வியாழன், 17 நவம்பர், 2011

மூக்கின் மேல் விரலை வைக்கலாம்!!!

சாதாரண மனிதர்களுக்கு மூக்கு என்பது ஒருவருடைய
முகத்தை அழகுபடுத்தி அல்லது விகாரப்படுத்தி
காட்டும் முக்கியமான உறுப்பு.

நிறைய பேர்(திரையில் மின்னும் நட்சத்திரங்கள் உட்பட)
தங்களது முக வசீகரத்தை கூட்ட மூக்கை அறுவை
சிகிச்சைமூலம் மாற்றி அமைத்துக்கொள்வதும் உண்டு.

ஏன் சில குற்றவாளிகள் கூட காவல் துறையிடமிருந்து
தப்பிக்க மூக்கை அறுவை சிகிச்சை மூலம்
மாற்றிக்கொள்வது உண்டு.

நம்மைப் பொருத்தவரை அது ஒரு அடையாள உறுப்பு
அவ்வளவுதான்.

நம்மிடையே மூக்கை இணைத்து பல வழக்குச்சொற்கள்
உண்டு. ஒருவருக்கு கோபம் சட்டென வந்தால்
‘அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும்’ என்போம்.

யாராவது நாம் முக்கியமான வேலையை செய்து
கொண்டு இருக்கும்போது வந்தால் ‘கழுகிற்கு மூக்கில் வேர்த்தது போல் வந்து விட்டாயே?’ என்போம்.

நல்ல பணியை செய்தோரை பாராட்டும்போது'மூக்கின்
மேல் விரல் வைக்கும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறார்' என்போம்.

அவ்வளவு ஏன் ‘மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்’
என்ற பழமொழிகூட வழக்கத்தில் இருக்கிறது.

ஆனால் உடற்கூறு இயல் மருத்துவத்திலோ மூக்கு
என்பது நுகரவும், சுவாசிக்கவும் உதவும் மிக
முக்கியமான உறுப்பு என்பார்கள்.சரியாக மூக்கு
அமையாவிடில் அது பல பிரச்சினைகளைத் தரக்கூடும்.

மூக்கு சில வியாதிகளின் அறிகுறிகளைக் கூட
காட்ட உதவுமாம். இன்றைய ‘The Hindu Business Line’ ல்
வந்த ஒரு செய்தி அவ்வாறுதெரிவிக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டார்ம்ஸ்டட்(Darmstadt)
தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்
பேராசிரியர் Boris Schmidt அவர்களும் அவரது குழுவும்
சேர்ந்து ஆராய்ச்சி செய்து, ஒருவருடைய மூக்கை
‘பார்’ப்பதன் மூலம் Alzheimer’s என சொல்லப்படுகிற
மறதி நோய் பல வருடங்களுக்குப் பிறகு மூளையை
தாக்க இருப்பதை முன்பே கண்டறியமுடியும் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அல்ஷெமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின்
மூளையில் உள்ள உயிரணுவில்(Cell)சேர்ந்துள்ள
Tau என சொல்லப்படுகிற நஞ்சு சார்ந்த புரதம்
(Toxic Protein) மறதி நோய் வரப்போகின்ற பல
வருடங்களுக்கு முன்பே மூக்கில் உள்ள
சளி சுரக்கும் சவ்வுகளில் (Mucous Nasal Membrane)
காணப்படுமாம்.

இந்த நஞ்சுப் புரதம் தான் மூளையில் உள்ள
உயிரணுக்களில் அதிக அளவில் உண்டாகி,
உயிரணுவை சிக்கலாக்கி அவைகளை உடைத்து
நோயைத் தீவிரப்படுத்துகிறதாம்.

Fluorescent Dye எனப்படும் மின்னும் நிறமி யை
மாத்திரையாகவோ அல்லது Nasal Spray மூலமோ
கொடுத்து, இந்த நஞ்சுப் புரதம் மூக்கில் உள்ளனவா
என்பதை ஒளிரும் Endoscope மூலம் கண்டறியமுடியுமாம்.

எவ்வளவுக்கெவ்வளவு அவை அதிகம் காணப்படுகிறதோ,
அந்த அளவுக்கு மூளையில் அதிகம் பாதிப்பு இருக்குமாம்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மறதி நோய் தாக்கும்
முன்பே கண்டுபிடித்து குணமாக்கும் சாத்தியக்கூறுகள்
உண்டு என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகளின் செயலுக்கு
நாம் மூக்கின் மேல் விரலை வைக்கலாமே!!

எனவே திரும்பத் தலைப்பை படிக்கவும்.

4 கருத்துகள்:

 1. உங்கள் பதிவுகள் எதையும் மூக்கால் அழுது கொண்டு படித்ததில்லை. இப்போதும் அரிய தகவலை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நுகர்தல், சுவாசித்தல் தவிர இத்தகைய பயனையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகளை நீங்கள் சொன்னது போல் பாராட்டலாம்...

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நான் எழுத விட்டுப்போன சொல்லாடல் ஒன்றைத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மூக்கு ஒரு முக்கிய அடையாளமாகி விட்டது--போண்டா மூக்கு,சப்பை மூக்கு,சாம்பு மூக்கு என்றெல்லாம்.
  மூக்குப் பிடிக்க சாப்பிட்டது போல் நிறைவான பகிர்வு!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. நீங்களும் ஒரு மூக்கு சம்பந்தப்பட்ட வழக்கு சொல்லை கையாண்டிருக்கிறீர்கள். கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு