புதன், 29 டிசம்பர், 2010

நினைவோட்டம் 34

அடுத்து என் நினைவுக்கு வருபவர் எங்கள் தலைமை
ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள். மிகவும்
கண்டிப்புக்கு பெயர் போனவர்.

மாணவர்கள் நன் முறையில் படித்து வெளிவர வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்.படிப்பைத்தவிர வேறு
எதிலும் கவனம் சிதறக்கூடாது என்பது அவரது கருத்து.

பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவத்தலைவனை (School Pupil Leader)தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அப்போதெல்லாம் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள்
பிப்ரவரி மாதமே தேர்வு முடிந்து சென்று விடுவதால்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே ஒருவரை,
ஆசிரியர்களே தேர்ந்தெடுத்து வருட ஆரம்பத்தில்
காலையில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
அறிவிக்கப்படுவது வழக்கம்.

இது சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை.'தேர்தல்
நடத்தாமலே ஆசிரியர்கள் விருப்பத்துக்கு SPL ஐ
தேர்ந்தெடுக்கிறார்களே. இதை நாம் எதிர்க்கவேண்டும்’
என முடிவெடுத்தனர்.

அந்த ஆண்டு ஆரம்பத்தில் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் SPL
தேர்ந்தெடுப்பது சொன்னதும், கூட்டத்திலிருந்து எனது
வகுப்பு மாணவர் ஒருவர்(பெயரை எழுதாமல்
விடுகிறேன்)‘சார்.இந்த ஆண்டு மாணவர்களிடையே
மனுக்களை பெற்று,தேர்தல் நடத்திதான் SPL ஐ
தேர்ந்தெடுக்கவேண்டும்.நீங்களாக தேர்வு
செய்யக்கூடாது’. என சொன்னதும் தலைமை ஆசிரியர்
கோபத்துடன்‘யார் அது? வெளியே வா.’ என்றார்.

அந்த மாணவன் தைரியத்தோடு வெளியே வந்ததும்
அருகில் அழைத்து ‘பளீர்’ என அவரது கன்னத்தில்
அறை விட்டார்.அதைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும்
சப்த நாடியும் ஒடுங்கி நின்றோம்.

காரணம் அந்த மாணவன் தான் பள்ளியிலேயே
உயரமான வாட்டசாட்டமான மாணவர். அவரையே
தலைமை ஆசிரியர் அடித்துவிட்டார் என்றதும்
எங்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது.

பிறகு அவர் ‘வேண்டுமானால் நான் சொல்லும்
இருவரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள்’ எனக்கூறி
இரண்டு மாணவர்கள் பெயரைக்கூறினார்.

நாங்கள் கைதூக்கி எங்களது வாக்கை பதிவு(!)
செய்து ஒருவரை தேர்ந்தெடுத்தோம்.

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இந்த கால
கட்டத்தில் இவ்வாறு மாணவர்களை அடிக்க முடியுமா?
அப்படி அடித்தால்தான் பெற்றோர்களும் மாணவர்களும்
சும்மா இருப்பார்களா என்று.

ஆனால் அப்போது இருந்த கண்டிப்பு ஓரளவுக்கு
தேவை என்றே கருதுகிறேன். மாணவர்களுக்கு
இளம் வயதிலேயே பள்ளியில் தேர்தல் நடத்தினால்
அவர்களுக்குள்ளே பிரிவும் வெறுப்பும் வரும்
என்பதினால்தான் அவர் அவ்வாறு செய்தார்
என நினைக்கிறேன்.

ஆனால் இன்றோ பொதுத்தேர்தலையும் தோற்கடிக்கும்
அளவுக்கு பள்ளிகளில் தேர்தல் நடக்கின்றன. மாணவர்கள்
இளம் வயதிலேயே அரசியல் கற்று(!) தங்கள்
வாழ்க்கையை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பது
எனது தனிப்பட்ட கருத்து.

படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு கட்டுப்பாடு தேவை.
அது தற்சமயம் இல்லை என்பது வருத்தத்துக்கு
உரியதே.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 27 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 13

எனது ஓவியங்கள் 12 இல், என் பதிவுக்கு
வருபவர்களை 'துன்புறுத்த' விரும்பாததால்
இன்னும் ஓரிரு பதிவுகளோடு ஓவியங்கள்
பற்றிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு
மீண்டும் நினைவோட்டத்தை தொடர
எண்ணியுள்ளதாக எழுதியிருந்தேன்.

அவ்வாறே நினைவோட்டத்தை
தொடர்ந்தும் விட்டேன்.
விட்டுப்போன ஓரிரு ஓவியங்களை
இந்த பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்.


11 –01-1978 அன்று 'மாயா சித்ராலயா'
அனுப்பிய படத்தைப்பார்த்து வரைந்த படம் கீழே.

‘ மாடல்’ களைப்பார்த்து படம் வரைவதே
ஒரு தனி கலை தான். ஓவிய பயிற்சியின்
போது ஒரு மாடலைப்பார்த்து வரைய,
திரு மாயா அவர்கள் பணித்திருந்தார்.
என்னை ‘மாயா சித்ராலயா’வில் சேர
சொன்ன நண்பர் திரு ஸ்ரீதரை சுமார்
ஒரு மணி நேரம் உட்காரவைத்து
11 –01-1978 அன்று வரைந்த படம் கீழே.


சமீபத்தில் இந்த படத்தை அவருக்கு
மின் அஞ்சலில் அனுப்பி, ‘நினைவிருக்கிறதா’,
எனக்கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு
அந்த படம் வரைந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

கீழே உள்ள படமும் ஒரு
சுண்டை செடியை பார்த்து அதே
நாளில் வரைந்தது
நான் வரைந்த படங்கள் அநேகம்
இருந்தாலும்,பழைய படங்கள்
பதிவேற்றுவதை தற்சமயம் நிறுத்திவைக்கிறேன்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

நினைவோட்டம் 33

பத்தாம் வகுப்பில் எங்களது வகுப்பு ஆசிரியர் A.K என

அழைக்கப்பட்ட திரு A.கிருஷ்ணசாமி அவர்கள்.

இவர் முகத்திலும் சிரிப்பை பார்ப்பது அபூர்வம்.


ஒருதடவை பள்ளிக்கு கடலூரிலிருந்து ஆய்வாளர்

வருகிறார் என்றதும், அவர் வரும் நேரம் பாடம்

நடத்த மன்னர் அசோகன் பற்றிய ஆங்கில பாடத்தை

முதல் நாளே நடத்தி, அதில் மறுநாள் கேட்கப்போகிற

சில கேள்விகளையும் பதில்களையும் சொல்லி,

யார் யார் எந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்

என்றும் சொல்லியிருந்தார்.


அதே போல் மறுநாள் ஆய்வாளர் வந்ததும்

தலைமை ஆசிரியர் அவரை அழைத்துக்கொண்டு

நேரே எங்கள் வகுப்புக்கு வந்துவிட்டார்.

முதல் வகுப்பு ஆங்கில வகுப்பு என்பதால்

திரு A.K அவர்கள் பாடம் நடத்திக்கொண்டு

இருந்தார்.


வகுப்புக்கு வந்த ஆய்வாளர் என்ன பாடம்

நடத்துகிறீர்கள் எனக்கேட்டுவிட்டு

அமர்ந்துவிட்டார். ஆசிரியர் பாடம் நடத்தி

முடிந்தவுடன் ஏற்கனவே சொல்லிவைத்தபடி

கேள்வி கேட்க தொடங்கினார்.


முதல் இரண்டு கேள்விகளுக்கு அவர்

சொல்லிக்கொடுத்தபடி இரு மாணவர்கள்

பதில் அளித்தனர். மூன்றாவது கேள்வியை

அவர் எங்கள் வகுப்பு தோழன்

திரு ராஜசேகரன் ராஸிடம் கேட்பதாக ஏற்பாடு.

திரு A.K அவர்கள், ‘ராஸ்’என கூப்பிட்டு

கேள்வி கேட்பதற்கு முன்பே அவன் எழுந்து

பதிலை சொன்னதும் நாங்கள் எல்லோரும்

எங்களை மறந்து சிரித்துவிட்டோம்.


உடனே ஆய்வாளார் அவர்கள் ‘ஏதேது பையன்கள்

கேள்வி கேட்கு முன்பே என்ன கேட்கப்போகிறீர்கள்

எனத்தெரிந்துகொண்டு பதில் சொல்கிறார்களே.

புத்திசாலிகள்தான். பேஷ்.பேஷ்.’ என சொன்னதும்

எங்கள் ஆசிரியர் முகம் போன போக்கை பார்க்கவே

பயங்கரமாக இருந்தது. ஆய்வாளர் போனதும்

ராஸுக்கு திட்டு கிடைத்தது வேறு கதை.


(இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்

தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்த ‘பள்ளிக்கூடம்’

திரைப்படத்தில் பள்ளியில் ஆய்வாளர் வரும்போது

நடக்கின்ற சம்பவங்களை அவர் காண்பித்தபோது

எல்லா அரசுப்பள்ளிகளிலும், அன்றிலிருந்து இன்று

வரை இதுதான் நடக்கிறது போலும்

என நினைத்துக்கொண்டேன்.)


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நினைவோட்டம் 32

மற்ற ஆசிரியர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால்

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும்

சிலரை பற்றி மட்டும் எழுதலாம் என

நினைக்கிறேன்.எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் அறிவியல் சொல்லிக்கொடுத்த

ஆசிரியர் S.R.N என அன்புடன் அழைக்கப்பட்ட

திரு S.R. நடராஜன் அவர்கள்.எப்போதும்

சிரித்த முகத்தோடு, மென்மையாக பேசி

பாடம் நடத்துவார்.நாங்கள் பயப்படாத

ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் சமூகவியல் பாடம் நடத்திய

திரு P.திருஞானசம்பந்தம் அவர்கள்

மிகவும் கண்டிப்பானவர். அவர் முகத்தில்

சிரிப்பையே நாங்கள் பார்த்தது இல்லை.

எப்போதும் கடுகடு என்றே இருப்பார்.எங்கள் வகுப்பு தோழன் திரு ராஜசேகரன் ராஸ்

அவரிடம் டியூஷன் படித்து வந்தான்.

அவன் எங்களிடம் 'P.T.S சார் பள்ளியில் தான்

அப்படி இருக்கிறாரே தவிர மற்றபடி

தனியாக பேசும்போது இதமாக பேசுவார்'

என்று கூறியிருந்தாலும் எங்களுக்கு

நம்பிக்கை இருந்தது இல்லை.ஒருதடவை எனது காலாண்டு தேர்வு

விடைத்தாளை எடுத்து வைத்துக்கொண்டு

எல்லோர் முன்பும் "என்ன எழுதியிருக்கிறாய்?

ஒன்றுமே புரியவில்லை. பெரிய கலெக்டர்

என்று நினைப்பா?" என என்னை திட்டியபோது

மனதிற்குள் இவருக்காகவாவது கலெக்டர்

ஆகவேண்டும் என நினைத்ததுண்டு.


நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்???


மிகவும் சிரத்தையோடு பாடங்களை

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில்

இவரும் ஒருவர்.எங்களுக்கு தமிழ் ஆசிரியர்

திரு குப்புசாமி அய்யா என்றாலும்

மற்றொரு தமிழ்ஆசிரியரான

புலவர் ஞானப்பிரகாசம் பிள்ளை

அவர்களைப்பற்றியும் இங்கே சொல்ல

விரும்புகிறேன்.எப்போதும் வெள்ளை சட்டையும்

வேட்டியும்அணித்து வருவார்.

மிகவும் எளிமையானவர். எங்கள்

ஆசிரியர் வராதபோது எங்களுக்கு பாடம்

எடுத்திருக்கிறார். பார்த்தால் அமைதியாய்

இருப்பாரே தவிர யாரும் அவரிடம்

வாலாட்ட முடியாது. தமிழை

ஆர்ப்பாட்டமில்லாத நடையில்

எளிய முறையில் நடத்தியவர் அவர்.


அவர் மாதிரி தமிழ் ஆசிரியர்களை

தற்போது பார்க்கமுடியவில்லை

என்பது வருந்தக்கூடிய விஷயந்தான்.
நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

சனி, 18 டிசம்பர், 2010

நினைவோட்டம் 31

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில்
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களைப்பற்றி
எழுதும்போது,அடுத்து என்னால் மறக்க இயலாதவர்
எங்களது கணித ஆசான் திரு இராஜகோபால் ஆவார்கள்.


அப்போதெல்லாம் கணித வகுப்பை இரண்டாக
பிரித்திருப்பார்கள்.General mathematics என்றும்
Composite Mathematics என்றும் பிரித்திருப்பார்கள்.
அல்ஜீப்ரா, தேற்றம்(Theoram)போன்றவைகளை
Composite Mathematics ல் நடத்துவார்கள்.


பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம்(S.S.L.C) வகுப்பில்
நடத்தும் பாடங்கள் இரண்டிலிருந்தும் S.S.L.C தேர்வில்
கேள்விகள் வரும். எனவே ஒரே ஆசிரியர் நடத்தினால்
ஒரு தொடர்ச்சி இருக்கும் என்பதால்
பத்தாம் வகுப்பில் கணிதம் எடுக்கும் ஆசிரியரே
பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போதே பாடம்
நடத்துவார்.அதனால்தான் திரு இராஜகோபால்
அவர்கள் எங்களுக்கு இரண்டு ஆண்டுகள்
கணிதம்(Composite Mathematics )
சொல்லிக்கொடுத்தார்.


எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் இன்னொரு
கணித ஆசிரியர். அவர் General mathematics
எடுத்திருந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
பத்தாம் வகுப்பில் திரு இராஜகோபால் அவர்கள்
Composite Mathematics நடத்தியபோது எனது அண்ணன்
S.S.L.C மாணவர்களுக்குComposite Mathematics நடத்தினார்.


இதை எதற்காக எழுதுகிறேன் என்றால்,எனது அண்ணன்
எங்களுக்கு கணக்கு வகுப்பு எடுக்கவில்லை என்பதற்காக.
ஆனால் வீட்டில் அவர் மாணவர்களுக்கு டியூஷன்
சொல்லிக்கொடுக்கும்போது அவரிடம் படித்திருக்கிறேன்.
அது பற்றி பின் எழுதுகிறேன்.


திரு இராஜகோபால் அவர்கள் தி.மு.க அனுதாபி.
(அப்போதெல்லாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
படித்தவர்களில் பெரும்பாலோர் தி.மு.க வை
ஆதரித்தார்கள் என்பது உண்மை.) அவர் பாடம்
நடத்தும்போதே தி.மு.க பற்றி ஏதாவது சொல்லுவார்.அதோடல்லாமல் கணக்கு போடும்போது அதன்
குறியீட்டுக்களை கூட தி.மு.க தலைவர்களின்
பெயர்களின் முதல் எழுத்துக்களை உபயோகித்தே
போடுவார்.அதாவது திரு அண்ணாதுரை மற்றும்
திரு கருணாநிதி அவர்கள் பெயர்களின் முதல்
எழுத்துக்களை உபயோகித்து,(a+b)2என்பதை
(அ+க)2 என்றே எழுதுவார்.ஆனாலும் பாடங்களை மாணவர்கள் விரும்பும் விதம்
நடத்தினார். மாணவர்களிடையே நட்புரிமையுடன்
பழகினார். அதே நேரம் தவறு செய்தால் கண்டிக்கவும்
தயங்கமாட்டார்.


எனது வகுப்பு நண்பர் திரு துரைராஜ் அவர்கள்
(அப்போது 'கரிகாலன்' என்ற புனைப்பெயரில் கவிதை
எழுதுவார்.) கவிஞர் கண்ணதாசன் நடத்திவந்த
'தென்றல்' இதழில் வந்த ஒரு போட்டிக்கு அனுப்ப
எழுதிய ஒரு'வெண்பா'வை மறந்து போய் கணக்கு
நோட்டில் எழுதிவிட்டார்.


எங்கள் ஆசிரியர் அதைப்பார்த்ததும் அடிப்பாரோ என
நாங்கள் எண்ணியபோது,அவர் 'தம்பி!கவிதை
எழுத கணக்கு நோட்டை உபயோகிக்காதே.
வேறு நோட்டில்எழுதிப்பழகு' என சொல்லி
அவரை ஊக்கப்படுத்தியது எங்களுக்கெல்லாம்
ஆச்சரியத்தை தந்தது.


(தற்சமயம் முருகடிமை துரைராஜ் என்ற பெயரில்
திருவல்லிக்கேணியில் சோதிட நிலையம் நடத்திவருபவர்
எனது பள்ளி நண்பர் துரைராஜ் அவர்கள்தான்.)


அதே போல் பள்ளி இறுதியாண்டு முடிய ஒரு மாதம்
இருக்கும்போது ஒரு நாள் பாடம் நடத்தாமல் எங்கள்
அனைவரையும் ஒவ்வொருவரும் மேற்கொண்டு
என்ன படிக்கபோகிறோம் என்பதையும், என்னவாக
விரும்புகிறோம் என்பதையும் சொல்லச்சொன்னார்.


1960 களில், இன்று போல எந்த மாணவரும்
எதிர்காலத்தை பற்றி சிந்தித்தது இல்லை.
அதனால் எங்களில் அநேகம் பேர் 'தெரியவில்லை'
என்றதும், அவர் உரிமையோடு கடிந்துகொண்டு,
'நீங்கள் என்னவாக வேண்டும் என சிந்தித்தால்தான்,
அந்த இலக்கை அடைய முயற்சி செய்யமுடியும்'
எனச்சொல்லி, அப்போதே எங்களை எதிர்காலம்
பற்றி சிந்திக்க வைத்ததை இன்னும்
என்னால் மறக்க இயலவில்லை.


பள்ளியின் கடைசி நாளன்று அவரிடம் நான்
எனது 'ஆட்டோகிராப்' நோட்டில் கையொப்பம்
கேட்டபோது அவர் இவ்வாறு எழுதி
கையொப்பம் இட்டார்


"வாழ்கின்றார் முப்பத்து கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அவ்வளவு இருக்கும். அதை போக்க
நீ பாடுபடு'
என்று.


இப்போது நம் மக்கள் தொகை நூறு
கோடியைத்தாண்டிவிட்டது.
ஆனால் நம்மிடையே பேதங்கள் ?நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வியாழன், 16 டிசம்பர், 2010

துன்பம் எப்போதும் தொடர்கதை தான் !!இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை.

ஆனால் துன்பமே தொடர்ந்து வந்தால்??


'பட்ட காலிலே படும்' என்பது போல், நம்மில்

அநேகருக்கு கஷ்டங்கள் ஒன்றன் பின்

ஒன்றாக வருவது உண்டு.


அந்த துன்பங்களை எவ்வளவு பேர் மனத்திடத்தோடு

எதிர்கொள்கிறோம் என்பது கேள்விக்கு உரியதே.


இன்றைக்கு இருக்கின்ற மாறுபட்ட சூழலில், நமக்கு

ஒரு சிறு துன்பம் வந்தால் கூட நாம்

அதைத்தாங்கிக்கொள்கின்ற பக்குவம் இல்லாமல்

மன உளைச்சல் கொண்டு நம்மை வருத்திக்கொண்டு

கவலைப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை கழிக்கிறோம்.


ஆனால் ஒரு விவசாயிக்கு அடுத்தடுத்து வந்த

சோதனைகள் பற்றி, ஒரு புலவர் எழுதிய பாடலை படித்தால்

'நல்லவேளை நமக்கு இவ்வாறு சோதனை வரவில்லையே'

என மகிழ்ச்சி கொள்ளலாம்.

இந்த பாடலை நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது படித்தது.


என் நெஞ்சைத் தொட்ட பாடல் இது.


ஒரு விவசாயின் வீட்டில் பசு மாடு கன்று போட,

அதிக மழையின் காரணமாக வீடு இடிந்து விழ,

அவரது மனைவிக்கு உடல் நலம் குன்ற,

நிலத்தில் வேலை செய்யும் ஆள் இறந்து போக,

நிலத்தில் ஈரம் குறையுமுன் விதைக்கலாமே என விதை

எடுத்துப்போகுமுன், வழியில் கடன்கொடுத்தவர் மறிக்க,

அப்போது இறப்பு செய்தி கொண்டு ஒருவர் வர,

தவிர்க்கமுடியாத விருந்தினர் ஒருவர் வர,

அந்த நேரத்தில் பாம்பு கடிக்க,

அரசுக்கு தரவேண்டிய  நில வரியைக்கேட்டு அரசு ஊழியர் வர,

குருக்கள் 'தட்சிணை' கேட்டு வர,

புலவர் ஒருவர் கவிதை பாடி பரிசு கேட்க,

அந்த மனிதரின் துன்பத்தை பார்க்கவே கஷ்டம் என்கிறார்.

இதோ அந்த பாடல்!


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்ந்நோவ வடிமை சாவ

மா ஈரம் போகுதென்று விதைகொண் டோட


வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டோருவ னெதிரே செல்லத்

தள்ளவோண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்

கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள் வந்து தட்சிணைக்கு குறுக்கே நிற்க

பாவாணர் கவிதை பாடி பரிசுகேட்க

பாவி மகன் படுந் துயரம் பார்க்கொணாதே
நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மைவிட

அதிக துன்பம் அனுபவிப்பவர்களை பார்த்து

'பரவாயில்லை. நமது துன்பம் இந்த அளவோடு

இருக்கிறதே' என எண்ணி அந்த துன்பத்தை

எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.


சனி, 11 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 12

நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும்

'மாயா சித்ராலயா' வில் அஞ்சல் வழியில்

ஓவியம் முறைப்படி வரைய கற்றபோது

வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும்

இதுவரை இந்த பதிவில் பதிவேற்றம்

செய்துள்ளேன். நான் வரைந்த படங்கள்

அநேகம் இருந்தாலும் அவைகள் அனைத்தையும்

பதிவேற்றி, என் பதிவுக்கும் வருபவர்களை

'துன்புறுத்த' விரும்பாததால் இன்னும்

ஓரிரு பதிவுகளோடு இதை தற்காலிகமாக

நிறுத்திவிட்டு மீண்டும் 'நினைவோட்ட'த்தை

தொடர எண்ணியுள்ளேன்.16 -10-1977 அன்று 'மாயா சித்ராலயா'

அனுப்பிய படங்களைப்பார்த்து வரைந்த

படங்கள் கீழே.


கீழே உள்ள படம் 'Indian Ink'

உபயோகித்து 25 -10-1977

அன்று வரைந்தேன்.
வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

சனி, 4 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 11

'மாயா சித்ராலயா' வில் அஞ்சல் வழியில் ஓவியம்

முறைப்படி வரைய கற்றபோது திரு மாயா அவர்கள்,

நம் வீட்டில் உள்ள சில பொருட்களைப்பார்த்து

வரைந்து அனுப்ப சொல்லுவார். அப்படி

16 -05-1977 அன்று வரைந்த படம் கீழே.

கீழே உள்ள படத்தை அவர்கள் அனுப்பிய

படத்தைப்பார்த்து 31 -05-1977 அன்று 'Indian Ink'

மூலம் புள்ளிகள் வைத்தேவரைந்தேன்.

என்னைப்பொறுத்தவரை நன்றாக வரைந்ததாக

எண்ணியபோது திரு மாயா அவர்கள் அதில்

உள்ள குறையை சுட்டிக்காண்பித்து இருந்தார்.
கீழே உள்ள படம்,'தினமணி கதிர்'பத்திரிக்கையில்

வந்த படத்தைப்பார்த்து 01 -09-1977 அன்று

வரைந்தது.
நான் வரைந்த ஓவியங்களில்,அதிக நேரம்

எடுத்துக்கொண்டது கீழே உள்ள படத்திற்குத்தான்.

சுமார் நான்கு மணி நேரம் கஷ்டப்பட்டு

இதை வரைந்தேன். வரைந்த பின் பார்த்ததும்,

நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை

என நினைத்தேன்.

வரைந்த நாள்: 16 -10-1977
வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.