வெள்ளி, 28 அக்டோபர், 2011

நினைவோட்டம் 54

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கான வகுப்புகள் ஆஸ்பெஸ்டாஸ்
கூரை போட்ட கட்டிடங்களில் நடக்கும்.

பள்ளி இறுதி ஆண்டு (S.S.L.C) படிக்கும்
மாணவர்களுக்கு மட்டும் தலைமை ஆசிரியர்
அறைக்கு அருகே உள்ள மங்களூர் ஓடுகள்
வேய்ந்த கட்டிடத்தில்(தாலுக்கா அலுவலகங்கள்
மற்றும் மாவட்ட நீதி மன்றங்கள் அமைந்துள்ள
கட்டிடங்கள் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம்)
வகுப்புக்கள் நடக்கும்.

தலைமை ஆசிரியரே எங்களுக்கு ஆங்கில பாடம்
எடுப்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் எங்களுக்கோ
இது ஒரு Promotion போல.

இறுதி ஆண்டு வந்ததுமே மாணவர்களின் நடை உடை
பாவனையில் மாற்றம் தெரியும்.அதுவரை அரைக்கால்
சட்டை அணிந்த சிலர் வேட்டி கட்டி வருவார்கள்.

நான் கூட பொங்கல் முடிந்த பின் ஒரு நாள் நாலு
முழம் வேட்டி கட்டி பள்ளிக்கு நடக்கமுடியாமல்
நடந்து சென்றிருக்கிறேன்.

S.S.L.C மாணவர்களுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ்
பாட புத்தகங்கள் சென்னை பல்கலைக் கழகம் தான்
வெளியிடும் அந்த புத்தகங்களை வாங்கும்போதே
அப்போதே கல்லூரியில் சேர்ந்த மகிழ்ச்சி எங்களுக்கு.

அப்போது ஒவ்வொரு பள்ளி இறுதி மாணவன்
கையில் பாட நூல்கள் இருக்கிறதோ இல்லையோ,
இது கண்டிப்பாய் இருக்கும்

பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார் அவர்களால்
எழுதப்பட்டு திருச்சி பழனியப்பா பிரசுரம் வெளியிட்ட
தமிழ் பாடத்திற்கான கோனார் நோட்ஸ் எனப்படும்,
கோனார் தமிழ் உரை நூல் தான் அது.

அதை வாங்காத மாணவர்களே இல்லை எனலாம்.
எங்கள் உரை நூல் என்று வேறொரு உரை நூல்
இருந்தாலும், பெரும்பாலோர் விரும்பியது கோனார்
உரை நூலைத்தான்.(பிற்காலத்தில் 4 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு கூட கோனார் உரை நூல்
வந்துவிட்டது.)

அந்த அளவுக்கு கோனார் உரை நூல்,பாடப்புத்தகம்
போலவும், அகராதி போலவும் பயன்படுத்தப்பட்டது.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனக்கு பிடித்த
புதுக்கவிதை என ஒரு வார இதழில்
குறிப்பிட்டிருந்த புதுக்கவிதை இந்த நேரத்தில்
எனக்கு நினைவுக்கு வருகிறது.

“வள்ளுவரும் தேர்வு எழுதப்போனார்
தேர்விலே தோல்வியுமே ஆனார்
பாவம் படிக்கவில்லை அவர் கோனார்!”

(இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.)

இந்த கவிதை வள்ளுவரை கிண்டல் செய்வது
போல இருந்தாலும் நாட்டு நடப்பை சொன்ன
கவிதை அது.

நான் கூட கோனார் உரை நூலைத்தான்
வாங்கினேன். எனக்கு அப்போது தெரியாது,
மறு ஆண்டு புகுமுக வகுப்பு படிக்கும்போது
பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார்
அவர்களின் நேரடி உரையையே
புனித வளவனார் கல்லூரியில்
(St.Joseph’s College) கேட்கும் வாய்ப்பு
கிடைக்குமென்று.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

செவ்வாய், 25 அக்டோபர், 2011

நினைவோட்டம் 53

அப்போதெல்லாம் கணித பாடத்திற்கே நூற்றுக்கு
நூறு மதிப்பெண்கள் தருவது அபூர்வம்.அதிகபட்சம்
90 மதிப்பெண்கள் தருவார்கள்.தமிழ் ஆசிரியர்கள்
65 மதிப்பெண்களுக்கு மேல் தரமாட்டார்கள்.
இப்போதெல்லாம் தமிழ் பாடத்திற்கே 100
மதிப்பெண்கள் தருகிறார்கள்.

நான் முன்பே எழுதி இருந்தபடி எனக்கு ஓராண்டு
மூத்த மாணவரான நண்பர் திரு பார்த்தசாரதி
(கல்பனா தாசன்)அவர்கள் தான் S.S.L.C (1959)
தேர்வில்,மாநிலத்திலேயே சிறப்பு தமிழில் 95 க்கு
மேல் மதிப்பெண் பெற்று,முதலாம் இடம் பெற்று
ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

பள்ளி இறுதி ஆண்டு வரும் வரை நான் கணக்கு
பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது,ஒரு ஆசிரியர் எனது
கணித பாட மதிப்பெண்களை கேட்டுவிட்டு,‘என்னப்பா,
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு’
என்பதை நிரூபித்துவிடுவாய் போல் இருக்கிறதே?’என
வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் சொன்னது
எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.அதை என்
அண்ணனிடம் வேறு சொல்லி வெறுப்பு
மூட்டியிருக்கிறார்.

அந்த கேலியும்,கிண்டலும்,எனக்குள் தாக்கத்தை
ஏற்படுத்தி ஒரு வைராக்கியத்தை
உண்டுபடுத்தியது.பள்ளி இறுதி ஆண்டில்
கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எல்லோர்
வாயையும் மூட வைக்க வேண்டும் என்பதே அது.

என் அண்ணன் எனக்கு பள்ளியில் கணித ஆசிரியர்
அல்ல. அவர் வேறு வகுப்புக்கு கணக்கு பாடம்
எடுத்துக்கொண்டு இருந்தார்.

என் அண்ணனிடம் தனிப்பயிற்சி(Tuition)பெற
மாணவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒன்பதாவது
மற்றும் பத்தாவது படிக்கும்போது,நான் அவரிடம்
Tuition படிக்காவிடிலும் பள்ளி இறுதி ஆண்டு
(S.S.L.C) படிக்கும்போது,அவர் Tuition
நடத்தும்போது நானும் அமர்ந்து பயிற்சி
பெற்றிருக்கிறேன்.


S.S.L.C படிக்கும்போது,நடந்த காலாண்டு தேர்வில்
என் அண்ணன் கொடுத்த பயிற்சியின்படி தேர்வை
எதிர்கொண்டு நன்றாக செய்திருந்தேன்.தேர்வு முடிந்து,
எங்கள் கணித ஆசிரியர் திரு இராசகோபாலன் அவர்கள்,
திருத்திய கணித பாட விடைத்தாளை எங்களிடம்
கொடுக்கும்போது,‘இந்த தடவை முதல் மதிப்பெண்
வாங்கியிருப்பவர்.....’ எனச்சொல்லி நிறுத்தினார்.

அவர் முகத்தை ஆவலோடு நாங்கள் பார்த்துக்கொண்டு
இருக்கும்போது, ‘நடனசபாபதி’ என என் பெயரைச்
சொன்னதும்,என்னால் நம்பமுடியவில்லை.நல்ல
மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால்
முதல் இடம் பெறுவேன் என நினைக்கவில்லை.எனக்கு
ஆசிரியர் 80க்கு மேல் மதிப்பெண்கள் கொடுத்திருந்தார்.

வழக்கமாக முதலில் வரும் நண்பர்களை விட அதிக
மதிப்பெண்கள் பெற்றது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்.
ஆனால் என் அண்ணனிடம் எனது மதிப்பெண்களைப்பற்றி
சொன்னபோது அவர் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவேளை பாராட்டினால் நான் அடுத்து வரும்
தேர்வுகளில் சுணக்கமாக இருந்துவிடுவேன் என்று
நினைத்திருப்பார் போலும்.

பெற்ற முதல் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற
வெறியோடு, அரை ஆண்டுத்தேர்விலும்,(அதை
Selection தேர்வு என்பார்கள்) கணிதத்தேர்வை நன்றாக
செய்ததால்,89 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைத்
தக்க வைத்துக்கொண்டேன்.

பள்ளி இறுதி ஆண்டு கணிதத்தேர்வை நன்றாக செய்யத்
திட்டமிட்டு பல கணக்குகளைப் போட்டு பயிற்சி
எடுத்துக்கொண்டேன்.அந்த தேர்வில், ஒரு Rider வினாவில்‘ஒரு கோடு ஒரு வட்டத்தை
இரண்டு புள்ளிகளில் தொடும்போது’என ஆரம்பித்து
வினா கொடுத்திருந்தார்கள். நான் அதற்கு‘ஒரு
கோடு ஒரு வட்டத்தை ஒரு புள்ளியில் தொடும்
அல்லது இரண்டு இடங்களில் வெட்டும்.எனவே
இந்த கேள்வி தவறு’ என எழுதினேன்.

தேர்வை நன்றாக முடித்து வெளியே வந்த போது,
வெளியே என் அண்ணன் காத்திருந்தார்.நான் அந்த
கேள்விக்கு பதில் எழுதியது பற்றி சொன்னதும்,அவர்
‘ஏன் அந்த கேள்வியை எடுத்தாய்.உன் பதில் சரி
என்றாலும்,திருத்துபவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ?
6 மதிப்பெண்கள் உள்ள கேள்வியாயிற்றே.’
என்று கடிந்துகொண்டார்.

ஆனால் பின்னால் இந்த தவறை கல்வியாளர்கள்
சுட்டிக்காட்டியதும், மாணவர்கள் அந்த கேள்வியின்
எண்ணை எழுதி பதில் ஏதும் தராமல் வெறுமே
விட்டிருந்தாலும் முழு மதிப்பெண்கள் தரலாம்
என அரசு அறிவித்தது.

தேர்வு முடிவுகள் வந்தபோது,கணிதத்தில் 100க்கு 86
மதிப்பெண்கள் பெற்று நானே வகுப்பில் முதல் இடம்
பெற்றிருந்தேன்.

ஆனால் மாவட்ட(அப்போதைய தென் ஆற்காடு
மாவட்டம்) அளவில் கணிதத்தில் முதலிடம்
பெறுவோருக்கு பரிசு உண்டாம். பள்ளி அளவில்
நான் முதல் இடம் பெற்றிருந்தாலும், மாவட்ட
அளவில் இரண்டாம் இடத்தை பெற்றதால்,
முதல் இடம் பெறுபவருக்கான பரிசை தவற
விட்டுவிட்டாதாக என் அண்ணன் சொன்னபோது,
வருத்தப்பட்டேன்.

கணித பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள்
வாங்கியதற்கு என் அண்ணன் தந்த பயிற்சி தான்
காரணம் என்பதை இப்போதும் பெருமையோடு
சொல்லுவேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

சனி, 22 அக்டோபர், 2011

நினைவோட்டம் 52

அப்போதெல்லாம், சிறப்பு கணிதத்தின்
(Composite Mathematics) கேள்வித்தாள் A,B என
இரு பிரிவாக இருக்கும்.A பிரிவில் ஒரு வரியில்
பதில் தரக்கூடிய 30 வினாக்கள் இருக்கும்.
ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் உண்டு.
அனைத்து வினாக்களுக்கும் பதில் தரவேண்டும்.
மொத்தம் 30 மதிப்பெண்கள்.

B பிரிவில் நான்கு பகுதிகள் இருக்கும்.முதல்
பகுதியில் எண்கணிதம் எனப்படுகின்ற Arithmetic
பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு
கேள்விக்கும் 5 மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு
வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.ஆக மொத்தம்
முதல் பிரிவுக்கு 10 மதிப்பெண்கள்.

இரண்டாம் பகுதியில்,தேற்றம் எனப்படும் Theorem
பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஆனால்
இந்த பிரிவில் ஒவ்வொரு வினாவுடனும் Rider எனப்படும் துணை வினா உண்டு.ஒவ்வொரு
வினாவுக்கும் 10 மதிப்பெண்கள்(அதில் தேற்றத்திற்கு 4 மதிப்பெண்கள், Rider க்கு 6மதிப்பெண்கள்)
இங்கும் மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை
அளிக்கவேண்டும். ஆக மொத்தம் இரண்டாம்
பிரிவுக்கு 20 மதிப்பெண்கள்.

மூன்றாம் பகுதியில், இயற்கணிதம் (அ) அட்சர கணிதம்
எனப்படும் Algebra பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 10மதிப்பெண்கள்.
மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.

ஆக மொத்தம் மூன்றாம் பிரிவுக்கும் 20 மதிப்பெண்கள்.

நான்காம் பகுதியில்,வடிவியல் (அ) வடிவவியல்
எனப்படும் Geometry பாடத்தில் மூன்று வினாக்கள்இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும்
10 மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.
ஆக மொத்தம் நான்காம் பிரிவுக்கும் 20 மதிப்பெண்கள்.

ஆக B பிரிவு கேள்விகளுக்கு மொத்தம் 70 மதிப்பெண்கள்.

பொதுவாக மாணவர்கள் கேள்வித்தாள் கையில்
கொடுத்ததும்,பிரிவு A ல் உள்ள ஒருவரி கேள்விகளுக்கு
பதில் எழுத ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று
கேள்விகளுக்கு மேல் பதில் தெரியாதபோது அதையே
யோசித்துக்கொண்டு இருக்கும்போது நேரம் போய்விடும்.

30 மதிப்பெண்களுக்காக நேரத்தை வீணடித்துவிட்டு
பிரிவு B க்கு வரும்போது நேரம் இல்லாமல் எல்லா
கணக்குகளையும் போடமுடியாது. அதனால்
மதிப்பெண்கள் குறைவதோடு கணிதத்தில் தோல்வி
அடைவதும் உண்டு.

அதனால் என் அண்ணன் என்ன சொல்வார் என்றால்,
‘யாரும் கேள்வித்தாள் கொடுத்ததும் A பிரிவு
கேள்விகளையே பார்க்காதீர்கள்.நேரே B பிரிவில்
உள்ள Geometry கணிதத்தில் கேட்கப்பட்ட கணக்குகளை
போடுங்கள்.’என்பார்.

காரணம் தேர்வு அறைக்குள் நுழையும் சமயம் பென்சில்
முனை கூராக இருக்கும். பின்பு பயத்தாலோ அல்லது
கைதவறியோ கீழே போட்டுவிட்டால் முனை மழுங்க
வாய்ப்பு அதிகம்.அதனால் முதலில்(அதுவும்
வரைப்படத்தில்)போடப்படும் கோடுகள்
துல்லியமாகவும், சரியான விடைகளைப்பெற
உதவியாய் இருக்கும் என்பதால்.

Geometry கேள்விக்கு படம் போட்டு விடை கண்டுபிடிக்கு
முன்பு எப்படி அந்த படத்தை போடப்போகிறோம்
என்பதை சுருக்கமாக மாதிரி படம் வரைந்து
எழுதவேண்டும் அதற்கு வரை முறை என்றுபெயர்.அதற்கு 3 மதிப்பெண்கள்.
Drawing க்கு 7 மதிப்பெண்கள்.இரண்டு கணக்கையும்
போட்டால் நிச்சயம் 9+9= 18 மதிப்பெண்கள் கிடைக்கும்.

பின் Arithmetic கணக்குகளை போட்டால் 10
மதிப்பெண்கள் கிடைக்கும்.பிறகு Theorem கேள்விகளில்
இரண்டுக்கு தேற்றம் எழுதினாலே 8 மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக நிச்சயம் 36 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.

பாஸ் மார்க் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும்,
(அப்போது 35 மதிப்பெண்கள் எடுத்தாலே ‘பாஸ்’ தான்.)
Rider மற்றும் அல்ஜீப்ரா கணக்குகளை தவறு செய்யாமல் போடும் தைரியம் வந்துவிடும்.

அப்படி தவறாக போட்டாலும் Steps க்கு மதிப்பெண்
உண்டு என்பதால் நிச்சயம் B பிரிவில் 45 மதிப்பெண்கள்
பெற்றுவிடலாம்.பின் A பிரிவு கேள்விகளில் 30 க்கு 10
கேள்விக்கு பதில் சரியாக எழுதினாலே,10 மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக மொத்தம் 55 மதிப்பெண்கள் பெற்று விடலாம் என்பார்.

இது சராசரி மாணவன் எடுக்கும் மதிப்பெண்கள்.
நம்பிக்கையோடு, நிதானமாக கணக்கு போடுபவர்கள்
நிச்கயம் 80 மதிப்பெண்கள் எடுக்கமுடியும் என்பார்.

ஒருதடவை எங்கள் பள்ளியில் நடந்த S.S.L.C
கணிதத்தேர்வில் கேள்வித்தாள் கொடுத்ததும்,எல்லா
மாணவர்களும் சொல்லி வைத்தது(?) போல் கடைசி
பக்கத்திற்கு சென்றதும்,முதலாவதாக Geometry
கணக்கைப்போட ஆரம்பித்ததும் தேர்வு
கண்காணிப்பாளராக வந்த ஆசிரியருக்கு ஒரே
ஆச்சரியமாம்.(அந்த கண்காணிப்பாளர் வேறு
பள்ளியிலிருந்து தேர்வு பணிக்காக வந்தவர்.)
பின்பு விவரம் அறிந்து, தேர்வு முடிந்ததும்
பாராட்டினாராம்.

என் அண்ணன் ஆலோசனைப்படி தேர்வை எழுதிய
மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள்
பெற்றனர் என்பது உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 20 அக்டோபர், 2011

நினைவோட்டம் 51

நினைவோட்டம் 50 எண்ணிட்ட பதிவில்,எனது
அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பற்றி எழுதி
இருந்ததை பற்றி சிலர் நினைக்கலாம்,அவர்
எனது அண்ணனாக இருந்ததால் அப்படி எழுதி
இருக்கிறேனென்று.

இல்லாவிட்டாலும் அவரைப்பற்றி அப்படித்தான்
எழுதியிருப்பேன் மற்ற ஆசிரியர்கள் பற்றி எனது
முந்தைய பதிவுகளில் எழுதி இருக்கும்போது,
அவர் எனது அண்ணன் என்ற காரணத்தால்
எழுதாமல் இருப்பது சரியல்ல என்பதால்,
அவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்.சற்று
கூடுதலான விவரங்கள் கொடுத்ததன் காரணம்,
நான் அவரை அருகில் இருந்து கவனித்ததால்.

அவரது கணித பாடம் நடத்துவது பற்றி
குறிப்பிட்டிருந்தேன்.ஆசிரியர்களில் சிலர்
மாணவர்களுக்கு பாடத்தை சொல்லிக்கொடுப்பதில்
(Teaching) சிறந்து விளங்குவார்கள்.சிலர்
மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில்
(Coaching)சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால்
எனது அண்ணன் இரண்டிலுமே சிறந்து விளங்கினார்.

கணிதம் என்றாலே எல்லோருக்கும் பயம் தான்.
(சிலரைத்தவிர) நான் சொல்லுவது அந்த காலத்தில்.
இந்த காலத்து மாணவர்களைப்பற்றி அல்ல.

என்னுடைய கருத்துப்படி, கணிதபாடத்தை
பாம்பு கடிக்கு ஒப்பிடலாம்.ஏனெனில்
பாம்புக்கடித்து இறப்பவர்கள் அநேகம் பேர்
பயத்தால்தான்.அதன் விஷத்தால் அல்ல.
அதுபோல் கணித பாடத்தில் அதிகம் பேர்
தோல்வியுற்ற காரணம் அப்பாடத்தின் மேல்
உள்ள பயத்தால்தான்.

எனவே கணித ஆசிரியரின் முதல் பணி,
மாணவர்களுக்கு கணித பாடத்தில் உள்ள
பயத்தைப்போக்கி எல்லோரும் வெற்றிபெறமுடியும்
என்ற நம்பிக்கையை உண்டாக்குவதுதான்.
அதைத்தான் எனது அண்ணன் செய்தார்.
பயம் நீங்கியதால் அவரது வகுப்பில் கணிதத்தில்
யாரும் தோல்வி அடையவில்லை.

ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி.
அதற்கேற்ப எனது அண்ணன் வழக்கமாக ஆசிரியர்கள்
வருவதுபோல் அல்லாமல் அப்போதே பள்ளிக்கு
‘டை’,‘கோட்’டுடன் வருவார்.அவரது தோற்றமே
மாணவர்களுக்கு கணித பாடத்தின் மேல் ஒரு
ஈர்ப்பை தந்தது என்பது உண்மை.

பாடம் நடத்தும்போது மிகவும் கண்டிப்பாக
இருந்தாலும், கணிதத்தில் Weak ஆக உள்ள
மாணவனின் பேரில் அதிக கவனம் செலுத்தி,
அந்த மாணவன் புரிந்துகொள்ளும்
வரை விடமாட்டார்.

பத்து வருடங்களுக்கான கணிதத்தேர்வு
வினாத்தாள்களைக் கொண்டுவந்து, அவற்றில்
உள்ள வினாக்களுக்கான விடையை(கணக்கை)
போடச்சொல்லி பழக்குவார்.

பாடப்புத்தகத்தில் உள்ள கணிதப்பயிற்சி
வினாக்களுக்கு மட்டுமல்லாமல் பத்து வருட
வினாத்தாட்களில் உள்ள கணித வினாக்களுக்கும்
கணக்கு போட்டு பார்த்த பயிற்சி இருப்பதால்,
தேர்வில் எவ்வகையில் கேள்வி வந்தாலும்,
மாணவர்கள் தடுமாறாமல் விடையளிக்க
முடிந்தது.

பிறகு தேர்வு நெருங்கும்பொது எப்படி தேர்வை
எழுதுவது என்பதற்கே,வகுப்பு நேரத்தில்
தனிப் பயிற்சி கொடுப்பார்நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

திங்கள், 17 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலும், உறங்கும் அரசு இயந்திரமும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக
வாக்குப்பதிவு இன்று காலை அனைத்து
மாநகராட்சிகளுக்கும் தொடங்கும் என்றும்,
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை இருக்கும் என
தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததை
நம்பி நானும் என் மனைவியும், எதிர்வீட்டில்
இருக்கும் வழக்கறிஞர் நண்பரும் அவர்
மனைவியும் காலை 6. 50 மணிக்கே
வாக்குச்சாவடி அமைந்திருக்கும் முகப்பேர்
வேலம்மாள் பள்ளிக்கு சென்றோம்.

நாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்பே
4 பேர் வரிசையில் நின்று கொண்டு
இருந்தார்கள். இந்த தடவை பெண்களுக்கு
என்று வாக்கு அளிக்கும் அறை தனியாக இருந்தது.
ஆனால் அறிவித்திருந்தபடி காலை 7 மணிக்கு
வாக்களிக்க எங்களை அனுமதிக்கவில்லை
காரணம் அப்போதுதான் அலுவலர்கள்
வாக்களிக்கும் இயந்திரத்தை சரி
செய்து கொண்டு இருந்தார்கள்.

இந்த தடவை சென்னை உயர் நீதி மன்றம்,
சென்னையில் வாக்களிக்கும் இடத்தில் Web Camera
கொண்டு படம் பிடிக்க வேண்டும் என்று ஆணை
இட்டிருந்ததால், அப்பணியை செய்ய அதற்காக
ஒரு Laptop உடனும் Camera வுடன் ஒரு கல்லூரி
மாணவி அங்கே இருந்தார்.

ஆனால் அவரோ காலை 7-15 மணி வரை அதனுடன்
மல்லாடிக்கொண்டு இருந்தார். அவரால் அதை
இயக்க இயலவில்லை. அதற்குள் மணி 7.20
ஆகிவிட்டது. வரிசையில் வாக்களிப்போர் கூட்டம்
அதிகரிக்க தொடங்கியது.

கூட்டதிலிருந்த ஒருவர் நேரே தலைமை அலுவலரிடம்
சென்று சற்றே கிண்டலாகவும் கோபத்தோடும்,
‘வாக்களிப்பு நாள் இன்றா அல்லது நாளையா?’
எனக் கேட்டார்.ஆனால் பதில் எதுவும்
கிடைக்கவில்லை.

எங்களது பொறுமையின்மைக் கண்ட ஒரு காவல்
உதவி ஆய்வாளர் யாரையோ கைப்பேசி மூலம்
தொடர்பு கொண்டார். அங்கே பதில் சொல்ல யாரும்
இல்லையாதலால், அவரால் ஒன்றும் செய்ய
இயலவில்லை.

வேறு வழியின்றி காமிரா மூலம் படம்
எடுக்காமலேயே வாக்களிக்க எங்களை அனுமதித்தனர்.
நாங்கள் வாக்களித்து வெளியே வரும் வரை
அந்த காமிரா இயங்கியதாகத் தெரியவில்லை.

இதேபோன்று சென்ற தடவை சட்டசபை தேர்தலின்
போதும் காலை 8 மணிக்கு வாக்களிக்கலாம்
எனக்கூறிவிட்டு 8.30 மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள்.

எனக்குள்ள சந்தேகம் என்னவென்றால் காலை 7 மணிக்கு
வாக்களிக்கலாம் என்று அறிவித்துவிட்டு வாக்காளர்கள்
வந்தபிறகு வாக்கு இயந்திரத்தில் முத்திரை இடும்
பணியை ஏன் துவங்கவேண்டும்?காலை 6 மணிக்கு
முன்பே இதை யெல்லாம் செய்து வைக்கக்கூடாதா?
அப்படி முடியாதென்றால் நேரத்தை மாற்றி
வைக்கலாமே?

Web Camera பொருத்தும் பணியை முன்பே செய்து
தயாராக வைத்திருக்கலாமல்லவா?

வாக்காளர்களை வாக்களிக்கும் இயந்திரமாக அரசு
நினைக்கிறதோ என்ற ஐயம் எனக்கு.

ஒவ்வொரு தடவையும் காலையிலேயே எனது
ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சீக்கிரமே
சென்றும் தாமதிக்க வைக்கிறார்களே இதை
யாரிடம் சொல்வது?

எனக்கு இந்த நேரத்தில் நினைவுக்கு வருவது
‘எல்லாம் உனக்காக’ என்ற திரைப்படத்தில்
‘கொஞ்சிவரும் நெஞ்சில் இன்று’ எனத் தொடங்கும்
பாட்டில் வரும்,

‘மக்களுக்கு கோபம் வந்தால் மன்னரிடம் சொல்வோம்
கொண்ட மன்னருக்கு கோபம் வந்தால் யாரிடம் சொல்வோம்
நான் உன்னிடம் சொல்வேன் கேட்டு சொல்லடா’’


என்ற வரிகள் தான்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 10

(நிறைவுப்பகுதி)

மதிய(?) உணவை முடித்துவிட்டு,அருகில் இருந்த
அறையில், அடுத்த சந்திப்பை எப்போது, எங்கு
வைத்துக் கொள்ளலாம் என பேசி முடிவெடுக்க
ஒன்று கூடினோம்.

அங்கே,முதல் நாள் எடுத்த குழு புகைப்படங்களின்
நகல்களையும்,மற்றும் சந்திப்பின் போது எடுத்த
மற்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பின்
குறுந்தகடு ஒன்றையும்,எல்லோருக்கும் நண்பர்கள்
நாச்சியப்பனும்,கோவிந்தசாமியும் கொடுத்தார்கள்.

நண்பர்கள் சிலரும்,சிலரின் துணைவியார்களும்
இந்த சந்திப்பை நன்றாக நடத்தியதற்காக,நண்பர்கள்
நாச்சியப்பனையும் கோவிந்தசாமியையும் மனமார
பாராட்டினார்கள்.

வகுப்பு நண்பர்கள் அனைவரையும் சந்திப்புக்கு
அழைக்க எடுத்த முயற்சி, தங்கும் வசதி,
உணவு வழங்குதல்,அழைத்து செல்ல பேருந்து,
அரங்க ஏற்பாடு,புகைப்படம் எடுத்தல்,
எல்லோருக்கும் தர நினைவுப்பரிசுகள்,
ஆசிரியர்களை நேரில் சென்று அழைத்து வந்து
பங்கேற்க செய்தது பங்கேற்ற அனைவரையும்
ஏதாவதொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
செய்தது,என்று ஒவ்வொரு செயலையும்
கனக்கச்சிதமாக செய்து,எவ்வித குறையும் இல்லாமல்
பார்த்துக்கொண்ட நண்பர்கள் நாச்சியப்பன் மற்றும்
கோவிந்தசாமியை,எப்படிப் பாராட்டினாலும் தகும்.
அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத
முயற்சி வீண் போகவில்லை

நண்பர்கள் நாச்சியப்பனும் கோவிந்தசாமியும் பணியில்
இருந்தபோது ஈட்டிய நற்பேறுதான்,வேளாண் புலத்தில்
தற்சமயம் பணிபுரியும் பேராசிரியர்கள்
டாக்டர் எம்.இரவிசந்திரன்,மற்றும் டாக்டர் வி.வையாபுரி
ஆகியோர் உடன் இருந்து,சந்திப்பு நன்முறையில்
நடந்தேற உதவியது என்றால் அது மிகை அல்ல.

நண்பர்கள் முருகானந்தமும் ஆர்.பாலசுப்ரமணியமும்
எங்கள் சார்பில் பரிசுப்பொருள் வாங்கி வந்து,
எங்களுக்காக சிரமம் எடுத்து சந்திப்பை நடத்திய
நண்பர்கள் நாச்சியப்பன்,கோவிந்தசாமி மற்றும்
கோவிந்தராஜன் ஆகியோருக்கும் அவர்களுக்கு
துணை நின்ற அவர்கள் துணைவியார்களுக்கும்,
கொடுத்து கௌரவித்தார்கள்.

பின் எங்களை இரண்டு நாட்களும் நன்முறையில்
பேருந்தில் எல்லா இடங்களுக்கு அழைத்து
சென்ற ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கும்
பரிசளித்து கௌரவித்தோம்.

பின் எல்லோரும் கலந்து ஆலோசித்து,அடுத்த
சந்திப்பை சேலத்தில் 2013 ல் நடத்துவது என்றும்
அதை நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும்
நடத்துவது என்றும் முடிவாயிற்று.
நண்பர் இராமச்சந்திரன் கோவையிலிருந்து வந்து
அவர்களுக்கு உதவுதாக சொன்னார்.

பொன் விழா சந்திப்பை 2016 ல் கோவையில்
சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்தோம்.
பின்பு நாச்சியப்பன் நன்றி சொல்லும்போது
பேசமுடியாமல் கண்கலங்கினார்.

மாலை சுமார் 4.30 மணி வாக்கில் கூட்டம்
முடிவடைந்தபோது,எல்லோரும் ஊருக்கு
கிளம்ப வேண்டுமே என்று எழுந்தாலும்,
எல்லோரையும் விட்டு பிரிகிறோமே
என்ற வருத்தமும் அனைவர் முகத்தில் தெரிந்தது.


நண்பர்கள் நாச்சியப்பனிடமும் கோவிந்தசாமியிடமும்
பிரியாவிடைபெற்று, எல்லோரிடமும் தழுதழுத்த
குரலில்‘போய் வருகிறேன்.இனியாவது நாம்
தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு
கொள்ளுவோம்.’எனக்கூறி அறைக்கு திரும்பினேன்.

அறையை காலி செய்துவிட்டு,என் துணைவியாருடன்
முதல் தளத்திலிருந்து கீழே வந்தபோது, எங்கள்
நண்பர்களில் சிலர் ஸ்ரீமுஷ்ணம் சென்று
பெருமாள் தரிசனம் செய்ய நண்பர்
ஜெயராமனுடன் ஒரு Van ல் கிளம்பத்தயாராக
இருந்தார்கள். அவர்களுடன் சென்று பேருந்து
நிலயத்தில் நாங்கள் இறங்கிக்கொண்டோம்.
நாங்கள் முன்பதிவு ஏதும் செய்யாததால்
அரசு விரைவுப்பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம்.

(அரசுப்பேருந்து என்றால் வழியில் உணவருந்த
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்‘சேவை’ செய்யும்
பாடாவதி உணவகத்தில்தான் நிறுத்துவார்கள்
என்பது எனக்குத் தெரியும்.இன்றைக்கும் சிதம்பரத்தில்
இருந்து சென்னை செல்லும் பேருந்துகள்,
விக்கிரவாண்டிக்கும் திண்டிவனத்துக்கும் இடையே
உள்ள ஒரு சில குறிப்பிட்ட உணவகங்கள் என
சொல்லப்படுகின்ற இடத்தில் நிறுத்தப்படுகின்றன.

அங்குள்ள உணவின் தரத்தைப்பற்றி சொல்ல
வேண்டியதில்லை.விலையோ அதிகம். அங்கு
விற்கும் பிஸ்கட் கூட MRP விலைக்கு மேல் தான்
விற்கப்படுகின்றன.

யாரும் அவர்களை கேள்வி கேட்கமுடியாது.
அரசை ஆள்பவர்கள் மாறும்போதெல்லாம்,அந்த
உணவகங்களின் பெயரும் அதன் வண்ணமும்
மாறிவிடும்.ஆனால் தரப்படும் உணவின் தரம் மட்டும்
எப்போதும் மாறாது!)

அந்த உணவகங்களில் சாப்பிடமுடியாது என்பதால்
பேருந்து நிலையம் அருகே உள்ள சாரதா ராம் என்ற
உணவகத்தில் இரவுக்கான உணவை வாங்கிக்கொண்டு
பேருந்து நிலையம் வந்தோம்.மாலை 6.50 க்கு
சென்னை கிளம்பும் பேருந்து 6.30 மணிக்கு வந்தது.

சரியாக 6.50 மணிக்கு பேருந்து கிளம்பியதும்
மகிழ்ந்தேன்.ஆனால் அது சில மணித்துளிகள் கூட
நீடிக்கவில்லை.நாங்கள் ஏறியது விரைவுப்பெருந்து
என்றாலும் எல்லா இடங்களிலும் நிற்கும்போலும்.

எல்லா இடங்கள் என்றால் 4 (அ) 5 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள அருகருகில் உள்ள ஊர்களிலும்
நிற்கும் போலும்.அதனால் சிதம்பரம் கடைத்தெருவில்
பேருந்து நின்றபோது நிறைய பேர் ஏறினார்கள்.
யாருக்கும் நிற்கக்கூட இடம் இல்லை.நடத்துனரோ
பானையில் புளியை அடைப்பதுபோல்
எல்லோரையும் ஏற்றிக்கொண்டிருந்தார்.அதனால்
அங்கு ஏறிய பயணிகளுக்கு மட்டுமல்ல
எங்களைப்போல முன்பே ஏறி உட்கார்ந்தவர்கள் கூட
கை கால்களை நீட்டமுடியாமல் அவதிப்பட்டோம்.
இந்த அவஸ்தை பண்ருட்டி செல்லும் வரை இருந்தது.

அதற்கு பிறகு கூட்டம் குறைந்ததால் ஆசுவாசப்படுத்திக்
கொள்ள முடிந்தது.‘அந்த’ உணவகத்தில் பேருந்து
நின்றபோது, நாங்கள் பேருந்தில் அமர்ந்து எங்களது
இரவு உணவை சாப்பிட்டோம்.

பிறகு பேருந்து எங்கும் நிற்கவில்லை.நானும்
கண்ணை மூடிக்கொண்டு இரண்டு நாட்கள்
நடந்தவைகளை ‘அசை’ போட்டேன்.

பழைய நண்பர்களைப்பார்த்து பேசி, கல்லூரி
நினைவுகளில் மூழ்கியது,மகிழ்ச்சியைத் தந்தது
மட்டுமல்லாமல் சில வருடங்கள் வயது குறைந்து
இளமையானது போன்ற உணர்வைத் தந்தது
என்பதும் உண்மை.

பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றவர்கள்,
அடிக்கடி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
தொடர்புகொண்டு இருக்கவேண்டும்.அப்போதுதான்
எப்போதும் சுறுசுறுப்போடும் சந்தோஷமாகவும்
இருக்கமுடியும்
என்று படித்ததாக நினைவு.
சொல்லப்போனால் இந்த சந்திப்பு சொல்லவொணா
புத்துணர்ச்சியைத் தந்தது என்பது நிச்சயம்.

சரியாக நடு இரவு 1.30 மணிக்கு பேருந்து சென்னை
கோயம்பேடு நிலையத்தை அடைந்ததும் ,இறங்கி ஒரு
‘ஆட்டோ’ பிடித்து நானும் என் மனைவியும் வீடு
வந்து சேர்ந்தோம்.

(ஆட்டோக்காரர்களிடம் நாங்கள் பட்ட அனுபவத்தை
தனியாக எழுத இருக்கிறேன்.)

சந்திப்பின் இனிய நினைவுகளோடு உறங்கச்சென்றேன்.


நிறைவாக:- நான் அண்ணாமலை நகரில் நடந்த
வகுப்பு நண்பர்கள் சந்திப்புக்கு போய் வந்ததை பற்றி,
எனது நண்பரும், பள்ளியில் எனக்கு ஓராண்டு
மூத்தவருமான திரு கல்பனா தாசன் அவர்களிடம்
பேசிக்கொண்டிருந்த போது,‘அண்ணாமலை நகர்
அனுபவத்தை உங்கள் பதிவில் எழுதலாமே?’
என்றார்.‘இதையெல்லாம் எழுதலாமா?’என்றதற்கு,
‘நீங்கள் நினைப்பதை எழுதுவது தப்பில்லை.
நீங்கள் எப்படி எழுத நினைக்கிறீர்களோ அப்படியே
எழுதுங்கள்.’என்று ஊக்கப்படுத்தினார். நண்பர்
திரு சென்னை பித்தனும் உங்கள் சந்திப்பின்
அனுபவத்தை எழுதலாமே.’என்றார். முதலில்
இரண்டு அல்லது மூன்று பதிவுகள் தான் எழுத
இருந்தேன்.ஆனால் என்னையும் மீறி(?) சந்திப்பு
பற்றிய பதிவுகள் 10 ஆகிவிட்டன.பதிவு
சுவாரஸ்யமாக இருந்திருந்தால், எல்லா
பாராட்டுக்களும் திரு கல்பனா தாசன் அவர்களுக்கும்
திரு சென்னை பித்தன் அவர்களுக்கும் உரித்தாகுக.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 9

பகல் 12.30 மணிக்கு திரும்பி வந்த படகு ஒன்று
12.45 மணிக்கு கிளம்பத்தயாரானது.அந்த படகில்,
திருமதி & திரு T.N.பாலசுப்ரமணியன்,
திருமதி & திரு G.இராமச்சந்திரன்,திரு செல்லப்பா,
திரு முத்துகிருஷ்ணன்,ஆகியோரோடு என்னையும்,
என் துணைவியாரையும் செல்லுமாறு,
நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.

எங்களுக்கு குடிக்கத் தண்ணீரும், பிஸ்கட்டும்
கொடுத்து, அந்த குழுவை நடத்தி செல்லவும்
என்னைப் பணித்தார்.அதுவரை கேமராவை
வைத்திருந்த நான் அதை நாச்சியப்பனிடம்
கொடுத்துவிட்டு படகில் ஏறினேன்.

எங்களுக்கு பாதுகாப்பு மேல் சட்டை கொடுத்து
அணிந்துகொள்ள சொன்னார்கள்.பயண நேரம்
அரை மணி என்பதால் அதற்குள் எல்லாவற்றையும்
பார்க்கமுடியுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

அந்த விசைப்படகு மெதுவாக நகர்ந்து,அந்த
அலையாத்தி காடுகள் உள்ள பகுதிக்கு
சென்றபோது, அந்த படகோட்டி என்னிடம்,
‘சார், திட்டப்படி நான் நேரே சென்றுதான்
திரும்பவேண்டும். நீங்கள் விரும்பினால் நான்
உள்ளே அழைத்து சென்று நெருக்கமாக உள்ள
தாவரங்களை காண்பிக்கிறேன். நாம்
திட்டமிட்டபடி அரை மணிக்குள் கரை
திரும்பிவிடலாம்’ என்றார்.

ஆனால் நண்பர்கள்‘சுற்றுலாத்துறை அனுமதித்த
திட்டத்தை மாற்றவேண்டாம். அதனால்
வீண் பிரச்சினை வரலாம்.’என்றார்கள்.

அவர்கள் சொன்னதே நல்லதாகிவிட்டது.
வேறு படகில் சென்ற நண்பர்கள் அதுபோல்
உள்ளே சென்றதும் அந்த படகோட்டி அதிக
பணத்தை அவர்களிடம் ‘கறந்து’விட்டதாக
அறிந்தோம்.

அந்த அரை மணி நேரம் உச்சிவெயிலில்
பயணித்தாலும்,அந்த அழகிய காட்சிகளை
இரசித்துக்கொண்டு இருந்ததால், வெயிலின்
தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை.

எழுத்தாளர் அகிலன் அவர்களின்
‘பாவை விளக்கு’ திரைப்படமாக வந்தபோது,
அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்களுக்கு, இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன்
அவர்கள் ‘ஆயிரம் கண் போதாது
வண்ணக்கிளியே,
என்று,பாடியது ஏனோ,
அப்போது என் நினைவுக்கு வந்தது.

உண்மையில் அந்த அலையாத்தி தாவரங்களின்
அழகைக் காண இரு கண் போதாதுதான்.
ஒருவேளை வண்ணத்து பூச்சிக்கு இருப்பதுபோல்
நமக்கும் Compound Eyes இருந்தால் ஒரே நேரத்தில்
முன்புறம், பின்புறம் மேலே,கீழே உள்ளவைகளை
ஒரே நேரத்தில் பார்த்து களிக்கமுடியும்.

வேளாண்மை அறிவியலில், இறுதி ஆண்டு
படிக்கும்போது வேளாண் விரிவாக்கம் பாடத்தில்
சொல்வார்கள்.‘Seeing is Believing’ என்று.
உண்மையில் அந்த உப்பக்கழியின் நீரோட்டத்தையும்,
அதன் இரு மருங்கிலும் படை வீரர்கள் போல்
அணி வகுத்து நிற்கும் அந்த அரிய வகைத்
தாவரங்களின் அழகையும் கண்ணால் கண்டுதான்
இரசிக்க வேண்டும். பிறர் விவரித்து அல்ல!

நான் அவைகள் படை வீரர்கள் போல் அணி
வகுத்து நிற்பதாக கூறியதன் காரணம்,படைவீரர்கள்
எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியது போல்
இந்த தாவரங்களும் ‘ஆழிப்பேரலை’(சுனாமி) என்ற
அழிவு சக்தி வந்தபோது சிதம்பரத்தையும்,அதை
சுற்றியுள்ள ஊர்களையும் காப்பாற்றியதால் தான்.
உண்மையில்,வேகமாக வந்த பேரலைகளை மாற்றி,
வந்த திசைக்கே திருப்பி விட்டதால், இவைகளை
அலையாத்திக்காடுகள் என்பதை விட
அலைமாத்திக்காடுகள் என்று அழைப்பதே சரி.

(இந்த தாவரங்களைப்பற்றிய சுவையான
தகவல்கள் உண்டு.ஆனால் பதிவு நீண்டுகொண்டு
போவதால் அது பற்றி பின்னர்
 எழுதுகிறேன்.)

ஆனால் நம்மவர்களில் சிலர் இதனுடைய உபயோகம்
தெரியாமல் தங்கள் சுயநலத்திற்காக இவைகளை
அழிக்கதொடங்கியபோது, விழித்துக்கொண்ட அரசு
தற்சமயம் வனத்துறையின் மூலம், காடுகள்
அழிக்கப்பட்டஇடத்தில் புதிய கன்றுகளை நட்டு,
அவைகளை பராமரித்து வருகிறது.

எங்கள் படகோட்டி,சுமார் 15 மணித்துளிகள்,
உப்பக்கழியின் நடுவில் சென்றுவிட்டு திரும்பும்போது,
அடுத்த 15 மணித்துளிகள்,படகை ஓரமாக ஒட்டி
அந்த தாவரங்களை அருகில் இருந்து
பார்க்க உதவினார்.

குறித்தபடி அரை மணிநேரத்தில் பயணத்தை
முடித்து எங்களை படகுத்துறைக்கு
கொண்டுவந்து விட்டார் நாங்களும்
மனமில்லாமல் படகிலிருந்து இறங்கினோம்.

எங்களுடன் வந்த திருமதி T.N.பாலசுப்ரமணியன்
அவர்கள், தான் கொண்டுவந்த கேமராவில் எடுத்த
சில புகைப்படங்கள் கீழே.


திரும்ப கரைக்கு வந்து,மற்ற நண்பர்கள்
பயணத்தை முடிக்கும் வரை கரையில்
காத்திருந்தோம்.அப்போது நான் நண்பர்கள்
T.N.பாலசுப்ரமணியத்தோடும்
முத்துகிருஷ்ணனோடும் ‘கதை’த்து கொண்டு
இருந்தேன்.

எல்லோரும் வந்ததும்,சரியாக 2.30 மணிக்கு
பிச்சாவரத்தை விட்டு கிளம்பி அண்ணாமலை நகர்
விருந்தினர் விடுதிக்கு சுமார் 3.15 மணிக்கு வந்து
மதிய உணவு அருந்தினோம்.


தொடரும்

சனி, 8 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 8

மறுநாள் (14-08-2011) காலை 5 மணிக்கே எழுந்து
குளித்து கோவிலுக்கு செல்ல தயாரானோம்.6 மணிக்கு
சுடச்சுட கொடுக்கப்பட்ட காபியை குடித்துவிட்டு,
பேருந்தில் நடராஜர் கோவிலுக்கு கிளம்பினோம்.
சிலர்,வேறு அலுவல்கள் இருந்ததால் எங்களுடன்
வரவில்லை.

எங்களது வகுப்புத்தோழர்கள் கோவிந்தசாமியும்,
ஜெயராமனும் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
செய்து இருந்தனர்.

(நண்பர் ஜெயராமன் அவர்கள் தீவிர வைணவர்.
அப்போதே(1962 ல்) நெற்றியில் ‘திருமண்’ இட்டே
வகுப்புக்கு வருவார். அவர் எங்கள் ஊருக்கு அருகில்
உள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரை அடுத்த சிற்றூரை
சேர்ந்தவர். எங்கள் வகுப்பில் திருமணமான மாணவர்
அவர்தான்.எனக்கு தூரத்து உறவினரும் கூட.)

நாங்கள் கோவிலுக்கு சென்றபோது, ஆந்திர
மாநிலத்திலிருந்து நிறைய பேர் வந்திருந்ததால்,
நடராஜர் நடனமாடும் ‘கனகசபை’க்கு சென்று
அருகில் மூலவரை தரிசிக்க கூட்டம் அலை
மோதியது. அதனால் அருகே உள்ள
கோவிந்தராஜப்பெருமாள் சன்னிதி
அமைந்திருக்கும் திருச்சித்திர கூடத்தில் நின்று
நடராஜப் பெருமானையும், கோவிந்தராஜப்
பெருமாளையும் ஒரு சேர தரிசித்தோம்.

(நடனமாடும் அம்பலத்தரசன் தெற்கு திசை நோக்கி
இருப்பதாலும்,கோவிந்தராஜப்பெருமாள் கிழக்கு
திசை நோக்கி சயன நிலையில் இருப்பதாலும்,
அந்த இடத்தில் நின்று வணங்கினால் இரு
கடவுளையும் ஒரே நேரத்தில் வணங்கமுடியும்.
இது தில்லைக்கே உள்ள சிறப்பு.)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வணிகவியலில் முனைவர் பட்டம் பெற்று
தற்சமயம் கோவிந்தராஜப்பெருமாள் சன்னிதியில்
தலைமை பட்டராக இருப்பவர், நண்பர்
ஜெயராமனுக்கு வேண்டியவர்.அவர் எங்களை
திருமால் சன்னிதிக்குள் அழைத்து சென்று
தரிசனம் செய்ய உதவினார்.

பிறகு தாயார் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்து
விட்டு, வெளியே வந்து சிவகாமி அம்மன்
சன்னிதிக்கும் சென்று தரிசனம் செய்தோம்.

ஒரே குழுவாக வந்த நாங்கள் கோவிலுக்குள்
சென்றதும்,அங்கிருந்த கூட்டம் காரணமாக
பிரிந்துவிட்டதால் அனைவரும் ஒரே நேரத்தில்
கோவிலை விட்டு வர இயலவில்லை. எல்லோரும்
வந்து பேருந்தில் ஏறி கிளம்பும்போது மணி 9
ஆகிவிட்டது. அதனால் தில்லை காளி அம்மன்
கோவிலுக்கு செல்ல இருந்த திட்டத்தை, கைவிட்டு
விருந்தினர் விடுதிக்கு திரும்பினோம்.

நண்பர் ஜெயராமன் தன் செலவில் எல்லோருக்கும்
பெருமாள் கோவிலிலிருந்து பிரசாதம் வாங்கி
வந்திருந்தார். அதையும், காலை சிற்றுண்டியையும்
சாப்பிட்டுவிட்டு,10 மணி சுமாருக்கு பிச்சாவரம்
நோக்கி பேருந்தில் பயணித்தோம்.

பேருந்து கிளம்பியதும்,எனக்கு 1963 ஆம் ஆண்டு
பிச்சாவரம் சென்றது நினைவுக்கு வந்தது.

அப்போது நாங்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.
எங்களது வேளாண் தாவரவியல் பேராசிரியர்
டாக்டர் இராஜசேகரன் அவர்கள், எங்களை ஒரு
ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு உள்ள
சுரபுன்னை காடுகளைக் காண்பிக்க அழைத்து சென்றார்.

நாங்கள் அனைவரும் சைக்கிளில் சென்றோம்.எங்கள்
பேராசிரியரோடு எங்கள் பல்கலைக்கழ தாவரவியல்
துறையைச்சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.காசிநாதன்
அவர்களும் வந்திருந்தார்.

நாங்கள் அப்போது சென்றது 10 கிலோ மீட்டர்
தொலைவில் இருந்த தெற்கு பிச்சாவரத்துக்கு.
பிச்சவரத்தில் உள்ள உப்பங்கழி(Backwater) கடலில்
கலக்கும் இடம் அருகே உள்ள ஒரு சிற்றூரில்
சைக்கிளை விட்டுவிட்டு,படகில் ஏறி சுரபுன்னை
காடுகளை பார்த்ததும்,அந்த தாவரங்கள் பற்றி
பேராசிரியர்கள் விரிவாக சொன்னதும்
நினைவுக்கு வந்தது.

ஆனால் இந்தக் தடவை பேருந்து வடக்கு நோக்கி
பயணித்து கிள்ளை என்ற ஊரை கடந்து வடக்கு
பிச்சாவரத்தை அடைந்ததால்,15 கிலோ மீட்டர்
பயணிக்க வேண்டியதாயிற்று.

பிச்சாவரம் பற்றி அநேகம் பேருக்கு தெரிந்து
இருக்கும். தெரியாதவர்களுக்காக விவரம் இதோ.
சிதம்பரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள கடலை ஒட்டியுள்ள இந்த ஊரில்தான்
அலையாத்தி (சுரபுன்னை) காடுகள் உள்ளன.
உலகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது காடு
இது என்பதும் இதனுடைய பரப்பளவு சுமார்
2800 ஏக்கர்கள் என்பதும் இங்கு அரிய வகையைச்
சேர்ந்த Avicennia மற்றும் Rhizophara போன்ற
தாவரங்கள் உள்ளன என்பதும் நாம்
பெருமைப்படவேண்டிய விஷயம்.

ஆனால் இத்தகைய காடுகள் பற்றி 1975 வரை
சிதம்பரத்தில் உள்ளவர்களுக்கே (விஞ்ஞானிகள்,
தாவரவியல்,கடல்வாழ் உயிரியல் மற்றும்
வேளாண் அறிவியல் மாணவர்களைத் தவிர)
தெரியாமல் இருந்தது ஆச்சர்யமே.

1975 ஆம் ஆண்டு திரு இராம.வீரப்பன்
அவர்களால் எம்.ஜி, ஆர் அவர்களை வைத்து
எடுக்கப்பட்ட ‘இதயக்கனி’ திரைப்படத்தில்
சண்டைக்காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டு,
அவை படத்தில் காண்பிக்கப்பட்டதும் தான்
அநேகருக்கு இந்த இடம் பற்றி தெரிய வந்தது.

பின் திரு எம்.ஜி, ஆர் முதல்வர் ஆனதும்
இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றலாத்துறை
சுற்றுலாத்தலமாக மாற்றியது வரலாறு.

சமீபத்தில் வந்த திரு கமலஹாசனின்
‘தசாவதாரம்’ திரைப்படமும், இந்த அழகான
காட்டின் ஒரு பகுதியை நமக்கு காட்டியது
நினைவிருக்கலாம்.

நாங்கள் பிச்சாவரம் அடைந்தபோது அங்கே
ஏராளமான வாகனங்கள் இருப்பதைப் பார்த்ததும்
தான் தெரிந்தது, நாங்கள் தவறான நாளை
தேர்ந்தெடுத்து இருக்கிறோமென்று.

மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை
இருந்ததால் அநேக சுற்றுலா பயணிகள்
விடுமுறையைக்கழிக்க அங்கே
முகாமிட்டிருந்தனர்.அந்த கூட்டத்தின் நடுவே
நம்மால் படகுப்பயணம் மேற்கொண்டு அந்த
அலையாத்திக்காடுகளை பார்க்கமுடியுமா என்ற
சந்தேகம் எங்களுக்கு.

நாங்கள் இறங்கி விசாரித்தபோது, அப்போது
மொத்தம் நான்கு படகுகள்தான் இயக்கப்படுகின்றன
என்றும், வரிசைப்படி அந்த படகில் பயணிக்க நேரம்
ஆகும் என்று தெரிந்தது. இருந்தாலும் காத்திருந்து
பார்த்து செல்வது நாங்கள் முடிவெடுத்ததால்
நண்பர் கோவிந்தசாமி அவர்கள் எங்களுக்காக
வரிசையில் நின்று பயணச்சீட்டு எடுத்தார்.

எங்கள் குழுவுக்கு 6 படகுகள் தேவைப்பட்டதால்
எங்களுக்கு நேரம் 12 மணியிலிருந்து 1.45 வரை
ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு படகிலும் 8 பேர்
பயணிக்கலாம் என்றும் ஒவ்வொருவருக்கும்
100 ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள்.

நாங்கள் அங்கு சென்றபோது நேரம் காலை 10.45.
பயணிகளை ஏற்றி சென்ற படகு வரும் வரையில்
நாங்கள் படகுத்துறை அருகே இருந்த தங்குமிடத்தில்
அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது நான் கரையில் இருந்து எடுத்த
புகைப்படங்கள் கீழே.எங்களுக்கான படகு வரும் வரையில் நான் எனது
அறைத் தோழனான முத்துக்கிருஷ்ணனோடு
பேசிக்கொண்டு இருந்தேன்.


தொடரும்

புதன், 5 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 7

நண்பர்களின் சந்திப்பு முடிவான பின் ஒரு நாள்
நண்பர் கோவிந்தசாமி என்னை அழைத்து,
படித்தபோது நான் வாங்கிய மதிப்பெண்களின்
சான்றிதழ்கள் உள்ளனவா என்று கேட்டார்.

‘இருக்கிறது’ என்றவுடன் ‘அவைகளைப்பார்த்து
நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள்
பெயரை நினைவு படுத்த இயலுமா?’என்றார்.
‘முடியும்’என்றேன்.

எனது மதிப்பெண்களின் சான்றிதழ்களின் நகல்களை
எனது கணினியில் சேமித்து வைத்து இருந்ததால்
அவைகளைப்பார்த்து எங்கள் ஆசிரியர்களின்
பெயர்களை நினைவுகூர்ந்து (மறக்கமுடியுமா என்ன?)
அனைத்து ஆசிரியர்களின் பெயரையும் எழுதி
வைத்து விட்டேன்.

அண்ணாமலை நகர் சென்ற அன்று இரவு,
நண்பர் நாச்சியப்பன் கூப்பிட்டு‘மலரும் நினைவுகள்’
என்ற தலைப்பில் நான் எங்களது ஆசிரியர்கள்
பற்றி பேசவேண்டும் என்றும் படிக்கும்போது நடந்த
சுவையான நிகழ்வுகளைப்பற்றியும் பேசவேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார்.

உடனே பழையவைகளை‘நினைத்துப்பார்த்து’
ஒரு சிறிய குறிப்பை தயார் செய்துகொண்டேன்.
அதனால் நண்பர் நாச்சியப்பன் என்னை
அழைத்ததும் பேச மேடைக்கு சென்றேன்.

நான் பேசும்போது எடுத்த புகைப்படம் கீழே.

நான் பேசும்போது, வேளாண் அறிவியல்
படிப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு 1962 ஜூன்
மாதம் அண்ணாமலை நகர் வந்ததையும்,
அப்போது எல்லோரையும் திருக்குறளில்‘உழவு
அதிகாரத்தை படித்து வருமாறு அறிக்கை
பலகையில் அறிக்கை வெளியிட்டு இருந்ததையும்,
உடனே எதிரே இருந்த நூலகம் சென்றபோது,
அங்கே நூற்றுக்கணக்கில் திருக்குறள் நூல்கள்
‘உழவு’அதிகாரம் தெரியும்படி பிரித்து
வைக்கபட்டிருந்ததையும் சொன்னபோது,அரங்கத்தில்
இருந்த அனைவரும் 1962 ஆம் ஆண்டுக்கே
சென்றுவிட்டதை உணர்ந்தேன்.

பிறகு நேர்முகத்தேர்வில் வழக்கமான பாட
சம்பந்தமான கேள்விக்குப்பிறகு அந்த
தேர்வுக்குழுவுக்கு தலைவராக இருந்த மறைந்த
திரு பி.டி. இராஜன் அவர்கள் ஒரு குறளை
சொல்லச்சொல்லி அதன் பொருள் கேட்டதையும்
சொன்னேன்.நான்‘உழுதுண்டு’என்று ஆரம்பித்ததும்
திரு இராஜன் அவர்கள் ‘எல்லோரும் இதையே
சொல்கிறீர்களே.வேறு ஒரு குறள் சொல்.’என்றதும்

‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.‘


என்ற குறளை சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே
அதன் பொருள் கேட்டார். நான் சொன்னதும்,
என் வயதைக்கேட்டுவிட்டு ஊடல் என்றால்
என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டார்
‘தெரியாது ‘என்றேன் என்றபோ,து அரங்கமே
சிரிப்பால் அதிர்ந்தது.

பின் ஆசிரியர்கள் பற்றி சொல்லும்போது,
மறக்காமல் 35 ஆசிரியர்கள் செய்த நற்பணியை
நினைவுகூர்ந்தேன்.அவர்களுக்கு நாங்கள்
வைத்த செல்ல(?)(புனை)பெயர்களை சொன்னபோது,
மேடையில் வீற்றிருந்த பேராசிரியர்களும்
எல்லோரோடும் சேர்ந்து சிரித்தார்கள்.

பேராசிரியர் திரு கலியபெருமாள் அவர்கள்
எவ்வாறு முதலாம் ஆண்டில் நல்லாசிரியராக
மட்டுமல்லாமல் நல்ல வழிகாட்டியாக இருந்தார்
என்பதையும்,பேராசிரியர் டாக்டர் மகாதேவன்,
1965 லேயே டாக்டர் ஹர்கோபிந்த் குரானா
நோபல் பரிசு வாங்க இருக்கிறார் என்று
சொன்னது 1968 ல் நடந்தது பற்றியும்,அவரிடம்
நாங்கள் கற்றுக்கொண்ட நேர மேலாண்மை
(Time Management) பற்றியும், பேராசிரியர்
திரு பாண்டுரங்கன் அவர்கள் தந்த,
கருத்து பரிமாற்று திறமை(Communication Skill)
பயிற்சி பற்றியும்,அவர் வேலையில் சேரும்போது
எப்படி Joining Report தரவேண்டும் என்று
சொல்லிக்கொடுத்தது பின்னால் எப்படி உதவியது
என்பது பற்றியும், அவர் எங்களை சென்னைக்கு
அழைத்து சென்று Screen Printing செய்வதை
கற்றுக்கொடுத்ததும்,இன்னும் மற்ற பேராசிரியர்கள்
சொல்லிக் கொடுத்ததை மறக்காமல்
நினைவுகூர்ந்தபோது அனைவருமே
சந்தோஷப்பட்டனர்.

மேலும் எங்கள் Batch பற்றி சொல்லும்போது,
அதுதான் முதன் முதல் Integrated Batch என்பதையும்,
எங்கள் வகுப்பில் தான் முதன்முதல் 75 பேர்
சேர்க்கப்பட்டனர் என்பதையும்,இந்தியாவிலேயே,
அப்போது இளநிலை படிப்பில் நுண் உயிரியல்
(Microbiology) பாடம் படித்தவர்கள் நாங்கள்தான்
என்பதையும், படிக்கும்போதே இறுதியாண்டில்
தினம் கிராமங்களுக்கு சென்று விவசாய
பெருமக்களோடு பழகி யதார்த்த நிலையை
கற்றுக்கொண்டது நாங்கள்தான் என்பதையும்
விரிவாக சொன்னேன்.

1965 ல் எங்களது புலத்தின் முதல்வர்
டாக்டர் ஜி அரங்கசாமி அவர்களுக்கு நடந்த
பிரிவுபசார விழாவில் நான் பேசியபொது சொன்ன
‘ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும்,
மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை.’

என்ற அதே வார்த்தைகளை திரும்பவும் சொல்லி
பேச்சை நிறைவு செய்தபோது அனைவரும்
கை தட்டி எனது கருத்தை ஆமோதித்தனர்.

பின் பேராசிரியர்கள் ஒவ்வொருவருவரும்
தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி எங்களை
வாழ்த்தினர்.டாக்டர்.சந்திரசேகரன் பேசும்போது
இனி நாங்கள் ஆசிரியர்களோ அல்லது நீங்கள்
மாணவர்களோ அல்ல. நாம் எல்லோரும் மூத்த
குடிமக்களாக ஆகிவிட்டதால், நாம் அனைவரும்
இனி நண்பர்களே என்றபோது எங்களுக்கு ஏற்பட்ட
உணர்வை வெளிப்படுத்த வார்த்தை இல்லை
என்பதே உண்மை.

விழா நடந்துகொண்டு இருக்கும்போதே,
பெங்களூருவிலிருந்து பேராசிரியர் டாக்டர்.சிவசங்கர்
அவர்களும் வந்து கலந்துகொண்டார்.

இறுதியாக நண்பர் கோவிந்தசாமி நன்றி உரை
நவின்றார். அவருடைய உரையில் மறக்காமல்
எங்களது சந்திப்பு நடைபெற அரங்கம் மற்றும்
பேருந்து தந்து எல்லா உதவிகளை செய்த
வேளாண் புலத்தின் தலைவர் டாக்டர்.ஜெ.வசந்தகுமார்
அவர்களுக்கும், விழா நடக்க உறுதுணையாக இருந்த
பேராசிரியர்கள் டாக்டர் எம்.இரவிசந்திரன் மற்றும்
டாக்டர் வி.வையாபுரி ஆகியோருக்கும் நன்றி கூறினார்
.
(இந்த சந்திப்பை நன்முறையில் நடத்திய நண்பர்கள்
பேராசிரியர்கள் நாச்சியப்பன் மற்றும் கோவிந்தசாமி
ஆகியோரின் புகைப்படம் கீழே.
படத்தில் வலப்புறம் இருப்பவர் டாக்டர் நாச்சியப்பன்
நடுவில் இருப்பவர் டாக்டர்.கோவிந்தசாமி)

விழா முடிந்து பேருந்தில் விடுதிக்கு வந்து
பேராசிரியர்களுடன் இரவு விருந்து முடித்து நீண்ட
நேரம் பேசிக்கொண்டு இருந்து, அவர்களிடம்
இருந்து பிரியா விடை பெற்றோம்.

மறுநாள் காலை நடராஜர் கோயிலுக்கும்,
சுரபுன்னை காடுகள் உள்ள பிச்சாவரத்துக்கும்
சீக்கிரமே கிளம்பவேண்டி இருந்ததால், ஓய்வெடுக்க
சென்றுவிட்டோம்.

தொடரும்