அடுத்து என்னால் மறக்க முடியாத நண்பர் திரு பழமலை
அவர்கள். எனது வகுப்பு தோழர்களில், தமிழில் இளம்
வயதிலேயே புலமை பெற்ற சிலரில் அவர்
முதன்மையானவர்.
நான் முன்பே கூறியது போல எங்களுக்கு தமிழில் ஆர்வம்
உண்டாக காரணமானவர் எங்கள் தமிழ் ஆசிரியர்
திரு குப்புசாமி அய்யா அவர்களே!
அவருடைய தமிழ் இலக்கண பாடத்தால் ஈர்க்கப்பட்டு
நாங்கள் அனைவரும் கவிஞர்கள் ஆக எண்ணியது
உண்மை. ஆனால் உண்மையில் அதில் வெற்றி
பெற்றது நண்பர் பழமலை தான்.
அவரும் விருத்தாச்சலம் பள்ளியில் படித்தபோது
‘மலை’என்ற கையெழுத்து இதழ் தொடங்கினார்.
அதில் முழுக்க முழுக்க கவிதைகளே, அதுவும்
நண்பர் பழமலையின் கவிதைகளே இடம் பெற்றன.
அந்த இதழை எங்கள் வகுப்பு ஆசிரியர்
திரு A.K அவர்களிடம் காண்பித்தபோது வெறும்
கையெழுத்திட்டு மட்டும் திருப்பி கொடுத்துவிட்டார்.
என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்களிடம்
காண்பித்தபோது ‘அன்புள்ள பழமலை,உன்னிடம்
கவிதை ஊற்று தெரிகிறது. எதிர்காலத்தில் சிறந்த
கவிஞனாக வருவாய்’ என எழுதி கையெழுத்து
இட்டதை,பெருமையாய் இன்னமும் ஒவ்வொரு
மேடையிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நண்பர் கிருஷ்ணன் மனோகரா திரைப்பட காட்சியை
பள்ளி மேடையில் நடித்துக்காட்டியது போல,
நண்பர் பழமலை அவர்களும் பள்ளியில் விழா
ஒன்றில் நடித்தார்.
ஆனால் ஒரு வித்தியாசம்.சேரமான் கணைக்கால்
இரும்பொறை பற்றிய ஓரங்க நாடகம் ஒன்றை
அவரே எழுதி நடித்தார்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழனுடன்
நடந்த போரில் தோற்று,சோழன் கோச்செங்கோணானால்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.
அப்போது தாகம் எடுத்து சேரமான் கணைக்கால்
இரும்பொறை தண்ணீர் கேட்டபோது அந்த சிறையின்
காவலன் இடது கையால் தண்ணீரை தந்ததால்,
அதை அவமானமாகக் கருதி,‘மயிர் நீப்பின்
வாழாக்கவரி மான்’போல அதைக்குடிக்காமல்
தூக்கி எறிந்துவிட்டு உயிர் துறக்கிறான்.
இந்த காட்சியை மட்டும் மிகவும் உணர்ச்சியூட்டும்
அற்புத உரையாடல்களால் நண்பர் பழமலை
அமைத்திருந்தார்.
அந்த நாடகத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை
பாத்திரத்தில் நண்பர் பழமலை நடித்தார்.
கோச்செங்கோணான் பாத்திரத்தில் நான் நடித்தேன்.
சிறைக்காவலனாக எனது இன்னொரு வகுப்புத்தோழர்
திரு இராஜசேகரன் ராஸ் நடித்தார்.
சேரமான் கணைக்கால் இரும்பொறையை கட்டி
இழுத்து வர சரியான கயிறு ஒன்று கிடைக்காததால்,
அவசரத்து கிடைத்த ஒரு மாடு கட்டும் சங்கிலியை
உபயோகித்து அவரை இழுத்து வந்தபோது
மாணவர்களிடையே ஒரே கலாட்டா கரவொலிதான்.
ஆனால் அந்த நாடகத்தில் அவர் எழுதியிருந்த
உயிரோட்ட உரையாடல்களும் அவரது உணர்ச்சிமிக்க
நடிப்பும் எல்லோர் கண்ணிலும் கண்ணீரை
வரவழைத்தது உண்மை.
மறுநாள் எங்கள் தமிழாசிரியர் திரு குப்புசாமி
அய்யா அவர்கள் அந்த நாடகத்தை பற்றி குறிப்பிட்டு
‘நாடக உரையாடல்களும் நடிப்பும் நன்றாக இருந்தன.
ஆனால் அந்த காவலாளிதான் ஏனோ ஆங்கிலேயன்
போல் இருந்தான்’என்று காவலாளியாக நடித்த
திரு ராஸ் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வந்ததை
பற்றி கேலியாக கூறியது எனக்கு இன்னும்
நினைவில் இருக்கிறது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
பள்ளி நாடகங்களில் நடித்ததும் ,அவை பற்றி இன்று நினைப்பதும் சுகமான அனுபவங்களே!பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
பதிலளிநீக்குநண்பர்களை பற்றிய பதிவுகள் மிகவும் அருமை . ஒவ்வொன்றும் ஒரு விதமாக உள்ளது . தெளிந்த நீரோடை போன்ற நடை ... வாசுதேவன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குதிரு வாசு அவர்களே!