சனி, 14 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 4

எங்கள் ஐயாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அப்போது (ஐம்பதுகளில்) ஐந்தாவது வரை மொழிப்பாடமாக ஆங்கிலம் கிடையாது என்பதால் அவர் பாடம் எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாடங்கள் எடுப்பதற்கு வேறு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

காலையில் பத்து மணிக்கு முன்பும் மாலை ஐந்து மணிக்கு பின்பும் அவரது ராஜ்ஜியம் தான். காலையில் எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர். அனைவரும் திருநீறு பூசி வரவேண்டும். எங்கள் ஊரில் வைணவ சமயத்தினரோ அல்லது மற்ற மதத்தினரோ இல்லாததால் இந்த கட்டளைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. முதலில் வரும் மாணவன் அல்லது மாணவி 'வேர்த்து' எனப்படும் வருகைப்பதிவேட்டை சிலேட்டில் எழுதவேண்டும். எழுதுபவர் தன்பெயருக்கு நேராக 0 இலக்கமிட்டு ஆரம்பிக்கவேண்டும். பின்பு வருபவர்களுக்கு 1,2,3 என இலக்கம் தரப்படும். ஐயா வந்ததும் சாவடியின் எரவாணத்தில் செருகியிருக்கும் நீண்ட பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து நிற்பார். முதலில் வந்தவர் 'வேர்த்தை' படிக்க ஆரம்பித்ததும் அப்பெயருக்கு உரியவர்கள் வந்து அவர் முன்னால் கையை நீட்டவேண்டும். அவரவர் எண்ணுக்கு தகுந்தாற்போல் கையில் அடி விழும். யாராவது கையை பின்னுக்கு இழுத்தால் கூட ஒரு அடி கிடைக்கும். இந்த அடிக்கு பயந்து கொண்டு அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சீக்கிரம் செல்வோம்.

பிறகு கடவுள் வாழ்த்து உண்டு. அனைவரும் மனப்பாடம் செய்து வரவேண்டும். யாரைவேண்டுமானாலும் பாடச்சொல்லுவார். பாடாவிட்டாலோ அல்லது தவறாக பாடினாலோ அருகில் கூப்பிட்டு தொடை சிவக்கும் வண்ணம் கிள்ளுவார். பெண்பிள்ளைகளாக இருந்தால் தலையில் வலிக்கும் வண்ணம் குட்டு விழும். காலையில் கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு எனப்படும் ஒன்று முதல் பதினாறு வரை உள்ள எண்களின் பெருக்கல் தொகைகளை பார்க்காமல் சொல்லவேண்டும். அதோடு இல்லாமல் அளவை வாய்ப்பாடும் சொல்லவேண்டும்.

எனக்கு இன்னும் கூட அவைகள் நினைவுக்கு வருகின்றன.

4 பார்த்திங் 1 பென்னி

12 பென்ஸ் 1 ஷில்லிங்

20 ஷில்லிங் 1 பவுண்ட்

(சுதந்திரம் அடைந்து சில வருடங்களே ஆகிருந்த படியால் ஆங்கில நாணய வாய்ப்பாடும் இருந்தது)

1 ரூபாய் எடை 1 தோலா

3 தோலா 1 பலம்

8 பலம் 1 சேர்

5 சேர் 1 வீசை

8 வீசை 1 மணங்கு

20 மணங்கு 1 பாரம்.

(அப்போது ஒரு ரூபாய் வெள்ளியில் இருக்கும்)

சரியாக சொல்லாதவர்களை குனியவைத்து முதுகில் செங்கல் வைத்து படிக்க சொல்வார். சரியாக சொல்லும் வரை கல்லை எடுக்கமாட்டார். மாலையில் தான் கணக்கு போடச்சொல்வார். இது போன்று பல வாய்ப்பாடுகளை ஒப்பிக்கவேண்டும்.
தமிழைப்பொறுத்தவரை ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி, வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன், விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி, அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம் முதலியவைகளை படித்து மனப்பாடம் செய்து விட வேண்டும். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து சொல்லும் வரை விடமாட்டார். முன்பே சொன்னது போல் மனப்பாடம் செய்யாவிட்டால், அடியோ, குட்டோ, கிள்ளலோ நிச்சயம்.

அவர் அடிப்பதைப்பற்றி வீட்டில் சொல்லமுடியாது. ஏனெனில் பிள்ளைகள் படிக்காவிட்டால் ஆசிரியர் அடிப்பது தவறில்லை என நினைத்த காலம் அது!. ஐயா அடிக்கும்போது எப்போது இவரிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என எண்ணியதும் உண்டு. ஆனால் அப்படி மனனம் செய்ததால் தான் இன்னும் நான் படித்த பாடல்கள், வாய்ப்பாடுகள் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அந்த பயிற்சி பின்னால் பணியில் இருந்தபோது எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருந்தது.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி.

2 கருத்துகள்:

  1. வணக்கம்.

    பிள்ளைகள் அடிவாங்கியதை வீட்டில் சொல்ல முடியாத காலமொன்று இருந்தது. உண்மைதான்.

    எவ்வளவு இனிமையான காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள் ஐயா.

    பொறாமையாக உள்ளது.

    நிற்க,

    இந்த வேர்த்து என்னும் சொல் எனக்குப் புதிது.

    அன்றி மாணவர் தலைவர் என்று எவரேனும் இருந்தாரா?

    அவர் எப்பெயரால் அழைக்கப்பட்டார்?

    அறியத்தர வேண்டுகிறேன்.


    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அப்போதெல்லாம் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம், என் பிள்ளை படிக்காவிட்டால் அடித்து சொல்லிக் கொடுங்கள் என்பார்கள். ஆனால் இப்போது நடப்பதே வேறு.
      மாணவர் தலைவரை சட்டாம்பிள்ளை என்று அழைப்பார்கள்.

      நீக்கு