீர்கள் தானே’
என்றேன்.

அவர்‘இல்லை.இல்லை நீங்கள்
முதலில் சில்லறை கொடுத்ததால்,
நீங்கள் வாங்கியிருப்பீர்கள் என நினைத்து
நான் வாங்கவில்லை’ என்றார்.
எனக்கு பகீரென்றது.

அப்போது நாங்கள் கலவரத்தோடு
பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்த
பயணி ஒருவர்.‘ஆங்கிலத்தில் என்ன
உங்களோடு வந்த நண்பர் வண்டியை
தவற விட்டாரா?’ எனக்கேட்டார்.

‘இல்லையில்லை.அவர் எங்கள் நண்பர்
இல்லை.இங்குதான் பழக்கம்’என்றோம்.
அந்த பயணி நாங்கள் வெகு சகஜமாக
பேசிக்கொண்டிருந்ததை பார்த்திருந்திருக்கவேண்டும்.

‘அவர் ஏதாவது உங்களுக்கு தரவேண்டுமா?’
என்றார். நாங்கள் நடந்ததை சொல்லி
‘பரவாயில்லை.அவரது பொருட்கள்
இங்குதானே உள்ளன.அவற்றை
எடுக்கவரும்போது நாங்கள்
பணத்தை வாங்கிக்கொள்கிறோம்’
என்றோம்.

அவர் சந்தேகத்தொடு எழுந்து அந்த
ரேடியோ இருந்த பெட்டியை தூக்கியபோது
தான் தெரிந்தது,அது ஒரு காலிப்பெட்டி என்று!!

அவர் ‘அடடே அவன் உங்களை ஏமாற்றிவிட்டானே.
நான்கு அல்லது ஐந்து ரூபாய் பெறுமான
பழத்தை வைத்துவிட்டு நூறு ரூபாய் கொண்டு
போய்விட்டானே!என்றதும் எங்களுக்கு பேச்சு வரவில்லை.

அதற்குள் பெட்டியில் இருந்த அனைவருக்கும்
விஷயம் தெரிந்ததும்,எங்களை பரிதாபமாக
பார்த்ததோடு,தெலுங்கிலும் ஆங்கிலத்திலும்
சமாதானம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அங்கிருந்த ஒருவர்,ஏமாறுவதற்கு ஆட்கள்
இருப்பதால்,இந்த மாதிரி ஆட்கள்
ஏமாற்றுவதெற்கேன்றே இருக்கிறார்கள்
என்றதும்,இவ்வாறு ஏமாந்துவிட்டோமே
என்று நினத்த,எங்களுக்கோ ஒரே அவமானம்.

அதற்கு பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவே
இல்லை.இரவு வந்தபோது நான்
‘சார்.சாப்பிடலாமா?’என்றதற்கு,
திரு ஜெகந்நாதன்,’வேண்டாம்.எனக்கு
பசிக்கவில்லை.’எனக்கூறி மேலே ஏறி
படுத்துவிட்டார். நான் மட்டும் சாப்பிட்டுவிட்டு
படுத்துவிட்டேன்.ஆனால் இரவு தூங்கவில்லை.

மறுநாள் காலையிலும் அவர் எதுவும்
சாப்பிடவில்லை. இப்படி ஏமாந்துவிட்டோமே
என்பதை நினைத்து அவர் சாப்பிடவில்லை.
தனக்கு தானே தண்டித்து கொண்டார்
என நினைத்துக் கொண்டேன்.

காலை பதினொரு மணிக்கு சென்னைக்கு வந்து
சேர்ந்ததும்,அதைப்பற்றி ஏதும் பேசாமல்
‘வருகிறேன்’என சொல்லிவிட்டு,கிளம்பிவிட்டார்.

என்னை அழைத்துபோக எனது அண்ணன் வந்திருந்தார்.
நான் அவரிடமும் அது பற்றி பேசவில்லை.திரும்ப
தலைஞாயிறு வந்தபின் கூட‘திருடனுக்கு தேள்
கொட்டியது போல’ யாரிடமும் சொல்லவில்லை.

அந்த அனுபவம் ஒரு‘புத்தி கொள்முதல்’ என
நினைத்து இருந்துவிட்டேன்.

ஆனால் என்ன! அந்த பாடத்தை கற்றுக்கொள்ள
கொடுத்த விலை தான் அதிகம்.
நான் கொடுத்தது ரூபாய் முப்பத்தி நாலு தானே
என நினைக்கலாம். நான் பணத்தை பறிகொடுத்த
ஆண்டைப் பாருங்கள்.1966 ல் ரூ.34 என்பது,
இன்றைய மதிப்பில் பல நூறு ரூபாய்கள்!

இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்!நாங்கள்
ஏமாந்ததன் காரணம்,‘வெளுத்ததெல்லாம்
பால்’ என்ற எங்களது நம்பிக்கையாலா,
அல்லது தெரியாத ஊரில் நமது மொழி
பேசுகிறாரே என்ற மகிழ்ச்சியாலா அல்லது
எங்களை ஏமாற்றிய அந்த மோசடி
மனிதனின் புத்திசாலித்தனத்தாலா?
இன்னும் விடை கிடைக்கவில்லை!!

எது எப்படியோ. ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில்
ஏமாற்றுக்காரர்கள் இருந்துகொண்டுதானே இருப்பார்கள் !!


.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எத்தனைக்காலம்தான்... ? 2

தங்கியிருந்த விடுதியில் குளித்துவிட்டு எங்கு
சாப்பிடலாம் என விசாரித்தபோது,விடுதிக்கு
எதிரே இருந்த ஒரு உடுப்பி ஓட்டலை காட்டினார்கள்.
அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு நேர்முகத்தேர்வு
நடக்க இருக்கும் இடத்தை பார்க்க திரும்பவும்
ஒரு சைக்கிள் ரிக்சா பிடித்து சென்று பார்த்துவிட்டு
திரும்பும்போது ‘சார்மினார்’ சென்றோம்.

சார்மினாரில் கடைசிதளம் வரை பார்க்க
அனுமதித்தார்கள். (இப்போது அவ்வாறு
அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன்.)
ஹைதராபாத் நகரத்தை மேலிருந்து
பார்த்து,இரசித்து விட்டு வந்தோம்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து
சாப்பிட்டுவிட்டு நேர்முகத்தேர்வு நடக்கும்
இடத்திற்கு சென்றோம்.
(நேர்முகத்தேர்வு பற்றி பின் எழுதுவேன்)

நேர்முகத்தேர்வு முடிந்து,சாப்பிட்டுவிட்டு, அறையை
காலி செய்துவிட்டு மதியம் 3 மணிக்கும் சென்னைக்கு
கிளம்பும் இரயிலைப்பிடிக்க நேரே ஸ்டேஷன் வந்துவிட்டோம்.

நாங்கள் திரும்பி வர முன்பதிவு செய்யாததால்,
பயண சீட்டு வாங்கிக்கொண்டு முன்பதிவில்லா
பெட்டியில் பயணம் செய்ய பிளாட்பாரத்தில்
காத்திருந்தோம்.

பதிவு செய்யாமல் பயணம் செய்ய இருந்தோர் கூட்டமோ
அதிகம்.வண்டி வந்தால் எப்படி ஏறுவது என இருவரும்
பேசிக்கொண்டிருந்தபோது,தூய வெள்ளை ஜிப்பா
மற்றும் வேட்டிஅணிந்த ஒருவர் எங்கள் அருகே வந்தார்.

அவர் கையில் அன்றைய‘தினத்தந்தி’நாளேடு இருந்தது.
எங்களிடம்‘என்ன சார்,சென்னைக்குத்தானா?’ என்றார்.
‘ஆமாம்’என்றதும்,‘சார்,நான் கூட சென்னைக்குத்தான்
திரும்புகிறேன்.திடீரென கிளம்பியதால்முன் பதிவு
செய்யவில்லை.நீங்கள் எப்படி?’என்றார்.

நாங்களும் தமிழ் பேசும்ஒருவர் கிடைத்தாரே என்ற
சந்தோஷத்தில்‘நாங்களும் ரிசர்வ் செய்யவில்லை.
எப்படி இந்த கும்பலில் ஏறுவது எனத்தெரியவில்லை.’
என்றோம்.உடனே அவர் ‘கவலைப்படாதீர்கள்.
எனக்கு தெலுங்கு தெரியும் இந்த போர்ட்டர்களிடம்
பேசி நமக்கு‘யார்டிலேயே’துண்டு போடச்சொல்லிவிடுகிறேன்.
ஒரு இடத்திற்கு நாலணா கொடுத்தால் போதும்’ என்றார்.

நாங்கள்‘ரொம்ப நன்றிங்க.அப்படியே செய்யுங்கள்’
என்றோம்.அவரும் ஒரு போர்ட்டரிடம் தெலுங்கில்
பேசி எங்களுக்கு முன்பதிவில்லா பெட்டியில்
‘ரிசர்வ்'(!)செய்யச்சொன்னார்.

பேச்சுவாக்கில் அவர் சென்னையில் வியாபாரம்
செய்வதாகவும், வேலை நிமித்தம் ஹைதராபாத்
வந்ததாகவும் சொன்னார்.என்னிடம்‘சாருக்கு
எந்த ஊர்?’என்று கேட்டபோது விருத்தாச்சலம்
அருகே உள்ள ஒரு சிறிய ஊர்’என்றபோது,
அவர் அவரது வியாபார விஷயமாக
விருத்தாச்சலம் வந்திருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் எங்களது பேச்சு அப்போது அடுத்து தமிழ் நாட்டில்
வர இருக்கின்ற தேர்தல் பக்கம் திரும்பியது அது பற்றி
சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தபோது, சென்னை
செல்லும் இரயில்,யார்டிலிருந்து வந்துவிட்டது.

சொன்னபடியே அந்த போர்ட்டரும் ஒரு பெட்டியில்
எங்கள் மூவருக்கும் இடம் போட்டிருந்தார்.அவருக்கு
பணத்தைக்கொடுத்துவிட்டு நாங்கள் வண்டி ஏறினோம்.
இருக்கையில் அமர்ந்ததும்,அந்த நண்பர் பிளாட்பாரத்தில்
தனது உடமைகள் இருப்பதாகவும் அதை
எடுத்துவருவதாக கூறி கீழே இறங்கி சென்றார்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய ‘PYE’ ரேடியோ பெட்டியை
ஒருகையிலும் இன்னொரு கையில் ஒரு பெரிய
வாழைப்பழ குலையையும்தூக்கமுடியாமல்
தூக்கிக்கொண்டு வந்து அவரது இடத்துக்கு
மேலே உள்ள இடத்தில் வைத்துவிட்டு
‘அப்பாடா! என்ன கனம்’ என்றார்.

நான் அவரிடம்‘ரேடியோவை இங்கு வாங்குவானேன்.
சென்னையிலேயே வாங்கி இருக்கலாமே.’ என்றதும்
அவருக்கு தெரிந்த நபர் மூலம் அதை சென்னையைவிட
குறைந்த விலைக்கு வாங்கியதாக சொன்னார்.பின்பு
எங்களது பேச்சு திரும்பவும் அரசியல் பக்கம் திரும்பியது.
பேச்சு சுவாரஸ்யத்தில், வண்டி கிளம்பியதோ அடுத்த
நிற்கும் இடமான செகந்தராபாத் வந்ததோ தெரியவில்லை.

வண்டி நின்றதும் அவர்,‘இங்கு இரயில் சிறிது நேரம்
நிற்கும். இரவு டிபன் வண்டியில் நன்றாயிருக்காது
என்பதால் நான் இங்கேயே IR
உணவு விடுதியில் வாங்கப்போகிறேன்.
உங்களுக்கும் வேண்டுமா? என்றார். நாங்கள்
‘இல்லையில்லை.நாங்கள் வண்டியிலேயே,
சாப்பிட்டுக்கொள்கிறோம்’ என்றோம்.

அவர் ஜிப்பாவிலிருந்து ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்து,
‘இந்த அவசரத்தில் சில்லறை இல்லை என்பார்கள்.
உங்களிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறதா?’
என்றார். நான் வெளியே சட்டைப்பையில் முப்பத்தி நாலு
ரூபாய்தான்வைத்திருந்தேன்.‘அதுதான் இருக்கிறது’ என்றேன்.

உடனே எனது ஆசிரியர் என்னிடம் ‘பாக்கி இருக்கிறது’
எனக்கூறி மீதி அறுபத்தி ஆறு ரூபாயையும் கொடுத்தார்.
அவர் அதை வாங்கிக்கொண்டு ‘இதோ வந்துவிடுகிறேன்.
எனது பொருட்களை பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறி
கீழே இறங்கி சென்றார். நாங்கள் இருவரும் விட்ட
இடத்திலிருந்து திரும்பவும் பேச்சை ஆரம்பித்தோம்.



தொடரும்

வியாழன், 17 பிப்ரவரி, 2011

எத்தனைக்காலம்தான்... ? 1

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.அப்போதைய தஞ்சை
மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
தலைஞாயிறு என்ற ஊரில் மாநில அரசின்
ஊரக வளர்ச்சித்துறையில் வேளாண் விரிவாக்க
அலுவலராக பணிபுரிந்துகொண்டிருந்தேன்.
(அந்த பணி பற்றி விரிவாக ‘நினைத்துப்பார்க்கிறேன்’
தொடரில் எழுத இருக்கிறேன்.)


புது தில்லியை தலைமையகமாகக் கொண்டு
இயங்கிக்கொண்டிருந்த தேசிய விதைக்கழகத்திலிருந்து
நான் முன்பே விண்ணப்பித்திருந்த, விதைப்பெருக்க
உதவியாளர் (Seed Production Assistant) வேலைக்கு
நடக்க இருந்த, நேர்முகத்தேர்வுக்கு ஹைதராபாத்
வருமாறு அழைப்பு வந்தது.


தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டு அப்படியே
சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்ல விரும்பி
அப்போது சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில்
பட்ட மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த எனது அண்ணன்
டாக்டர்.ஞானப்பிரகாசம் அவர்களிடம் ஹைதராபாத்
செல்ல பயணச்சீட்டு வாங்க சொல்லியிருந்தேன்.
அவரும் வாங்கி வைத்திருந்தார்.


குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று
ஹைதராபாத் செல்ல மதியம் இரயில் ஏறினேன்.
எனது அண்ணன் சென்னை சென்ட்ரல் இரயில்
நிலையம் வந்து வழி அனுப்பினார். என்னதான்
படித்திருந்தாலும், ஆங்கிலம் பேசி சமாளிக்கலாம்
என்றாலும், எனக்கு வெளி மாநிலம் முதன் முறையாக
செல்வதால் ஒரு தயக்கம்/பயம் இருந்தது.

காரணம் இந்தி அல்லது தெலுங்கு தெரியாததுதான்.


நல்ல வேளையாக நான் பயணம் செய்த
அடுத்த பெட்டியில் எனக்கு, அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்த,
திரு ஜெகந்நாதன் அவர்களும், அதே
நேர்முகத்தேர்வுக்கு வருவதாக எனது
அண்ணன் சொன்னதும், புதிய ஊரில்,
தெரியாத மொழியை எப்படி பேசி சமாளிக்க
போகிறோமோ என்ற எனக்கு இருந்த பயம் பறந்தோடிவிட்டது.

காரணம் துணைக்கு நமது ஆசிரியர்தான் இருக்கிறாரே
என்பதுதான். ஆனால் எனக்குத்தெரியாது அவருக்கும்
இந்தி அல்லது தெலுங்கு தெரியாதென்பது!


அவரிடம் ‘சார் ஹைதராபாத்தில் ஒரே இடத்தில்
தங்கலாம். எனவே இரயிலைவிட்டு இறங்கியதும்
தயவு செய்து காத்திருங்கள்’ என கூறிவிட்டு
எனது பெட்டியில் ஏறிக்கொண்டேன். முதல் நாள்
மாலை நேர்முகத்தேர்வுக்காக கையில் கொண்டு
சென்ற புத்தகங்களை படித்துக்கொண்டும்
சன்னல் வழியே ஆந்திர மாநில ஊர்களையும்,
இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டும்
நேரத்தை ஒட்டிவிட்டேன்.


இரவு ‘பிட்டரகுண்டா’ என்ற ஊரில் இரவு
உணவு கிடைத்தது. சாதத்தோடு கோவைக்காய்
(Little Gourd) சாம்பார் கொடுத்தார்கள்.
அது எனக்கு புதிதாய் இருந்தது. கல்லூரியில்,
கோவைக்காய்கள் வணிக முறையில் சமையலுக்காக
பயிரிடுவதைப்பற்றி படித்திருந்தாலும், அங்குதான்
முதன்முறையாக கோவைக்காய் சாம்பார் பார்த்தேன்.
அதை தயக்கத்தோடு சாப்பிட்டேன்.
மிக நன்றாக இருந்தது.

காலை சுமார் 11 மணி அளவில் ‘ஹைதராபாத் டெக்கான்’
(தற்போது ஹைதராபாத் ஜங்ஷன்) இரயில்
சென்றடைந்ததும் கீழே இறங்கி எனது ஆசிரியரைத்தேடியபோது,
அவரும் எனக்காக காத்திருந்தார். அப்போது
அவர் ‘நடனசபாபதி, எனக்கு ஊரும் புதுசு,
மொழியும் புதுசு. எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்களோ
அங்கேயே நானும் வருகிறேன்’ என்றதும்,
எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

ஒரு வழியாய் சமாளித்துக்கொண்டு அவருடன்
வெளியே வந்தேன்.


எங்களது முகத்தைப்பார்த்தே ஊருக்கு புதியவர்கள்
எனத்தெரிந்துக்கொண்ட ஒரு சைக்கிள் ரிக்சா ஓட்டுனர்
(அப்போது இருந்த ஹைதராபாத் வேறு.டாக்ஸிகளும்
ஆட்டோக்களும் இல்லாத நாட்கள்.)இந்தியில்
‘தங்க அறை வேண்டுமா?நல்ல தங்கும் விடுதிக்கு
அழைத்து செல்கிறேன்’ என்றார்.

எட்டாம் வகுப்பில் படித்த ‘பிராத்மிக்’ எனக்கு
அப்போது 'கை' கொடுத்தது.பேச்சின்போது
‘ரூம் சாஹியே’ என்பதை புரிந்து கொண்டு
தலையை ஆட்டினேன். அப்போது எனது
ஆசிரியர் திரு ஜெகந்நாதன் அவர்கள்
‘பரவாயில்லையே, இந்தி பேசினால்
புரிந்துகொள்கிறீர்களே’ என்று எனது
இந்தி புலமைக்கு நற்சான்றிதழ்
வழங்கினார்!


நான் 'சரி' என சொன்னதும், எங்களை
அருகே உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து
சென்றார்.உண்மையில் அது ஒரு நல்ல
விடுதிதான். இந்தியில் பேரம் பேசும் திறமை
இல்லாததால் அந்த ஓட்டுனர் கேட்ட கட்டணத்தை
கொடுத்துவிட்டு விடுதியில் அறை எடுத்தோம்.


தொடரும்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நினைவோட்டம் 39

எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு A.K அவர்கள்
‘எங்கே அதை கொண்டு வா பார்ப்போம்’
என்றதும், நாங்கள் நடுநடுங்கிவிட்டோம்.

எனக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
உடனே நான் எனது கையெழுத்து பத்திரிக்கையை
படித்துக்கொண்டிருந்த நண்பனிடம் இருந்து வாங்கி,
காலியாக இருந்த இரண்டாம் பக்கத்தில்
சமர்ப்பணம்-- எனது வகுப்பு ஆசிரியர்
திரு A.கிருஷ்ணசாமி அவர்கட்கு என
எழுதி விட்டுஆசிரியரிடம் கொடுத்தேன்.

என்னைப்போல் நண்பர் கிருஷ்ணனும் அந்த இதழ்களை
வாங்கி அவ்வாறே எழுதிக் கொடுத்தார்.

கையெழுத்து இதழ்களை வாங்கிய ஆசிரியர், இரண்டாம்
பக்கத்தில் சமர்ப்பணம் என எழுதியிருந்ததை பார்த்ததும்,
மேற்கொண்டு அந்த இதழ்களை புரட்டிக்கூட பார்க்காமல்,
கல்லூரியில் செய்முறை நோட்டுகளை வருட முடிவில்
தேர்வுக்கு கொடுக்கும்போது அதில் செய்முறை
தேர்வு நடத்தும் பேராசிரியர்கள் Certified Bonafide என
முத்திரையிட்டு கையொப்பம் இடுவதுபோல அதன்
கீழே கையொப்பம் இட்டு திருப்பிக்கொடுத்துவிட்டார்!

நல்ல வேளையாக அவர் ஒன்றும் சொல்லாததால்
நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

ஆனால் எங்களது மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைத்து
நிற்கவில்லை. நண்பர் கிருஷ்ணன் அவரது இரண்டாவது
இதழுக்கான அட்டைப்படம் வரைய நண்பர் தம்பு
சாமியிடம் கொடுத்திருந்தார்.

அவரும் சமூகவியல் பாடம் நடத்தும்
திரு P.திருஞானசம்பந்தம் அவர்கள்
வருவதுகூட தெரியாமல்,‘மிக சிரத்தையாக’
படம் வரைந்துகொண்டிருந்தார்.

ஆனால் அதை எங்கள் ஆசிரியர் கவனித்துவிட்டு
‘என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?
அதைக்கொண்டுவா!’என்றதும் தம்புசாமி
மிகவும் தயக்கத்தோடு அதை
எடுத்துக்கொண்டு சென்றார்.

காரணம் அவர் அந்த வரைந்திருந்த அட்டையில்
ஒரு சிற்பி ஒரு பெண் சிலையை வடிப்பதுபோல்
இருந்தாலும்,அந்த சிற்பியின் உளி அந்த சிலையின்
மார்பகத்தை தொட்டுக்கொண்டிருந்ததுதான்!

(கலைநோக்கோடு பார்ப்பவர்களுக்கு அது
ஆபாசம் இல்லை என்றாலும், 1958 களில்
அது அவ்வாறு ஒத்துக்கொள்ளப்பட்டதில்லை.)

அதைப்பார்த்ததும் ஆசிரியர் திரு P.T.S அவர்கள்
மிகவும் கோபப்பட்டு அதை கிழித்தெறிந்துவிட்டு
அவரை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்.
அதோடு இனி கையெழுத்து இதழே யாரும்
வெளியிடக்கூடாது என சொல்லிவிட்டார்.

உண்மையில் அந்த இதழில் ஆபாசமாக எதுவும்
எழுதப்படவில்லை.வெறும் அட்டைப்படம் மட்டும்
முடிக்கப்படாத நிலையில் இருந்தது. ஆனாலும்
எங்கள் ஆசிரியருக்கு அது தப்பாக பட்டதால் அதை
வெளியிட அனுமதிக்கவில்லை. எனவே நானும்
எனது இரண்டாவது இதழை வெளியிடும்
எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டேன்.

இப்போது வரும் இதழ்களில் வரும்
படங்களைப்பார்க்கும்போது நண்பர் தம்புசாமி
வரைந்த படம் நிச்சயம் ஆபாசம் இல்லை
என்றாலும் அன்றைய சூழ்நிலையில்
அது ஒத்துக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

காலம்தான் மக்களின் மனதில்,
பார்வையில்,எண்ணத்தில் எத்துணை
மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை
நினைத்து வியக்கிறேன்!



நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

வியாழன், 3 பிப்ரவரி, 2011

கல்பனாதாசனின் “சில தீவிர இதழ்கள்”

நினைவோட்டம் 35 ல் எனக்கு ஓராண்டு
மூத்த மாணவரான நண்பர் திரு பார்த்தசாரதி
பற்றிஎழுதியபோது,அவரோடு தொடர்பு மறுபடியும்
ஏற்படும் என நினைக்கவில்லை.