ஞாயிறு, 23 ஜூன், 2013

நினைவோட்டம் 61



முன் குறிப்பு: வாடிக்கையாளர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எழுத நிறைய இருக்கிறது என்றாலும், நவம்பர் 2011 வரை எழுதிவந்த நினைவோட்டம் தொடரை, திரும்பவும் தொடர்ந்துவிட்டு பின் எழுதுவேன்.  

நவம்பர் 21, 2011 தேதி பதிவிட்ட நினைவோட்டம் 60 ல் SSLC தேர்வு முடிந்து எனது ஊருக்கு வந்தது வரை எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சி இதோ.

SSLC தேர்வு முடிந்து நான் ஊருக்கு வந்தபோது,அது நெல்அறுவடை சமயம். வயலில் அறுவடை செய்த நெற்கதிர்கள் கட்டுகளாக  எங்களது களத்துமேட்டுக்கு கொண்டுவரப்பட்டு, அடித்து, தூற்றி மூட்டைகளில் கட்டி வீட்டிற்கு கொண்டு வரும் வரையில் அப்பா களத்து மேட்டிலேயே இரவு தங்கிவிடுவார்கள்.

எனக்கு தேர்வு முடிந்து விட்டதால் சுமார் ஒரு வாரம் இரவைத் தவிர, பகலில் நெல் அடிக்கும் களத்திலிருந்து நெல் மூட்டைகள் வீட்டுக்கு வரும் வரை அப்பாவுக்கு உதவியாக இருந்தேன்.

காலையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு களத்திற்கு செல்வேன். அப்போது அப்பா வீட்டுக்கு வந்து குளித்து, பூஜைகள் முடித்து சாப்பிட்டு வந்து என்னை விடுவிப்பார்கள். திரும்பவும் மாலை களத்திற்கு செல்வேன்.அப்பா கோவிலுக்குப் போய்விட்டு. வீட்டிற்கு வந்து இரவு உணவை சாப்பிட்டு விட்டு வந்ததும் நான் வீடு திரும்புவேன். 

நெல் மூட்டைகள் எல்லாம் வீட்டிற்கு வந்தவுடன்,மூன்று மாத விடுமுறை நாட்களை எப்படிக் கழிப்பது  என யோசித்தபோது அம்மா என்னை பெரியம்மா ஊருக்கு போய் வாயேன். அவளும் சந்தோஷப்படுவாள். என்றார்கள்.

நானும் சரி. என்று அப்போதைய திருச்சி மாவட்டத்தில் (இப்போது அரியலூர் மாவட்டம்) இருந்த என் பெரியம்மாவின் ஊரான கோமான் என்ற ஊருக்கு கிளம்பத்தயாரானேன்.

அப்போது லால்குடியில் இருந்த என் பெரிய அக்கா அவர்களது
ஊரான நாகமங்கலத்திற்கு போகுமுன்பு, எங்கள் ஊருக்கு வந்திருந்தார்கள்.கோமானுக்கு போகும் வழியில்தான் நாகமங்கலம் இருந்ததால் அம்மா என்னை அக்காவுடன் நாகமங்கலம் போய் அங்கிருந்து கோமான் போக சொன்னார்கள்.

அப்போது (1960 பிப்ரவரி) எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது.
எங்கள் ஊரிலிருந்து தெற்கே 8 கி.மீ தூரத்தில் இருந்த பெரிய ஆத்துக்குறிச்சி என்ற ஊர் வரைதான், திருச்சியிலிருந்து வரும் சுந்தரம் பஸ் சர்வீஸ் என்ற பேருந்து வரும். காரணம் அதுதான் அப்போதைய திருச்சி மாவட்ட எல்லை.எங்களது ஊர் அப்போதைய தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்ததால் எங்கள் மாவட்டம் வர பேருந்துக்கு அனுமதி இல்லை.

மதியம் திருச்சியில் கிளம்பும் பேருந்து, இலால்குடி அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் வழியாக வந்து மாலை சுமார் 6 மணி அளவில் பெரிய ஆத்துக்குறிச்சியை வந்தடையும்.

அங்குள்ள சாலை ஓரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் புறம் தான் பேருந்து நிறுத்தம். மறுநாள் காலை 4 மணிக்கு திரும்பவும் அங்கிருந்து திருச்சிக்கு கிளம்பும்.  

யாராவது ஜெயங்கொண்டமோ, அரியலூரோ அல்லது திருச்சியோ
செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில் பயணித்து பெரிய ஆத்துக்குறிச்சி சென்று பேருந்தில் ஏறவேண்டும்.மாட்டு வண்டி வசதி இல்லாதவர்கள் நடந்து சென்றுதான் பேருந்தை பிடிக்கவேண்டும்.

நானும் அக்காவும் காலை 3.00 மணிக்கு ஊரிலிருந்து எங்களது மாட்டு வண்டியில் புறப்பட்டு பெரிய ஆத்துக்குறிச்சிக்கு சென்று பேருந்தில் ஏறினோம்.

நாகமங்கலம் செல்ல,பெரிய ஆத்துக்குறிச்சியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் இருந்த விளாங்குடி கைகாட்டி என்ற இடத்தில்
இறங்கவேண்டும்.  

(நான்கு  சாலைகள் அல்லது மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் பயணிகளுக்கு வசதியாக அந்த சாலைகள் செல்லும் ஊர்களின் பெயர்களை கை காட்டுவது போல் உள்ள பலகையில் எழுதி வைத்திருப்பார்கள்.அதனால் அந்த இடங்களை கைகாட்டி என்று சொல்வது உண்டு. இதை எங்கள் ஊர் பக்கம் குறுக்கு ரோடு என்றும் கோவை மாவட்டம் போன்ற இடங்களில் பிரிவு என்றும்  தென் மாவட்டங்களில்  விலக்கு என்றும் சொல்வார்கள்.)

விளாங்குடி கைகாட்டியில்,காத்திருந்து அரியலூரிலிருந்து 
முட்டுவாஞ்சேரி  என்ற ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி 8 கி மீ தொலைவில் இருந்த நாகமங்கலம் சென்றோம்.

நாகமங்கலம் ஒரு சிறிய ஊர். என்னோடு பேச பழக என் வயதொத்த பையன்கள் இல்லாததால் பொழுதைப்போக்க சிரமமாய் இருந்தது. காலையில் எழுந்து குளித்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வந்து
திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, மதியம் உணவருந்தி தூங்கி எழுந்தால்,மாலையில்
நேரத்தை செலவிடுவது கடினமாக இருக்கும். வீட்டுக்கு வரும்
குமுதம் இதழைக்கூட ஒரு மணிக்குள் படித்து முடித்துவிடுவேன்.

ஒரு நாள் மதியம் திண்ணையில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று சுரீர் என வலி ஏற்பட்டதால் பதறி எழுந்தேன்,



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி 







16 கருத்துகள்:


  1. இனிய நினைவோட்டம்...

    அன்று மாட்டு வண்டி வைத்திருந்தால் வசதியானவர்கள்...!

    பதற்றத்தை அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. இளமைக்கால அனுபவங்கள் சுவாரசியமாகத்தான் இருக்கும். என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!


      நீக்கு
  3. பழைய நினைவுகளைச் சுமந்து வரும் நினைவோட்டம். தொடரட்டும். அறுபதுகளில் எங்கள் ஊருக்கும் (திருச்சி – திருமழபாடி) மறக்க முடியாத சுந்தரம் பஸ் சர்வீஸதான் பஸ்ஸின் இடதுபுறம் நீண்ட சங்கப்பலகை போன்ற ஒரே சீட். வலதுபுறம் வரிசையான இருக்கைகள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அந்த சுந்தரம் பஸ் சர்வீஸின் பக்கவாட்டு இருக்கைகளை மறக்கமுடியாது தான்.

      நீக்கு
  4. மறக்கமுடியாத மலரும் நினைவுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. பயணம் செய்வது என்பதே அந்நாளில் எத்தனை இடர்பாடாக இருந்திருக்கிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலோ உலகமே உள்ளங்கையில் என்று ஆகிவிட்டது. ஒன்று நினைவிருக்கிறதா ஸார்...? அப்போதெல்லாம் தாகம் என்று தண்ணீர் கேட்டால் வீட்டிலும், கடையிலும் தாராளமாகத் தருவார்கள். இன்று அதைக்கூட காசு தந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். என்னத்தச் சொல்ல... உங்கள் இளமை நினைவுகளில் பயணிப்பது மகிழ்வு தருகிறது. கூடவே இப்படி சில எண்ணங்கள் வந்து துயரும் தருகிறது. இரட்டிப்பு உணர்வுடன் உடன் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்.கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நீங்கள் சொல்லும் அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. அந்த சுகமான நாட்களை நினைத்து அசை போடத்தான் முடியும். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், பதிவை இரசித்ததற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  7. நான் சில கிராமங்களுக்கு சென்றிருக்கும் பொழுது, இந்த கிராமத்தை எப்படித்தான் கண்டுபிடித்திருப்பார்கள் என்று வியந்திருக்கிறேன். தாங்கள் குறிப்பிடும் ஊர்களும் எனக்கு அந்த ஞாபகத்தையே அளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

      நீக்கு
  8. கிராமத்தில் அந்த வயதில் உடனொத்த சிறுவர்கள் இல்லையெனில் பொழுது போவது சிரமம்தான்!
    உங்கள் அனுபத்தை ஒரு படம் பிடித்துக்காட்டியதுபோல் இருக்கிறது.அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு