அந்த விவசாயியோடு அவரது தோட்டத்திற்கு சென்றபோது,
அவரது மனைவியே அங்கு வரப்பில் நின்றுகொண்டு,வேலை
செய்பவர்களை மேற்பார்வை செய்து கொண்டு இருந்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களில்
எல்லாவற்றிலும் குடும்பத்
தலைவர் மட்டுமல்ல குடும்பத்
தலைவியும் கணவர் இல்லாதபோது தானே நேரில் நின்று
விவசாய பணிகளை கண்காணிப்பது என்பது இன்றும் உள்ள
நடைமுறை.
அவரோடு பண்ணையை சுற்றிப்பார்த்துவிட்டு அவரது வீட்டிற்கு
சென்றேன். ஒருபக்கம் பெரிய தென்னந்தோப்பும்,மறுபக்கம்
நிலக்கடலை பயிரிடப்பட்டிருந்த வயல்களுக்கிடையே அவரது
பண்ணை வீடு இருந்தது.
கடனுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வயலையோ
அல்லது தொழிற்கூடத்தையோ பார்வையிட செல்லும்போது
அவர்களது வீட்டையும் பார்க்கவேண்டுமென்று என்பது பணியில்
சேர்ந்தபோது கொடுத்த பயிற்சியில், கற்றுக்கொண்ட பாடம்.
ஏனெனில் ஒருவரது வீட்டின் வரவேற்பு அறை எவ்வாறு
பராமரிக்கப்படுகிறது எனப் பார்த்தாலே அவரது குணாதிசயத்தை
அறிந்து கொள்ளமுடியுமாம். வரவேற்பு அறை என்றால்
அங்கே அழகான இருக்கைகளோ அல்லது தரைக்கம்பளங்களோ
இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஏழையாக இருந்து, சிறிய வீடாக இருந்தாலும்,அது சுத்தமாக வைக்கப்பட்டிருந்தாலே,அந்த வீட்டில்
வசிப்போரின்
பழக்கவழக்கங்கள் பற்றிய மதிப்பீடு குறித்து நம்மால் எடைபோட
முடியும்.
(ஆனால் இது ஒரு தோராய மதிப்பீடாகத்தான் இருக்கமுடியும்
என்பது என் கருத்து. இது பற்றி பின் எழுதுவேன்.)
கோவை மாவட்டத்திற்கே உரிய விருந்தோம்பல் குணத்தோடு
‘என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று அவரும் அவரது துணைவியாரும்
கேட்டதற்கு,
நான் 'ஒன்றும் வேண்டாம்.' என்று சொல்லியும்,
வற்புறுத்தி 'இளநீராவது சாப்பிடுங்கள்.' என்று கூறி சுவையான
இளநீர் கொடுத்தார்கள்.
பின் அவரிடம் கடலை பயிரிடப்பட்டிருக்கும் பரப்பளவு பற்றிய
விவரம் மற்றும் அதனுடைய வயது முதலியவைகளைக்
கேட்டுவிட்டு,’என்ன இரக (Variety) கடலை பயிரிட்டு
இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்’ எந்த இரகம் பயிரிட்டு இருந்தால்
உங்களுக்கு என்ன? கடலை பயிரிட்டு இருக்கிறேன். அதற்கு
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தருவீர்கள்?
நிலத்தை அடமானம்
(Mortgage of Landed Property) கேட்காமல் அதிகபட்சம் உங்கள்
வங்கியால் எவ்வளவு தரமுடியும்?
அதைச் சொல்லுங்கள்.
நிச்சயம் உங்கள் வங்கியின் விதியின் படி குறித்த நேரத்தில்
வாங்கிய பணத்தைக் கட்டிவிடுவேன்.’ என்றார்.
எங்கள் வங்கியில் அப்போது (1970) இருந்த விதிகள் படி
ரூபாய் 5000 வரைதான், பயிர் அடமானத்தின் (Hypothecation
of Crops)மேல் தரமுடியும். அதை சொன்னதும் ‘அது
போதும்
எனக்கு.’என்றார் அவர்.
மேலும் அவர் சொன்னார்.’ என்னால் இந்த பணத்தை
இங்கேயே
புரட்ட முடியும்.ஆனால் வட்டிதான் ‘எச்சா’ (அதிகம்) இருக்கும்.
வங்கியில் கடன் வாங்கினால் வட்டி குறைவு என்பதால்தான்
உங்கள் வங்கிக்கு வந்தேன்.’ என்றார்.
(அப்போது பயிர் கடனுக்கு, எங்கள் வங்கியில்
ஆண்டுக்கு 9 சதம்
தான் வட்டி வசூலிக்கப்பட்டது. அதை முக்கால் வட்டி என்று
கிராமங்களில் சொல்வதுண்டு. ஆனால் அப்போதோ
கிராமங்களில் சொல்வதுண்டு. ஆனால் அப்போதோ
கிராமங்களில் தனியார் தரும் கடனுக்கு 5 வட்டி தரவேண்டும்.
அதாவது ஆண்டுக்கு 60 சதம்(!).
வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படாதிருந்தால்
விவசாயிகள் நிலை என்னவாகியிருக்கும் என யோசித்துப்
பாருங்கள்.இப்போது அவர்கள் நிலை நன்றாக இருப்பதாக நான் சொல்லவில்லை.
ஆனால் அரசு வங்கிகள் இல்லாதிருந்தால்
அவர்கள் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்
என்பதுதான் உண்மை,)
நான் திரும்பவும் அவரிடம், ‘சார். நீங்கள் கேட்டபடியே கடன்
தருகிறோம். இருந்தாலும் நீங்கள் உயர்ரக அதிக விளைச்சல்
தரக்கூடிய கடலையைப் பயிரிட்டால் அதிக இலாபம் பெறலாமே
என்பதால்தான் என்ன இரகம் பயிரிடுகிறீர்கள் எனக் கேட்டேன்.
மேலும் தற்சமயம் மாநில அரசு சூரியகாந்தி பயிரிடுவோருக்கு
மானியம் தருகிறது. நீங்கள் அதைப் பயிரிட்டு பயன் பெறலாம்.’
என்றேன்.
அதற்கு அவர், சார். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. புதிய இரக
பயிர்களைப் பற்றிய விவரங்களோ அல்லது வீரிய விதைகளோ
வேண்டும் என்றால் வேளாண்மைத் துறையை அணுகி
பெற்றுக்கொள்கிறேன். நீங்கள் கடன் கிடைக்க மட்டும் வழி
செய்யுங்கள்.அது போதும்.’ என்றார்.
எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. என்னை அவர் ஒரு
வங்கியாளனாகத்தான் பார்த்தாரே ஒழிய,
புதிய வேளாண்மையை
சொல்லித்தருபவராகப் பார்க்கவில்லை என்பதை
புரிந்துகொண்டேன்.
இனி அதைப்பற்றி அவரிடம் பேசவேண்டாம் என் தீர்மானித்து,
‘சரி. நான் வரேங்க. உங்களுடைய விண்ணப்பத்தை இன்றைக்கே
எங்கள் மேலாளர் சிபாரிசோடு எங்கள் தலைமையகத்திற்கு
அனுப்பிவிடுவோம். ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து கடன்
அனுமதி கடிதம் வந்துவிடும். வந்தவுடன் தெரிவிக்கிறோம்.
அப்போது நீங்கள்
வந்து பத்திரங்களில் கையொப்பமிட்டு
கடன்தொகை பெற்றுக்கொள்ளலாங்க’
எனக்கூறி விடை
பெற்றேன்.
அவரிடம் நான் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம் யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited advice) தரக் கூடாது
என்பதுதான்.
தொடரும்