செவ்வாய், 29 மே, 2012

Boss கள் பலவிதம்! 18


நான் தார்வார் வட்டார அலுவலகத்தில் சேர்ந்த இரண்டாம்
மாதத்திலேயே களத்தில் பணியாற்றும் SPA க்களின்
முதல் கூட்டத்தை கூட்ட RM முடிவு செய்து அதுபற்றி
சுற்றறிக்கை அனுப்பச் சொன்னார்.

திரு மோகன் அவர்கள் தார்வாரில் சேர்ந்த அன்றே SPA க்களை
சந்தித்து பேசி இருந்தாலும், அது ஒரு வழக்கமான அலுவலக
கூட்டமாக இல்லாதால், எல்லோரையும் சந்தித்து விரிவாக
உரையாடி, அவர்களுடைய பணித்திறன்களை ஆய்வு செய்ய
விரும்பியதால் அந்த கூட்டத்தை நடத்த விரும்பினார்.

எனக்கும் மாநில அரசில் பணியாற்றியபோது கூட்டத்தில்
கலந்து கொண்டு சூடுபட்ட அனுபவம் இருந்ததால், மைய
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தில் நடத்தப்படும்
கூட்டம் எப்படி இருக்கும் என அறிய ஆவலோடு காத்திருந்தேன்.

திரு மோகன் அவர்களின் நடைமுறைப் பாங்கு (Style of Functioning)
எனக்குத் தெரிந்திருந்ததால் நிச்சயம் இந்த கூட்டம்
வேறுபட்டிருக்கும் என என் மனதுக்குப் பட்டது.  

அவரது அறிவுரைப்படி அந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலோடு
(Agenda) ஜூலை (1967) மாதத்தில் நடக்க இருக்கும் கூட்டம் பற்றிய சுற்றறிக்கையை அனைத்து SPA க்களுக்கும் அனுப்பியிருந்தேன்.

கூட்டம் நடக்க இருக்கு முன்பு, திரு R.M.Arora என்ற உதவி
விதைப்பெருக்க அலுவலர் (Assistant Seed Production Officer) 
புது தில்லி தலைமையகத்திலிருந்து பணி இட மாற்றல் மூலம்
வந்து சேர்ந்தார்.

கூட்டம் நடக்க இருந்த அன்று மைசூர் (கர்நாடக)மாநிலத்தில்
பணி ஆற்றிக்கொண்டு இருந்த அனைவரும் வந்திருந்தனர்.

சரியாக 10 மணிக்கு திரு அரோரா அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அனைவரையும் வரவேற்று பேசினார்.
அந்த கூட்டத்தில் எடுத்துக்கொண்டு விவாதிக்க உள்ள விஷயம்
பற்றி அவர் சொன்னதும் திரு மோகன் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசும்போது அந்த கூட்டத்தில் தான் மட்டும் பேசிக்கொண்டு
இருக்கப் போவதில்லை என்றும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த தலைப்புக்கள் பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்க
வேண்டும் என்றும் நிறுவனத்தின் குறிக்கோளை (Mission)
நிறைவேற்றுவதில் ஏதேனும் சிரமம் இருக்குமானால் அதை
தயங்காது தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அந்த கூட்டம் ஒவ்வொருவரும் தங்களது பணியை
எடை போட்டுக் கொள்ளக்கூடிய, சுய பரிசோதனை செய்யக்கூடிய
வாய்ப்பு என்பதால் தயங்காமல் எல்லோரும் கலந்துரையாடலில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

என்னிடமும் சபாபதி. நீங்களும் களத்தில் பணி ஆற்றியவர்
ஆதலால், உங்கள் கருத்துக்ளையும் தாராளமாக இங்கே
சொல்லலாம்.என்றார்.

(அந்த கூட்டத்தையும், மன்னார்குடியில் அந்த DAOநடத்திய
கூட்டத்தையும் அப்போது என்னால் ஒப்பீடு செய்யாமல் இருக்கமுடியவில்லை)

RM ன் தோழமையான பேச்சைக்கேட்டதும் அனைவரும்
தங்களது பணிகள் பற்றியும், அதில் ஏற்படும் சிரமங்கள்
பற்றியும் விவரமாக,தைரியமாக எடுத்து சொன்னார்கள்.

(தேசிய விதை கழகத்தின் பணி பற்றி விரிவாக
நினைவோட்டம்தொடரில் எழுத இருக்கிறேன்.)

ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறியதால் கூட்டம்
மதிய உணவுக்குப் பின்னும் தொடர்ந்தது.

அனைவருடைய கருத்துக்களையும் சிரமங்களையும்
பொறுமையோடு கேட்ட திரு மோகன் அவர்கள், அவைகளை குறித்துக்கொண்டு ஆவன செய்வதாக உறுதி கூறினார். நன்றாக பணியாற்றியவர்களை பாராட்டியும், பணியில் சுணக்கமாய் இருந்தவர்களை அதுதான் முதல் தடவை என்பதால் இன்னொரு
வாய்ப்பு தருவதாகவும், அதே நிலை தொடர்ந்தால் தான்
கடுமையாக நடக்கவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

மாலை தேநீர் இடைவேளைக்குப் பின், கணக்கு அலுவலர்
(Accounts Officer) வந்து ஒவ்வொரு SPA யிடமும் நிலுவையில்
உள்ள ஆய்வுக் கட்டணம்பற்றி சொல்லி  அவைகளின்
அப்போதைய நிலை என்ன என்பது பற்றி கேட்டு அறிந்தார்.  

(வீரிய விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள்
நிலங்களை NSC ஆய்வு செய்வதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலை (Bank’s Demand Draft)  மூலம் செலுத்தவேண்டும். அவைகளை அந்த வயல்களை ஆய்வு செய்யும் SPA கள்தான்
பெற்று, வட்டார அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.)

மாலை 7 மணிக்கு கணக்கு அலுவலர் தன் பணியை முடித்ததும்
கூட்டம் முடிவடைந்தது என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்
திரு மோகன் அவர்கள் உங்கள் அனைவருக்கும் மதியம் சரியான உணவைத்தர இயலவில்லை. அதனால் இன்று இரவு உங்களுக்கு
நான் இரவு விருந்து தர இருக்கிறேன். எனவே எல்லோரும் இரவு
உணவு சாப்பிட ஹூப்ளி செல்கிறோம். எல்லோரும் என்னோடு
வாருங்கள்.என்று கூறி 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
ஹுப்ளிக்கு இரண்டு ஜீப்புகளில் எல்லாரையும் அழைத்துக்
கொண்டுசென்றார்.  


தொடரும்

வெள்ளி, 25 மே, 2012

Boss கள் பலவிதம்! 17


ஒரு நாள் காலை 9 மணிக்கு நான் அலுவலகத்தில் இருந்தபோது,
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவரோடு ஒரு
இளைஞனும் எனது அறைக்கு வந்து வட்டார மேலாளரைப்
பார்க்கவேண்டும் என்றனர்.

என்ன விஷயம்?’என விசாரித்தபோது அவர்கள் ஆந்திராவிலிருந்து வருவதாகவும் அந்த இளைஞனரின் பெயர் ராஜா ராவ் என்றும்
உடன் வந்திருப்பவர் அவரது தந்தையென்றும், அவர் ஆந்திராவில் வட்டாட்சியராக (Tashildar) இருப்பதாகவும் சொன்னார்கள்.

திரு ராஜா ராவ் SPA ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, எங்கள் (தார்வார்)
வட்டார அலுவலகத்தில் சேரச் சொல்லி பணி நியமன ஆணை
வந்ததால், பணியில் சேர வந்திருப்பதாகவும், அதனால் RM ஐ பார்க்கவிரும்புவதாகவும் கூறினார்கள்.

நான் வழக்கம்போல் RM ஐ உள் தொலைபேசியில் தொடர்புகொண்டு,
புதிதாய் ஒருவர் SPA ஆக சேர வந்திருக்கிறார். தங்களைப்பார்க்க அனுப்பட்டுமா?’ என்று கேட்டபோது, அவரை அழைத்துக்கொண்டு
வருமாறு என்னைப் பணித்தார்.

நான் திரு ராஜா ராவையும் அவரது தந்தையையும் அழைத்துக்
கொண்டு RM அறைக்கு சென்றேன். அப்போது அவர் அவர்கள்
இருவரையும் பார்த்துவிட்டு, என்னிடம்,’என்ன ஒருவர் தான்
SPA ஆக சேர வந்திருக்கிறார் என்றீர்கள். இருவர்
வந்திருக்கிறார்களே?’ எனக்கேட்டுவிட்டு, திரு ராஜா ராவின்
தந்தையிடம், ‘நீங்களுமா SPA ஆக சேர வந்திருக்கிறீர்கள்?’
எனக் கேட்டார்.

அவரது கேள்வியில் வியப்பு இருந்ததா அல்லது கேலி
இருந்ததா எனக்கு எனத்தெரியவில்லை.

உடனே அவர், ‘இல்லை.இல்லை.நான் இவருடைய தந்தை.
ஆந்திராவில் வட்டாட்சியராக இருக்கிறேன். எனது மகனைக்
இங்கு கொண்டு வந்து விட வந்திருக்கிறேன். என்றார்.

உடனே திரு மோகன் அவர்கள், திரு ராஜா ராவிடம் ‘ஏன்.உங்களால்
தனியாக இங்கு வரத் தெரியாதா?’ எனக் கேட்டுவிட்டு, ‘நல்லவேளை.
இப்போது வந்தீர்கள். இன்னும் சற்று பொறுத்து வந்திருந்தால்
என்னைப் பார்த்திருக்க இயலாது. நான் வெளியே பண்ணை 
ஆய்வுக்கு சென்றிருப்பேன்.’ எனக்கூறிவிட்டு, திரு ராஜாராவின்
தந்தையிடம் ‘சார். வந்ததுதான் வந்தீர்கள். நீங்களும் என்னோடு 
ஆய்வுக்கு வாருங்களேன்.வந்தால் உங்கள் மகனின் பணி 
எத்தகையது என நீங்கள் தெரிந்துகொண்ட மாதிரி இருக்கும்.’ 
என்றார்.


அவரும். சந்தோஷமாக,‘சரி. என்றதும், தனது ஜீப்பில் அவரையும்
திரு ராஜா ராவையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.
கிளம்பும்போது ’ஹாவேரி (Haveri) வரை செல்வதாகக் கூறிவிட்டு
சென்றார்.

ஹாவேரி என்பது தார்வாரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர்
தூரத்தில் இருந்ததால், பண்ணைகளைப் பார்வையிட்டு அவர்கள்
திரும்பி வர நேரமாகலாம் என நினைத்துக்கொண்டேன்.

நான் நினைத்தது போல் மதியம்  சுமார் 3 மணிக்குத்தான்
அவர்கள் திரும்பினார்கள்.திரு மோகன் அவர்கள் எப்போதும்
போல் உற்சாகமாகத்தான் இருந்தார். ஆனால் திரு ராஜா ராவும்
அவரின் தந்தையும், களைப்புடன் ஜீப்பில் இருந்து இறங்கி
நடக்கமுடியாமல் நடந்து வந்தனர். திரு ராஜா ராவின் தந்தையின்
முகமோ ஏன் இங்கு வந்து இவரிடம் மாட்டிக்கொண்டோம் 
எப்போது இங்கிருந்து தப்பிக்கலாம் என்பதுபோல் இருந்தது.

உள்ளே வந்ததும், திரு மோகன் அவர்கள் திரு மானே 
வைக் கூப்பிட்டு அருகில் இருந்த உணவகத்திலிருந்து மூவருக்கும்
மசாலா தோசை கொண்டுவர சொன்னார். (திரு மானே தார்வார் அலுவகத்தில் இருந்த ஊழியர்.இவர் தான் என்னை முதன் முதல் அலுவலகத்திற்கு அழைத்து சென்றவர்.)

அப்போதுதான் தெரிந்தது, காலையில் அலுவலகத்தில் இருந்து 
புறப்பட்டு ஹாவேரி போய் பண்ணைகளை ஆய்வு செய்து விட்டு திரும்பும் வரை அவர்கள் ஒன்றுமே சாப்பிடவில்லை என்று.
அந்த நேரத்தில் சாப்பாடு இருக்காது என்பதால்தான் தோசை 
கொண்டு வர சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் திரு மோகன், ராஜா ராவின் தந்தையிடம்
எப்படி இருந்தது இந்த ஆய்வுப்பயணம்? இதுபோல் பல நாட்கள் 
உங்கள் மகன் ஆய்வுக்காக பயணிக்க வேண்டி இருக்கும் அதுவும் 
அரசுப் பேருந்தில்! சில சமயம் இன்றுபோல் மதிய உணவை 
தியாகம் கூட செய்யவேண்டி இருக்கும். என்ன நீங்களும் உங்கள் மகனுக்கு துணையாக கூட இருக்க விரும்புகிறீர்களா?’ என்றார்.

அவர் உடனே,’இல்லை இல்லை. நான் இன்றிரவே ஊருக்கு
கிளம்புகிறேன். என் மகன் முதன்முதல் எங்கள் மாநிலத்தைவிட்டு வருகிறானே என்றுதான் நான் கூட வந்தேன். மற்றபடி இங்கேயே
இருக்க அல்ல. மேலும் நான் இரண்டு நாட்கள் விடுப்பில் தான் வந்திருக்கிறேன்.என்று சொன்னார்.

அவர் சொன்ன பதிலின்,வேகம், எங்கே மேலும் ஒரு நாள் இங்கு
இருந்தால் இவர் மறுபடியும் வேறு எங்காவது கூட்டிச் சென்று
பட்டினி போட்டுவிடுவாரோ என்னவோ அதற்குள் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்பதுபோல் இருந்தது!

அதற்கு திரு மோகன் சொன்னார்.உங்கள் மகன் எந்த சூழ்நிலையில் பணிபுரியவேண்டி இருக்கும் என்பதை காண்பிப்பதற்காகவே
உங்களை என்னுடன் அழைத்து சென்றேன். அதனால் உங்களுக்கு
ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.

மகனே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீங்கள் கூட செல்லலாம். படித்து முடித்த பின்னும் அவரை தனியாக
விடவில்லை என்றால் அவருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும்
எவ்வாறு வரும்? எவ்வளவு காலம் தான் நீங்கள் அவர் கூடவே இருக்கமுடியும்?

இங்கே உங்கள் மகனைப் போன்று நிறைய பேர் பல மாநிலங்களில்
இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் தனியாகத்தான் வந்தார்கள்.
எனவே தைரியமாகத் திரும்பிச் செல்லுங்கள் உங்கள் மகன்
எங்களுடன் சந்தோஷமாக இருப்பார்.என்று சொன்னார்.

அவரும் அவரிடம் சரி என சொல்லிவிட்டு கிளம்பும்போது என்னிடம் சொன்னார் இந்த மாதிரி மேலதிகாரியை இப்போதுதான் பார்க்கிறேன்.
நீங்களெல்லாம் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்.என்று.

திரு மோகன் அவர்கள் எப்படி எங்களுடைய திறன் ஆய்வுக்
கூட்டத்தை (Review Meeting) நடத்தினார் என்பது அடுத்த பதிவில்.

தொடரும்

செவ்வாய், 22 மே, 2012

Boss கள் பல விதம்! 16


அந்த நண்பர் சொன்னதைக் கேட்டவுடன்  நான் வாய் விட்டு
சிரித்ததன் காரணம் இதுதான்.

அந்த நண்பர் காலையில் ‘Tonga’ வில் வந்து பெட்டி
படுக்கைகளோடு இறங்கியபோது  அலுவலகத்திற்கு வெளியே
இருந்த பெஞ்சில்’திரு மோகன் அமர்ந்திருந்திருக்கிறார்.

(Tonga என்பது இரண்டு பக்கமும் உட்காரக்கூடிய குதிரை வண்டி.
அதைப் பார்த்திராதவர்களுக்காக அதனுடைய படம் கீழே –
நன்றி கூகிளுக்கு!)





அவரைப் பார்த்ததும் திரு மோகன், அவர் யார் என்று
விசாரித்தபோது அந்த நண்பர் தன் பெயர் R.D.Ram என்றும்
தான்உத்திர பிரதேசத்திலிருந்து, NSC யில் சேர வந்திருப்பதைக்
கூறிவிட்டு திரு மோகனைப்பார்த்து, நீங்கள் யார்?’ என்று கேட்டு
இருக்கிறார்.

அவரிடம் திரு மோகன் தான் யார் என்று சொல்லாமல்,
தானும் ஒரு SPA தான் என்று இந்தியில் சொல்லியிருக்கிறார்.

வந்த நண்பருக்கு ஒரே சந்தோஷம். வந்த இடத்தில் நம் மொழி
பேசும் நபர் இருக்கிறாரே என்ற குஷியில், திரு மோகனிடம்
கேட்டிருக்கிறார்.இங்கு இருக்கும் Regional Manager எப்படி?’
நல்லவரா? என்று.

அதற்கு திரு மோகன் இந்த RM சுத்த மோசமான ஆள். என்று
சொன்னதும், திரு ராமும், ஆமாம். புது தில்லியில் கூட நான்
கிளம்புபோது அப்படித்தான் சொன்னார்கள். என்று
சொல்லியிருக்கிறார்.

உடனே மோகன் வேறு என்ன சொன்னார்கள்?’ என்று கேட்டபோது
பணியில் சேர வந்த திரு ராம்,‘நான் தில்லியிலிருந்து கிளம்பு முன்
தார்வருக்கு எப்படி செல்வது எனக் கேட்பதற்காக தலைமை
அலுவலகம் சென்று இருந்தேன்.

அங்கு இருந்த ஒருவர்,‘தார்வாருக்கா செல்கிறீர்கள்? உங்கள்
துரதிர்ஷ்டம் அங்கு செல்கிறீர்கள். அங்கிருக்கும் RM சரியானவர்
இல்லை. சரியான சிடுமூஞ்சி. தான் தான் நிறுவனத்திற்காக
ஏதோ உண்மையாக வேலை செய்வது போலவும் மற்றவர்கள் அனைவரும்வேலை செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள் என நினைப்பவர்.அதனால் தன் கீழ் வேலை பார்க்கும் எல்லோரையும் எந்தநேரமும்வேலை செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்.
அவரிடம் நல்ல பெயர் வாங்குவது கடினம்.எதற்கும்
ஜாக்கிரதையாக இருங்கள். என்றார்.அதனால் வரும்போதே பயந்துகொண்டுதான் வந்திருக்கிறேன்.உங்களைப் பார்த்ததும்
தான் கொஞ்சம் நிம்மதி. என்றுசொல்லியிருக்கிறார்.

அதற்கு திரு மோகன், கவலை வேண்டாம்.நான் இருக்கிறேன்
அல்லவாபார்த்துக் கொள்ளலாம். என்று சொல்லிவிட்டு,’காலை
சிற்றுண்டி சாப்பிடவில்லையென்றால் அருகில் உள்ள உணவு
விடுதியில் சாப்பிட்டு வாருங்கள். எனக் கூறி இருக்கிறார்.

வெளியில் போய் சாப்பிட்டு வந்து என்னை பார்த்துவிட்டு
RM ஐ பார்க்கப்போனதும், அவர்தான் காலையில் தன்னிடம்
SPA என்று சொன்னவர் என்பது தெரிந்ததும்,திரு ராமுக்கு
உதறல் எடுத்திருக்கிறது.

யாரெனத்தெரியாமல் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளை
அவரிடமே சொல்லிவிட்டோமே என்ற பயத்தில்.சார். நீங்கள் தான்
RM எனத்தெரியாமல், ஏதேதோ சொல்லிவிட்டேன்.தயை செய்து மன்னியுங்கள். என்று சொன்னதும், திரு மோகன், உங்கள் பேரில்
எந்த குற்றமும் இல்லை. யாரோ சொன்னதைத்தானே
சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்பற்றி எப்படி சொல்வார்கள்
என எனக்குத்தெரியும்.அவர்கள் சொன்னதில் பாதி சரி. நான்
எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யவேண்டும் என
எதிர்பார்ப்பவன். அவ்வளவுதான். நீங்கள் ஒழுங்காக வேலை
செய்தால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே நீங்கள் என்னிடம் சொன்னதை மறந்து விட்டு போய் சபாபதியைப் பாருங்கள். அவர்
நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வார். 
என்றிருக்கிறார்.

இதை அவர் வந்து சொன்னதும் நான் என்னை மறந்து சிரித்தேன்.
நான் சிரிப்பதைப் பார்த்து அவர், நானோ வந்த முதல் நாளே
இவ்வாறு சொல்லி RM ன் கோபத்துக்கு ஆளாகிவிட்டோமே என வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சிரிக்கிறீர்களே?’ 
என்றார்.

நான் அவரிடம்.. கவலை வேண்டாம் ராம்.நமது RM 
கண்டிப்பானவரேதவிர பிறரை துன்புறுத்தி இரசிப்பவர் (Sadist) 
அல்லர். நாம் நமதுவேலையை சரியாக செய்தாலே போதும்.
நன்றாக வேலைசெய்பவர்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக
இருப்பார். என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

பிறகு நான் தில்லியிலிருந்து மாற்றலாகி வந்திருந்த நண்பர்  அரங்கநாதனிடம் ஏன். தலைமையகத்தில் நமது RM பற்றி
தவறானஎண்ணம் கொண்டு உள்ளார்கள்?” என கேட்டதற்கு
அவர் சொன்னார்.திரு மோகன் எதையுமே வெளிப்படையாக
பேசுபவர்.அவருக்குமேல் உள்ள பொது மேலாளரிடம் கூட
மனதில் பட்டதைசொல்லிவிடுவார்.அதனால் தான் அவர்
unpopular ஆகஇருக்கிறார். அவருடைய வெளிப்படையான
பேச்சுதான்அவருக்கு எதிரியும் கூட. என்றார்.

.இதேபோல் நடந்த இன்னொரு நிகழ்வும் திரு மோகன் அவர்கள்
மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதை உறுதிப்படுத்தியது.


தொடரும்

சனி, 19 மே, 2012

Boss கள் பல விதம்! 15


புதிய அலுவலக கட்டிடத்தில் பணிகளைத் தொடங்கிய அன்று
காலை  நான் எனது அறைக்கு வந்தபோது அங்கு மூலையில்
ஒரு Hold All ம், பெட்டியும் இருக்கக் கண்டேன்.

அவை யாருடையவை என விசாரித்தபோது, புதிதாய் பணியில்
சேர ஒருவர் வந்திருப்பதாகவும்,காலை உணவு அருந்த வெளியே சென்றிருப்பதாகவும் சொன்னார்கள்.

சரியாக 9 மணிக்கு எனது அறைக்கு ஒருவர் வந்தார்.அவரைப்
பார்த்ததுமே அவர் வட இந்தியாவிலிருந்து வருகிறார்  எனத்தெரிந்துகொண்டேன்.

அவர் இந்தியில் பேச ஆரம்பிக்கு முன்னரே நான் அவரை
வரவேற்று உட்காரவைத்துப் பின் ஆங்கிலத்தில்,
'என்ன வேண்டும்? யாரைப்பார்க்க வேண்டும்?என்று கேட்டேன்.

அவர், தான் புதிதாக வேலையில் அமர்த்தப்பட்ட Seed Production
Assistant (SPA) என்றும் தார்வார் வட்டார அலுவலகத்தில் சேர
தனக்கு ஆணை வந்திருப்பதாகவும் சொல்லி, எங்கள் தலைமை
அலுவலகத்தால் அவருக்கு அனுப்பட்ட அஞ்சலையும்
காண்பித்தார்.

அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் உத்திர
பிரதேசத்தைசேர்ந்தவர் என்றும் தெரிந்துகொண்டேன்.அவர்
காலையில் தான் வந்ததாகவும் நேரே அலுவலகம் வந்து பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு வெளியே சென்று வந்ததாகவும் 
கூறினார்.

நான் அவரிடம் RM ஐ (வட்டார மேலாளரை) பார்த்து விட்டீர்களா?’
என்றேன். திரு மோகன் அவர்கள் அந்த அலுவலகக் கட்டிடத்தின்
முதல் மாடியில் தான் தங்கியிருந்தார். ஒருவேளை அவரைப் பார்த்திருப்பாரோ என்ற யூகத்தால் அவ்வாறு கேட்டேன்.

அதற்கு அவர், இல்லை.இல்லை காலையில் ஒரு SPA ஐ த்தான்
பார்த்தேன்..என்றார்.ஒருவேளைவெளியூரிலிருந்து பணி நிமித்தம்
வந்த SPA ஐ பார்த்திருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.

சரி நீங்கள் சென்று RM ஐ பார்த்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு
உங்களது Joining Report ஐ தரலாம் என்று சொல்லிவிட்டு,
உள் தொலைபேசி (Intercom) மூலம் திரு மோகன் அவர்களிடம்,
புதிதாய் ஒருவர் SPA ஆக சேர வந்திருக்கிறார். உங்களைப்பார்க்க
வர சொல்லட்டுமா?’ என்றேன்.

அவரும்,’சரி.உள்ளே அனுப்புங்கள். என்றதும் அந்த நண்பரைப்
பார்த்துஉள்ளே உள்ள இரண்டாவது அறையில் RM இருக்கிறார்.
அவரைப் பார்த்து வாருங்கள். என்றேன்.

உள்ளே சென்ற வேகத்தில் அவர் திரும்பி வந்து, அரே. யார்!
அந்தஅறையில் ஒரு SPA தான் இருக்கிறார். RM இல்லை.என்றார்.

எனக்கு ஒரே சந்தேகம். திரு மோகன் அவர்கள் அறையில் வேறு
யார் இருக்கமுடியும் என எண்ணி,நான் அவரை அழைத்துக்
கொண்டு RM அவர்களது அறைக்கு சென்றேன்.

உள்ளே சென்றதும் திரு மோகன் அவர்கள் நிமிர்ந்து பார்த்து,
யெஸ்.சபாபதி. என்றார். என் பின்னால் இருந்த நண்பரை
சுட்டிக்காட்டி சார்.இவர்தான் புதிதாய் சேர வந்திருக்கும் 
SPA.' என்பதற்குள்,அந்தநண்பர் என்னிடம் இவர்தான் நான் 
காலையில் பார்த்த SPA.,இவரைப்போய் RM என்கிறீர்களே?’ 
என்றார்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதற்குள் திரு மோகன்
அவர்கள் சிரித்துக்கொண்டே.அரே பாய், நான் தான் மோகன்.
காலையில் சும்மா உங்களிடம் SPA என சொன்னேன். என்று சொல்லிவிட்டு.சபாபதி.இவரை காலையிலேயே நான் பார்த்துவிட்டேன்.நீங்கள் போகலாம்.இவரிடம் சிறிது நேரம்
பேசிக்கொண்டு இருந்துவிட்டு உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.
என்றார்.

அந்த நண்பரின் முகத்தில் ஆச்சரியத்தை விட பயத்தைத்தான்
அப்போது பார்த்தேன்.

ஒன்றும் புரியாமல் எனது இடத்திற்கு திரும்பி வந்து அமர்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் வந்தபோது முகம்
பேயறைந்ததுபோல்இருந்தது. என்னவென்று விசாரித்தபோது
அவர் சொன்னதைக்கேட்டவுடன்  வாய் விட்டு சிரித்தேன்.

தொடரும்


புதன், 16 மே, 2012

Boss கள் பல விதம்! 14


தொலை பேசியை எடுத்து, வணக்கம்சார்’, என்றதும் திரு மோகன்
அவர்கள் வணக்கம்.சபாபதி.எவ்வாறு இருக்கிறீர்கள்?என்று கேட்டுவிட்டு,
புதிதாய் இருவரை அங்கு பணி அமர்த்தியது பற்றிய நான் அனுப்பிய
அஞ்சல் வந்ததா?’ எனக்கேட்டார்.
 
இன்றைக்குத்தான் வந்தது சார். என்றதும், நல்லது.அவர்கள் இன்று
அல்லது நாளை அங்கு வந்து பணியில் சேரக்கூடும்.நீங்கள் அவர்களுக்கு
தற்போது உங்களுக்கு தரப்பட்டிருக்கும் பகுதியை (Area) பிரித்துக்
கொடுத்துவிட்டு, அவர்களை அழைத்து சென்று வீரிய விதைகள்
(Hybrid Seeds) உற்பத்திசெய்கின்ற விவசாயிகளை அறிமுகம் செய்யுங்கள்.
பின்பு இரண்டொரு நாட்களில் நீங்கள் செய்கின்ற பணிகளை எல்லாம்
அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு எவ்வளவு சீக்கிரம்
வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் தார்வாருக்கு வரவும்.உங்களுக்கு
இங்கு வேறு பணிகள் காத்திருக்கின்றன. என்றார்.

உடனே நான், சார்.அப்படியானால்?’ என்று இழுத்தபோது, அவர்,
இன்னுமா புரியவில்லை. உங்களை எனது அலுவலகத்திற்கு இடமாற்றம்
செய்து என் தொழில்நுட்ப நேர்முக உதவியாளாராக
(Personal Assistant(Technical)) போட்டிருக்கிறேன். அதற்கான ஆணை உங்களுக்கு அனுப்பப்படுகிறதுசந்தோஷம் தானே. All the Best.’ எனக்கூறி
தொலைபேசியைவைத்து விட்டார்.

எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. தார்வாருக்கு மாற்றல்
கிடைத்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், வட்டார அலுவலகத்தில்
வட்டார மேலாளரின் கீழ் எவ்வாறு பணியாற்றப் போகிறேனோ என்ற
கவலையும் ஏற்பட்டது.

கதக் கில் மொழி தெரியாமல், தனிமையில் (அது ஒரு கொடுமை)
இருந்ததால், எப்போது தமிழ் பேசும் நண்பர்களைப் பார்ப்போம் என்ற
ஆவல் இருந்தது உண்மை.

(கதக் கில் எனது அனுபவம் பற்றியும், கன்னடம் கற்றுக்கொண்டது
பற்றியும் நினைவோட்டம் தொடரில் விரிவாக எழுதுவேன்)

அப்போதுதான், தில்லி தலைமை அலுவலகத்திலிருந்து கணக்கு மற்றும்
நிர்வாகத் துறையைச்சேர்ந்த அரங்கநாதன், இராமமூர்த்தி என்கிற
தமிழர்கள் மாற்றலாகி தார்வார் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக
கேள்விப்பட்டிருந்ததால், அங்கு சென்றால் அவர்களோடு இருக்கலாம்
என்பதால் மகிழ்ச்சி.

NSC யில் பணியில் சேர்ந்தவுடன், நேரடியாக களத்தில் பணியாற்ற
வாய்ப்பு கிடைத்ததால், அலுவலகத்தில் எவ்வாறு பணிபுரிவது எனக்குத்
தெரியாது.அதனால் வட்டார மேலாளரின் நேரடிப் பார்வையில் எப்படி பணியாற்றப்போகிறேனோ என்பதால் ஒரு இனம் புரியாத கவலை.

மறுநாளே முதலில் திரு நேமிச்சந்த் என்பவர் வந்து சேர்ந்தார், அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். படித்தது ஆக்ரா பல்கலைக்கழகத்தில்.
வேளாண்மை பட்டப் படிப்பு.ஆனால் அவருக்கு என்னுடன் ஆங்கிலத்தில்
பேசுவது கஷ்டமாயிருந்தது. (அங்கு எல்லாம் இந்தியிலேயே பாடம்
சொல்லிக் கொடுப்பார்களாம்!) மேலும் எனது ஆங்கிலத்தை
புரிந்துகொள்ளவும் சிரமப்பட்டார். எனக்கோ அவரது இந்தி புரியவில்லை.

நல்ல வேளையாக அதற்கு அடுத்த நாள் திரு சுப்ரமணியன் வந்து
சேர்ந்தார். அவர் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர். படித்தது
பெங்களூரிலிருந்த வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில். கன்னடம்
தாய் மொழியாய் இருந்தாலும் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசினார்.
மேலும் அவருக்கு இந்தி தெரிந்து இருந்ததால் திரு நேமிச்சந்துக்கும்
எனக்கும் இடையே ஒரு மொழி பெயர்ப்பாளர் போல் இருந்தார்.நான்
ஆங்கிலத்தில் சொல்வதை அவருக்கு இந்தியில் சொல்லி புரிய வைத்தார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அவர்கள் இருவரையும் எனது
Area வுக்கு கீழ் இருந்த Gadag, Shiragatti, Mundargi, Ron, Annigeri ஆகிய
வட்டங்களில் (Taluks), வீரிய சோளம்(Hybrid Sorghum), வீரிய மக்கா சோளம்
(Hybrid Maize), வீரிய கம்பு (Hybrid Pearl Millet) விதைகளை உற்பத்தி செய்ய,
ஒப்பந்தம் போட்டிருந்த விவசாயிகளிடம் அழைத்து சென்று 
அறிமுகப்படுத்தினேன்.

பின் எனது அலுவலகத்தோடு இணைக்கப்பட்டு இருந்த விதை
பக்குவப்படுத்தும் மையத்தில் (Seed Processing  Centre) செய்யக்கூடிய
பணிகளையும் விரிவாக எடுத்துச்சொல்லி விளக்கிவிட்டு, அங்கிருந்து
பொறுப்பில் விடுபட்டு தார்வார் வந்து சேர்ந்தேன்.

நான் தார்வார் அலுவலகத்தில் சேர்ந்த அன்று, வட்டார மேலாளர்
கூப்பிட்டு, என்னை வரவேற்று வாழ்த்திவிட்டு, நான் செய்யவேண்டிய
பணிகள் பற்றி விளக்கினார்.

கோயம்புத்தூர் மற்றும் மைசூர் மாநிலத்தில் உள்ள எங்கள் விதை
பெருக்க உதவியாளர் கள் (Seed Production Assistants) வீரிய விதைப்
பெருக்கம் செய்யும் வயல்களைப் பார்வையிட்டு அவர்களது
அறிக்கைகளை புது தில்லியில்இருந்த தலைமை அலுவலகத்திற்கு
அதுவரை அனுப்பிக்கொண்டுஇருந்தார்கள். அவைகள் அங்கு ஆய்வு
செய்யப்பட்டு, அவைகளின் மேல் எடுக்கவேண்டிய  நடவடிக்கையை
அவர்கள் எடுத்து வந்தார்கள்.

(அது பற்றிய விவரம் பின் எழுதுவேன்)

அந்த பணி வட்டார அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டதால், அந்த ஆய்வு அறிக்கைகளை ஆய்ந்து அவைகளின் தரம் பற்றியும், அதில் உள்ள
குறைகள் பற்றியும் விரிவான அறிக்கையை வட்டார மேலாளரிடம்
தருவதும்,அதுஇல்லாமல் விவசாயிகளிடமிருந்து வரும் குறைகள் பற்றி  
விசாரித்துஉடனுக்குடன் அவர்களது குறைகளை போக்க நடவடிக்கை
எடுப்பதும், தேவைப்பட்டால் அந்த இடங்களுக்கு நேரே சென்று
விசாரித்து விரிவான அறிக்கையை வட்டார மேலாளருக்கு தருவதும்
எனது முக்கிய பணிகள் என்று சொன்னார். 

நான் எனது பணிகளைத் தொடங்கு முன் வேறொரு வேலை எனக்காக
காத்திருந்தது. எங்களது அலுவலகம் இடப் பற்றாக்குறையால்
சப்தாபூரிலிருந்து (Saptapur) மாலமட்டி (Malamaddi) என்ற இடத்திற்கு மாற
இருந்ததால் எனது பணி சம்பந்தப்பட்ட கோப்புகளை உதவியாளர் மூலம்
புதிய இடத்திற்கு எடுத்து செல்ல ஆவன செய்ய வேண்டி இருந்ததுதான்
அது.

புதிய அலுவலக கட்டிடத்தில் பணிகளைத் தொடங்கிய அன்று காலை
9 மணிக்கு எனது அறைக்கு ஒருவர் வந்தார்.


தொடரும்