திங்கள், 27 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே 9

இரயில் ஓடத்தொடங்கி சில நேரம் ஆனதும்
என் அருகில் இருந்தவர் என்னிடம்,‘எங்கு
செல்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.நான் முதலில்
ஒன்றும் பதில் சொல்லவில்லை.அவர் திரும்பவும்
அதே கேள்வியைக் கேட்டவுடன்,சற்று கோபமாக,
‘அதைத் தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப்போகிறது?’
என பதில் சொன்னேன்.

அவர் எனது பதிலைக் கேட்டு மௌனமாகிவிட்டார்.
ஏன் இவரிடம் இந்த கேள்வியைக் கேட்டோம் என
அவர் நினைத்திருக்கக்கூடும்.நான் சரியான பதில்
சொல்லாததற்கு காரணம் உண்டு.ஹைதராபாத்
நேர்முகத்தேர்வுக்கு போனபோது முன் பின்
தெரியாத ஒருவரிடம் எனது ஊரைப்பற்றி
பேசப்போய் ‘சூடு கண்ட பூனை’போல்
‘கற்றுக்கொண்ட’ பாடம் நினைவுக்கு வந்ததால்
ஏற்பட்ட விளைவு அது.

(எத்தனைக்காலம்தான் ...? என்ற தொடரில்
அந்த நிகழ்வு பற்றி பிப்ரவரி 2011 ல் எழுதி
இருக்கிறேன்.)

பிறகு கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி
செய்தேன்.சிறிது நேரம் தூங்கி இருப்பேன்.யாரோ
எழுப்புவதுபோல் உணர்ந்து கண்ணைத் திறந்தேன்.
யாரும் எழுப்பவில்லை. டிசம்பர் மாத குளிர் தான்
என்னை எழுப்பி இருக்கிறது!

கிளம்பும்போது தெரியாத குளிர்,வேகமாக
இரயில் ஓட ஆரம்பித்ததும் தனது சுயரூபத்தைக்
காட்டியதால் என்னால் உறங்க முடியவில்லை.

‘கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீ இப்’


என்று சத்திமுத்தப் புலவர் பாடியதுபோல, அன்று
இரவு முழுதும் கையையும் காலையும்
குறுக்கிக்கொண்டு எப்போது விடியும் என
எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன்.

விடிந்ததும் பல் துலக்கிவிட்டு,குண்டக்கல்
சந்திப்புக்காக காத்திருந்தேன்.காலை சுமார் 9
மணிக்கு நான் பயணம் செய்த இரயில்
குண்டக்கல்லை அடைந்தது.கீழே இறங்கி
ஹூப்ளி செல்லும் இரயிலில் ஏற எந்த
பிளாட்ஃபாரம் செல்லவேண்டும் என
விசாரிக்கலாம் என்றால் யாரும் நின்று பதில்
சொல்ல நேரம் இல்லாமல் போய்க்
கொண்டிருந்தார்கள்.

சரி இரயில் நிலைய அலுவலரிடம் கேட்கலாம்
என நகர நினைத்தபோது,என்னோடு இரயிலில்
பயணித்து, முதல் நாள் இரவு நான் எங்கே
போகிறேன் எனக் கேட்டவர் வந்து.‘என்ன சார்?
எங்கு போகவேண்டும்?’என்றார்.தயக்கத்தோடு
அவரிடம், ‘ஹூப்ளி செல்லும் இரயிலுக்கு
செல்லவேண்டும்.’என்றதும், அவர்,‘அந்த இரயில்
கிளம்பத் தயாராக அடுத்த பிளாட்ஃபாரத்தில்
உள்ளது.நீங்கள் உடனே போய் ஏறுங்கள்.’
என்று சொன்னார்.

யாரை நான் சந்தேகப்பட்டு இரவு பதில் சொல்ல
மறுத்தேனோ,அவரே வந்து உதவி செய்தது எனக்கு
என்னவோ போல் இருந்தது.ஒரு நிகழ்வை வைத்து
எல்லோரையும் எடை போடக்கூடாது என்பதை
அன்று தெரிந்துகொண்டேன்.

ஓட்டமும் நடையுமாய்ப் போய் அந்த ஹூப்ளி
செல்லும் ‘பாசஞ்சர்’ இரயிலில் ஏறியதும் ஏதோ
எனக்காக காத்திருந்தது போல் அது நகர ஆரம்பித்தது.

எனது அக்கா மகன் திரு சி.எஸ்.சதாசிவம்
சொன்னதுபோல் ஹூப்ளி வரை சீட்டு வாங்காமல்
குண்டக்கல் வரை வாங்கியிருந்தால்,குண்டக்கல்லில்
வெளியே சென்று பயணச்சீட்டு வாங்கி நான் உள்ளே
வருவதற்குள் நிச்சயம் அந்த இரயில் புறப்பட்டிருக்கும்.

நல்ல வேளை அவர் சொன்னதைக் கேட்டது
நல்லதாயிற்று.அது காலை வேளை என்பதாலும்
எல்லா இடத்திலும் நிற்கும் என்பதாலும் வண்டிக்குள்
நல்ல கூட்டம் இருந்தது.உட்கார இடம் இல்லாததால்,
மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் ஏறி
உட்கார்ந்துகொண்டேன்.

வண்டியின் உள்ளே கன்னடமும்,களி தெலுங்கும்
கலந்த ஒரே சத்ததுடன் கூடிய பயணிகளின்
பேச்சுக்கள். ஒன்றும் புரியவில்லை.இரவு தூங்காததால்
தூக்கம் கண்ணை சுழற்றியதால்,அப்படியே படுத்து
தூங்கிவிட்டேன்.

திடீரென கண் விழித்துப் பார்த்தபோது இரயில்
கதக் (Gadag) என்ற இரயில் சந்திப்பில் நின்றிருந்தது.
அப்போது நேரம் மாலை 4 மணி இருக்கும்.
காலையிலும் மதியத்திலும் ஒன்றும் சாப்பிடாததால்,
பசி வயிற்றைக் கிள்ளியது.நேர் எதிரே இருந்த
பெட்டிக் கடையில் பன்னும் தேநீரும் வாங்கி
பசியாற்றிக் கொண்டேன்.

அதே ‘கதக்’ கில் இன்னும் 15 நாட்களில் வந்து
ஐந்து மாதங்கள் பணிபுரியப்போகிறேன் என
எனக்கு அப்போது தெரியவில்லை.

வண்டி மெல்ல மெல்ல, ஊர்ந்து மாலை சுமார்
6 மணிக்கு ஹூப்ளி சந்திப்பை அடைந்தது. கீழே
இறங்கி வெளியே வந்து பயணச்சீட்டு கொடுக்கும்
இடம் சென்று, அங்குள்ள கவுண்டரில் பணத்தைக்
கொடுத்து. ‘’தார்வாருக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்.’
எனத் தமிழில் சொன்னேன்.

தொடரும்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 8

நான் ஏறிய பெட்டியில் கூட்டம் இல்லாததால்
சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு சன்னல் வழியே
பார்த்துக் கொண்டிருந்ததால், விழுப்புரம் சந்திப்பு
வந்ததே தெரியவில்லை.

அந்த சந்திப்பில் எனது பெட்டியில் ஏறியவர்களில்
ஒருவர் பாதிரியார்.அவர் வந்து எனக்கு எதிரே
அமர்ந்துகொண்டார்.வண்டி புறப்பட்டவுடன்,நாங்கள்
சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.திண்டிவனம்
தாண்டிய பிறகு அவரே எல்லா இரயில் பிரயாணிகள்
போலவே என்னிடம் சகஜமாக பேசத் தொடங்கினார்.

அவருடன் பேசிக்கொண்டு இருந்ததால் நேரம் போனதே
தெரியவில்லை.இரயில் தாம்பரம் நிலையத்தை
அடைந்தபோது அவர் ‘சென்னையில் எங்கு
இறங்கப்போகிறீர்கள்?’ எனக்கேட்டதற்கு,நான்
‘எழும்பூரில் இறங்கி மேற்கொண்டு பயணிக்க சென்ட்ரல்
ஸ்டேஷன் செல்ல இருக்கிறேன்.’என்றேன்.

அவர் ‘எழும்பூரிலிருந்து எப்படி சென்ட்ரல் ஸ்டேஷன்
செல்ல இருக்கிறீர்கள்? யாராவது வந்து அழைத்து
செல்ல இருக்கிறார்களா? என்று விசாரித்தார்.

அதற்கு நான் ‘இல்லை.இல்லை.ஏதாவது பேருந்தில்
செல்ல வேண்டியதுதான்.’என்றேன். அதற்கு அவர்
‘நீங்கள் சென்னைக்கு புதியவரா? என்றார்.

‘எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கேட்டதற்கு
‘எழும்பூரிலிருந்து மின்சார இரயிலில்‘பார்க்’ஸ்டேஷன்
சென்று ‘சென்ட்ரல்’ போகலாமே. அதை விட்டு
பேருந்தில் போகிறேன் என்றீர்களே அதனால்தான்.’
என்றார்.

(உண்மையில் எனக்கு அப்படி போகலாம் எனத்
தெரியாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
இறுதியாண்டு படிக்கும்போது(அதாவது நான் தார்வார்
பயணம் மேற்கொண்ட நாளுக்கு ஒரு வருடத்திற்கு
முன்பு) வகுப்பு நண்பர்களோடு முதன் முதல்
சென்னைக்கு Study Tour க்காக எங்கள் துறையின்
பேருந்தில் பயணித்து வந்திருக்கிறேன்.

சென்னையில் உள்ள பல இடங்களை எங்கள்
பேருந்தில் சென்று பார்த்ததால் மின்சார இரயிலிலோ
அல்லது நகரப்பேருந்திலோ பயணித்த அனுபவம்
இல்லை.ஹைதராபாத் நேர்முகத்தேர்வுக்கு நவம்பர்
மாதம் சென்னை வந்தபோது என் அண்ணன்
டாக்டர்.ஞானப்பிரகாசம் வந்து அழைத்து
சென்றிருக்கிறார்.அதனால் என்னைப் பொறுத்தவரை
அது சென்னைக்கு முதல் பயணமே.)

எனக்கு சென்னை புதியது எனத்தெரிந்ததும்,
‘வீணாக பேருந்திற்கு காத்திருக்காதீர்கள்.
‘எழும்பூரில் இறங்கியதும் வெளியே வந்து மின்சார
வண்டியில் செல்ல ‘பார்க்’ நிலையத்திற்கு சீட்டு
வாங்கிக்கொள்ளுங்கள் திரும்பவும் உள்ளே வந்து
மேம்பாலம் ஏறி கடைசி பயணிகள் நடைமேடையில்
இறங்கி அங்கு வரும் மின்சார இரயிலில் ஏறுங்கள்.
அடுத்த சில நிமிடங்களில் அடுத்த ஸ்டேஷன் ஆன
பார்க் நிலையத்தை அடைவீர்கள்.அதை விட்டு
வெளியே வந்தீர்கள் என்றால் எதிரே இருப்பதுதான்
சென்ட்ரல் ஸ்டேஷன்.’ என்று ஆலோசனை
சொன்னார்.

மாலை 6.30 மணிக்கு இரயில் எழும்பூர் இரயில்
நிலையம் வந்தது. எனக்கு நல்ல ஆலோசனை சொன்ன
அவருக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன்.பின்
பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு, மின்சார இரயிலில்
ஏறி பார்க் ஸ்டேஷனில் இறங்கினேன்.

அது மாலை நேரமாதலால் பணி முடிந்து வீடு
திரும்புவோர் கூட்டம் அதிகம் இருந்தது.அந்த கூட்டமே
என்னை வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிட்டது.
வெளியே வந்து எதிரே தெரிந்த சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
சாலையைக் கடந்து சென்றேன்.(அப்போது சுரங்கப்பாதை
கட்டப்படவில்லை)

சென்ட்ரல் ஸ்டேஷனின் இடப்புறத்தில் தற்போது உள்ள
பயணிகள் அமரும் இருக்கைகள் உள்ள இடத்தில்
அப்போது 'Ticket Counter’ இருந்தது.அங்கு சென்று
ஹுப்ளிக்கு பயணச்சீட்டு வாங்கினேன். அங்கிருந்த
எழுத்தர் என்னிடம் ‘இங்கிருந்து குண்டக்கல் வரை
விரைவு வண்டிக்கான கட்டணமும், குண்டக்கலில்
இருந்து ஹூப்ளி வரை சாதா கட்டணமும்
செலுத்தவேண்டும்.’என்றார். சரி எனச்சொல்லி
பணத்தைக்கொடுத்து சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே
நுழைந்தேன்.

இரவு 10 மணிக்குத்தான் நான் ஏறவேண்டிய
‘பம்பாய் மெயில்’ என்பதால் இரவு சிற்றுண்டியை
உள்ளே இருந்த ‘மரக்கறி(?) போஜன சாலையில்
(அந்த காலத்தில் அவ்வாறுதான் அது
அழைக்கப்பட்டது!) முடித்துவிட்டு பயணியர்
நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து
காத்திருந்தேன்.

இரவு 9.30 மணிக்கு நான் செல்லவேண்டிய இரயில்
Yard ல் இருந்து நடைமேடைக்கு வந்ததும், காத்திருந்தோர் அனைவரும் இடம் பிடிக்க
முன் பதிவில்லா பெட்டிகளை நோக்கி ஓடினர்.
போர்ட்டர்கள் சிலரும் ஓடினர் இடத்தை ‘ரிசர்வ்’
செய்து விற்பதற்காக! நானும் எல்லோரையும்
போல ஓடி ஒரு பெட்டியில் ஏறி சன்னலோர
இருக்கையைப் பிடித்தேன்.

அந்த இரவு 10 மணிக்கு இரயிலில் தொடங்கிய எனது
பயணம் 38 வருடங்கள் மேலும் பல மாநிலங்களில்
உள்ள பல இடங்களுக்கு இரயிலிலும் மற்ற
வாகனங்களிலும் தொடர இருக்கிறது
என்பது அப்போது தெரியவில்லை!

தொடரும்

புதன், 22 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 7

22ஆம் தேதி காலை தார்வார் கிளம்பத்
தயாரானபோது, சென்னை கால்நடை
மருத்துவக்கல்லூரியில், நோய் தீர்ப்பியலில்
முதுநிலை பட்டப்படிப்பு (M.V.Sc in
Therapeutics) படித்துக்கொண்டு இருந்த
என் அண்ணன் டாக்டர்.ஞானப்பிரகாசம்,
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக
அப்போதுதான் சென்னையிலிருந்து வந்தார்.

அவரிடம் சனிக்கிழமை அன்று ஊர் வந்து
சேர்ந்ததுமே,எனது தார்வார் பணி பற்றி எழுதி அது
பற்றி விசாரிக்க சொல்லி கடிதம் எழுதியிருந்தேன்.
நல்ல வேளையாக அவருடன் படித்துக்கொண்டு
இருந்த ஒருவர் தார்வாரை சேர்ந்தவர் என்பதால்
அவரிடம் அந்த ஊர் பற்றி விசாரித்து வந்திருந்தார்.

அந்த ஊர் நல்ல தட்பவெப்பநிலை உள்ள ஊர்
என்றும் மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்
என்ற நல்ல செய்தியை சொன்னார்.

மதியம் விருத்தாசலத்திற்கு 1 மணிக்கு வரும்
கொல்லம்- சென்னை இரயிலில் சென்னை செல்ல
இருந்ததால் காலை 10 மணிக்கே சாப்பிட்டுவிட்டு,
அப்பா அம்மா காலில் விழுந்து அவர்களின்
ஆசி பெற்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு
கிளம்பினேன்.

வீட்டிலிருந்து நேரே விருத்தாசலம் இரயில் சந்திப்பு
நிலையத்திற்கு(10 கிலோ மீட்டர் தூரம் தான்)
எனது சைக்கிளில் சென்றால் பேருந்திற்கு
காத்திருந்து நேரத்தை வீணாக்காமல் விரைவில்
செல்லலாமே என்று, எனக்கு ஆரம்பப் பள்ளியில்
Junior ஆக இருந்த நாகராஜனை எனது சைக்கிளில்
வந்து என்னை விட்டுவிட்டு வரமுடியுமா
எனக் கேட்டேன்.

அவனும் சரி என்றதும்,இருவரும் எனது சைக்கிளில்
கிளம்பினோம்.எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ
மீட்டர் தூரத்தில் இருந்த கருவேப்பிலங்குறிச்சி
தாண்டி சின்ன சறுக்கல் என்ற தரைப்பாலத்தின் அருகே
சென்றதும், ஒரே கூட்டமாயிருந்தது. என்னவென்று
அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஓடும்
காட்டு ஓடையில் திடீரென வெள்ளம் வந்து
முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.

(இந்த ஓடை பற்றி நான் முன்பே 15-07-2010 ல்
நினைவோட்டம் தொடர் எண் 25 ல்
எழுதியிருக்கிறேன்.)

அதில் எப்போது தண்ணீர் ஓடும் என்று
சொல்லமுடியாது.தண்ணீர் முழங்கால்
அளவுதான் என்றாலும் சுலபமாக அதைக்
கடந்து அக்கரை செல்ல முடியாது.ஓடும்
தண்ணீரில் ‘இழுப்பு’ அதிகமாக இருக்கும்.

அதனால் போக்குவரத்து சிலமணி நேரம்
நிறுத்தப்படும்.அதைப்பார்த்ததும் எனக்கு
வயிற்றில் அமிலம் சுரக்காத குறைதான்.
இந்த ஓடையைத் தாண்டி எப்படி சென்று
இரயிலைப் பிடிக்கப்போகிறோம் என்று
கவலைப்பட்டேன்.

நல்ல வேளையாக நடந்து செல்லும்
மக்களுக்காக குறுக்கே ஒரு ‘தாம்பு கயிறு’
(தேங்காய் நாரினால் முறுக்கப்பட்ட கயிறுதான்)
கட்டியிருந்தார்கள். அதைப் பிடித்துக்கொண்டு
அக்கரை செல்ல, அங்கிருந்தவர்கள்
உதவிக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவர்
என்னைப்பார்ததும்,‘என்ன தம்பி ஊருக்கா?’
எனக் கேட்டுவிட்டு,எங்களை அந்தக் கயிற்றைப்
பிடித்துக்கொண்டு அந்த ஓடையைக் கடக்க
உதவி செய்தார்.

அவரும் எனது சைக்கிளை வாங்கி தலைக்குமேல்
தூக்கிக்கொண்டு வந்து அக்கரையில் கொடுத்தார்.
அவருக்கு நன்றி சொல்லி,அங்கிருந்து கிளம்பி
விருத்தாசலம் இரயில் சந்திப்புக்கு குறித்த
நேரத்திற்கு முன்பே வந்து விட்டோம்.

நாகராஜன் இரயில் வரும் வரை இருப்பதாக
சொல்லியும், அவனது உதவிக்கு நன்றி சொல்லி,
‘நான் போய்க்கொள்கிறேன் நீ போய் வா’ என
போக சொல்லிவிட்டேன்.

(எனக்குத்தெரியாது,நான் நாகராஜனைப் பார்ப்பது
அதுதான் கடைசி என்று.எட்டு மாதங்கள் கழிந்து
ஊருக்கு வந்தபோது நாகராஜனைப் பார்க்க
எண்ணியபோது சொன்னார்கள் வீட்டில் ஏற்பட்ட
ஒரு தகராறில் ‘ஃபாலிடால்’ பூச்சி மருந்தைக்
குடித்து தற்கொலை செய்து கொண்டானென்று.
செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.)

சென்னைக்கு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு
சென்று பயணியர் நடைமேடையில் இரயிலுக்காக
காத்திருந்தபோது சென்னையில் இரவு இரயிலுக்கு
போகுமுன் எங்கு தங்குவது என யோசித்தேன்.

சென்னையில் அண்ணன் இருந்தாலாவது இரவு
இரயிலுக்குப்போகும் வரை எழும்பூர் இரயில்
நிலையத்திற்குப் பின் இருந்த அவரது
விடுதி அறையில் தங்கியிருக்கலாம்.அவரும்
விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டதால் நேரே
சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றுவிடவேண்டியதுதான்
என நினைத்துக்கொண்டேன்.

சரியாக ஒரு மணிக்கு வந்த சென்னை விரைவு
வண்டியில், கூட்டம் இல்லாத பெட்டியாக பார்த்து
உட்கார்ந்துகொண்டேன்.


தொடரும்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 6

தார்வார் பயணத்திற்கு ஆயத்தம் செய்யும்போது
எனது பணிக்கான ஆணையை திரும்ப
படித்துப்பார்த்தேன்.அதில் எனது படிப்பு
சான்றிதழ்களோடு, இரண்டு நன்னடத்தை
சான்றிதழ்களும் மாவட்ட மருத்துவ
அலுவலரிடமிருந்து(District Medical Officer)
பணியில் சேர உடல் நிலை தகுதியாய்
உள்ளது என்ற மருத்துவ சான்றிதழையும்
பணியில் சேரும்போது கொண்டு வர
வேண்டுமென்று குறிப்பிட்டு இருந்தது.

நான் எனது ஊருக்கு சென்ற தினம் சனிக்கிழமை
ஆதலால், திங்கட்கிழமை(19 ஆம் தேதி) சான்றிதழ்
பெறும் வேலைகளை முடிக்க எண்ணினேன்.
திங்களன்று காலையிலேயே விருத்தாசலம் சென்று
அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டேன்.

மாவட்ட மருத்துவ மனையில் சான்றிதழுக்கான
கட்டணம் ரூபாய் 16 கட்டி,விண்ணப்பம் கொடுத்தேன்.
மாவட்ட மருத்துவ அலுவலர் பரிசோதனை செய்து
விட்டு பணி ஆணையில் கொடுத்திருந்த படிவத்தில்
நான் பணியில் சேர முழுத்தகுதியுடன் இருக்கிறேன்
எனக் குறிப்பிட்டு கையொப்பமிட்டு கொடுத்ததை
வாங்கிக்கொண்டு விருத்தாசலம் திரும்பினேன்.

எனது அத்தை மகனும், பிரபல வழக்கறிஞருமான
திரு இரத்தினசபாபதி அவர்களைப் பார்த்து எனது
பணிக்கான ஆணையைக் காண்பித்து நன்னடத்தை
சான்றிதழ் யாரிடமாவது வாங்கித்தரமுடியுமா எனக்
கேட்கலாம் என எண்ணி,நேரே சேலம் சாலையில்
உள்ள நீதிமன்றத்திற்கு சென்று அவரைப் பார்த்தேன்.

நான் சென்ற நேரம் உணவு இடைவேளை
நேரமாதலால், நீதிமன்றத்தில் வழக்குகள்
நடைபெறவில்லை.அவர் என்னை அந்த
நீதி மன்றத்தின் முதன்மை சார்பு நீதியரசரிடம்
(Principal Subordinate Judge) அழைத்து
சென்று,அவரிடம் நன்னடத்தை சான்றிதழ்
வாங்கிக்கொடுத்தார்.

பின்பு எங்கள் குடும்பதிற்கு வேண்டியவரும்,
விருத்தாசலத்தில் தேவார பாடசாலையை
நடத்தி வந்தவருமான திரு இரத்தினசபாபதி
செட்டியார் அவர்கள் மூலம் மின் வாரிய
உதவிப்போறியாளரிடம், இரண்டாவது
நன்னடத்தை சான்றிதழ் வாங்கிக்கொண்டு
ஊர் திரும்பினேன்.

தார்வாருக்கு எந்த இரயிலில் போவது என முடிவு
செய்ய எங்கள் வீட்டில் அதற்கான கால அட்டவணை
இல்லாததால்,இரயில் பற்றிய விவரங்கள் அறிய
எனது அக்கா மகனும், வழக்கறிஞருமான
திரு சி.எஸ்.சதாசிவம் அவர்கள் வீட்டிற்கு மறுநாள்
திரும்பவும் விருத்தாசலம் 20 ஆம் தேதி சென்றேன்.

அப்போது எனக்கு தார்வாருக்கு பெங்களூரு சென்று
அங்கிருந்து புனே செல்லும் இரயிலில் செல்லலாம்
எனத் தெரியாது.ரயில்வே அட்டவணையில் உள்ள
வரைப்படத்தில் தார்வாரும் பெல்லாரியும் ஒரே
நேர்கோட்டில் இருந்ததால்,பெல்லாரி வழியாகப்
போகலாம் எனத் தீர்மானித்தேன்.

ஆனால் பெல்லாரியிலிருந்து தார்வாருக்கு நேரடி
இரயில் இல்லை.குண்டக்கல் சந்திப்பிலிருந்து
பெல்லாரி வழியாக ஹுப்ளி செல்லும் Passenger
இரயில் ஒன்று இருந்தது.ஹூப்ளி யிலிருந்து
தார்வார் 20 கிலோமீட்டர் தான் என்பதால்
அங்கிருந்து தார்வாருக்கு லோக்கல் இரயிலில்
செல்லலாம் என்பதால்,சென்னையிலிருந்து
மும்பை செல்லும் விரைவு இரயிலில் ஏறி
குண்டக்கல் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து
பெல்லாரி வழியாக ஹுப்ளி செல்லும்
இரயிலில் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

அப்போது எனது அக்கா மகன் ‘எப்போது தார்வார்
போக இருக்கிறாய்?’எனக்கேட்டார்.‘அம்மா பணியில்
சேர 24 ஆம் தேதி நல்ல நாள் என சொன்னார்கள்.
எனவே 22ஆம் தேதி கிளம்பினால்,23 ஆம் தேதி
மாலை தார்வார் போய்விட்டால் திட்டமிட்டபடி
24 ஆம் தேதி பணியில் சேர முடியும்.’என்றேன்.

அப்போது அவர் ‘சென்னையில் இரயில் பயணச்சீட்டு
வாங்கும்போது,நேரே ஹுப்ளிக்கே சீட்டு வாங்கிவிடு.
குண்டக்கல் வரை வாங்கினால்,அங்கு வெளியே
வந்து ‘கியூ’ வில் நின்று திரும்பவும் ஹூப்ளிக்கு
சீட்டு வாங்க வேண்டியிருக்கும்.கூட்டம் இருந்தால்
கஷ்டமாயிருக்கும்.அதைத் தவிர்க்கலாம்.’ என்றார்.

(அவரது யோசனைப்படி நடந்தது நல்லதுதான்
என்பது நான் குண்டக்கல் போனபோதுதான்
தெரிந்தது.)

ஊருக்குக்கிளம்ப ஒரு நாள் இருந்ததால்,மறுநாள்
21ஆம் தேதி பெண்ணாடம் சென்று எனது அண்ணன்
(பெரியம்மா மகன்) திரு அ.இராதாகிருஷ்ணன்
அவர்களிடம் தார்வார் செல்லும் விஷயத்தைக்
கூறிவிட்டு,பெரியம்மாவிடமும் மைசூர் மாநிலம்
செல்வது பற்றி சொன்னேன்.

அதற்கு அவர்கள் தான் கூட மெர்க்காராவில்
உள்ள தலைக்காவிரியில் ஒரு மாதம்
தங்கியிருந்ததாகவும்,கன்னடத்தை சுலபமாகப்
புரிந்துகொள்ளலாம் என்றும் கன்னடத்தில்
அரிசியை ‘அக்கி’ என கூறுவதை தான்
கற்றுக்கொண்டதாகவும் சொன்னார்கள்.

கர்நாடகா(அப்போதைய மைசூர் மாநிலம்)
செல்லாமலே நான் கற்றுக்கொண்ட முதல்
கன்னட சொல்‘அக்கி’ தான்!

ஊருக்கு வந்து பயணிக்க தேவையானவற்றை
எடுத்து வைக்கும்போது,தார்வாரில் எங்கே
தங்கப்போகிறேன் எனத் தெரியாததால்
பெட்டி படுக்கையை யெல்லாம்,உடன் எடுத்து
செல்லவிரும்பாமல்,ஒரு சிறிய கைப்பையில்
10 நாட்களுக்கான உடைகளை மட்டும் எடுத்துக்
கொண்டேன்.

மற்றவைகளை ஹோல்டாலில் வைத்து கட்டிவிட்டு,
அதையும் எனது பெட்டியையும், நான் தார்வார்
சென்று கடிதம் போட்டதும், டி‌வி‌எஸ் சரக்குந்து
சேவை (TVS Lorry Service) மூலம் அனுப்ப
சொல்லிவிட்டேன்.

22ஆம் தேதி (வியாழக் கிழமை) காலை தார்வார்
கிளம்பத் தயாரானேன்.தொடரும்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 5

நான் பயணம் செய்த இரயிலில் அசாத்திய கூட்டம்.
காரணம் அப்போதெல்லாம் இரவு நேரத்தில்
தமிழ்நாட்டில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
அதனால் சென்னை செல்ல எல்லோரும் இரயிலையே
நாடியதால் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
நிற்கக்கூட இடம் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு
சென்னைக்கு மக்கள் பயணம் செய்த காலம் அது!
இப்போதும் அதே நிலைதான் அநேக பேருந்துகள்
இயக்கப்பட்டும்!

நல்ல வேளையாக எனக்கு கதவருக்கே‘இடம்’
கிடைத்தது.நான் சிதம்பரத்தில் இறங்க இருந்ததால்,
இன்னும் மூன்று மணி நேரம்தானே சமாளித்துக்
கொள்ளலாம் என எண்ணி எனது பெட்டி
படுக்கைகளை அங்கே வைத்துவிட்டு அதன் மேல்
உட்கார்ந்துகொண்டேன்.

உட்கார்ந்ததும்,ஏதேதோ சிந்தனைகள்.மனதில் ஒரு
இனம் புரியாத உணர்வு.

அது திடீரென வேலையை விட்டு வந்ததாலா
அல்லது இந்த‘சிறை’யிலிருந்து விடுதலையாகிறோம்
என்பதாலா எனத்தெரியவில்லை.புதிதாய் சேர
இருக்கின்ற இடத்தில்,கன்னடம் தெரியாமல் எப்படி
பணி புரியப்போகிறேன் என்பது கூட
காரணமாயிருக்கலாம்.ஆனால் ஊரைவிட்டு
வெகு தூரம் செல்கிறோம் என்ற எண்ணத்தால்
அல்ல.

அதனால் என் அருகே செய்தித் தாளொன்றை கீழே
விரித்து அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் அப்போதைய
அரசியல் நிலை பற்றி பேச ஆரம்பித்ததை
கவனிக்கவில்லை.

(அப்போது 1967 பொதுத்தேர்தலுக்கு இரண்டு
மாதங்கள் கூட இல்லாததால், செய்திதாட்களில்
ஒவ்வொரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர் பற்றியும்,
அவரது வெற்றி வாய்ப்பு பற்றியும் பத்தி
பத்தியாகசெய்திகள் வந்துகொண்டு இருக்கும்.
அந்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின்
அரசியலைப் புரட்டிப் போடப்போகிறதென்று
அப்போது ஆண்டுகொண்டு இருந்தவர்களுக்கும்
தெரியவில்லை! ஆளப்போகிறவர்களுக்கும்
தெரியவில்லை!!)

அருகில் இருந்தவர் நான் பதில் பேசாமல் இருப்பதைப்
பார்த்து,’என்ன சார்?ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?
நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளரா?’ என்றார்.

அப்போதுதான் நான் சுய நினைவுக்கு வந்து,‘என்ன
கேட்டீர்கள்?’நான் ஏதோ நினைத்துக்கொண்டு
இருந்ததால் நீங்கள் கேட்டதை கவனிக்கவில்லை.'
என்றேன்.

அதற்கு அவர் தி.மு.க.சார்பில்,பரங்கிமலையில்
நிற்கும்‘புரட்சி நடிகர்(அப்போது எம்.ஜி‌.ஆர் அப்படித்தான்
அழைக்கப்பட்டார்) நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்
என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
எனக்கேட்டேன்.’என்றார்.

இரயிலில் அரசியல் பேச விரும்பவில்லை என்றாலும்,
மூன்று மணி நேரம் தூங்காமல் இருக்க,ஏதாவது
பேசிக்கொண்டு இருக்கலாம் என்பதால் அந்த ‘இரயில்
சினேகிதருடைய’ கேள்விக்கு‘எம்.ஜி‌.ஆரை எதிர்த்து
ரகுபதி என்பவர் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார்.
இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் எம்.ஜி‌.ஆர்
வெற்றி உறுதி என நினைக்கிறேன்.’ என்று
சொன்னேன்.

எனது பதிலால் அவரது முகத்தில் ஏற்பட்ட
மகிழ்ச்சியைப் பார்த்தபோது,அவர் ஒரு எம்.ஜி‌.ஆர்
இரசிகர் ஆக இருந்திருக்கவேண்டும் என நினைத்தேன்.
அதற்குப் பிறகு சிதம்பரம் செல்லும் வரையில் அவர்
அரசியல் நிலவரம் பேசி என்னை ‘விழிப்புடன்’
வைத்திருந்தார்.

இரவு சுமார் 1.30 மணிக்கு சிதம்பரம் இரயில்
நிலையத்தை நான் பயணம் செய்த வண்டி
அடைந்ததும் எனது பெட்டி படுக்கைகை கீழே
இறக்கி,நடை மேடையில்(Platform) வைக்க இரயில்
சினேகிதர் உதவினார்.

அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஒரு போர்ட்டரை
தேடி அவரிடம்,‘நான் அருகில் உள்ள மாணவர்
விடுதிக்கு போய் வருகிறேன். அதுவரை இந்த பெட்டி
படுக்கைகளை பார்த்துக்கொள்கிறீர்களா?’ என்றேன்.
அவரும்,‘கவலை வேண்டாம் சார்.நான் அவைகளை
இரயில் நிலைய அலுவலர் அலுவலகத்திற்கு
வெளியே வைத்து விடுகிறேன்.நான் இங்கு தான்
இருப்பேன்.யாரும் எடுக்கமாட்டார்கள்.கவலை
இல்லாமல் போய் வாருங்கள்.’என்றார்.

சிதம்பரம் சென்றவர்களுக்குத் தெரியும்.சிதம்பரம்
இரயில் நிலையத்திற்கு கிழக்கே, இருப்புப்பாதைகளை
தாண்டியதும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின்
பொறி இயல் கல்லூரியின் கட்டிடங்களும் மாணவர்
விடுதிகளும் இருப்பது.

அங்கு நான்காம் ஆண்டு பொறி இயல் படித்துக்கொண்டு
இருந்த,எனது உறவினரும்,பெண்ணாடத்தைச்
சேர்ந்தவருமான திரு விநாயகம்,மாணவர் விடுதியில்
தங்கியிருந்தார்.அந்த நடு நிசியில்,அவரது அறைக்கு
சென்று தூங்கிக்கொண்டு இருந்த அவரை எழுப்பினேன்.

அந்த நடு நிசியில் அவரை தொந்தரவு செய்ததன் காரணம்
பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான, எனது
விண்ணப்பத்தையும் பணத்தையும் கொடுப்பதற்காகத்தான்.

தூக்கத்தில் இருந்து எழுந்த அவருக்கு என்னைப்
பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.பின்பு அவரிடம்
நான் வேலையை விட்டு தார்வார் செல்ல இருப்பதை
சொல்லிவிட்டு,விண்ணப்பத்தையும்,பணத்தையும்
அவரிடம் கொடுத்தேன்.

செய்தி கேட்டு மகிழ்ந்த அவர்,என்னை விருத்தாசலம்
செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுவதாக கூறி என்னுடன்
இரயில் நிலையம் வந்தார்.அங்கு இருந்த போர்ட்டரிடம்
நன்றி சொல்லி எனது பெட்டி படுக்கைகளை
எடுத்துக்கொண்டு திரு விநாயகத்துடன் சிதம்பரம்
பேருந்து நிலையம் வந்தேன். விருத்தாசலம் செல்லும்
முதல் பேருந்தில் ஏறி விநாயகத்திற்குநன்றி கூறி
அமர்ந்தேன்.

காலை சுமார் 5.30 மணிக்கு விருத்தாசலம் சென்று
அங்கிருந்து எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில்
ஏறி,காலை வீட்டை அடைந்தபோது நேரம்
காலை 6.30 மணி

என்னைப்பார்த்த அப்பாவுக்கு ஆச்சர்யம்.‘என்ன
பெட்டி படுக்கையுடன் வந்திருக்கிறாய்? என்ன
ஆயிற்று?’என்றார்கள். தேசிய விதைக்கழகத்திலிருந்து
வந்த அஞ்சலை என் தங்கை பிரித்துப் பார்க்காமல்
திருப்பி எனக்கு அனுப்பியிருந்ததால் புதிய பணிக்கான
ஆணை வந்தது அப்பாவுக்குத்தெரியாது.

நானும் அஞ்சல் கிடைத்தவுடன் நேரம் இல்லாததால்
யாரிடமும் யோசனை கேட்காமல் உடனே வேலையை
விட்டுவிட்டு வந்துவிட்டதால் அப்பாவுக்கு அது பற்றித்
தெரியவில்லை.நான் விவரத்தை சொன்னதும், அப்பா
ஒன்றும் சொல்லவில்லை. 'திடீரென வேலையை
விட்டதால் பிரச்சினை ஒன்றும் இல்லையே?’ என்றுதான்
கேட்டார்கள்.

நான் முன்பே எழுதியிருந்ததுபோல் எங்கள் அப்பா
எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார்கள்.
நான் எடுத்த முடிவு சரியாய் இருக்கும் என நினைத்து
அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

அம்மாவுக்கு மட்டும் மாநிலம் விட்டு மாநிலம்
கண்காணாத தூரம் செல்கிறேனே என்றும்,அவ்வளவு
தூரம் சென்று மொழி தெரியாமல் எப்படி வேலை
செய்யப் போகிறேன் என்றும் நம் ஊர் சாப்பாடு அங்கு
கிடைக்குமா என்றும் கவலைப்பட்டார்கள்.

ஆனால் நான் மட்டும் கவலைப்படவில்லை. தார்வார்
செல்ல ஆயத்தமானேன்.

தொடரும்

திங்கள், 13 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 4

நண்பர் திரு வீராசாமி திகைத்து நின்றதற்கு
காரணம் உண்டு.

அப்போதெல்லாம்,வேளாண் விரிவாக்க அலுவலராக
(Agricultural Extension Officer) ஊராட்சி
ஒன்றியங்களில் பணி புரியும் வேளாண் அறிவியல்
பட்டதாரிகளின் முதற் பணி,அந்த ஒன்றியத்தில்
உள்ள விவசாயிகளுக்கு புதிய வேளாண் சாகுபடி
உத்திகளை அறிமுகப்படுத்தி, ஒருங்கிணைந்த
வேளாண் பயிர் பாதுகாப்பு மூலம் தானிய
விளைச்சலை அதிகரிக்க உதவுவதுதான்.

ஆனால் அதற்கு மேலாக அவர்களுக்கு இன்னொரு
பணியும் ஒதுக்கப்பட்டு இருந்தது.வேளாண்
இடுபொருட்களான (Agricultural Inputs)
வீரிய விதைகள்(Hybrid Seeds) பூச்சி மற்றும்
பூசாண மருந்துகள் (Insecticides & Fungicides)
உழவுக்கருவிகள் போன்றவைகள் விவசாயிகளுக்கு
மானிய விலையில் விற்பதற்காக அமைக்கப்பட்ட
வேளாண் கிட்டங்கி (Agricultural Depot) யையும்
அவர்களே நிர்வகிக்கவேண்டும்.

அந்த கிட்டங்கியில் உள்ள மொத்த பொருட்களின்
மதிப்பு பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.அவைகளுக்கு
அந்த கிட்டங்கியை நிர்வகிக்கும் வேளாண் விரிவாக்க
அலுவலரே பொறுப்பு.

கிட்டங்கியில் உதவிக்கு ஒரு மேல்நிலை எழுத்தர்
(Upper Division Clerk) இருப்பார். வேளாண் விரிவாக்க
அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட சிற்றூர்களுக்கு
காலை வேளையிலேயே சென்று அங்கு
பயிரிடப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்து,ஏதேனும்
பூச்சி அல்லது பூசாண நோய் தாக்கி இருந்தால்
அவைகளை எவ்வாறு ஒழிப்பது அல்லது வராமல்
தடுப்பது என்று விவசாயிகளுக்கு அறிவுரை
சொல்லவேண்டும். அதனால் கிட்டங்கிக்கு வந்து
பொருட்களை விற்பனை செய்து கொண்டு
இருக்கமுடியாது.

அதனால் உதவிக்கு(?) உள்ள மேல்நிலை எழுத்தர்தான்
இடுபொருட்கள் விற்பனையை பார்த்துக்கொள்வார்.
ஆனால் அந்த பொருட்களின் இருப்பு அல்லது
அவைகளை விற்ற பணம் குறைந்தாலும்,
இடுபொருட்கள் விற்பனையில் நேரடித்தொடர்பு
இல்லாத வேளாண் விரிவாக்க அலுவலர்தான்
அவைகளுக்கு பொறுப்பு!

மாதத்தில் முக்கால் வாசி நாட்கள் வேளாண்
விரிவாக்க அலுவலர்கள் களப்பணிக்குப்
போய்விட்டு மாலை திரும்புவதற்குள் எழுத்தர்
அதற்குள் விற்பனையை முடித்து இருப்பார்.

அந்த நேரத்தில், அன்று விற்பனை செய்ததற்கான
Cash Receipts ன் கூட்டுத்தொகையும் கையில் உள்ள
ரொக்கமும் சரியாக இருக்கிறதா எனப்
பார்க்கத்தான் முடியும்.பொருட்களின் இருப்பை
சரி பார்க்க இயலாது.

ஒருவேளை உதவிக்கு இருக்கும் எழுத்தர்
ஞாபகமறதியாக(!) வாங்கிய பணத்திற்கு இரசீது
தராதிருந்தால்,(பெரும்பாலும் அப்படித்தான் )அந்த
பணம் கணக்கிற்கு வராது!

ஆனால் பொருட்களில் இருப்பு குறைந்திருக்கும்.
அது ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போதுதான்
தெரியவரும். பலர் நினைக்கலாம். ஏன் வேளாண்
அலுவலர்கள் கிட்டங்கிக்கு வந்து இருந்து
விற்பனையை நேரடியாக கண்காணித்து விட்டு
வெளியே செல்லலாமே என்று.

அப்படி செய்தால் களப்பணிக்கு செல்ல இயலாது.
நாள் முழுவதும் விற்பனை இருப்பதால் அங்கேயே
இருக்க வேண்டியிருக்கும்.அப்போது வேளாண்
பணிகளை செய்யாததற்காக அவர் மேல் நடவடிக்கை
எடுக்க வாய்ப்பு உண்டு. எனவே தங்களது
தலை விதியை நொந்துகொண்டு அலுவலர்கள்
கிட்டங்கியை எழுத்தரிடம் விட்டுவிட்டு வெளியே
செல்லவேண்டி வரும்.

எனக்குத்தெரிந்து அநேக வேளாண் விரிவாக்க
அலுவலர்கள் வருடாந்திர ஆய்வின் போது
கண்டறியப்பட்ட இருப்பு குறைவிற்காக
(Shotage of Stock) தங்கள் சம்பளத்திலிருந்து
பல வருடங்கள் ‘தண்டம்’ கட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

(நல்ல வேளையாக 1967 ஆம் ஆண்டில் இந்த
கிட்டங்கி நிர்வாகிக்கும் பொறுப்பை தனியாக ஒரு
மேலாளரிடம் கொடுத்து வேளாண் விரிவாக்க
அலுவலரை அந்தபணி(சுமை)யிலிருந்து
விடுவித்துவிட்டார்கள்.)

எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த கிட்டங்கியில் எனது
உதவியாளராக இருந்தவர்,ஒரு மேல் நிலை எழுத்தர்.
அவர் இந்த கிட்டங்கி வேலையில் பழம் தின்று
கொட்டை போட்டவர்! நான் அங்கு சேர்ந்தபோது
நான் எப்படி அவரை வைத்துக்கொண்டு, எனது
சம்பளத்தில் பிடித்தம் இல்லாமல் வேலை
செய்யப்போகிறேன் என்று என்னைப் பார்த்து
பரிதாபப்பட்டவர்கள் பலர். காரணம் அவரால்
பதிக்கப்பட்டவர்கள் அநேகம்.

ஆனால் நான் வேலைக்கு புதிதாய் இருந்தும்,அந்த
இரண்டரை மாதங்களில் தினம் களப்பணிக்கு
சென்றாலும் பொருட்கள் இருப்பு குறையாமல்
எப்படி பார்த்துக்கொண்டேன் என்பதை
‘நினைவோட்டம்’ தொடரில் எழுத இருக்கிறேன்.

அப்படிப்பட்ட உதவியாளர் இருக்கும்போது,பல்லாயிரம்
ரூபாய்கள் மதிப்புள்ள பொருட்கள் உள்ள கிட்டங்கியை
அடுத்து வரும் அலுவலரிடம் முறைப்படி
ஒப்படைக்காமல் விட்டுவிட்டு ஊருக்கு செல்கிறேன்
எனக்கூறியது நண்பர் வீராசாமிக்கு திகைப்பை
தந்திருக்கக்கூடும்.

நான் அவ்வாறு முடிவு செய்தது அசட்டு துணிச்சல்
என இப்போது நினைக்கிறேன்.ஒருவேளை அடுத்த
அலுவலர் பொறுப்பு ஏற்குமுன் பொருட்களின் இருப்பு
குறைந்திருந்தால் நான் தான் அவற்றிற்கு பணம்
செலுத்தவேண்டி இருந்திருக்கும்.ஆனால் அப்போதிருந்த
மன நிலையில் அவ்விடத்தை விட்டு வெளியேற
எவ்வித விலையையும் தர தயாராயிருந்தேன்
என்பதே உண்மை.

நண்பரிடம் சொன்னேன்,'வீராசாமி, நான் சொல்லாமல்
ஊருக்கு போனது தெரிந்ததும், ஆணையர் அதுபற்றி
மாவட்ட வேளாண் அலுவலருக்கு தந்தி கொடுப்பார்.
உடனே அவர் அருகில் உள்ள உங்களைத்தான்
கூடுதல் பொறுப்பாக இந்த கிட்டங்கியையும் பார்த்துக்
கொள்ள சொல்வார். எனவே தயை செய்து முழு
இருப்பையும் சரி பார்த்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்.
ஏதேனும் குறைந்திருந்தால் எனக்கு எழுதவும்.’ என்றேன்.

அவரால் ஓன்றும் சொல்லமுடியவில்லை.'சரி.உங்கள்
இஷ்டம்’ என்றார்.அன்று மாலை 5 மணிக்குமேல் எனது
பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு
திருத்துறைப்பூண்டிக்கு பேருந்தில் புறப்பட்டேன். நண்பர்
வீராசாமியும் என்னை வழி அனுப்ப உடன் வந்தார்.

யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே
பேருந்தில் ஏறினேன்.திருத்துறைப்பூண்டியில் இறங்கி
உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது
எனது கிட்டங்கியின் காவலாளி என்னைப்
பார்த்துவிட்டு.’சார்.எங்கு பெட்டி படுக்கையோடு
கிளம்பிவிட்டீர்கள்?’என்றதும்,இது ஏதடா
வம்பாகிவிட்டது என நினைத்துக்கொண்டு
‘அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால்
பத்து நாள் ஊருக்கு போகிறேன்.’எனக்கூறி
சமாளித்தேன்.

பின்பு இரயில் நிலையம் வந்து சிதம்பரம் செல்ல
பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு,நண்பர் வீராசாமி
உதவி செய்ய, இரவு சுமார் 10 மணிக்கு
இராமேஸ்வரத்திலிருந்து வந்த சென்னை செல்லும்
இரயிலில் கூட்டம் இருந்தும், ஒரு வழியாக
ஏறிக்கொண்டு நண்பரிடம் இருந்து விடைபெற்றேன்.

தொடரும்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

பிரியமுடன் விருது!கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-02-2012) இரவு
திரு சென்னை பித்தன் அவர்கள் என்னைக் கூப்பிட்டு,
மதுமதி அவர்களுடைய வலைப்பதிவைப்
பார்த்தீர்களா?’ என்றார்.

அதற்கு நான் ‘இரண்டு நாட்களாக ஒரு முக்கிய
பணி காரணமாக வலைப்பக்கமே போகவில்லை.
என்ன விஷயம்?’ என்றதும்,அவர் ‘உங்களது பதிவுக்கு
திரு மதுமதி அவர்கள் Liebster விருது கொடுத்து
இருக்கிறார்.அவரது வலைப்பதிவை பாருங்கள்’
என்றார்.

Liebster விருது என்னவென்று தெரியாததால் எனக்கு
ஒன்றும் விளங்கவில்லை.எனது வலைப்பதிவிலும்
திரு மதுமதிஅவர்கள் தனது வலைப்பதிவில்
என்னைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதாக இடுகை இட்டு
இருந்தார்.

உடனே அவரது ‘தூரிகையின் தூறல்’ என்ற
வலைப்பதிவை பார்த்தபொது எனக்கு இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது. நண்பர் கவிஞர்
திரு மதுமதி அவர்கள் என்னையும் சேர்த்து
ஐவருக்கு Liebster விருதை வழங்கியிருந்தார்.

உடனே Liebster என்றால் என்ன பொருள் என்று
ஆவலோடு பார்த்தபோது,அதற்கு ஜெர்மன் மொழியில்
பிரியமான அல்லது விருப்பமான எனப் பொருளாம்.

அந்த விருதைப் பெறுபவர்கள் விருதைத் தந்தவருக்கு
நன்றி தெரிவித்து அவரது வலைப்பதிவுக்கு தங்கள்
பதிவில் இணைப்புத் தரவேண்டும் என்றும்,Liebster ன்
சின்னத்தை தங்களது வலைப்பதிவில் போடவேண்டும்
என்றும், தங்களுக்கு பிடித்த தாங்கள் பாராட்டுகின்ற,
வளர்ந்து வரும் மூன்று அல்லது ஐந்து
வலைப்பதிவாளர்களுக்கு அந்த விருதை தரவேண்டும்
என்றும் விருது தந்த விவரத்தை அந்த
வலைப் பதிவாளர்களின் வலைப்பதிவில் அது பற்றி
இடுகை இடவேண்டும் என்பது எழுதப்படாத விதி
என அறிந்தேன்.

இந்த விருது பெற எனது பதிவுக்கு தகுதி உள்ளதா
எனத்தெரியவில்லை.நான் எனக்கு ஏற்பட்ட
அனுபவங்களைத்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
புதிதாக எதுவும் படைக்கவில்லை.ஆனாலும் நண்பர்
திரு மதுமதி அவர்கள் என் பேரில் உள்ள அன்பால்,
எனது வலைப்பதின் மேல் உள்ள பிரியத்தால் இந்த
விருதை தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அவருக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்!

திரு மதுமதி அவர்களுக்கு சகோதரி ஸ்ரவாணி
விருதைத்தர, நண்பர் திரு மதுமதி அவர்கள்
என்னையும் சேர்த்து ஐவருக்கு விருது தந்திருக்கிறார்.

அவர் விருது கொடுத்த பதிவாளர்கள் விவரம் இதோ.
1.பல் சுவை நிகழ்வுகளை தன் வலையில் எழுதும் தோழர்
வீடு சுரேஷ்
http://www.artveedu.com

2.தன் அனுபவங்களை அழகாக விவரிக்கும்
நினைத்துப் பார்க்கிறேன் ஐயா வே.நடன சபாபதி
http://puthur-vns.blogspot.in

3.கவிதைகளால் கவரும் தென்றல் சசிகலா
http://veesuthendral.blogspot.in

4.அவசியமான செய்திகளைத் தரும் தோழர் சுவடுகள்
http://shuvadugal.blogspot.in

5.பல்சுவையைத் தரும் தோழர் அரசன்
http://karaiseraaalai.blogspot.in


விருதின் விதிகளின் படி,நான் விருது தரும் அந்த மூன்று
வலைப்பதிவாளர்கள்.

1.நாம் பேச நினைப்பதையெல்லாம் தான் பேசி, தினம்
பல்சுவை விருந்து படைக்கும் திரு சென்னை பித்தன்
அவர்கள்.

2.நாட்டு நடப்பை சமூக கண்ணோட்டத்தோடு தரும்
திரு க.வாசுதேவன் அவர்கள்.

3.தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய
தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.

விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள்
பதிவில் ஏற்றி தங்களுக்கு பிடித்த மூன்று அல்லது
ஐந்து வலைப்பதிவுகளுக்கு விருதைத் தர
வேண்டுகிறேன்.

எனது வலைப்பதிவுக்கு விருது தந்தமைக்காக
நண்பர் கவிஞர் திரு மதுமதி அவர்களுக்கு மீண்டும்
எனது நெஞ்சார்ந்த நன்றி!

புதன், 8 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 3

எனக்கு அந்த இடத்தை விட்டு,அப்போதே,அந்த
மணித்துளியே கிளம்ப வேண்டும் என வெறி
இருந்ததால்,மறு நாள் காலை வெகு சீக்கிரமே
எழுந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல
தயாரானேன்.

நேரம் இல்லாததால்,என் அண்ணன்களிடம்
அதுபற்றி பேசி அவர்களது அறிவுரையை கேட்க
நேரமில்லை.இப்போது போல் தொலைபேசி
வசதியோ அல்லது கைப்பேசி வசதியோ அப்போது
இல்லை. இருந்திருந்தால் முதல் நாள் பணிக்கான
ஆணை வந்ததும் அதுபற்றி கேட்டு இருப்பேன்.

அஞ்சல் எழுதிஅறிவுரை கேட்கவும் அவகாசமில்லை.
எனவே நானே வந்தது வரட்டும் என முடிவெடுத்து
ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து பணி விலகல்
கடிதம் கொடுக்க கிளம்பியபோது,நண்பர் திரு வீராசாமி
தானும் கூட வருவதாக சொன்னார்.

போகும்போது அவர், நீங்கள் முதலில் விடுப்பு
கேளுங்கள்.அதற்குப்பின் ஊருக்கு போய் பதவி விலகல்
கடிதம் அனுப்பிவிடலாம்.நீங்கள் இப்போது பதவி
விலகுவதாக சொன்னால் ஆணையர் ஒத்துக்கொள்ளாமல்
போனாலும் போகலாம்.’என்றார்.

ஆனால் நானோ,‘வேண்டாங்க.இப்போதே பணியை
விட்டு விலகுவதை சொல்லிடலாம்’ என்றேன்.அதற்கு
அவர் ‘அப்படியானால் நாம் நேரே ஆணையர் வீட்டுக்கு
போவோம்.அங்கே தான் அவரிடம் இதுபற்றி
சாவகாசமாகப் பேசமுடியும்.அலுவலகத்தில் என்றால்,
நிறைய பேர் வந்துகொண்டும் போய்க்கொண்டும்
இருப்பார்கள்.நம்மால் விவரமாக பேசமுடியாது.’என்றார்.

ஆணையர் வீடு ஒன்றிய அலுவலகத்திற்கு அருகிலேயே
இருந்தது.நாங்கள் ஆணையர் வீட்டுக்கு சென்றபோது,
அவர் அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.
எங்களைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன்,‘என்ன விஷயம்?
ஏதேனும் அவசரமான காரியமா?’என்று கேட்டார்.

நான் உடனே ‘சார்.நான் பணியிலிருந்து விலக
இருக்கிறேன்.’என்றதும்,அவர் என்னை ஆச்சரியமாக
பார்த்து,‘நடனசபாபதி,ஏன் வேலையை விட
விரும்புகிறீர்கள்.இங்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம்(!)
உண்டு. நன்றாக பணி செய்தால் சீக்கிரமே ஒன்றிய
ஆணையராக வரலாம்.’என்றார்.

‘இல்லை.சார்.வீட்டில் ஒரு சின்ன ‘ப்ராப்ளம்’.
அதனால்தான் பணியை விட விரும்புகிறேன்? எனவே
எனது பணி விலகல் கடிதம் பெற்றுக்கொண்டு,என்னை
உடனே பணியிலிருந்து விடுவியுங்கள்.’என்றேன்.

நான் ‘ப்ராப்ளம்’ என்று சொன்னது பொய்தான்.
ஆனால் வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே,

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.


என்று! அதனால் பணியை விடுவதின் உண்மையான
காரணத்தை சொல்லவில்லை.

என்னை விடுவியுங்கள் என்று நான் விடாப்பிடியாக
சொன்னதும், அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு,‘நோ.நோ.
நான் அப்படியெல்லாம் உங்களின் பணி விலகல்
கடிதத்தைப் பெற்றுக்கொண்டு விடுவிக்க முடியாது.
தஞ்சாவூருக்கு அனுப்பி மாவட்ட ஆட்சித்தலைவரின்
தனி உதவியாளரின் (P.A to Collector) அனுமதி
பெற்றே விடுவிக்க முடியும்.’ என்றார்.

நான் உடனே,‘சார். நான் பணியில் சேரும்போது அவர்
அனுமதி பெற்றா, என்னை சேர அனுமதித்தீர்கள்.மேலும்
எனக்கு இந்த பணிக்கான ஆணை கொடுத்தது
வேளாண் துறையின் இயக்குனர்.P.A to Collector
அல்ல.’என சற்று காட்டமாகவே சொன்னேன்.

நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது
அவரது பேச்சிலேயே தெரிந்தது.‘அது பற்றி யெல்லாம்
நான் இங்கு பேச முடியாது.நீங்கள் அலுவலகம்
வாருங்கள்.’ எனக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே
சென்று விட்டார்.

நண்பர் திரு வீராசாமி என்னிடம்,‘நான் முன்பே
சொன்னேன் அல்லவா.திடீரென பணி விலகல் பற்றி
சொல்லவேண்டாம். விடுப்பு மட்டும் கேளுங்கள் என்று.
சரி. இப்போது என்ன செய்யலாம்.’ என்றார்.

நான் ‘வாருங்கள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு
அலுவலகம் போய் விடுப்புக்கு முயற்சிக்கலாம்.’ என்றேன்.

நாங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று
ஆணையரை அவரது அறையில் சந்தித்தோம்.அவரிடம்,
‘சார்.அவசியம் ஊருக்கு போய் ஆக வேண்டும்.என்னை
பணியிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால் ஒரு பத்து
நாட்கள் விடுப்பாவது கொடுங்கள்.போய் வருகிறேன்.’
என்றேன்.

அதற்கு அவர்,‘என்ன நீங்கள்.அங்கே வேலையை விட்டு
போகவேண்டும் என்றீர்கள்.இங்கே வந்து விடுப்பு
வேண்டும் என்கிறீர்கள். அதெல்லாம் தர இயலாது.
நீங்கள் நீர்முளைக்குப் போய் உங்கள் பணியைக்
கவனியுங்கள்.’என்றார்.

‘சரி சார்.’ என சொல்லிவிட்டு,வெளியே வந்ததும்,
நண்பர் வீராசாமி கேட்டார்.’என்ன செய்யப்போகிறீர்கள்?’
என்று. நான் அமைதியாகச் சொன்னேன் ‘இன்று
ஊருக்குப் போகிறேன்.’என்று.

நான் அப்படி சொன்னதும்,பணியில் இருந்து விடுப்பு
பெறாமல் நான் எப்படி போகமுடியும் என்று நினைத்து
நண்பர் திகைத்து நின்றுவிட்டார்!தொடரும்