திங்கள், 20 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 6

தார்வார் பயணத்திற்கு ஆயத்தம் செய்யும்போது
எனது பணிக்கான ஆணையை திரும்ப
படித்துப்பார்த்தேன்.அதில் எனது படிப்பு
சான்றிதழ்களோடு, இரண்டு நன்னடத்தை
சான்றிதழ்களும் மாவட்ட மருத்துவ
அலுவலரிடமிருந்து(District Medical Officer)
பணியில் சேர உடல் நிலை தகுதியாய்
உள்ளது என்ற மருத்துவ சான்றிதழையும்
பணியில் சேரும்போது கொண்டு வர
வேண்டுமென்று குறிப்பிட்டு இருந்தது.

நான் எனது ஊருக்கு சென்ற தினம் சனிக்கிழமை
ஆதலால், திங்கட்கிழமை(19 ஆம் தேதி) சான்றிதழ்
பெறும் வேலைகளை முடிக்க எண்ணினேன்.
திங்களன்று காலையிலேயே விருத்தாசலம் சென்று
அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டேன்.

மாவட்ட மருத்துவ மனையில் சான்றிதழுக்கான
கட்டணம் ரூபாய் 16 கட்டி,விண்ணப்பம் கொடுத்தேன்.
மாவட்ட மருத்துவ அலுவலர் பரிசோதனை செய்து
விட்டு பணி ஆணையில் கொடுத்திருந்த படிவத்தில்
நான் பணியில் சேர முழுத்தகுதியுடன் இருக்கிறேன்
எனக் குறிப்பிட்டு கையொப்பமிட்டு கொடுத்ததை
வாங்கிக்கொண்டு விருத்தாசலம் திரும்பினேன்.

எனது அத்தை மகனும், பிரபல வழக்கறிஞருமான
திரு இரத்தினசபாபதி அவர்களைப் பார்த்து எனது
பணிக்கான ஆணையைக் காண்பித்து நன்னடத்தை
சான்றிதழ் யாரிடமாவது வாங்கித்தரமுடியுமா எனக்
கேட்கலாம் என எண்ணி,நேரே சேலம் சாலையில்
உள்ள நீதிமன்றத்திற்கு சென்று அவரைப் பார்த்தேன்.

நான் சென்ற நேரம் உணவு இடைவேளை
நேரமாதலால், நீதிமன்றத்தில் வழக்குகள்
நடைபெறவில்லை.அவர் என்னை அந்த
நீதி மன்றத்தின் முதன்மை சார்பு நீதியரசரிடம்
(Principal Subordinate Judge) அழைத்து
சென்று,அவரிடம் நன்னடத்தை சான்றிதழ்
வாங்கிக்கொடுத்தார்.

பின்பு எங்கள் குடும்பதிற்கு வேண்டியவரும்,
விருத்தாசலத்தில் தேவார பாடசாலையை
நடத்தி வந்தவருமான திரு இரத்தினசபாபதி
செட்டியார் அவர்கள் மூலம் மின் வாரிய
உதவிப்போறியாளரிடம், இரண்டாவது
நன்னடத்தை சான்றிதழ் வாங்கிக்கொண்டு
ஊர் திரும்பினேன்.

தார்வாருக்கு எந்த இரயிலில் போவது என முடிவு
செய்ய எங்கள் வீட்டில் அதற்கான கால அட்டவணை
இல்லாததால்,இரயில் பற்றிய விவரங்கள் அறிய
எனது அக்கா மகனும், வழக்கறிஞருமான
திரு சி.எஸ்.சதாசிவம் அவர்கள் வீட்டிற்கு மறுநாள்
திரும்பவும் விருத்தாசலம் 20 ஆம் தேதி சென்றேன்.

அப்போது எனக்கு தார்வாருக்கு பெங்களூரு சென்று
அங்கிருந்து புனே செல்லும் இரயிலில் செல்லலாம்
எனத் தெரியாது.ரயில்வே அட்டவணையில் உள்ள
வரைப்படத்தில் தார்வாரும் பெல்லாரியும் ஒரே
நேர்கோட்டில் இருந்ததால்,பெல்லாரி வழியாகப்
போகலாம் எனத் தீர்மானித்தேன்.

ஆனால் பெல்லாரியிலிருந்து தார்வாருக்கு நேரடி
இரயில் இல்லை.குண்டக்கல் சந்திப்பிலிருந்து
பெல்லாரி வழியாக ஹுப்ளி செல்லும் Passenger
இரயில் ஒன்று இருந்தது.ஹூப்ளி யிலிருந்து
தார்வார் 20 கிலோமீட்டர் தான் என்பதால்
அங்கிருந்து தார்வாருக்கு லோக்கல் இரயிலில்
செல்லலாம் என்பதால்,சென்னையிலிருந்து
மும்பை செல்லும் விரைவு இரயிலில் ஏறி
குண்டக்கல் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து
பெல்லாரி வழியாக ஹுப்ளி செல்லும்
இரயிலில் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

அப்போது எனது அக்கா மகன் ‘எப்போது தார்வார்
போக இருக்கிறாய்?’எனக்கேட்டார்.‘அம்மா பணியில்
சேர 24 ஆம் தேதி நல்ல நாள் என சொன்னார்கள்.
எனவே 22ஆம் தேதி கிளம்பினால்,23 ஆம் தேதி
மாலை தார்வார் போய்விட்டால் திட்டமிட்டபடி
24 ஆம் தேதி பணியில் சேர முடியும்.’என்றேன்.

அப்போது அவர் ‘சென்னையில் இரயில் பயணச்சீட்டு
வாங்கும்போது,நேரே ஹுப்ளிக்கே சீட்டு வாங்கிவிடு.
குண்டக்கல் வரை வாங்கினால்,அங்கு வெளியே
வந்து ‘கியூ’ வில் நின்று திரும்பவும் ஹூப்ளிக்கு
சீட்டு வாங்க வேண்டியிருக்கும்.கூட்டம் இருந்தால்
கஷ்டமாயிருக்கும்.அதைத் தவிர்க்கலாம்.’ என்றார்.

(அவரது யோசனைப்படி நடந்தது நல்லதுதான்
என்பது நான் குண்டக்கல் போனபோதுதான்
தெரிந்தது.)

ஊருக்குக்கிளம்ப ஒரு நாள் இருந்ததால்,மறுநாள்
21ஆம் தேதி பெண்ணாடம் சென்று எனது அண்ணன்
(பெரியம்மா மகன்) திரு அ.இராதாகிருஷ்ணன்
அவர்களிடம் தார்வார் செல்லும் விஷயத்தைக்
கூறிவிட்டு,பெரியம்மாவிடமும் மைசூர் மாநிலம்
செல்வது பற்றி சொன்னேன்.

அதற்கு அவர்கள் தான் கூட மெர்க்காராவில்
உள்ள தலைக்காவிரியில் ஒரு மாதம்
தங்கியிருந்ததாகவும்,கன்னடத்தை சுலபமாகப்
புரிந்துகொள்ளலாம் என்றும் கன்னடத்தில்
அரிசியை ‘அக்கி’ என கூறுவதை தான்
கற்றுக்கொண்டதாகவும் சொன்னார்கள்.

கர்நாடகா(அப்போதைய மைசூர் மாநிலம்)
செல்லாமலே நான் கற்றுக்கொண்ட முதல்
கன்னட சொல்‘அக்கி’ தான்!

ஊருக்கு வந்து பயணிக்க தேவையானவற்றை
எடுத்து வைக்கும்போது,தார்வாரில் எங்கே
தங்கப்போகிறேன் எனத் தெரியாததால்
பெட்டி படுக்கையை யெல்லாம்,உடன் எடுத்து
செல்லவிரும்பாமல்,ஒரு சிறிய கைப்பையில்
10 நாட்களுக்கான உடைகளை மட்டும் எடுத்துக்
கொண்டேன்.

மற்றவைகளை ஹோல்டாலில் வைத்து கட்டிவிட்டு,
அதையும் எனது பெட்டியையும், நான் தார்வார்
சென்று கடிதம் போட்டதும், டி‌வி‌எஸ் சரக்குந்து
சேவை (TVS Lorry Service) மூலம் அனுப்ப
சொல்லிவிட்டேன்.

22ஆம் தேதி (வியாழக் கிழமை) காலை தார்வார்
கிளம்பத் தயாரானேன்.தொடரும்

8 கருத்துகள்:

 1. நல்லது. அனுபவப்பட்டவர்கள் கூறுவதைக் கேட்டு டிக்கட் வாங்கினீர்கள். சிக்கலின்றிய பயணமா என்று அடுத்த தடவை பார்ப்போமே. வாழ்த்துகள் சகோதரா.மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கு நன்றி சகோதரி
  திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. நாங்களும் தார்வார் பயணத்துக்குத் தயார்!

  பதிலளிநீக்கு
 4. என்னோடு பயணிக்க இருப்பதற்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் சொல்லும் விசயங்கள் எனக்கு மனக்கண்ணில் படமாகவே ஒடுகிறது. தொடர்ந்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. என் பதிவைத் தொடர்வதற்கு நன்றி
  திரு மதுமதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. ஆமாங்க நாங்களும் எதோ பயணம் போவதற்கு தயாரானது போல் இருக்கிறது . தொடருங்கள் காத்திருக்கிறோம் .

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு