கோமானுக்கு நான் செல்வது அதுதான் முதல் தடவை.என் அண்ணனோடு
மாட்டு வண்டியில் பயணித்து கடம்பூர் என்ற ஊரை கடந்து கோமானுக்கு வடக்கே ஓடிக்கொண்டிருந்த(?) மருதையாறு என்ற ஒரு காட்டாற்றைக்
கடந்து ஊரை அடைந்தோம்.
இந்த மருதையாற்றில் வருடம்
முழுதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்காது.
ஆனால் மழைக்காலங்களில் இந்த
காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது இந்த ஆற்றின் மீது பாலம் ஏதும்
கட்டப்படாததால் மழைக்காலங்களில் கோமானுக்கு செல்வதோ அல்லது அங்கிருந்து வெளியே
வருவதோ இயலாத காரியம்.
(கோமானுக்கு மேற்கே 30 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள அரியலூர் அருகே, 23/11/1956 அன்று நடந்த இரயில் விபத்தில் 140 பேருக்குமேல்
உயிர் துறக்க,அப்போதைய இரயில்வே அமைச்சர் திரு லால் பகதூர்
சாஸ்திரி அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று தானே முன் வந்து பதவியைத் துறந்தார்
என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த இரயில் விபத்து நடந்தது அங்கே
ஓடுகின்ற இதே மருதையாற்றில் மேல் இருந்த இரயில் பாலம் வெள்ளத்தின் போது சேதமடைந்து
இருந்ததால் தான்.)
ஊருக்கு தெற்கே குருவாடி என்ற
ஊரைத்தாண்டி உள்ள கொள்ளிடம் ஆற்றிலும் மழைக்காலங்களில் வெள்ளம் சுழித்துக்கொண்டு ஓடும்.
அந்த வழியாகவும் ஊரைவிட்டு
போகமுடியாது. சொல்லப்போனால்
கோமான் ஒரு தீவு போன்றதுதான்.
என்னை பார்த்ததும் பெரியம்மா
சந்தோஷப்பட்டார்கள். ஆனால் எனக்கோ அங்கு சென்ற சில நாட்களிலேயே அலுப்பு
தட்டிவிட்டது. கோமானில் வெளியே போய் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அது நாகமங்கலத்தை
விட மிகச் சிறிய ஊர். எனக்குத்தெரிந்து அங்கு இரண்டு தெருக்கள்தான் இருந்தன. அங்கும்
பொழுதைப் போக்க அண்ணன் வீட்டில் இருந்த கண்ணன், கலைமகள் போன்ற இதழ்களை படித்து சில மணி நேரத்தை செலவிட்டேன்.
மூன்றாவது மற்றும் ஐந்தாவது
படித்துக்கொண்டு இருந்த அண்ணன் மகள்களோடு தாயக்கட்டை,
பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், கேரம்
போன்றவைகளை விளையாடி பகல் பொழுதைக் கழித்தேன்.
சில சமயம் அண்ணன் வீட்டிற்கு
பக்கத்தில் வீட்டில் இருந்த திரு சாமிநாத அண்ணன் அவர்களோடு பேசிக்கொண்டு நேரம்
கழித்தும், திருச்சி
வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்டு பொழுது போக்கியதும் உண்டு.
நான் பொழுது போகாமல்
கஷ்டப்படுவதைப் பார்த்த என் பெரியம்மா
அருகில் இருந்த மேட்டு
குணமங்கலம் என்ற ஊரிலிருந்த என் உறவினர்
திரு பாலதண்டாயுதத்தை வர
சொல்லி இருந்தார்கள்.அவரும்
என்னைப்போல் S.S.L.C தேர்வு எழுதியிருந்தார்.
(பின் நாட்களில் அவர் சென்னை
கால் நடை மருத்துவக்கல்லூரியில்
படித்து கால் நடை
மருத்துவராகி, அந்தத்
துறையில் இணை கால்நடை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் திருச்சியில்
உள்ளார்.)
அவர் வந்து ஒரு வார காலம்
இருந்தது எனக்கு பொழுதைப் போக்க சுலபமாக இருந்தது. பெரியம்மாவின் அன்பும், அண்ணியாரின் அருமையான சாப்பாடும், அவர்கள் அவ்வப்போது செய்து கொடுத்த நொறுக்குத் தீனிகளும் நேரத்தை கழிக்க
கஷ்டப்பட்டதை மறக்க செய்தது.
ஒரு சனிக்கிழமை மாட்டு வண்டியில்
பயணித்து தெற்கே இருந்த கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று எண்ணைக் குளியல் போட்டு
வந்தோம். இப்படி கிட்டத்தட்ட 45 நாட்கள் சாப்பிடுவதும் விளையாடுவதும் தூங்குவதுமாக
நாட்களைக் கழித்தேன்.
ஒரு கட்டத்திற்குமேல் அங்கும்
‘போரடிக்க’ ஆரம்பித்து விட்டது. பெரியம்மாவிடம் ஊருக்கு போகலாம் என்று சொன்னபோது, ‘அங்கு போய் என்ன செய்யப்போகிறாய். இங்கேயே இன்னும்
கொஞ்ச நாள் இரேன். நாளை நீ படித்து வேலைக்குப் போய்விட்டால் இங்கு வந்து
இருக்கப்போகிறாயா என்ன?’ என்று சொல்லிவிட்டார்கள்.
(அவர்கள் சொன்னது உண்மைதான்.
அதற்குப் பிறகு இரண்டு தடவைதான் அங்கு போயிருக்கிறேன்.)
அவர்களிடம் என்னால் ஒன்றும்
சொல்ல முடியவில்லை. இருந்தாலும் எப்போது
ஊருக்கு திரும்புவோம் என்று ஏங்கிக்கொண்டு இருந்தபோது, கோமானை விட்டுக் கிளம்ப ஒரு
வாய்ப்பு கிடைத்தது.
திடீரென ஒரு நாள் நாகமங்கலத்திலிருந்து
ஒருவர் வந்து, என்
அத்தான் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாததால் விக்கிரமங்கலம் வந்து
அவரது தங்கை வீட்டில் தங்கி,
மருத்துவரிடம் காட்டி வருவதாகவும் அவருக்கு உதவியாக இருக்க என்னை எங்கள் அக்கா
அழைத்து வரச்சொன்னதாகவும் சொன்னார். உடனே அவருடன் கிளம்பி
விக்கிரமங்கலம் சென்றேன்.
அங்கு தினம் காலையும்
மாலையும் அத்தான் அவர்களை மருத்துவர் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தேன். சுமார் 15
நாட்கள் அங்கு இருந்திருப்பேன்.அதற்குள் எனக்கு எங்கள் ஊரிலிருந்து என் அண்ணன்
திரு வே.சபாநாயகம் அவர்கள்
புகுமுக வகுப்பில் சேர கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டியிருப்பதால் உடனே புறப்பட்டு
வரச் சொல்லி கடிதம் எழுதியிருந்தார்.
அத்தானுக்கு உடல் நிலை
சரியாகிவிட்டதால்,அவர்களிடம் சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினேன். ஊருக்கு வந்ததும் என் அண்ணன்
சொன்னபடி திருச்சியில் உள்ள புனித வளவனார் கல்லூரி மற்றும் தேசிய கல்லூரி, சென்னையில் உள்ள கிறித்துவக் கல்லூரி மற்றும் விவேகானந்தா கல்லூரி ஆகியவைகளுக்கு
புகுமுக வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தையும் கல்லூரியின் தகவல் தொகுப்பு
அறிக்கை (Prospectus) யையும் அனுப்பும்படி அஞ்சல்
அட்டையில் விண்ணப்பம் அனுப்பியிருந்தேன்.
இப்போது போல் இல்லாமல் அப்போதெல்லாம்
அவைகளைப்பெற எந்த வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
(எங்கள் ஊருக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் இருந்தும், ஏனோ என்னை அங்கு புகுமுக வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை எனது தந்தையும் அண்ணனும்.)
(எங்கள் ஊருக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் இருந்தும், ஏனோ என்னை அங்கு புகுமுக வகுப்பில் சேர்க்க விரும்பவில்லை எனது தந்தையும் அண்ணனும்.)
சொல்லப் போனால் என் அண்ணன்கள் நால்வரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்தான் இடைநிலைப் படிப்பு (Intermediate) படித்தார்கள். அதில் இருவர் அங்கேயே மேல் படிப்பையும் படித்தார்கள். ஆனால் எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை நான் அங்குதான் எனது வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை படிக்கப் போகிறேன் என்று!)
(அப்போதிருந்த 11+2+2 ஆண்டுகள்
படிக்கும் கல்வி முறைப்படி, பள்ளியில் 11 ஆண்டுகள் படித்து S.S.L.C முடித்தவுடன், கல்லூரியில் ஆரம்ப படிப்பாக இரண்டு
ஆண்டுகள் படிக்கவேண்டும். அது அப்போது இடைநிலைப் படிப்பு (Intermediate) என அழைக்கப்பட்டது. பின்னர் பட்டப்படிப்பு படிக்க 2 ஆண்டுகள் ஆகும்.
பிறகு 1960 இல் இடைநிலைப் படிப்பு (Intermediate)க்கு பதில் ஓராண்டு படிப்பான புகுமுக வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு பட்டப்படிப்பின்
காலம் 3 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது பட்டம் பெற படிக்கவேண்டிய கல்வி ஆண்டுகள்
11+1+3 ஆகியது. அதுவும் இப்போது மாற்றப்பட்டு 10+2+3 ஆண்டுகள் படிப்பு
என ஆகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்)
நான் விண்ணப்பித்திருந்த கல்லூரிகளிலிருந்து
வரும் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பு அறிக்கைகளுக்காக காத்திருந்தேன்.
நினைவுகள் தொடரும்