திங்கள், 16 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 6


நான் எழுந்து நின்றபோது, எண்ணை வித்துக்கள் வல்லுனர்
என்னைப் பார்த்து உங்கள் பகுதியில் எவ்வளவு ஏக்கரில் எள் பயிரிடப்பட்டிருக்கிறது?’ எனக் கேட்டார்.

நான் பதில் சொல்ல ஆரம்பிக்கு முன் எங்கள் DAO, அவரிடம்
இவர் நேற்று தான் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு தெரிய வாய்ப்பில்லை. என்றார்.

நான் உடனே, ‘இல்லை.சார். இந்த கூட்டத்திற்கு வருவதால்
எல்லா விவரங்களையும் சேகரித்துத்தான் வந்திருக்கிறேன்.
எனது பகுதியில் எங்கும் எள் பயிரிடப்படவில்லை. அதற்கு
வாய்ப்பும் இல்லை. என்றேன்.

நான் இவ்வாறு சொன்னதும் DAO கோபத்தோடு நேற்று சேர்ந்த பச்சிளங்குழந்தையான உமக்கு என்ன தெரியும் அந்த பகுதியைப்
பற்றி? அந்த பகுதியில் எள் பயிரிடப்பட்டிருப்பதாக ஏற்கனவே
விவரம் கொடுத்திருக்கும்போது, நீங்கள் எப்படி எள்ளே
பயிரிடப்படவில்லை என்றும் அதை பயிரிட முடியாது என்றும்
கூறுகிறீர்கள்? எனக் கடிந்தார்.

நான் அமைதியாக,’ சார். எனது பகுதி கடலை ஒட்டிய பகுதி.
முக்கிய பயிரே நெல் தான்.பயிரிடும் நெல் கூட உப்புத் தண்ணீரில்
வளரும் நெல்தான்.(Saline Water Paddy) எனவே தான் அங்கு எள் பயிரிட வாய்ப்பில்லை.நான் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே என்றேன்.

எனது பதிலைக் கேட்ட அந்த வல்லுனர், DAO முகத்தைப் பார்க்க,
அவர் நீங்கள் இதை குறிப்பில் எடுத்துக்கொள்ளவேண்டாம்.நான்
இன்னும் பத்து நாளில் அங்கு ஆய்வுக்கு செல்ல இருக்கிறேன்.
அப்போது ஆய்வு செய்துவிட்டு அறிக்கை தருகிறேன்.' எனக்
கூறிவிட்டு, என்னைப் பார்த்து,’நான் வரும்போது நீங்கள் சொன்னது
சரியா என சரி பார்ப்பேன்.அப்போது பார்த்துக்கொள்ளலாம்.’ என்று
ஒரு எச்சரிக்கை தரும் தொனியில் சொன்னார்.

நான் அமர்ந்ததும் என் அருகில் இருந்தவர்,’ என்ன, வந்த முதல்
நாளே DAO வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டீர்களே.இங்கெல்லாம்
சில சமயம் நாம் அனுசரித்து போகவேண்டும்.என்றார்.

நான் உடனே அதாவது பொய்யாய் இருந்தாலும் உண்மை என சொல்லவேண்டுமா. அது என்னால் முடியாது. என்றேன். அதற்கு
அவர், ‘நான் நடைமுறையச் சொன்னேன்.பிறகு உங்கள் இஷ்டம்.
என்றார்.கூட்டம் முடிந்ததும் சிலர் வந்து எனது தைரியத்தைப்
பாராட்டினார்கள்.

திரும்ப தலைஞாயிறு வரும்போது, எப்படி இந்த சூழலில்
பணியாற்றப் போகிறேன் நினைத்துக் கொண்டே இருந்தேன்.
அதற்கு பிறகு தினம் DAO வருகை பற்றிய அஞ்சலுக்காக நான் காத்திருந்தபோது, இன்னொரு ஒரு கூட்டத்திற்கான சுற்றறிக்கை
வந்தது.

(இன்றைக்கும் அரசுப் பணியில் இருப்பவர்கள் பாதி நாட்கள்
கோப்புகளை தூக்கிக்கொண்டு கூட்டத்திற்கு போவதிலேயே
நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.)

இம்முறை கூட்டம் திருத்துறைப்பூண்டியில் என்றும், கூட்டத்திற்கு
வருவாய் கோட்ட அலுவலர் (Revenue Divisional Officer) தலைமை
தாங்குவார் என்றும் அதில் உரத்தைப்பற்றி ஆய்வு செய்ய
இருப்பதாகவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த கூட்டத்திற்கு RDO வந்ததால், வேளாண் துறை மட்டுமல்ல
மற்ற துறைகளில் இருந்தும் அலுவலர்கள் வந்திருந்தார்கள்.நானும்
எங்கள் கிட்டங்கியில் இருந்த உரங்களின் இருப்பு கணக்கையும்,
எனது பகுதிக்கு தேவைப்படும் உரங்களின் அளவை பற்றிய புள்ளி
விவர கணக்கையும் எடுத்து சென்றிருந்தேன்.

(உண்மையில் அந்த கூட்டம் RDO கூட்டும் வழக்கமான கூட்டம்.அதில்
எந்த துறையின் செயல்பாடுகள் பற்றி வேண்டுமானாலும் அவர் ஆய்வு செய்யக்கூடும். அப்போது நெல் நடவு காலம் ஆதலால் உரம் பற்றி
ஆய்வு செய்யலாம் என எங்கள் DAO முடிவு செய்ததால், எங்களை
அதற்கான விவரங்களுடன் வரச்சொல்லி இருந்தார்.)

ஆனால் அந்த கூட்டத்தில் உரம் பற்றி பேசாமல்,வேறு துறைகளை சேர்ந்தவர்களின் செயல் பாடுகள் பற்றி பேசிவிட்டு RDO, எங்கள்
DAO வை பார்த்து, ‘வேறு ஏதேனும் உண்டா? என்றார்.

இல்லை சார் என்று சொன்னவர், என்னைப்பார்த்ததும் என்ன
நினைத்தாரோ தெரியவில்லை.எங்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையரைப் பார்த்து'என்ன நீர்மூளை AEO பிணைத்தொகை (Security Deposit) கட்டிவிட்டாரா?’ என்றார்.

அவர் இல்லை.சார். என்றதும், RDO, ‘நீர்மூளை AEO இங்கு
வந்திருக்கிறாரா?’ என்று கேட்டார்.

நான் எழுந்து நின்று, ‘எஸ்.சார்.என்றதும், RDO என்னைப்பார்த்து,   
ஏன் Security Deposit கட்டவில்லை. என்றார்.

தொடரும்

14 கருத்துகள்:

  1. நீங்கள் உண்மையை தைரியமாக பேசுவது பாராட்டுக்குரியது.

    உங்களை விட பெரிய அதிகாரியிடம் உங்களைப்போல யாரும் தைரியமாக பேசுவதை பார்த்ததில்லை.இப்போது தான் உங்கள் வாயிழாய் கேள்விப்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. அரசு இயந்திரம் ஏன் வேகமாக இயங்குவதில்லை என்பது இதைப் படித்ததும் நன்றாகப் புரிகிறது. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆவலோட வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வைரை சத்தீஷ் அவர்களே!
    உண்மையை வெளிப்படையாக சொன்னேன்.அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! அரசு இயந்திரம் என்றுமே வேகமாக இயங்குவதில்லை என்பது தெரிந்த விஷயம்தானே.

    பதிலளிநீக்கு
  5. எப்போதுமே உண்மையைத்துணிந்து கூறும் தைரியம் உங்களுக்கு உண்டுதானே.!ஆங்கிலத்தில் சொல்வது போல்”you always call a spade, a spade!"காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. துணிவு, நேர்மை யோடு வாழ்வது சிரமம் தான் மேலும் பார்ப்போம். சுவாரசியமானது. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. இன்றைக்கும் அரசுப் பணியில் இருப்பவர்கள் பாதி நாட்கள்
    கோப்புகளை தூக்கிக்கொண்டு கூட்டத்திற்கு போவதிலேயே
    நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.)// நிறைய உண்மைகளை தெரிந்து கொள்ள உதவும் பதிவு தொடருங்கள் ...

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு

    வாழ்த்துகள்..

    உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
    DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ் DailyLib

    To get the Vote Button

    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் DailyLib

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும், ஆதவுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்தியமைக்கு தமிழ் DailyLib க்கு நன்றி. நிச்சயம் எனது வலைப்பூவை தமிழ் DailyLib ல் இணைப்பேன்.

    பதிலளிநீக்கு
  13. //நான் உடனே ‘அதாவது பொய்யாய் இருந்தாலும் உண்மை என சொல்லவேண்டுமா. அது என்னால் முடியாது.’ என்றேன். அதற்கு
    அவர், ‘நான் நடைமுறையச் சொன்னேன்.பிறகு உங்கள் இஷ்டம்.’
    என்றார்.கூட்டம் முடிந்ததும் சிலர் வந்து எனது ‘தைரியத்தை’ப்
    பாராட்டினார்கள்.//

    இதைப்படிக்கும் நாங்களும் உங்களைப் பாராட்டுகிறோம். இந்தத் தொடர் மிகவும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் செல்கிறது. மேற்கொண்டு படிக்க எதிர்பார்ப்புகளும் ஆவலும் அதிகமாகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு