வெள்ளி, 30 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 13

நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த வணிகரிடம், அந்த
ஜோடி செருப்பின் விலை எவ்வளவு என இந்தியில்
கேட்டபோது,அவர் ‘டாயி ருப்யா’என்றார்.உடனே
நண்பர்,’நை.நை.பாஞ்ச் ருப்யா.’என்றார்.அதாவது
அவர் சொன்ன விலை அதிகம் என எண்ணி ஐந்து
ரூபாய்தான் தர முடியும் என சொன்னார்.

(இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.இந்த நிகழ்ச்சி நடந்த வருடம் 1967.
அதனால் என்ன செருப்பு ஐந்து ரூபாய்க்கு கேட்டாரே
என எண்ணவேண்டாம்.அப்போது இருந்த
விலைவாசி அப்படி.)

அந்த வணிகர் திரும்பவும்,‘அரே பாய்.கேவல்
டாயி ருப்யா.’என்றார். நண்பரோ திரும்பவும்,
’நை.நை. பாஞ்ச் ருப்யா.’என்றார்.இப்படி அவர்
‘டாயி ருப்யா’ என்பதும், நண்பர் இராதாகிருஷ்ணன்
’நை.நை.பாஞ்ச் ருப்யா’என்பதும்,சிறிது நேரம்
தொடர்ந்தது.

பிறகு அவர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து,
‘பாய் ஸாப்.டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா ‘என்றார்.
அப்போதுதான் எங்களுக்கு (நண்பர்
இராதாகிருஷ்ணனுக்கும் தான்) புரிந்தது இந்தியில்
டாயி (ढाई) என்றால் இரண்டரை என்று!

நண்பருக்கு ஒன்றிலிருந்து நூறு வரை தான்
இந்திக்கான சரியான சொற்கள் தெரியும் போல.
எனவே அந்த வணிகர்,டாயி ருப்யா என்றதும்,
பின்னங்களுக்கான சரியான சொல் தெரியாததால்
இவர் அது பத்து ரூபாய்க்கு மேல் போலும் என
நினைத்து(!) ஐந்து ரூபாய்க்கு கேட்டிருக்கிறார்!!

நண்பர் விலை விசாரித்தபோது பேசிய இந்தியிலிருந்து,
அந்த வணிகருக்கு நாங்கள் ஊருக்கு புதியவர்கள்
என்றும்,‘மதராசிகள்’என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

பிறகு நண்பர் திரும்பத் திரும்ப இரண்டரை ரூபாய்
சொன்ன பொருளை,ஐந்து ரூபாய்க்கு கேட்டதும்,
அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகம்
பறந்தோடிவிட்டது.அதனால் அவர் உடனே
‘டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா’ என ஆங்கிலத்தில்
சொல்லிவிட்டார்.

உடனே நண்பர் தவறை உணர்ந்து, ’நை.நை.
தோ ருப்யா’ (இரண்டு ரூபாய்) என்றார்.அதற்கு
அவர் ‘நை பாய்.’ எனக் கூறிவிட்டார்.வேறு
வழியின்றி நான் அவர் கேட்ட பணத்தைக்
கொடுத்து அதை வாங்கினேன்.

நண்பரின் இந்திப் புலமையைப் பற்றி நன்றாக
தெரிந்து கொண்டதால், அதற்குப் பிறகு ஒன்றும்
வாங்காமல் திரும்பி விட்டேன்.

அறைக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன்.
’எங்கள் ஊரில் சொல்வார்கள். ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாது என்று. அதுபோல நீங்கள் என்னதான்
பள்ளியில் இந்தி படித்திருந்தாலும்,பேசுவது எப்படி
எனத்தெரியாவிட்டால் படித்தும் பிரயோஜனம் இல்லை.
இந்தியை பள்ளி இறுதி வரை படித்த நீங்களும்,
இந்தி படிக்காத நானும் இப்போது ஒரே
நிலையில்தான் இருக்கிறோம்.எனவே இனியாவது
இந்தியை படித்திருக்கிறோம் என பெருமை
பேசாதீர்கள்.’என்றேன்.அதற்கு பிறகு அவரிடமிருந்து
எந்த பேச்சும் இல்லை.

மறுநாள் நாங்கள் இருந்த ராமானுஜம் மெஸ்
மேலாளரிடம் எங்கு பொருட்களை வாங்கலாம் எனக்
கேட்டபோது அவர் சொன்னார்.‘நீங்கள் ஆர்ய
சமாஜ்சாலை தாண்டியதும் உள்ள அஜ்மல்கான்
சாலையின் இடதுபுறம் உள்ள கஃப்பார் மார்க்கெட்
(Gaffar Market)சென்றால் என்ன உங்களுக்கு
வேண்டுமோ அது எல்லாம் அங்கு கிடைக்கும் என்றார்.

அதற்குப் பிறகு நாங்கள் ஒரு நாள் பயிற்சி
முடிந்து வந்ததும், கஃப்பார் மார்க்கெட் போனோம்.
அங்கே வரிசையாக நிறைய கடைகள்,
சென்னையில் உள்ள'ரிச்சி மார்க்கெட்’ போல
நெருக்கத்தில் இருந்தன.

அங்கே இல்லாத பொருளே இல்லை எனலாம்.
நான் அப்பாவுக்கு கம்பளிக் குல்லாவும்,
அம்மாவுக்கு ஸ்வெட்டரும் மற்றும் எனக்கு
பெல்ட், ஷூ முதலியவைகளை வாங்கினேன்.

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால் நானே
ஆங்கிலத்திலேயே பேசி (பேரமும் பேசி)
பொருட்களை வாங்கினேன். அங்கு இருந்தவர்கள்
நாம் ஆங்கிலத்தில் பேசினாலும், பாதி ஆங்கிலம்
பாதி இந்தியில் என(HInglish ல்)பேசியதால்
சிரமம் ஏதும் இல்லை.

ஆனாலும் இந்தியில் பேசாததால்,நிச்சயம் அதிக
விலை கொடுத்திருப்பேன்.அதனாலேன்ன,
மொழி தெரியாததற்கு அது விலை என
எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அப்போது புது தில்லியில் எனது மாமா மகன்
திரு வேணுகோபாலன் அவர்கள்
Public Health Engineering துறையில் முது நிலைப்
பொறியாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்.
ஊருக்கு எழுதி அவரது முகவரியை
அறிந்துகொண்டு பின் அவரது முகவரிக்கு கடிதம்
எழுதினேன்.நான் பயிற்சிக்கு வந்திருப்பதை
தெரிவித்து,அவர் வீட்டுக்கு எவ்வாறு வருவது
எனக்கேட்டு எழுதி இருந்தேன்.

அவருடன் பணியாற்றும் வேதராமன் என்கிற
பொறியாளர்‘கரோல் பாக்’ கில்தங்கி இருந்ததால்,
அவர் மூலம் நான் எவ்வாறு Andrews Ganj ல் இருந்த அவர் வீட்டிற்கு வருவது என கடிதம்
கொடுத்து அனுப்பி இருந்தார்.

அந்த பொறியாளர் என்னை நேரில் வந்து
பார்த்து கடிதத்தைக் கொடுத்துவிட்டு,எவ்வாறு
பேருந்து பிடித்து அங்கு செல்வது என விவரமாக
சொன்னார்.

புது தில்லி சென்று 20 நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டதால்,முதலில் இருந்த‘பயம்’போய்விட்டது.
எங்கு சென்றாலும் அங்கு உள்ளவர்கள் ஆங்கிலம்
பேசினாலும் பேசாவிட்டாலும் நான் ஆங்கிலத்தில்
பேசி நிலைமையை சமாளிக்கும் தைரியம்
வந்துவிட்டதால், தனியாக Andrews Ganj செல்ல
தயக்கம் ஏற்படவில்லை.

அப்போதே டில்லியில் விடுமுறை நாட்களில்
DTC யில் ஐந்து ரூபாய்க்கு சிறப்பு பயணச்சீட்டு
விற்பனை செய்வார்கள்.அதை வாங்கினால்
நாள் முழுவதும் எந்த பேருந்திலும் எந்த
வழித்தடத்திலும் பயணம் செய்யலாம்’

ஒரு ஞாயிறு காலை ஆர்ய சமாஜ் சாலையில்
இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு
நடத்துனரிடம்(விடுமுறை நாட்களில் சிறப்பு
பயணச்சீட்டு வழங்க, ஒரு நடத்துனர் இதற்காகவே
நின்றுகொண்டு இருப்பார்) ஐந்து ரூபாய் கொடுத்து
சிறப்பு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பேருந்தில்
ஏறி பாராளுமன்றம் அருகே இறங்கி அங்கு
வேறொரு பேருந்து பிடித்து Andrews Ganj ல் உள்ள
எனது மாமா மகன் வீட்டுக்கு போனேன்.

(அடுத்த பதிவு 2012 ல் என்பதால், அனைவருக்கும்
இப்போதே எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!)

தொடரும்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 12

‘கரோல் பாக்’ கில் உள்ள இராமானுஜம் மெஸ்
திரும்பும் வரை நாங்கள் எதுவும் பேசிக்
கொள்ளவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு
அறைக்குத் திரும்பியதும்,நண்பர் இராதாகிருஷ்ணன்
ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.உடனே நான் ‘வெகுதூரம்
நடந்தது களைப்பாக இருக்கிறது. காலையில்
பேசிக்கொள்ளலாம்.’எனக்கூறி மேற்கொண்டு
பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல்
படுத்து விட்டேன்.

காலையில் எழுந்ததும் நண்பர் தர்மலிங்கம் என்னிடம்
‘எனது வகுப்பு நண்பர் ஒருவர் இங்கு IARI யில்
முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டு
இருக்கிறார்.அவரை நாம் அழைத்துக்கொண்டு
சென்றால் இந்த மொழிபிரச்சினை இருக்காது.’
என்றார். நானும் முதல் நாள் பட்ட அனுபவத்தால்,
‘சரி’ என சொல்லிவிட்டேன்.

அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை காலை
அவரது நண்பர் எங்களது அறைக்கு வந்தார்.
அவரிடம் எங்களது அனுபவத்தை சொன்னதும்
அவர், ‘கன்னோட் பிளேஸ்’ என்பது நம்மைப்
போன்றவர்கட்கு ‘Window Shopping’ செய்ய மட்டுமே.

அங்கு எல்லாமே விலை அதிகம். மற்றும் பேரம்
பேச முடியாது. அதற்கு நீங்கள் இங்கு கரோல் பாக்,
அஜ்மல்கான் சாலையில் உள்ள கடைகளிலும்,
நாளை (திங்களன்று) இங்குள்ள Monday Market எனப்படும்
சாலையோர பிளாட்பாரத்தில் வைக்கப்படும்
கடைகளிலும் பேரம்பேசி(?) எல்லா பொருட்களையும்
வாங்கிக்கொள்ளலாம்.’ என்றார்.

அவருடன் அன்று காலை கிளம்பி, Red Fort,
கன்னோட் பிளேஸ்,Super Bazar,போன்ற இடங்களைப்
பார்த்துவிட்டு மாலையில் Red Fort ல் நடைபெற்ற
Son et lumière எனப்படும் ஒலி ஒளி காட்சியைப்
பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
(இது பற்றி விரிவாக ‘நினைத்துப் பார்க்கிறேன்’
தொடரில் எழுத இருக்கிறேன்)

தில்லியில் வணிக நிறுவனங்கள்/கடைகள் வாரம்
ஒருமுறை விடப்படும் விடுமுறை நாளை சுழற்சி
முறையில் கடைப்பிடித்து வந்தன.அதனால் ஒவ்வொரு
பகுதியிலும் ஒரே நாளில் விடுமுறை இருக்காது.
இப்போதும் அதே முறை கடைப்பிடிக்கப்படுகிறது
என நினைக்கிறேன்.

இதனால் வாடிக்கையாளர்கள் வாரம் முழுதும்
எங்காவது ஒரு இடத்தில் தேவையானவற்றை
வாங்க முடியும்.அதோடு அல்லாமல் வாடகை இடம்
பிடித்து வணிகம் செய்ய இயலாத சிறு மற்றும்
குறு வணிகர்கள் விடுமுறை விடப்பட்டுள்ள
பகுதிகளின் பெரிய கடைகளின் முன்னே
பிளாட்பாரத்தில் தங்களின் கடையை(!)
ஆரம்பித்துவிடுவார்கள். (நம் ஊர் தியாகராயநகர்
பாண்டி பஜார் கடைகள் போல) ஆனால் இந்த
கடைகள் ஒரு நாள் மட்டுமே அந்த பகுதியில்
இருக்கும்.மேலும் அந்த கடைகள் நடக்கும்
நாளின் பெயரால் அழைக்கப்பட்டன.

இதனால் அவர்களுக்கு வாரம் முழுதும்
ஏதாவது ஒரு பகுதியில் வணிகம் செய்யும்
வாய்ப்பு கிடைப்பதால்,வருடம் முழுதும்
அவர்களால் நிரந்தர இடம் இல்லாவிடினும்
வணிகம் செய்ய முடியும்.

பொதுமக்களுக்கும்,அவரவர் பகுதியில் வாரம்
முழுதும் கடைகள் திறந்திருப்பதால் பொருட்களை
நினைத்தபோது வாங்கமுடியும்.இவ்வாறு
விடுமுறை நாட்களில் உள்ள தெருவோர கடைகளில்
எல்லா பொருட்களும் குறைந்த விலையில்
கிடைத்ததால், அன்று கூட்டமும் அலைமோதும்.

கரோல் பாக் உள்ள கடைகள் திங்கள் கிழமையில்
விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.அப்போது
நடக்கும் இந்த தெருவோர கடைகளுக்கு
Monday Market எனப் பெயர்.

தர்மலிங்கத்தின் நண்பர் சொன்ன யோசனைப்படி,
மறுநாள் மாலை பயிற்சி முடிந்து அறைக்குத்
திரும்பியதும் காபி குடித்துவிட்டு,
Monday Market க்கு கிளம்பினோம்.

அப்போது நான் சொன்னேன் ‘இங்கு எல்லாமே
பேரம்பேசித்தான் வாங்கமுடியுமாம்.நமக்கு இந்தி
தெரியாததால் எப்படி வாங்கப்போகிறோமோ?’ என்று.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,‘சென்ற வாரம்
பேருந்தில் நடந்ததை வைத்து,எனக்கு இந்தி
தெரியாது என நினைத்து விடாதீர்கள். அந்த
நடத்துனர் வேகமாக இந்தியில் பேசியதால்,
எனக்கு அவர் கேட்டது புரியவில்லை.இங்கு
அப்படியில்லை.சாவகாசமாக பேசி பேரம் செய்ய
நான் உதவுகிறேன்.’என்றார். வேறு வழியின்றி
நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.

அந்த Monday Market அஜ்மல்கான் சாலையில்,
பூசா சாலை ஆரம்பத்திலிருந்து, ஆர்ய சமாஜ் சாலை
வரையிலும்,ஏன் அதைத் தாண்டியும் சாலையின்
இருபக்கங்களிலும் உள்ள பிளாட்பாரங்களில்
விரிந்திருந்தது. .

நாங்கள் பூசா சாலையில் ஆரம்பித்து ஆர்யாசமாஜ்
சாலை வரை உள்ள எல்லா கடைகளையும்
ஒரு முறை பார்த்துவிட்டு,பின்பு தேவையானவற்றை
வாங்கலாம் எனத் தீர்மானித்து நடக்கத்தொடங்கினோம்.

கைக்குட்டைகள், புடவைகள், உள்ளாடைகள்,
சட்டைகள், பீங்கான் சாமான்கள், காலணிகள் என
நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களும்
அங்கு இருப்பதைப் பார்த்தோம்.

அப்போது அங்கு ஒரு சர்தார்ஜி இரப்பர்
காலணிகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்ததைப்
பார்த்ததும், நான் எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்க
எண்ணினேன். நான் அந்த கடை அருகே சென்றதும்
நண்பர்கள் தர்மலிங்கமும் இராதாகிருஷ்ணனும்
என்னுடன் வந்தார்கள்.

நான் அங்குள்ள செருப்பு ஒன்றை எடுத்துப் பார்த்ததும்,
நண்பர் ‘இதை வாங்க வேண்டுமா என்றார்?
‘ஆம்’ என்றதும், நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த
வணிகரிடம், ‘யே கித்னா ஹை?’
(இதன் விலை எவ்வளவு?) என்றார்.



தொடரும்

புதன், 21 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 11

சென்ற பதிவில் Gole Market பேருந்து
நிறுத்தலிருந்து கன்னோட் பிளேஸ் வரை,
ஃபட் ஃபட் ஊர்தியில் பயணித்தது குறித்து
எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு
பின்னூட்டம் இட்டிருந்த நண்பர்
திரு வாசுதேவன் அவர்கள்,ஃபட் ஃபட்
ஊர்தியின் படத்தை, பதிவுலக நண்பர்களும்
தெரிந்துகொள்ளும் விதமாக பதிவில்
வெளியிடலாமே என யோசனை
சொல்லியிருந்தார்.

அவரது யோசனைப்படி நானும் படங்களை
வெளியிட இருந்தேன். பின் நண்பர் வாசுதேவனே
ஒரு புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.
அவர் அனுப்பியிருந்த படம் கீழே.






நான் வெளியிட இருந்த படங்கள் கீழே.








உச்சநீதி மன்ற ஆணைப்படி, இந்த ஊர்திகள்
வெளியிடும் புகை, சுற்றுப்புறத்தை அதிகம்
மாசு படுத்தியதால்,1988 முதல் தடை தில்லியில்
செய்யப்பட்டுவிட்டன. எனவே இவைகளை
புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

நான் ‘கரோல் பாக்’ சென்ற பின், நடந்த
நிகழ்வுகள் அடுத்த பதிவில்.


தொடரும்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 10

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னோட்
பிளேஸுக்கு திரும்பவும் பேருந்தில் செல்ல
தயக்கம் (பயம்!) காரணமாக நடந்து செல்லலாமா
அல்லது ஏதேனும் ஆட்டோவில் செல்லலாமா என
யோசித்துக்கொண்டு நின்றபோது, ‘ஃபட் ஃபட்’
ஒன்று வந்தது.

‘ஃபட் ஃபட்’ என்பது தில்லிக்கே உரித்தான ஒரு
பயண ஊர்தி.பார்ப்பதற்கு முன் பக்கம் மோட்டார்
சைக்கிள் போலவும்,பின் பக்கம் ஆட்டோ போலவும்
இருக்கும். மோட்டார் சைக்கிள் சேஸில்,
(Motor Cycle Chassis) பின்பக்கம் அமரும் இடத்தில்,
நம்மூர் ‘மீன் பாடி’ வண்டி அகலத்தில் அமரும் இடம்
அமைத்து,அதன்மேல் மேற்கூடு கட்டி,
முன்பக்கமும் பின் பக்கமும்,எதிரும் புதிருமாக
இருக்கைகள் அமைத்து தில்லியை வலம் வரும்
அலங்கார ஊர்திதான் ‘ஃபட் ஃபட்'.


அது ஃபட் ஃபட் என ஓசை எழுப்பிக்கொண்டு
வருவதால் அதற்கு தில்லிவாசிகள் ‘ஃபட் ஃப்ட்’
என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.இப்போது
நம் சென்னையில் எப்படி நமக்கு
ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோவுக்கு பதில்
உதவுகிறதோ, அதுபோல அங்கு இந்த
ஃபட் ஃபட் வண்டிகள் கை கொடுக்கின்றன.

அழித்தால் ஐந்து பேர் செய்யலாம். அப்படிபட்ட
உடல் வாகு கொண்ட ஒரு ஆஜானுபாகுவான
சர்தார்ஜிதான்,அந்த ‘ஃபட் ஃபட்’ ஐ,ஒட்டிவந்தார்.
அதிலே ஏற்கனவே இரு பயணிகள் இருந்தனர்.

நாங்கள் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்ததும்,
அந்த சர்தார்ஜி, ‘மதராஸ் ஓட்டல் ஆவோ,
மசால் வடை காவோ’ என்று கூறி எங்கள் அருகே
வண்டியை நிறுத்தினார்.

நாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது
தெரியாததால்‘கன்னோட் பிளேஸ்'என சொன்னதும்,
தலையை ஆட்டி,அதிலே ஏறச்சொன்னார்.
அவர் சொன்னதின் பொருள் அப்புறம் தான்
புரிந்தது.

கன்னோட் பிளேஸ் செல்லும் வண்டிகள்
எல்லாம்,அங்கு உள்ள Madras Hotel எனப்
பெயரிட்டு அழைக்கப்பட்ட உணவகம்
அருகே தான் சென்று நிற்கும்.எங்களைப்
பார்த்தும் தென்னிந்தியர்கள் என்பதைப்
புரிந்து கொண்ட அவர்,அங்கு அந்த
ஃபட் ஃபட் செல்லும் என்பதைக் குறிக்க அவ்வாறு
எதுகை,மோனையோடு கூறியிருக்கிறார்!

நாங்கள் அதில் ஏறி அமர்ந்து கன்னோட் பிளேஸில்
இருந்த Madras Hotel நிறுத்தம் சென்று இறங்கினோம்.
(இப்போது Madras Coffee House என அழைக்கப்படுகிறது
என நினைக்கிறேன்) அங்கு யாரையும் கேட்காமல்
நடக்கத் தொடங்கினோம்.

கன்னோட் பிளேஸ் என்பது புது தில்லியில்
வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள ஒரு வணிக
வளாகம்.இந்த வட்ட வடிவான வளாகத்தின்
இரு பக்கங்களிலும் அநேக வணிக நிறுவனங்கள்
உண்டு.வெளி வட்டத்தை கன்னோட் சர்க்கஸ்
என்றும் உள் வட்டத்தை கன்னோட் பிளேஸ்
என்றும் அழைக்கிறார்கள்.

இங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.
என்ன,பர்ஸ் கனமாக இருக்கவேண்டும்.
அவ்வளவுதான்!

இந்த வளாகத்தின் உள் வட்டத்திற்கு சென்று
வெளியே வர, ஒரு சக்கரத்தின் ஆரம் போன்று
10 வழிகள் உண்டு.

இந்த வணிக வளாகத்தை, 1929 ல் கட்ட ஆரம்பித்து
1933 ல் முடித்தார்களாம். விக்டோரியா மகாராணியின்
மூன்றாவது மகனான முதலாம் கன்னோட் கோமகன்
(1st Duke of Connaught) என்ற ஆர்தர் இளவரசனின்
(The Prince Arthur) பெயரைக்கொண்டு
Connaught Place என பெயரிடப்பட்டதாம்.

நாங்கள் சென்றபோது,நடுவில் ஒரு அழகிய
பூங்காவும், இந்தியா காஃபி ஹௌஸும் இருந்தன.
ஒரு மூலையில் தில்லித் தமிழ் சங்கத்தின் ஒரு
சிறிய அலுவலகம் கூட இருந்தது. இப்போது
அவை யெல்லாம் இல்லை.

அந்த இடத்தில் Palika Bazaar என்ற பெயரில்
தரை மட்டத்திற்கு கீழே ஒரு வணிக மய்யம்
அமைத்துவிட்டார்கள்.(மாநகரக் காவல் என்ற
படத்தில் விஜயகாந்த் சண்டைபோடுவது போன்ற
காட்சி எடுக்கப்பட்டது இங்கேதான்.)

நாங்கள் இறங்கிய நிறுத்தம் உள் வட்டத்தில்
இருந்தது.சிறிது தூரம் நடந்து உடனே வலப்புறம்
வந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம்.
அது Sansad Marg என பின் தெரிந்துகொண்டோம்.
கடைகள் ஏதும் தென்படவில்லை.

ஜந்தர் மந்தர் எனப்படும், வானியல் உபகரணங்கள்
உள்ள இடம் தாண்டி,சர்தார் பட்டேல் சிலை உள்ள
சந்திப்பை கடந்தபோது, இரண்டு பெரிய துவாரக
பாலகர் போன்ற உருவங்களோடு கூடிய
கட்டிடத்தைப் பார்த்தோம்.அது ரிசர்வ் வங்கி
கட்டிடம் என்பதும் நாங்கள் நிற்பது பாராளுமன்ற
சாலை என்பதியும் தெரிந்துகொண்டோம்.

யாரையும் கேட்காமல் நடந்ததால், கன்னோட்
பிளேஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம்
என உணர்ந்து,தலைவிதியை நொந்துகொண்டு
திரும்பி நடந்தோம்.

திரும்ப வணிக வளாகம் வந்தபோது இரவு
மணி 7.30 ஆகிவிட்டது. கடைகளை எல்லாம்
அடைக்க தொடங்கியிருந்தார்கள்.

தில்லியில் இரவு 7.30 மணிக்கு கடைகளை
எல்லாம் மூடிவிடுவார்களாம்.எனவே வேறு
வழியின்றி ஏமாற்றத்தோடு இறங்கிய
இடத்திற்கே திரும்பி,அங்கு நின்றிருந்த
ஃபட் ஃபட் டில் ஏறி கரோல் பாக் திரும்பினோம்.


தொடரும்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 9

கன்னோட் பிளேஸ்(Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்ததும், உடனே கீழே
வந்து,அங்கிருந்த ‘மெஸ்’ மேலாளரிடம் கன்னோட்
பிளேஸ் செல்லும் பேருந்து எண் மற்றும் எந்த
இடத்தில் அதில் ஏறவேண்டும் என விசாரித்துக்
கொண்டு கிளம்பினோம்.

அந்த பேருந்து ஏற,ஆர்ய சமாஜ் சாலை
செல்லவேண்டும் என அவர் கூறியதால்.நாங்கள்
அங்கு சென்று,அந்த பேருந்து நிற்குமிடம் சென்று
காத்திருந்தோம்.

அப்போது நான் ‘இங்கு ஏதாவது வாங்க
வேண்டுமென்றால், பேரம் பேசித்தான் வாங்க
வேண்டுமாம்.இல்லாவிட்டால் ஏமாந்து
விடுவோமாம்.இந்தி தெரிந்தால் பேரம் பேசலாம்.
நமக்குத்தான் தெரியாதே என்ன செய்வது?’என்றேன்.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,’உங்களுக்கு
வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.எனக்குத்
தெரியும்.ஏனெனில் கேரளாவில் எங்களுக்கு
எஸ்‌.எஸ்.‌எல்‌.சி வரை இந்தி மொழிப்பாடம் உண்டு.
அதனால் கவலை வேண்டாம்.'என்றார்.அதோடு
நிற்கவில்லை அவர். பின் சொன்னார்,'உங்கள்
மாநிலத்தில்தான் இந்தியை எதிர்க்கிறீர்களே.
அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான்
வேண்டும்.’என்று.

நான் உடனே,’நண்பரே.நாங்கள் இந்தி என்ற
மொழியை எதிர்க்கவில்லை.அதை எங்கள் மேல்
திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.இந்த திணிப்பு
நடைபெறு முன்னரே தமிழ் நாட்டில் இந்தியை
விரும்பிப் படித்தவர்கள் அநேகம்.ஏன் தட்சிண பாரத்
இந்தி பிரசார் சபா இருப்பதே சென்னையில் தானே.
எனவே விவரம் தெரியாமல் பேசாதீர்கள்.’என்றேன்.
(இந்த இந்தித் திணிப்பு பற்றி தனியாக ஒரு பதிவு
எழுத இருக்கிறேன்.)

மேலும் பேச்சு நீடிக்குமுன் நாங்கள் ஏற வேண்டிய
பேருந்து வந்துவிட்டது. அப்போதெல்லாம் டில்லியில்
பேருந்துகள்,Delhi Transport Corporation (DTC)
என்ற அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய
நிறுவனத்தால் இயக்கப்பட்டன.

DTC யிடம் அதிக பேருந்துகள் இல்லாததால்,சில
வழித் தடங்களில் தனியார் நிறுவனங்கள்,அவர்களது
பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க DTC
அனுமதித்து இருந்தது.

அப்படிபட்ட பேருந்துகளில் On DTC Contract என
எழுதியிருக்கும்.அப்படிப்பட்ட பேருந்து ஒன்றில்தான்
நாங்கள் கன்னோட் பிளேஸ் செல்ல ஏறி,மூவரும்
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

நாங்கள் ஏறியவுடன் அந்த பேருந்தின் நடத்துனர் உடனே
எங்கள் அருகே வரவில்லை.இரண்டு நிறுத்தங்கள்
தாண்டியதும் ‘டிக்கெட், டிக்கெட் எனக் கேட்டுக்கொண்டு
எங்கள் அருகே வந்தார்.

நண்பர் இராதாகிருஷ்ணன் இருக்கையின் ஆரம்பத்தில்
அமர்ந்து இருந்ததால் பணத்தை எடுத்துக் கொடுத்து,
‘தீன் கன்னோட் பிளேஸ்.’என்றார்.அதற்கு அந்த
நடத்துனர்,‘கஹான் ஸே?’ என்றார். நண்பரும்
அந்த நடத்துனர் சரியாக கவனிக்கவில்லை போலும்
என எண்ணி திரும்பவும் ‘தீன் கன்னோட் பிளேஸ்.’
என்றார்.

அந்த நடத்துனர் நண்பரை ஒரு மாதிரியாய் பார்த்து,
‘அரே பாய். கஹான் ஸே?’ என்றார் திரும்பவும்.
நண்பர் இராதாகிருஷ்ணன்,திரும்பவும் ‘கன்னோட்
பிளேஸ்’ என்றதும், அந்த நடத்துனர் வழக்கமாக
எல்லா நடத்துனர்களும் நடத்தும் ‘அர்ச்சனை’யை
இந்தியில் செய்தார்!

எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று
ஒன்றும் புரியவில்லை.ஆனால் அவர் திட்டுகிறார்
என்று மட்டும் தெரிந்தது.பேருந்தில் உள்ள
அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியதும்,
எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சிலர்
சிரிக்கவும் தொடங்கிவிட்டனர்.

அப்போது எங்களுக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த
ஒருவர், ஆங்கிலத்தில் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’
என்றார்.‘ஆம்.’என்றதும்,’நீங்கள் எங்கு ஏறினீர்கள்?’
என்று கேட்டார்,‘கரோல் பாக்’ என்று சொன்னதும்,
அவர் ‘நடத்துனர் அதைத்தான் உங்களிடம் கேட்டார்.
நீங்கள் அதைச் சொல்லாமல் போகுமிடத்தை
சொன்னதும்,அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது.
இந்தியில் ‘கஹான் ஸே’ என்றால் ‘எங்கிருந்து’
என்று பொருள்.’என்று கூறிவிட்டு அந்த
நடத்துனரிடம் ஏதோ சொன்னார்.

என்ன எங்களை, இவர்கள் மதராசிகள். இந்தி
தெரியாததால் நீங்கள் கேட்டது புரியவில்லை
இவர்களுக்கு ‘கரோல்பாக்’ கிலிருந்து கன்னோட்
பிளேஸ் போக சீட்டு கொடுங்கள் என்றிருப்பார்.

அந்த நடத்துனரும் ஏதோ முணுமுணுத்துக்
கொண்டு சீட்டுகள் கொடுத்தார்,(சாவு கிராக்கிகள்
என அவரது மொழியில் சொல்லியிருப்பாரோ
என்னவோ.)

பேருந்தில் உள்ள அனைவரும் எங்களையே பார்த்து
ஏதோ பேசிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு
அவமானமாகிவிட்டது.எப்போதடா பேருந்திலிருந்து
இறங்குவோம் என ஆகிவிட்டது.

அப்போது பேருந்து ஒரு இடத்தை அடைந்தது.அங்கு
வரிசையாக அநேக கடைகளும், கூட்டமும்
இருந்ததால், கன்னோட் பிளேஸ் வந்துவிட்டது என
எண்ணி மற்றவர்களைக் கேட்க கூச்சப்பட்டு உடனே
இறங்கிவிட்டோம்.

இறங்கிய பேருந்து நகர்ந்ததும்,நண்பர் அங்கிருந்த
ஒருவரிடம்,‘இது கன்னோட் பிளேஸ் தானே?’ என்று
கேட்டார்.அதற்கு அவர், ‘இல்லை இல்லை. இது
Gole Market.கன்னோட் பிளேஸ் இங்கிருந்து இரண்டு
கிலோ மீட்டர் தூரம்.’என்றார். நாங்கள் ஒருவரை
ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டு,
மேற்கொண்டு என்ன செய்வது என
யோசித்துக்கொண்டு நின்றோம்.


தொடரும்

புதன், 14 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 8

இராமானுஜம் மெஸ் சென்றதும்,டாக்ஸிக்கு பணம்
கொடுத்துவிட்டு நண்பர் தர்மலிங்கத்தைத் தேடினேன்.
அப்போது மேலிருந்து என் பெயரைச்சொல்லி யாரோ
கூப்பிடுவதுபோல் இருந்ததும், நிமிர்ந்து பார்த்தேன்.
மேலே பால்கனியில் இருந்து நண்பர் தர்மலிங்கம்
என்னைப் பார்த்து ‘நேரே முதல் தளத்திற்கு
வாருங்கள்.’ என்றார்.

அதற்குள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் வந்து
என் படுக்கையை எடுத்துக்கொண்டு மாடிக்கு
சென்றார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.அவர்
நேரே நண்பர் தங்கியிருந்த அறைக்கு சென்று
அங்கு காலியாக இருந்த கட்டிலின் மேல் எனது
ஹோல்டாலை வைத்துவிட்டு சென்று விட்டார்.

பின் நண்பர், கீழே என்னை அழைத்து சென்று
அந்த மெஸ்ஸின் மேலாளரிடம் என்னை
அறிமுகப்படுத்தினார். அறைக்கு வந்ததும் எங்களைப்
பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டோம்.

நண்பர் தர்மலிங்கம் கோவையில் பணிபுரிந்தாலும்
கேரளாவில் வளர்ந்தவர் என்பதும், வேளாண்
அறிவியல் படிப்பை திருவனந்தபுரத்தில் இருக்கும்,
வெள்ளயானி வேளாண் கல்லூரியில் படித்தவர்
என்றும் தெரிந்துகொண்டேன்.

மேலும் அவர் வீட்டில் கன்னடம் பேசுபவர் என்றும்,
அப்போது தான் திருமணமானவர் என்றும்
துணைவியார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்
அறிந்துகொண்டேன்.

நண்பர் இராதாகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவர்
என்பதையும் அவரும் திருவனந்தபுரம் வெள்ளயானி
வேளாண் கல்லூரியில் படித்தவர் என்றும்
தெரிந்துகொண்டேன்.இருவரும் ஒரே கல்லூரி
என்பதால் பழைய நட்பை அங்கு வந்ததும்
புதுப்பித்துக்கொண்டனர் போலும்.

இந்த நேரத்தில் நான் தங்கியிருந்த இராமானுஜம்
மெஸ் பற்றியும்,‘கரோல் பாக்’ பற்றியும் கொஞ்சம்
சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.நம்
சென்னையின் திருவல்லிக்கேணி போல்,அப்போது
தென் இந்தியாவிலிருந்து வந்து,டில்லியில் அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில்
சேரும் கட்டை பிரம்ச்சாரிகளுக்கு, புகலிடம்
தந்தது ‘கரோல் பாக்’ தான்.

தில்லி விரிவாக்கத்தின் போது,‘கரோல் பாக்’ கில்
கட்டப்பட்ட, வீடுகளின் உரிமையாளர்கள், இந்தியா
பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு
வந்த பஞ்சாபிகள்.(இவர்களை உள்ளூர் மக்கள்
கேலியாக Repatriate என்பதை குறிக்கும் விதமாக
'R’ என சொல்வதுண்டு.)

ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது மூன்று தளங்கள்
கொண்டதாக இருக்கும்.மேலே பர்சாத்தி என
சொல்லப்படும் மொட்டை மாடியில் ஒரு அறை
குளியல் வசதி(?)யோடு இருக்கும்.

கீழ் தளத்தில் வீட்டின் உரிமையாளர் தங்கிக்கொண்டு,
மற்ற தளங்களை தென்னிந்தியருக்கே வாடகைக்கு
விடுவார்கள்.மேலே உள்ள மொட்டை மாடி அறையை
தென்னிந்திய பிரமச்சாரிகளுக்கே வாடகைக்கு
விடுவார்கள்.

தப்பித்தவறி கூட வட இந்தியர்களுக்கு
அதுவும் குறிப்பாக அவர்கள் இனத்தை சேர்ந்த
பஞ்சாபிகளுக்கு வாடகைக்கு விடமாட்டார்கள்.
Only for South Indians என்று ‘வாடகைக்கு’ என
எழுதிய பலகையில் எழுதியே இருப்பார்கள்.

காரணம் தென்னிந்தியர்கள் வம்பு தும்புக்கு
போகமாட்டார்கள்,வாடகையை ஒழுங்காக
கொடுத்து விடுவார்கள்,அதுவுமல்லாமல்
தேவைப்படும்போது தகராறு செய்யாமல் வீட்டை
காலி செய்து விடுவார்கள் என்பதால்.

இன்னொரு சிறப்பு(!)காரணமும் உண்டு. நமது
சாம்பார் மேல் அவர்களுக்கு கொள்ளை பிரியம்.
சாம்பரை அப்படியே குடிப்பவர்களும் உண்டு.
அவர்களுக்கு எப்படி அதை செய்வது எனத்
தெரியாததால், தங்கள் வீட்டில் ஒரு ‘மதராசி’
குடும்பத்தோடு தங்கியிருந்தால்
தேவைப்படும்போது சாம்பார் வாங்கிக்
கொள்ளலாம் அல்லவா?

சில பஞ்சாபிகள் தங்கள் வீடுகளை,‘மெஸ்‘ நடத்தும்
தென்னிந்தியர்களுக்கும் வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
அப்படி ‘கரோல் பாக்’ கில் இருந்த சரஸ்வதி மார்க்
என்ற தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தான்
இராமானுஜம் மெஸ் இருந்தது.

கரோல் பாக் கில் முக்கிய வணிக சாலையான
அஜ்மல்கான் சாலைக்கு இணையாக மேற்கு
திசையில் இருந்தது இந்த சாலை.அஜ்மல்கான்
சாலைக்கு இணையாக கிழக்கு திசையில்
இருந்தது குருத்வாரா சாலை. இந்த மூன்று
சாலைகளுக்கும், தெற்கே பூசா சாலையும்,
வடக்கே ஆர்யசமாஜ் சாலையும் இருந்தன.

இந்த இடங்கள் தான் முதன் முதல் தில்லி
வரும் தென்னிந்தியர்களுக்கு சொர்க்க பூமி.
ஏனெனில் இங்குதான் இராமானுஜம் மெஸ்
போன்று, இராமநாத அய்யர் மெஸ், சௌத்
இந்தியன் மெஸ், ராவ் மெஸ் என அனேக
உணவகங்களோடு கூடிய அறைகள் உள்ள
மெஸ் கள் இருந்தன.

இவை எல்லாமே 90 சதம் அறைகளை
மாதாந்திர வாடகைக்கும், மீதியை தில்லிக்கு
வணிக அல்லது வேறு விஷயமாக வரும்
தென்னிந்தியர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தன.
இங்கு தென்னிந்திய உணவு கிடத்ததால்,எப்போதும்
இந்த 'மெஸ்' களில் கூட்டம் தான்.

நான் தங்கியிருந்த இராமானுஜம் 'மெஸ்'ஸில்
காலையில் எல்லோரும் அலுவலகம்
போய்விடுவதால்,காலையிலேயே சாம்பார்,ரசம்
கூட்டு உள்ள முழுச்சாப்பாடு தான்.திரும்பவும்
இரவும் சாப்பாடுதான். மாதாந்திர அறை
வாடகையுடன் இரண்டு சாப்பாடுக்கான
பணத்தையும் கட்டிவிடவேண்டும்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்
காலை டிபன் உண்டு.காலை காப்பிக்கும்
மாலை நேர டிபனுக்கும் தனியாக பணம்
தரவேண்டும்.

தலைநகரில் நம் ஊர் சாப்பாடு கிடத்ததால்,நல்ல
வேளை நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படவில்லை.
ஆனால் மதியம் மட்டும் வேறு வழி இல்லாமல்
IARI கேண்டீனில் பிரெட் சாப்பிட வேண்டி இருந்தது.

தினம் காலையில் நண்பர்களுடன் 8.30 மணிக்கு
சாப்பிட்டுவிட்டு (காலையில் சாதம் சாப்பிடுவது
கஷ்டமாயிருந்தாலும்) ஆர்யசமாஜ் சாலை வந்து,
பேருந்து பிடித்து பயிற்சி நடக்கும் இடத்துக்குப்
போய்விட்டு மாலை திரும்பிக்கொண்டு இருந்தேன்.

ஒருநாள் சீக்கிரம் அறைக்கு வந்துவிட்டதால்,
தில்லியின் முக்கிய வணிக மய்யமான
கன்னோட் பிளேஸ் (Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்தோம்.(இப்போது
அந்த இடம் ‘ராஜீவ் சௌக்’ என அழைப்படுகிறது.)


தொடரும்

திங்கள், 12 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 7

நண்பர் சங்கரன் அவரது இருக்கையை அடைந்ததும்,
என்னை அமரச் சொல்லிவிட்டு என்னைப் பற்றியும்,
என் பயணம் பற்றியும் கேட்டார்.எனது பயணம்
பற்றி எல்லாவற்றையும் விவரமாக சொல்லிவிட்டு,
தங்குவதற்கு நல்ல தங்குமிடம் ஏற்பாடு செய்து
தரமுடியுமா எனக் கேட்டேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் இன்று பயிற்சிக்குப் போய்
வாருங்கள்.அதற்குள் நான் விசாரித்து வைக்கிறேன்.’
என்றார். ‘காலை உணவு சாப்பிட்டீர்களா?’ என்று
அவர்கேட்டதற்கு நான் ‘இல்லை.’என்றதும்,‘இங்கு
இன்னும் கேண்டீன் நடத்தும் பையன் வரவில்லை.
வாருங்கள் வெளியே போய் வருவோம்.’ எனச்சொல்லி.
என்னை வெளியே அழைத்து சென்று அங்குள்ள ஒரு
தெருவோர சிற்றுண்டி சாலையில்(’டாபா’ வில்)
சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

பின் பயிற்சி நடைபெறும் Pusa Institute எனச்
சொல்லப்படுக்கின்ற Indian Agricultural Research
Institute (I.A.R.I) வளாகத்திற்கு செல்ல,ஒரு
ஆட்டோவை கூப்பிட்டு அவரிடம், இந்தியில் என்னை
எங்கு விடவேண்டுமென்று சொல்லிவிட்டு,‘மாலையில்
பார்ப்போம்.’எனக்கூறி உள்ளே சென்றுவிட்டார்.

அங்கிருந்து IARI வெகு அருகில் என்பதால், அந்த
ஆட்டோ ஓட்டுனரும் வெகு விரைவில் என்னை
விட்டுவிட்டு மீட்டர் காட்டிய தொகையைப்
பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

பயிற்சி நடைபெறும் அறைக்கு சென்றதும் அங்கே
நின்றுகொண்டு இருந்தவர் என்னை அன்புடன்
வரவேற்று நான் எங்கிருந்து வருகிறேன் எனக்
கேட்டுவிட்டு,தான் விதை தொழில்நுட்பத்
துறையின் (Seed Technology) தலைவர் என்றும்,
தன் பெயர் Dr.அமர் சிங் என்றும் தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டார்.

என்னை அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு
பதிவு செய்துகொண்டதும்,பயிற்சிக்கான Note Book
முதலியவகளைக் கொடுத்து உள்ளே அமரச்சொன்னார்.

அங்கே ஏற்கனவே சுமார் 25 பேர் வந்து இருந்தனர்.
நானும் காலியான ஒரு இருக்கையில் சென்று
அமர்ந்தேன்.சரியாக 10 மணிக்கு அப்போது IARI ன்
தலைவராக இருந்த வேளாண் விஞ்ஞானி
Dr.M.S.சுவாமிநாதன் அவர்கள் வந்து பயிற்சியைத்
தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேச்சை தொடங்குமுன் எங்களை யெல்லாம்
பெயர்,ஊர்,பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றை
சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார்.

அப்போதுதான் கவனித்தேன் இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் உள்ள வேளாண் துறையின் கீழ்
உள்ள விதை ஆய்வு மய்யத்தில்(Seed Testing Centre)
பணிபுரியும் இளம் வேளாண் விஞ்ஞானிகளும்,
எங்களது NSC நிறுவனத்தின் சார்பாக,எங்களது
உத்திர பிரதேச கிளைகளில் இருந்து இருவரும்,
அப்போதைய மைசூர் மாநிலத்திலிருந்து(தற்போதைய
கர்நாடக மாநிலம்) நானும் ஆக மூவர்
பங்கேற்கிறோம் என்று.

அறிமுகப்படலம் நடக்கும்போது,தமிழ் நாட்டிலிருந்து
யார் வந்திருக்கிறார்கள் என ஆவலாக கவனித்தபோது
கோவை விதை ஆய்வு மய்யத்திலிருந்து வருவதாக,
தர்மலிங்கம் என்ற நண்பர் சொன்னபோது ‘அப்பாடா.
நம் ஊர்க்காரர் ஒருவர் இருக்கிறாரே என எண்ணி
சந்தோஷப்பட்டேன்.

அறிமுகம் முடிந்து Dr.M.S.சுவாமிநாதன் சிறப்புரை
ஆற்றி எங்களை பயிற்சியை சிறப்பாக முடிக்க
வாழ்த்தி விடைபெற்ற பின் Dr.அமர்சிங் அவர்கள்
பயிற்சியின் நோக்கம் பற்றி சொன்னார்.(பயிற்சி
பற்றி பின் நினைவோட்டத்தில் எழுதுவேன்)

தேநீர் இடைவேளையின் போது நான் சென்று
திரு தர்மலிங்கம் அவர்களிடம் அறிமுகப்படுத்திக்
கொண்டேன்.அவருடன் பயிற்சிக்கு வந்த இன்னொரு
நண்பர்,தனது பெயர் இராதாகிருஷ்ணன் என்றும்,
தான் கேரளாவில் உள்ள பட்டாம்பி (ஷோரனூருக்கு
அருகில் உள்ளது) என்ற இடத்தில் வருவதாக
அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திரு தர்மலிங்கம் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என
விசாரித்தபோது நான் எனது தலைமை அலுவலகத்தில்
தற்காலிகமாக தங்கி இருப்பதையும், தங்க இடம் தேட
வேண்டி இருப்பதையும் சொன்னேன். அவர் எங்கு
தங்கி இருக்கிறார் எனக் கேட்டபோது அவர் தானும்
நண்பர் திரு இராதாகிருஷ்ணனும் ‘கரோல் பாக்’கில்
'இராமானுஜம் மெஸ்’ ஸில் தங்கி இருப்பதாக சொன்னார்.

உடனே நான் ‘அங்கு தங்க எனக்கு இடம் கிடைக்குமா?’
என்று கேட்டபோது அவர் ‘அங்கு ஒரு அறையில் மூன்று
பேர் தங்க அனுமதிக்கிறார்கள்.எங்கள் அறையில் நாங்கள்
இருவர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் விரும்பினால்
எங்களுடன் தங்கலாம். ஆனால் பயிற்சி முடியும்
40 நாட்களும் அங்குதான் தங்கி இருக்கவேண்டும்.அப்படி
என்றால்தான் அவர்கள் அனுமதி தருவார்கள்.’என்றார்.

நானும் ‘சரி’ என்றதும்,அவர்‘இன்று ஒருநாள் மட்டும்
நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே
தங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் அந்த மெஸ்
உரிமையாளரிடம் இன்று மாலை அறைக்குத்
திரும்பியதும் கேட்டு வருகிறோம்.அவர் சரி
என்று சொன்னால், நீங்கள் நாளை மாலை அங்கு
வந்து எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.’என்றார்.

ஒரு வழியாகத் தங்கும் இடத்திற்கு வழி செய்ததும் தான்
எனக்கு நிம்மதி வந்தது.பின் காலைபயிற்சி வகுப்புகள்
முடிந்தபிறகு நண்பர்கள் தர்மலிங்கத்தோடும்,
இராதாகிருஷ்ணனோடும் மதிய உணவு அருந்த அங்கு
உள்ள உணவகத்திற்கு சென்றேன்.

அதுதான் எனக்கு முதல் வட இந்திய பயணம் என்பதால்,
அங்கு ரொட்டி மற்றும் சப்பாத்தியையும் அதனுடன்
தரும் சப்ஜி எனப்படுகின்ற கூட்டு போன்றவைகளை
சாப்பிட விருப்பமில்லை.சாம்பார், ரசம் உண்டா எனக்
கேட்டதற்கு வெறும் சாதமும் பருப்பும் தான் உள்ளது
என்றனர்.

நண்பர் தர்மலிங்கம் காலையிலேயே இராமானுஜம்
மெஸ்ஸில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டதால், மதியம்
வெறும் பிரெட் & ஜாம் தான் சாப்பிட்டப் போவதாக
கூறினார். நானும் அவரோடு அதை சாப்பிட்டேன்.

மாலை வகுப்புகள் முடிந்து தலைமை அலுவலகம்
சென்றபோது திரு சங்கரன் எனக்காக காத்திருந்தார்.
அவரிடம் ‘கரோல் பாக்’ கில் தங்க ஏற்பாடு
செய்திருப்பதாக கூறியதும்,‘சந்தோஷம்’ எனக்கூறிவிட்டு,
‘இன்று இரவும் இங்கேயே தங்கிக்கொள்ளுங்கள்.நான்
இரவுக் காவலாளியிடம் சொல்லிவிடுகிறேன்.இரவு
உணவுக்கும்,நாம் காலையில் சாப்பிட்ட உணவகத்தில்
சொல்லி செல்கிறேன்.சப்பாத்திதான் கிடைக்கும்’
என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் திரும்பவும்
பயிற்சிக்கு சென்றபோது, நண்பர் திரு தர்மலிங்கம்,
இராமானுஜம் மெஸ்ஸில் தங்க எனக்கு ஏற்பாடு
செய்துவிட்டதாகவும். மாலையில் நேரே அங்கு
வந்துவிடும்படியும் சொன்னார்.மாலையில் வகுப்புகள்
முடிந்து தலைமை அலுவலகம் சென்று நண்பர்
சங்கரனிடமும் Dr.Joshi அவர்களிடமும் சொல்லிவிட்டு,
நண்பர் சங்கரன் ஏற்பாடு செய்த டாக்ஸியில் எனது
உடைமைகளோடு ‘கரோல் பாக்’கில்
சரஸ்வதி மார்க்’ கில் இருந்த இராமானுஜம் மெஸ்
சென்றேன்.


தொடரும்

புதன், 7 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 6

புது தில்லி இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கூட
பயணம் செய்த தமிழர் உதவியால்,ஒரு போர்ட்டரைக்
கூப்பிட்டு எனது பொருட்களை எடுத்துக்கொண்டு
வெளியே வந்தேன். அந்த போர்ட்டர் நேரே ஒரு
ஆட்டோ அருகே என்னை அழைத்து சென்று,அதில்
எனது ஹோல்டாலை வைத்துவிட்டு அவரது
சேவைக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு
சென்றுவிட்டார்.

அந்த ஆட்டோ ஓட்டுனர் ஏதும் கேட்கு முன்பே,நான்
West Patel Nagar என்று எனது தலைமை அலுவலகம்
இருக்கும் இடத்தை சொல்லிவிட்டேன்.அவர் திரும்ப
ஏதோ கேட்டபோது, தலையை ஆட்டினேன். உடனே
அவர் இன்னொரு பயணியை அழைத்து
என்னுடன் அமரச்சொன்னர்.

அவரை அழைத்து செல்லலாமா எனக் கேட்டிருக்கிறார்
போலும். அவர் பேசியது எனக்குப் புரியாததால்,
தலையை ஆட்டியிருக்கிறேன். அதற்கு பிறகு என்னால்
அவரை ஏற்ற வேண்டாம். தனி ஆட்டோ தான் வேண்டும்
எனச் சொல்லத்தெரியவில்லை.

இந்தியும் தெரியாது. எனது அலுவலகம் எந்த திசையில்
இருக்கிறது என்பதும் தெரியாது.எப்படி அலுவலகத்தைக்
கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற யோசனையோடு
பக்கத்தில் இருப்பவரிடம் உதவி கேட்கலாமா என
நினைத்து, அவரைப் பார்த்தேன்.அவரோ எங்கோ பார்த்துக்
கொண்டு இருந்தார்.ஒருவேளை அவருக்கு ஆங்கிலம்
தெரியாவிட்டால் என்ன செய்வது.இனி நடப்பது
நடக்கட்டும் என எண்ணி சும்மா இருந்துவிட்டேன்.

ஆட்டோ புது தில்லி ஸ்டேஷனுக்கு நேர் எதிரே
பயணித்து,சிறிய சந்துகளின் ஊடே சென்றது.எங்கு
செல்கிறது என வெளியே உள்ள வணிக நிறுவனங்களின்
பலகையைப் பார்த்தபோது,‘பகாட் கஞ்ச்’ (Pahar Ganj)
என்ற இடம் வழியாக செல்வது தெரிந்தது.இரண்டு
மூன்று சந்துகள் தாண்டி ஒரு இடம் சென்றதும்
என்னுடன் பயணித்தவர் இறங்கிவிட்டார்.

பின் எனது ஆட்டோ அந்த சந்துகளை விட்டு வெளியே
வந்து, மெயின் ரோடில் பயணிக்க ஆரம்பித்தது. நானும்
West Patel Nagar வந்துவிட்டதா என வெளியே உள்ள
பெயர் பலகைகளைப் பார்த்துக்கொண்டு வந்தேன்.

முதலில் Pusa Road என்ற பெயர் பலகையைப் பார்த்தேன்.
பின் East Patel Nagar என்ற பெயர் பலகையைப்
பார்த்ததும் தான், ஆட்டோ ஓட்டுனர் சரியான
இடத்திற்குத்தான் அழைத்து செல்கிறார் எனத்
தெரிந்துகொண்டதும் சற்றே நிம்மதி வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், நான் செல்ல வேண்டிய
West Patel Nagar வந்துவிட்டதை அறிந்தேன். வெளியே
பார்த்துக்கொண்டு வந்தபோது, வலப்புரத்தில்
National Seeds Corporation Ltd, என்ற பெயர்ப் பலகையைப்
பார்த்ததும் ‘ஸ்டாப் ஸ்டாப் ‘ எனக் கத்தினேன்.

உடனே ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி
என்னைப் பார்த்தபோது.நான் கையை வலப்புரம் காட்டி
‘அங்கு போங்கள்.’என ஆங்கிலத்தில் சொன்னேன்.
அவரும் ஆட்டோவை திருப்பி சாலையைக் கடந்து
எனது அலுவலகம் முன்பு நிறுத்தினார்.

அதற்குள் அவர் நான் ஊருக்கு புதியவன் என்பதையும்
இந்தி தெரியாது என்பதையும், புரிந்து கொண்டுவிட்டார்.
இறங்கியதும் நான் 100ரூபாய் நோட்டைக் கொடுத்ததும்
பாக்கி 75 ரூபாய் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

(பின்பு நண்பர்கள் மூலம் நான் கொடுத்தது அதிகம்
எனக் கேள்விப்பட்டேன்.என்ன செய்ய. என்னை
சரியான இடத்திற்கு கொண்டுவந்து விட்டாரே அதை
நினைத்து ஆறுதல் அடைந்தேன்,)

எனது ஹோல்டாலை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில்
நுழைந்தபோது,அங்கிருந்த இரவுக் காவல்காரர் இந்தியில்
ஏதோ கேட்டார்.நான் ஆங்கிலத்திலேயே ‘தார்வார் NSC
அலுவலகத்திலிருந்து வருகிறேன்.’ என்று பதில்
சொன்னேன்.அவர் நல்ல வேளையாக ஒன்றும்
சொல்லாமல் என்னை அழைத்து சென்று அலுவலகத்தின்
ஒரு பகுதியில் கையைக் காட்டி அங்கு எனது Luggage
வைக்க சைகை காட்டினார்.

அவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த ஆள் மதராசி.
இவனுக்கு இந்தி தெரியாது என்று. நான் அவரிடம்
Bathroom என்றதும், அவர் அது இருக்குமிடத்தைக்
காட்டினார்.

எங்களது அலுவலகம் ஒரு தனியாருடைய பெரிய
வீட்டில் இருந்ததால் அங்கு குளியல் அறையுடன்
கூடிய பல அறைகள் இருந்தன,வெள்ளிக்கிழமை
காலையில் தார்வாரில் குளித்தபிறகு, இரண்டு
நாட்களாகக் குளிக்காததால் எப்போது குளிப்போம்
என இருந்ததால், தண்ணீரைக் கண்டதும் எனக்கு
ஒரே மகிழ்ச்சி.பல்விளக்கி,காலைக்கடன் கழித்து,
குளித்து முடித்தேன்.

எங்கள் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்பப்
பிரிவில்,கோவை வேளாண் கல்லூரியில் படித்த,
சங்கரன் என்பவர் பணிபுரிகிறார் எனக் கேள்விப்
பட்டிருந்தேன். அவர் எப்போது வருவார் எனத்
தெரிந்துகொள்ள அந்த ஊழியரிடம் சென்று ,
‘சங்கரன் எப்போது வருவார்?’ என ஆங்கிலத்திலேயே
கேட்டேன். அவர் தனது கைவிரல் சைகை மூலம்
9 மணி எனச்சொன்னார்.

அப்போது மணி 8.30 இருக்கும். அவர் வருவதற்குள்
உடைமாற்றி தயாராக இருக்கலாம் என எண்ணி,
நண்பர் அரங்கநாதன் கொடுத்த Coat அணிந்து,
‘டை’ யைக்கட்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென
பேச்சுக்குரல் கேட்டது.அந்த காவலாளியிடம் யாரோ
ஏதோ கேட்கிறார்கள் என்பதையும், அவர் அதற்கு
பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதையும்
புரிந்து கொண்டேன்.

நான் இருந்த அறை ‘ஷூ’ சத்தம் கேட்டபோது,
நிமிர்ந்து பார்த்தேன். அங்கு வந்தவர். ஆங்கிலத்தில்
‘நீங்கள் யார்?’ எனக்கேட்டார். நான் என்னைப்பற்றி
சொன்னதும்,‘வாருங்கள். என என்னை
அழைத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார்.
அந்த அறையின் வெளியே இருந்த பெயர் பலகை
மூலம் அவர்தான் எங்கள் Seed Production Officer,
Dr.M.S.Joshi என அறிந்துகொண்டேன்.

அவர்தான் எங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா
தொழில் நுட்ப ஊழியர்களுக்கும் தலைவர்.
எனது Boss அவர்தான் என்றதும் தயக்கதோடு
நின்றபோது, அவர் என்னை அன்போடு
உட்காரச்சொன்னார்.‘எப்போது வந்தீர்கள்?
எனக் கேட்டுவிட்டு.’இந்தி தெரியாதா?’ என்றார்.
(அந்த ஊழியர் சொல்லி இருப்பார் போலும்.)

‘தெரியாது.’ என்றதும்,‘பரவாயில்லை. எங்கு
தங்கப்போகிறீர்கள்?’ என்றார்.‘தெரியவில்லை சார்.
திரு சங்கரன் மூலம் ஒரு ஓட்டலில் தங்க
எண்ணியுள்ளேன்.’என்றதும்.கவலை வேண்டாம்.
‘கரோல் பாக்’கில்(Karol Bagh) உங்களவர்கள் ஓட்டல்கள்
நிறைய உள்ளன. சங்கரன் வந்ததும் அவர்
உங்களுக்கு உதவி செய்வார்.’ எனக்கூறி எனது
பயணம் பற்றி விசாரித்தார்,

நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி சொன்னதும்,
சிரித்துக்கொண்டே ’ரிசர்வ் செய்யாமல் வந்தால்
இப்படித்தான் என்ன செய்ய?’ என்றார். அவரிடம்
பேசும்போது முதலில் தயக்கம் இருந்தாலும்,
அவரது ஆதரவான வார்த்தையைக்கேட்டதும்
இரண்டு நாட்கள் நான் பட்ட கஷ்டங்கள்
மறைந்துவிட்டன.

(அந்த நேரத்தில், நான் தமிழ் நாடு வேளாண் துறையில்
இரண்டு மாதங்கள் பணியாற்றியபோது, எனது
மாவட்ட வேளாண் அதிகாரி அதிகாரத் திமிரோடு
என்னை நடத்தியது,அப்போது நினைவுக்கு வராமல்
போகவில்லை. அது பற்றி ‘நினைவோட்டம்’
தொடரில் எழுதுவேன்.)

அப்போது திரு சங்கரன் வந்துவிடவே, அவரைக்
கூப்பிட்டு ‘உங்கள் ஊர்க்காரர் வந்திருக்கிறார். அவருக்கு
உதவி செய்யுங்கள்.’என Dr.Joshi சொன்னார். அவருக்கு
நன்றி சொல்லிவிட்டு, திரு சங்கரனுடன் அவர் இருக்கும்
இருக்கைக்கு சென்றேன்.


தொடரும்

சனி, 3 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 5

ஸ்டேஷனுக்கு சென்று Left Luggage அறையில்
இருந்த எனது ‘ஹோல்டாலை’எடுத்துக்கொண்டு
தில்லி செல்லும் மெயில் வண்டி நிற்கும்
பிளாட்ஃபாரத்திற்கு என் நண்பரின்
அண்ணனுடன் சென்றேன்.

இரண்டாம் வகுப்பு பெட்டியை அடைந்தபோது
அது ஒரு முன் பதிவு செய்யப்படாத பெட்டி
போன்று தோன்றியது.முன்பதிவு செய்தவர்கள்
மேலே ஏறி படுத்திருக்க,அநேகம் பேர்
(மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டுடன்)
இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு
உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும்
இருந்தனர்.

அதைப் பார்த்ததும் என் நண்பரின் அண்ணன்,
நீங்கள் இங்கேயே இருங்கள் நான் T.T.E
பார்த்து ஏதாவது செய்யமுடியுமா என்று
பார்க்கிறேன் என்று கூறி சென்றார்.நானும்
ஆவலுடன் நின்றிருந்தேன்.

அவர் திரும்பி வந்து இன்று சனிக்கிழமை
ஆதலால் வண்டியில் கூட்டம் அதிகம்.T.T.E
இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
பரவாயில்லை இதிலேயே ஏற்றி விடுகிறேன்
எனச்சொல்லி,எனது ஹோல்டாலை எடுத்து
கதவைத்திறந்து வைத்தார்.

உள்ளே நிற்கவே இடம் இல்லாதததால்,இரண்டு
கதவுகளுக்கு இடையே உள்ள இடத்தில் (Toilet)
அருகே வைத்தார்.என்னிடம்‘உங்கள் ஹோல்டால்
மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்.கூட்டம்
குறையும்போது உள்ளே சென்றுவிடலாம்.’
எனக்கூறிவிட்டு இறங்கிவிட்டார்.

வண்டி கிளம்பியதும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
எனது இருக்கையில்(?) அமர்ந்தேன்.சிறிது நேரத்தில்
உள்ளே இருந்தவர்கள் சிலர் நிற்க இடம்
இல்லாததால் நான் இருந்த இடத்திற்கு அருகே
வந்து நின்றுகொண்டனர். அப்படி இப்படி நகரக்கூட
முடியவில்லை.மூச்சு மூட்டுவதுபோல் இருந்தது

நானும், இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும்,
இப்படி Toilet அருகே உட்கார்ந்து பயணிக்கவேண்டி
இருக்கிறதே என் தலை விதியை நொந்து கொண்டு
இருந்தேன். ஏன் இந்த பயிற்சிக்கு செல்ல
சம்மதித்தோம் என்று கூட நினைத்தேன்.

பயணத்தின் ஊடே அந்த ‘Toilet’ க்கு வரும்
பயணிகளுக்காக நான் எழுந்து,எழுந்து நின்று
அமர வேண்டியிருந்தது. அதைவிடக் கொடுமை
அவர்கள் உள்ளே போய் வரும்போது, வேறு
வழியில்லாமல் எனது ஹோல்டாலின் மேல்
காலை வைத்து சென்றதுதான். அவர்கள் சென்ற
பிறகு அதன் மேலேயே உட்காரவேண்டிய நிலை.

மாமன்னன் ஷாஜகான், காஷ்மீரைப்பற்றி
சொல்லும்போது, ‘இவ்வுலகில் சொர்க்கம் என்று
ஒன்று இருந்தால் அது இங்கேதான்! அது இங்கேதான்!
அது இங்கேதான்!
என்று சொன்னதாக சொல்வார்கள்.
(If ever there is Paradise on Earth. It is here!
It is here! It is here! )


என்னைக் கேட்டால் ‘நரகம்’ என்று ஒன்று இருந்தால்
அது அன்று நான் பயணம் செய்த இடம்தான்’ என்று
அடித்துச் சொல்வேன்.

இரவு சுமார் 2 மணி இருக்கும். வண்டி ஏதோ ஒரு
ஸ்டேஷனில் நின்றது. சன்னல் வழியே பார்த்தபோது
அது ‘சூரத்’ எனத் தெரிந்தது. அங்கே நிறைய கூட்டம்
இரயில் ஏறக் காத்திருந்தது.

நான் இருந்த பெட்டி அருகே வந்த ஒரு கும்பல்
‘கோலோ. கோலோ.’ என சப்தமிட்டு கதவைத்
தட்டினார்கள். கதவருக்கே நின்ற ஒருவர்
இரக்கப்பட்டு கதவைத் திறந்ததும், இரண்டு மூன்று
பேர் என்னையும் மற்றவர்களையும்
மிதித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள்.

என்னால் உட்காரவும் முடியவில்லை. நிற்கவும்
முடியவில்லை.மொழி தெரியாததால் பேசவும்
முடியவில்லை.நல்ல வேளையாக அவர்கள்
உள்ளே சென்றுவிட்டனர். இரவு முழுதும்
உட்கார்ந்துகொண்டே தூங்காமல் தூங்கினேன்.

காலையில் எழுந்து மற்றவர் வருமுன் பல் விளக்கி
விட்டு காலை காஃபிக்காக காத்திருந்தேன்.
வட மாநிலங்களில் தேனீர்தான் கிடைக்கும்
என்றாலும் காஃபி வருமா என்ற நைப்பாசைதான்.
ஆனால் எதுவும் வரவில்லை.

(இந்த நேரத்தில் நான் படித்த ஒரு செய்தி நினைவுக்கு
வருகிறது. தென்னகத்திலிருந்து ஒரு மாணவன்
IAS நேர்முகத்தேர்வுக்கு சென்றாராம். அந்த தேர்வில்
‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ எனக் கேட்டபோது,
அவர்,’நான் தென்னாட்டிலிருந்து வருகிறேன்.’
என்றாராம். அதற்கு தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர்,
நீங்கள் இரயிலில் தானே வந்தீர்கள். எந்த இடத்தில்
தென்னாடு முடிந்து வடநாடு ஆரம்பிக்கிறது?’ எனக்
கேட்டதற்கு அந்த மாணவன் சொன்னாராம்,’எப்போது
நான் காஃபி கேட்டதற்கு ,டீ கிடைத்ததோ அங்கேதான்
வடநாடு ஆரம்பிக்கிறது.’ என்றாராம். இது உண்மையா
அல்லது இட்டுக் கட்டியதா எனத்தெரியவில்லை.)

காலை சுமார் 9 மணிக்கு இரயில் ரட்லம் சந்திப்பை
(மத்ய பிரதேசம்) அடைந்தபோது வெளியே எட்டிப்
பார்த்தேன். என் பெட்டிக்கு அருகே ஒருவர் பூடி பூடி
எனக் கூவிக்கொண்டு, நம் ஊரில் ‘சோன் பப்டி’
விற்பவர்கள் கொண்டுவரும் பெரிய ‘மோடா’ போன்ற
ஒன்றின் மீது பூடிகளை(நாம் பூரி என்று சொல்கிறோமே
அதேதான்) வைத்து, அவைகளை தராசில் நிறுத்து
விற்றுக்கொண்டு இருந்தது எனக்கு வியப்பாய்
இருந்தது.

அருகில் சென்ற போது அவர் என்ன கேட்டார் எனத்
தெரியவில்லை.‘வேண்டுமா?’ எனக் கேட்கிறார் எனப்
புரிந்துகொண்டு தலையை ஆட்டினேன்.

உடனே அவர் தராசில் சில பூரிகளை வைத்து நிறுத்துக்
கொடுத்தார். அருகில் இருந்த ஒருவர் உதவியுடன் அவர்
கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அங்கேயே நின்று
சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணீர்
குடித்துவிட்டு பெட்டிக்கு வந்துவிட்டேன்.
(அப்போதெல்லாம் தண்ணீர் விற்கப்படவில்லை.)

திரும்பவும் நரக வேதனைதான். மதிய உணவு
எதுவும் கிடைக்கவில்லை. மாலை சுமார் 5 மணிக்கு
சவாய் மதாபூர் (ராஜஸ்தான்) என்ற ஊரை
அடைந்தபோது, உள்ளே இருக்கையிலிருந்து
கதவருகே வந்த ஒருவர் என்னைப் பார்த்து,
இந்தியில் ஏதோ சொன்னார். நான் ‘மலங்க மலங்க’
விழித்ததைக் கண்டு ஆங்கிலத்தில், ‘உள்ளே இடம்
இருக்கிறதே நீங்கள் வந்து உட்காரலாமே?’ என்றார்.
அப்பாடா என எழுந்து உள்ளே போய் இடமிருந்த
ஒரு இருக்கைக்கு கீழே எனது ஹோல்டாலை
வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

எனக்கு அருகில் இருந்த ஒருவர் அவருடன் வந்த
ஒரு சிறுமியுடன் தமிழில் பேசியதைக்கேட்டதும்
பாலை வனத்தில் சோலையைப் பார்த்தது போன்ற
மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் ‘இரவு சாப்பாடு
எங்கு கிடைக்கும்’ என்றேன்.

அவர்’ கவலை வேண்டாம். நான் வாங்கும்போது
உங்களுக்கும் வாங்கித்தருகிறேன்.’என்றார். இரவு
சுமார் 9 மணிக்கு ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி
நின்றபோது அவர் இறங்கிப்போய் எனக்கும் சப்பாத்தி
வாங்கித் தந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு இடம்
கிடைத்த நிமம்தியில் அப்படியே உறங்கிவிட்டேன்.

காலையில் கண் விழித்து இறங்கத்தயாரானேன்.
16/10/1967 திங்கள் அன்று சுமார் 6 மணிக்கு இரயில்
புது தில்லி இரயில் நிலையத்தை அடைந்தது.

தொடரும்