வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 5

நான் பயணம் செய்த இரயிலில் அசாத்திய கூட்டம்.
காரணம் அப்போதெல்லாம் இரவு நேரத்தில்
தமிழ்நாட்டில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
அதனால் சென்னை செல்ல எல்லோரும் இரயிலையே
நாடியதால் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
நிற்கக்கூட இடம் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு
சென்னைக்கு மக்கள் பயணம் செய்த காலம் அது!
இப்போதும் அதே நிலைதான் அநேக பேருந்துகள்
இயக்கப்பட்டும்!

நல்ல வேளையாக எனக்கு கதவருக்கே‘இடம்’
கிடைத்தது.நான் சிதம்பரத்தில் இறங்க இருந்ததால்,
இன்னும் மூன்று மணி நேரம்தானே சமாளித்துக்
கொள்ளலாம் என எண்ணி எனது பெட்டி
படுக்கைகளை அங்கே வைத்துவிட்டு அதன் மேல்
உட்கார்ந்துகொண்டேன்.

உட்கார்ந்ததும்,ஏதேதோ சிந்தனைகள்.மனதில் ஒரு
இனம் புரியாத உணர்வு.

அது திடீரென வேலையை விட்டு வந்ததாலா
அல்லது இந்த‘சிறை’யிலிருந்து விடுதலையாகிறோம்
என்பதாலா எனத்தெரியவில்லை.புதிதாய் சேர
இருக்கின்ற இடத்தில்,கன்னடம் தெரியாமல் எப்படி
பணி புரியப்போகிறேன் என்பது கூட
காரணமாயிருக்கலாம்.ஆனால் ஊரைவிட்டு
வெகு தூரம் செல்கிறோம் என்ற எண்ணத்தால்
அல்ல.

அதனால் என் அருகே செய்தித் தாளொன்றை கீழே
விரித்து அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் அப்போதைய
அரசியல் நிலை பற்றி பேச ஆரம்பித்ததை
கவனிக்கவில்லை.

(அப்போது 1967 பொதுத்தேர்தலுக்கு இரண்டு
மாதங்கள் கூட இல்லாததால், செய்திதாட்களில்
ஒவ்வொரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர் பற்றியும்,
அவரது வெற்றி வாய்ப்பு பற்றியும் பத்தி
பத்தியாகசெய்திகள் வந்துகொண்டு இருக்கும்.
அந்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின்
அரசியலைப் புரட்டிப் போடப்போகிறதென்று
அப்போது ஆண்டுகொண்டு இருந்தவர்களுக்கும்
தெரியவில்லை! ஆளப்போகிறவர்களுக்கும்
தெரியவில்லை!!)

அருகில் இருந்தவர் நான் பதில் பேசாமல் இருப்பதைப்
பார்த்து,’என்ன சார்?ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?
நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளரா?’ என்றார்.

அப்போதுதான் நான் சுய நினைவுக்கு வந்து,‘என்ன
கேட்டீர்கள்?’நான் ஏதோ நினைத்துக்கொண்டு
இருந்ததால் நீங்கள் கேட்டதை கவனிக்கவில்லை.'
என்றேன்.

அதற்கு அவர் தி.மு.க.சார்பில்,பரங்கிமலையில்
நிற்கும்‘புரட்சி நடிகர்(அப்போது எம்.ஜி‌.ஆர் அப்படித்தான்
அழைக்கப்பட்டார்) நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்
என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
எனக்கேட்டேன்.’என்றார்.

இரயிலில் அரசியல் பேச விரும்பவில்லை என்றாலும்,
மூன்று மணி நேரம் தூங்காமல் இருக்க,ஏதாவது
பேசிக்கொண்டு இருக்கலாம் என்பதால் அந்த ‘இரயில்
சினேகிதருடைய’ கேள்விக்கு‘எம்.ஜி‌.ஆரை எதிர்த்து
ரகுபதி என்பவர் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார்.
இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் எம்.ஜி‌.ஆர்
வெற்றி உறுதி என நினைக்கிறேன்.’ என்று
சொன்னேன்.

எனது பதிலால் அவரது முகத்தில் ஏற்பட்ட
மகிழ்ச்சியைப் பார்த்தபோது,அவர் ஒரு எம்.ஜி‌.ஆர்
இரசிகர் ஆக இருந்திருக்கவேண்டும் என நினைத்தேன்.
அதற்குப் பிறகு சிதம்பரம் செல்லும் வரையில் அவர்
அரசியல் நிலவரம் பேசி என்னை ‘விழிப்புடன்’
வைத்திருந்தார்.

இரவு சுமார் 1.30 மணிக்கு சிதம்பரம் இரயில்
நிலையத்தை நான் பயணம் செய்த வண்டி
அடைந்ததும் எனது பெட்டி படுக்கைகை கீழே
இறக்கி,நடை மேடையில்(Platform) வைக்க இரயில்
சினேகிதர் உதவினார்.

அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஒரு போர்ட்டரை
தேடி அவரிடம்,‘நான் அருகில் உள்ள மாணவர்
விடுதிக்கு போய் வருகிறேன். அதுவரை இந்த பெட்டி
படுக்கைகளை பார்த்துக்கொள்கிறீர்களா?’ என்றேன்.
அவரும்,‘கவலை வேண்டாம் சார்.நான் அவைகளை
இரயில் நிலைய அலுவலர் அலுவலகத்திற்கு
வெளியே வைத்து விடுகிறேன்.நான் இங்கு தான்
இருப்பேன்.யாரும் எடுக்கமாட்டார்கள்.கவலை
இல்லாமல் போய் வாருங்கள்.’என்றார்.

சிதம்பரம் சென்றவர்களுக்குத் தெரியும்.சிதம்பரம்
இரயில் நிலையத்திற்கு கிழக்கே, இருப்புப்பாதைகளை
தாண்டியதும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின்
பொறி இயல் கல்லூரியின் கட்டிடங்களும் மாணவர்
விடுதிகளும் இருப்பது.

அங்கு நான்காம் ஆண்டு பொறி இயல் படித்துக்கொண்டு
இருந்த,எனது உறவினரும்,பெண்ணாடத்தைச்
சேர்ந்தவருமான திரு விநாயகம்,மாணவர் விடுதியில்
தங்கியிருந்தார்.அந்த நடு நிசியில்,அவரது அறைக்கு
சென்று தூங்கிக்கொண்டு இருந்த அவரை எழுப்பினேன்.

அந்த நடு நிசியில் அவரை தொந்தரவு செய்ததன் காரணம்
பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான, எனது
விண்ணப்பத்தையும் பணத்தையும் கொடுப்பதற்காகத்தான்.

தூக்கத்தில் இருந்து எழுந்த அவருக்கு என்னைப்
பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.பின்பு அவரிடம்
நான் வேலையை விட்டு தார்வார் செல்ல இருப்பதை
சொல்லிவிட்டு,விண்ணப்பத்தையும்,பணத்தையும்
அவரிடம் கொடுத்தேன்.

செய்தி கேட்டு மகிழ்ந்த அவர்,என்னை விருத்தாசலம்
செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுவதாக கூறி என்னுடன்
இரயில் நிலையம் வந்தார்.அங்கு இருந்த போர்ட்டரிடம்
நன்றி சொல்லி எனது பெட்டி படுக்கைகளை
எடுத்துக்கொண்டு திரு விநாயகத்துடன் சிதம்பரம்
பேருந்து நிலையம் வந்தேன். விருத்தாசலம் செல்லும்
முதல் பேருந்தில் ஏறி விநாயகத்திற்குநன்றி கூறி
அமர்ந்தேன்.

காலை சுமார் 5.30 மணிக்கு விருத்தாசலம் சென்று
அங்கிருந்து எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில்
ஏறி,காலை வீட்டை அடைந்தபோது நேரம்
காலை 6.30 மணி

என்னைப்பார்த்த அப்பாவுக்கு ஆச்சர்யம்.‘என்ன
பெட்டி படுக்கையுடன் வந்திருக்கிறாய்? என்ன
ஆயிற்று?’என்றார்கள். தேசிய விதைக்கழகத்திலிருந்து
வந்த அஞ்சலை என் தங்கை பிரித்துப் பார்க்காமல்
திருப்பி எனக்கு அனுப்பியிருந்ததால் புதிய பணிக்கான
ஆணை வந்தது அப்பாவுக்குத்தெரியாது.

நானும் அஞ்சல் கிடைத்தவுடன் நேரம் இல்லாததால்
யாரிடமும் யோசனை கேட்காமல் உடனே வேலையை
விட்டுவிட்டு வந்துவிட்டதால் அப்பாவுக்கு அது பற்றித்
தெரியவில்லை.நான் விவரத்தை சொன்னதும், அப்பா
ஒன்றும் சொல்லவில்லை. 'திடீரென வேலையை
விட்டதால் பிரச்சினை ஒன்றும் இல்லையே?’ என்றுதான்
கேட்டார்கள்.

நான் முன்பே எழுதியிருந்ததுபோல் எங்கள் அப்பா
எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார்கள்.
நான் எடுத்த முடிவு சரியாய் இருக்கும் என நினைத்து
அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

அம்மாவுக்கு மட்டும் மாநிலம் விட்டு மாநிலம்
கண்காணாத தூரம் செல்கிறேனே என்றும்,அவ்வளவு
தூரம் சென்று மொழி தெரியாமல் எப்படி வேலை
செய்யப் போகிறேன் என்றும் நம் ஊர் சாப்பாடு அங்கு
கிடைக்குமா என்றும் கவலைப்பட்டார்கள்.

ஆனால் நான் மட்டும் கவலைப்படவில்லை. தார்வார்
செல்ல ஆயத்தமானேன்.

தொடரும்

10 கருத்துகள்:

 1. எங்கள் அப்பா
  எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார்கள்.
  நான் எடுத்த முடிவு சரியாய் இருக்கும் என நினைத்து
  அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
  தங்கள் பயண நிகழ்வுகளையும் வளர்ந்த விதம் பற்றி சொன்ன விதமும் அருமை . காத்திருக்கிறேன் தொடரும் பதிவிர்க்காய் .

  பதிலளிநீக்கு
 2. சென்ற பகுதியையும் சேர்த்துப் படித்தேன். இக்கட்டான சூழ்நிலையிலும் நல்ல முடிவெடுத்திக்கிறீர்கள். தார்வார் அனுபவங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! நான் அப்போது எடுத்த முடிவை இப்போது எடுப்பேனா என்பது சந்தேகமே.

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. உங்களுடன் தார்வார் பயணிக்க நான் தயார்!சீக்கிரம் புறப்படுங்கள்

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
  என்னுடன் தார்வார் பயணிக்க இருப்பது அறிந்து மகிழ்ச்சி.அதற்கு நாள் வரவேண்டாமா? பொறுத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் போர்ட்டரிடம் பெட்டிகளைப் பார்க்கக் கூறிவிட்டுச் சென்றேன் என்று எழுத நான் நினைத்தேன் வரும் போது பெட்டிகள் இருக்காதோ என்று. நல்லது. தொடருங்கள் கன்னடம் தெரியாது என்ன நடந்தது என்று அறிய ஆவல். பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு