நான் அப்போது (1970 சனவரி) வங்கியில் சேர்ந்தபோது
வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு ஆறு மாதங்கள்
கூட ஆகவில்லை.அந்த கிளையில் நான் பயிற்சிக்காக சேர்ந்தபோது வங்கிகள் அரசுடமையாக்கி
ஒன்பது மாதங்கள் தான் ஆகியிருந்ததால்,வங்கி ஊழியர்கள் தனியார் வங்கியில் இருந்தது போன்ற மன நிலையிலேயே
இருந்தார்கள்.
அப்போதெல்லாம் கிளை மேலாளர்கள் வைத்தது தான் சட்டம்
என்பதால் யாரும் அவர்களை எதிர்த்து
பேச பயப்படுவார்கள்.மேலும்
நான் சேர்ந்த கிளையில் இருந்தவர்களில் பலர் அந்த மேலாளரால்
நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவரது செய்கைக்கு எதிர்ப்பே
இல்லை.
இந்த பின்னணி தெரியாமல் நான் அவர்களிடம்
மதியம் நடந்த
நிகழ்ச்சி பற்றி கேட்ட போது, புதியவனான என்னிடம் அதைப்பற்றி
பேச முதலில்
தயங்கினாலும் நான் வற்புறுத்திக் கேட்டபின்
விவரம் சொல்ல ஆரம்பித்தனர்.
‘மதியம் தினம் ஒருமணி நேரம் ‘உங்களை வெளியில் காக்க
வைப்பதுபற்றி எல்லோரும் ஒன்றுகூடி சென்று
ஏன்அவரிடம்
உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை’என்று அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள்,உங்களுக்கு இவரைப்பற்றி ஒன்றும் தெரியாது.
இவர் மிகவும் ‘சக்தி’ வாய்ந்தவர். இவரை யாரும் எதிர்த்து
பேசமுடியாது. அப்படி எதிர்த்து பேசுபவர்களின் கதி
அதோகதிதான்.
மேலும் இது குறித்து நாங்கள் ஏதேனும் எங்களுக்குள் பேச
நினைத்தால் கூட
முடியாது.காரணம் அவருக்கு துதி பாடும் கூட்டம்
ஒன்று இங்கு இருப்பதால்,அவரைப்பற்றி ஏதாவது பேசினால் கூட
அவரது காதுக்கு அது எட்டிவிடும். அதனால் நாங்கள் யாரும்
வங்கியின் கிளைக்குள் எதுவும் பேசிக்கொள்வதில்லை.’என்றார்கள்.
அதற்கு நான் ‘சரி. இவரிடம் சொல்ல பயமாய் இருந்தால்,இவரது
அராஜகம் குறித்தும், ஊழியர்களை இவர் அடிமைபோல் நடத்துவது
பற்றியும், ஏன் தலைமை அலுவலகத்திற்கு எழுதக்கூடாது?‘என்றேன்.
அதற்கு அந்த நண்பர்கள்,’நாங்கள் அதையும் செய்து
பார்த்துவிட்டோம். ஆனால் எங்களது துரதிர்ஷ்டம். நாங்கள் இவரைப்பற்றி எழுதிய அந்த
புகார் அஞ்சலை இவருக்கே திருப்பி
அனுப்பி புகார் எழுதியவர்கள்
மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி தலைமை
அலுவலகம்
அனுப்பிவிட்டது.அந்த அளவுக்கு இவருக்கு
தலைமை அலுவலகத்தின் ஆதரவு இருப்பதால் எங்களால் ஏதும் செய்யமுடியவில்லை.
அந்த கடிதம் வந்ததும் எங்கள்
எல்லோரையும் கூப்பிட்டு, ‘பார்த்தீர்கள் அல்லவா.நீங்கள் அனுப்பிய புகாரை எனக்கே அனுப்பி ஆவன
செய்யும்படி தலைமை அலுவலகம் கட்டளை இட்டுள்ளது. ஆனால்
நான் இந்த விஷயத்தை போனால்
போகிறது என்று இத்தோடு விட்டுவிடப் போகிறேன். இனி யாரேனும் இதுபோல் செய்தால், செய்பவர்கள் அனைவர் மேலும் நடவடிக்கை
எடுப்பதோடு,
இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் செய்துவிடுவேன்.’
என்று எச்சரித்து விட்டுவிட்டார்.
அனேகமாக எல்லோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள்
ஆதலால் மாற்றலுக்கு பயந்து யாரும் இது பற்றி கேட்பது இல்லை. கிளைக்கு நீங்கள் புதியவர்
என்பதால் உங்களுக்கு இது அநியாயமாகப்படுகிறது. எங்களுக்கு இது பழக்கமான ஒன்றுதான்.
நீங்கள் இருக்கப்போவதோ மூன்று மாதங்கள்தான்.எனவே இனி இதைப்பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.இல்லாவிடில்
வீணாக நீங்கள் தான் கஷ்டப்படுவீர்கள்.
உங்கள் பயிற்சி காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்பு
உண்டு.’ என்று சொன்னார்கள்.
அப்போதுதான் நினைத்தேன் இப்படிப்பட்ட மேலாளரின்
கீழ் எப்படி பணிபுரியப்போகிறோம். ஒருவேளை வங்கியில் சேர்ந்தது தவறோ
என்று. பிறகு நாம்
இருக்கப்போவது சில மாதங்கள் மட்டுமே. மேலும் எல்லா மேலாளர்களும் இப்படி இருக்க வாய்ப்பில்லை
என்று
என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.
அன்றிரவே தலைமை அலுவலகத்தில் இருந்த வேளாண்
நிதித்துறை (Agricultural Finance Department) யில் துணைத்தலைவராக இருந்த திரு K.M.உடுப்பா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அதில் எனக்கு தலைமை அலுவலக ஊழியர் துறை (Staff Department)
செய்த தவறால், திரும்பவும் எனக்கு கிளையில் எழுத்தர் பயிற்சி தரப்படுகிறது
என்றும் அதற்குப் பதில் எனக்கு வேளாண் நிதித்துறையில் பயிற்சி தர மேலாளருக்கு ஆணை தர
உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.
நான் கடிதம் எழுதியது பற்றி யாரிடமும்
சொல்லவில்லை. நான் கேட்டுக்கொண்டது போலவே ஒரே வாரத்தில் தலைமை
அலுவலகத்தில் இருந்து
எனக்கு வேளாண் நிதித்துறையில்
பயிற்சி தரும்படி
மேலாளருக்கு ஆணை வந்தது.
அக்கடிதம் வந்ததும் மேலாளர் என்னை அந்த
கிளையில் வேளாண் நிதித்துறையில் இருந்த அலுவலரின் கீழ் பயிற்சி பெற அனுமதித்தார். ஆனால்
என் துரதிர்ஷ்டம் அந்த அலுவலரும் மேலாளரின் ‘ஆளாகவே’ இருந்ததால் எந்த நேரமும் மேலாளரை புகழ்ந்தே பேசுவார். அவருக்கு தலைமை அலுவலக ஆதரவு
உண்டு என்பதை மறைமுகமாக
பலமுறை சொல்வார். நமக்கு ஏன் வீண் வம்பு என்று அவர் சொல்லும்போது
எந்தவித கருத்தையும் வெளியிடமாட்டேன்.
(அவரோடு எனது அனுபவம் பற்றி பின் எழுதுவேன்)
மூன்று மாதம் கழிந்ததும் தலைமை அலுவலக
ஊழியர் துறை நான் வேளாண் நிதித் துறையை சேர்ந்தவன் என்பதை மறந்து என்னை
அருகில் இருந்த
மாவட்ட முதன்மை கிளைக்கு அலுவலர் பயிற்சி (Supervisory Training)
பெற மாற்றிவிட்டார்கள்.வேறு வழியின்றி அங்கு சென்று பணியில்
சேர்ந்துவிட்டு திரும்பவும் திரு உடுப்பா அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவரது முயற்சியால்
மறுபடியும் நான் பயிற்சி
பெற்ற அதே கிளைக்கு மாற்றிவிட்டார்கள்!
ஏன் அதே கிளைக்கு மாற்றியுள்ளார்கள் என
எண்ணிக்
கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் எனது
பயிற்சியாளரான
அந்த வேளாண் அலுவலரை தலைமை அலுவலகத்திற்கு
தற்காலிகமாக மாற்றிய ஆணை வந்தது. அவர் திரும்பி வரும் வரை என்னை அந்த
துறையை கவனிக்கும்படியான ஆணையும், அதோடு வந்தது.
பயிற்சியின்போதே தனியாக ஒரு துறையில்
பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் இந்த கிளையில் இந்த மேலாளரின்
கீழ் பணியாற்ற வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.
நான் கவலைப்பட்டது போலவே ஒரு நாள் மேலாளரின்
கோபத்துக்கு ஆளாக நேரிட்டது.
தொடரும்