திங்கள், 7 மே, 2012

Boss கள் பல விதம்! 11


நான் தார்வாரில் தேசிய விதைக் கழத்தில் (National Seeds Corporation Ltd.,) பணியில் சேருமுன்பே (24-12-1966) அங்கிருந்த வட்டார மேலாளர்
திரு ராணா என்பவர் மாற்றலாகி புனேவுக்கு போய்விட்டார்.

புதிய வட்டார மேலாளர் வரும் வரை அந்த அலுவலகத்தில் இருந்த
திரு  V.S.Khare என்ற விதைப் பெருக்க உதவியாளர்தான் (Seed Production
Assistant) அவரது பணியைப் பார்த்து வந்தார்.

அவரிடம் தான் நான்பணியில் சேரும் கடிதத்தைக் கொடுத்தேன்.
முதலில் அவர் என்னை ஹாவேரி (Haveri) என்ற ஊரில் பணி புரிய சொன்னார். பின் கதக் (Gadag) என்ற ஊருக்கு மாற்றிவிட்டார்.
(அது பற்றி பின்னர் எழுதுவேன்)

கதக் கில் இருக்கும்போது ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்க,
மாதத்தில் முதல் தேதி அன்,று தார்வாருக்கு செல்வேன்.
என்னைப்போல் பெல்காம், பீஜப்பூர், சாந்தூர், கதக், தாவணகெரே பெங்களூர் போன்ற ஊர்களில் பணிபுரிந்தவர்களும் அன்று
வருவார்கள்.

அப்படி செல்லும்போது, ஒரு மாதம் முதல் நாள் இரவே தார்வாருக்கு சென்றுவிட்டேன். இரவு தங்க அறை கிடைக்காததால் நேரே அலுவலகத்திற்கே சென்று இரவு தங்கிவிட்டேன்.காலையில் எழுந்து
குளித்து தயாரானபோது, அலுவலகத்திற்கு வெளியே பேச்சுக்குரல்
கேட்டு வெளியே வந்தேன்.

அங்கே வாட்ட சாட்டமாக இருந்த ஒருவர், எங்கள் இரவு நேரக் காவலாளியிடம் ஏதோ இந்தியில் கேட்டுக்கொண்டிருந்தார். என்னைப்பார்த்ததும், அந்த காவலாளி என்னைக் காட்டி ஏதோ
சொன்னார். உடனே அந்த புதிய நபர் என்னிடம் வந்து இந்தியில்
ஏதோ கேட்டார்.

அதற்கு நான் ஆங்கிலத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதும்,
உடனே அவர் ஆங்கிலத்தில், ‘என் பெயர் மோகன்,நானும் இந்த நிறுவனத்தில்தான் வேலை செய்கிறேன்.என்றார். உடனே அவரை, ‘வாருங்கள். உள்ளே சென்று பேசுவோம். என அழைத்து சென்றேன்.

உள்ளே சென்றதும், அவர் என்னிடம் நீங்கள் எப்போது NSC யில்
சேர்ந்தீர்கள்? Madras State ஐ சேர்ந்தவர் தானே?’ என்றுவிசாரித்தார்.
நான் இந்தி தெரியாது என்றதும் நான் இந்தி மொழி பேசாத
Madras State ஐ சேர்ந்தவன் என்று புரிந்துகொண்டார் போலும்.
(அப்போது (1967) நமது மாநிலத்திற்கு தமிழ் நாடு எனப் பெயர்
மாற்றம் செய்யப்படவில்லை.)

பேசிக்கொண்டு இருக்கும்போதே, நான் எதற்காக வந்திருக்கிறேன்,
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்க எல்லோரும் வருவார்களா
போன்ற விஷயங்களையும் மற்றும் எனது பணி பற்றிய
விஷயங்களையும் கேட்டார். மேலும் எப்போது Officer in Charge
வருவார் என்றும் கேட்டுத்தெரிந்துகொண்டார்.

நானும் இவர் நமது நிறுவனத்தை சேர்ந்தவர் தானே என்று எனக்குத் தெரிந்ததை சொன்னேன். பேசிக்கொண்டுஇருக்கும்போது
கோயம்புத்தூரில் நமது நிறுவனத்தின் கிளை உள்ளதே.நீங்கள் அங்கு மாற்றலாகிப்போக விரும்பவில்லையா?’ எனக்கேட்டார்.

அதற்கு நான். இல்லை. இல்லை.இங்கே நான் சந்தோஷமாக
இருக்கிறேன். தற்சமயம் அங்கு செல்ல விருப்பம் இல்லை. எனக்
கூறினேன்.

அதற்குள் திரு Khare வந்துவிடவே, அவர்தான் Officer in Charge என்று சொன்னேன். உடனே எழுந்து ,’ஓ.கே. பார்ப்போம். என்று கூறி
உள்ளே சென்றுவிட்டார்.

நான் வெளியே சென்று காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு திரும்பி
வந்த போது, மற்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்களை திரு Khare அழைப்பதாக சொன்னதும், நாங்கள் எல்லோரும் அவரது அறைக்கு சென்றோம். அங்கு போனதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

காரணம். வட்டார மேலாளர் இருக்கையில் திரு மோகன் அமர்ந்திருந்ததுதான். திரு Khare எங்களிடம் 'இவர்தான் நமது புதிய
வட்டார மேலாளர். கோயம்புத்தூரிலிருந்து மாற்றலாகி
வந்திருக்கிறார்.பெயர் மோகன்.' எனக்கூறிவிட்டு, எங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.

எனது முறை வந்தபோது, ‘ஓ. இவரை காலையிலேயே
சந்த்தித்துவிட்டேனே. எனக்கூறிவிட்டு, என்னிடம் ஊருக்கு
திரும்புமுன் என்னை பார்த்து விட்டு போங்கள். என்றார்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கியது போன்ற பிரமை. இவர்தான்
நம்முடைய Regional Manager எனத்தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டோமே. ஏதாவது தவறாக பேசிவிட்டோமோ அதனால்தான் என்னை தனியாக
பார்க்க விரும்புகிறார் போலும் என்று எண்ணி, ஏன் தான் இங்கு வந்து
தங்கினோமோ என நினைத்துக்கொண்டு இருந்தேன்.

அதற்குள் திரு மோகன் எங்கள் அனைவரையும் பார்த்து நண்பர்களே!. உங்கள் அனைவரோடும், உங்களது பணி மற்றும் உங்களது
பிரச்சினைகள் பற்றி பேச விரும்புகிறேன். எனவே எல்லோரும்
சிறிது நேரத்திற்கு பிறகு சந்திக்கலாம். என்றார்.

சிறிது நேரம் கழித்து அவரது அறையில் கூட்டம் ஆரம்பமாகியது.

தொடரும்

8 கருத்துகள்:

 1. சரியான ஆள்தான். இதுதான் போட்டு வாங்குவதா?

  பதிலளிநீக்கு
 2. ஒரே ரென்ஸ் ஆக இருக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்று....இது சஸ்பென்ஸ் பதிவு. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விச்சு அவர்களே!

  அவர் மேல் தவறில்லை. நான் தான் அவர் யார், என விசாரிக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.என்ன நடந்தது என்பது அடுத்த பதிவுகளில்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. சரியான மேலாளர்தான்!தான் யார் என்று காட்டிக்கொள்ளாமலே இருந்திருக்கிறாரே!காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. எனக்குப் பிடித்த Boss களில் இவரும் ஒருவர்.

  பதிலளிநீக்கு
 7. திரு. மோஹன் என்பவரின் செயல், துப்பறியும் கதைபோல வித்யாசமாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது. இருப்பினும் அவரின் அணுகுமுறைகள் எனக்குப் பிடித்துள்ளது. பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு மோகன் எப்படிப்பட்டவர் என்பதை வரும் பதிவுகளில் அறிவீர்கள். எனக்குப் பிடித்த Boss களில் இவரும் ஒருவர். .

   நீக்கு