வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 8

நான் ஏறிய பெட்டியில் கூட்டம் இல்லாததால்
சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு சன்னல் வழியே
பார்த்துக் கொண்டிருந்ததால், விழுப்புரம் சந்திப்பு
வந்ததே தெரியவில்லை.

அந்த சந்திப்பில் எனது பெட்டியில் ஏறியவர்களில்
ஒருவர் பாதிரியார்.அவர் வந்து எனக்கு எதிரே
அமர்ந்துகொண்டார்.வண்டி புறப்பட்டவுடன்,நாங்கள்
சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை.திண்டிவனம்
தாண்டிய பிறகு அவரே எல்லா இரயில் பிரயாணிகள்
போலவே என்னிடம் சகஜமாக பேசத் தொடங்கினார்.

அவருடன் பேசிக்கொண்டு இருந்ததால் நேரம் போனதே
தெரியவில்லை.இரயில் தாம்பரம் நிலையத்தை
அடைந்தபோது அவர் ‘சென்னையில் எங்கு
இறங்கப்போகிறீர்கள்?’ எனக்கேட்டதற்கு,நான்
‘எழும்பூரில் இறங்கி மேற்கொண்டு பயணிக்க சென்ட்ரல்
ஸ்டேஷன் செல்ல இருக்கிறேன்.’என்றேன்.

அவர் ‘எழும்பூரிலிருந்து எப்படி சென்ட்ரல் ஸ்டேஷன்
செல்ல இருக்கிறீர்கள்? யாராவது வந்து அழைத்து
செல்ல இருக்கிறார்களா? என்று விசாரித்தார்.

அதற்கு நான் ‘இல்லை.இல்லை.ஏதாவது பேருந்தில்
செல்ல வேண்டியதுதான்.’என்றேன். அதற்கு அவர்
‘நீங்கள் சென்னைக்கு புதியவரா? என்றார்.

‘எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கேட்டதற்கு
‘எழும்பூரிலிருந்து மின்சார இரயிலில்‘பார்க்’ஸ்டேஷன்
சென்று ‘சென்ட்ரல்’ போகலாமே. அதை விட்டு
பேருந்தில் போகிறேன் என்றீர்களே அதனால்தான்.’
என்றார்.

(உண்மையில் எனக்கு அப்படி போகலாம் எனத்
தெரியாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
இறுதியாண்டு படிக்கும்போது(அதாவது நான் தார்வார்
பயணம் மேற்கொண்ட நாளுக்கு ஒரு வருடத்திற்கு
முன்பு) வகுப்பு நண்பர்களோடு முதன் முதல்
சென்னைக்கு Study Tour க்காக எங்கள் துறையின்
பேருந்தில் பயணித்து வந்திருக்கிறேன்.

சென்னையில் உள்ள பல இடங்களை எங்கள்
பேருந்தில் சென்று பார்த்ததால் மின்சார இரயிலிலோ
அல்லது நகரப்பேருந்திலோ பயணித்த அனுபவம்
இல்லை.ஹைதராபாத் நேர்முகத்தேர்வுக்கு நவம்பர்
மாதம் சென்னை வந்தபோது என் அண்ணன்
டாக்டர்.ஞானப்பிரகாசம் வந்து அழைத்து
சென்றிருக்கிறார்.அதனால் என்னைப் பொறுத்தவரை
அது சென்னைக்கு முதல் பயணமே.)

எனக்கு சென்னை புதியது எனத்தெரிந்ததும்,
‘வீணாக பேருந்திற்கு காத்திருக்காதீர்கள்.
‘எழும்பூரில் இறங்கியதும் வெளியே வந்து மின்சார
வண்டியில் செல்ல ‘பார்க்’ நிலையத்திற்கு சீட்டு
வாங்கிக்கொள்ளுங்கள் திரும்பவும் உள்ளே வந்து
மேம்பாலம் ஏறி கடைசி பயணிகள் நடைமேடையில்
இறங்கி அங்கு வரும் மின்சார இரயிலில் ஏறுங்கள்.
அடுத்த சில நிமிடங்களில் அடுத்த ஸ்டேஷன் ஆன
பார்க் நிலையத்தை அடைவீர்கள்.அதை விட்டு
வெளியே வந்தீர்கள் என்றால் எதிரே இருப்பதுதான்
சென்ட்ரல் ஸ்டேஷன்.’ என்று ஆலோசனை
சொன்னார்.

மாலை 6.30 மணிக்கு இரயில் எழும்பூர் இரயில்
நிலையம் வந்தது. எனக்கு நல்ல ஆலோசனை சொன்ன
அவருக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன்.பின்
பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு, மின்சார இரயிலில்
ஏறி பார்க் ஸ்டேஷனில் இறங்கினேன்.

அது மாலை நேரமாதலால் பணி முடிந்து வீடு
திரும்புவோர் கூட்டம் அதிகம் இருந்தது.அந்த கூட்டமே
என்னை வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிட்டது.
வெளியே வந்து எதிரே தெரிந்த சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
சாலையைக் கடந்து சென்றேன்.(அப்போது சுரங்கப்பாதை
கட்டப்படவில்லை)

சென்ட்ரல் ஸ்டேஷனின் இடப்புறத்தில் தற்போது உள்ள
பயணிகள் அமரும் இருக்கைகள் உள்ள இடத்தில்
அப்போது 'Ticket Counter’ இருந்தது.அங்கு சென்று
ஹுப்ளிக்கு பயணச்சீட்டு வாங்கினேன். அங்கிருந்த
எழுத்தர் என்னிடம் ‘இங்கிருந்து குண்டக்கல் வரை
விரைவு வண்டிக்கான கட்டணமும், குண்டக்கலில்
இருந்து ஹூப்ளி வரை சாதா கட்டணமும்
செலுத்தவேண்டும்.’என்றார். சரி எனச்சொல்லி
பணத்தைக்கொடுத்து சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே
நுழைந்தேன்.

இரவு 10 மணிக்குத்தான் நான் ஏறவேண்டிய
‘பம்பாய் மெயில்’ என்பதால் இரவு சிற்றுண்டியை
உள்ளே இருந்த ‘மரக்கறி(?) போஜன சாலையில்
(அந்த காலத்தில் அவ்வாறுதான் அது
அழைக்கப்பட்டது!) முடித்துவிட்டு பயணியர்
நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து
காத்திருந்தேன்.

இரவு 9.30 மணிக்கு நான் செல்லவேண்டிய இரயில்
Yard ல் இருந்து நடைமேடைக்கு வந்ததும், காத்திருந்தோர் அனைவரும் இடம் பிடிக்க
முன் பதிவில்லா பெட்டிகளை நோக்கி ஓடினர்.
போர்ட்டர்கள் சிலரும் ஓடினர் இடத்தை ‘ரிசர்வ்’
செய்து விற்பதற்காக! நானும் எல்லோரையும்
போல ஓடி ஒரு பெட்டியில் ஏறி சன்னலோர
இருக்கையைப் பிடித்தேன்.

அந்த இரவு 10 மணிக்கு இரயிலில் தொடங்கிய எனது
பயணம் 38 வருடங்கள் மேலும் பல மாநிலங்களில்
உள்ள பல இடங்களுக்கு இரயிலிலும் மற்ற
வாகனங்களிலும் தொடர இருக்கிறது
என்பது அப்போது தெரியவில்லை!

தொடரும்

8 கருத்துகள்:

 1. 38 வருட ரயில் பயணம் என்றால் இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உங்களின் கால் தடங்கள் பட்டிருக்குமே..

  பதிலளிநீக்கு
 2. பயணம் தொடங்கி விட்டது.இனி ஓய்வு வரை பயணம்தான்.சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி திரு மதுமதிஅவர்களே!
  38 வருடங்களில் இரயிலில் மட்டுமல்ல மற்ற வாகனங்களிலும் பயணித்திருக்கிறேன்.அது பற்றி பின் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. தெரியாத இடத்தில் புதிதான பயணம் எப்போதும் திரிலிங்தான் . எழுதுங்கள். தொடருவோம். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு