சனி, 28 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 6

தமிழில் புரோ நோட் எனப்படும் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை.இதை ஆங்கிலத்தில் Demand Promissory Note என சொல்வார்கள். எங்களுக்கு ஐயா சொல்லிக்கொடுத்த பிராமிசரி நோட் இதோ.

தென்னாற்காடு ஜில்லா, விருத்தாசலம் தாலுக்கா, தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் நடனசபாபதி ஆகிய நான், மேற்படி ஊரைச்சேர்ந்த குப்புசாமி மகன் இராமசாமிக்கு எழுதிக்கொடுத்த பிராமிசரி நோட்டு.
ஐயா, நான் எனக்காகவும்,எனது குடும்ப செலவுக்காகவும் தங்களிடம் வாங்கிய அசல் ரூபாய் 2000 த்தை (இரண்டாயிரத்தை), 6 சதவிகித வருஷ வட்டியோடு தாங்கள் விரும்புகிறபோது தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன்.

கையொப்பம்

தேதி (ரெவின்யு ஸ்டாம்ப்பில்)

நெட்டெழுத்து உட்பட

கையொப்பம்


சாட்சிகள்

1.
2.

கிராமத்தில் அந்த காலத்தில் எழுத படிக்கத்தெரியாதவர்கள் இருந்ததால் பிராமிசரி நோட்டை எழுதத்தெரிந்தவர்கள் எழுதிக்கொடுப்பது வழக்கம். அப்படி எழுதிக்கொடுப்பவர்கள் நெட்டெழுத்து உட்பட என எழுதி கையொப்பம் இடவேண்டும். கடன் வாங்குபவர் கையெழுத்து இடுவது வழக்கம். கடன் வாங்குபவர் கையெழுத்து போடத்தெரியாவிட்டால் கைரேகை இடுவது வழக்கம். பிராமிசரி நோட்டுகள் மூன்று ஆண்டுகளுக்குப்பின் காலாவதி ஆகிவிடும் என்பதால் மூன்று ஆண்டுகளுக்குள் முழு பணத்தையும் தரமுடியாவிட்டால் ஒரு பகுதி பணத்தையாவது கொடுத்து பிராமிசரி நோட்டின் பின்புறம் வரவு வைக்கவேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்கியவர் மீது வழக்கு தொடரமுடியாது.

இதை ஐயா சொல்லிக்கொடுத்தபோது இது எப்படி எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்தது உண்டு. ஆனால் வங்கியில் சேர்ந்த பிறகு இந்த பிராமிசரி நோட்டில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் வேறு வகையில் கைகொடுத்தது என்பது ஆச்சரியமான உண்மை.

1970- ல் அதாவது வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதிற்கு பிறகு வங்கிகளில் உள்ள விண்ணப்பங்கள், கடன் பத்திரங்கள் போன்றவைகள் அந்தந்த மாநில மொழியில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்தபோது எங்கள் வங்கியும் அவற்றை தமிழில் அச்சடிக்க விரும்பி அந்த பணியை ஒரு தமிழ் நாட்டில் உள்ள ஒரு அச்சகத்திற்கு வழங்கியது.

அப்படி அச்சடிக்கப்பட்டவைகள் எங்கள் கிளைக்கு வந்தபோது நான் தற்செயலாக Demand Promissory Note- ஐ பார்த்தபோது அதில் ஒரு முக்கியமான சொல் விடுபட்டிருந்ததை பார்த்தேன்.அந்த படிவத்தில் Order என்ற வார்த்தைக்கான தமிழாக்கம் இல்லை. ஒரு Demand Promissory Note -ல் On Demand, Promise, Order என்ற மூன்று சொற்களும் கட்டாயம் இருக்கவேண்டும். அதாவது தாங்கள் விரும்புகிறபோது , தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது, திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றவை இருக்கவேண்டும். வங்கிக்கு வந்த படிவத்தில் 'தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது' என்ற வார்த்தை இல்லாததால் அது Demand Promissory Note ஆக கருதமுடியாது. தவறுதலாக அந்த படிவத்தில் கடனாளியிடம் கையெழுத்து வாங்கி கடன் கொடுத்தால் பின்னால் கோர்ட்டுக்கு போக நேர்ந்தால் வங்கிக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனே எங்கள் கிளை மேலாளரிடம் காண்பித்தேன்.

அவருடைய தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் நான் காண்பித்த குறையை ஒத்துக்கொண்டு உடனே அந்த படிவங்களை மேற்கொண்டு உபயோகத்தில் விடாதிருக்க ஆவன செய்தார்.

அந்த நேரத்தில் எங்கள் ஐயா சொல்லிக்கொடுத்தது எப்படி உதவியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 5

கணக்கில் ஐயா கொடுத்த பயிற்சிதான் பின்னால் வங்கியில் சேர்ந்தபோது 'கால்குலேடேர் ' உதவி இல்லாமல் கூட்டல் கழித்தல் போன்றவைகளை செய்யமுடிந்தது.

ஐயா மாலை 4 மணிக்கு மற்ற ஆசிரியர் போனதும் கணக்கு மற்றும் பொது அறிவு வகுப்புகள் நடத்துவார். நாங்கள் எல்லோரும் சிலேட்டுடன் தயாராக நிற்கவேண்டும். அவர் கணக்கை போட்டு முடித்து ஒன்று,இரண்டு, மூன்று என சொல்லிமுடிப்பதற்குள் விடையை எழுதி சிலேட்டை கீழே வைத்துவிடவேண்டும். இல்லாவிடில் அடிதான். பிறகு ஒவ்வொருவரிடமும் வந்து விடையைப்பார்ப்பார். தப்பாக போட்டவர்களுக்கு. கிள்ளோ அல்லது குட்டோ நிச்சயம்.

சிலசமயம் கணக்கை பாட்டாகவே பாடி போடுவார். அப்படி அவர் பாடி போட்ட ஒரு கணக்கு 55 வருஷங்களானாலும் இன்னும் நினைவில் இருக்கிறது.


கட்டியால் எட்டுக்கட்டி,

கால், அரை, முக்கால் மாற்று,

செட்டியார் சென்று போனார்,

சிறுபிள்ளை மூன்று பேரு,

கட்டியும் உடைக்கொணாது,

கணக்கையும் போடவேண்டும்.


இறந்துபோன செட்டியார் ஒருவர்க்கு மூன்று பிள்ளைகள். அவர் விட்டுச்சென்ற எட்டு தங்க கட்டிகளை சமமாக பிரிக்கவேண்டும். அதுதான் கணக்கு.

இப்போது வேண்டுமானால் இந்த கணக்கு மிக எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்போது அது கஷ்டமாகத்தான் இருந்தது. இது போன்று பல கணக்குகள். கணக்கோடு பொது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசி வரை வராது என்பார்கள்.

ஆனால் ஐயாவின் பாடங்கள் அந்த பழ மொழியை பொய்யாக்கி ஊரில் உள்ள அனைவருக்கும் கடைசிவரை கை கொடுத்தது என்பது உண்மை. அந்த கால கட்டத்தில் வங்கிகளின் கிளைகள் இன்று போல் எல்லா இடங்களிலும் இல்லை. அதோடு எல்லோரும் சுலபமாக கடனும் வாங்கிவிட முடியாது. எனவே ஊரில் வசதி படைத்தவர்கள் தேவைப்பட்டவர்களுக்கு பிராமிசரி நோட் எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் பிராமிசரி நோட்டை பற்றி தெரியவேண்டும் என்பதற்காக ஐயா எங்களுக்கு எப்படி பிராமிசரி நோட் எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்தார். அதோடு முக்கிய தொழில் விவசாயமாக இருந்ததால் குத்தகை சீட்டு எப்படி எழுதுவது என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

என் கூட படித்தவர்கள் ஐந்தாவதுக்கு மேல் படிக்காததால் அவர்கள் ஊரிலேயே தங்கி பாரம்பரிய தொழிலான விவசாயத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக எல்லோருக்கும் ஐயா சொல்லிக்கொடுத்தது வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்தது என்பது உண்மை. இந்த பிராமிசரி நோட் எழுதுவதை கற்றுக்கொண்டது பதினேழு வருஷங்களுக்குப்பின்னால் வங்கியில் பணி புரியும்போது எனக்கு எப்படி உதவியது என்பதை பிறகு சொல்கிறேன்.

தமிழில் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது அநேகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்காக அதை தருகிறேன்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

சனி, 14 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 4

எங்கள் ஐயாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அப்போது (ஐம்பதுகளில்) ஐந்தாவது வரை மொழிப்பாடமாக ஆங்கிலம் கிடையாது என்பதால் அவர் பாடம் எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாடங்கள் எடுப்பதற்கு வேறு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

காலையில் பத்து மணிக்கு முன்பும் மாலை ஐந்து மணிக்கு பின்பும் அவரது ராஜ்ஜியம் தான். காலையில் எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர். அனைவரும் திருநீறு பூசி வரவேண்டும். எங்கள் ஊரில் வைணவ சமயத்தினரோ அல்லது மற்ற மதத்தினரோ இல்லாததால் இந்த கட்டளைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. முதலில் வரும் மாணவன் அல்லது மாணவி 'வேர்த்து' எனப்படும் வருகைப்பதிவேட்டை சிலேட்டில் எழுதவேண்டும். எழுதுபவர் தன்பெயருக்கு நேராக 0 இலக்கமிட்டு ஆரம்பிக்கவேண்டும். பின்பு வருபவர்களுக்கு 1,2,3 என இலக்கம் தரப்படும். ஐயா வந்ததும் சாவடியின் எரவாணத்தில் செருகியிருக்கும் நீண்ட பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து நிற்பார். முதலில் வந்தவர் 'வேர்த்தை' படிக்க ஆரம்பித்ததும் அப்பெயருக்கு உரியவர்கள் வந்து அவர் முன்னால் கையை நீட்டவேண்டும். அவரவர் எண்ணுக்கு தகுந்தாற்போல் கையில் அடி விழும். யாராவது கையை பின்னுக்கு இழுத்தால் கூட ஒரு அடி கிடைக்கும். இந்த அடிக்கு பயந்து கொண்டு அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சீக்கிரம் செல்வோம்.

பிறகு கடவுள் வாழ்த்து உண்டு. அனைவரும் மனப்பாடம் செய்து வரவேண்டும். யாரைவேண்டுமானாலும் பாடச்சொல்லுவார். பாடாவிட்டாலோ அல்லது தவறாக பாடினாலோ அருகில் கூப்பிட்டு தொடை சிவக்கும் வண்ணம் கிள்ளுவார். பெண்பிள்ளைகளாக இருந்தால் தலையில் வலிக்கும் வண்ணம் குட்டு விழும். காலையில் கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு எனப்படும் ஒன்று முதல் பதினாறு வரை உள்ள எண்களின் பெருக்கல் தொகைகளை பார்க்காமல் சொல்லவேண்டும். அதோடு இல்லாமல் அளவை வாய்ப்பாடும் சொல்லவேண்டும்.

எனக்கு இன்னும் கூட அவைகள் நினைவுக்கு வருகின்றன.

4 பார்த்திங் 1 பென்னி

12 பென்ஸ் 1 ஷில்லிங்

20 ஷில்லிங் 1 பவுண்ட்

(சுதந்திரம் அடைந்து சில வருடங்களே ஆகிருந்த படியால் ஆங்கில நாணய வாய்ப்பாடும் இருந்தது)

1 ரூபாய் எடை 1 தோலா

3 தோலா 1 பலம்

8 பலம் 1 சேர்

5 சேர் 1 வீசை

8 வீசை 1 மணங்கு

20 மணங்கு 1 பாரம்.

(அப்போது ஒரு ரூபாய் வெள்ளியில் இருக்கும்)

சரியாக சொல்லாதவர்களை குனியவைத்து முதுகில் செங்கல் வைத்து படிக்க சொல்வார். சரியாக சொல்லும் வரை கல்லை எடுக்கமாட்டார். மாலையில் தான் கணக்கு போடச்சொல்வார். இது போன்று பல வாய்ப்பாடுகளை ஒப்பிக்கவேண்டும்.
தமிழைப்பொறுத்தவரை ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி, வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன், விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி, அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம் முதலியவைகளை படித்து மனப்பாடம் செய்து விட வேண்டும். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து சொல்லும் வரை விடமாட்டார். முன்பே சொன்னது போல் மனப்பாடம் செய்யாவிட்டால், அடியோ, குட்டோ, கிள்ளலோ நிச்சயம்.

அவர் அடிப்பதைப்பற்றி வீட்டில் சொல்லமுடியாது. ஏனெனில் பிள்ளைகள் படிக்காவிட்டால் ஆசிரியர் அடிப்பது தவறில்லை என நினைத்த காலம் அது!. ஐயா அடிக்கும்போது எப்போது இவரிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என எண்ணியதும் உண்டு. ஆனால் அப்படி மனனம் செய்ததால் தான் இன்னும் நான் படித்த பாடல்கள், வாய்ப்பாடுகள் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அந்த பயிற்சி பின்னால் பணியில் இருந்தபோது எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருந்தது.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 2

காளமேகப்புலவர் சிலேடைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். இந்த பாட்டில் மக்கள் பயன்படுத்திவந்த எண் அளவைகளைவைத்து அவர் ஆடியிருக்கும் சொற்சிலம்பம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நம் பழந்தமிழர் உபயோகித்த பல அளவைகள் இப்போது வழக்கத்தில் இல்லை. அந்த அளவைக்குறிக்கும் சொற்களும் இப்போது வழக்கொழிந்துவிட்டன். அதனால்தான் அளவைகளை அமைத்து காளமேகப்புலவர் பாடிய இந்த பாடலை கீழே தந்திருக்கின்றேன்.


முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் --விக்கி

இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன்று ஓது.


அதாவது, நமக்கு இறைவன் கொடுத்த இரண்டு கால்களுடன் மூன்றாவது காலான ஊன்றுகோல் வைத்து நடக்கின்ற முதுமைப்பருவம் வருமுன்பு, நம்முடைய தலையில் நரை தோன்று முன்பு, எம தூதர்களைக்கண்டு அஞ்சுவதற்கு முன்பு, விக்கல் எடுத்து இருமுவதற்கான வேளை வருமுன்பு, சுடுகாட்டிற்கு செல்லுமுன்பு, காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் ஏகாம்பரநாதரை துதிப்பாயாக என்பதே இதன் பொருள்.

இந்த பாடலை கூர்ந்து கவனித்தால் முக்கால், அரை, காலரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா மற்றும் கீழரை போன்ற என அளவைகள் உள்ளது தெரியும். நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த அளவைகளைப்பற்றி தெரியும்? உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

புதன், 11 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 3

எங்கள் பள்ளி மேனேஜ்மென்ட் பள்ளி என சொல்லப்பட்ட தனியார் பள்ளி. ஐயா தான் அதற்கு தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் எல்லாம்.
ஐயா திருமணமாகாதவர் என்பதால் ஆலமரத்துக்கு அருகில் இருந்த சாவடி எனப்படும் ஒரு அறை உள்ள கட்டிடம்தான் அவரது இருப்பிடம். அதிலேயே பள்ளியின் ஆவணங்களையும் வைத்திருப்பார்.
வகுப்புகள் மரத்தின் கீழே நடத்தப்பட்டதால் காலை வேலைகளில் வெயில் அடிக்கும்போது ஆலமரத்துக்கு மேற்கு பகுதியிலும் மாலை வேலைகளில் மரத்திற்கு கிழக்குப்பகுதிக்கும் வகுப்புகள் மாற்றப்படும். மழைக்காலங்களில் அருகில் உள்ள வீட்டு திண்ணைகள் தான் எங்களது தற்காலிக வகுப்பறைகள்.

ஊரின் நடுவே செல்லும் வீதி அருகே ஆலமரம் இருந்ததால் வீதியிலிருந்து பள்ளியை பிரித்தது ஒரு வேலி மட்டுமே. மரத்தின் கீழ்தான் வகுப்பு என்பதால் அனைவரும் ஆற்று கொட்டப்பட்டிருக்கும் மணல் தரையில் தான் உட்கார்ந்து படித்தோம். கிழக்குப்பகுதிக்கும் மேற்குப்பகுதிக்கும் இடையே இருந்த இரண்டு பன்னீர் மரங்களும், அதைச்சுற்றி நடப்பட்டிருந்த கருநுச்சி செடிகளும், சாவடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளும் தான், எங்கள் பள்ளியின் பூங்கா. மாலையில் அனைவரும் அருகில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றவேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஐயா எங்களை அருகே உள்ள ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்து மரத்தடியில் கொட்டச்சொல்வார்.

பள்ளிக்கு விடுமுறை என்பது பண்டிகை நாட்களில் தான். ஞாயிறு விடுமுறை இல்லை. பள்ளி நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐயா விடும் வரை. அனேகமாக ஐந்து மணிக்கு பின் ஆறு மணிக்குள் வீட்டுக்கு செல்வோம். சில ஞாயிறுகளில் ஐயா விருத்தாசலம் செல்வதாக இருந்தால் அன்று காலை ஆறுமணிக்கு எல்லோரும் பள்ளி செல்லவேண்டும். ஐயா சில கணக்குகளை கொடுத்து அவைகளை வீட்டில் போட்டு வருமாறு சொல்லிவிட்டு புறப்படுவார்.

அந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஏனெனில் அன்று ஐயாவிடம் அடி வாங்காமல் வீட்டிற்கு வந்து எல்லோரும் கூடி அமர்ந்து கணக்குகளைப்போட்டுவிட்டு விளையாடச்செல்லலாம். எனவே அந்த நாளுக்குக்காக நாங்கள் காத்திருப்போம்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த கதைகள்

பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றி அவர்கள் எழுதிய கதைகள் யாவுமே வித்தியாசமானவை. அவரது கதையின் முடிவில் தான் முக்கியமான திருப்பம் அல்லது முடிச்சை வைத்திருப்பார்.

அந்த பாணியில் எழுதப்பட்ட, நான் படித்த சிறுகதையின் சுருக்கம் இதோ!

ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் கல்லூரியின் கடைசி நாளின்போது ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அதாவது 25 ஆண்டுகளுக்குப்பின் அனைவரும் அதே கல்லூரியின் உணவு விடுதியின் முன் அவசியம் கூடவேண்டும் என்பதாகும்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பின் மூவர் மட்டுமே அந்த இடத்தில் சந்திக்கின்றனர். அதில் ஒருவர் பெண். அனைவரும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். மாலைவரை வேறு யாரும் வராததால் மாலை தேநீர் அருந்திவிட்டு பிரிந்து செல்கின்றனர். ஒருவேளை தாங்கள் சென்ற பிறகு யாராவது வந்தால் அவர்களுக்கு தாங்கள் வந்ததை தெரிவிக்கவேண்டுமே என நினைக்கும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் மட்டும் இருப்பதைப்பார்க்கின்றனர். அவரிடன் சென்று தங்களது பெயர்களைக்கூறி தங்களது வகுப்பு நண்பர்கள் வந்தால் அவர்களிடம் இதுவரை காத்திருந்ததை சொல்லுமாறு கேட்டுகொள்கின்றனர். அவரும் 'சரி' என்கிறார்.
அவர்கள் சென்ற பிறகு அவர் தனக்குத்தானே சொல்லிகொள்கிறார்."நல்லவேளை அவர்களுக்கு என்னைத்தெரியவில்லை நானும் அவர்களது வகுப்புத்தோழன் என்று"

சனி, 7 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 2

கடலூர் (முந்தைய தென்னார்க்காடு) மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே இருக்கும் தெ.வ.புத்தூர் என்கிற தெற்கு வடக்கு புத்தூர்தான் நான் பிறந்த ஊர்.
ஊர் என்று பேர் தானே ஒழிய நான்கு பெரிய தெருக்களும் ஒரு சின்ன தெரு மட்டுமே உண்டு. விவசாயம் தான் முதன்மைத்தொழில். ஊருக்கு சரியான பாதை கிடையாது.(நான் சொல்லுவது ஐம்பதுகளில்) அருகிலுள்ள விருத்தாசலம் போக சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று கருவேப்பிலங்குறிச்சியில் பஸ் ஏறவேண்டும்.வழியில் ஊரருகே உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் இருந்தால் வெள்ளம் வடியும் வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லாவிடில் தெப்பகட்டை மூலம் ஆற்றை தாண்டலாம். (தெப்பக்கட்டை என்பது ஒரு பெரிய மரத்துண்டில் இருபுறமும் கயறு கட்டி இருவர் பிடித்துக்கொண்டு நீந்தி வருவர். பயணிகள் கட்டையை இருகைகளாலும் கோர்த்துப்பிடித்துக்கொண்டு அவர்கள் கூடவே சென்றால் அக்கரையை அடைந்துவிடலாம்.) நினைத்துப்பார்த்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் அவ்வாறுதான் மழைக்காலங்களில் பயணம் செய்தோம். (பல முயற்சிக்கு பிறகு 1957 -ல் ஒரு தரைப்பாலம் கட்டி அதை பலமுறை வெள்ளம் அடித்துக்கொண்டு போனபின் தற்போது பெரிய பாலம் கட்டிவருகிறார்கள்.)
ஊரில் ஒரே ஒரு துவக்கப்பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அதற்கு மேல் படிக்க ஒன்று எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள விருத்தாசலம் செல்லவேண்டும் அல்லது பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெண்ணாடம் (அ) பதின்மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் செல்லவேண்டும். இதன் காரணமாகவே பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. தற்போது நிலைமை மாறியிருக்கிறது. ஊரில் இருந்த பள்ளிக்கு கட்டிடம் ஏதுமில்லை.

ஊருக்குள் நுழைந்ததும் உள்ள பெரிய ஏரியின் கரையில் இருந்த ஆலமரம் தான் பள்ளிக்கூடம். அதன் கீழ்தான் எல்லா வகுப்புகளும் நடந்தன. பள்ளியை நடத்தியவர் ஐயா என மரியாதையுடன் ஊர் பெரியவர்களாலும் பயத்துடன் மாணவர்களாலும் அழைக்கப்பட்ட திரு சாமிநாத ஐயர்  ஆவர்.அவரிடம்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.அவர் நடத்திய பாடங்கள் அப்போது வேம்பாய் கசந்தாலும் பிற்காலத்தில் அவை எவ்வாறு உதவியது என்பதை பின் விவரிக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை அவரைப்போன்ற ஆசிரியரை நான் இதுவரை பார்க்கவில்லை.
நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

புதன், 4 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 1

எனக்குப்பிடித்த பாடல்களை பதிவு செய்ய இருக்கிறேன். அப்படி எனக்குப்பிடித்த பாடல் ஒன்றை கீழே தந்துள்ளேன்.


இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி

என் கொணர்ந்தாய், பாணாநீ என்றாள் பாணி;

வம்பதாம் களபமென்றேன்; பூசு மென்றாள்,

மாதங்கம் என்றேன்; யாம் வாழ்ந்தே மென்றாள்;

பம்புசீர் வேழமென்றேன்; தின்னு மென்றாள்;

பகடென்றேன்; உழுமென்றாள் பழனந்தன்னைக்;

கம்பமா என்றேன்; நல்களியாம் என்றாள்;

கைம்மாஎன் றேன்; சும்மா கலங்கினாளே!



தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு அதே போல் ஒரு பொருளைக்குறிக்க பல சொல் உண்டு.
இந்த பாடலை இயற்றியவர்
பொன் விளைந்த களத்தூரைச்சேர்ந்த அந்தகக்கவி வீரராகவர் ஆகும்.
இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாணன் என்ற கவி இராமன் என்ற சிற்றரசனைப்பாடி பரிசு பெற்று வருகிறான். அவனது மனைவி 'என்ன பரிசு கொண்டு வந்தாய்?' என்று கேட்பதுபோல் உள்ளது இந்த பாடல்.

பாணன் களபம் என்றதும் அதை சந்தனம் எனப்போருள்கொண்டு பூசிக்கொள் என்கிறாள். இல்லை இல்லை மாதங்கம் என்றதும் அதை பொன் என்று பொருள் கண்டு நன்றாக வாழ்வோம் என்கிறாள். இல்லை இல்லை வேழம் என்றதும் கரும்பு எனப்பொருள் கொண்டு தின்னுங்கள் என்கிறாள். இல்லை இல்லை பகடு என்றதும் எருமை எனப்பொருள் கொண்டு நிலத்தை உழும் என்கிறாள். இல்லை இல்லை கம்பமா என்றதும் கம்பு மா எனப்போருள்கொண்டு நல்ல களி செய்யலாம் என்கிறாள். இல்லை இல்லை கைம்மா என்றதும் வேறு பொருள் தெரியாததால் கலங்கி நிற்பதாக அருமையாக இயற்றியுள்ளார்.
உண்மையில் பாணன் பரிசாகப்பெற்று வந்தது யானை ஆகும். அது பாணிக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் வெவ்வேறு பொருளைச்சொல்லி பாணன் மூலமாக நமக்கு யானைக்கு களபம்,மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா என்ற மாற்று சொற்களும் உண்டு என்பதை அழகாக தெரிவிக்கின்றார். இதை பெருமையோடு எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தபோது அவர் சொன்னார் நல்ல வேளை பாணன் இந்த காலத்தில் இதை சொல்லவில்லை சொல்லியிருந்தால் பாணி கைம்மாவுக்கு தோசை என்றிருப்பார். பாணன்தான் கலங்கியிருப்பார் என்றாரே பார்க்கலாம்! .

திங்கள், 2 பிப்ரவரி, 2009

நம்பிக்கை

படித்துக்கொண்டு இருக்கிறேன்
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை

உண்மையாய் உழைக்கிறேன்
உயர்வேன் என்ற நம்பிக்கை

விழுந்தாலும் முயற்சிக்கிறேன்
எழுவேன் என்ற நம்பிக்கை

எல்லோருக்கும் முடிந்தவரை உதவுகிறேன்
என்னைப்போல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை

தவறாது வாக்கு அளிக்கிறேன்
தருவார்கள் நல்லாட்சி என்ற நம்பிக்கை

எழுதிக்கொண்டிருக்கிறேன்
யாரேனும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை

படுக்க செல்கிறேன்
விழிப்பேன் என்ற நம்பிக்கை

நம்பிக்கைதான் வாழ்க்கை
வாழ்க்கைதான் நம்பிக்கை

பின் குறிப்பு: ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை. ஒரு சில காரணங்களால் அனுப்ப இயலவில்லை. அதனால் இங்கே தந்திருக்கிறேன்.

வே.நடனசபாபதி

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 1

ஜூலை 31,2004 என்னால் மறக்க இயலாத நாள்!

ஏனெனில் அன்றுதான் எனது பணி மூப்பு அடைந்து ஒய்வு பெறும் நாள்.
35 ஆண்டுகள் பணி செய்த வங்கியிலிருந்து விடை பெறும் நாள். அனேகமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தராத நாளாக இருக்கும் என்பார்கள்.

ஆனால்என்னைப்பொறுத்தவரையில் அந்த நாளை நான் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் எட்டு ஆண்டு காலம் குடும்பத்தை சென்னையில் விட்டுவிட்டு ஊர் ஊராக பணி நிமித்தம் சுற்றியதால் எப்போது வீடு திரும்புவோம் என காத்திருந்த காலம் அது.

தலைமை அலுவலகம் சென்று அனைவரிடமும் விடை பெறும்போது துக்கம் தொண்டையை அடைத்ததென்னவோ உண்மை. ஆனாலும் பணி மூப்பு என்பது அனைவருக்கும் வரும் என்று தெரிந்திருக்கும்போது அதைப்பற்றி கவலைப்படுவது சரியல்ல என்பது எனது எண்ணமாக இருந்ததால் அந்த நாளை நான் வழக்கமான நாள் போலவே எடுத்துக்கொண்டேன்.

ஒய்வு பெரும் நாள் வருமுன்பே எனது உடைமைகளை சென்னைக்கு அனுப்பிவிட்டதால் ஒரே பெட்டியுடன் (38 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேரும்போது சென்றதுபோல்) மறுநாள் சென்னை திரும்பினேன்.

என்னை சந்தித்த நண்பர்கள் என்னை எனது அனுபவங்களை ஏன் புத்தகமாக எழுதக்கூடாது எனக்கேட்டபோது நான் எழுதினால் யார் வெளியிடுவார்கள் என எண்ணி அந்த கருத்தை செயலாக்க விரும்பவில்லை. பின்பு வீட்டில் கணினி வாங்கி இணையத்தொடர்பு பெற்றதும் வலைப்பதிவுகளை படிக்கத்தொடங்கியதும் நாமும் வலைப்பதிவில் எழுதலாமே என நினைத்தபோது எப்படி தொடங்குவது எனத்தெரியாததால் எனது நண்பர் ஒருவரிடம் உதவி செய்யுமாறு கேட்டேன். அவரும் உதவுவதாக கூறினாலும் அவரது பணி சுமைக்காரணமாக அவரால் உதவ முடியவில்லை.

தற்செயலாக தமிழ் மணத்தில் நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களின் 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி' என்ற எளிய எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்ட தொடர் கட்டுரையைப்படித்தவுடன் நானும் வலைப்பதிவை தொடங்கிவிட்டேன்.

இந்த தொடரில் எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள், சந்தித்த சோதனைகள் மற்றும் சாதித்த சாதனைகளை எழுத இருக்கிறேன்.

சிலருக்கு இது சுயபுராணம் போல் தோன்றினால் என்னை மன்னிக்க. இடையிடையே எனக்குப்பிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வேறு தலைப்பில் வெளியிட இருக்கிறேன்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி