சனி, 22 ஜனவரி, 2011

நினைவோட்டம் 38

நண்பர் கிருஷ்ணனுக்கு சிவாஜி கணேசனுக்கு
அடுத்தபடியாக தமிழ்வாணனை மிகவும் பிடிக்கும்.
அப்போது தமிழ்வாணன் அவர்கள்,
‘கொள்ளைக்காரன் கெட்டிபோம்மு’ என்ற தலைப்பில்
வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சுதந்திர போராட்ட
வீரன் இல்லையென்றும், அவன் ஒரு கொள்ளைக்காரன்
என்றும் புலித்தேவன் தான் உண்மையான சுதந்திர
போராட்ட வீரன் என்றும் ஒரு தொடர் எழுதி வந்தார்.

அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை
என்றாலும், நண்பர் கிருஷ்ணன் விடாது
அந்த தொடர் வரும் ‘கல்கண்டு’ இதழை
எடுத்துவந்து அதை படித்து காண்பித்து என்னை
அவர் பக்கம் இழுக்க முயற்சிப்பார். அந்த முயற்சியில்
அவர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.

அப்போதெல்லாம் வகுப்பில் உள்ள மாணவர்களை
பல குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும்
பெயர் இட்டு,அதற்கு ஒரு மாணவனை தலைவனாக
போடுவார்கள்.

கிருஷ்ணன் அப்படி ஒரு குழுவுக்கு தலைவனாக
இருந்தபோது ஆசிரியரிடம் வாதாடி அவரது குழுவுக்கு
’புலித்தேவன் குழு’ பெயரிட வைத்தார்.

அதற்கு போட்டியாக நாங்கள் இருந்த குழுவுக்கு,
’வீரபாண்டிய கட்டபொம்மன் குழு’ என பெயரிட்டது
இன்னும் நினைவில் இருக்கிறது.

எனக்கும் நண்பர் கிருஷ்ணனுக்கும் இது போல்
பல தடவை போட்டி வந்ததுண்டு, ஆனால்
அவை எல்லாம் ஆரோக்கியமான போட்டிகளே.

நான் முன்பே எழுதியிருந்தது போல எனது அண்ணன்
திரு சபாநாயகம் அவர்கள் பெண்ணாகடம் பள்ளியில்
படித்தபோது ‘ஒளி’ என்ற கையெழுத்து இதழ் நடத்தி
வந்தார்.அது அப்போது மாணவர்களிடையே
பிரபலமாக இருந்ததாம்.

அதுபோல் நானும் ஒரு இதழ் நடத்த விரும்பி,
எனது பெயரின் முதல் மற்றும் கடைசி எழுத்தை
சேர்த்து ‘நதி’ என்ற பெயரில் கையெழுத்து இதழை
தொடங்கினேன். அட்டைபடம் உட்பட எல்லா
படங்களையும் நானே வரைந்தேன்.

உடனே கிருஷ்ணனும் எனக்கு போட்டியாக
‘திங்கள்’ என்ற கையெழுத்து இதழை ஆரம்பித்தார்.

எங்கள் வகுப்பில் மிகவும் நன்றாக படம்
வரையக்கூடிய மாணவர் தம்புசாமி என்பவர்தான்
‘திங்கள்’ இதழின் ஆஸ்தான ஓவியர்.

நான் எனது அண்ணனுக்கு தெரியாமல் வீட்டில்
அவர் இல்லாதபோது முதல் இதழை தயாரித்திருந்தேன்.
நானும், கிருஷ்ணனும் எங்களது முதல் இதழை,
மாணவர்களிடையே வகுப்பு இடைவேளையில்
சுற்றுக்கு விட்டிருந்தோம்.

இடைவேளை முடிந்து, பாடம் நடத்த எண்கள் வகுப்பு
திரு A.K அவர்கள் வந்தபோது, அவர் வந்தது தெரியாமல்
எனது நண்பர்கள் அந்த இதழ்களை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அதை எங்கள் ஆசிரியர் பார்த்துவிட்டார்.

உடனே கோபத்தோடு‘ என்ன அது?’என்ற போது,
அதை படித்துக்கொண்டிருந்த நண்பர்கள்
‘சார்.கிருஷ்ணனும்,நடனசபாபதியும் கையெழுத்து பத்திரிக்கை
வெளியீட்டு இருக்கிறார்கள்’ என்று சொல்லிவிட்டார்கள்.

அவர் ‘எங்கே அதை கொண்டு வா பார்ப்போம்’
என்றதும், நாங்கள் நடுநடுங்கிவிட்டோம்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.


நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்,பொங்கல் வாழ்த்து
அட்டை அனுப்புவதை 1961 ஆம் ஆண்டு திருச்சி
புனித வளவனார் கல்லூரியில்(St Joseph’s college)
படிக்கும்போது ஆரம்பித்தேன்.பின்பு 1970 ஆம் ஆண்டு
நாட்டுடைமை ஆக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில்
சேர்ந்த பிறகு நானே பொங்கல் வாழ்த்தை எழுதி
அட்டையில் அச்சிட்டு அனுப்பி வந்தேன்.முதலில்
ஒரு சிலருக்கே அனுப்பி வந்த நான்,நாளடைவில்
எனது நண்பர்கள் வட்டம் விரிவடைந்ததால்,
250 பேருக்கு மேல் வாழ்த்து அட்டையை
அனுப்பிவைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.

டிசம்பர் மாதம் வந்ததும்,வாழ்த்து அட்டைகளை
அச்சடிக்க கொடுத்துவிட்டு,நண்பர்களின்
புதிய முகவரிகளை சேகரிப்பேன்.டிசம்பர் 25
தேதிக்குப்பின் ஒவ்வொருவருக்கும் என் கைப்பட
முகவரி எழுதி அஞ்சலில் வாழ்த்து அட்டைகளை
சேர்ப்பது வழக்கம்.

ஆனால் 44 ஆண்டுகள் கடைப்பிடித்த இந்த வழக்கத்தை
2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றபின்
நிறுத்திக்கொண்டு, 2005 பொங்கல் முதல்
மிகநெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்
கைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

தற்போது இணைய தள நண்பர்களுக்கும்,
இந்த பதிவு மூலம்
எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொங்கல் விழா இந்துக்கள் பண்டிகையா என்பது பற்றி,
எனது கருத்துக்களை இந்த பொங்கல் திருநாளில்
பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சமீபத்தில் தமிழக அரசு இந்த ஆண்டும்,
பொங்கல் பரிசாக அரிசி,வெல்லம் போன்றவைகளை
அரசின் நியாயவிலைக்கடை மூலம் ஒவ்வொரு குடும்ப
அட்டைதாரருக்கும் பரிசாக தர இருப்பதாக அறிவிப்பு
செய்தது.

(இது சரியா அல்லது தவறா என்ற விவாதத்திற்குள்
போக நான் விரும்பவில்லை)

இது குறித்து ஒரு நண்பர்,'இந்துக்களுக்கும் மட்டும்
பொங்கல் பரிசு தருவது போல் கிறிஸ்துமஸ் போன்ற
மற்ற மதத்தினர் கொண்டாடும் விழாக்களுக்கும்
பரிசு தரவேண்டும்.’என்று இணையத்தில் எழுதியிருந்தார்.

அவருடைய இந்த வேண்டுகோளை படித்து
நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் தமிழகத்தில்,
பொங்கல் விழா என்பது வேளாண் பெருமக்களால்
அறுவடை முடிந்ததும் நல்ல விளைச்சலை பெற
உதவிய இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி
தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

வேளாண் தொழிலை இந்துக்கள் மட்டுமல்லாமல்
மற்ற மதத்தினரும் செய்வதால், இந்த விழா
அனைவராலும் கொண்டாடப்படுவதாகும். அப்படி
இருக்கும்போது அவர் எப்படி இது இந்துக்களுக்கான
பண்டிகை என நினைத்தார் என்பது எனக்கு புரியவில்லை.

இந்த நேரத்தில் நான், நமது அண்டை மாநிலமான
கேரளாவை நினைத்துப்பார்க்கிறேன்.பணி நிமித்தம்
அங்கே 7 ஆண்டுகள் பணிபுரிந்தபோது அவர்கள்
‘ஓணம்’ பண்டிகை கொண்டாடுவதை பார்த்திருக்கிறேன்.

அங்கே சிங்கம்(ஆவணி) மாதம் பிறக்கும்போது
ஓணம் கொண்டாடுகிறார்கள்.அதுவும் ஒரு
அறுவடைத்திருநாள் தான்.

(ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் திருவோணம்
என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும்,
பிற்காலத்தில் அந்த வழக்கம் வழக்கொழிந்து போயிற்று
என்றும் சொல்ல கேள்வி)

மலையாளிகள் அனைவரும்,எந்தவித பாகுபாடுமின்றி
ஓணத்தைக்கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மை.
ஓணத்திருநாள் அன்று‘செட்டு முண்டு’எனப்படும்
பாரம்பரிய உடையை எல்லா மதத்தினரும் அணிகிறார்கள்.

அன்று வீட்டில் அசைவம் சமைக்காமல்,
ஓண சத்யா’எனப்படும் சைவ விருந்துதான்
தயாரிக்கிறார்கள்.

வெளி நாட்டில் இருக்கும் மலையாளிகளில்
பெரும்பாலோர் ஓண விழாவின் போது
தங்கள் ஊருக்கு வருவதை வழக்கமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.

வங்கி மற்றும் மற்ற அலுவலகங்களில் பணிபுரிவோர்
ஓணம் வரும் வாரத்திற்கு முதல் வாரம் ஒருநாளில்
(வங்கிகளில் சனிக்கிழமையன்று)வழக்கமான
உடையணியாமல், ஒணத்திற்கு அணியும் உடையோடு
வந்து,சிறப்பு விருந்தினரை அழைத்து பேச சொல்லி,
தாங்களும் தங்களது கலைத்திறனை காண்பித்து
விழாவை கொண்டாடுகின்றனர்.

நாம்‘கோலப்போட்டி’நடத்துவது போல
‘மலையாள மனோரமா’’ போன்ற நாளிதழ்
நடத்தும் நிறுவனங்கள்‘அத்த பூக்களம்’ என
அழைக்கப்படுகின்ற பூக்கோல போட்டியை நடத்தி
வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள்.
நான் அங்கு இருந்த ஆண்டுகளில்,‘ஊரோடு ஒத்து வாழ்’
என்ற பழமொழிக்கு இணங்க,வங்கியில் ஓணம் விழா
கொண்டாடும் நாளன்று வேட்டி சட்டை அணிந்தே
சென்றிருக்கிறேன்.

ஆனால் நாமோ, இங்கே பொங்கலை ஒரு பொது
விழாவாகப் பார்க்காமல் ஒரு மதத்தினருடைய
விழாவாக நினைத்து அனைவரும் கொண்டாடாமல்
இருப்பது வருத்தத்துக்குரியது.


இனி இந்த ஆண்டிலிருந்தாவது, பொங்கலை,
அதாவது தமிழர் திருநாளை அனைவரும் கொண்டாடுவோமா?

புதன், 12 ஜனவரி, 2011

நினைவோட்டம் 37

என் நண்பர் கிருஷ்ணனுக்கு சிவாஜி கணேசனின்
நடிப்பு என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும்
மனோகரா திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி
அவர்களின் வசனத்தை சிவாஜி பேசி நடித்ததுபோல்
பேசி, நடித்து காண்பிப்பார்.

அப்போது குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு
இருக்கும். அதில் சாரண இயக்கம் பற்றியும்,
முதல் உதவி எவ்வாறு செய்யவேண்டும்
என்பதுபற்றியும் சொல்லித்தருவார்கள்.
பெரும்பாலும் இந்த வகுப்புக்களை, ஆங்கில
பாடம் நடத்தும் வகுப்பு ஆசிரியர்கள்தான்
நடத்துவார்கள்.

இந்த பாடத்திற்கு தேர்வு இல்லை என்பதால்
யாரும் இதற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இந்த வகுப்புகள் வகுப்பு அறையில் இல்லாமல்
வெளியே மரத்தடியில் நடக்கும்.அதில் ஆசிரியர்கள்
பாடம் நடத்தாமல், மாணவர்களை தங்களது பாடும்
அல்லது நடிக்கும் திறமையை காண்பிக்க
அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருதடவை அந்த திறந்தவெளி வகுப்பில்,
எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு A.K அவர்கள்
யாராவது நடித்து காண்பிக்கலாமே என்றதும்
கிருஷ்ணன் எழுந்து மனோகரா வசனத்தை
பேசி நடித்தார். அதில் புருஷோத்தமராக

என்னையும் நடிக்கவைத்தார்.நான் மனோகரா
திரைப்படம் பார்க்கவில்லை என்றாலும்
மனோகரனின் தந்தை பேசும் வசனத்தை
முன்பே எனக்கு சொல்லிக்கொடுத்து
இருந்ததால் நானும் அவருடன் பேசி நடித்தேன்(!).

(சிறிய வயதில் எங்கள் ஊரில் நடக்கும்
தெருக்கூத்தில் சிறுத்தொண்டர் நாடகம்
போடுவார்கள். நாடகம் ஆரம்பமாகுமுன்
பள்ளி சிறுவர்களாகிய எங்களை வைத்து
‘சாணக்கியன்’ ஓரங்க நாடகத்தை
எங்கள் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள்
நடத்தியிருக்கிறார். அதில் பால சாணக்கியனாக
நான் நடித்திருந்ததால் கிருஷ்ணனோடு
நடிக்க எனக்கு சுலபமாக இருந்தது.)

கிருஷ்ணனின் வசனத்தோடு கூடிய
நடிப்பைப்பாராட்டிய எங்கள் ஆசிரியர்,
அந்த மாதமே நடந்த ஒரு விழாவில்
கிருஷ்ணனுக்கு அதே வசனத்தைப்பேசி
நடிக்கும் வாய்ப்பைத்தந்தார்.

வருடாவருடம் எங்கள் பள்ளியில் நடக்கும்
மாணவர் இலக்கிய மன்றத்தில் பேச சிறந்த
தமிழ் அறிஞர்களை அழைப்பது வழக்கம்.
அந்தவருடம் மன்றத்தில் பேச அப்போது
அண்ணாமலை பல்கலை கழகத்தில்
தமிழ்த்துறை தலைவாராய் இருந்த
பேராசிரியர் திரு தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
அவர்களை அழைத்திருந்தார்கள்.

மதியம் மூன்று மணிக்கு அவர் வருவதாக
இருந்தது. எனவே எங்களை எல்லாம்
இரண்டுமணிக்கே தலைமை ஆசிரியர்
அலுவலகத்திற்கு எதிரே இருந்த மரத்தடியில்
அமர சொல்லிவிட்டார்கள்.

சிறப்பு பேச்சாளர் வரும் வரை,மாணவர்கள்
கவனத்தை திருப்பி, அமைதியாய் வைத்து
இருக்க மாணவர்களை விட்டு ஏதாவது
நிகழ்ச்சி செய்ய சொல்லலாம் என
தலைமை ஆசிரியர் முடிவெடுத்தபோது,
எங்கள் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம்
கிருஷ்ணன் பற்றி சொல்லி, மனோகராவின்
அந்த சிறப்புக்காட்சியை நடித்துக்காட்ட
அனுமதி பெற்றுவிட்டார்.

கிருஷ்ணன், என்னை புருஷோத்தமன்
வேடத்திலும்,என் வகுப்பு தோழர் சிகாமணியை
வசந்தசேனை வேடத்திலும் நடிக்கச்சொன்னார்.
நாங்கள் ஒப்பனை ஏதும் செய்துகொள்ளவில்லை.
வழக்கமாக அணியும் சட்டை,அரைக்கால் சட்டையுடன்
மேடை ஏறினோம்.சிறப்பு விருந்தினருக்காக
போடப்பட்டிருந்த மேடை மீது கிருஷ்ணன்
அந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

கிருஷ்ணனை எனது வகுப்பு நண்பர்கள்
இராஜசேகரன் ராஸும்,இராஜாமணியும்
சங்கிலியால் கட்டி அழைத்துவந்தனர்.
(காலையிலேயே இது பற்றி சொல்லிவிட்டதால்
கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவர்கள்
வீட்டில் நாயைக்கட்டும் சங்கிலியை
எடுத்துவந்துவிட்டார்.)


நான், புருஷோத்தமன் பேசும் வசனமான
“மனோகரா! உன்னை எதற்காக அழைத்து
வரச்சொன்னேன் தெரியுமா?’” என பேசியதும்
கிருஷ்ணன்,”அழைத்துவரவில்லை. தந்தையே!
இழுத்துவந்திருக்கிறீர்கள்” என அந்த
முழு வசனத்தையும் ஏற்ற இறக்கத்தொடு
சிவாஜி கணேசன் போல் பேசிவிட்டு, ‘இங்கு என்னை
கொண்டுவந்ததின் காரணத்தை மக்கள் முன்
சொல்லத்தான் வேண்டும்’ என சொல்லி
அங்கே கூடி இருந்த மாணவர்களை பார்த்து சொன்னார்.

உடனே கூட்டத்தில் இருந்த மாணவர்கள்
சிலர் எழுந்து ஆமாம் மன்னர் காரணத்தை
கூறத்தான் வேண்டும்’என சொன்னதும்
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம்
திரைப்படத்தில் மனோகரனாக நடித்த சிவாஜி
அவ்வாறு சொன்னதும் அவையில் உள்ள சிலர்
எழுந்து’ஆமாம் மன்னர் சொல்லத்தான் வேண்டும்’
என்பார்கள். அதுபோல இருந்ததால்
ஒரே கைத்தட்டல் தான்.(திரைப்படத்தில் மக்கள்
சொல்வது போல் சொல்வதற்கு, எங்கள்
வகுப்பு மாணவர்கள் சிலரை நாங்கள் ஏற்கனவே
தயார் செய்து வெவ்வேறு இடங்களில் உட்கார
வைத்திருந்தோம் என்பது சிலரைத்தவிர
வேறு யாருக்கும் தெரியாது.)

கிருஷ்ணன் உணர்ச்சியுடன் பேசிக்கொண்டே
முன்னே செல்லும்போது, அவரை சங்கிலியால்
பிணைத்து பிடித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள்
அவரை முன்னே செல்லாமல் தடுத்து
நிறுத்தவேண்டும்.கிருஷ்ணன் பேசிக்கொண்டே
முன்னேறும்போது,நண்பர்கள் இராஜசேகரன் ராஸும்,
இராஜாமணியும்வேகமாக சங்கிலியை இழுத்துவிட்டனர்.
அதன் காரணமாக ஏற்பட்ட வலியை
பொறுத்துக்கொண்டே கிருஷ்ணன்
வழக்கம்போல் நடித்ததுதான்
அன்றைய நிகழ்ச்சியின்‘ஹைலைட்’

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது
எனக்கு ஒரே பயம். காரணம் அந்த
காட்சியில் நான் நடிக்கப்போகிறேன்
என என் அண்ணனிடம் சொல்லவில்லை.

ஒருவேளை அதற்காக திட்டுவாரோ என
பயந்தவாறே வீட்டிற்கு வந்தேன்.
நல்லவேளை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை!




நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வியாழன், 6 ஜனவரி, 2011

நினைவோட்டம் 36

அடுத்து என்னால் மறக்க முடியாதவர்கள்,
ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை என்னோடு
படித்த எனக்கு நெருக்கமான நண்பர்கள் கிருஷ்ணன்,
துரைராஜ், பழமலை, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி,
ராஜாமணி, பார்த்தசாரதி,சிகாமணி, இராஜசேகரன் ராஸ்,
மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர்.

இவர்களில் திரு கிருஷ்ணனை எவரும் மறக்க முடியாது.
பள்ளியில் படிக்கும் காலத்தில், ஓரு சில ஆசிரியர்கள்
பாடம் நடத்தும்போது இவர் செய்யாத குறும்பு இல்லை.
புதிய ஆசிரியர்கள் வந்ததும் அவர்களிடம் தனது
சேட்டையை ஆரம்பிப்பார். அவர்கள்
கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வளவுதான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது திரு வெங்கடராமன்
என்ற கணித ஆசிரியர் எங்களுக்கு சில மாதம்
பாடம் நடத்தினார்.அவர்இயல்பாகவே மிகவும் சாது.
மாணவர்கள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தாலும்
ஒன்றும் சொல்லமாட்டார்.

ஒரு நாள் அவர் பாடம் நடத்தும்போது,
நண்பர் கிருஷ்ணன், இலந்தப்பழங்களை
வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு,கொட்டைகளை
அடுத்த பெஞ்சில் அமர்ந்து இருக்கும் மாணவிகளின்
மேல் துப்பிவிட்டார்.

அந்த மாணவிகள் எழுந்து ஆசிரியரிடம் புகார்
கொடுத்தபோது கொஞ்சம் கூட அசராமல்
“சார், பழம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கும்
இலந்தைப்பழம் வேண்டுமா?’என கேட்டு
வகுப்பில் கலகலப்பை உண்டாக்கிவிட்டார்.

இன்னொரு தடவை, எங்கள் அறிவியல் ஆசிரியர்
திரு S.R. நடராஜன் அவர்கள் பாடம் நடத்தும்போது
கிருஷ்ணன் ஏதோ வாயில் போட்டு
அசைபோடுவதைப்பார்த்து ‘என்ன செய்து கொண்டு
இருக்கிறாய்?’ எனக்கேட்டார்.

உடனே கிருஷ்ணன், ‘சார், ரிங்க்டோன்
மிட்டாய் சாப்பிடுகிறேன். உங்களுக்கும்
வேண்டுமா?' என்றதும், ஆசிரியர் அவர்
இயல்புப்படி கோபப்படாமல் ‘சரி.சரி
உட்கார்’ என்று சொல்லிவிட்டார்.

நண்பர் கிருஷ்ணனின் இந்த குறும்புகளை
எல்லோரிடமும் செய்யமாட்டார். ஆள்
பார்த்துத்தான் அதை செய்வார். எனது
அண்ணன் பள்ளியில் சேர்ந்த அன்று,
அவரது ‘குழந்தை தெய்வம்’ என்ற கதை
‘ஆனந்த விகடன்’ நடத்திய மாணவர்
சிறுகதைப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டு,
அந்த வார விகடன் இதழில் அவரது
புகைப்படத்தோடு வெளியாகி இருந்தது.

எங்களது காலை கணித வகுப்புக்கு வழக்கமான
ஆசிரியர் விடுப்பில் இருந்ததால் எனது அண்ணன்
அந்த வகுப்பில் பாடம் நடத்த வந்தார்.

அவரைப்பார்த்தும் கிருஷ்ணன் எழுந்து கையில்
உள்ள விகடனைக்காட்டி‘சார்,இது நீங்கள்தானே
இது?” என்றார்.

ஒருவேளை எனது அண்ணன் ‘ஆமாம்’ என்று
சொல்லிஇருந்தால் கிருஷ்ணன் தனது
வேலையைத்தொடங்கி இருப்பார். ஆனால்
என் அண்ணனோ ‘டேய், பலூன்! காற்று
போய்விடும்.உட்கார்.’ என கடுமையாக சொன்னதும்
பேசாமல் உட்கார்ந்துவிட்டார். (அப்போது நண்பர்
கிருஷ்ணனின் உடல் வாகு சற்று பெரிதாக இருக்கும்.)

அதற்கு பிறகு அவர் என் அண்ணனின் பிரியமுள்ள
மாணவனாகி அவரிடம் S.S.L.C படிக்கும்போது
டியூஷன் படித்தது வேறு கதை.

உண்மையில் கிருஷ்ணன் வகுப்பில் தான்
விளையாட்டு பிள்ளை போல் இருப்பாரே தவிர
படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். ஆங்கில பாடம்
நடத்தும் ஆசிரியர்கள் தரும் கதை சுருக்கத்தை
மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்தமாக
தானே எழுதுவார். இன்றைக்கு சில பள்ளிகளில்
பிள்ளைகள் தானே சுயமாக சிந்திக்கவேண்டும்
என பயிற்சி தருகிறார்கள். ஆனால் கிருஷ்ணன்
அப்போதே அதை செய்தவர். ‘Readers Digest’ இதழ்
படித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டவர்.

நான் முன்பே சொல்லியபடி அப்போதெல்லாம்
தமிழில் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என
இரு பிரிவுகள் இருக்கும். பொதுத்தமிழை
அனைவரும் படித்தாகவேண்டும். சிறப்புதமிழ்
வேண்டாமென்பவர்கள் வடமொழி (சமஸ்கிருதம்)
படித்தாகவேண்டும்.

நண்பர் கிருஷ்ணன் எட்டாம் வகுப்பு வரை
வடமொழி எடுத்து படித்து வந்தார். அவருக்கும்
அந்த மொழி சொல்லித்தந்த ஆசிரியருக்கும்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒன்பதாம்
வகுப்பில் காலாண்டுத்தேர்வுக்கு முன்பு
சிறப்புத்தமிழ் வகுப்புக்கு தலைமை ஆசிரியர்
அனுமதி பெற்று மாறிவிட்டார்.

சிறப்புத்தமிழில் இலக்கண பாடங்கள் கடினமாக
இருக்கும். திடீரென ஒன்பதாம் வகுப்பில் சிறப்புத்தமிழை
எடுத்ததும் தமிழாசிரியர் கூப்பிட்டு ‘அடிப்படை
இலக்கணம் புரிந்துகொள்ளாமல் எப்படி மேற்கொண்டு
படிக்கபோகிறாய்?’ என்றதும் கொஞ்சம் கூட
அச்சம் கொள்ளாமல் ‘நான் அவைகளையும்
படித்துவிடுகிறேன் சார்.’எனக்கூறி ஆறாம் வகுப்பிலிருந்து
எட்டாம் வகுப்பு வரை இருந்த இலக்கண பாட
புத்தகங்களை வாங்கி தானே படித்து புரிந்துகொண்டு
எங்களோடு ஒன்பதாம் வகுப்பில் சிறப்புத்தமிழ்
தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றார்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள்
கிருஷ்ணன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தோம்.
அப்போது தான் எங்களது நட்பு மேலும் வலுவடைந்தது.
அது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதில் பெரு மகிழ்ச்சி.

நண்பர் கிருஷ்ணன் பற்றிய ‘புராணம்’ இன்னும் உண்டு.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

சனி, 1 ஜனவரி, 2011

நினைவோட்டம் 35


அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்!

நானும் வலைப்பதிவு தொடங்கி விளையாட்டு போல
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 2009 ஆம் ஆண்டு
31
பதிவுகளும், 2010 ஆம் ஆண்டு 39 பதிவுகளுமாக
ஆக மொத்தம் 70 பதிவுகள் இட்டிருக்கிறேன்.

நான் நினைத்ததை எல்லோரும் விரும்பும் வண்ணம்
சொல்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நன்கு
அறிவேன்.இருப்பினும் எனது வலைப்பதிவிற்கு
வருவோருக்கு, கூடியவரை சுவாரஸ்யமான
செய்திகளை தருவதே என் நோக்கம்.

நான் நினைவோட்டம் 1 இல் சொல்லியதுபோல
இந்த தொடரில் எனது பள்ளிப்பருவம் முதல்
பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள்,
பணி புரியும்போது சந்தித்த சோதனைகள் மற்றும்
சாதித்த சாதனைகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன்

ஒரு சிலருக்கு அலுப்பைத்தந்தால்
(‘
அறுவைபோல் இருந்தால்)
என்னை மன்னிக்கவேண்டுகிறேன்.

இதோ எனது நினைவோட்டம் மீண்டும் தொடர்கிறது.

நான் படித்த பள்ளியில் ஆசிரியராகவும்,
எனக்கு கணக்கு பாடத்தில் ஆர்வம் வர
காரணமாக இருந்த எனது அண்ணனைப்பற்றி
எழுது முன்பு, எனது பள்ளித்தோழர்கள்
சிலரை பற்றி நினைத்துப்பார்க்கிறேன்.

எனக்கு ஓராண்டு மூத்த மாணவரான நண்பர்
திரு பார்த்தசாரதி பற்றி அவசியம் சொல்லவேண்டும்.
அவர் தமிழில் அப்போதே புலமை பெற்றவர்.

எனது வகுப்பு நண்பர்கள் துரைராஜ் மற்றும் கண்ணன்
மூலம் அவர் எனக்கு பழக்கம். அப்போதே அவர் நிறைய
வெண்பாக்கள் தமிழ் அன்பன்என்ற புனைபெயரில்
எழுதுவார்.

அவர் S.S.L.C (1959) தேர்வில் மாநிலத்திலேயே,
சிறப்பு தமிழில் 95 க்கு மேல் மதிப்பெண் பெற்று,
முதலாம் இடத்தைப்பிடித்தார். (அப்போதெல்லாம்
தமிழ் ஆசிரியர்கள் 65 மதிப்பெண்களுக்கு மேல்
தரமாட்டார்கள்.)

அதற்காக அவர் எங்கள்  உரை நூல்
(
கோனார் உரை நூல் போன்றது)வெளியிட்ட
பதிப்பாளர்களிடமிருந்து முதற் பரிசு பெற்றுள்ளார்.
திருப்பனந்தாள் ஆதீனத்தின் மெடலையும் பெற்றவர்
அவர். அவரது ஆசிரியரான, எனது அண்ணன்
திருமணத்திற்கு எழுதிய வாழ்த்து மடலில்,


அன்றிலுக்கு காதல் சொல்லித்தரவேண்டுமா? என்
ஆசானுக்கு நான் சொல்லித்தெரிய வேண்டுமா?”

என்று குறிப்பிட்டிருந்த அவரது கற்பனை நயமிக்க
வரிகள் இன்னும் என் நினைவில் உள்ளது.
(
அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்)

அவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை
பட்டம் முடித்து, பின்னர் சட்டம் படித்துவிட்டு ,ரிசர்வ் வங்கியில் சேர்ந்தாலும், அவரது எழுத்துப்பணியை நிறுத்தவில்லை.
கல்பனா தாசன்என்று கவிஞர் கண்ணதாசன்
அவருக்கு வைத்த புனைப்பெயரோடு இன்றும்
எழுதிக்கொண்டிருக்கிறார்.

அடிக்கடி புதிய பார்வைஎன்ற இதழில்
அவரது படைப்புக்களை பார்க்கலாம். தொலைக்காட்சித்  தொடருக்கு உரையாடலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். பல நூல்களை படைத்திருக்கிறார்.

இப்போது பணி ஓய்வு பெற்று சென்னையில்  பொழுதுபோக்கிற்காக
ஒரு பல்பொருள் அங்காடி நடத்தி  வருவதாக அறிகின்றேன்.

என்னால் மறக்கமுடியாத பள்ளி நண்பர்களுள்
திரு பார்த்தசாரதியும் ஒருவர்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி