வெள்ளி, 30 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 13

நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த வணிகரிடம், அந்த
ஜோடி செருப்பின் விலை எவ்வளவு என இந்தியில்
கேட்டபோது,அவர் ‘டாயி ருப்யா’என்றார்.உடனே
நண்பர்,’நை.நை.பாஞ்ச் ருப்யா.’என்றார்.அதாவது
அவர் சொன்ன விலை அதிகம் என எண்ணி ஐந்து
ரூபாய்தான் தர முடியும் என சொன்னார்.

(இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.இந்த நிகழ்ச்சி நடந்த வருடம் 1967.
அதனால் என்ன செருப்பு ஐந்து ரூபாய்க்கு கேட்டாரே
என எண்ணவேண்டாம்.அப்போது இருந்த
விலைவாசி அப்படி.)

அந்த வணிகர் திரும்பவும்,‘அரே பாய்.கேவல்
டாயி ருப்யா.’என்றார். நண்பரோ திரும்பவும்,
’நை.நை. பாஞ்ச் ருப்யா.’என்றார்.இப்படி அவர்
‘டாயி ருப்யா’ என்பதும், நண்பர் இராதாகிருஷ்ணன்
’நை.நை.பாஞ்ச் ருப்யா’என்பதும்,சிறிது நேரம்
தொடர்ந்தது.

பிறகு அவர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்து,
‘பாய் ஸாப்.டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா ‘என்றார்.
அப்போதுதான் எங்களுக்கு (நண்பர்
இராதாகிருஷ்ணனுக்கும் தான்) புரிந்தது இந்தியில்
டாயி (ढाई) என்றால் இரண்டரை என்று!

நண்பருக்கு ஒன்றிலிருந்து நூறு வரை தான்
இந்திக்கான சரியான சொற்கள் தெரியும் போல.
எனவே அந்த வணிகர்,டாயி ருப்யா என்றதும்,
பின்னங்களுக்கான சரியான சொல் தெரியாததால்
இவர் அது பத்து ரூபாய்க்கு மேல் போலும் என
நினைத்து(!) ஐந்து ரூபாய்க்கு கேட்டிருக்கிறார்!!

நண்பர் விலை விசாரித்தபோது பேசிய இந்தியிலிருந்து,
அந்த வணிகருக்கு நாங்கள் ஊருக்கு புதியவர்கள்
என்றும்,‘மதராசிகள்’என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

பிறகு நண்பர் திரும்பத் திரும்ப இரண்டரை ரூபாய்
சொன்ன பொருளை,ஐந்து ரூபாய்க்கு கேட்டதும்,
அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகம்
பறந்தோடிவிட்டது.அதனால் அவர் உடனே
‘டூ ருப்பீஸ் ஃபிஃப்டி பைசா’ என ஆங்கிலத்தில்
சொல்லிவிட்டார்.

உடனே நண்பர் தவறை உணர்ந்து, ’நை.நை.
தோ ருப்யா’ (இரண்டு ரூபாய்) என்றார்.அதற்கு
அவர் ‘நை பாய்.’ எனக் கூறிவிட்டார்.வேறு
வழியின்றி நான் அவர் கேட்ட பணத்தைக்
கொடுத்து அதை வாங்கினேன்.

நண்பரின் இந்திப் புலமையைப் பற்றி நன்றாக
தெரிந்து கொண்டதால், அதற்குப் பிறகு ஒன்றும்
வாங்காமல் திரும்பி விட்டேன்.

அறைக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன்.
’எங்கள் ஊரில் சொல்வார்கள். ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவாது என்று. அதுபோல நீங்கள் என்னதான்
பள்ளியில் இந்தி படித்திருந்தாலும்,பேசுவது எப்படி
எனத்தெரியாவிட்டால் படித்தும் பிரயோஜனம் இல்லை.
இந்தியை பள்ளி இறுதி வரை படித்த நீங்களும்,
இந்தி படிக்காத நானும் இப்போது ஒரே
நிலையில்தான் இருக்கிறோம்.எனவே இனியாவது
இந்தியை படித்திருக்கிறோம் என பெருமை
பேசாதீர்கள்.’என்றேன்.அதற்கு பிறகு அவரிடமிருந்து
எந்த பேச்சும் இல்லை.

மறுநாள் நாங்கள் இருந்த ராமானுஜம் மெஸ்
மேலாளரிடம் எங்கு பொருட்களை வாங்கலாம் எனக்
கேட்டபோது அவர் சொன்னார்.‘நீங்கள் ஆர்ய
சமாஜ்சாலை தாண்டியதும் உள்ள அஜ்மல்கான்
சாலையின் இடதுபுறம் உள்ள கஃப்பார் மார்க்கெட்
(Gaffar Market)சென்றால் என்ன உங்களுக்கு
வேண்டுமோ அது எல்லாம் அங்கு கிடைக்கும் என்றார்.

அதற்குப் பிறகு நாங்கள் ஒரு நாள் பயிற்சி
முடிந்து வந்ததும், கஃப்பார் மார்க்கெட் போனோம்.
அங்கே வரிசையாக நிறைய கடைகள்,
சென்னையில் உள்ள'ரிச்சி மார்க்கெட்’ போல
நெருக்கத்தில் இருந்தன.

அங்கே இல்லாத பொருளே இல்லை எனலாம்.
நான் அப்பாவுக்கு கம்பளிக் குல்லாவும்,
அம்மாவுக்கு ஸ்வெட்டரும் மற்றும் எனக்கு
பெல்ட், ஷூ முதலியவைகளை வாங்கினேன்.

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால் நானே
ஆங்கிலத்திலேயே பேசி (பேரமும் பேசி)
பொருட்களை வாங்கினேன். அங்கு இருந்தவர்கள்
நாம் ஆங்கிலத்தில் பேசினாலும், பாதி ஆங்கிலம்
பாதி இந்தியில் என(HInglish ல்)பேசியதால்
சிரமம் ஏதும் இல்லை.

ஆனாலும் இந்தியில் பேசாததால்,நிச்சயம் அதிக
விலை கொடுத்திருப்பேன்.அதனாலேன்ன,
மொழி தெரியாததற்கு அது விலை என
எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

அப்போது புது தில்லியில் எனது மாமா மகன்
திரு வேணுகோபாலன் அவர்கள்
Public Health Engineering துறையில் முது நிலைப்
பொறியாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார்.
ஊருக்கு எழுதி அவரது முகவரியை
அறிந்துகொண்டு பின் அவரது முகவரிக்கு கடிதம்
எழுதினேன்.நான் பயிற்சிக்கு வந்திருப்பதை
தெரிவித்து,அவர் வீட்டுக்கு எவ்வாறு வருவது
எனக்கேட்டு எழுதி இருந்தேன்.

அவருடன் பணியாற்றும் வேதராமன் என்கிற
பொறியாளர்‘கரோல் பாக்’ கில்தங்கி இருந்ததால்,
அவர் மூலம் நான் எவ்வாறு Andrews Ganj ல் இருந்த அவர் வீட்டிற்கு வருவது என கடிதம்
கொடுத்து அனுப்பி இருந்தார்.

அந்த பொறியாளர் என்னை நேரில் வந்து
பார்த்து கடிதத்தைக் கொடுத்துவிட்டு,எவ்வாறு
பேருந்து பிடித்து அங்கு செல்வது என விவரமாக
சொன்னார்.

புது தில்லி சென்று 20 நாட்களுக்கு மேல்
ஆகிவிட்டதால்,முதலில் இருந்த‘பயம்’போய்விட்டது.
எங்கு சென்றாலும் அங்கு உள்ளவர்கள் ஆங்கிலம்
பேசினாலும் பேசாவிட்டாலும் நான் ஆங்கிலத்தில்
பேசி நிலைமையை சமாளிக்கும் தைரியம்
வந்துவிட்டதால், தனியாக Andrews Ganj செல்ல
தயக்கம் ஏற்படவில்லை.

அப்போதே டில்லியில் விடுமுறை நாட்களில்
DTC யில் ஐந்து ரூபாய்க்கு சிறப்பு பயணச்சீட்டு
விற்பனை செய்வார்கள்.அதை வாங்கினால்
நாள் முழுவதும் எந்த பேருந்திலும் எந்த
வழித்தடத்திலும் பயணம் செய்யலாம்’

ஒரு ஞாயிறு காலை ஆர்ய சமாஜ் சாலையில்
இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு
நடத்துனரிடம்(விடுமுறை நாட்களில் சிறப்பு
பயணச்சீட்டு வழங்க, ஒரு நடத்துனர் இதற்காகவே
நின்றுகொண்டு இருப்பார்) ஐந்து ரூபாய் கொடுத்து
சிறப்பு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பேருந்தில்
ஏறி பாராளுமன்றம் அருகே இறங்கி அங்கு
வேறொரு பேருந்து பிடித்து Andrews Ganj ல் உள்ள
எனது மாமா மகன் வீட்டுக்கு போனேன்.

(அடுத்த பதிவு 2012 ல் என்பதால், அனைவருக்கும்
இப்போதே எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!)

தொடரும்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 12

‘கரோல் பாக்’ கில் உள்ள இராமானுஜம் மெஸ்
திரும்பும் வரை நாங்கள் எதுவும் பேசிக்
கொள்ளவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு
அறைக்குத் திரும்பியதும்,நண்பர் இராதாகிருஷ்ணன்
ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.உடனே நான் ‘வெகுதூரம்
நடந்தது களைப்பாக இருக்கிறது. காலையில்
பேசிக்கொள்ளலாம்.’எனக்கூறி மேற்கொண்டு
பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல்
படுத்து விட்டேன்.

காலையில் எழுந்ததும் நண்பர் தர்மலிங்கம் என்னிடம்
‘எனது வகுப்பு நண்பர் ஒருவர் இங்கு IARI யில்
முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டு
இருக்கிறார்.அவரை நாம் அழைத்துக்கொண்டு
சென்றால் இந்த மொழிபிரச்சினை இருக்காது.’
என்றார். நானும் முதல் நாள் பட்ட அனுபவத்தால்,
‘சரி’ என சொல்லிவிட்டேன்.

அதுபோலவே அந்த ஞாயிற்றுக்கிழமை காலை
அவரது நண்பர் எங்களது அறைக்கு வந்தார்.
அவரிடம் எங்களது அனுபவத்தை சொன்னதும்
அவர், ‘கன்னோட் பிளேஸ்’ என்பது நம்மைப்
போன்றவர்கட்கு ‘Window Shopping’ செய்ய மட்டுமே.

அங்கு எல்லாமே விலை அதிகம். மற்றும் பேரம்
பேச முடியாது. அதற்கு நீங்கள் இங்கு கரோல் பாக்,
அஜ்மல்கான் சாலையில் உள்ள கடைகளிலும்,
நாளை (திங்களன்று) இங்குள்ள Monday Market எனப்படும்
சாலையோர பிளாட்பாரத்தில் வைக்கப்படும்
கடைகளிலும் பேரம்பேசி(?) எல்லா பொருட்களையும்
வாங்கிக்கொள்ளலாம்.’ என்றார்.

அவருடன் அன்று காலை கிளம்பி, Red Fort,
கன்னோட் பிளேஸ்,Super Bazar,போன்ற இடங்களைப்
பார்த்துவிட்டு மாலையில் Red Fort ல் நடைபெற்ற
Son et lumière எனப்படும் ஒலி ஒளி காட்சியைப்
பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.
(இது பற்றி விரிவாக ‘நினைத்துப் பார்க்கிறேன்’
தொடரில் எழுத இருக்கிறேன்)

தில்லியில் வணிக நிறுவனங்கள்/கடைகள் வாரம்
ஒருமுறை விடப்படும் விடுமுறை நாளை சுழற்சி
முறையில் கடைப்பிடித்து வந்தன.அதனால் ஒவ்வொரு
பகுதியிலும் ஒரே நாளில் விடுமுறை இருக்காது.
இப்போதும் அதே முறை கடைப்பிடிக்கப்படுகிறது
என நினைக்கிறேன்.

இதனால் வாடிக்கையாளர்கள் வாரம் முழுதும்
எங்காவது ஒரு இடத்தில் தேவையானவற்றை
வாங்க முடியும்.அதோடு அல்லாமல் வாடகை இடம்
பிடித்து வணிகம் செய்ய இயலாத சிறு மற்றும்
குறு வணிகர்கள் விடுமுறை விடப்பட்டுள்ள
பகுதிகளின் பெரிய கடைகளின் முன்னே
பிளாட்பாரத்தில் தங்களின் கடையை(!)
ஆரம்பித்துவிடுவார்கள். (நம் ஊர் தியாகராயநகர்
பாண்டி பஜார் கடைகள் போல) ஆனால் இந்த
கடைகள் ஒரு நாள் மட்டுமே அந்த பகுதியில்
இருக்கும்.மேலும் அந்த கடைகள் நடக்கும்
நாளின் பெயரால் அழைக்கப்பட்டன.

இதனால் அவர்களுக்கு வாரம் முழுதும்
ஏதாவது ஒரு பகுதியில் வணிகம் செய்யும்
வாய்ப்பு கிடைப்பதால்,வருடம் முழுதும்
அவர்களால் நிரந்தர இடம் இல்லாவிடினும்
வணிகம் செய்ய முடியும்.

பொதுமக்களுக்கும்,அவரவர் பகுதியில் வாரம்
முழுதும் கடைகள் திறந்திருப்பதால் பொருட்களை
நினைத்தபோது வாங்கமுடியும்.இவ்வாறு
விடுமுறை நாட்களில் உள்ள தெருவோர கடைகளில்
எல்லா பொருட்களும் குறைந்த விலையில்
கிடைத்ததால், அன்று கூட்டமும் அலைமோதும்.

கரோல் பாக் உள்ள கடைகள் திங்கள் கிழமையில்
விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.அப்போது
நடக்கும் இந்த தெருவோர கடைகளுக்கு
Monday Market எனப் பெயர்.

தர்மலிங்கத்தின் நண்பர் சொன்ன யோசனைப்படி,
மறுநாள் மாலை பயிற்சி முடிந்து அறைக்குத்
திரும்பியதும் காபி குடித்துவிட்டு,
Monday Market க்கு கிளம்பினோம்.

அப்போது நான் சொன்னேன் ‘இங்கு எல்லாமே
பேரம்பேசித்தான் வாங்கமுடியுமாம்.நமக்கு இந்தி
தெரியாததால் எப்படி வாங்கப்போகிறோமோ?’ என்று.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,‘சென்ற வாரம்
பேருந்தில் நடந்ததை வைத்து,எனக்கு இந்தி
தெரியாது என நினைத்து விடாதீர்கள். அந்த
நடத்துனர் வேகமாக இந்தியில் பேசியதால்,
எனக்கு அவர் கேட்டது புரியவில்லை.இங்கு
அப்படியில்லை.சாவகாசமாக பேசி பேரம் செய்ய
நான் உதவுகிறேன்.’என்றார். வேறு வழியின்றி
நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.

அந்த Monday Market அஜ்மல்கான் சாலையில்,
பூசா சாலை ஆரம்பத்திலிருந்து, ஆர்ய சமாஜ் சாலை
வரையிலும்,ஏன் அதைத் தாண்டியும் சாலையின்
இருபக்கங்களிலும் உள்ள பிளாட்பாரங்களில்
விரிந்திருந்தது. .

நாங்கள் பூசா சாலையில் ஆரம்பித்து ஆர்யாசமாஜ்
சாலை வரை உள்ள எல்லா கடைகளையும்
ஒரு முறை பார்த்துவிட்டு,பின்பு தேவையானவற்றை
வாங்கலாம் எனத் தீர்மானித்து நடக்கத்தொடங்கினோம்.

கைக்குட்டைகள், புடவைகள், உள்ளாடைகள்,
சட்டைகள், பீங்கான் சாமான்கள், காலணிகள் என
நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களும்
அங்கு இருப்பதைப் பார்த்தோம்.

அப்போது அங்கு ஒரு சர்தார்ஜி இரப்பர்
காலணிகளைப் போட்டு விற்றுக்கொண்டிருந்ததைப்
பார்த்ததும், நான் எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்க
எண்ணினேன். நான் அந்த கடை அருகே சென்றதும்
நண்பர்கள் தர்மலிங்கமும் இராதாகிருஷ்ணனும்
என்னுடன் வந்தார்கள்.

நான் அங்குள்ள செருப்பு ஒன்றை எடுத்துப் பார்த்ததும்,
நண்பர் ‘இதை வாங்க வேண்டுமா என்றார்?
‘ஆம்’ என்றதும், நண்பர் இராதாகிருஷ்ணன் அந்த
வணிகரிடம், ‘யே கித்னா ஹை?’
(இதன் விலை எவ்வளவு?) என்றார்.தொடரும்

புதன், 21 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 11

சென்ற பதிவில் Gole Market பேருந்து
நிறுத்தலிருந்து கன்னோட் பிளேஸ் வரை,
ஃபட் ஃபட் ஊர்தியில் பயணித்தது குறித்து
எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு
பின்னூட்டம் இட்டிருந்த நண்பர்
திரு வாசுதேவன் அவர்கள்,ஃபட் ஃபட்
ஊர்தியின் படத்தை, பதிவுலக நண்பர்களும்
தெரிந்துகொள்ளும் விதமாக பதிவில்
வெளியிடலாமே என யோசனை
சொல்லியிருந்தார்.

அவரது யோசனைப்படி நானும் படங்களை
வெளியிட இருந்தேன். பின் நண்பர் வாசுதேவனே
ஒரு புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.
அவர் அனுப்பியிருந்த படம் கீழே.


நான் வெளியிட இருந்த படங்கள் கீழே.
உச்சநீதி மன்ற ஆணைப்படி, இந்த ஊர்திகள்
வெளியிடும் புகை, சுற்றுப்புறத்தை அதிகம்
மாசு படுத்தியதால்,1988 முதல் தடை தில்லியில்
செய்யப்பட்டுவிட்டன. எனவே இவைகளை
புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

நான் ‘கரோல் பாக்’ சென்ற பின், நடந்த
நிகழ்வுகள் அடுத்த பதிவில்.


தொடரும்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 10

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னோட்
பிளேஸுக்கு திரும்பவும் பேருந்தில் செல்ல
தயக்கம் (பயம்!) காரணமாக நடந்து செல்லலாமா
அல்லது ஏதேனும் ஆட்டோவில் செல்லலாமா என
யோசித்துக்கொண்டு நின்றபோது, ‘ஃபட் ஃபட்’
ஒன்று வந்தது.

‘ஃபட் ஃபட்’ என்பது தில்லிக்கே உரித்தான ஒரு
பயண ஊர்தி.பார்ப்பதற்கு முன் பக்கம் மோட்டார்
சைக்கிள் போலவும்,பின் பக்கம் ஆட்டோ போலவும்
இருக்கும். மோட்டார் சைக்கிள் சேஸில்,
(Motor Cycle Chassis) பின்பக்கம் அமரும் இடத்தில்,
நம்மூர் ‘மீன் பாடி’ வண்டி அகலத்தில் அமரும் இடம்
அமைத்து,அதன்மேல் மேற்கூடு கட்டி,
முன்பக்கமும் பின் பக்கமும்,எதிரும் புதிருமாக
இருக்கைகள் அமைத்து தில்லியை வலம் வரும்
அலங்கார ஊர்திதான் ‘ஃபட் ஃபட்'.


அது ஃபட் ஃபட் என ஓசை எழுப்பிக்கொண்டு
வருவதால் அதற்கு தில்லிவாசிகள் ‘ஃபட் ஃப்ட்’
என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.இப்போது
நம் சென்னையில் எப்படி நமக்கு
ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோவுக்கு பதில்
உதவுகிறதோ, அதுபோல அங்கு இந்த
ஃபட் ஃபட் வண்டிகள் கை கொடுக்கின்றன.

அழித்தால் ஐந்து பேர் செய்யலாம். அப்படிபட்ட
உடல் வாகு கொண்ட ஒரு ஆஜானுபாகுவான
சர்தார்ஜிதான்,அந்த ‘ஃபட் ஃபட்’ ஐ,ஒட்டிவந்தார்.
அதிலே ஏற்கனவே இரு பயணிகள் இருந்தனர்.

நாங்கள் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்ததும்,
அந்த சர்தார்ஜி, ‘மதராஸ் ஓட்டல் ஆவோ,
மசால் வடை காவோ’ என்று கூறி எங்கள் அருகே
வண்டியை நிறுத்தினார்.

நாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது
தெரியாததால்‘கன்னோட் பிளேஸ்'என சொன்னதும்,
தலையை ஆட்டி,அதிலே ஏறச்சொன்னார்.
அவர் சொன்னதின் பொருள் அப்புறம் தான்
புரிந்தது.

கன்னோட் பிளேஸ் செல்லும் வண்டிகள்
எல்லாம்,அங்கு உள்ள Madras Hotel எனப்
பெயரிட்டு அழைக்கப்பட்ட உணவகம்
அருகே தான் சென்று நிற்கும்.எங்களைப்
பார்த்தும் தென்னிந்தியர்கள் என்பதைப்
புரிந்து கொண்ட அவர்,அங்கு அந்த
ஃபட் ஃபட் செல்லும் என்பதைக் குறிக்க அவ்வாறு
எதுகை,மோனையோடு கூறியிருக்கிறார்!

நாங்கள் அதில் ஏறி அமர்ந்து கன்னோட் பிளேஸில்
இருந்த Madras Hotel நிறுத்தம் சென்று இறங்கினோம்.
(இப்போது Madras Coffee House என அழைக்கப்படுகிறது
என நினைக்கிறேன்) அங்கு யாரையும் கேட்காமல்
நடக்கத் தொடங்கினோம்.

கன்னோட் பிளேஸ் என்பது புது தில்லியில்
வட்டவடிவில் கட்டப்பட்டுள்ள ஒரு வணிக
வளாகம்.இந்த வட்ட வடிவான வளாகத்தின்
இரு பக்கங்களிலும் அநேக வணிக நிறுவனங்கள்
உண்டு.வெளி வட்டத்தை கன்னோட் சர்க்கஸ்
என்றும் உள் வட்டத்தை கன்னோட் பிளேஸ்
என்றும் அழைக்கிறார்கள்.

இங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.
என்ன,பர்ஸ் கனமாக இருக்கவேண்டும்.
அவ்வளவுதான்!

இந்த வளாகத்தின் உள் வட்டத்திற்கு சென்று
வெளியே வர, ஒரு சக்கரத்தின் ஆரம் போன்று
10 வழிகள் உண்டு.

இந்த வணிக வளாகத்தை, 1929 ல் கட்ட ஆரம்பித்து
1933 ல் முடித்தார்களாம். விக்டோரியா மகாராணியின்
மூன்றாவது மகனான முதலாம் கன்னோட் கோமகன்
(1st Duke of Connaught) என்ற ஆர்தர் இளவரசனின்
(The Prince Arthur) பெயரைக்கொண்டு
Connaught Place என பெயரிடப்பட்டதாம்.

நாங்கள் சென்றபோது,நடுவில் ஒரு அழகிய
பூங்காவும், இந்தியா காஃபி ஹௌஸும் இருந்தன.
ஒரு மூலையில் தில்லித் தமிழ் சங்கத்தின் ஒரு
சிறிய அலுவலகம் கூட இருந்தது. இப்போது
அவை யெல்லாம் இல்லை.

அந்த இடத்தில் Palika Bazaar என்ற பெயரில்
தரை மட்டத்திற்கு கீழே ஒரு வணிக மய்யம்
அமைத்துவிட்டார்கள்.(மாநகரக் காவல் என்ற
படத்தில் விஜயகாந்த் சண்டைபோடுவது போன்ற
காட்சி எடுக்கப்பட்டது இங்கேதான்.)

நாங்கள் இறங்கிய நிறுத்தம் உள் வட்டத்தில்
இருந்தது.சிறிது தூரம் நடந்து உடனே வலப்புறம்
வந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம்.
அது Sansad Marg என பின் தெரிந்துகொண்டோம்.
கடைகள் ஏதும் தென்படவில்லை.

ஜந்தர் மந்தர் எனப்படும், வானியல் உபகரணங்கள்
உள்ள இடம் தாண்டி,சர்தார் பட்டேல் சிலை உள்ள
சந்திப்பை கடந்தபோது, இரண்டு பெரிய துவாரக
பாலகர் போன்ற உருவங்களோடு கூடிய
கட்டிடத்தைப் பார்த்தோம்.அது ரிசர்வ் வங்கி
கட்டிடம் என்பதும் நாங்கள் நிற்பது பாராளுமன்ற
சாலை என்பதியும் தெரிந்துகொண்டோம்.

யாரையும் கேட்காமல் நடந்ததால், கன்னோட்
பிளேஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம்
என உணர்ந்து,தலைவிதியை நொந்துகொண்டு
திரும்பி நடந்தோம்.

திரும்ப வணிக வளாகம் வந்தபோது இரவு
மணி 7.30 ஆகிவிட்டது. கடைகளை எல்லாம்
அடைக்க தொடங்கியிருந்தார்கள்.

தில்லியில் இரவு 7.30 மணிக்கு கடைகளை
எல்லாம் மூடிவிடுவார்களாம்.எனவே வேறு
வழியின்றி ஏமாற்றத்தோடு இறங்கிய
இடத்திற்கே திரும்பி,அங்கு நின்றிருந்த
ஃபட் ஃபட் டில் ஏறி கரோல் பாக் திரும்பினோம்.


தொடரும்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 9

கன்னோட் பிளேஸ்(Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்ததும், உடனே கீழே
வந்து,அங்கிருந்த ‘மெஸ்’ மேலாளரிடம் கன்னோட்
பிளேஸ் செல்லும் பேருந்து எண் மற்றும் எந்த
இடத்தில் அதில் ஏறவேண்டும் என விசாரித்துக்
கொண்டு கிளம்பினோம்.

அந்த பேருந்து ஏற,ஆர்ய சமாஜ் சாலை
செல்லவேண்டும் என அவர் கூறியதால்.நாங்கள்
அங்கு சென்று,அந்த பேருந்து நிற்குமிடம் சென்று
காத்திருந்தோம்.

அப்போது நான் ‘இங்கு ஏதாவது வாங்க
வேண்டுமென்றால், பேரம் பேசித்தான் வாங்க
வேண்டுமாம்.இல்லாவிட்டால் ஏமாந்து
விடுவோமாம்.இந்தி தெரிந்தால் பேரம் பேசலாம்.
நமக்குத்தான் தெரியாதே என்ன செய்வது?’என்றேன்.

உடனே நண்பர் இராதாகிருஷ்ணன்,’உங்களுக்கு
வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.எனக்குத்
தெரியும்.ஏனெனில் கேரளாவில் எங்களுக்கு
எஸ்‌.எஸ்.‌எல்‌.சி வரை இந்தி மொழிப்பாடம் உண்டு.
அதனால் கவலை வேண்டாம்.'என்றார்.அதோடு
நிற்கவில்லை அவர். பின் சொன்னார்,'உங்கள்
மாநிலத்தில்தான் இந்தியை எதிர்க்கிறீர்களே.
அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான்
வேண்டும்.’என்று.

நான் உடனே,’நண்பரே.நாங்கள் இந்தி என்ற
மொழியை எதிர்க்கவில்லை.அதை எங்கள் மேல்
திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.இந்த திணிப்பு
நடைபெறு முன்னரே தமிழ் நாட்டில் இந்தியை
விரும்பிப் படித்தவர்கள் அநேகம்.ஏன் தட்சிண பாரத்
இந்தி பிரசார் சபா இருப்பதே சென்னையில் தானே.
எனவே விவரம் தெரியாமல் பேசாதீர்கள்.’என்றேன்.
(இந்த இந்தித் திணிப்பு பற்றி தனியாக ஒரு பதிவு
எழுத இருக்கிறேன்.)

மேலும் பேச்சு நீடிக்குமுன் நாங்கள் ஏற வேண்டிய
பேருந்து வந்துவிட்டது. அப்போதெல்லாம் டில்லியில்
பேருந்துகள்,Delhi Transport Corporation (DTC)
என்ற அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய
நிறுவனத்தால் இயக்கப்பட்டன.

DTC யிடம் அதிக பேருந்துகள் இல்லாததால்,சில
வழித் தடங்களில் தனியார் நிறுவனங்கள்,அவர்களது
பேருந்துகளை ஒப்பந்த முறையில் இயக்க DTC
அனுமதித்து இருந்தது.

அப்படிபட்ட பேருந்துகளில் On DTC Contract என
எழுதியிருக்கும்.அப்படிப்பட்ட பேருந்து ஒன்றில்தான்
நாங்கள் கன்னோட் பிளேஸ் செல்ல ஏறி,மூவரும்
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

நாங்கள் ஏறியவுடன் அந்த பேருந்தின் நடத்துனர் உடனே
எங்கள் அருகே வரவில்லை.இரண்டு நிறுத்தங்கள்
தாண்டியதும் ‘டிக்கெட், டிக்கெட் எனக் கேட்டுக்கொண்டு
எங்கள் அருகே வந்தார்.

நண்பர் இராதாகிருஷ்ணன் இருக்கையின் ஆரம்பத்தில்
அமர்ந்து இருந்ததால் பணத்தை எடுத்துக் கொடுத்து,
‘தீன் கன்னோட் பிளேஸ்.’என்றார்.அதற்கு அந்த
நடத்துனர்,‘கஹான் ஸே?’ என்றார். நண்பரும்
அந்த நடத்துனர் சரியாக கவனிக்கவில்லை போலும்
என எண்ணி திரும்பவும் ‘தீன் கன்னோட் பிளேஸ்.’
என்றார்.

அந்த நடத்துனர் நண்பரை ஒரு மாதிரியாய் பார்த்து,
‘அரே பாய். கஹான் ஸே?’ என்றார் திரும்பவும்.
நண்பர் இராதாகிருஷ்ணன்,திரும்பவும் ‘கன்னோட்
பிளேஸ்’ என்றதும், அந்த நடத்துனர் வழக்கமாக
எல்லா நடத்துனர்களும் நடத்தும் ‘அர்ச்சனை’யை
இந்தியில் செய்தார்!

எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று
ஒன்றும் புரியவில்லை.ஆனால் அவர் திட்டுகிறார்
என்று மட்டும் தெரிந்தது.பேருந்தில் உள்ள
அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியதும்,
எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சிலர்
சிரிக்கவும் தொடங்கிவிட்டனர்.

அப்போது எங்களுக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த
ஒருவர், ஆங்கிலத்தில் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’
என்றார்.‘ஆம்.’என்றதும்,’நீங்கள் எங்கு ஏறினீர்கள்?’
என்று கேட்டார்,‘கரோல் பாக்’ என்று சொன்னதும்,
அவர் ‘நடத்துனர் அதைத்தான் உங்களிடம் கேட்டார்.
நீங்கள் அதைச் சொல்லாமல் போகுமிடத்தை
சொன்னதும்,அவருக்கு எரிச்சல் வந்துவிட்டது.
இந்தியில் ‘கஹான் ஸே’ என்றால் ‘எங்கிருந்து’
என்று பொருள்.’என்று கூறிவிட்டு அந்த
நடத்துனரிடம் ஏதோ சொன்னார்.

என்ன எங்களை, இவர்கள் மதராசிகள். இந்தி
தெரியாததால் நீங்கள் கேட்டது புரியவில்லை
இவர்களுக்கு ‘கரோல்பாக்’ கிலிருந்து கன்னோட்
பிளேஸ் போக சீட்டு கொடுங்கள் என்றிருப்பார்.

அந்த நடத்துனரும் ஏதோ முணுமுணுத்துக்
கொண்டு சீட்டுகள் கொடுத்தார்,(சாவு கிராக்கிகள்
என அவரது மொழியில் சொல்லியிருப்பாரோ
என்னவோ.)

பேருந்தில் உள்ள அனைவரும் எங்களையே பார்த்து
ஏதோ பேசிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு
அவமானமாகிவிட்டது.எப்போதடா பேருந்திலிருந்து
இறங்குவோம் என ஆகிவிட்டது.

அப்போது பேருந்து ஒரு இடத்தை அடைந்தது.அங்கு
வரிசையாக அநேக கடைகளும், கூட்டமும்
இருந்ததால், கன்னோட் பிளேஸ் வந்துவிட்டது என
எண்ணி மற்றவர்களைக் கேட்க கூச்சப்பட்டு உடனே
இறங்கிவிட்டோம்.

இறங்கிய பேருந்து நகர்ந்ததும்,நண்பர் அங்கிருந்த
ஒருவரிடம்,‘இது கன்னோட் பிளேஸ் தானே?’ என்று
கேட்டார்.அதற்கு அவர், ‘இல்லை இல்லை. இது
Gole Market.கன்னோட் பிளேஸ் இங்கிருந்து இரண்டு
கிலோ மீட்டர் தூரம்.’என்றார். நாங்கள் ஒருவரை
ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டு,
மேற்கொண்டு என்ன செய்வது என
யோசித்துக்கொண்டு நின்றோம்.


தொடரும்

புதன், 14 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 8

இராமானுஜம் மெஸ் சென்றதும்,டாக்ஸிக்கு பணம்
கொடுத்துவிட்டு நண்பர் தர்மலிங்கத்தைத் தேடினேன்.
அப்போது மேலிருந்து என் பெயரைச்சொல்லி யாரோ
கூப்பிடுவதுபோல் இருந்ததும், நிமிர்ந்து பார்த்தேன்.
மேலே பால்கனியில் இருந்து நண்பர் தர்மலிங்கம்
என்னைப் பார்த்து ‘நேரே முதல் தளத்திற்கு
வாருங்கள்.’ என்றார்.

அதற்குள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் வந்து
என் படுக்கையை எடுத்துக்கொண்டு மாடிக்கு
சென்றார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.அவர்
நேரே நண்பர் தங்கியிருந்த அறைக்கு சென்று
அங்கு காலியாக இருந்த கட்டிலின் மேல் எனது
ஹோல்டாலை வைத்துவிட்டு சென்று விட்டார்.

பின் நண்பர், கீழே என்னை அழைத்து சென்று
அந்த மெஸ்ஸின் மேலாளரிடம் என்னை
அறிமுகப்படுத்தினார். அறைக்கு வந்ததும் எங்களைப்
பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டோம்.

நண்பர் தர்மலிங்கம் கோவையில் பணிபுரிந்தாலும்
கேரளாவில் வளர்ந்தவர் என்பதும், வேளாண்
அறிவியல் படிப்பை திருவனந்தபுரத்தில் இருக்கும்,
வெள்ளயானி வேளாண் கல்லூரியில் படித்தவர்
என்றும் தெரிந்துகொண்டேன்.

மேலும் அவர் வீட்டில் கன்னடம் பேசுபவர் என்றும்,
அப்போது தான் திருமணமானவர் என்றும்
துணைவியார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்
அறிந்துகொண்டேன்.

நண்பர் இராதாகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவர்
என்பதையும் அவரும் திருவனந்தபுரம் வெள்ளயானி
வேளாண் கல்லூரியில் படித்தவர் என்றும்
தெரிந்துகொண்டேன்.இருவரும் ஒரே கல்லூரி
என்பதால் பழைய நட்பை அங்கு வந்ததும்
புதுப்பித்துக்கொண்டனர் போலும்.

இந்த நேரத்தில் நான் தங்கியிருந்த இராமானுஜம்
மெஸ் பற்றியும்,‘கரோல் பாக்’ பற்றியும் கொஞ்சம்
சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.நம்
சென்னையின் திருவல்லிக்கேணி போல்,அப்போது
தென் இந்தியாவிலிருந்து வந்து,டில்லியில் அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில்
சேரும் கட்டை பிரம்ச்சாரிகளுக்கு, புகலிடம்
தந்தது ‘கரோல் பாக்’ தான்.

தில்லி விரிவாக்கத்தின் போது,‘கரோல் பாக்’ கில்
கட்டப்பட்ட, வீடுகளின் உரிமையாளர்கள், இந்தியா
பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு
வந்த பஞ்சாபிகள்.(இவர்களை உள்ளூர் மக்கள்
கேலியாக Repatriate என்பதை குறிக்கும் விதமாக
'R’ என சொல்வதுண்டு.)

ஒவ்வொரு வீடும் இரண்டு அல்லது மூன்று தளங்கள்
கொண்டதாக இருக்கும்.மேலே பர்சாத்தி என
சொல்லப்படும் மொட்டை மாடியில் ஒரு அறை
குளியல் வசதி(?)யோடு இருக்கும்.

கீழ் தளத்தில் வீட்டின் உரிமையாளர் தங்கிக்கொண்டு,
மற்ற தளங்களை தென்னிந்தியருக்கே வாடகைக்கு
விடுவார்கள்.மேலே உள்ள மொட்டை மாடி அறையை
தென்னிந்திய பிரமச்சாரிகளுக்கே வாடகைக்கு
விடுவார்கள்.

தப்பித்தவறி கூட வட இந்தியர்களுக்கு
அதுவும் குறிப்பாக அவர்கள் இனத்தை சேர்ந்த
பஞ்சாபிகளுக்கு வாடகைக்கு விடமாட்டார்கள்.
Only for South Indians என்று ‘வாடகைக்கு’ என
எழுதிய பலகையில் எழுதியே இருப்பார்கள்.

காரணம் தென்னிந்தியர்கள் வம்பு தும்புக்கு
போகமாட்டார்கள்,வாடகையை ஒழுங்காக
கொடுத்து விடுவார்கள்,அதுவுமல்லாமல்
தேவைப்படும்போது தகராறு செய்யாமல் வீட்டை
காலி செய்து விடுவார்கள் என்பதால்.

இன்னொரு சிறப்பு(!)காரணமும் உண்டு. நமது
சாம்பார் மேல் அவர்களுக்கு கொள்ளை பிரியம்.
சாம்பரை அப்படியே குடிப்பவர்களும் உண்டு.
அவர்களுக்கு எப்படி அதை செய்வது எனத்
தெரியாததால், தங்கள் வீட்டில் ஒரு ‘மதராசி’
குடும்பத்தோடு தங்கியிருந்தால்
தேவைப்படும்போது சாம்பார் வாங்கிக்
கொள்ளலாம் அல்லவா?

சில பஞ்சாபிகள் தங்கள் வீடுகளை,‘மெஸ்‘ நடத்தும்
தென்னிந்தியர்களுக்கும் வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
அப்படி ‘கரோல் பாக்’ கில் இருந்த சரஸ்வதி மார்க்
என்ற தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தான்
இராமானுஜம் மெஸ் இருந்தது.

கரோல் பாக் கில் முக்கிய வணிக சாலையான
அஜ்மல்கான் சாலைக்கு இணையாக மேற்கு
திசையில் இருந்தது இந்த சாலை.அஜ்மல்கான்
சாலைக்கு இணையாக கிழக்கு திசையில்
இருந்தது குருத்வாரா சாலை. இந்த மூன்று
சாலைகளுக்கும், தெற்கே பூசா சாலையும்,
வடக்கே ஆர்யசமாஜ் சாலையும் இருந்தன.

இந்த இடங்கள் தான் முதன் முதல் தில்லி
வரும் தென்னிந்தியர்களுக்கு சொர்க்க பூமி.
ஏனெனில் இங்குதான் இராமானுஜம் மெஸ்
போன்று, இராமநாத அய்யர் மெஸ், சௌத்
இந்தியன் மெஸ், ராவ் மெஸ் என அனேக
உணவகங்களோடு கூடிய அறைகள் உள்ள
மெஸ் கள் இருந்தன.

இவை எல்லாமே 90 சதம் அறைகளை
மாதாந்திர வாடகைக்கும், மீதியை தில்லிக்கு
வணிக அல்லது வேறு விஷயமாக வரும்
தென்னிந்தியர்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தன.
இங்கு தென்னிந்திய உணவு கிடத்ததால்,எப்போதும்
இந்த 'மெஸ்' களில் கூட்டம் தான்.

நான் தங்கியிருந்த இராமானுஜம் 'மெஸ்'ஸில்
காலையில் எல்லோரும் அலுவலகம்
போய்விடுவதால்,காலையிலேயே சாம்பார்,ரசம்
கூட்டு உள்ள முழுச்சாப்பாடு தான்.திரும்பவும்
இரவும் சாப்பாடுதான். மாதாந்திர அறை
வாடகையுடன் இரண்டு சாப்பாடுக்கான
பணத்தையும் கட்டிவிடவேண்டும்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்
காலை டிபன் உண்டு.காலை காப்பிக்கும்
மாலை நேர டிபனுக்கும் தனியாக பணம்
தரவேண்டும்.

தலைநகரில் நம் ஊர் சாப்பாடு கிடத்ததால்,நல்ல
வேளை நான் சாப்பாட்டுக்கு கஷ்டப் படவில்லை.
ஆனால் மதியம் மட்டும் வேறு வழி இல்லாமல்
IARI கேண்டீனில் பிரெட் சாப்பிட வேண்டி இருந்தது.

தினம் காலையில் நண்பர்களுடன் 8.30 மணிக்கு
சாப்பிட்டுவிட்டு (காலையில் சாதம் சாப்பிடுவது
கஷ்டமாயிருந்தாலும்) ஆர்யசமாஜ் சாலை வந்து,
பேருந்து பிடித்து பயிற்சி நடக்கும் இடத்துக்குப்
போய்விட்டு மாலை திரும்பிக்கொண்டு இருந்தேன்.

ஒருநாள் சீக்கிரம் அறைக்கு வந்துவிட்டதால்,
தில்லியின் முக்கிய வணிக மய்யமான
கன்னோட் பிளேஸ் (Connaught Place) சென்று
வரலாமென முடிவு செய்தோம்.(இப்போது
அந்த இடம் ‘ராஜீவ் சௌக்’ என அழைப்படுகிறது.)


தொடரும்

திங்கள், 12 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 7

நண்பர் சங்கரன் அவரது இருக்கையை அடைந்ததும்,
என்னை அமரச் சொல்லிவிட்டு என்னைப் பற்றியும்,
என் பயணம் பற்றியும் கேட்டார்.எனது பயணம்
பற்றி எல்லாவற்றையும் விவரமாக சொல்லிவிட்டு,
தங்குவதற்கு நல்ல தங்குமிடம் ஏற்பாடு செய்து
தரமுடியுமா எனக் கேட்டேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் இன்று பயிற்சிக்குப் போய்
வாருங்கள்.அதற்குள் நான் விசாரித்து வைக்கிறேன்.’
என்றார். ‘காலை உணவு சாப்பிட்டீர்களா?’ என்று
அவர்கேட்டதற்கு நான் ‘இல்லை.’என்றதும்,‘இங்கு
இன்னும் கேண்டீன் நடத்தும் பையன் வரவில்லை.
வாருங்கள் வெளியே போய் வருவோம்.’ எனச்சொல்லி.
என்னை வெளியே அழைத்து சென்று அங்குள்ள ஒரு
தெருவோர சிற்றுண்டி சாலையில்(’டாபா’ வில்)
சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

பின் பயிற்சி நடைபெறும் Pusa Institute எனச்
சொல்லப்படுக்கின்ற Indian Agricultural Research
Institute (I.A.R.I) வளாகத்திற்கு செல்ல,ஒரு
ஆட்டோவை கூப்பிட்டு அவரிடம், இந்தியில் என்னை
எங்கு விடவேண்டுமென்று சொல்லிவிட்டு,‘மாலையில்
பார்ப்போம்.’எனக்கூறி உள்ளே சென்றுவிட்டார்.

அங்கிருந்து IARI வெகு அருகில் என்பதால், அந்த
ஆட்டோ ஓட்டுனரும் வெகு விரைவில் என்னை
விட்டுவிட்டு மீட்டர் காட்டிய தொகையைப்
பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

பயிற்சி நடைபெறும் அறைக்கு சென்றதும் அங்கே
நின்றுகொண்டு இருந்தவர் என்னை அன்புடன்
வரவேற்று நான் எங்கிருந்து வருகிறேன் எனக்
கேட்டுவிட்டு,தான் விதை தொழில்நுட்பத்
துறையின் (Seed Technology) தலைவர் என்றும்,
தன் பெயர் Dr.அமர் சிங் என்றும் தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டார்.

என்னை அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு
பதிவு செய்துகொண்டதும்,பயிற்சிக்கான Note Book
முதலியவகளைக் கொடுத்து உள்ளே அமரச்சொன்னார்.

அங்கே ஏற்கனவே சுமார் 25 பேர் வந்து இருந்தனர்.
நானும் காலியான ஒரு இருக்கையில் சென்று
அமர்ந்தேன்.சரியாக 10 மணிக்கு அப்போது IARI ன்
தலைவராக இருந்த வேளாண் விஞ்ஞானி
Dr.M.S.சுவாமிநாதன் அவர்கள் வந்து பயிற்சியைத்
தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேச்சை தொடங்குமுன் எங்களை யெல்லாம்
பெயர்,ஊர்,பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றை
சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார்.

அப்போதுதான் கவனித்தேன் இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் உள்ள வேளாண் துறையின் கீழ்
உள்ள விதை ஆய்வு மய்யத்தில்(Seed Testing Centre)
பணிபுரியும் இளம் வேளாண் விஞ்ஞானிகளும்,
எங்களது NSC நிறுவனத்தின் சார்பாக,எங்களது
உத்திர பிரதேச கிளைகளில் இருந்து இருவரும்,
அப்போதைய மைசூர் மாநிலத்திலிருந்து(தற்போதைய
கர்நாடக மாநிலம்) நானும் ஆக மூவர்
பங்கேற்கிறோம் என்று.

அறிமுகப்படலம் நடக்கும்போது,தமிழ் நாட்டிலிருந்து
யார் வந்திருக்கிறார்கள் என ஆவலாக கவனித்தபோது
கோவை விதை ஆய்வு மய்யத்திலிருந்து வருவதாக,
தர்மலிங்கம் என்ற நண்பர் சொன்னபோது ‘அப்பாடா.
நம் ஊர்க்காரர் ஒருவர் இருக்கிறாரே என எண்ணி
சந்தோஷப்பட்டேன்.

அறிமுகம் முடிந்து Dr.M.S.சுவாமிநாதன் சிறப்புரை
ஆற்றி எங்களை பயிற்சியை சிறப்பாக முடிக்க
வாழ்த்தி விடைபெற்ற பின் Dr.அமர்சிங் அவர்கள்
பயிற்சியின் நோக்கம் பற்றி சொன்னார்.(பயிற்சி
பற்றி பின் நினைவோட்டத்தில் எழுதுவேன்)

தேநீர் இடைவேளையின் போது நான் சென்று
திரு தர்மலிங்கம் அவர்களிடம் அறிமுகப்படுத்திக்
கொண்டேன்.அவருடன் பயிற்சிக்கு வந்த இன்னொரு
நண்பர்,தனது பெயர் இராதாகிருஷ்ணன் என்றும்,
தான் கேரளாவில் உள்ள பட்டாம்பி (ஷோரனூருக்கு
அருகில் உள்ளது) என்ற இடத்தில் வருவதாக
அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திரு தர்மலிங்கம் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என
விசாரித்தபோது நான் எனது தலைமை அலுவலகத்தில்
தற்காலிகமாக தங்கி இருப்பதையும், தங்க இடம் தேட
வேண்டி இருப்பதையும் சொன்னேன். அவர் எங்கு
தங்கி இருக்கிறார் எனக் கேட்டபோது அவர் தானும்
நண்பர் திரு இராதாகிருஷ்ணனும் ‘கரோல் பாக்’கில்
'இராமானுஜம் மெஸ்’ ஸில் தங்கி இருப்பதாக சொன்னார்.

உடனே நான் ‘அங்கு தங்க எனக்கு இடம் கிடைக்குமா?’
என்று கேட்டபோது அவர் ‘அங்கு ஒரு அறையில் மூன்று
பேர் தங்க அனுமதிக்கிறார்கள்.எங்கள் அறையில் நாங்கள்
இருவர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் விரும்பினால்
எங்களுடன் தங்கலாம். ஆனால் பயிற்சி முடியும்
40 நாட்களும் அங்குதான் தங்கி இருக்கவேண்டும்.அப்படி
என்றால்தான் அவர்கள் அனுமதி தருவார்கள்.’என்றார்.

நானும் ‘சரி’ என்றதும்,அவர்‘இன்று ஒருநாள் மட்டும்
நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே
தங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் அந்த மெஸ்
உரிமையாளரிடம் இன்று மாலை அறைக்குத்
திரும்பியதும் கேட்டு வருகிறோம்.அவர் சரி
என்று சொன்னால், நீங்கள் நாளை மாலை அங்கு
வந்து எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.’என்றார்.

ஒரு வழியாகத் தங்கும் இடத்திற்கு வழி செய்ததும் தான்
எனக்கு நிம்மதி வந்தது.பின் காலைபயிற்சி வகுப்புகள்
முடிந்தபிறகு நண்பர்கள் தர்மலிங்கத்தோடும்,
இராதாகிருஷ்ணனோடும் மதிய உணவு அருந்த அங்கு
உள்ள உணவகத்திற்கு சென்றேன்.

அதுதான் எனக்கு முதல் வட இந்திய பயணம் என்பதால்,
அங்கு ரொட்டி மற்றும் சப்பாத்தியையும் அதனுடன்
தரும் சப்ஜி எனப்படுகின்ற கூட்டு போன்றவைகளை
சாப்பிட விருப்பமில்லை.சாம்பார், ரசம் உண்டா எனக்
கேட்டதற்கு வெறும் சாதமும் பருப்பும் தான் உள்ளது
என்றனர்.

நண்பர் தர்மலிங்கம் காலையிலேயே இராமானுஜம்
மெஸ்ஸில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டதால், மதியம்
வெறும் பிரெட் & ஜாம் தான் சாப்பிட்டப் போவதாக
கூறினார். நானும் அவரோடு அதை சாப்பிட்டேன்.

மாலை வகுப்புகள் முடிந்து தலைமை அலுவலகம்
சென்றபோது திரு சங்கரன் எனக்காக காத்திருந்தார்.
அவரிடம் ‘கரோல் பாக்’ கில் தங்க ஏற்பாடு
செய்திருப்பதாக கூறியதும்,‘சந்தோஷம்’ எனக்கூறிவிட்டு,
‘இன்று இரவும் இங்கேயே தங்கிக்கொள்ளுங்கள்.நான்
இரவுக் காவலாளியிடம் சொல்லிவிடுகிறேன்.இரவு
உணவுக்கும்,நாம் காலையில் சாப்பிட்ட உணவகத்தில்
சொல்லி செல்கிறேன்.சப்பாத்திதான் கிடைக்கும்’
என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் திரும்பவும்
பயிற்சிக்கு சென்றபோது, நண்பர் திரு தர்மலிங்கம்,
இராமானுஜம் மெஸ்ஸில் தங்க எனக்கு ஏற்பாடு
செய்துவிட்டதாகவும். மாலையில் நேரே அங்கு
வந்துவிடும்படியும் சொன்னார்.மாலையில் வகுப்புகள்
முடிந்து தலைமை அலுவலகம் சென்று நண்பர்
சங்கரனிடமும் Dr.Joshi அவர்களிடமும் சொல்லிவிட்டு,
நண்பர் சங்கரன் ஏற்பாடு செய்த டாக்ஸியில் எனது
உடைமைகளோடு ‘கரோல் பாக்’கில்
சரஸ்வதி மார்க்’ கில் இருந்த இராமானுஜம் மெஸ்
சென்றேன்.


தொடரும்

புதன், 7 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 6

புது தில்லி இரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கூட
பயணம் செய்த தமிழர் உதவியால்,ஒரு போர்ட்டரைக்
கூப்பிட்டு எனது பொருட்களை எடுத்துக்கொண்டு
வெளியே வந்தேன். அந்த போர்ட்டர் நேரே ஒரு
ஆட்டோ அருகே என்னை அழைத்து சென்று,அதில்
எனது ஹோல்டாலை வைத்துவிட்டு அவரது
சேவைக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு
சென்றுவிட்டார்.

அந்த ஆட்டோ ஓட்டுனர் ஏதும் கேட்கு முன்பே,நான்
West Patel Nagar என்று எனது தலைமை அலுவலகம்
இருக்கும் இடத்தை சொல்லிவிட்டேன்.அவர் திரும்ப
ஏதோ கேட்டபோது, தலையை ஆட்டினேன். உடனே
அவர் இன்னொரு பயணியை அழைத்து
என்னுடன் அமரச்சொன்னர்.

அவரை அழைத்து செல்லலாமா எனக் கேட்டிருக்கிறார்
போலும். அவர் பேசியது எனக்குப் புரியாததால்,
தலையை ஆட்டியிருக்கிறேன். அதற்கு பிறகு என்னால்
அவரை ஏற்ற வேண்டாம். தனி ஆட்டோ தான் வேண்டும்
எனச் சொல்லத்தெரியவில்லை.

இந்தியும் தெரியாது. எனது அலுவலகம் எந்த திசையில்
இருக்கிறது என்பதும் தெரியாது.எப்படி அலுவலகத்தைக்
கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற யோசனையோடு
பக்கத்தில் இருப்பவரிடம் உதவி கேட்கலாமா என
நினைத்து, அவரைப் பார்த்தேன்.அவரோ எங்கோ பார்த்துக்
கொண்டு இருந்தார்.ஒருவேளை அவருக்கு ஆங்கிலம்
தெரியாவிட்டால் என்ன செய்வது.இனி நடப்பது
நடக்கட்டும் என எண்ணி சும்மா இருந்துவிட்டேன்.

ஆட்டோ புது தில்லி ஸ்டேஷனுக்கு நேர் எதிரே
பயணித்து,சிறிய சந்துகளின் ஊடே சென்றது.எங்கு
செல்கிறது என வெளியே உள்ள வணிக நிறுவனங்களின்
பலகையைப் பார்த்தபோது,‘பகாட் கஞ்ச்’ (Pahar Ganj)
என்ற இடம் வழியாக செல்வது தெரிந்தது.இரண்டு
மூன்று சந்துகள் தாண்டி ஒரு இடம் சென்றதும்
என்னுடன் பயணித்தவர் இறங்கிவிட்டார்.

பின் எனது ஆட்டோ அந்த சந்துகளை விட்டு வெளியே
வந்து, மெயின் ரோடில் பயணிக்க ஆரம்பித்தது. நானும்
West Patel Nagar வந்துவிட்டதா என வெளியே உள்ள
பெயர் பலகைகளைப் பார்த்துக்கொண்டு வந்தேன்.

முதலில் Pusa Road என்ற பெயர் பலகையைப் பார்த்தேன்.
பின் East Patel Nagar என்ற பெயர் பலகையைப்
பார்த்ததும் தான், ஆட்டோ ஓட்டுனர் சரியான
இடத்திற்குத்தான் அழைத்து செல்கிறார் எனத்
தெரிந்துகொண்டதும் சற்றே நிம்மதி வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், நான் செல்ல வேண்டிய
West Patel Nagar வந்துவிட்டதை அறிந்தேன். வெளியே
பார்த்துக்கொண்டு வந்தபோது, வலப்புரத்தில்
National Seeds Corporation Ltd, என்ற பெயர்ப் பலகையைப்
பார்த்ததும் ‘ஸ்டாப் ஸ்டாப் ‘ எனக் கத்தினேன்.

உடனே ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி
என்னைப் பார்த்தபோது.நான் கையை வலப்புரம் காட்டி
‘அங்கு போங்கள்.’என ஆங்கிலத்தில் சொன்னேன்.
அவரும் ஆட்டோவை திருப்பி சாலையைக் கடந்து
எனது அலுவலகம் முன்பு நிறுத்தினார்.

அதற்குள் அவர் நான் ஊருக்கு புதியவன் என்பதையும்
இந்தி தெரியாது என்பதையும், புரிந்து கொண்டுவிட்டார்.
இறங்கியதும் நான் 100ரூபாய் நோட்டைக் கொடுத்ததும்
பாக்கி 75 ரூபாய் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

(பின்பு நண்பர்கள் மூலம் நான் கொடுத்தது அதிகம்
எனக் கேள்விப்பட்டேன்.என்ன செய்ய. என்னை
சரியான இடத்திற்கு கொண்டுவந்து விட்டாரே அதை
நினைத்து ஆறுதல் அடைந்தேன்,)

எனது ஹோல்டாலை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில்
நுழைந்தபோது,அங்கிருந்த இரவுக் காவல்காரர் இந்தியில்
ஏதோ கேட்டார்.நான் ஆங்கிலத்திலேயே ‘தார்வார் NSC
அலுவலகத்திலிருந்து வருகிறேன்.’ என்று பதில்
சொன்னேன்.அவர் நல்ல வேளையாக ஒன்றும்
சொல்லாமல் என்னை அழைத்து சென்று அலுவலகத்தின்
ஒரு பகுதியில் கையைக் காட்டி அங்கு எனது Luggage
வைக்க சைகை காட்டினார்.

அவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த ஆள் மதராசி.
இவனுக்கு இந்தி தெரியாது என்று. நான் அவரிடம்
Bathroom என்றதும், அவர் அது இருக்குமிடத்தைக்
காட்டினார்.

எங்களது அலுவலகம் ஒரு தனியாருடைய பெரிய
வீட்டில் இருந்ததால் அங்கு குளியல் அறையுடன்
கூடிய பல அறைகள் இருந்தன,வெள்ளிக்கிழமை
காலையில் தார்வாரில் குளித்தபிறகு, இரண்டு
நாட்களாகக் குளிக்காததால் எப்போது குளிப்போம்
என இருந்ததால், தண்ணீரைக் கண்டதும் எனக்கு
ஒரே மகிழ்ச்சி.பல்விளக்கி,காலைக்கடன் கழித்து,
குளித்து முடித்தேன்.

எங்கள் தலைமை அலுவலகத்தில் தொழில் நுட்பப்
பிரிவில்,கோவை வேளாண் கல்லூரியில் படித்த,
சங்கரன் என்பவர் பணிபுரிகிறார் எனக் கேள்விப்
பட்டிருந்தேன். அவர் எப்போது வருவார் எனத்
தெரிந்துகொள்ள அந்த ஊழியரிடம் சென்று ,
‘சங்கரன் எப்போது வருவார்?’ என ஆங்கிலத்திலேயே
கேட்டேன். அவர் தனது கைவிரல் சைகை மூலம்
9 மணி எனச்சொன்னார்.

அப்போது மணி 8.30 இருக்கும். அவர் வருவதற்குள்
உடைமாற்றி தயாராக இருக்கலாம் என எண்ணி,
நண்பர் அரங்கநாதன் கொடுத்த Coat அணிந்து,
‘டை’ யைக்கட்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென
பேச்சுக்குரல் கேட்டது.அந்த காவலாளியிடம் யாரோ
ஏதோ கேட்கிறார்கள் என்பதையும், அவர் அதற்கு
பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதையும்
புரிந்து கொண்டேன்.

நான் இருந்த அறை ‘ஷூ’ சத்தம் கேட்டபோது,
நிமிர்ந்து பார்த்தேன். அங்கு வந்தவர். ஆங்கிலத்தில்
‘நீங்கள் யார்?’ எனக்கேட்டார். நான் என்னைப்பற்றி
சொன்னதும்,‘வாருங்கள். என என்னை
அழைத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார்.
அந்த அறையின் வெளியே இருந்த பெயர் பலகை
மூலம் அவர்தான் எங்கள் Seed Production Officer,
Dr.M.S.Joshi என அறிந்துகொண்டேன்.

அவர்தான் எங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா
தொழில் நுட்ப ஊழியர்களுக்கும் தலைவர்.
எனது Boss அவர்தான் என்றதும் தயக்கதோடு
நின்றபோது, அவர் என்னை அன்போடு
உட்காரச்சொன்னார்.‘எப்போது வந்தீர்கள்?
எனக் கேட்டுவிட்டு.’இந்தி தெரியாதா?’ என்றார்.
(அந்த ஊழியர் சொல்லி இருப்பார் போலும்.)

‘தெரியாது.’ என்றதும்,‘பரவாயில்லை. எங்கு
தங்கப்போகிறீர்கள்?’ என்றார்.‘தெரியவில்லை சார்.
திரு சங்கரன் மூலம் ஒரு ஓட்டலில் தங்க
எண்ணியுள்ளேன்.’என்றதும்.கவலை வேண்டாம்.
‘கரோல் பாக்’கில்(Karol Bagh) உங்களவர்கள் ஓட்டல்கள்
நிறைய உள்ளன. சங்கரன் வந்ததும் அவர்
உங்களுக்கு உதவி செய்வார்.’ எனக்கூறி எனது
பயணம் பற்றி விசாரித்தார்,

நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி சொன்னதும்,
சிரித்துக்கொண்டே ’ரிசர்வ் செய்யாமல் வந்தால்
இப்படித்தான் என்ன செய்ய?’ என்றார். அவரிடம்
பேசும்போது முதலில் தயக்கம் இருந்தாலும்,
அவரது ஆதரவான வார்த்தையைக்கேட்டதும்
இரண்டு நாட்கள் நான் பட்ட கஷ்டங்கள்
மறைந்துவிட்டன.

(அந்த நேரத்தில், நான் தமிழ் நாடு வேளாண் துறையில்
இரண்டு மாதங்கள் பணியாற்றியபோது, எனது
மாவட்ட வேளாண் அதிகாரி அதிகாரத் திமிரோடு
என்னை நடத்தியது,அப்போது நினைவுக்கு வராமல்
போகவில்லை. அது பற்றி ‘நினைவோட்டம்’
தொடரில் எழுதுவேன்.)

அப்போது திரு சங்கரன் வந்துவிடவே, அவரைக்
கூப்பிட்டு ‘உங்கள் ஊர்க்காரர் வந்திருக்கிறார். அவருக்கு
உதவி செய்யுங்கள்.’என Dr.Joshi சொன்னார். அவருக்கு
நன்றி சொல்லிவிட்டு, திரு சங்கரனுடன் அவர் இருக்கும்
இருக்கைக்கு சென்றேன்.


தொடரும்

சனி, 3 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 5

ஸ்டேஷனுக்கு சென்று Left Luggage அறையில்
இருந்த எனது ‘ஹோல்டாலை’எடுத்துக்கொண்டு
தில்லி செல்லும் மெயில் வண்டி நிற்கும்
பிளாட்ஃபாரத்திற்கு என் நண்பரின்
அண்ணனுடன் சென்றேன்.

இரண்டாம் வகுப்பு பெட்டியை அடைந்தபோது
அது ஒரு முன் பதிவு செய்யப்படாத பெட்டி
போன்று தோன்றியது.முன்பதிவு செய்தவர்கள்
மேலே ஏறி படுத்திருக்க,அநேகம் பேர்
(மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டுடன்)
இருக்கையில் நெருக்கி அடித்துக்கொண்டு
உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும்
இருந்தனர்.

அதைப் பார்த்ததும் என் நண்பரின் அண்ணன்,
நீங்கள் இங்கேயே இருங்கள் நான் T.T.E
பார்த்து ஏதாவது செய்யமுடியுமா என்று
பார்க்கிறேன் என்று கூறி சென்றார்.நானும்
ஆவலுடன் நின்றிருந்தேன்.

அவர் திரும்பி வந்து இன்று சனிக்கிழமை
ஆதலால் வண்டியில் கூட்டம் அதிகம்.T.T.E
இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
பரவாயில்லை இதிலேயே ஏற்றி விடுகிறேன்
எனச்சொல்லி,எனது ஹோல்டாலை எடுத்து
கதவைத்திறந்து வைத்தார்.

உள்ளே நிற்கவே இடம் இல்லாதததால்,இரண்டு
கதவுகளுக்கு இடையே உள்ள இடத்தில் (Toilet)
அருகே வைத்தார்.என்னிடம்‘உங்கள் ஹோல்டால்
மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்.கூட்டம்
குறையும்போது உள்ளே சென்றுவிடலாம்.’
எனக்கூறிவிட்டு இறங்கிவிட்டார்.

வண்டி கிளம்பியதும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு
எனது இருக்கையில்(?) அமர்ந்தேன்.சிறிது நேரத்தில்
உள்ளே இருந்தவர்கள் சிலர் நிற்க இடம்
இல்லாததால் நான் இருந்த இடத்திற்கு அருகே
வந்து நின்றுகொண்டனர். அப்படி இப்படி நகரக்கூட
முடியவில்லை.மூச்சு மூட்டுவதுபோல் இருந்தது

நானும், இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு இருந்தும்,
இப்படி Toilet அருகே உட்கார்ந்து பயணிக்கவேண்டி
இருக்கிறதே என் தலை விதியை நொந்து கொண்டு
இருந்தேன். ஏன் இந்த பயிற்சிக்கு செல்ல
சம்மதித்தோம் என்று கூட நினைத்தேன்.

பயணத்தின் ஊடே அந்த ‘Toilet’ க்கு வரும்
பயணிகளுக்காக நான் எழுந்து,எழுந்து நின்று
அமர வேண்டியிருந்தது. அதைவிடக் கொடுமை
அவர்கள் உள்ளே போய் வரும்போது, வேறு
வழியில்லாமல் எனது ஹோல்டாலின் மேல்
காலை வைத்து சென்றதுதான். அவர்கள் சென்ற
பிறகு அதன் மேலேயே உட்காரவேண்டிய நிலை.

மாமன்னன் ஷாஜகான், காஷ்மீரைப்பற்றி
சொல்லும்போது, ‘இவ்வுலகில் சொர்க்கம் என்று
ஒன்று இருந்தால் அது இங்கேதான்! அது இங்கேதான்!
அது இங்கேதான்!
என்று சொன்னதாக சொல்வார்கள்.
(If ever there is Paradise on Earth. It is here!
It is here! It is here! )


என்னைக் கேட்டால் ‘நரகம்’ என்று ஒன்று இருந்தால்
அது அன்று நான் பயணம் செய்த இடம்தான்’ என்று
அடித்துச் சொல்வேன்.

இரவு சுமார் 2 மணி இருக்கும். வண்டி ஏதோ ஒரு
ஸ்டேஷனில் நின்றது. சன்னல் வழியே பார்த்தபோது
அது ‘சூரத்’ எனத் தெரிந்தது. அங்கே நிறைய கூட்டம்
இரயில் ஏறக் காத்திருந்தது.

நான் இருந்த பெட்டி அருகே வந்த ஒரு கும்பல்
‘கோலோ. கோலோ.’ என சப்தமிட்டு கதவைத்
தட்டினார்கள். கதவருக்கே நின்ற ஒருவர்
இரக்கப்பட்டு கதவைத் திறந்ததும், இரண்டு மூன்று
பேர் என்னையும் மற்றவர்களையும்
மிதித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள்.

என்னால் உட்காரவும் முடியவில்லை. நிற்கவும்
முடியவில்லை.மொழி தெரியாததால் பேசவும்
முடியவில்லை.நல்ல வேளையாக அவர்கள்
உள்ளே சென்றுவிட்டனர். இரவு முழுதும்
உட்கார்ந்துகொண்டே தூங்காமல் தூங்கினேன்.

காலையில் எழுந்து மற்றவர் வருமுன் பல் விளக்கி
விட்டு காலை காஃபிக்காக காத்திருந்தேன்.
வட மாநிலங்களில் தேனீர்தான் கிடைக்கும்
என்றாலும் காஃபி வருமா என்ற நைப்பாசைதான்.
ஆனால் எதுவும் வரவில்லை.

(இந்த நேரத்தில் நான் படித்த ஒரு செய்தி நினைவுக்கு
வருகிறது. தென்னகத்திலிருந்து ஒரு மாணவன்
IAS நேர்முகத்தேர்வுக்கு சென்றாராம். அந்த தேர்வில்
‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ எனக் கேட்டபோது,
அவர்,’நான் தென்னாட்டிலிருந்து வருகிறேன்.’
என்றாராம். அதற்கு தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர்,
நீங்கள் இரயிலில் தானே வந்தீர்கள். எந்த இடத்தில்
தென்னாடு முடிந்து வடநாடு ஆரம்பிக்கிறது?’ எனக்
கேட்டதற்கு அந்த மாணவன் சொன்னாராம்,’எப்போது
நான் காஃபி கேட்டதற்கு ,டீ கிடைத்ததோ அங்கேதான்
வடநாடு ஆரம்பிக்கிறது.’ என்றாராம். இது உண்மையா
அல்லது இட்டுக் கட்டியதா எனத்தெரியவில்லை.)

காலை சுமார் 9 மணிக்கு இரயில் ரட்லம் சந்திப்பை
(மத்ய பிரதேசம்) அடைந்தபோது வெளியே எட்டிப்
பார்த்தேன். என் பெட்டிக்கு அருகே ஒருவர் பூடி பூடி
எனக் கூவிக்கொண்டு, நம் ஊரில் ‘சோன் பப்டி’
விற்பவர்கள் கொண்டுவரும் பெரிய ‘மோடா’ போன்ற
ஒன்றின் மீது பூடிகளை(நாம் பூரி என்று சொல்கிறோமே
அதேதான்) வைத்து, அவைகளை தராசில் நிறுத்து
விற்றுக்கொண்டு இருந்தது எனக்கு வியப்பாய்
இருந்தது.

அருகில் சென்ற போது அவர் என்ன கேட்டார் எனத்
தெரியவில்லை.‘வேண்டுமா?’ எனக் கேட்கிறார் எனப்
புரிந்துகொண்டு தலையை ஆட்டினேன்.

உடனே அவர் தராசில் சில பூரிகளை வைத்து நிறுத்துக்
கொடுத்தார். அருகில் இருந்த ஒருவர் உதவியுடன் அவர்
கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அங்கேயே நின்று
சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணீர்
குடித்துவிட்டு பெட்டிக்கு வந்துவிட்டேன்.
(அப்போதெல்லாம் தண்ணீர் விற்கப்படவில்லை.)

திரும்பவும் நரக வேதனைதான். மதிய உணவு
எதுவும் கிடைக்கவில்லை. மாலை சுமார் 5 மணிக்கு
சவாய் மதாபூர் (ராஜஸ்தான்) என்ற ஊரை
அடைந்தபோது, உள்ளே இருக்கையிலிருந்து
கதவருகே வந்த ஒருவர் என்னைப் பார்த்து,
இந்தியில் ஏதோ சொன்னார். நான் ‘மலங்க மலங்க’
விழித்ததைக் கண்டு ஆங்கிலத்தில், ‘உள்ளே இடம்
இருக்கிறதே நீங்கள் வந்து உட்காரலாமே?’ என்றார்.
அப்பாடா என எழுந்து உள்ளே போய் இடமிருந்த
ஒரு இருக்கைக்கு கீழே எனது ஹோல்டாலை
வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

எனக்கு அருகில் இருந்த ஒருவர் அவருடன் வந்த
ஒரு சிறுமியுடன் தமிழில் பேசியதைக்கேட்டதும்
பாலை வனத்தில் சோலையைப் பார்த்தது போன்ற
மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் ‘இரவு சாப்பாடு
எங்கு கிடைக்கும்’ என்றேன்.

அவர்’ கவலை வேண்டாம். நான் வாங்கும்போது
உங்களுக்கும் வாங்கித்தருகிறேன்.’என்றார். இரவு
சுமார் 9 மணிக்கு ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி
நின்றபோது அவர் இறங்கிப்போய் எனக்கும் சப்பாத்தி
வாங்கித் தந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு இடம்
கிடைத்த நிமம்தியில் அப்படியே உறங்கிவிட்டேன்.

காலையில் கண் விழித்து இறங்கத்தயாரானேன்.
16/10/1967 திங்கள் அன்று சுமார் 6 மணிக்கு இரயில்
புது தில்லி இரயில் நிலையத்தை அடைந்தது.

தொடரும்

புதன், 30 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 4

Churchgate ஸ்டேஷனை அடைந்ததும் இறங்கி
விசாரித்தபோது, முதல் வகுப்பு முன்பதிவுக்கு,
அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள கட்டிடத்தில்
இயங்கும் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும்
என்றார்கள்.

அந்த இடம் மிக அருகில் இருந்ததால் நடந்தே
அங்கு சென்றேன்.அங்கு சென்று பார்த்தால் அதிக
கூட்டம். முன்பதிவு செய்ய நிறைய பேர்
காத்திருந்தார்கள். அங்கு நின்றால் நேரமாகும்
என்பதால் விசாரணை என எழுதப்பட்டிருந்த Counter
அருகே சென்று அன்று இரவு தில்லி செல்லும்
மெயில் வண்டியில் முதல் வகுப்புக்கு இடம்
கிடைக்குமா என்று கேட்டேன்.

அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்,என்னை
வினோதமாகப் பார்த்து ‘இன்று இரவு பயணிக்க
முன்பதிவா? இதோ இங்கு இருப்பவர்கள், பல
நாட்களுக்குப் பிறகு பயணிக்க இன்று வந்து
‘கியூ’ வில் நிற்கிறார்கள். நீங்கள் வந்து இன்றைக்கு
வேண்டும் என்று கேட்கிறேர்களே.அதற்கு
வாய்ப்பே இல்லை.’ என சொல்லிவிட்டு தன்
பணியில் மூழ்கிவிட்டார்.

நல்ல வேளை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கு
அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார்.

இனி என்ன செய்வது என யோசித்துக்கொண்டே
திரும்பவும் Churchgate ஸ்டேஷன் வந்தபோது,பயங்கரத்
தலைவலி. அப்போதுதான் நினைவுக்கு வந்தது
நான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று.

‘மெய்வருத்தம்பாரார்
பசிநோக்கார் கண்துஞ்சார்
---------------------------
கருமமே கண்ணாயினார் ‘


என்று குமரகுருபரர் பாடியதுபோல்,முன்பதிவு
பற்றியே நினைத்துக்கொண்டு இருந்ததால்
பசியே தெரியவில்லை.

மேலும் காலையில் முன்பதிவு இல்லாமல் வண்டியில்
பயணித்ததால் கூட்ட நெருக்கடியில் சாப்பிடுவது
பற்றி நினைப்பே வரவில்லை.

காலியாக இருந்த வயிறு,தலைவலி மூலம் எச்சரிக்கை
மணி அடித்ததால் இனி அதை தவிர்க்க முடியாது என்ற
நிலைக்கு வந்ததும்,ஸ்டேஷனில் இருந்த சிற்றுண்டி
விடுதியில் பிரட்&ஜாம் தேநீர் சாப்பிட்டு ஒருவாறு
பசி ஆறினேன்.

இனி நண்பர் அரங்கநாதனின் அண்ணனைப் பார்த்து,
அவரின் உதவியைத்தான் நாடவேண்டும் என முடிவு
செய்து (வேறு வழியும் இல்லை என்பது வேறு விஷயம்)
Central க்கு பயணச்சீட்டு வாங்கி கிளம்பத்தயாராக இருந்த
ஒரு மின் தொடர் வண்டியில் ஏறினேன்.

எங்கே Central ஸ்டேஷன் ஐ தவறவிட்டுவிடுவோமோ
என்ற தவிப்பில் வாயில் அருகே கைப்பிடியைப்
பிடித்துக்கொண்டு நின்றிருந்தேன்.

Central ஸ்டேஷன் பலகையைப் பார்த்ததும், அவசரம்
அவசரமாக இறங்க யத்தனித்தபோது என் அருகே
நின்றிருந்த ஒருவர் கையைப் பிடித்து நிறுத்தி கேட்டார்
‘என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று.

‘நான் இறங்கப் போகிறேன்’ என்றதும்,அவர் ‘இந்த
வண்டி இங்கு நிற்காது. நீங்கள் ஊருக்கு புதியவரா?’
என்றார்.

‘ஆம்’ என்றதும், ‘பம்பாயில் சில மின் வண்டிகள்
எல்லா நிலையத்திலும் நிற்காது. நீங்கள் வண்டியில்
ஏறுமுன் பிளாட்ஃபாரத்தில் உள்ள தகவல் பலகையைப்
பார்த்து இருக்கலாமே?’என்றார்.

இப்போது என்ன செய்யப்போகிறோம் என்று
தவித்தபோது அவர் சொன்னார்.’கவலை வேண்டாம்.
இது அடுத்து ‘மகாலக்ஷ்மி’ என்ற ஸ்டேஷனில்
நிற்கும்.அங்கு இறங்கி திரும்ப Central ஸ்டேஷன்
நிற்கும் வண்டியாகப் பார்த்து ஏறி வந்துவிடுங்கள்.’
என்றார்.

இது ஏதடா புதிய தலைவலியாக உள்ளதே என
நினைத்து வேறு வழியின்றி மகாலக்ஷ்மி ஸ்டேஷன்
எப்போது வரும் எனக்காத்திருந்தேன். அந்த ஸ்டேஷன்
வந்தபோது,அவர் சொன்னார் ‘இங்கு நீங்கள்
இறக்கிக்கொள்ளலாம்’என்று.அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்.

இப்போது எனக்குள் ஒரு போராட்டம். வெளியே சென்று
திரும்பவும் Central க்கு பயணச்சீட்டு எடுப்பதா,
வேண்டாமா என்று? ஒருவேளை வெளியே பயணச்சீட்டு
வாங்க செல்லும்போது, பயணச்சீட்டு பரிசோதகர் திடீரென
பயணச்சீட்டை காண்பிக்கசொல்லி, சென்ட்ரலில் இருந்து
பயணச்சீட்டு வாங்காமல் வந்து ஏமாற்றியதாக எடுத்துக்
கொண்டால் என் செய்வது என்ற கவலைதான். சரி
வெளியே செல்லவேண்டாம். வந்தது வரட்டும் எனத்
துணிந்து திரும்பவும் வரும் இரயிலில் சென்ட்ரல்
செல்வோம். அப்படி யாரேனும் கேட்டால் உண்மை
நிலையை சொல்வோம் என்றெண்ணி பிளாட்ஃபாரத்தில்
காத்திருந்தேன்.

அடுத்து வந்த இரயிலில்,சென்ட்ரலில் நிற்குமா எனக்
கேட்டுக்கொண்டு ஏறினேன். சென்ட்ரல் வரும் வரை
இதயம் பட பட என அடித்துக்கொண்டது நிஜம்.

நல்ல வேளையாக அந்த கூட்டத்தில் பயணச்சீட்டு
பரிசோதகர் யாரும் வரவில்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்
வந்ததும் உடனே இறங்கி வெளியே வந்துவிட்டேன்.
என் வாழ்வில் பயணச்சீட்டு இல்லாமல்,பம்பாய்
சென்ட்ரல் முதல் மகாலக்ஷ்மி ஸ்டேஷன் வரை
சென்று பயணித்தது அதுவே முதலும் கடைசியும்.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நேரே நண்பர்
அரங்கநாதன் அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். என்
அதிர்ஷ்டம் அவர் அலுவலகத்திலிருந்து
திரும்பியிருந்தார். நண்பரின் இன்னொரு அண்ணியும்
அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தார்.

அவரிடம் அவரது துணைவியார் நான் வந்து சென்றது
பற்றி கூறியிருக்கவேண்டும். நான் என்னைப்பற்றி
அறிமுகம் செய்தபோது,அவர் ‘இன்னும் அரங்கநாதனின்
கடிதம் வரவில்லை. அதனாலேன்ன.பரவாயில்லை.’
என்றார்.

பிறகு அவரிடம் எனது Churchgate முயற்சி பற்றி
சொன்னதற்கு, நீங்கள் அங்கு போயிருக்கத்
தேவையில்லை. பயணம் செய்யும் நாளில் நிச்சயம்
இடம் கிடைக்காது. பரவாயில்லை. இன்று இரவு நாம்
முன்பே ஸ்டேஷன் சென்று இரண்டாம் வகுப்பு
பெட்டியில் இடம் பிடிக்கலாம்’ என்றார்.

அதற்குள் அவரது துணைவியார் வந்து காஃபி
கொடுத்துவிட்டு, ‘தவறாக எண்ணவேண்டாம். இங்கு
நிறைய பேர் பொய் சொல்லி உள்ளே வந்து
திருடிப்போவதுண்டு. அதனால்தான் இவர் வரட்டும்
என்றேன். தவறாக எண்ணவேண்டாம்.’ என்றார்.

நான்'பரவாயில்லைங்க.எனக்கு இப்போது ஒரே
கவலை. எப்படி பயணம் செய்யப்போகிறேன்
என்பதுதான்.’என்றேன். பின்பு நண்பரின் அண்ணன்
என்னை ‘வெளியே போய்வரலாம் வாருங்கள்.’என்று
கூறி என்னை Marine Drive அழைத்து சென்றார்.

எனக்கு அங்கு எதிலும் நாட்டமில்லை. எப்போது
திரும்புவோம் என கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டு
இருந்தேன். மாலை 7 மணி வரை இருந்து விட்டு
வீடு திரும்பினோம்.

மதியம் நான் சரியாக சாப்பிடவில்லை என அறிந்த
அவர்கள் வீட்டில் எனக்கு நல்ல இரவு விருந்து
கொடுத்தனர். இரவு 8 மணிக்கு அந்த குடியிருப்புக்கு
எதிரே இருந்த ஸ்டேஷனுக்குகிளம்பியபோது,
என்னுடன் நண்பரின் அண்ணனும் வந்தார். வீட்டில்
உள்ளோருக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.தொடரும்

திங்கள், 28 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 3

Victoria Terminus இரயில் நிலையத்தை இரயில்
சென்றடைந்ததும்,நான் ஏதும் சொல்லுமுன்பே ஒரு
போர்ட்டர் வந்து எனது Hold All ஐ எடுத்துக்கொண்டார்.
அது தான் இறங்கவேண்டிய இடம் என்பதால்,அதை
எடுத்துக்கொண்டு அவர் நிலையத்திற்கு வெளியே
செல்ல,நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.

வெளியே வந்ததும் அவர் ஏதோ கேட்க,அவர் என்ன
கேட்கிறார் என்பதை புரிந்துகொண்டு நான்
‘டாக்ஸி ஸ்டாண்ட்’என்றேன்.அவர் ஒரு டாக்ஸியில்
எனது ஹோல்டாலை வைத்ததும் அவர் கேட்ட
பணத்தை கொடுத்துவிட்டு டாக்ஸியில் ஏறி
அமர்ந்தேன்.

டாக்ஸி ஓட்டுனர் கீழே இறங்கி மீட்டரை
போட்டுவிட்டு, என்னைப் பார்த்ததும்,நான்
‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்றேன்.அவர் ஒன்றும்
பேசாமல் வண்டியை ஓட்டினார்.

எனக்கு நான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியாது.
எங்குபோகிறேன் என்றும் தெரியாது. ஆனால் ஏதோ
பம்பாய் பழக்கப்பட்டது போல் வெளியே பார்த்துக்
கொண்டு இவர் நம்மை சரியான இடத்துக்கு அழைத்து
செல்லவேண்டுமே என நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இந்த நேரத்தில் நான் படித்த ஒரு அறிவுரையை
எழுதுவது சரி என நினைக்கிறேன்.நாம் ஒரு புதிய
இடத்திற்கு சென்றால் நாம் அங்கு புதியவர் என்பதைக்
காட்டிக் கொள்ளக்கூடாதாம்.நாம் அந்த இடத்தை
சேர்ந்தவர் போல் நடந்துகொள்ளவேண்டுமாம்.
அப்போதுதான் நாம் ஏமாறுவதிலிருந்து
தப்பிக்கலாமாம்.

மேலும் ஒருவரைத்தேடி ஒரு வீட்டில்
விசாரிக்கும்போது, இது இன்னாருடைய வீடுதானே
என்று கேட்கக்கூடாதாம்.நாம் தேடும் நபரின்
பெயரைச்சொல்லி அவர் இருக்கிறாரா எனக்
கேட்கவேண்டுமாம்.

எனவே நானும் ஊருக்கு புதியவன் என்பதை காட்டிக்
கொள்ளவில்லை.ஆனால் அந்த வாடகை கார்
ஓட்டுனர் என்னை ஏமாற்றாமல் பம்பாய் சென்ட்ரல்
ஸ்டேஷன் கொண்டுவிட்டார்.நான் மீட்டரைப் பார்த்து
பணம்கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
(நம் சென்னையில் அன்றும் இன்றும் ஏன் என்றுமே
நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று இது)

நான் அங்கேயும் ஒரு போர்ட்டர் மூலம் எனது
உடைமைகளை எடுத்து சென்று ‘Left luggage room’ல்
வைத்து இரசீது வாங்கிக்கொண்டு.பயணச்சீட்டு தரும்
counter க்கு சென்று எனது பயணச்சீட்டைக் காட்டி
அன்று இரவு கிளம்பும் தில்லி மெயிலில் இடம்
இருக்குமா எனக் கேட்டேன்.

நல்ல வேளையாக நான் ஆங்கிலத்தில் கேட்ட
கேள்விக்கு அங்கு இருந்த ஊழியர் ஆங்கிலத்திலேயே
பதிலளித்தார்.‘இரண்டாம் வகுப்புப்பெட்டியில்
தூங்கும் வசதி கொண்ட படுக்கைகள் முன்பே பதிவு
முடிந்து விட்டபடியால்,இடமில்லை.உங்களிடம்
பயணச்சீட்டு வைத்து இருந்தாலும் முன்பதிவு
இல்லாமல் பயணம் செய்வது கடினம். கூட்டம்
அதிகமாக இருக்கும்.எனவே எதற்கும் முதல் வகுப்பு
பெட்டிகளில் இடம் இருக்கிறதா என முயற்சி
செய்யுங்கள். ஆனால் அதற்கு நீங்கள் Churchgate
அலுவலகத்திற்கு செல்லவேண்டும்’ என்றார்.

அங்கு எப்படி செல்வது எனத்தெரியாததால்,அதற்கு
முன்பு நண்பர் அரங்கநாதனின் அண்ணன் வீட்டுக்கு
சென்று அவர்களால் உதவி செய்யமுடியுமா எனக்
கேட்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.

நண்பர் அரங்கநாதன் எனக்கு முன்பே
சொல்லியிருந்தார்.பம்பாயில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
எதிரில் Maratha Mandir என்ற திரைப்பட அரங்கு ஒன்று
இருக்கும்.அதற்கு பக்கத்திலே RBI ஊழியர்கள்
குடியிருப்பு இருக்கும் என்று. (இப்போதும் ஏதாவது ஒரு
இடத்தை சொல்லவேண்டுமானால் அங்குள்ள திரைப்பட
அரங்கை சொன்னால் போதும் யாரும் சுலபமாக வழி
காட்டி விடுவார்கள்.) ஆனால் யாரையும் உதவி
கேட்காமல் சாலையைக் கடந்து அந்த திரைப்பட
அரங்குக்கு அருகே இருந்த RBI ஊழியர்கள்
குடியிருப்புக்குள் நுழைந்தேன்.

நனபர் கொடுத்திருந்த வீட்டு முகவரியை அடைந்து
கதவருக்கே இருந்த அழைப்பு மணியை அழுத்தியதும்
நான் நினைத்ததுபோல் உடனே கதவைத்
திறக்கவில்லை.‘யார் அது?’என இந்தியில்
கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தார்கள்.அதுவும்
முழுதாக அல்ல.கதவில் சங்கிலி பிணைத்து
இருந்ததால் முழுதாக திறக்கவில்லை.

உள்ளே இருந்தவர் திரு அரங்கநாதனின்
அண்ணியார் எனத் தெரிந்துகொண்டு தமிழில்
‘நான் தார்வாரிலிருந்து வருகிறேன்.
திரு அரங்கநாதனின் நண்பன்.அவர் என் வருகை
பற்றி கடிதம் உங்களுக்கு எழுதி இருந்தாரே.
கிடைத்ததா?’ என்றேன்.

அதற்கு அவர் ‘அப்படி ஏதும் வரவில்லை. நீங்கள்
வேண்டுமானால் 5 மணிக்கு மேல் வாருங்கள்.அவர்
வந்துவிடுவார்.அவரிடம் பேசுங்கள்.’என்றார்.

பம்பாய் போன்ற நகரங்களில் இதுபோல் அன்னியர்கள்
வந்து ஏதாவது சொல்லி உள்ளே வந்து கொள்ளை
அடிப்பது உண்டு என்பதால் அவர் அப்படி சொன்னார்
போலும்

அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை
புரிந்துகொண்டு’சரிங்க அப்படியே 5 மணிக்கு வருகிறேன்.
அதற்கு முன்பு நான் Churchgate இரயில் நிலையம்
செல்லவேண்டும். எப்படி செல்வது?’ எனக்கேட்டேன்.

அதற்கு அவர், ‘நீங்கள் எதிரே உள்ள சென்ட்ரல் ஸ்டேஷன்
சென்று,Electric Train மூலம் போய் வரலாம் என்றார்.

சரி! நாமும் நேரத்தை வீணாக்காமல் போய் வரலாமே
என்று திரும்பவும் ஸ்டேஷன் வந்து மின் வண்டிக்கான
பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு, பிளாட்பாரத்தில்
காத்திருந்தேன்.அங்கிருந்த இரயில்வே ஊழியர் உதவி
செய்ய, Churchgate செல்லும் வண்டி வந்ததும் ஏறி
ஸ்டேஷனை அடைந்தேன்.


தொடரும்

வெள்ளி, 25 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 2

நான் ஏறிய இரயில் பெட்டியில் ஒரு சிலர்தான்
இருந்தனர். அப்போதெல்லாம் யாரும் இரண்டாம்
வகுப்புப் பெட்டியில் ஏறமாட்டார்கள்.பயணம்
செய்வோர் ஒன்று அரசு ஊழியராய் இருப்பர்
இல்லாவிடில் இரயில்வே ஊழியராய் இருப்பர்.

எனக்கு பதிவு செய்யப்பட்ட இருக்கை இருந்த Bayல்
யாரும் இல்லை.சன்னல் வழியே ஊர்களையும்,
இரயில் நின்ற இடங்களையும் பார்த்துக்கொண்டு
நேரத்தைப் போக்கிக்கொண்டு இருந்தேன்.

பெல்காம் இரயில் நிலையம் சென்றதும்,உணவு
பரிமாறும் ஊழியர் ஒருவர் வந்து இரவுக்கு‘சாப்பாடு
வேண்டுமா?’ எனக் கன்னடத்தில் கேட்டார்.

நான் தார்வார் சென்று 10 மாதங்களுக்கு
மேலாகிவிட்டதால்,என்னால் கன்னடத்தை
புரிந்துகொண்டு பேசமுடிந்தது.

‘இரவு உணவு வேண்டும்.’ என கன்னடத்திலேயே
கூறினேன்.’எப்போது தருவீர்கள்?’என்றதற்கு அவர்
‘சார். மீரஜ் சந்திப்பில்(மகாராஷ்டிர மாநிலத்தில்
உள்ள ஒரு இரயில் சந்திப்பு) தருவேன்.’ என்றார்.

மீரஜ் சந்திப்பு வந்ததும் இரவு உணவு வந்தது.
சாப்பிட்டுவிட்டு, அமரும் இருக்கையில் யாரும்
இல்லாததால் கீழேயே படுத்துவிட்டேன்.அன்றைக்கு
எந்த கஷ்டமும் எனக்குத் தெரியவில்லை.

மறுநாள் சனிக்கிழமை அன்று, காலை கண்
விழித்தபோது, இரயில் ஏதோ ஒரு மகாராஷ்டிர
மாநிலத்தில் உள்ள ஒரு இரயில் நிலையத்தைத்
தாண்டி சென்றுகொண்டு இருந்ததைப் பார்த்தேன்.
உடனே பல் துலக்கிவிட்டு, புனே வந்தவுடன்
இறங்கத் தயாரானேன்.

காலை சுமார் 7 மணி வாக்கில் இரயில் புனே இரயில்
நிலையத்தை அடைந்தது.பெட்டிக்குள் ஏறிய போர்ட்டர்
ஏதோ மராட்டியில் கேட்டார்.அவர் சுமையைத் தூக்கிவர
வேண்டுமா எனக் கேட்பதை புரிந்துகொண்டு,நான் தந்திச்
செய்தி போல் ‘பாம்பே டிரயின்' என்று சொன்னேன்.

உடனே அவர் எனது Hold All ஐ எடுத்துக்கொண்டு
இறங்கினார். அவரை பின் தொடர்ந்தபோது,அடுத்த
பிளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு இரயிலின்
மூன்றாம் வகுப்பு பெட்டி ஒன்றில் எனது ‘ஹோல்டாலை’
வைத்தார்.

நான் Second Class Compartment என்று எவ்வளவோ
சொல்லியும் அவர் அதை காதில் வாங்கிக்
கொண்டதாகத் தெரியவில்லை.அவரிடம் என்னால்
அவரது மொழியில் பேசி விளக்கமுடியாததால்
வேறு வழியின்றி அந்த பெட்டியிலேயே அமர்ந்து
கொண்டு, அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து
அனுப்பிவிட்டேன்.

என்னை அவர் ஏற்றிய பெட்டி முன் பதிவு
செய்யப்படாதது என்பதால் கூட்டம் அதிகமாக
இருந்தது.

போர்ட்டர் வந்து ஏற்றியதால் உட்கார இடம்
கிடைத்தது.ஆனால் கையையும் காலையும்
குறுக்கி வைத்துக்கொண்டுதான் உட்காரமுடிந்தது.
எல்லோரும் மராத்தியில் பேசிக்கொண்டு இருந்ததால்
ஒன்றும் புரியவைல்லை.

மேலும் எனக்குள் இன்னொரு பயமும் இருந்தது.
அந்த சமயத்தில்தான் பால் தாக்கரேயின்
‘சிவ சேனா’ இயக்கம் தென்னிந்தியர்களை குறி
வைத்து தாக்கிக்கொண்டு இருந்தது. ஒருவேளை
நாம் ‘மதராசி’ எனத் தெரிந்தால் தொந்தரவு
தருவார்களோ என்ற பயத்தால் கண்ணை
மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

அந்த நினைப்பில் காலை சிற்றுண்டி சாப்பிட
வேண்டுமென்ற நினைப்பே வரவில்லை.
அந்த இரயில் சுமார் 8 மணிக்கு ‘புனே’ வை விட்டு
கிளம்பியது. சற்றும் நேரம் கழித்து கண் திறந்து
பார்த்தபோது என் அருகில் இருந்த ஒரு பெரியவர்
செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.
அவரை நான் பார்ப்பதைப் பார்த்ததும், நான் அந்த
செய்தித்தாளை படிக்க விரும்பிக்கிறேன் என நினைத்து,
தான் படித்த தாளை என்னிடம் கொடுத்தார்.

அதுவோ மராத்தி மொழியில் வரும் ஒரு தினத்தாள்.
அதை வேண்டாம் என சொல்லத்தெரியவில்லை.
பேசாமல் அதை வாங்கிக்கொண்டேன். எங்காவது
ஆங்கிலம் தென்படுகிறதா எனப் பார்த்தபோது அந்த
தினத்தாளின் பெயர் ஆங்கிலத்தில் ‘Lok Satta' என
அச்சிடப்பட்டு இருந்தது. அது இந்தியன் எக்ஸ்பிரஸ்
குழுமத்தை சேர்ந்தது எனத்தெரியும்.

அடுத்தப்பக்கத்தில் இருந்த, ஒரு Tender Notice நல்ல
வேளையாக ஆங்கிலத்தில் வெளியாகி இருந்ததால்
அதைப் படித்துவிட்டு(?) அவரிடம் கொடுத்துவிட்டென்.
நல்ல வேளையாக அவர் ஏதும் பேசவில்லை.
திரும்பவும் கண்ணை மூடிக்கொண்டேன்.

இப்படி சுமார் 4 மணி நேரம் தவிப்புடன் எப்போது
மும்பை வரும் எனக் காத்து இருந்தேன்.சுமார்
மதியம் 12 மணிக்கு அந்த இரயில் இப்போது
சத்ரபதி சிவாஜி முனையம் என சொல்லப்படுகிற
Victoria Terminus ஐ அடைந்தது.


தொடரும்

புதன், 23 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 1

1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் (அப்போது
மைசூர் மாநிலம்) தார்வாரில் தேசிய விதைக்
கழகத்தில்(National Seeds Corporation Ltd.,)வேலை
பார்த்துக் கொண்டிருந்தேன்.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் எனது வட்டார
மேலாளர் கூப்பிட்டு புது தில்லியில், எங்களது
நிறுவனமும்,இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமும்
(Indian Agricultural Research Institute) பன்னாட்டு
விதை ஆய்வு கூட்டமைப்பும் (International Seed Testing
Association) சேர்ந்து விதை ஆய்வு பற்றி 16/10/1967
முதல் 24/11/1967 வரை 40 நாட்கள் ஒரு பயிற்சியை
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நடத்த
இருப்பதாகவும், அதற்கு தில்லியில் இருந்த
எங்களது தலைமை அலுவலகம் என்னை தேர்ந்து
எடுத்திருப்பதாகவும் சொன்னார்.

கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.காரணம்
பணியில் சேர்ந்த பிறகு கிடைக்கும் முதல் பயிற்சி
என்பதாலும், புது தில்லியை காணும் வாய்ப்பு
கிடைக்கிறதே என்பதாலும் தான்.

பயணச்சீட்டை முன் பதிவு செய்ய உடனே தார்வார்
இரயில்நிலையம் சென்றேன். தார்வாரில் இருந்து
தில்லிக்கு நேரடி இரயில் இல்லை எனவே
தார்வாரிலிருந்து புது தில்லி செல்ல
வேண்டுமென்றால், பெங்களூரிலிருந்து புனே
(அப்போது பூனா) செல்லும் இரயிலில் சென்று,
பிறகு அங்கிருந்து மும்பை(அப்போது பம்பாய்)
சென்று,பின் மும்பையில் தில்லிக்கு இரயில்
ஏறவேண்டும்.

அப்போது இப்போது போல் கணினி மூலம் பதிவு
செய்வது இல்லையாதலால்,புது தில்லிக்கு
பயணச்சீட்டு தந்தாலும்,13/10/1967 தேதி அன்று
மதியம் செல்லும் இரயிலில் புனே வரைக்கும்
தான் முன்பதிவு செய்தார்கள்.

அப்போது இரயில் பெட்டிகளில் மூன்று வகுப்புகள்
உண்டு.மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் உட்காரும்
மற்றும் சாயும் இடங்களில் Cushion இருக்காது.

இரண்டாம் வகுப்புப்பெட்டியில் அனைத்து
இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவதில்லை.
முன்பதிவு செய்தவர்கள் மட்டும் மேலே Luggage
வைக்கும் பகுதியில் இரவில் படுத்து உறங்கலாம்.
மற்றவர்கள் உட்கார்ந்து தான் செல்ல முடியும்.

ஆனால் மூன்றாம் வகுப்பு பெட்டிகளை
1977 ஆம் ஆண்டு ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு
வந்ததும் எடுத்துவிட்டார்கள்.

எனது நிறுவன விதிமுறைப்படி,இரண்டாம்
வகுப்பில் பயணம் செய்ய எனக்கு அனுமதி
உண்டு.எனவே தில்லி வரை பயணம் செய்ய
இரண்டாம் வகுப்புக்கான பயணச்சீட்டை
எடுத்தேன்.

குறிப்பிட்ட நாள் வருமுன் தில்லி செல்ல
ஆயத்தமானேன். எனது ஆடைகள் மற்றும்
தேவையானவற்றை, Hold All எனப்படும்
பைகளுடன் கூடிய சுருட்டி எடுத்து செல்லக்கூடிய
படுக்கை விரிப்பில் 40 நாட்களுக்கு
தேவையானவைகளை எடுத்து வைத்தேன்.

நண்பர் திரு அரங்கநாதன் அவர்கள் ‘நீங்கள்
செல்லும் காலம் குளிர் ஆரம்பிக்கும் காலம்.
எனவே என்னுடைய இந்த ஸ்வேட்டரை எடுத்து
செல்லுங்கள். உபயோகமாக இருக்கும்.
வரும்போது நீங்கள் உங்களுக்கு என்று ஒன்று
வாங்கி வரலாம்’ என்று அன்புடனும்,
அக்கறையுடனும் அவரது ஸ்வேட்டரை
கொடுத்தார். அதோடு அவரது கோட் மற்றும்
‘டை’யையும் கொடுத்தார்.

புதில்லிக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சி
இருந்தாலும் மனதில் ஒரு இனம் புரியாத கவலை
இருந்தது.தார்வாரிலிருந்து புனே,மும்பை வழியாக
தில்லிக்கு இரயிலில் பயணம் செய்யவேண்டும்.
வெள்ளி மதியம் தார்வாரிலிருந்து கிளம்பினால்
திங்கள் காலைதான் தில்லியை அடைய முடியும்.
அதாவது மூன்று இரவு பயணம்.எனக்கு இந்தி
எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும்,பேசி
பழக்கமில்லாததால் எப்படி வழியில் ஏதாவது
தேவைப்பட்டால் சமாளிக்கப்போகிறோம்
என்ற கவலைதான்.

கூடவே முன்பதிவு இல்லாமல், மும்பையில்
இருந்து எப்படி தில்லி செல்லப்போகிறோம்
என்ற கவலையும் சேர்ந்துகொண்டது.

உடனே நண்பர் அரங்கநாதன் அவர்கள்
மும்பையில் அவரது அண்ணன் சென்ட்ரல்
இரயில் நிலையம் அருகே உள்ள RBI
ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசிப்பதால்,
அவர் நிச்சயம் முன் பதிவு கிடைக்க உதவுவார்
என்று தைரியமூட்டி, அவரது அண்ணனுக்கு ஒரு
கடிதமும் எழுதினார். எனக்கு அவரது
முகவரியையும் கொடுத்தார்.

ஆவலோடும்,இனம்புரியா தயக்கத்தோடும்
13/10/1967 அன்று மதியம் உடன் பணிபுரிந்த நண்பர்கள்
வழியனுப்ப,தார்வாரில் இரயில் ஏறினேன்.


தொடரும்

திங்கள், 21 நவம்பர், 2011

நினைவோட்டம் 60

விருத்தாசலத்தில் என் அண்ணனுடன் தங்கி படித்த
போது அடிக்கடி திரைப்படம் பார்க்க அனுமதிக்க
மாட்டார். மிகவும் கண்டிப்பானவர் என்பதால்
காலாண்டு,அரையாண்டு மற்றும் வருடாந்திர
தேர்வுகள் முடிந்தவுடன் தான் திரைப்படம்
பார்க்க அனுமதிப்பார்.

ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து பார்த்த
படங்கள் வணங்காமுடி&வஞ்சிக்கோட்டை
வாலிபன் ஆகியவை.சிலசமயம் அம்மா
சிபாரிசின் பேரிலும்,சில படங்களுக்கு
அனுமதித்திருக்கிறார்.

அப்படிப்பார்த்த படங்கள் யார் பையன்,முதலாளி
ஆகியவை.அவரே சிலசமயம் அவரது எழுதப்படாத
விதிகளை மீறி அனுமதி தந்த,து புதையல்,பதிபக்தி
மற்றும் ஜனக் ஜனக் பாயல் பாஜே ஆகிய
படங்களுக்கு.

பத்தாம் வகுப்பில் 7 படங்களும், பள்ளி இறுதி
ஆண்டில் 4 படங்களும் பார்த்திருக்கிறேன்.(அந்த
படங்களின் பெயர்கள் நினைவில் இருந்தாலும்
அவைகளை இங்கே எழுதாமல் விடுகிறேன்)

அப்போதெல்லாம் சக மாணவர்கள் திரைப்படம்
பார்த்துவிட்டு வந்து வகுப்பில் சொல்லும்போது
நம்மால் பார்க்க இயலவில்லையே என
நினைத்ததுண்டு.

ஒருவேளை அப்படி நிறைய படங்கள்
பார்த்திருந்தால்,எனது கவனம் சிதறி,தேர்வில்
நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி
பெற்றிருக்கமாட்டேன்.அண்ணன் அப்படி
அனுமதிக்காததும் நன்மைக்குத்தான் என
இப்போது நினைக்கிறேன்.

ஆனால் பின்னாட்களில் திருச்சியில் புகுமுக
வகுப்பு வகுப்பு படித்தபோது பார்த்த படங்கள்
20க்கு மேலும், அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் நான்காண்டுகள் படித்தபோது பார்த்த
திரைப்படங்கள் (பல்கலைக்கழக திறந்தவெளி
அரங்கில் பார்த்த படங்கள் நீங்கலாக) 80க்கு
மேலும் இருக்கும்.

வழக்கம்போல் S.S.L.C தேர்வு முடிந்த அன்று
என் அண்ணன் திரைப்படம் பார்க்க அனுமதி
தந்ததும், நான் பார்த்தது விருத்தாசலம்
இராஜராஜேஸ்வரி திரை அரங்கில்
ஓடிக்கொண்டிருந்த, மறைந்த சிரிப்பு நடிகர்
சந்திரபாபு அவர்கள் நடித்த சகோதரி என்ற
திரைப்படம்.இரவுக்காட்சிக்கு வகுப்பு நண்பர்
திரு கண்ணன் அவர்களுடன் சென்றது
நினைவுக்கு வருகிறது.

படம் முடிந்து நண்பர் கண்ணனிடம் விடைபெற்று
வீட்டிற்கு வந்து படுத்தேன்.முதல் நாளே
அண்ணன் நாளை நீ ஊருக்கு போகலாம் என்று
சொல்லியிருந்ததால் விடியற்காலை 5 மணிக்கு
எழுந்து ஊருக்கு செல்ல ஆயத்தமானேன்.

தேர்வை முடித்து ஊருக்கு செல்கிறோமே என்ற
மகிழ்ச்சி இருந்தாலும் ஏனோ ஒரு இனம் புரியாத
சோகம் இருந்தது உண்மை.

(மூன்றாண்டு காலம் அண்ணனின் கண்டிப்பில்
வளர்ந்தாலும்,எனது எண்ணப்படி நான் சுதந்திரத்தை
இழந்ததாக நினைத்திருந்தாலும்,அவர் கண்டிப்பாக
இருந்தது நான் நன்றாக படிக்கவேண்டும்
என்பதற்காகத் தான் என்று இப்போது
புரிகிறது.)

‘போய் வருகிறேன்’என அண்ணனிடம் சொல்லிவிட்டு
வீட்டுக்கு அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில்
வந்து ஊருக்கு போகும் பேருந்துக்காக
காத்திருந்தேன்.

பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்
நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே உள்ள
தெற்கு வீதி வழியே தான் செல்லும்.

அப்போது எங்கள் ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது.
விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடம் செல்லும்
பேருந்தில் ஏறி குறுக்கு ரோடு என சொல்லப்படும்
கருவேப்பிலங்குறிச்சியில் இறங்கி சுமார் 3 கி.மீ
நடந்துதான் எங்களது ஊரான தெ.வ புத்தூரை
அடையவேண்டும்.

பேருந்து வந்ததும் ஏறி,குறுக்கு ரோடில் இறங்கி
ஊரை நோக்கி நடந்தேன்,மனதில் ஏதோ
சாதித்ததுபோன்ற நினைப்புடன்!

வீட்டை அடைந்த போது அப்பா இல்லை.
‘எங்கே?’ எனக்கேட்டபோது நெல் அறுவடையாகி
வந்திருப்பதால், அப்பா போரடி என நாங்கள் அழைத்த
களத்து மேட்டில் இருப்பதாக அம்மா சொன்னார்கள்.

வயலில் நெல் அறுவடைசெய்ததும் நெற்கதிர்
கட்டுகளையெல்லாம் எங்களது களத்து மேட்டுக்கு
கொண்டு வந்து வைத்து அவைகளை அடித்து
நெல்லைப் பிரித்து,தூற்றி மூட்டையில் கட்டி
வீட்டுக்கு கொண்டு வரும் வரை அப்பா இரவில்
அங்கேயே தங்கிவிடுவார்கள்.

காப்பி குடித்துவிட்டு நேரே அங்கே சென்றேன்.அப்பா
என்னைப்பார்த்ததும் ‘தேர்வை எப்படி எழுதியிருக்கிறாய்?’
எனக்கேட்டார்கள்.‘நன்றாக எழுதியிருக்கிறேன்’ என
சொல்லிவிட்டு,அப்பாவிடம் ‘நீங்கள் வீட்டுக்குபோய்
வாருங்கள். நான் காவலுக்கு இருக்கிறேன்.’என்றேன்.

சுமார் ஒரு வாரம் இரவைத்தவிர, பகலில் அங்கு
இருந்து நெல் வீட்டுக்கு வரும் வரை அப்பாவுக்கு
உதவியாக இருந்தேன்.

விடுமுறை சுமார் 3 மாதம் என்பதால் அம்மா
என்னை ‘பெரியம்மா ஊருக்கு போய்வாயேன்.
அக்காவும் சந்தோஷப்படுவாள்’ என்றார்கள்.
நானும் அப்போதைய திருச்சி மாவட்டத்தில்
(இப்போது அரியலூர் மாவட்டம்) இருந்த
என் பெரியம்மாவின் ஊரான கோமான்
என்ற ஊருக்கு கிளம்பினேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வெள்ளி, 18 நவம்பர், 2011

நினைவோட்டம் 59

நாங்கள் படித்தபோது இந்தி ஒரு விருப்பப் பாடமாக
இருந்தது.தேர்வு எழுதுவது கட்டாயமில்லை.
ஆறாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை இந்திக்கான
வகுப்புகளில் ஆசிரியர்கள் வந்தாலும் பாடம் நடத்த
மாட்டார்கள்.

மாணவர்கள் இந்தி கட்டாய பாடமாக இல்லாததால்,
இந்தி பாடத்தைக் கற்க ஈடுபாடு காட்ட மாட்டார்கள்.
அதனால் இந்தி ஆசிரியர் மாணவர்கள் பாடம் நடத்த
மாட்டார்கள்.இந்தி எழுத்துக்களை கரும்பலகையில்
எழுதிவிட்டு 'ஏதாவது படிங்கடா’ என்று சொல்லிவிட்டு
அமர்ந்துவிடுவார்கள்.

கால்,அரை மற்றும் இறுதித்தேர்வுகளில் இந்தி
எழுதத் தெரிந்தவர்கள் கேள்வித்தாளில் உள்ள
கேள்விகளையே திருப்பி எழுதிக்கொடுத்து வருவது
வழக்கம். விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள்
ஏதோ இந்த மட்டிலாவது இந்தியில் எழுதுகிறார்களே
என்று சில மதிப்பெண்கள் தருவது உண்டு.

நான் முன்பே நினைவோட்டம் 19 ல் எழுதியிருந்தபடி,
பெண்ணாடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது,மாலை
வேளைகளில் வகுப்புகள் முடிந்தவுடன்,தக்ஷிண இந்தி
பிரச்சார சபாவால் நடத்தப்பட்ட ‘பிராத்மிக்’தேர்வுக்காக,
எங்கள் வகுப்பு இந்தி ஆசிரியரால் நடத்தப்பட்ட
Tuition வகுப்புகளில் சேர்ந்து படித்து இருக்கிறேன்.
தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் எனக்கு இந்தி எழுத
படிக்கத் தெரியும்.

ஆனால் பாடம் நடத்தப்படாததால் தேர்வுகளில்
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியாததால்
நானும் கேட்கப்பட்ட கேள்விகளையே பதிலாக
எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

(அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி
வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில்
பதிந்து தருவார்கள். இப்போது போல் ஒற்றைத்தாளில்
அல்ல )

இந்திப்பாடங்கள் நடத்தப்படாததால் நிச்சயம் தேர்வை
எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறமுடியாது.அப்படியே
கேள்விகளைத்திருப்பி எழுதினாலும் ஒற்றைப்பட
இலக்கத்தில்தான் மதிப்பெண் கிடைக்கும்.

எங்களது S.S.L.C புத்தகத்தில், இந்தி பாடத்திற்கு
பெறப்போகும் ஒற்றைப்பட இலக்க மதிப்பெண்ணை
பதிய விரும்பாததால்,நாங்கள் இந்தி தேர்வைப்
புறக்கணிக்க முடிவு செய்தோம்.

தேர்வை எழுதாவிட்டால் Absent என எழுதுவார்கள்.
ஒற்றை இலக்க மதிப்பெண்ணை விட அதுவே தேவலாம்
என எண்ணினோம்.மேலும் அதைவிட தேர்வைப்
புறக்கணிக்க இன்னொரு காரணமும் இருந்தது.

அப்போதெல்லாம் S.S.L.C விடைத்தாளை திருத்தும்
ஆசிரியருக்கு ஒரு தாள் ஒன்றுக்கு 50 காசுகள்
தருவார்கள். நாமெல்லாம் ஒன்றும் எழுதாதபோது
இந்தி ஆசிரியருக்கு ஏன் பணம் போய் சேரவேண்டும்
என்ற ‘நல்ல எண்ண’மும் காரணம்!

எனவே தமிழ் மொழிபெயர்ப்புத் தேர்வை காலையில்
எழுதிவிட்டு மறுநாள் நடக்க இருந்த கணிதம்
மற்றும் அறிவியல்தேர்வுக்குப் படிக்க வீட்டுக்கு
வந்துவிட்டேன்.

மதியம் முழுதும் இரண்டு ஆண்டு அறிவியல்
பாடங்களைப் படித்துவிட்டு, பின் இரவு வரை
கணக்குப்போட்டுப் பார்த்தேன்.

மறுநாள் இரண்டு தேர்வுகளையும் நன்றாக
எழுதினேன்.முன்பே எழுதி இருந்தபடி
கணிதத்தில் 86 மதிப்பெண்கள் பெற்று
பள்ளியில் முதல் இடத்தையும், மாவட்டத்தில்
இரண்டாவது இடத்தையும் பெற்றேன்.

தேர்வு எழுதும் கடைசி நாளான வெள்ளியன்று
காலையில் நடந்த சமூகவியல் தேர்வையும்
நன்றாக எழுதிவிட்டு நண்பர்களிடம் பிரியாவிடை
பெற்று வீட்டுக்கு வந்தேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டதால், அன்று
இரவு திரைப்படம் பார்க்க அண்ணன் அனுமதி
தந்தார்.நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வியாழன், 17 நவம்பர், 2011

மூக்கின் மேல் விரலை வைக்கலாம்!!!

சாதாரண மனிதர்களுக்கு மூக்கு என்பது ஒருவருடைய
முகத்தை அழகுபடுத்தி அல்லது விகாரப்படுத்தி
காட்டும் முக்கியமான உறுப்பு.

நிறைய பேர்(திரையில் மின்னும் நட்சத்திரங்கள் உட்பட)
தங்களது முக வசீகரத்தை கூட்ட மூக்கை அறுவை
சிகிச்சைமூலம் மாற்றி அமைத்துக்கொள்வதும் உண்டு.

ஏன் சில குற்றவாளிகள் கூட காவல் துறையிடமிருந்து
தப்பிக்க மூக்கை அறுவை சிகிச்சை மூலம்
மாற்றிக்கொள்வது உண்டு.

நம்மைப் பொருத்தவரை அது ஒரு அடையாள உறுப்பு
அவ்வளவுதான்.

நம்மிடையே மூக்கை இணைத்து பல வழக்குச்சொற்கள்
உண்டு. ஒருவருக்கு கோபம் சட்டென வந்தால்
‘அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்’ என்போம்.

யாராவது நாம் முக்கியமான வேலையை செய்து
கொண்டு இருக்கும்போது வந்தால் ‘கழுகிற்கு மூக்கில் வேர்த்தது போல் வந்து விட்டாயே?’ என்போம்.

நல்ல பணியை செய்தோரை பாராட்டும்போது'மூக்கின்
மேல் விரல் வைக்கும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறார்' என்போம்.

அவ்வளவு ஏன் ‘மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்’
என்ற பழமொழிகூட வழக்கத்தில் இருக்கிறது.

ஆனால் உடற்கூறு இயல் மருத்துவத்திலோ மூக்கு
என்பது நுகரவும், சுவாசிக்கவும் உதவும் மிக
முக்கியமான உறுப்பு என்பார்கள்.சரியாக மூக்கு
அமையாவிடில் அது பல பிரச்சினைகளைத் தரக்கூடும்.

மூக்கு சில வியாதிகளின் அறிகுறிகளைக் கூட
காட்ட உதவுமாம். இன்றைய ‘The Hindu Business Line’ ல்
வந்த ஒரு செய்தி அவ்வாறுதெரிவிக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டார்ம்ஸ்டட்(Darmstadt)
தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்
பேராசிரியர் Boris Schmidt அவர்களும் அவரது குழுவும்
சேர்ந்து ஆராய்ச்சி செய்து, ஒருவருடைய மூக்கை
‘பார்’ப்பதன் மூலம் Alzheimer’s என சொல்லப்படுகிற
மறதி நோய் பல வருடங்களுக்குப் பிறகு மூளையை
தாக்க இருப்பதை முன்பே கண்டறியமுடியும் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அல்ஷெமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின்
மூளையில் உள்ள உயிரணுவில்(Cell)சேர்ந்துள்ள
Tau என சொல்லப்படுகிற நஞ்சு சார்ந்த புரதம்
(Toxic Protein) மறதி நோய் வரப்போகின்ற பல
வருடங்களுக்கு முன்பே மூக்கில் உள்ள
சளி சுரக்கும் சவ்வுகளில் (Mucous Nasal Membrane)
காணப்படுமாம்.

இந்த நஞ்சுப் புரதம் தான் மூளையில் உள்ள
உயிரணுக்களில் அதிக அளவில் உண்டாகி,
உயிரணுவை சிக்கலாக்கி அவைகளை உடைத்து
நோயைத் தீவிரப்படுத்துகிறதாம்.

Fluorescent Dye எனப்படும் மின்னும் நிறமி யை
மாத்திரையாகவோ அல்லது Nasal Spray மூலமோ
கொடுத்து, இந்த நஞ்சுப் புரதம் மூக்கில் உள்ளனவா
என்பதை ஒளிரும் Endoscope மூலம் கண்டறியமுடியுமாம்.

எவ்வளவுக்கெவ்வளவு அவை அதிகம் காணப்படுகிறதோ,
அந்த அளவுக்கு மூளையில் அதிகம் பாதிப்பு இருக்குமாம்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மறதி நோய் தாக்கும்
முன்பே கண்டுபிடித்து குணமாக்கும் சாத்தியக்கூறுகள்
உண்டு என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகளின் செயலுக்கு
நாம் மூக்கின் மேல் விரலை வைக்கலாமே!!

எனவே திரும்பத் தலைப்பை படிக்கவும்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது! தொடர் பதிவு

நேற்று(நவம்பர் திங்கள் 14 ஆம் நாள்) நாடே
‘குழந்தைகள் நாள்’ கொண்டாடும் நேரத்தில்,
தானும் தொடர் பதிவிட்டு என்னையும் பதிவைத்
தொடர பணித்த நண்பர் திரு சென்னை பித்தன்
அவர்கட்கு நன்றி.

எப்போது முதல் ‘குழந்தைகள் நாள்’ கொண்டாட
ஆரம்பித்தோமென வராலாற்றை திருப்பிப்பார்த்தால்,
முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்
சபை தீர்மானித்தபடி அக்டோபர் மாதம்
கொண்டாடப்பட்டதாம்.

குழந்தைகள் நல உரிமைக்கான பிரகடனம்
ஐக்கிய நாடுகள் சபையில்,1959 ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் நிறைவேற்றப்
பட்டதால்,பின் அந்த ஆண்டு முதல் உலகம்
முழுதும் நவம்பர் 20 ஆம் நாளையே ‘குழந்தைகள்
நாள்’
ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

நம் நாட்டைப் பொருத்தவரை 1964 ஆம் ஆண்டு
முதல், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை
அமைச்சரும், குழந்தைகளால் சாச்சா (மாமா) நேரு
என அன்புடன் அழைக்கப்பட்டவருமான
திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான
நவம்பர் திங்கள் 14 ஆம் நாளையே ‘குழந்தைகள்
நாள்’
ஆக கொண்டாடி வருகிறோம்.

குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த பாசம்
காரணமாகவும்.அவரே இந்தியாவின் முதல்
குழந்தை போன்றவர் என்பதாலும், அவரது பிறந்த
நாளை ‘குழந்தைகள் நாள்’ எனக் கொண்டாடுவது
சாலப் பொருத்தமே.

ஆனால் எனக்குள் சில கேள்விகள் இந்த நேரத்தில்
எழுகின்றன.

வருடா வருடம் நவம்பர் மாதத்தில் மட்டும் பள்
ளிகளில் சில குழந்தைகளுடன் இந்த நாளை
கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் பல இலட்சம்
குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் வாட
விடுவது சரியா?

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம்
இருந்தும் அது சரியாக அமல் படுத்தப்படுகிறதா?

சிவகாசியில் பட்டாசுத் தொழிலிலும், மும்பை,
அகமதாபாத் போன்ற நகரங்களில் மிட்டாய் தயாரிக்கும்
தொழிலிலும்,நாடு முழுதும் செங்கல் சூளையிலும்
சிறு குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலை
செய்கிறார்களே,அது அரசுக்கு தெரியாதா?

‘எதிர்கால இந்தியா இக்கால குழந்தைகள் கையில்
உள்ளது’
என பண்டித நேரு கூறியது உண்மையானால்,
எல்லாக் குழந்தைகளும் இளமையில் கல்வி
கற்றாலல்லவா, இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக
இருக்கமுடியும்.

அதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம் அல்லது
என்ன செய்யப்போகிறோம்?

இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும் வரை,
எப்படி மழலைகள் உலகம் மகத்தானது என
சொல்லமுடியும்? என்னைப்பொறுத்தவரை இந்த
விழாக்கள் வெறும் சம்பிரதாயமானவைதான்.
அனைவருக்கும் இதில் இரு வேறு கருத்து
இருக்கமுடியாது என நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திங்கள், 14 நவம்பர், 2011

நினைவோட்டம் 58

எங்களது S.S.L.C தேர்வு அந்த ஆண்டு பிப்ரவரி
மாதம் 22 ஆம் தேதி (திங்கட் கிழமை) ஆரம்பித்து
26 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முடிந்தது
என் நினைக்கிறேன்.

திங்களன்று காலையில் ஆங்கிலம் முதல் தாளும்,
பிற்பகலில் ஆங்கிலம் இரண்டாம் தாளும்,
செவ்வாய் அன்று காலையில் தமிழ் முதல் தாளும்,
பிற்பகலில் தமிழ் இரண்டாம் தாளும்,புதனன்று
பிற்பகலில் தமிழ் மொழிபெயர்ப்பு தாளும்
பிற்பகலில் இந்தியும், வியாழன் அன்று காலையில்
கணிதமும், பிற்பகலில் அறிவியலும்,வெள்ளி
அன்று காலையில் சமூகவியல் தேர்வுகளும்
இருந்தன.

இப்போதெல்லாம் ஒரு நாளில் ஒரு பாடத்திற்கான
தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.மற்றும் ஒரு
தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையே ஒன்று
அல்லது இரண்டு நாட்கள் இடைவெளிகூட
இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு முன் நன்றாக
திரும்பவும் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

நாங்கள் தேர்வு எழுதியபோது இந்தமாதிரி தேர்வுக்கு
இடையே நாட்கள் இல்லாததால்,தேர்வுகளுக்கு
முதல் நாள் அன்று இரண்டு பாடங்களுக்கு
படிப்பது என்பது நினைத்துப்பார்க்கமுடியாத செயல்.

அதுவும் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கான
தேர்வுகள் ஒரே நாளில் இருந்தபோது, எப்படி இரண்டு
வருட பாடங்களை திரும்பவும் Revise செய்து
படித்தோம் என்று இன்றைக்கு நினைத்தாலும்,
மலைப்பாக இருக்கிறது.

இன்றைக்கு இவ்வாறு தொடர்ந்து ஒரே நாளில் இரு
தேர்வுகள் வைத்தால் கல்வியாளர்கள் ஒருமித்த
குரலில் ஆட்சேப்பிப்பார்கள் என்பது நிச்சயம்.ஆனால்
நாங்கள் படித்தபோது யாரும் மாணவர்களுக்கு இது
சுமையாக இருக்குமே,மன அழுத்தம் தருமே என்று
குரல் கொடுக்கவில்லை.

நான் தேர்வுக்கு என்னை நன்றாக தயார் செய்து
கொண்டு தேர்வு நாளை எதிர்நோக்கி இருந்தேன்.
பிப்ரவரி 22ஆம் தேதி காலையில் ஆங்கிலம்
முதல் தாள் தேர்வை நன்றாக எழுதிவிட்டு
வெளியே வந்தேன்.

அங்கே காத்திருந்த என் அண்ணன் ‘எப்படி
எழுதியிருக்கிறாய்? எல்லா கேள்விகளுக்கு பதில்
எழுதினாயா? என்றெல்லாம் கேட்டபோது அருகே
இருந்த ஒரு ஆசிரியர்,‘சபா,அவனைத் தொந்தரவு
செய்யாதே.மதியம் உள்ள இரண்டாவது தேர்வு
எழுதியபின் விவரம் கேட்டுக்கொள்ளலாம்’
எனக்கூறி அவரை மேற்கொண்டு கேள்விகள்
கேட்பதைத் தடுத்துவிட்டார்.

அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு மதியம்
தேர்வுக்கான,ஆங்கிலம் இரண்டாம் தாள்
பாடங்களை படித்துவிட்டு தேர்வை எழுதினேன்.

இரண்டாம் நாளில் தமிழ் இரண்டு தேர்வுகளையும்
நன்றாகவே எழுதினேன்.மூன்றாம் நாள் காலை தமிழ்
மொழிபெயர்ப்பு தேர்வு.அதில் ஒரு பத்தியை (Paragraph)
ஆங்கிலத்தில் கொடுத்து தமிழாக்கம் செய்யச்
சொல்வார்கள்.இன்னொரு பத்தியை தமிழில் கொடுத்து
அதை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க சொல்வார்கள்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்வதும்,
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்வது
அந்த வயதில் கடினமான காரியமாகத் தோன்றியது.
காரணம் அப்போது சொல்வளம் (Vocabulary) எனக்கு
குறைவாக இருந்ததால் அல்லது இல்லாமலே
இருந்ததால்!

எப்படியோ அந்த தேர்வை முடிந்தவரை நன்றாக
எழுதினேன்.மதியம் இந்தி பாடத்தில் தேர்வு.அதை
எழுதவேண்டாம் என நாங்கள் முன்பே முடிவு
செய்து இருந்ததால் அநேகமாக எல்லா மாணவர்களும்
அன்று தேர்வுக்கு செல்லவில்லை


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வெள்ளி, 11 நவம்பர், 2011

நினைவோட்டம் 57

பள்ளி இறுதித்தேர்வு எழுது முன் கிடைத்த
விடுமுறை நாட்களில்,நான் வீட்டில் இருந்து
படிக்க ஆரம்பித்தேன்.நாங்கள் குடியிருந்த
வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் இரவில்
இலாந்தர் விளக்கில் தான் படித்தேன்.

9 ஆம் வகுப்பு படிக்கும்போதும்,10 ஆம் வகுப்பு
படிக்கும்போதும் வெவ்வேறு வீடுகளில் வாடகைக்கு
இருந்தாலும்,அங்கெல்லாம் மின் இணைப்பு இருந்தது.
S.S.L.C படித்த வருடம் அச்சுதம்மன் கோவில்
வீதியில் உள்ள வீட்டிற்கு மாறி வந்தபோது, அங்கு
மின் இணைப்பு இல்லை.

நாங்கள் குடி இருந்த தெருவில் இருந்த
வீடுகளுக்கெல்லாம் மின் இணைப்பு இருந்தபோது,
எங்கள் வீட்டுக்கு இல்லாதிருந்ததன் காரணம்
அந்த வீட்டின் உரிமையாளர் மின் இணைப்பு
ஏனோ பெறாததால் தான்.

மின் விளக்கு இல்லாதது எனக்கு அசௌகரியமாகத்
தெரியவில்லை.எனது ஊருக்கே 1963 ஆம்
ஆண்டுதான் மின் வசதியே வந்தது.ஊருக்கு
செல்லும்போது இலாந்தர் விளக்கிலும்,சிம்னி விளக்கு
என சொல்லப்பட்ட, காடா விளக்கிலும் படித்த
அனுபவம் இருந்ததால், இலாந்தர் விளக்கில்
படிப்பது ஒன்றும் கடினமாக இல்லை.

ஒரே பாடத்தை நாள் முழுதும் படித்தால்
அலுப்பாய் இருக்கும் என்பதால் ஒவ்வொரு
பாடத்தையும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு
மணி நேரம் படிக்க வேண்டும் என ஒரு
அட்டவணை போட்டு தேர்வுக்கு படித்தேன்.
அந்த வழியையே பின்பு வங்கியில் சேர்ந்த
பிறகு C.A.I.I.B தேர்வுக்கு படிக்கும்போதும்
பின் பற்றினேன்.

பள்ளி இறுதிதேர்வில் கணிதம் மற்றும் அறிவியல்
பாடங்களைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு
மற்றும் பள்ளி இறுதி ஆண்டு வகுப்பில்
நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள்
கேட்பார்கள்.

சமூகவியல் (Social Studies) பாடத்தைப்
பொறுத்தவரை 9, 10 மற்றும் பள்ளி இறுதிஆண்டு
வரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேள்விகள்
கேட்பார்கள்.

எனவே தேர்வுக்கு முன்பு, நடப்பு ஆண்டில்
நடத்தப்பட்ட பாடங்கள் மட்டுமல்லாமல்
முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட
பாடங்களையும் திரும்பவும் படித்து நினைவில்
இருத்திக்கொள்ளவேண்டியது அவசியம்
என்பதால் அட்டவணை போட்டு
திட்டமிட்டு படித்தேன்.

விடியற்காலை எழுந்து படிக்கும் வழக்கம்
எனக்கு இல்லாததால் இரவு பத்து மணி
வரை படித்திருக்கிறேன்.

இரவில் நான் இலாந்தர் முன் அமர்ந்து
படித்துக்கொண்டு இருக்கும்போது என் அண்ணன்
சில நாட்களில் நான் படிக்கிறேனா அல்லது
உட்கார்ந்து கொண்டே தூங்குகிறேனா என
பார்ப்பதற்காக சப்தம் போடாமல் பின்னால்
வந்து நின்றிருக்கிறார்.

நான் தூங்காமல் படித்துக்கொண்டு இருந்ததால்
அவர் வந்து நிற்பது எனக்கு தெரிந்தும்,அதை
தெரிந்தது போல் நான் காட்டிக்கொண்டது
இல்லை.

நாங்கள் தேர்வு எழுதிய கால கட்டத்தில்
ஒவ்வொரு நாளும் காலையில் மற்றும்
பிற்பகலில் தேர்வுகள் நடக்கும். அதாவது
ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்.நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

புதன், 9 நவம்பர், 2011

பருத்தி புடவையாய் காய்க்குமா?

நமக்கு கிடைக்கவேண்டிய ஒன்று,அதிக
வேலை வைக்காமல் சுலபமாக உடனே
கிடைத்தால்,‘பருத்தி புடவையாய் காய்த்தது
போல்?’ என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி
பேச்சுவழக்கில் உபயோகிப்பதுண்டு.

பருத்தி புடவையாய்க் காய்கிறதோ இல்லையோ,
வெண்ணிற பருத்தியை தந்த பருத்தி செடிகள்,
இனி பல வண்ணங்களில் பருத்தியைத் தர
இருக்கின்ற என்பது, இன்றைய ‘The Hindu
Business Line நாளிதழில் வந்த மகிழ்ச்சியைத்
தரக் கூடிய செய்தி.

கர்நாடக மாநிலம் தார்வாரில் இருக்கின்ற
வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள
வேளாண் விஞ்ஞானிகள்,பத்து ஆண்டுகள்
அரும்பாடுபட்டு நடத்திய சீரிய ஆராய்ச்சியின்
பயனாக கரும் பழுப்பு, இளம் பழுப்பு, மற்றும்
பச்சை வண்ணங்களில் காய்க்கும் பருத்தி
செடியை உண்டாக்கியிருக்கிறார்களாம்.

இதன் பயனாக புடவை மற்றும் ஆடை தயாரிப்பு
நிறுவனங்களுக்கு, அவைகளை வண்ணமாக்கும்
(Dyeing) செலவு இருக்காது என்பதால் தயாரிப்பு
செலவு பாதியாக குறையும் என்பதும்,
நுகர்வார்களாகிய நமக்கு குறைந்த விலையில்
ஆடைகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் செய்திகள்.

வண்ணமாக்கும் போது ஏற்படும் சுற்றுப்புற
தூய்மைக்கேடு (Pollution) இனி ஒருபோதும்
இருக்காது என்பது இவைகளை விட
முக்கியமான ஒன்று.

1997 லேயே நாம் நாட்டில் வண்ணப் பருத்திகள்
உற்பத்தி செய்து இருந்தாலும், அவற்றின்
நூல் இழை குட்டையாக இருந்ததாலும்,
அவற்றின் வலிமை (Strength) குறைவாக
இருந்ததாலும், பிரபலமாக வில்லை. மேலும்
அவ்வகை பருத்திகளின் மகசூலும்
குறைவாகவே இருந்தன.

தற்போது கண்டு பிடித்திருக்கும் பருத்தி
இரகங்கள், நீண்ட இழையும் மிக்க வலிமையும்
அதிக மகசூலையும் தருபவை.மேலும் இவ்வகை
பருத்தி இரகங்கள், மரபணு மாற்றப்பட்ட
(Genetically Modified)இரகங்கள் இல்லை என்பது
ஆறுதலான விஷயம்.

இவைகளை வணிக ரீதியில் சாகுபடி
செய்வதற்கு காதி மற்றும் கிராமத்தொழில்
நிறுவனமும் சில தனியார்களும் ஆர்வம்
காட்டியுள்ளார்களாம்.

விரைவில் மேற்குறிப்பிட்ட வண்ணங்கள்
மட்டுமல்லாமல் மற்ற வண்ணங்களிலும்
பருத்திஇழைகள் கிடைக்கும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்.

வேளாண் பெருங்குடி மக்களுக்கும்,தொழில்
நிறுவனங்களுக்கும் நுகர்வோர்களுக்கும்
பேருதவி செய்திருக்கின்ற,தார்வார் வேளாண்
பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு நமது
வாழ்த்துக்கள்!

சனி, 5 நவம்பர், 2011

நினைவோட்டம் 56

மாணவர் மன்றம் நடத்திய தேர்வு போன்று,
பாளையம்கோட்டையில் உள்ள St.Xavier,
St.John பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆங்கில
பாடத்திற்கான தேர்வை நடத்தினார்கள்.

இந்த தேர்வை எழுதுவது கட்டாயம் இல்லை
என்றாலும்,இதையும் நாங்கள் எழுதி எங்களை
பள்ளி இறுதித்தேர்வுக்கு தயார் செய்து
கொண்டோம். ஆனால் இதில் வெற்றி
பெறுவோருக்கு சான்றிதழ் ஏதும்
தரமாட்டார்கள்.

நாங்கள் படித்தபோது S.S.L.C இறுதி தேர்வுக்கு
முன்பு டிசம்பர் மாதத்தில் நடக்கும் அரை ஆண்டுத்
தேர்வை Selection தேர்வு என்பார்கள்.இந்த
தேர்வில் வெற்றி பெற்றால்தான் S.S.L.C தேர்வை
எழுத அனுமதிப்பார்கள்.

என்னுடைய வகுப்பில் என்னுடன் படித்த எனது
நெருங்கிய நண்பர்(பெயர் சொல்லவேண்டாம்
என நினைக்கிறேன்)ஒருவர் தேர்வில் தோல்வி
அடைந்ததால், எங்களுடன் இறுதித்தேர்வை
அவர் எழுத இயலவில்லை.அது எனக்கெல்லாம்
வருத்தமே.

அப்போதெல்லாம் பள்ளி இறுதித்தேர்வை
பிப்ரவரியிலேயே தேர்வை முடித்துவிடுவார்கள்.
அதனால்தான் நான் முன்பே எழுதி இருந்தபடி,
S.S.L.C படிக்கும் மாணவர்கள் ஏப்ரல் மாதம் வரை
இருக்க மாட்டார்கள் என்பதால்,பத்தாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களில் ஒருவரைத்தான்
மாணவர் தலைவனாக தேர்ந்தெடுப்பார்கள்.

ஜனவரி மாதத்திற்குள்ளேயே பாடங்களை
முடித்துவிட்டு பிப்ரவரி இரண்டாம் வாரம் முதல்
தேர்வுக்கு படிக்க விடுப்பு(Study Holidays)தருவார்கள்.

அந்த ஆண்டு(1960) எங்களது தேர்வுக்கு முந்தைய
விடுமுறை நாள் ஒன்றில் எங்களது பிரிவு உபசார
விழாவை வைத்திருந்தோம்.

விருத்தாசலத்தில் புகைப்படம் எடுக்கும் நிலையம்
இருந்தும், சிதம்பரத்தில் இருந்த R.T.Velu Bros
Studio விலிருந்து ஒருவர் வந்து புகைப்படம் எடுக்க
நண்பர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்தார்.
(காரணம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
ஆஸ்தான புகைப்படக்காரர்களான R.T.Velu Bros
நன்றாக படம் எடுப்பார்கள் என்பதால்தான்)

குறிப்பிட்ட நாளில் மாலை சுமார் 4 மணிக்கு
நாங்கள் கூடி,எங்களது தலைமை ஆசிரியர்
மற்றும் மற்றும் எங்களுக்கு பாடம் நடத்திய
ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எனது வகுப்பு நண்பர்களில் சிலர் (நண்பர்
கிருஷ்ணனையும் சேர்த்து) எங்களுக்கு பாடம்
நடத்திய ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்து
பேசினார்கள்.அப்போது ஏனோ நான் பேசவில்லை.

எங்கள் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்தி
பேசியபின் நண்பர் துரைராஜ்(கரிகாலன்)அவர்களை
நன்றியுரையாற்ற பணித்திருந்தோம்.

அவர் எல்லோருக்கும் நன்றி சொல்லி வரும்போது
புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த நண்பர்
கிருஷ்ணனுக்கு நன்றி சொல்லும்போது,‘சிதம்பரம்
சென்று புகைப்பிடிப்பாளரை அழைத்துவந்த
கிருஷ்ணனுக்கு நன்றி’ என்றபோது தலைமை
ஆசிரியர் உட்பட எல்லோரும் விழுந்து விழுந்து
சிரித்தோம்,நாங்கள் சிரித்த காரணம் தெரியாமல்
நண்பர் துரைராஜ் விழித்தது இன்னும் என்
நினைவில் நிற்கிறது.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

புதன், 2 நவம்பர், 2011

நினைவோட்டம் 55

அப்போதெல்லாம் பள்ளிப்படிப்பு 11 ஆண்டுகள்.
பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படிப்பு, பின்
ஒரு ஆண்டு புகு முக வகுப்பை(Pre University
Course)
கல்லூரியில் படித்தபின்(அதாவது 12
ஆண்டுகள் படித்தவுடன்) பட்டப்படிப்பில்
சேரமுடியும்.

நாங்கள் படித்தது தமிழ் வழி கல்வி முறையில்.
எல்லா பாடங்களும் தமிழில் தான் இருந்தன.
நகரத்தில் உள்ள சில பள்ளிகளைத்தவிர
மற்றவை யாவும் தமிழ் வழி கல்வி
முறையைத்தான் அப்போது பின்பற்றின.

இப்போதுபோல் எண்ணற்ற மழலையர் பள்ளிகள்/
Matriculation பள்ளிகள் இல்லாததால்,தங்களது
மழலை பேசும் பிள்ளைகளை ஆங்கில வழி
பள்ளியில் சேர்க்க எந்த பெற்றோரும்
துடித்துக்கொண்டு இருக்கவில்லை.

நான் படித்தபோது, பள்ளிக் கட்டணம்
கீழ் வகுப்புகளுக்கு மாதம் இரண்டு ரூபாய்
எழுபத்தி ஐந்து காசுகளும்,மேல் வகுப்புகளுக்கு
மாதம்ஐந்து ரூபாய் ஐம்பது காசுகள் தான்.
எனவே எல்லோருக்கும் மிக குறைந்த
கட்டணத்தில் தரமான கல்வி தாய்மொழி
மூலம் கிடைத்தது என்பது இப்போது பலருக்கு
ஆச்சரியத்தைத் தரலாம்.

தமிழில் பாடங்களை படித்ததால் பாடங்கள்
புரிந்ததோடு,தாய்மொழியிலும் சிறப்பாக
எங்களால் பேச,எழுத முடிந்தது.ஆனால்
இப்போதோ எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதால்,
தாய் மொழியான தமிழுக்கு யாரும் அவ்வளவு
முக்கியத்துவம் தருவதில்லை.

அதனால் தான் இப்போது உள்ள பிள்ளைகள்
தமிழை சரியாக படிக்க,உச்சரிக்க,எழுத
தடுமாறுகின்றனர்.மேலும் சிலர் அதிக
மதிப்பெண்கள் பெறவேண்டி இரண்டாம்
மொழியாக தமிழை தேர்வு செய்யாமல் இந்தி,
வடமொழி,ஃபிரெஞ்சு போன்ற மொழிகளைத்
தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களால் தமிழில் பேசினால் புரிந்துகொள்ள
முடியும் அவ்வளவே. ஒருவேளை இவர்கள்
தமிழ்நாட்டில் நிலம்,மனை போன்ற அசையா
சொத்துக்களை வாங்க நினைக்கும்போதுதான்
தான் தெரியும் தாய்மொழியை படிக்காததின்
விளைவை.

தமிழிலே பள்ளியில் படித்திருந்தாலும் கல்லூரியில்
புகுமுக வகுப்பில் சேர்ந்து மூன்று அல்லது நான்கு
மாதங்களுக்குள் எங்களால் ஆங்கிலத்தில்
நடத்தப்பட்ட பாடங்களை புரிந்து கொள்ள
முடிந்தது.எனவே எனது சமகாலத்தவர் யாரும்
பள்ளியில் ஆங்கில வழி கல்வி(English Medium)
யில் படிக்காததால்,கல்லூரியில் அல்லல்
படவில்லை.மாறாக சோபிக்கவே செய்தார்கள்.

நாங்கள் படிக்கும்போது,இப்போது போல் 11 ஆம்
வகுப்பிலேயே 12 ஆம் வகுப்புக்கான பாடங்களை
முடித்துவிட்டு,இறுதி ஆண்டில் Revision Test என
வைத்து மாணவர்களை கசக்கிப் பிழிந்து
இம்சை செய்ததில்லை.

நான் S.S.L.C படித்தபோது ஒரு நாள் கூட
எங்களுக்கு சிறப்பு வகுப்புக்கள்
நடத்தப்படவில்லை. வழக்கம்போல் காலை
10 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை
தான் வகுப்புகள் நடைபெற்றன.

ஒருதடவைகூட விடுமுறை நாட்களில் வகுப்புகள்
நடத்தப்படவில்லை.சொல்லப்போனால் நாங்கள்
எந்த வித பதற்றமோ மன அழுத்தமோ இல்லாமல்
மிகவும் மகிழ்ச்சியாக,மறு ஆண்டு கல்லூரியில்
சேரும் கனவுகளோடு படித்தோம் என்பது
மறுக்கமுடியாத உண்மை.

அந்த மகிழ்ச்சி இந்த கால மாணவர்களுக்கு
இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை.

எங்கள் பள்ளியில் Revision தேர்வுகள்
நடத்தப்படவில்லை என்றாலும் மாநில அளவில்
செயல் பட்ட சில குழுக்கள்/அமைப்புக்கள்
மாணவர்களுக்காக தமிழ், ஆங்கில பாடங்களில்
சிறப்புத் தேர்வுகளை டிசம்பர்/ஜனவரி
மாதங்களில் நடத்தின.

அப்படிப்பட்ட அமைப்பில் ஒன்றுதான் 1931 ல்
சென்னையில் துவங்கப்பட்ட மாணவர் மன்றம்
என்ற அமைப்பு.

இந்த மாணவர் மன்றம் பள்ளியில் இறுதி ஆண்டு
மாணவர்களுக்காக பொது மற்றும் சிறப்புத்தமிழ்
பாடங்களில் ஒவ்வொரு வருடமும் தேர்வுகள்
நடத்தும்.நாங்கள் படித்தபோது மயிலை
திரு சிவ முத்து அவர்கள் மாணவர் மன்றத்தின்
தலைவராகவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை
பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த
திரு கோ.வில்வபதி அவர்கள் போட்டிக்குழு
தலைவராகவும் இருந்தனர்.

அந்த தேர்வுகள் இறுதி தேர்வுக்கு முன்
நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் போல.

இந்த தேர்வுகளை எழுதுவது கட்டாயம் இல்லை
என்றாலும் மாணவர்கள் விரும்பி அதில்
பங்கேற்பார்கள். காரணம் அந்த தேர்வுக்கு
படித்தால் இறுதித்தேர்வை சுலபமாக
எழுதலாம் என்பதால்.

தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒருசான்றிதழும்
தருவார்கள்.நானும் அதில் கலந்துகொண்டு
தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி