புதன், 26 ஜூன், 2013

நினைவோட்டம் 62திண்ணையில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று ‘சுரீர்’ என வலி ஏற்பட்டதால் பதறி எழுந்தேன்.எழுந்து பார்த்தால்,ஓடு வேய்ந்த அந்த வீட்டின் மேலே இருந்து எனது இடது கைமேல் விழுந்த ஒரு தேள் என்னைக் கொட்டிவிட்டு தன் பணியை நிறைவேற்றிய நிம்மதியோடு போய்க்கொண்டு இருந்தது!

வலி தாங்கமுடியாமல் நான் தவித்ததைப் பார்த்த என் அக்கா என்னை அருகில் இருந்த,தேள் கொட்டியவர்களுக்கு மந்திரிக்கும்,ஒருமூதாட்டியிடம் அழைத்து சென்றார்.அந்த மூதாட்டி அவரது வீட்டில் இருந்த துடைப்பத்தில் இருந்து இரு ஈர்க்குச்சிகளை டுத்து நுனியையும் அடியையும் ஒடித்துவிட்டு அவைகளை கையில் பிடித்துக்கொண்டார்.

என்னை கையை நீட்ட சொல்லிவிட்டு,ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு தோளில் ஆரம்பித்து அந்த இரண்டு ஈர்க்குச்சிகளையும் விரல்கள் வரை மெல்ல கொண்டுவந்தார். மூன்று முறை அவ்வாறு செய்துவிட்டு திருநீற்றைக்கொடுத்து வாயில் போட்டுக் கொள்ள சொன்னார். எல்லாம்  சரியாகிவிடும்.போய் வா. என்றார்.

அவ்வாறு மந்திரித்தும் வலி நிற்கவில்லை இரண்டு மணி நேரம் கழித்து அந்த வலி நின்றுவிட்டது.ஒரு வேளை அந்த மந்திரம் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் வேலை செய்ததோ என்னவோ!

அந்த நிகழ்வுக்குப் பிறகு, மதியம் தூங்குவதையும் விட்டுவிட்டேன்.மதியம் சாப்பிட்டுவிட்டு வந்து படிக்க புத்தகம் ஏதும் இல்லாததால் திண்ணையில் அமர்ந்து இருப்பேன். அந்த கிராமத்தில் மதியம் நேரம் மனித நடமாட்டம் எதுவும் இருக்காது.வெறுமனே தெருவைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

ஒரு நாள் அக்காவிடம் போய், எனக்கு இங்கு பொழுதைப் போக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் கோமான் போகலாம் என நினைக்கிறேன். போகலாமா?'என்றேன்.அதற்கு அக்கா கொஞ்சம் பொறு.சோமு அண்ணன் (எங்கள் பெரியம்மா மகன்) வந்து உன்னை அழைத்துப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். அநேகமாக இந்த வாரம் அவர்கள் வருவார்கள். என்றார்.

அதற்கு பிறகு  எப்போது அண்ணன் வருவார்.கோமான் போவோம் என்று
காத்துக்கொண்டு இருந்தேன். நல்ல வேளையாக இலால்குடியிலிருந்து அந்த வாரம் என் அத்தான் (அக்காவின் கணவர்) திரு கோ. நடேசன் அவர்கள் சனி ஞாயிறு விடுமுறையில் வந்தார்கள்.


நான் பொழுதைப் போக்கமுடியாமல் தவிப்பதைப்பார்த்த,அவர்கள் என்னை அருகில் இருந்த ஒரு சிறிய குன்று ஒன்றுக்கு அழைத்து சென்றார்கள்.
அதில் ஏற ஒற்றையடி பாதை தான் இருந்தது. அதில் ஏறி பார்த்தபோது அங்கு வெறும் காட்டு செடிகள்தான் இருந்தான.மருந்துக்கு ஒரு மரம் கூட இல்லை.இருந்த மரங்களையெல்லாம் அருகில் இருப்பவர்கள் விறகுக்காக வெட்டி சென்றுவிட்டார்கள்.என அத்தான் சொன்னார்கள்.அங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாதாதால் ஏமாற்றத்தோடே திரும்பினேன்.

ஆனால் அந்த குன்றுக்கு சென்றது,பின்னாளில் புகுமுக வகுப்புத்
(Pre University Course) தேர்வுக்கு உதவும் என கனவில் கூட நினைக்கவில்லை. மறு ஆண்டு PUC தமிழ் இரண்டாம் தாளில்,ஒரு மலையோ அல்லது நதியோ தன் நிலை பற்றி பேசுவது போல் கட்டுரை எழுதவேண்டும் என கேட்கப்பட்டு இருந்தது.

அப்போது எனக்கு நாகமங்கலத்தில் இருந்த குன்றுக்கு சென்றது நினைவுக்கு வந்தது. அதை மனதில் இருத்தி,நான் ஒரு குன்றில் ஏறுவது போலவும் அப்போது யாரோ ஹாஹா என சிரிப்பதுபோலவும்,யார்.அது?’ எனக்கேட்டபோது அசரீரி போல் ஒரு குரல் தான் தான் அந்த குன்று என்று பேசுவதுபோலவும், அது தன் நிலை பற்றியும் தனது இயற்கை வளத்தை மனிதர்கள் அழிப்பதன் மூலம் எப்படி தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுவதுபோல எழுதியிருந்தேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் அந்த கட்டுரைக்கு ஏதும் தயார்
செய்து போய் எழுதவில்லை. தேர்வில் எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு அங்கே அந்த இடத்தில் எனக்குத்த தோன்றியதை எப்படி எழுதினேன்  என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமே.

அதனால் தேர்வில் தமிழில் A+ (மதிப்பெண்கள் 65 க்கு மேல் 75 க்கு கீழே) வாங்கமுடிந்தது. அப்போதெல்லாம் தமிழ் ஆசியர்கள் நன்றாக தேர்வு
எழுதி இருந்தாலும்100 க்கு 100 மதிப்பெண்கள் எல்லாம் தர மாட்டார்கள்.

அத்தான் அவர்கள் ஊருக்கு திரும்பிய மறுநாள் எனது அண்ணன்
(பெரியம்மா மகன்) திரு சோமசுந்தரம் அவர்கள் கோமானிலிருந்து திருச்சிக்குப் போய்விட்டு திரும்பும்போது நாகமங்கலத்தில் இறங்கி
என்னை அழைத்துக்கொண்டு 5 கி.மீ தொலைவில் இருந்த
விக்கிரமங்கலம் என்ற ஊருக்கு பேருந்தில் அழைத்து சென்றார்கள்.

கோமானுக்கு  செல்ல பேருந்து வசதி அப்போது இல்லாததால் விக்கிரமங்கலத்திலிருந்து கோமானுக்கு  மாட்டு வண்டியில் தான்
பயணம் செய்யவேண்டும். அதனால் எங்களை அழைத்துப்போக கோமானிலிருந்து மாட்டு வண்டி வந்து காத்துக் கொண்டு இருந்தது. பேருந்திலிருந்து இறங்கி மாட்டு வண்டியில் தெற்கு திசையில் அரை மணிக்கு மேல் பயணித்து சுமார் 8 கி மீ தொலைவில் இருந்த
கோமானை அடைந்தோம்.நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி 


16 கருத்துகள்:

 1. படிக்காமலே 70 மதிப்பெண்கள்... படித்திருந்தால்... (அதே தானோ...? ஆசிரியர்கள் அப்படி...!)

  இனிய நினைவுகளை தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களை! படிக்காமல் A+ மதிப்பெண் வாங்கவில்லை. அந்த குறிப்பிட்ட கட்டுரை கேள்விக்கு மட்டும் ஏதும் தயார் செய்யாமல் எழுதினேன் என்பது தான் உண்மை.

   நீக்கு
 2. தேர்வில் எதிர்பாராமல் கேட்ட கேள்விக்கு அங்கே அந்த இடத்தில் எனக்குத்த தோன்றியதை எப்படி எழுதினேன் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமே.

  அருமையான நினைவலைகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   நீக்கு
 3. ”தெற்கு திசையில்”! இன்று சென்னையில் இருக்கும் யாரையாவது கிழக்கு எது என்று கேட்டால் கூடத் தெரியாது!

  சுவாரஸ்யமான பகிர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 4. //ஒரு நாள் அக்காவிடம் போய், ‘எனக்கு இங்கு பொழுதைப் போக்க கஷ்டமாக இருக்கிறது. தான் வேலை செய்ததோ என்னவோ!//

  See the positive side. You should have been thankful to the scorpion. It helped you to pass a day without much boredom. Just kidding. When we look back our miseries, sometimes it makes us to laugh.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தங்களின் குறும்பை இரசித்தேன். உண்மைதான். கடந்த கால நிகழ்வுகளை திரும்பவும் நினைத்துப் பார்க்கும் போது சில சமயம் சிரிப்புத்தான் வருகிறது!

   நீக்கு
 5. நினைவலைகள் தொடரட்டும் அய்யா. நாங்களும் தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

   நீக்கு
 6. என்னதான் அருமையாக எழுதியிருந்தாலும் 100 மார்க் கொடுத்தால் அலட்சியம் வந்துடும் என்று கருதி அந்நாளில் ஆசிரியர்கள் கொடுத்ததில்லை. நானும் கவனித்ததுண்டு. உங்களின் அனுபவங்கள் சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அன்று தந்த மதிப்பெண்கள் குறைவு என்றால் இன்று தருவதோ மிக அதிகம்.

   நீக்கு
 7. அடுத்த பதிவு வரும்வரை, நாங்களும் உங்களோடு மாட்டு வண்டியில் வருகிறோம்

  பதிலளிநீக்கு
 8. என்னோடு பயணிப்பதற்கும், பயணிக்க இருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. பயணங்கள் முடிவதில்லை. நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இரத்னா பீட்டர்ஸ் அவர்களே!

  பதிலளிநீக்கு