புதன், 20 மே, 2009

நினைவோட்டம் 11

முன்பே எழுதியிருந்தபடி எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிலை. விருத்தாசலம் பள்ளியில் சேர்ந்தால் ஹாஸ்டல் இல்லாததால் வீட்டிலிருந்து தினம் 5 மைல்(8 கிலோமீட்டர்) நடந்து சென்று வரவேண்டும். அதனால் அங்கு சேர்க்க அப்பாவுக்கு விருப்பமில்லை. அரியலூரில் வழக்கறிஞராக இருந்த எனது மாமா வீட்டில் தங்கிக்கொண்டு அரியலூர் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த சமயத்தில் எங்களது அப்பாவைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். எங்கள் அப்பா விவசாயி ஆனாலும் கூட நாங்கள் மேலே படிக்க வேண்டும் என விரும்பினார். அவர் மாயவரத்தில் மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் தாத்தா இறந்துவிட்டதால் மேலே படிக்காமல் விவசாயத்தை பார்க்க ஊரிலேயே தங்கிவிட்டதால் தான் படிக்காததை தன் பிள்ளைகளாவது படிக்கவேண்டும் என என்னையும் எனது அண்ணன்களையும் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படித்து வெவ்வேறு துறைகளில் நாங்கள் பணிபுரிய உதவினார். அதனால்தான் எனது அண்ணன்களில் மூத்தவர் மின்சார வாரியத்தில் தலைமைப்பொறியாளராகவும், இரண்டாமவர் வேளாண் மரபியல் ஆராய்ச்சியாளராகவும், மூன்றாமவர் கல்வியாளராகவும், நான்காமவர் கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராகவும் நான் வங்கியாளனாகவும் ஆக முடிந்தது.

அப்பா ஒரு தீவிர சைவ பக்தர். தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அதுபோல் மாலையில் 'அனஷ்டானம்' செய்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்துதான் சாப்பிடுவார்கள். இந்த வழக்கத்தை அவர்கள் இறக்கும் வரையில் தொடர்ந்து வந்தார்கள்.
எனக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் நான் மூன்றாவது படிக்கும்போதே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரிலிருந்து உயர்நிலை பள்ளியில் படித்துவந்த மூன்று நான்கு பேருக்கும் இரவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் சொல்லிக்கொடுத்தார்கள். அப்போதெல்லாம் மின் இணைப்பு இல்லை. வீட்டில் லாந்தர் விளக்கில்தான் படித்தோம். இரவு சாப்பாடு ஆனதும் திண்ணையில் அமர்ந்து நாங்கள் விளக்கை சுற்றி உட்கார்ந்து கொண்டு அப்பா சொல்லிக்கொடுத்ததை எழுதியதும் படித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

நினைவுகள் தொடரும்
வே. நடனசபாபதி

புதன், 13 மே, 2009

நினைவோட்டம் 10

ஐயாவிடமிருந்து எப்போது 'விடுதலை' கிடைக்கும் என அறியாமையால் ஏங்கிக்கொண்டிருந்த நான், ஐந்தாவது வகுப்பு வந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் அந்த வருஷம் முடியும் போது அவரிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதால். ஆனால் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் அவரிடம் படித்திருந்தால் பல வேறு விஷயங்கள் அவரிடமிருந்து பெற்றிக்க முடியும். அந்த மாதிரியான தன்னலம் கருதாத ஆசிரியர் இனி யாருக்கும் கிடைப்பாரா எனபது சந்தேகமே. ஐயாவைப்பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

ஐந்தாவது வந்த மாணவர்களில் சிலர் நாம் தான் 'விட்டு விடுதலையாகி' செல்கிறோமே என்பதால் சற்று விஷமம் செய்ய ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் ஐயா ' நான் நினைத்தால் உங்களை குதிரையாகவும் மாற்ற முடியும் அல்லது கழுதையாகவும் மாற்ற முடியும்' என சொல்லுவார். அப்போது நான் நினைப்பதுண்டு. இவர் எப்படி மனிதர்களை மிருகங்களாக மாற்ற முடியும் என்று. பின்புதான் அதன் பொருள் புரிந்தது. பள்ளி முடிந்து செல்லும்போது உயர் நிலைப்பள்ளியில் சேர பள்ளி மாற்று சான்றிதழ் ( Transfer Certificate ) தேவை. அதை தரும்போது அதில் நடத்தை என்ற இடத்தில் நன்று என எழுதினால் நிச்சயம் பள்ளியில் சேரலாம். அதுவல்லாமல் மோசம் என்றோ சுமார் என்றோ எழுதி கையொப்பமிட்டு கொடுத்தால் பள்ளியில் சேர முடியாது. அதைத்தான் ஐயா குதிரையாகவோ அல்லது கழுதையாகவோ மாற்றுவேன் என பொருள் பட சொல்லியிருக்கிறார். 'அந்த' நாளும் எனக்கு வந்தது. தேர்வு முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பின் ஐயா கூப்பிட்டு வாழ்த்தி சான்றிதழை கொடுத்தார். நல்ல வேளையாக என்னை 'குதிரை' யாகத்தான் மாற்றியிருந்தார்!! மிகவும் சந்தோஷத்தோடு சான்றிதழை வாங்கிக்கொண்டு திரும்பினேன். இனி எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் அப்பாவுக்கு கவலை. எனக்கோ சிறையிலிருந்து விடுதலை யாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.ஆனால் எனக்கு அப்போது தெரியாது அந்த மகிழ்ச்சி தற்காலிகம்தான் என்பது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி