புதன், 23 மார்ச், 2011

நினைவோட்டம் 43

நண்பர் பழமலை கவிதை எழுதுவது மட்டுமல்லாமல்
பேச்சுத் திறனிலும் வல்லவர்.அநேக பேச்சுப்போட்டிகளில்
கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.நானும் அவரோடு
இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.
அவர் கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும்
முதற் பரிசு அவருக்குத்தான்.

பள்ளியில் வளர்த்த தமிழ் ஆர்வத்தை,எங்களைப்போல்
அப்படியே விட்டுவிடாமல் கல்லூரியிலும் தொடர்ந்தார்
நண்பர் பழமலை.நாங்களெல்லாம் மருத்துவர்களாகவும்,
பொறியாளர்களாகவும், வேண்டி புகுமுக வகுப்பில்
(தற்போதைய 12 ஆம் வகுப்பு) கணிதம்,அறிவியல்
பாடங்களை எடுத்து படித்தபோது,அவர் கலைத்துறை
பாடங்களை எடுத்துப்படித்து, அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை(B.A)யில்
சேர்ந்தார்.அதற்கு பின்அங்கேயே முதுகலை(M.A)
பட்டமும் பெற்றார்.

அங்கே அவர் படிப்பில் முதன்மையாக
இருந்தார் என்பதற்கு அவர் பல்கலைக்கழகத்தில் பெற்ற
தங்கப்பதக்கமே சான்று.

படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து பேராசிரியராக
பணிபுரிந்தாலும் அவரது கவிதைப்பயணம்
தொடர்ந்துகொண்டுதான் இருந்தது/இருக்கிறது!

அவரது “பழமலை இருக்கானா, பார்த்துட்டு
போக வந்தேன்’
என்று அவரை வளர்த்த
ஆயியை(பாட்டியை)பற்றி அவர் எழுதிய கவிதை
(கவிதையின் ஆரம்பம் நினைவில் இல்லை)
ஒன்று குமுதத்தில் வெளியானபோது தான்
நண்பர் பழமலையின் புதிய பரிமாணம்
பல பேருக்கு தெரிய வந்தது!

தேசியக்கவி பாரதியைப்பற்றி சொல்லும்போது
சொல்வார்கள்.அவரது கவிதைகளைப் படிக்க
அகராதி தேவையில்லை என்று.காரணம் அவர்
எல்லோருக்கும் புரியும் வண்ணம்,சாதாரணமாக
நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் சொற்களை
கொண்டே கவிதை எழுதியிருப்பார்.

கவிஞர் பழமலையும் அவ்வாறே.அவரது கவிதை
ஆர்ப்பாட்டமில்லாத, எளிய நடையில் இருக்கும்.
அதுவும் தென்னாற்காடு மாவட்டத்தை (தற்போது
கடலூர்,விழுப்புரம் என இரு மாவட்டங்களாகி
விட்டன)சேர்ந்தவராதலால்,அவரது கவிதையில்
வட்டார வழக்கே அதிகம் காணப்படும்.

‘சனங்களின் கதை’ என்ற அவரது கவிதைத்
தொகுப்பில் எளிய நடையில்,மனதைப்பிழியும்
கவிதை வரிகள் இதோ.

"அம்மா, உன் வறுமை
வாழைப்பழத்தின்
தோலும் நாங்கள் எறிந்தால் தான்!”


"கீழைக் காட்டு வேம்பு கசந்தது
அம்மா சோகம் கேட்டுக் கேட்டுத்தான்''


வறுமையையும்,சோகத்தையும் இதைவிட
படம் பிடித்துக் காட்டமுடியுமா என்ன?

விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்
விழுப்புரத்திலேயே வசித்துவருகிறார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய மற்றும் ஆற்றும்
பணியை பாராட்டும் விதமாக தமிழக அரசு
2009 சனவரி 15 ஆம் நாள்
திரு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பெயரால்
விருதும், பொற்கிழியும் அளித்து
சிறப்பு செய்தது.

நண்பர் திரு த.பழமலை அவர்கள்
நம்அனைவருக்கும் அறிமுகமான
கவிஞர்தான்.அவர் வேறு யாருமில்லை.

அவர்தான் ‘கவிஞர் பழமலய்’என அழைக்கப்படும்
எனது வகுப்புத்தோழர்.

எனது நண்பர் ஒரு புகழ் பெற்ற கவிஞர் என்பதில்
எனக்கு பெருமையே!நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 20 மார்ச், 2011

கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (3)

திரும்பி வந்து பார்த்தால், மின் பலகை, கவுன்ட்டர்
A ன் வரிசை எண் 45 யும் Counter E ன் வரிசை
எண் 41 எனவும் காட்டியது. எங்களுக்கு ஒரே
சந்தோஷம். மதியம் ஒரு மணிக்குள் வேலை
முடிந்துவிடும்.சீக்கிரம் வீட்டுக்கு போய்விடலாம்,
என நினைத்து முதல் தளத்தில் காலியாக இருந்த
இருக்கையில் அமர்ந்தோம்.

பதினைந்து நிமிடம் போன பிறகு பார்த்தால்
எங்களது வரிசையில் எந்த முன்னேற்றம் இல்லை.
வரிசை எண் அதே 41 ஐ காட்டியது. ஆனால்
A வரிசை எண் 53 ஐ தொட்டிருந்தது. அங்கிருந்த
ஊழியர்களிடம் அது பற்றி கேட்டதற்கு சரியான
பதிலை தரவில்லை.

சரியாக 1 மணிக்கு அனைவரும் சாப்பிட
சென்றுவிட்டார்கள்.உணவு இடைவேளை
1 மணியிலிருந்து 2 மணி வரையாம். எங்கள்
தலைவிதியை நொந்துகொண்டு அங்கேயே
சாப்பிட போகாமல் காத்திருந்தோம்.

அடிக்கடி கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டே
இருந்தேன்.அருகில் எங்களைப்போல்
உட்கார்ந்திருந்தவர்கள்,எதிர் கட்சி தலைவர்
செல்வி ஜெயலலிதா 160 தொகுதிக்கான
வேட்பாளர்கள் அறிவித்தபின்
நடந்துகொண்டிருக்கும் அரசியல் நிகழ்வு
பற்றி காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
செவிக்கு உணவு கிடைத்ததால், வயிற்றுக்கு
உணவில்லாதது தெரியவில்லை!!

சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் இரண்டாம்
தளம் சென்றோம். Counter A ன் வரிசையில்
முன்னேற்றம் இருந்தாலும்,எங்களது Counter ன்
வரிசை எண் மெல்ல மெல்ல 43 ஐ தொட்டிருந்தது.
யாரும் சரியான காரணத்தை சொல்லாததால்,
இனி வெளியே காத்திருப்பதில் பிரயோஜனம்
இல்லை என உள்ளே சென்றோம்.

ஆனால் அங்கேயே,A முதல் E வரை உள்ள
Counter களும்,பணம்/காசோலை கொடுக்கும்
மூன்று Counter களும் இருந்ததால் ஒரே
கூட்டம். உள்ளே நகரக்கூட முடியவில்லை.

இந்த நேரத்தில் பொதுமக்களையும் குறை
சொல்லவேண்டும்.தங்களது வரிசை எண்
வராதவர்கள் கூட அங்கே காத்திருந்தார்கள்.
அதற்குள் எங்கள் வரிசை எண்ணை கூப்பிட்டதால்,
எல்லோரையும் தள்ளிக்கொண்டு Counter சென்று
விண்ணப்பத்தை கொடுத்தேன்.நல்ல
வேளையாக அங்கிருந்த பெண் ஊழியர் மிகவும்
பொறுமையாக என் விண்ணப்பத்தை
பார்த்துவிட்டு,அதில் PISON என எழுதிவிட்டு,
‘நீங்கள் கோழிக்கோடில் Passport வாங்கி
இருப்பதால் D Counterசென்று,இதைக்கொடுங்கள்.
அவர்கள் Verification சான்றிதழ் தருவார்கள்.
அதை எடுத்துக்கொண்டு வாருங்கள்’
எனக்கூறிவிட்டார்.

‘என்ன இது சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி
வரம் கொடுக்காது போல இருக்கிறதே என
நினைத்துக்கொண்டு D Counter சென்றேன்.

நல்லவேளையாக அங்கே கூட்டம் அதிகமில்லை.
என் முறை வந்ததும்,அங்கிருந்த அலுவலர் எனது
விண்ணப்பத்தில் PISON என இருப்பதை பார்த்ததும்,
என் பழைய Passport வாங்கி அதில் உள்ள
எண்ணை அவரது கணினியில் உள்ள
விசைப்பலகையில் தட்டியதும் எனது புகைப்படமும்
என்னைப்பற்றிய விவரங்களும் வந்தன. உடனே
என்னை நிமிர்ந்து பார்த்து புகைப்படத்தில்
இருப்பது நான்தான் என உறுதி செய்துகொண்டு,
உடனே அந்த விவரம் உள்ள பக்கத்தை Print
செய்தார். அந்த நகலை எடுத்து அதில் புகைப்படமும்
மற்ற விவரங்களும் சரிபார்க்கப்பட்டது என
முத்திரையிட்டு கையொப்பமிட்டு கொடுத்தார்.
அப்போது தான் கவனித்தேன் PISON என்றால்
Passport Information Services On Net
என்பதன் சுருக்கம் என்பதை.

அதை எடுத்துக்கொண்டு திரும்பவும் E Counterக்கு
ஓடினேன்.அங்கு அதை காட்டியவுடன்,அந்த
ஊழியர் என் விண்ணப்பதோடு இருந்த
நகல்களையும் அசல் ஆவணங்களையும் ஒப்பிட்டு
சரிதானா என பார்த்தார்.பின் அந்த விண்ணப்பத்தில்
எனது கையொப்பத்தை வாங்கிக்கொண்டு, எனது
Passport ல் Cancelled என்ற முத்திரையை குத்தி,
அவைகளை ஒரு கோப்பில்(File) இட்டு என்னிடம்
கொடுத்து, வங்கி காசோலையுடன் அந்த கோப்பை
காசோலை/பணம் செலுத்தும் Counter ல் தருமாறு
சொன்னார்.முக்கால் கிணறு தாண்டிய மகிழ்ச்சியோடு
காசோலை/பணம் செலுத்தும் Counter க்கு சென்றேன்.

அதற்காக மூன்று Counter கள் இருந்தாலும் இரண்டில்
மட்டுமே ஊழியர்கள் இருந்தனர். அங்கே நீண்ட
வரிசையில் இருந்தவர்களிடம் கேட்டபோது,
மூத்த குடிமக்களுக்காக தனி Counter ஏதுமில்லை
என்றும் அங்குதான் எல்லோரும் நின்று கட்டவேண்டும்
என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் வரிசையில்
நின்றேன்.ஆனால் வரிசை நகருவதாகக்காணோம்.
Counter ல் இருந்தவர் வெகு நிதானமாக இரசீது
தந்துகொண்டு இருந்ததால் Slow Cycle Race
போல கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது.

என் முறை வந்து கொடுத்கபோது,காசோலை
பின்னால் எனது பெயரையும்,எனது கைப்பேசி
எண்ணையும் எழுதித்தருமாறு
திருப்பிக்கொடுத்துவிட்டார். இதை வெளியே
தகவல் பலகையில் எழுதி இருந்தால்,
எல்லோருமே அவைகளை எழுதிக்கொண்டு
வந்திருப்பார்கள்.நேரமும் மிச்சமாயிருக்கும்.

கேட்ட விவரங்களை எழுதிக்கொடுத்து,அவரிடம்
இரசீது பெற்றபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை
சொல்ல வார்த்தை இல்லை. நேரத்தை
பார்த்தபோது மணி 3-15 ஆகியிருந்தது.

அதற்குள் என் அண்ணியும் என் மகனும்
காசோலைகளை செலுத்தி இரசீது பெற்றுவிட்டதால்
அனைவரும் கீழே வந்தோம்.அப்போதுதான்
மதியம் சாப்பிடாதது நினைவுக்கு(?)வந்தது.

அந்த நேரத்தில் மதிய உணவு எந்த உணவகத்திலும்
இருக்காது என்பதால் வில்லேஜ் சாலையில் உள்ள
ராஜ் பவன் சென்று சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டே
வீடு திரும்பினோம்.

வீட்டிற்கு வந்தபோது மாலை மணி 5.

காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டு சென்ற
நான் கிட்டத்தட்ட 10 மணி நேரம் இந்த கடவுச்சீட்டு
புதுப்பிக்கும் பணிக்காக செலவிட்டிருக்கிறேன் என
நினைத்தபோது,மலைப்பாகவும்,அலுப்பாகவும்
இருந்தது. உண்மையில் நாம் தொழில் நுட்பத்தில்
முன்னேறியிருக்கிறோமா என சந்தேகம் வந்தது.

இந்த பணியை அரசு நினைத்தால் பொது மக்களுக்கு
கஷ்டம் இல்லாமல் அவர்களுக்கும் தொந்தரவு
இல்லாமல் மிக சுலபமாக முடிக்கமுடியும்.

வரிசை எண் கொடுப்பதற்கு அனைவரையும்
வரச்சொல்லிகூட்டம் கூட்டி வரிசை எண்
Slip ஓட்டுவதற்கு பதிலாக, On Line ல்
பதிவு செய்யும்போதே நாளை குறிப்பிடும்போது
வரிசை எண்ணையும் அங்கு வரவேண்டிய
நேரத்தையும் கொடுத்துவிடலாம். இதன் மூலம்
அனைவரும் ஒரே நேரத்தில் வரத்தேவையில்லை.
மேலும் பணி செய்யும் இடத்திலும் அதிக கூட்டம்
இருக்காது. வரும் அனைவருக்கும் உட்கார
இருக்கை கிடைக்கும்.

தற்சமயம் Thatkal மூலம் தினம் 500 பேர்
வருவதாகவும் அதனால்தான் கூட்டம் அதிகம்
என்றும் சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்.
அதற்கு காரணம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்
நேரத்தைக் கணக்கிடாமல் கேட்கும் நாளை
கொடுப்பதுதான். ஒரு நாளில் எவ்வளவு பேரின்
ஆவணங்களை சரிபார்க்கமுடியும் என்பதை
முடிவு செய்து அந்த அளவுக்கு மட்டும்
நேரத்தைக்குறிப்பிட்டு Appointment கொடுத்தால்
அனைவருக்கும் சௌகரியமாக இருக்கும்.

மேலும் உண்மையிலேயே மூத்த குடிமக்களுக்கும்,
மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தையுடன் வரும்
தாய்மார்களுக்கும் உதவி செய்ய நினைத்தால்
Counter ஐ கீழ் தளத்தில் வைக்கலாம்.

காசோலைகளை வாங்கும் பணியை விரைவுபடுத்தி,
மூத்த குடிமக்களையும் மற்றவர்களையும் சீக்கிரம்
வெளியே செல்ல உதவலாம்.

இந்த பணியை அரசின் துறையால் விரைவாக
செய்ய முடியாது என நினைத்தால்,Outsource
முறையில் இப்பணியை தனியார் நிறுவனங்களுக்கு
கொடுத்து பொதுமக்களுக்கு உதவலாம்.

அரசு இதைச்செய்யுமா?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!!

சனி, 19 மார்ச், 2011

கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (2)

என்னுடன்,என் மகனும் என் அண்ணியும் அவர்களது
Passport ஐபுதுப்பிக்க வேண்டி வந்திருந்தார்கள்.எங்களுக்கு
உதவியாக என் அண்ணன் மகன் ஞானவேலனும்
வந்திருந்தார்.

அவர்களுடன் அண்ணா சாலையிலிருந்த முகவரின்
அலுவலகத்திலிருந்து கிளம்பி,சாஸ்த்ரி பவனில் உள்ள
வட்டார கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு 15 நிமிடங்களில்
வந்துவிட்டேன்.

சாஸ்த்ரி பவனில் நுழைந்ததும் அங்கிருந்த கூட்டத்தை
பார்த்ததும் எனக்கு பகீர் என்றது.சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததுபோல் இருந்தது.
இந்த கூட்டத்தில் எவ்வாறு நமது வேலையை
முடிக்கபோகிறோம் என நினைத்தபோது என் அண்ணன்
மகன் சொன்னார் ’சித்தப்பா இவர்களெல்லாம் புதிய
Passport வேண்டி விண்ணப்பிக்க வந்திருப்பவர்கள்.
நாம் Thatkal ல் விண்ணப்பித்து,முன் கூட்டியே
இன்றைய தேதிக்கு பதிவு செய்து இருப்பதால்
கவலை வேண்டாம்.’ என்றதும் நிம்மதி வந்தது.

காரை நிறுத்த இடம் இல்லாமல்,திருவண்ணாமலையில்
கிரி வலம் வருவதுபோல் சாஸ்த்ரி பவனை சுற்றி
வந்தோம். கார்கள் நிறுத்தியுள்ள இடங்கள் போக
காலியான இடங்களில் கற்கள் வைத்து யாரோ ‘ரிசர்வ்’
செய்திருந்தார்கள்.

என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த போது
ஒருவர் வந்து‘சார்,கார் நிறுத்த இடம் இல்லை.
இவைகள் எல்லாம் ‘ரிசர்வ்’செய்யபட்டவை.’என்றார்.
எனது அண்ணன் மகன்,‘கொஞ்ச நேரம் தாம்பா.உடனே(!)
வந்துவிடுவோம்’என்றதும் அவர் ’சரி சார்,போகும்போது
என்னைக்கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள்’எனக்கூறி
‘ரிசர்வ்’செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திலிருந்த
கற்களை எடுத்து காரை நிறுத்த உதவி செய்தார்.

(பின்னால் தான் தெரிந்தது.அவர் தான் கார் நிறுத்தும்
இடங்களில் வாடகை வசூலிப்பவர் என்று.வழக்கமான
வாடகையுடன் அவரது‘சேவை’க்கான’கட்டணம்
வசூலிக்க அவரே கற்களை வைத்திருக்கிறார்.)

கீழ் தளத்தில் சரியான கூட்டம்.கட்டிடத்தை சுற்றி நீண்ட
‘க்யூ’அவர்களைத் தாண்டிக்கொண்டு உள்ளே
சென்றபோது,மூத்த குடிமக்களுக்கும்,
மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தையோடு
வருபவர்களுக்கும் இரண்டாம் தளத்தில்
தனி Counter ல்,Slip தருவதால் அங்கு
போக சொன்னார்கள்.

என் மகனுக்கு முதல் தளத்தில் Counter.
மாடிப்படியெல்லாம் மக்கள் பிதுங்கி வழிந்தார்கள்.
மிகுந்த சிரமத்திற்கிடையில் இரண்டாம் தளம்
சென்றபோது அங்கு நிற்க கூட இடம் இல்லை.
உட்கார சுமார் இருபது இருக்கைகள் மட்டும் இருந்தன.

அவைகள் ஒன்றும் காலியாக இல்லை.மிகவும்
வயதானவர்கள், கைக்குழந்தையோடு உள்ள
பெண்கள் அவர்களுக்கு உதவிக்காக வந்த
உறவினர்கள் என நிறைய பேர் நிற்க முடியாமல்
நின்றுகொண்டிருந்தார்கள்.

அங்கே சீருடையில் இருந்த கடை நிலை ஊழியர்
ஒருவர் எல்லோரையும் கம்பங்கொல்லையில் புகுந்த
கால்நடைகளை விரட்டுவதுபோல்,கொஞ்சம் கூட
வயதிற்கு மரியாதை தராமலும்,வந்திருப்பவர்களின்
கஷ்டங்களையும் உணராமலும்,‘இங்கே நிற்காதே.
கீழே போ’ என்று ஒருமையில் கத்திக்கொண்டிருந்தார்.

யாரும் வாய் திறந்து அவரிடம்‘ஏன் இப்படி எங்களை
நடத்துகிறாய்?’எனக்கேட்கவில்லை.ஒருவர் மட்டும்
அவரிடம் ‘என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறாய்?
நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை.’ரூபாய்
இரண்டாயிரம் பணம் கட்டித்தான் இங்கு
வந்திருக்கிறோம்’என சத்தம்போட்டதும்,அதுவே
வாய்ச்சண்டையாகி ஒருவரை ஒருவர் ஒருமையில்
திட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

உள்ளே இருந்த உயர்(?)அலுவலர்கள் யாரும் வெளியே
வந்து எட்டிப்பார்க்கவில்லை. ஒருவேளை அதெல்லாம்
அவர்கள் வேலை இல்லை என நினைத்துவிட்டார்களோ
என்னவோ.அவர்கள் வரவேண்டாம். அவர்கள் கீழே
வேலை செய்யும் இந்த கடை நிலை ஊழியர்கள்,
அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை, மாக்களாக
நடத்தக்கூடாது என சொல்லாக்கூடாதா? என்ன.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசின்
நிலைப்பாடு இதுதான் போலும் என நினைத்துக்கொண்டேன்.


அந்த ஊழியர் சத்தம் போடும்போது,நகர்வதும், பின்பு
நிற்பதுமாக வந்திருந்த கூட்டம் அலை
மோதிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த மிகவும்
வயதான மனிதர் ஒருவர் நிற்கமுடியாமல் படியில்
உட்கார்ந்து, கையில் கொண்டுவந்திருந்த தண்ணீர்
பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து முகத்தில்
தெளித்துக்கொண்டு பையிலிருந்து இரண்டு
பிஸ்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
வெயிலும் பசியும் அவரை வாட்டியதை அவர்
முகம் காட்டியது.

ஒரு வழியாக சரியாக காலை 10.30 மணிக்கு
இன்னொரு கடைநிலை ஊழியர் வந்து விண்ணப்பத்தில்
வரிசை எண் உள்ள Slip ஐ ஒட்டத்தொடங்கினார்.

என் அண்ணிக்கு E 47எண்ணும், எனக்கு E 48 எண்ணும்
கிடைத்தன. அங்குள்ள மின் தகவல் பலகையில்,அப்போது
E 13 வரிசை எண் உள்ளவரின் ஆவணங்கள் சரி
பார்ப்பதாககாட்டியதால், எங்களது வரிசை வர
குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால்
அங்கே நிற்காமல் கீழே வந்துவிட்டோம்.

என் மகனுக்கு முதல் தளத்தில் 11 மணிக்கு
A 65 என்ற வரிசை எண்ணை கொடுத்தார்கள்.
அவனும் எங்களைத்தேடி கீழே வந்துவிட்டான்.

கீழே வந்தபோது இதே அலுவலகத்தை சேர்ந்த
அலுவலர் ஒருவர் காரிலிருந்து இறங்கி
வந்துகொண்டிருந்தார்.அவருக்கு முன்னால்
ஒரு ஊழியர் கைகளை நீட்டி முன்னால்
நின்றுகொண்டு அல்லது சென்றுகொண்டிருக்கும்
பொதுமக்களை புறம்தள்ளி வழி
ஏற்படுத்திக்கொண்டிருந்த கொடுமையைக்கண்டேன்.

உடனே என் அண்ணன் மகன்‘வாருங்கள் இங்கே நிற்க
வேண்டாம்.போய் காபி சாப்பிட்டு வரலாம்’என்றதும்,
வெளியே போய் குளிர் பானம் அருந்திவிட்டு,
பின்பு 12.30 மணிக்கு திரும்பி வந்தோம்.


தொடரும்

வெள்ளி, 18 மார்ச், 2011

கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (1)

என்னிடம் உள்ள கடவுச்சீட்டு (Passport) இன்னும் ஆறு
மாதங்களில் காலாவதியாக இருப்பதால் அதை புதுப்பிக்க
விரும்பினேன். அதற்கு தேவையான சான்றிதழ்கள்
அளிப்பது பற்றி குழப்பம் இருந்ததால், எனது அண்ணன்
மகன் திரு ஞானவேலனின் ஆலோசனைப்படி சென்ற
பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் ஒரு முகவரை அணுகினேன்.

காரணம் நாம் என்னதான் விண்ணப்ப படிவத்தை சரியாக
நிறைவுசெய்திருந்தாலும்,அதை நமது வட்டார
கடவுச்சீட்டுஅலுவலகம் ஏதாவது காரணங்களைச்
சொல்லிதிருப்பிவிடுமோ என்ற அச்சம்தான்.

அந்த முகவர்,என்னிடம்‘சார் விண்ணப்ப படிவம் தரும்
நாளை on line மூலம் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு
செல்வது நல்லது. அப்படி சாதாரணமாக முறையில்
பதிவு செய்தால் விண்ணப்பம் தரமூன்று மாதம்
காத்திருக்க வேண்டியிருக்கும்.Thatkal எனப்படும்
முறையில் பதிவு செய்தால் ஒரு மாதத்தில்
விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு எது சௌகரியம்?’
என்றபோது, ‘Thatkal முறையிலேயே விண்ணப்பிக்க
ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

அந்த முகவரும் எனக்காக மார்ச் மாதம் 17 ஆம் நாள்,
வட்டார கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பம்
தர, on line மூலம் பதிவு செய்தார்.
விண்ணப்பத்தோடு தர பழைய Passport,நம்முடைய
சமீபத்தில் எடுக்கப்பட புகைப்படம்,மற்றும் இருப்பிட
சான்றிதழ் தரவேண்டும்என்றார். அதற்காக Ration Card
நகலும் வாக்காளர் அடையாளச்சீட்டின் நகலும்,
நாம் கணக்கு வைத்திருக்கும்வங்கியிலிருந்து நாம்
எப்போதிலிருந்து கணக்கு வைத்திருக்கிறோம் என்பதோடு
நம்முடைய முகவரியும் நம்முடைய புகைப்படமும்
உள்ள சான்றிதழும் தரவேண்டும் என்றார். மற்றும்
கடந்த ஆறு மாதத்திற்கான வங்கிக்கணக்கின்
Statement ம் வேண்டும் என்றார்.

சரி என்று சொன்னாலும் எனக்கு ஒரு சந்தேகம்.
Ration Card ல் நமது முகவரி இருக்கும்போது
மற்றவைகள் எதற்காக என்று.

வாடிக்கையாளர்களைப் பற்றி சொல்லும்போது
‘Customer is always right’ என்பார்கள்.
அதை மாற்றி ‘Government is always right’
என சொல்லவேண்டும் போல என
நினைத்துக்கொண்டு அவர் கேட்டவைகளைக்
கொடுத்தேன்.


‘சரி நீங்கள் 17 ஆம் தேதி மார்ச் மாதம்
காலை 9 மணிக்கு இங்கு வந்து விடுங்கள்’
என்றார்.

முகவர் சொன்ன 17 ஆம் தேதி மார்ச்
(அதாவது நேற்று) காலை 9 மணிக்கு
அவரது அலுவலகம் சென்று பூர்த்தி செய்யப்பட்டிருந்த
விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அவரது
சேவைக்கான கட்டணத்தையும் அரசுக்கு
கட்டவேண்டிய கட்டணமான ரூபாய் 2500 த்தையும்
கொடுத்தேன்.அவர் எனக்காக ரூபாய் 2500 க்கான
வங்கி வரைவு காசோலையை (Bank’s Demand Draft)
வாங்கி வைத்திருந்தார்.

அவர் என்னிடம் ‘எங்களை எல்லாம் வட்டார
கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ளே விடமாட்டார்கள்.
நீங்கள் இதை எடுத்துக்கொண்டு அங்கு சென்று
இரண்டாம் தளத்தில், மூத்த குடிமக்களுக்காக
உள்ள Counter ல் காட்டுங்கள். அவர்கள் இதில்
ஒரு வரிசை எண் உள்ள slip ஐ ஓட்டுவார்கள்.
பின்பு நீங்கள் உங்கள் முறை வரும்போது உங்கள்
விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் காட்டினால்,
சரிபார்த்துவிட்டு கையொப்பமிட்டு கொடுப்பார்கள்.
பின்பு விண்ணப்பத்தையும் காசோலையையும்
வேறொரு Counter ல் கொடுத்து இரசீது பெற்று
திரும்பிவிடலாம் ’என சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டதும் ‘பரவாயில்லையே.
நமது அரசும் குடிமக்கள் நலன் கருதி இந்த Passport
புதுப்பிக்கும் முறையை இவ்வளவு
சுலபமாக்கிவிட்டார்களே’ என நினைத்துக்கொண்டு,
அங்கிருந்து மகிழ்ச்சியோடு Passport அலுவலகம்
சென்றேன்.


அங்கு சென்றதும் தான் தெரிந்தது நாம் நினைத்தது
தவறு என்று!!தொடரும்

வெள்ளி, 11 மார்ச், 2011

நினைவோட்டம் 42

அடுத்து என்னால் மறக்க முடியாத நண்பர் திரு பழமலை
அவர்கள். எனது வகுப்பு தோழர்களில், தமிழில் இளம்
வயதிலேயே புலமை பெற்ற சிலரில் அவர்
முதன்மையானவர்.

நான் முன்பே கூறியது போல எங்களுக்கு தமிழில் ஆர்வம்
உண்டாக காரணமானவர் எங்கள் தமிழ் ஆசிரியர்
திரு குப்புசாமி அய்யா அவர்களே!

அவருடைய தமிழ் இலக்கண பாடத்தால் ஈர்க்கப்பட்டு
நாங்கள் அனைவரும் கவிஞர்கள் ஆக எண்ணியது
உண்மை. ஆனால் உண்மையில் அதில் வெற்றி
பெற்றது நண்பர் பழமலை தான்.

அவரும் விருத்தாச்சலம் பள்ளியில் படித்தபோது
‘மலை’என்ற கையெழுத்து இதழ் தொடங்கினார்.
அதில் முழுக்க முழுக்க கவிதைகளே, அதுவும்
நண்பர் பழமலையின் கவிதைகளே இடம் பெற்றன.

அந்த இதழை எங்கள் வகுப்பு ஆசிரியர்
திரு A.K அவர்களிடம் காண்பித்தபோது வெறும்
கையெழுத்திட்டு மட்டும் திருப்பி கொடுத்துவிட்டார்.

என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்களிடம்
காண்பித்தபோது ‘அன்புள்ள பழமலை,உன்னிடம்
கவிதை ஊற்று தெரிகிறது. எதிர்காலத்தில் சிறந்த
கவிஞனாக வருவாய்’ என எழுதி கையெழுத்து
இட்டதை,பெருமையாய் இன்னமும் ஒவ்வொரு
மேடையிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நண்பர் கிருஷ்ணன் மனோகரா திரைப்பட காட்சியை
பள்ளி மேடையில் நடித்துக்காட்டியது போல,
நண்பர் பழமலை அவர்களும் பள்ளியில் விழா
ஒன்றில் நடித்தார்.

ஆனால் ஒரு வித்தியாசம்.சேரமான் கணைக்கால்
இரும்பொறை பற்றிய ஓரங்க நாடகம் ஒன்றை
அவரே எழுதி நடித்தார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழனுடன்
நடந்த போரில் தோற்று,சோழன் கோச்செங்கோணானால்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

அப்போது தாகம் எடுத்து சேரமான் கணைக்கால்
இரும்பொறை தண்ணீர் கேட்டபோது அந்த சிறையின்
காவலன் இடது கையால் தண்ணீரை தந்ததால்,
அதை அவமானமாகக் கருதி,‘மயிர் நீப்பின்
வாழாக்கவரி மான்’போல அதைக்குடிக்காமல்
தூக்கி எறிந்துவிட்டு உயிர் துறக்கிறான்.

இந்த காட்சியை மட்டும் மிகவும் உணர்ச்சியூட்டும்
அற்புத உரையாடல்களால் நண்பர் பழமலை
அமைத்திருந்தார்.

அந்த நாடகத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை
பாத்திரத்தில் நண்பர் பழமலை நடித்தார்.
கோச்செங்கோணான் பாத்திரத்தில் நான் நடித்தேன்.
சிறைக்காவலனாக எனது இன்னொரு வகுப்புத்தோழர்
திரு இராஜசேகரன் ராஸ் நடித்தார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறையை கட்டி
இழுத்து வர சரியான கயிறு ஒன்று கிடைக்காததால்,
அவசரத்து கிடைத்த ஒரு மாடு கட்டும் சங்கிலியை
உபயோகித்து அவரை இழுத்து வந்தபோது
மாணவர்களிடையே ஒரே கலாட்டா கரவொலிதான்.

ஆனால் அந்த நாடகத்தில் அவர் எழுதியிருந்த
உயிரோட்ட உரையாடல்களும் அவரது உணர்ச்சிமிக்க
நடிப்பும் எல்லோர் கண்ணிலும் கண்ணீரை
வரவழைத்தது உண்மை.

மறுநாள் எங்கள் தமிழாசிரியர் திரு குப்புசாமி
அய்யா அவர்கள் அந்த நாடகத்தை பற்றி குறிப்பிட்டு
‘நாடக உரையாடல்களும் நடிப்பும் நன்றாக இருந்தன.
ஆனால் அந்த காவலாளிதான் ஏனோ ஆங்கிலேயன்
போல் இருந்தான்’என்று காவலாளியாக நடித்த
திரு ராஸ் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வந்ததை
பற்றி கேலியாக கூறியது எனக்கு இன்னும்
நினைவில் இருக்கிறது.நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 7 மார்ச், 2011

நினைவோட்டம் 41

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர் திரு துரைராஜ்.
விருத்தாசலம் பள்ளியில் படித்த மூன்று ஆண்டுகளிலும்
என்னோடு தோழமையாக பழகியவர்.

ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்ட அவர்
பின் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஈடுபாடு கொண்டு
அண்ணாவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.

நான் முன்பே எழுதியிருந்தபடி அவர் கவிதை
எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கரிகாலன்
என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதுவார்.

கவிதைகளை கணித நோட்டுகளில் எழுதி ஆசிரியர்
திரு ராஜகோபாலன் அவர்களிடம் அறிவுரையும்
பெற்றவர். கவிஞர் கண்ணதாசனின் தென்றல்
இதழ் நடத்திய, ‘வெண்பா’ போட்டியில் பலமுறை
கலந்துகொண்டிருக்கிறார்.

1960-ல் தி.மு.க வில் இருந்து திரு சம்பத் அவர்களும்
திரு கண்ணதாசன் அவர்களும் பிரிந்து தமிழ் தேசியக்
கட்சி ஆரம்பித்தபோது,நண்பர் திரு துரைராஜ்(கரிகாலன்),
கண்ணதாசன் மேல் கொண்ட அபிமானத்தால்
தமிழ் தேசியக் கட்சி ஆதரவாளராக மாறினார்.

அவருக்கு படிக்கும்போதே நூல்கள் வாசிக்கும்
பழக்கம் இருந்ததால், படிப்பை முடித்தபின்
அவர் விரும்பி நூலகராக பணியில் சேர்ந்ததாக
அறிந்தேன்.

பல ஆண்டுகளுக்குப்பின் அவருடன் தொடர்பு
கிடைத்தபோது எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
கரிகாலனாக இருந்த அவர் அப்போது
முருகடிமை துரைராஜ் ஆக மாறியிருந்தார்!

பள்ளியில் படித்தபோது கடவுள் மறுப்பாளராக
இருந்த அவர், எவ்வாறு முருகனுக்கு அடிமையானார்
என கேட்டபோது ஒரு தடவை ஆற்றில் குளிக்கும்போது
தனக்கு ஒரு வியப்பான அனுபவம் ஏற்பட்டதாகவும்,
அப்போது முருகனுடைய அருள் கிட்டியதால்,
அது வரை நாத்திகராக இருந்த தான் ஆத்திகராக
மாறி, தனது பெயரை முருகடிமை துரைராஜ்
என மாற்றிக்கொண்டதாக சொன்னார்.

அதோடல்லாமல் முருகன் அருளால் சோதிடக்கலையில்
தேர்ச்சி பெற்று,‘Om Saravana Astrological Research Centre'
என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை திருவல்லிக்கேணியில்
நிறுவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சேவை
செய்து வருவதாகவும்,அவரது வாடிக்கையாளர்கள் பலர்,
கடல் கடந்தும் இருப்பதால் வருடத்தில் இரண்டு மாதம்
வெளி நாடு சென்று சேவை செய்து வருவதாகவும்,
மங்கையர் மலர் போன்ற இதழ்களில் வாசகர்களுக்காக
நட்சத்திர பலனும் எழுதுவதாக சொன்னபோது,
1957- 1960 களில் என்னுடன் படித்த கரிகாலனாக இருந்த
துரைராஜ் எப்படி மாறியிருக்கிறார் என நினைத்து வியந்தேன்.

நண்பர் முருகடிமை துரைராஜ் சோதிடம் பற்றி பல
நூல்கள் எழுதி இருப்பதாக அறிகிறேன்.மேலும்
தற்சமயம் மாதம் ஒருமுறை வெளிவரும்
ஒரு சோதிட இதழும் நடத்திவருகிறார்.

காலம் ஒரு கிரியா ஊக்கி என நினைக்கிறேன்.
மனிதருக்குள் தான் எத்துணை மாற்றத்தை உண்டாக்குகிறது!!
நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி