நான் பெண்ணாடத்தில் படித்த ஆண்டில்
(1956-57) நடந்த பல நிகழ்வுகள் மறக்க இயலாதவை.
அந்த ஆண்டில் தான் அரியலூர் அருகே மருதையாற்று ரயில் பாலத்தில் நடந்த கோர விபத்தில் பலர் இறந்ததால், அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு லால் பகதூர் சாஸ்த்ரி பதவியை துறந்தார்.
அதுவரை புழக்கத்தில் இருந்த ரூபாய், அணா பைசாவுக்கு பதில் ரூபாய், நயா பைசா என்ற
புதிய நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்போதுதான்.
(அப்போது இருந்த ஒரு ரூபாய்க்கு 16 அணாவும், ஒரு அணாவுக்கு 12 பைசாவும் என கணக்கிடப்பட்டன.)
புதிய நாணய முறை(ரூபாயும், பைசாவும்)
1 - 4 -1957 லிருந்து நடைமுறைக்கு வந்ததும், பழைய நாணயங்களும் புழக்கத்தில் இருந்ததால் புதிய முறைக்கு மாறுவதில் மக்கள் சிரமப்பட்டது உண்மை.
அரசால் செய்தி தாட்களில் வெளியிடப்பட்ட நாணய மாற்று அட்டவணையை(Conversion Table) கையில் வைத்துக்கொண்டுதான் எதையும் விற்கவோ, வாங்கவோ முடிந்தது.
அந்த ஆண்டில் தான் இரண்டாவது பொதுத்தேர்தல் வந்தது. திராவிட முன்னேற்ற கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலுக்கு
போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றதும் அந்த தேர்தலில்தான்.
அரசியல் பற்றியோ, தேர்தல் பற்றியோ அறியாத என் வயதொத்த மாணவர்களுக்கு அந்த வேளையில் நடந்த தேர்தல் பிரச்சாரம்
ஒரு விநோதமாக தெரிந்தது.
அப்போது தி. மு.க தினம் ஒரு சுவரொட்டியை வெளியிடும். அதை பார்க்க, படிக்க எங்களிடையே போட்டி இருந்தது உண்மை.
மேலும் எங்களது தமிழ் ஆசான் புலவர் குஞ்சிதபாதனார் வகுப்புக்கு வந்ததும் எங்களை பார்த்து 'இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள
சுவரொட்டி என்ன?' என்று கேட்பார்.
(அப்போதெல்லாம் தமிழ் ஆசிரியர்கள் தான் தி.மு,க வளர உதவினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதில் வேடிக்கை என்ன வென்றால் எங்களது இந்தி ஆசிரியரும், இந்தி பாடத்தை நடத்திவிட்டு அப்போதைய அரசியல் பற்றி பேசி, மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பை வளர்த்தார் என்பதே! )
தமிழ் ஆசிரியர் கேட்பாரே என்பதற்காக, பள்ளி வரும்போது தி.மு.க தேர்தல் அலுவலகத்தின் முன் ஒட்டப்பட்டுள்ள
சுவரோட்டியைப்படித்துவிட்டுவந்து போட்டிபோட்டுக்கொண்டு ஆசிரியர் கேட்கு முன்னே சுவரொட்டியில் உள்ள வரிகளை சொல்வோம்.
அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் படித்தவற்றில் நினைவுக்கு வருபவை.
அரியலூர் அழகேசா
ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது.
ரயில் எஞ்சின்கள் செய்வது வடக்கே
ரயில் பெட்டிகள் செய்வது தெற்கே.
நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார்
நோட்டு அடித்தால் போதாது.
டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்கு பகையாளி.
கடைசியில் உள்ள வரிகளை இப்போது படிக்கும்போது, காலம் தான் எத்தனை பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என
நினைக்க தோன்றுகிறது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி