செவ்வாய், 5 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 20


எல்லோரும் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என நினைத்தபோது,
திரு மோகன் அவர்கள், ‘நண்பர்களே! உள்ளே வாருங்கள் இன்னும்
கூட்டம் முடியவில்லை.என்று சொன்னதை கேட்டதும்,
அனைவரும் சிலையாகி நின்றோம்!

பகலிலேயே பேசவேண்டியதை எல்லாம் பேசிவிட்டோம்.
இந்த நேரத்தில் இனியும் பேச என்ன இருக்கிறது என
எண்ணிக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.

உதவி விதைப் பெருக்க அலுவலர் திரு அரோரா அவர்கள்
எல்லோர் கையிலும் ஒரு காகிதத் தாளை கொடுத்தார்.

இது எதற்கு என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது
RM திரு மோகன் அவர்கள், ‘நண்பர்களே! ஒரு சிறிய தேர்வு
உங்களுக்கு வைக்க இருக்கிறேன்.உங்களது தொழில் நுட்ப
அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை சோதிக்கும்
தேர்வு இது.

நம்முடைய முதல் பணி தரமான விதைகளுக்கு சான்றிதழ்
தருவது என்றாலும் அவைகளை எப்படி நல்ல முறையில்
சாகுபடி செய்து பூச்சி மற்றும் பூசாண நோய்களிலிருந்து
காப்பாற்றி அதிக மகசூல் பெறுவது என்பதையும்
விவசாயிகளுக்கு சொல்லித் தரவேண்டியதும் நமது பணியே.

ஆனால் நம்மில் பலர் கல்லூரியை விட்டு வந்ததும் தொடர்ந்து
படிப்பதை விட்டு விடுவதால், புதிதாய் ஏற்படும் தொழில் நுட்ப
மாற்றங்கள் தெரியாமல் போய்விடுகின்றன.

பல ஆண்டுகள் பாரம்பரியமாக வேளாண்மை செய்து வரும்
விவசாயிகள், நம்மிடமிருந்து புதிய பயிர் சாகுபடி
நுணுக்கங்களையும் பயிர் பாதுகாப்பு முறைகளையும்
கற்றுக்கொள்ள விரும்புவார்கள். நம்மால் அவர்களுக்கு புதிய 
தொழில் நுட்பங்களை சொல்லித்தர இயலாது எனத்
தெரிந்தால் நம்மை யாரும் சீண்டமாட்டார்கள்.

எனவே உங்களில் எவ்வளவு பேருக்கு வேளாண் அறிவியலில்
புதிதாய் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தெரியும் என்பதையும், 
மேலும் தற்போது நீங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு
உங்கள் தொழில் நுட்ப அறிவு உள்ளது என்பதை அறியவும்,
நீங்கள் உங்களின் அறிவுத்தரத்தை அறிந்துகொள்ளவுமே
இந்த ஏற்பாடு.

குறைந்த மதிப்பெண்கள் வாங்குவோர் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

எனவே இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கு இடமே
இல்லை. All the best!’  என வாழ்த்திவிட்டு எல்லோருக்கும்
கேள்வித்தாளை வழங்கினார்.

(திரு மோகன் அவர்களும் திரு அரோரா அவர்களும் தேர்வுக்கான கேள்வித்தாளை தயாரித்திருக்கின்றனர் என்பதும்தேர்வு
நடக்கப்போகிறது என்றும்,அந்த அலுவலகத்திலேயே இருந்தும்
எனக்குத் தெரியாது.)

அந்த கேள்வித்தாளில் மொத்தம் 30 கேள்விகள் இருந்தன.
எல்லாமே ஓரிரு சொற்றொடர்களில் பதில் அளிக்கக்கூடியவை.

25 கேள்விகளில், வீரிய ரக விதைகளின் Parental line பற்றியும்,
அவைகளை வயல்களில் பயிரிடும்போது, கடைபிடிக்கவேண்டிய
விதிகள் பற்றியும் மற்றும் வீரிய விதைகள் பற்றிய தொழில்நுட்பம்
பற்றியும் கேட்கப்பட்டு இருந்தன.

5 கேள்விகள் மட்டும் அப்போதைய மைசூர் மாநிலம் பற்றி இருந்தது.
அதில் ஒன்று மைசூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின்
பெயர்களை எழுத சொல்லியிருந்தார்கள்.

(அப்போதைய மைசூர் மாநிலத்தில் மொத்தம் 19 மாவட்டங்கள்
இருந்தன.)

தேர்வை எழுதி முடிக்கும்போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது.
எல்லோருக்கும் தேநீர் வரவழைத்துக் கொடுத்துவிட்டு, எங்களது
விடைத் தாட்களை எங்களுக்குள் மாற்றிக் கொள்ள சொல்லிவிட்டுஎங்களையே திருத்த சொன்னார்.

திரு அரோரா பதில்களை சொல்லச்சொல்ல, நாங்கள் அதன்படி
சரியான விடைகளுக்கு மதிப்பெண்கள் கொடுத்தோம்.திருத்தி
முடித்ததும் திரு அரோரா அவைகளை வாங்கி அதிக
மதிப்பெண்கள் பெற்றவரில் ஆரம்பித்து எல்லோருடைய
பெயரையும் பட்டியலிட்டு திரு மோகனிடம் கொடுத்தார்.

திரு மோகன் வாங்கி பார்த்துவிட்டு, ‘நண்பர்களே. நான்
எதிர்பார்த்தது போலவே நீங்கள் எல்லோரும் தேர்வை நன்றாக செய்திருக்கிறீர்கள். உங்களின் தொழில் நுட்ப அறிவு
காலத்துக்கொப்ப (Up to date) இருக்கிறது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி. இப்போது உங்களில் யார் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிவிக்கிறேன்.’ என்று
கூறிவிட்டு நிறுத்தினார்.

நாங்கள் ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு
இருந்தோம்!


தொடரும்


    

8 கருத்துகள்:

  1. நீங்கள் தான் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பீர்கள் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! உங்கள் யூகம் சரியா என சரி பார்க்க அடுத்த பதிவு வரை தயை செய்து காத்திருங்கள்.
    இதற்கு முந்தைய பதிவைப் (Boss கள் பல விதம் 19) படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  3. யார் முதலிடம் என்று
    அவர் அறிவிக்கவில்லையெனில் எங்களுக்குத் தெரியாதா என்ன ?
    எங்கள் பாஸ்தான்!!:)))

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் யூகத்திற்கும்(?) நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் எனது ஊகமும் தங்களுக்கே மதிப்பெண் கூட வந்திருக்கும் என்பதே. பார்ப்போம்...ம்...ம்.....நல்ல பதிவு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி சகோதரி
    திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    உங்கள் யூகம் சரியா என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. இது மிகவும் நல்லதொரு அவசியமான முக்கியமான ஏற்பாடுதான். நவீன காலத்திற்கேற்ப நம் Knowledge update செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமே.

    முன்பெல்லாம் Financial Year ending .... 31st March சமயம், வெளியிலிருந்து வரும் Auditors களால் Physical Cash Verification நடந்து முடிந்து, நான் வீடு திரும்ப நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணி அல்லது 2 மணி கூட ஆகி விடும். ஏனோ அந்த ஞாபகம் வந்தது எனக்கு.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    பதிலளிநீக்கு