செவ்வாய், 30 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 45



வாடிக்கையாளர்களில் பலர் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள், சிலர் என்னிடம் கோபப்பட்டிருக்கிறார்கள்,சிலர் அச்சுறுத்தியிருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில், வாடிக்கையாளர்களும் நானும் 2 இல் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் சிலர் என்னை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். நான் குறிப்பிட இருக்கும் வாடிக்கையாளர் என்னிடம் அவ்வாறு நடந்துகொண்டபோது  நான் காரணமல்ல என்றாலும், என்னை அவமானப்படுத்துவதின் மூலம் அவருடைய வங்கியின் மேல் ஏற்பட்ட கோபத்தை என்னிடம் காண்பித்தார் என நினைக்கிறேன்.

நான் அப்போது எங்கள் வங்கியியில் வட்டார மேலாளராக (Regional Manager) பணியாற்றிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் காலை 10 மணிக்கு எங்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தொலைப்பதிவு (Telex) வந்தது.

அதில் எனது வட்டாரத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றூர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த கிளை பற்றி ஒரு புகார் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வாடிக்கையாளர், தான் வங்கியில் கட்டிய  ரூபாய் 2000 த்தை தனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும். அது குறித்து கிளை மேலாளரிடம் கேட்டதற்கு அவர் அப்படி ஏதும் பணம் கட்டப்படவில்லை என்று சொல்லிவிட்டதால், அது குறித்து தீவிரமாக விசாரித்து தான் கட்டிய பணத்தை கணக்கில் வரவு வைக்க ஆவன செய்யுமாறும், தனது பணத்தை கணக்கில் வரவு வைக்காத காசாளர் மற்றும் மேலாளர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், தலைமை அலுவகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதனால்  என்னை உடனே அந்த கிளைக்கு சென்று ஆய்வு செய்து அந்த வாடிக்கையாளரின் புகார் சரிதானா என விசாரித்து, விரிவான அறிக்கை தருமாறு அந்த தொலைப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

அந்த கிளை நான் பணியாற்றிய இடத்திலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தால் உடனே அங்கு செல்லவேண்டும் என்பது அப்போது எங்கள் வங்கியில் இருந்த விதி.

எனவே உடனே ஆய்வுக்கு என்னோடு வரும் அலுவலரோடு காரில் புறப்பட்டேன். முதலில் கிளைக்கு சென்று விசாரித்துவிட்டு பின்பு மேலாளரையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த வாடிக்கையாளரிடம் பேச எண்ணியதால் முதலில் கிளைக்கு சென்றேன்,

காலை 11 மணிக்கு கிளம்பிய நாங்கள் அந்த ஊரை அடையவே மதியம் 1.30 மணி ஆகிவிட்டது.கிளை மேலாளரிடம் அந்த புகார் பற்றி விசாரித்தென். அதற்கு அவர் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் கட்டாமலேயே அடிச்சீட்டு (Counterfoil) ஒன்றை காண்பித்து குறிப்பிட்ட தேதியில் தான் பணம் கட்டியதாகவும், ஏன் அதை தனது கணக்கில் வரவு வைக்கவில்லை என்று தினம் வந்து தகராறு செய்வதாக சொன்னார்.

மேலும் அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை இருந்தாலும், காசாளரின் சுருக்கொப்பம் (Initial) இல்லை என்றும் கூறினார். நான் அந்த கிளையின் காசாளரிடம் அது பற்றி விசாரித்தபோது, அவர் தான் பணத்தை ஒவ்வொரு  வாடிக்கையாளரிடமிருந்தும் பெறும்போது தவறாமல் முத்திரை இட்டு சுருக்கொப்பமிட்டு கொடுப்பதாகவும், அந்த வாடிக்கையாளர் வைத்திருக்கும் அடிச்சீட்டில் தனது சுருக்கொப்பம் இல்லாததால், தான் அந்த பணத்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நான் மேலாளரிடம்  வங்கி காசாளர் சுருக்கொப்பமிடாதபோது எப்படி அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை உள்ளது?’  என கேட்டதற்கு அவர் தெரியவில்லை. சார். ஆனால் அந்த வாடிக்கையாளர் ரூபாய் 2000 த்தை தான் நேரடியாக காசாளரிடம் கொடுக்கவில்லை என்றும், கிளையில் உள்ள கடைநிலை ஊழியரிடம் கொடுத்து பணத்தை கட்ட சொன்னதாகவும் அவர்தான் அந்த அடிச்சீட்டை கொடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் அந்த ஊழியரோ தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் தரவில்லை. என்று சொல்கிறார். என்று கூறினார்.

உடனே அந்த ஊழியரை அழைத்து விசாரித்தபோது அவர், தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் தரவில்லை என்றும், மேலும் காசாளர் இருக்கும்போது தன்னிடம் பணம் தந்ததாக கூறுவது ஏன் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.

சரி மேற்கொண்டு ஆய்வு செய்யுமுன்பு, அந்த வாடிக்கையாளரை அவரது இருப்பிடத்தில் சந்தித்து அவரது தரப்பு நியாயத்தையும் கேட்போம் என நினைத்து மேலாளரிடம், அந்த வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்?’ எனக் கேட்டேன்.

அவர் அந்த வாடிக்கையாளர் இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோடில் உள்ள பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கிறார். அவர் இந்நேரம் கடையில் தான்  இருப்பார்.’ என்றார்.

சரி. அங்கே போய் அவரை பார்க்கலாம். நீங்களும் என்னுடன் வாருங்கள். எனக்கூறி அவரை அழைத்துக்கொண்டு  அந்த வாடிக்கையாளரின் கடைக்கு சென்றேன்.




 தொடரும்

புதன், 24 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 44



Transfer Of Tension பற்றி எனது வங்கி பயிற்சிக் கல்லூரியில் சொன்ன கதை ஒன்று அப்போது நினைவுக்கு வந்தது என்று சொன்னேன் அல்லவா அது இதுதான்.

ஒரு நாள் திரு கிருஷ்ணமூர்த்தி என்பவர்  இரவு 12 மணி வரை தூங்காமல் அங்கும் இங்கும் கவலையோடு வீட்டிற்குள் நடந்துகொண்டிருந்தாராம் அதைக் கவனித்த அவரது மனைவி என்ன விஷயம்?’ என்று விசாரிக்க, அவர் ஒன்றுமில்லை நான் நண்பர் திரு இராமமூர்த்தியிடம் ரூபாய் 10,000 கடன் வாங்கியிருந்தேன். அதை நாளை திருப்பித்தருவதாக சொல்லியிருந்தேன். இப்போது கையில் பணமேதுமில்லை. நாளை  எப்படி சொன்னபடி தருவது என்ற கவலையால் தூக்கம் வரவில்லை. அதனால்தான் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருக்கிறேன். என்றாராம்.

அதற்கு அவர் மனைவி, இவ்வளவுதானா? நீங்கள் திரு இராமமூர்த்தியின் தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். என்றிருக்கிறார். 

பின் அந்த தொலைபேசி எண்ணைப் பெற்று, அந்த நடு இரவில் தூங்கிக்கொண்டிருந்த திரு இராமமூர்த்தியைக் கூப்பிட்டாராம். அவரும் என்னவோ ஏதோ என நினைத்து தொலைபேசியை எடுத்தவுடன், நான் திருமதி கிருஷ்ணமூர்த்தி பேசறேன். என் கணவர் நாளை உங்களுக்கு ரூபாய் 10,000 தருவதாக சொல்லியிருந்தார் அல்லவா? அதைத் தரமாட்டார். என சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

அவ்வளவுதான் திரு கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து பணம் நாளை வராது எனத் தெரிந்ததும் அதை எப்படி வாங்குவது என்ற கவலையால் திரு இராமமூர்த்தியின் தூக்கம் அடியோடு கலைந்து,அவர் வீட்டில் அங்கும் இங்கு நடைபோடத் தொடங்கிவிட்டாராம்!  அதே நேரத்தில் திரு கிருஷ்ணமூர்த்தி நிம்மதியாக உறங்கிவிட்டாராம்!

இப்படித்தான் நம்மில் பலர் தங்களது பிரச்சினைகளை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டு தாங்கள் அதிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதற்காக சொன்ன கதை அது.

அந்த டாக்டரின் கடிதத்தைப் படித்தவுடன் எனக்கும் அந்த எண்ணம் தான் வந்தது. நான் நல்ல எண்ணத்தில் உதவி செய்யப் போக அதுவே எனக்கு சிக்கலை உண்டாக்கியதை நினைத்ததும், என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்தேன். அந்த நேரத்தில் நான் ஏதோ கடன் வாங்கிவிட்டது போலவும், குறிப்பிட்ட தேதியில் அதை கட்ட முடியாமல் தவிப்பதுபோலவும் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.  

அந்த பள்ளியிலிருந்து பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லி கோரிக்கை வருமுன், லிபியாவில் அரசின் கொள்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அந்த டாக்டர் பணம் அனுப்பமாட்டாரா என்ற நைப்பாசையில் தினம் காலையில் வரும் அஞ்சல்களில் வெளி நாட்டு அஞ்சல் ஏதேனும் உண்டா என பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால் எதுவும் வரவில்லை. அதற்குப் பதில் நான்கு மாதங்கள் கழிந்ததும், நான் எதிர்பார்த்தது (?) போல அந்த பிள்ளைகளுக்கான பள்ளி மற்றும் விடுதிக் கட்டணங்களை கட்டச் சொல்லி அஞ்சல் வந்தது.

சரி நடந்ததை பள்ளியில் சொல்லி பணத்தைக் கட்ட அவகாசம் கேட்போம் என நினைத்து, அந்த வாடிக்கையாளரை அழைத்து வந்த எங்களது தினசேமிப்பு முகவரை (Pigmy Deposit Agent) அழைத்து, நீங்கள் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இன்னும் அந்த டாக்டரிடமிருந்து வங்கிக்கு வெளி நாட்டிலிருந்து காசோலை வரவில்லை. வந்தவுடன் அந்த பணத்தைக் கட்டுவதாக சொல்லி அவகாசம் கேட்டு வாருங்கள் என்று சொன்னேன்.

அவரும் போய் விவரத்தை எடுத்து சொன்னதும், அந்த பள்ளி முதல்வர் எங்கள் (எனது) நிலையை அறிந்து அதனாலென்ன. அடுத்த மாத பணத்தோடு சேர்த்துக் கட்டிவிடுங்கள். என்று சொல்லிவிட்டார்.

என்ன கொடுமை பாருங்கள். வங்கியில் கடன் வாங்கியவர்கள் குறித்த நாளில் கட்ட முடியாதபோது தவணை கேட்பது போல, கடன் ஏதும் வாங்காத, அதுவும் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த நான், யாருக்குக்காகவோ பணத்தைக் கட்ட அவகாசம் கேட்டது எனது நேரம் போலும்!

பள்ளி நிர்வாகம் கொடுத்த தற்காலிக நிம்மதியில் ஒரு மாதத்தை கழித்தேன்.அந்த மாதமும் அந்த டாக்டரிடமிருந்து அஞ்சலோ, 
காசோலையோ வரவில்லை. ஆனால் ஐந்தாம் மாதம் பள்ளியிலிருந்து இரண்டு மாத கட்டணத்தையும் உடனே கட்ட சொல்லி கடிதம் வந்தது.


இனி தினசேமிப்பு முகவரை பள்ளிக்கு அனுப்புவது சரியாக இருக்காது என தீர்மானித்து, நானே நேரில் சென்று அந்த பள்ளியின் முதல்வரைப் பார்த்தேன். அந்த டாக்டரின் கணக்கில் பணம் ஏதும் இல்லையென்றும், வங்கியும் அவருக்கு எந்த வித கடனீடு (Security) இல்லாமல், அதுவும் வெளி நாட்டில் உள்ளவருக்கு கடன் தர இயலாது என்றும், அவர் நிச்சயம் காசோலை அனுப்புவார் என்றும், அதுவரை பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மேலும் அந்த பிள்ளைகளை பணம் கட்டாத காரணத்தால் வெளியே அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டேன்.

ஒரு வங்கி மேலாளர் என்ற முறையில் ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டதையும் எடுத்துச் சொன்னேன்.
  
உண்மை நிலையை (எனது பரிதாப நிலையை!) புரிந்துக்கொண்ட அந்த பள்ளியின் முதல்வர், சார். உங்கள் நிலைப்பாடு  எனக்குப் புரிகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. எதற்கும் பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முன் உங்கள் கோரிக்கையை எனது பரிந்துரையுடன் வைத்து, கட்டணத்தைக் கட்ட இன்னும்  மூன்று மாத கால அவகாசம் பெற்றுத்தர முயற்சிக்கிறேன். அதற்குள் நீங்கள் அந்த டாக்டருக்கு கடிதம் எழுதி பணத்தை அனுப்ப சொல்லுங்கள். என்றார்.

அவருக்கு பல முறை நன்றி தெரிவித்து திரும்பினேன்.உடனே அந்த டாக்டர் வாடிக்கையாளருக்கு எனது இக்கட்டான நிலையை தெரிவித்து, எப்படியாவது பணத்தை அனுப்ப சொல்லி கடிதம் எழுதிவிட்டு, என் தலை விதியை நொந்துகொண்டு காத்திருந்தேன்.

சில நாட்களில் அந்த பள்ளியின் முதல்வர் என்னை தொலைபேசியில் அழைத்து,’ஒரு மகிழ்ச்சியான செய்தி. உங்களின் கோரிக்கையை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் கட்டணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். என்றார். எனக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது அப்போது.

கவலையோடு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தபோது, சரியாக அந்த குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக அந்த டாக்டரிடமிருந்து ஒரு அஞ்சல் வந்தது. பரபரப்புடன் அதை பிரித்தபோது அதில் காசோலையும் தாமதமாக பணம் அனுப்புவதற்கு மன்னிப்பு கோரியும் கடிதம் இருந்தது.

எனது கடிதத்தைப் பார்த்து நிலையை அறிந்துகொண்டு எப்படியோ பணத்தை அனுப்பிவிட்டார் போலும். நம்பமாட்டீர்கள் அன்று நான் அடைந்த சந்தோஷம் சிண்டிகேட் வங்கியில் பணி நியமன ஆணை கிடைத்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, முது நிலை மேலாளராக பதவி உயர்வு பெற்ற போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, பல மடங்கு அதிகமாக இருந்தது என்பது உண்மை.

உடனே அந்த காசோலைக்கான பணத்தை அவரது கணக்கில் வரவு வைத்து. பின் பள்ளிக்கு அனுப்பவேண்டிய தொகையை பற்று பதிவு (Debit) செய்து பணக் கொடுப்பாணை (Pay order)யாக எடுத்துக்கொண்டு அந்த பள்ளிக்கு நேரே சென்று கொடுத்துவிட்டு, நல்ல மனம் படைத்த அந்த பள்ளி முதல்வருக்கு நன்றி தெரிவித்துத் திரும்பினேன்.

அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன். எனது பணிக்காலத்தில் எனக்கு வாடிக்கையாளர்களுடன் எத்தனையோ வகையான அனுபவங்கள் ஏற்பட்டாலும்  இந்த வாடிக்கையாளருடன் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை என்று.

ஒருவருக்கு நல்லது செய்ய நினைத்து நாம் உதவி செய்தால், நமக்கு உதவி செய்ய சிலர் இருப்பார்கள் என்றும், நமக்கு நிச்சயம் கெடுதல் வராது என்பதையும் அறிந்து கொண்டேன்.


தொடரும்

வியாழன், 18 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 43



திரிபோலி (Tripoli) சென்றவுடன் அந்த டாக்டர் கடிதம் எழுதியிருந்தார். தாங்கள் பணியில் சேர்ந்து விட்டதாகவும் விரைவில் காசோலை அனுப்புவதாகவும், தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் விடுதி கட்டணங்களை  தவறாமல் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இன்னும் மூன்று மாதத்திற்கு பள்ளிக்கு எந்த கட்டணமும் கட்டத் தேவையில்லை என்பதால் நானும் காசோலை வரும்போது வரட்டும் என எண்ணி என் பணியில் மும்முரமாயிருந்தேன்.

ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து வந்த கடிதத்தில் இருந்த செய்தியைப் படித்ததும், அதிர்ச்சியால் இலேசாக வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது!

அந்த கடிதம் என்ன செய்தியை தெரிவித்தது என சொல்லுமுன் லிபியாவைப்பற்றி கொஞ்சம் இங்கே சொல்லலாமென நினைக்கிறேன்.

வட ஆப்பிரிக்க நாடான லிபியா, 1951 ஆம் ஆண்டு 24 டிசம்பர் இல் சுதந்திரம் பெற்ற பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசர் இதிரிஸ் (King Idris ), 1969 இல் நடந்த இராணுவப் புரட்சியால், கர்னல் கடாஃபி என அழைக்கப்பட்ட திரு கடாஃபி (Muammar Muhammad Gaddafi) யிடம் ஆட்சியை இழந்தார்.

செப்டெம்பர் 1, 1969 லிருந்து அக்டோபர் 20,  2011 வரை ஆட்சியில் இருந்த கடாஃபி கடைசி வரை சர்ச்சைக்குரியவாக இருந்தார். ஏகாதிபத்தியத்திற்கு  எதிரானவர் என்று போற்றியவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் தன்முனைப்பாட்சியர்  (Autocrat) என்றும் அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல் இருந்தது என்றும் அனைத்துலக தீவிரவாதத்தை ஆதரித்தார் என்று குற்றம் சாட்டியோரும் உண்டு.

(துரதிர்ஷ்டவசமாக 2011 அக்டோபர் 20  ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.)

அவருடைய ஆட்சிக்காலத்தில் அவர் அமெரிக்காவோடும் பிரிட்டிஷாரோடும் நல்லுறவு கொண்டிருக்கவில்லை. அவரது வெளிநாட்டுக் கொள்கைக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் இருந்தததால்தான் லிபியாவைப்பற்றி சொல்லவேண்டியதாயிற்று.

அந்த கடிதத்தில் எனக்கு அப்படி அதிர்ச்சி தரும்படி அந்த டாக்டர் என்ன எழுதியிருந்தார் என்றால், திரு கடாஃபி தலைமையின் கீழ் இருந்த அப்போதிருந்த லிபியாவின் சட்டப்படி, முதல் ஆறுமாதத்திற்கு சம்பாதித்த பணத்தை வெளியே அனுப்ப முடியாதாம். ஆறு மாதத்திற்குப் பிறகும் சம்பாதித்ததில் பாதியைத்தான் அனுப்பமுடியுமாம்.

அதிலும் ஒரு சிக்கலாம். லிபியாவுக்கும்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நல்லுறவு இல்லாததால் அங்கு அந்த நாடுகளின் வங்கிகள் இல்லாததால் அமெரிக்க டாலராகவோ அல்லது பிரிட்டிஷ் பவுண்ட்களாகவோ அனுப்ப முடியாதாம். மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கு மட்டும் தான் பணம் அனுப்பமுடியுமாம். எப்படி பணம் அனுப்புதென்று பார்த்து நிச்சயம் அனுப்புவதாகவும் ஆனால் அதை அனுப்ப  6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை ஆகும் என்றும் எழுதியிருந்தார்.

பணம் வரவில்லையே என்று பள்ளிக் கட்டணத்தைக் கட்டாமல் இருந்துவிடாதீர்கள். நிச்சயம்  பணம் அனுப்புகிறோம்.அதுவரை குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எழுதியிருந்தார்.

இந்த செய்தியைப் படித்ததும் என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்!

மூன்று மாதங்கள் கழித்து அந்த பள்ளி,  டாக்டரின் பிள்ளைகளுக்கான கட்டணத்தை கட்டச்சொன்னால் என்ன செய்வது என அறியாமல் திகைத்தேன். அப்படி அந்த பள்ளி கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பினால் அந்த டாக்டருடைய சேமிப்புக்கணக்கில்  பற்று பதிவு (Debit) செய்துதான்  பணத்தை தரவேண்டும். ஆனால் அவருடைய கணக்கில் தேவையான பணம் இல்லாததால், அப்படி செய்தால் அது தற்காலிக மிகைப்பற்றாக (Temporary Overdrawal) ஆகிவிடும்.

வங்கி விதிப்படி சாதாரணமாகவே SB கணக்கில் தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdrawal) தர இயலாது. அதுவும் அந்த டாக்டர் NRE வாடிக்கையாளர் ஆகிவிட்டபடியால், அந்த சேமிப்பு கணக்கு ONR (Ordinary Non Resident) கணக்காக ஆகிவிட்டது. அதில் நிச்சயம் மிகைப்பற்று தர இயலாது. அவரது உறவினர்கள் யாரையும் தெரியாததால் அவர்களையும் அந்த பணத்தை கட்ட சொல்லமுடியாது.

அதே நேரத்தில் பணம் கட்டாவிட்டால் அந்த பிள்ளைகள் பள்ளியை விட்டும் விடுதியையும் விட்டும் வெளியேற்றப்படலாம். அப்போது என்ன செய்வது என்ற கவலைகள் என்னை வதைக்கத் தொடங்கியதால் வங்கியில் எப்படி வணிகத்தைப் பெருக்குவது, வாராக் கடனை எப்படி வசூலிப்பது போன்ற கவலைகள் சுத்தமாக மறைந்துவிட்டன.

ஆழம் தெரியாமல் காலை விட்ட கதை போல ஆகிவிட்டது என் நிலை. அவரது பிரச்சினை எனது பிரச்சினையாக மாற்றப்பட்டுவிட்டது என்பதை அப்போது உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் Transfer Of Tension பற்றி எனது வங்கி பயிற்சிக் கல்லூரியில் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வந்தது!


தொடரும்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 42



எனது பணிக்காலத்தில் எனக்கு வாடிக்கையாளர்களுடன் எத்தனையோ வகையான அனுபவங்கள் ஏற்பட்டன, ஆனால் இந்த வாடிக்கையாளருடன் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் என்னால் இன்னும் மறக்க இயலவில்லை.

அப்போது நான் எங்கள் வங்கியின் தமிழக கிளை ஒன்றில் முது நிலை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை எங்கள் வங்கியில் Pigmy எனப்படும் தினசரி சேமிப்புகளை வசூல் செய்யும் முகவர்  வந்து என்னிடம், சார். உங்களை நம்மிடம் Pigmy Deposit வைத்திருக்கும் டாக்டர் தம்பதியினர் உங்களை சந்தித்து பேசவேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுக்கு சௌகரியப்பட்ட நேரத்தை  சொன்னால்  அப்போது வந்து பார்ப்பதாக சொல்கிறார்கள். என்றார்.

என்ன விஷயமாக பார்க்க விரும்புகிறார்கள்?’  என கேட்டதற்கு, அவர் தெரியவில்லை. சார். என்றார். சரி. இன்று மதியமே அவர்களை என்னை வந்து பார்க்கலாம் என சொல்லுங்கள். என்றேன்.

இருவரும் மருத்துவர்கள் என்பதால் ஒருவேளை மருத்துவமனை கட்ட நினைக்கிறார்களோ என்னவோ. அதற்கு வங்கி கடன் கிடைக்குமா என தெரிந்துகொள்ள வருகிறார்கள் போலும் என நினைத்துக்கொண்டேன்.

மதியம் 3 மணிக்கும் அந்த டாக்டர் தம்பதியினர் வந்தனர்.வந்தவர்களை   அமர சொல்லிவிட்டு.என்ன விஷயமாக என்னைப் பார்க்க விரும்பினீர்கள்?’ என்றேன்.

அதற்கு அந்த ஆண் மருத்துவர், சார். நாங்கள் இருவரும் உங்கள் வங்கியில் Pigmy Deposit வாடிக்கையாளர்கள். எங்களுக்கு லிபியாவில் உள்ள திரிபோலியில் (Tripoli) உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலை கிடைத்திருக்கிறது.விரைவில் அங்கு செல்ல இருக்கிறோம். எங்கள் பிள்ளைகள் இருவரும் இங்குள்ள பள்ளியில் (அது ஒரு பிரபலமான கிறித்துவப் பள்ளி) படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எங்களுடன் அழைத்து  செல்ல முடியாது. உறவினர்கள் வீட்டில் அவர்களை விட்டு செல்ல விரும்பாததால், பள்ளியில் உள்ள விடுதியிலேயே விட்டு செல்ல இருக்கிறோம். அது விஷயமாக உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களைப் பார்த்து பேச வந்தோம். என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். இவர்களது பிள்ளைகளை பள்ளி விடுதியில் சேர்க்க நான் என்ன உதவி செய்ய முடியும். மேலும் இவர்களது பிள்ளைகள் அங்கேயே படிப்பதால் விடுதியில் சுலபமாக சேர்த்துவிட முடியும். மேலும் அந்த பள்ளி எங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல. அப்படி இருக்கும்போது இவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவவேண்டும்? அந்த பள்ளி விடுதியில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க பள்ளி முதல்வரிடம் பேசவேண்டுமா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், அதெல்லாம் வேண்டாம் சார். நாங்கள் ஏற்கனவே எங்கள் பிள்ளைகள் அங்கு படிப்பதால் விடுதியில் சுலபமாக சேர்த்துக் கொண்டார்கள்.  நாங்களும் மூன்று மாத பள்ளி கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் கட்டிவிட்டோம்.

இனி வரும் மாதங்களில் கட்டவேண்டிய கட்டணத்தை நாங்கள் அங்கு சென்று வரைவு காசோலை மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் அதை எங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துவிட்டு, மாதாமாதம் அந்த பள்ளிக்கு பள்ளி கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் காசோலை மூலம் அனுப்பவேண்டும். அவ்வளவுதான். மேலும் நாங்கள் உங்கள் வங்கியிலேயே NRE கணக்கையும் தொடங்குகிறோம். என்று சொன்னார்.

எனக்கு ஒரே சந்தோஷம். வெளியில் செல்லாமலேயே ஒரு NRE கணக்கு கிடைத்திருக்கிறதே என்று. மேலும் முதல் மூன்று மாதங்களுக்கு நமக்கு வேலை இல்லை. இவர்கள் வெளி நாடு சென்றதும் பணம் அனுப்பப் போகிறார்கள். அதை அவர்கள் கணக்கில் வரவு வைத்துவிட்டு பள்ளிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவுதானே என எண்ணிக்கொண்டு, அதற்கென்ன நீங்கள் சொன்னபடி செய்து விடுகிறேன். நீங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய தொகையை எங்களுக்கு அனுப்ப சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு, எங்களுக்கும் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை பற்று பதிவு (Debit) செய்யும்படி ஒரு கடிதம் கொடுத்துவிடுங்கள்.  என்றேன்.

அவர்களும்,’ரொம்ப நன்றி. சார். என சொல்லிவிட்டு சென்றார்கள். மறு நாள் சொன்னது போலவே வந்து கடித்ததைக் கொடுத்து விட்டு NRE கணக்கு ஆரம்பிக்க விண்ணப்ப படிவத்தையும் பெற்றுக்கொண்டு சென்றார்கள்.

நானும் மகிழ்ச்சியோடு Bon Voyage என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன், நான் கஷ்டப்படப்போவது தெரியாமல்!



தொடரும்