நான் வேளாண் துறையில் இரண்டரை
மாதங்களுக்கு குறைவாகத்தான்
பணி புரிந்தேன்.அப்போது ஏற்பட்ட சில
அனுபவங்களை முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன்.விடுபட்ட அனுபவங்களை பின்னால் ‘நினைவோட்டம்’ பகுதியில் எழுத இருக்கிறேன்.
வேளாண் துறையில், பண்ணை மேலாளராக நான்
பணிபுரியாவிட்டாலும் அங்கு
பணிபுரிந்த என் நண்பர்களின்
சில அனுபவங்களை இங்கு எழுதலாமென நினைக்கிறேன்.
நான் முன்பே எழுதியிருந்தபடி வேளாண்
துறையில் பணிபுரியும் வேளாண் அறிவியல் பட்டதாரிகள், வேளாண் துறைக்கு சொந்தமான பண்ணையில் குறிப்பிட்ட காலம் பண்ணை
மேலாளராக பணிபுரியவேண்டும் என்பது கட்டாயம்.
அந்த பண்ணைகள் எல்லாம் மாவட்ட வேளாண் அலுவலரின்
(D.A.O) நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும். D.A.O க்கள் வேளாண்
கிட்டங்கிகளுக்கு ஆய்வுக்கு
செல்வது போல், இந்த
பண்ணைகளுக்கும் ஆய்வு செய்ய செல்வார்கள்.
.ஒரு சில D.A.O க்கள் மட்டும் பண்ணைக்கு அடிக்கடி ஆய்வுக்கு
செல்வதில்தான் மிக அதிக ஆர்வம் காட்டுவார்கள்.காரணம் அங்குதான்
அதிக ‘அறுவடை’ செய்யமுடியும் என்பதால்!
எனது நண்பர் ஒருவர் பண்ணையில், மேலாளராக இருந்தபோது,அவரது
D.A.O ஆய்வுக்கு வந்தாராம் மரியாதைக்காக அவருக்கு வீட்டிலிருந்து
காப்பி வரவழைத்துக் கொடுத்தாராம்.
(பண்ணைகள், கிராமங்களில் இருந்ததால், அருகில் எந்த உணவு விடுதியும் இருக்காது. ஆய்வுக்கு
வருகிற மேலதிகாரிகளுக்கு, பண்ணை மேலாளர்கள்
திருமணமானவர்களாயிருந்தால்,அவர்களது வீட்டிலிருந்துதான்
சாப்பாடு மற்றும் காப்பி முதலியவை
வரும்.)
அந்த D.A.O என்னடா இவர் இந்த பண்ணையில் இதாவது
தர ஏற்பாடு செய்திருக்கிறாரே என எண்ணாமல், ’என்னப்பா.காப்பிதானா? அதுதான்
தினம் வீட்டில் சாப்பிடுகிறேனே.ஹார்லிக்ஸ்
வாங்கி வைத்திருக்கக்
கூடாதா? (அவரது வீட்டில் வாங்க மாட்டாராம்!) அடுத்த தடவை நான்
வரும்போது ஹார்லிக்ஸ் கொடுப்பா‘ என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், ‘உத்திரவு’ போட்டு சென்றாராம்.
என் நண்பரும் தான் சாப்பிடாவிட்டாலும், தன் தலை விதியை நொந்துகொண்டு
நகரத்திலிருந்து ஹார்லிக்ஸ் வாங்கி வந்து,அந்த
D.A.O அடுத்தமுறை ‘ஆய்வு’க்கு வரும்போது கொடுத்து
உபசரித்திருக்கிறார். .
அந்த ஆய்வுக்கு வந்த D.A.O ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு
கிளம்பும்போது, ‘என்னப்பா, நாட்டுக்கோழி முட்டை இங்கு கிடைக்குமா?’ என்று கேட்டிருக்கிறார். (தான் சொன்னபடி ஹார்லிக்க்ஸ்
வாங்கி வைத்திருந்ததால், இவரிடம் மேலும் ‘கற’க்கலாம் என நினைத்திருப்பார் போலும்)
எனது நண்பர் தயங்கியபோது, அந்த பண்ணையின் மேஸ்திரி
குறுக்கிட்டு,‘கிடைக்கும் சார்.’ என்றிருக்கிறார்.‘அப்படியானால்
ஒரு டஜன் முட்டைகள் வாங்கி அனுப்பும்.’ என்று கூறி சென்றுவிட்டாராம்.
அவர் சென்றதும். நண்பர் அந்த மேஸ்திரியிடம்,’என்ன இப்படி சொல்லிட்டீங்க? இங்கு முட்டை கிடைக்காவிட்டால் என்ன
செய்வது? என்றதற்கு. அந்த மேஸ்திரி, ‘கவலை வேண்டாம் சார்.
நான் வாங்கி வர ஏற்பாடு செய்கிறேன்.’ என்றாராம்.
அங்கே இங்கே என்று அலைந்ததில், அவருக்கு பத்து முட்டைகள்
தான் கிடைத்ததாம். உடனே ஒரு ஆள் மூலம்
அதை D.A.O வீட்டுக்கு கொடுத்து
அனுப்பியிருக்கிறார்.
அதற்கு பிறகு மாவட்ட அலுவலகத்தில்
நடந்த ஒரு கூட்டத்திற்கு
நண்பர் சென்றபோது, அந்த D.A.O எல்லோர் முன்னிலையிலும்,
‘என்னப்பா உனக்கு எந்த ஆசிரியர் கணக்கு சொல்லிக்கொடுத்தது?
ஒரு டஜனுக்கு எவ்வளவு எண்ணிக்கை என்று கூட தெரியாதா?’
என கிண்டலாக கேட்டு இருக்கிறார்.
D.A.O கேட்டது 12 முட்டைகள். அதுவும் ‘ஓசி’யாக!! அந்த சிற்றூரில் கிடைத்தது 10
தான் என்பதால், நண்பர் உடனே அவைகளை
கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
நாம் டஜன் கேட்டதற்கு 10 முட்டைகள்
மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று D.A.O க்கு கோபம். முட்டைகள்
அனுப்பியதற்கு நன்றி கூட சொல்லாமல், எல்லோர்
முன்னிலையிலும் அவரது கணித அறிவு பற்றி,கேலியாக
சொன்னதும், நண்பர் சொன்னாராம்.’சார் எங்கள் கணித ஆசிரியர்
ஒரு டஜனுக்கு 12 என்றுதான் எனக்கு
சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
அந்த கணக்கு பணம் கொடுத்து பொருள் வாங்குவோருக்கு
மட்டும்
தான். பணம் கொடுக்காமல் ஓசியாக வாங்குவோருக்கு
எவ்வளவு கொடுத்தாலும் டஜன் தான்.’ என்றதும், அந்த D.A.Oக்கு ஏன்கேட்டோம் என்றாகிவிட்டதாம்.
மற்ற நண்பர்கள் விசாரித்தபோது என்
நண்பர் விலாவாரியாக
நடந்ததை சொன்னதும் எல்லோரும் ‘நன்றாக பதில் சொன்னாய்.’
என்று பாராட்டினார்களாம்.அதற்கு பிறகு அந்த D.A.O அவரிடம்
எதுவுமே கேட்டதில்லையாம்.
மற்றொரு D.A.O இதுபோல் ஆய்வுக்கு வேறொரு பண்ணைக்கு
சென்றபோது அங்கிருந்த அங்கிருந்த பண்ணை
மேலாளரிடம் என்ன ‘நெல்லு’ப்பா போட்டிருக்கே?’ என்றாராம்.அந்த மேலாளருக்கு ஒரே
சந்தோஷம், மேலதிகாரி தனது பண்ணையில் பயிரிட்டுள்ள நெல்
பற்றி விசாரிக்கிறாரே என்று.உற்சாகத்தோடு, ‘சார்.குதிரை வால்
(நெல்லில் ஒரு வகை) போட்டிருக்கேன்.
நன்றாக வந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்துவிடுவோம். சார். நல்ல
விளைச்சலை எதிர்பார்க்கிறேன்.’ என்றாராம் மேலதிகாரி பாராட்டை எதிர்பார்த்து.
அப்போது அந்த D.A.O சொன்னதைக்கேட்டு, அந்த பண்ணை
மேலாளருக்கு மயக்கம் வராத குறைதானாம்!
தொடரும்