தொடர் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜனவரி, 2016

தொடரும் பயணங்கள் – தொடர் பதிவு


எனது பள்ளிப் பருவத்திலும், கல்லூரி நாட்களிலும் பின்னர் மாநில அரசின் வேளாண்மைத்துறையிலும் மற்றும் மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும், நாட்டுடைமையாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியிலும் பணி புரிந்தபோது மேற்கொண்ட பயணங்கள் அநேகம்.

திங்கள், 24 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி - தொடர் பதிவு



கனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு 
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய 
மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய 
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

புதன், 25 ஜூன், 2014

என்னைக் கேட்டால்?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? தொடர் பதிவு 


2011 ஆம் ஆண்டில் தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவுலகில் ஆரம்பமாகியபோது, அதை பதிவுலக வாசகன் என்ற முறையில் படித்து 
இரசித்தவன் நான். நம்மை யாரும் இந்த தொடர் பதிவு எழுதும் சிக்கலில் மாட்டிவிடமாட்டார்கள் என நினைத்திருந்தபோது எனது எண்ணத்தை 
பொய்யாக்கி என்னை முதன் முதல் தொடர் பதிவிட அழைத்தவர் 
திரு சென்னை பித்தன் அவர்கள். அவரது அழைப்பிற்கிணங்கி  
நண்பேண்டா என்ற தொடர் பதிவு தான் நான் எழுதிய முதல் 
தொடர் பதிவு.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

முதல் பதிவின் சந்தோசம்- தொடர் பதிவு






வலையுலகில் முதல் பதிவு வெளியிட்டபோது ஏற்பட்ட சந்தோச தருணங்களையோ அல்லது முதல் ஊக்கமளித்த கருத்துரையையோ அல்லது என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று எண்ணவைத்ததோ அது பற்றியோ எழுதவேண்டும் என்று நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னைப் பணித்திருக்கிறார்.  

அவரது வேண்டுகோளுக்கிணங்கி எழுதிய எனது தொடர் பதிவு இதோ.  

பணி நிறைவு பெற்று 2004 ஆகஸ்ட் திங்களில் சென்னைக்கு வந்து தங்கிய பிறகு இணையத்தில் உலாவர நேரம் கிடைத்ததால், அநேக பதிவர்களின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது எனக்கு G mail இல் கணக்கு இல்லாததாலும். தமிழ் எழுத்துரு (Fonts) மூலம் தட்டச்சு செய்யத் தெரியாததாலும். அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமாக எனது கருத்துக்களை,ஆங்கிலத்திலேயே தந்ததால், முகவரி இல்லாத அனானி (Anonymous)யாகவே கருதப்பட்டேன்.

எனது முதல் பின்னூட்டத்தை வலைப்பதிவில் பார்த்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பெயரில்லா பின்னூட்டம் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

பின்பு தமிழ்மணத்தில் வந்த  வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது
ஒரு பதிவைத்தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததும் மார்ச் 2008 இல் பிளாகரில் ‘Ninaiththu Parkkiren' என்று தான் வலைப்பதிவை தொடங்கினேன்.

ஆனாலும் ஓராண்டு காலம் எப்படி தமிழில் எழுதுவது, அதை எப்படி பதிவேற்றுவது எனத் தெரியாததால் யாராவது வழி காட்டுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன்.  

பின்பு அதிரை வலைப்பதிவில் மதிப்பிற்குரிய நண்பர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்களின் சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? என்ற தொடரைப் படித்ததும், தைரியமாக வலைப்பதிவின் பெயரை  நினைத்துப்பார்க்கிறேன்  என்று மாற்றி 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள் சோதனைப்பதிவு-முன்னூட்டம் என்ற எனது முதல் பதிவை வெளியிட்டேன்.

மூன்று பதிவிட்டபின் தான் தமிழ் மணத்தில் இணைக்கமுடியும் என்பதால் உடனே எனது வலைப்பதிவை இணக்கவில்லை. அதனால் எனது வலைப்பதிவை பல பேர், ஏன் யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனது வலைப்பதில் பதிவிட்டபின், திரு மஸ்தூக்கா அவர்களுக்கு அவரது தொடரைப் படித்து நான் வலைப்பதிவு தொடங்கியது குறித்து நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தேன். அதில் எனது வலைப்பதிவின் முகவரியையும் கொடுத்திருந்தேன்.

எனது பதிவைப் படித்து, எனது வலைப்பதிவின் தலைப்பை வைத்தே அவர் எழுதிய அந்த முதல் பின்னூட்டம் என்னுள் ஒரு உற்சாகத்தையும் அளவற்ற மகிழ்ச்சியையும் தந்தது என்பது உண்மை. அவரது முதல் பாராட்டுதான் என்னை மேன்மேலும் எழுத முடியும் என்ற ஊக்கத்தையும் கொடுத்தது என்பதால், அதை  இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.அவருக்கு திரும்பவும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு மஸ்தூக்கா அவர்களின் பின்னூட்டம் இதோ.
//நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.
எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'
முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்'
தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அன்புடன்
மஸ்தூக்கா// 

பின் பதிவு எழுதத் துவங்கிய புதிதில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் திரு சென்னைபித்தன் அவர்கள் திரு க.வாசுதேவன்  அவர்கள் 
மற்றும் சிட்னி வாழ் பொறியாளர் திரு N.பக்கிரிசாமி அவர்கள் ஆகியோரது பின்னூட்டங்களும், எனது அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும் அவ்வப்போது எனது பதிவைப் படித்து மின்னஞ்சல்  மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் கொடுத்த ஊக்கமும் எனக்கு உரமாக இருந்தது உண்மை. 


இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் நாள் முதல் மார்ச் 10 ஆம் நாள் வரை என்னை வலைச்சரம் ஆசிரியாக இருக்கப் பணித்த திரு சீனா அவர்களுக்கு நான் அவசியம் நன்றி சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் தந்த அந்த பணியை செம்மையாய் செய்ய நான் அதிகம் உழைக்கவேண்டியிருந்தது.

அவர் அந்த பணியைத் தந்திராதிருந்தால் எனக்கு பல புதிய அறிய தகவல்கள் கிட்டியிருக்காது.மேலும் பல பதிவர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருக்காது. 

அனேகம் பேர் எனது பணியை பாராட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே தர இயலாது என்பதால் இருவர் தந்த கருத்துக்களை மட்டும் இங்கே தருகிறேன். 

சிரித்துவாழவேண்டும் என்று விடைபெறும் நாளான  ஏழாம் நாள் வலைச்சரத்தில் நான் தந்த பதிவுக்கு திருமதி சசிகலா அவர்கள் தந்த பின்னூட்டம் எனது வலைச்சர ஆசிரியர் பணிக்குத் தந்த பாராட்டு சான்றிதழாகவே எண்ணுகிறேன்.  அது கீழே. 

//தகுந்த பாடலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த தங்கள் ஒரு வார ஆசிரியர் பணி சிறப்பு மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்தாலும் மகிழ்வோம். நன்றிங்க.//

"இந்த ஏழு நாட்களில் மக்கள் அறியவேண்டிய அரிய செய்திகளை எடுத்துச் சொன்னதற்கு தமிழ் உலகம் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்லவேண்டும்.’’ என்று சுப்பு தாத்தா என்கிற திரு சூர்யசிவா அவர்கள் என் மேல் உள்ள அன்பால் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், அவரது பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்தியது நிஜம்.

என்னுடைய பதிவில் எது இதுபோல தொடரவேண்டும் என்று நினைக்க வைத்ததென்றால்  40 பதிவுகளாக  எழுதிய Boss கள்பல விதம் என்ற தொடர்தான். அதுதான் என்னை பல பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பேன். 

கடைசியாக இந்த தொடர் பதிவை எழுதச் சொன்ன நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! அவர் சொன்னது போல் இந்த தொடரைத் தொடர ஆறு அன்பர்களை அழைக்க நினைத்தேன்.

ஆனால் இளைஞர்களுக்காக ஒரு வலைப் பதிவை நடத்தும் இளைஞர் திரு குட்டன், ஆறு பேரென்ன நூறு பேருக்கு சமம் என்பதால் அவரையே இந்த தொடர் பதிவை தொடர அழைக்கிறேன்!

வியாழன், 25 ஜூலை, 2013

எனது முதல் கணினி அனுபவம் – தொடர் பதிவு



2011 ஆம் ஆண்டில் தொடர்பதிவிட்டுக்கொண்டிருந்த வலையுலக நண்பர்கள், சமீபகாலமாக எந்த தலைப்பிலும் தொடர் பதிவு எழுதாமல் இருந்தபோது, அதை ஒரேயடியாக மறந்து விட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த அலை ஓயவில்லை. என்பதை நண்பர் திரு குட்டனின் அழைப்பு உறுதி செய்திருக்கிறது. 

நண்பர் திரு குட்டன் அவர்கள் என்னையும் எனது முதல் கணினி அனுபவம் பற்றி தொடர் பதிவிட அழைத்துள்ளார். அவருக்கு எனது நன்றி.

நான் முதன் முதல் தொடர்பதிவிட்டது திரு சென்னை பித்தன் அவர்கள் அழைப்பிற்கிணங்கி நண்பேண்டா என்ற தொடர் பதிவுதான். பின் அவரது அழைப்பை ஏற்று முத்தான மூன்று மற்றும் மழலை உலகம் மகத்தானது  என்ற தொடர்பதிவுகளையும் மின்னல்வரிகள் திரு பால கணேஷ் அவர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்ற தொடர் பதிவையும் எழுதியுள்ளேன். திரும்பவும் தொடர் பதிவிட வாய்ப்பை ஆரம்பித்து வைத்த நண்பர்களுக்கு நன்றி.

முதன் முதலில் நான் கணினி பற்றி கேள்விப்பட்டது 1973 இல் புது தில்லியில் இருக்கும்போது தான். எனது நண்பர் ஒருவர் மைய அரசில் பணிபுரிந்துகொண்டு இருந்தவர், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள கணினி பற்றி சொல்லும்போது, அது ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொண்டு இருக்கும் இயந்திரம் என்றும் அதில் புள்ளி விவரங்களை சேகரித்து வைக்கலாம் என்றும் தேவைப்படும்போது அந்த விவரங்களை எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொன்னபோது வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது உண்மை.  

பொறியாளர்கள் மட்டுமே கணிணியைக் கையாளமுடியும்,என நினைத்ததால் மேற்கொண்டு அதில் நாட்டம் செலுத்தவில்லை.பின்பு சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த முதல் நாள், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்த தகவல் தொகுப்புத் துறை (Data Processing Department) க்கு அழைத்து சென்றார்கள். அங்குள்ள கணினி இயந்திரங்களைக் காட்டி இங்குதான் ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் (Pay Roll) தயாரிக்கப் படுகின்றன என்றபோது அவைகளை வெறும் அச்சிடும் இயந்திரம்போலத்தான் எனக்குத் தோன்றின.

பின்னர் வங்கியில் ஒரு மாவட்ட கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றியபோது, ஒருநாள் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். 
தான் IBM இல் வேலை பார்த்து வந்ததாகவும், பிறகு பணியை விட்டு வந்து அந்த ஊரில் கணினியில் பயிற்சி தருவதாகவும் சொன்னார். மேலும் அரசு அப்போது நடத்தும் ஒரு தேர்வுக்கு தயார்செய்து சான்றிதழ் பெற உதவுவதாகவும் சொன்னார்.

வங்கிகள் கணினிமயமாக்கப்பட இருப்பதால், வங்கி ஊழியர்களுக்கு கணினி பற்றிய அறிவு அவசியம் இருக்கவேண்டும் என்றும், நாங்கள் ஒரு குழுவாக அவரது பயிற்சியில் சேர்ந்தால் கட்டணத்தில் சலுகை தருவதாகவும், தினம் மாலையில் பயிற்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் எங்களுக்கு கணினியைக் கையாளும் கலையைக் கற்றுத் தருவதாகவும் சொன்னார்.

உடனே கணினி வல்லுனராகப் போவதாக கற்பனையில் மிதந்தபடி, நான் எனது கட்டணத்தை தந்தேன். என்னைப்பார்த்து என்னோடு பணிபுரிந்த நண்பர்களும் பணத்தைக் கட்டினார்கள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் எங்களது பயிற்சி தொடங்கியது.முதல் நாளே எங்களை கணினி முன் உட்கார வைத்து கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பதுபோல் சொல்லித்தருவார் என நினைத்துக்கொண்டு சென்றபோது ஏமாற்றமே மிஞ்சியது அவரது பயிற்சிக்கூடத்தில் இருந்ததென்னவோ ஒரே ஒரு மேசைக் கணினிதான்.அதுவும் ஒரு நெகிழி(Plastic) உறையால்  மூடப்பட்டு இருந்தது.  

அவர் உங்களுக்கு முதலில் Programme எழுத சொல்லித்தருகிறேன் என்று ஆரம்பித்தபோது நான்  கேட்ட கேள்வி, “எப்போது எங்களை கணினிமுன் உட்கார வைப்பீர்கள்?’ என்பதுதான். அதற்கு அவர் முதலில் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்பு உட்காரலாம். என்றார்.

ஒருவாரம் ஆயிற்று, இரண்டு வாரம் ஆயிற்று. அவர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தாரே தவிர கணினியை கண்ணில் காட்டவில்லை. சரி இவர் தெருவில் வித்தைகாட்டும் பாம்பாட்டி கீரிப்பிள்ளை பாம்பு சண்டையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு காண்பிக்காமல் இருப்பதுபோல், இவரும் நம்மை கணினி அருகே அண்டவிட மாட்டார் போலிருக்கிறதே என நினைத்துக்கொண்டு அந்த பயிற்சிக்குப் போவதையே நிறுத்திவிட்டேன்.

இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆசை நிறைவேறியது பத்து ஆண்டுகளுக்குப் பின்தான். வங்கியின் பணிகளை அப்போது முழுமையாக கணினிமயமாக்க எண்ணியபோது நான் வட்டார மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் ஒரு மேசைக் கணினி தந்தார்கள். ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாததால் அதை அப்படியே மேசையின் ஓரத்தில் வைத்திருந்தேன்,

காரணம் அந்த வயதில் எப்டி இயக்குவது என மற்றவர்களிடம் கேட்க தயக்கம் இருந்ததால்.ஆனால் தினம் காலையில் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் அந்த கணினி என்னைக் கவனி. சொல்வதுபோல் இருக்கும். ஒரு நாள் தயக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு எனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலரைக் கூப்பிட்டு எப்படி இதை இயக்குவது என சொல்லிக்கொடுங்கள் என்றேன்.

அவர் சொல்லிக் கொடுத்தபின் நான் முதலில் செய்து பார்த்தது Desktop இல் படத்தை மாற்றியதுதான்! பின்பு செய்தது மின்னஞ்சலுக்காக கணக்கு தொடங்கியதுதான். அப்போது கூட Login Id க்கு எனது முழுப்பெயரையும் அதாவது V.Nadanasabapathy என்று கொடுத்தபோது எனக்கு உதவிய நண்பர் சொன்னார். சார்.இப்படி நீளமாக Login Id இருந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப மற்றவர்கள் சிரமப்படுவார்கள். எனவே சுருக்கமாகத் தாருங்கள். என்றார்.

அப்படி தத்துபித்தென்று கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான், ஓர் ஆண்டுக்குள் கற்றுக் கொள்ளவேண்டியதைக் கற்றுக்கொண்டு, எங்களது வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு K.V.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னால் Power Point Presentation தரும் அளவிற்கு முன்னேறினேன் என்பதில் எனக்கு பெருமையே. 

இது தொடர் பதிவென்றாலும் முடிவு ஒன்று என்று இருக்குமல்லவா? அதனால் யாரையும் தொடர் பதிவிட அழைக்காமல்,நான் கணினி பயிற்சி பெற சென்றபோது கேட்ட நகைச்சுவையைச் சொல்லி பதிவை முடிக்கலாமென  எண்ணுகிறேன். கணினிப் பொறியாளர்கள் மன்னிப்பார்களாக!

Question: What is the similarity between Computer Engineers and Beggars?

Answer:  Both are working on Platform.