வெள்ளி, 1 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 19


20 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து, ஹுப்ளியில் இருந்த
ஒரு நல்ல, பெரிய உணவகத்தை நாங்கள் அடைந்தபோது
இரவு மணி எட்டு.

திரு மோகன் அவர்கள் அவரவர்கள் பிடித்த உணவை
ஆர்டர்செய்யலாமென்றும், அந்த இரவு விருந்து அவருடைய
செலவு என்றும் கூறிவிட்டார். வட இந்திய நண்பர்கள் ரொட்டி
நான்’ முதலியவைகள் வேண்டும் என்று சொன்னபோது,
நான் மட்டும் மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தேன்.

உணவு வகைகள் வரும் வரை,நேரத்தைப் போக்க ஏதாவது
பேசலாமே என்று RM சொன்னதும், சிலர் சர்தார்ஜி ஜோக்குக்கள்
சொல்ல ஆரம்பித்தார்கள். சர்தார்ஜி ஜோக்குகளை நான்
கேள்விப்பட்டது அதுவே முதல் தடவை.

பிறகு திரு மோகன் யாராவது ஷாயர்' (Sher) சொல்லலாமே
என்றார்.எனக்கு முதலில் அது என்னவென்று முதலில்
புரியவில்லை.

பின்புதான் தெரிந்தது அது பெர்சிய மற்றும் உருது மொழிகளில் சொல்லப்படும் ஈரடிச்செய்யுள் போன்று இரு அடிகள் கொண்ட
குறுங்கவிதை என்று.

இதை சொல்லும் முறையே தனி. குறுங்கவிதையின் முதல்
அடியை இரண்டும் தரம் சொல்லவேண்டும்.கவிதையை சொல்லி முடித்ததும் குழுமியுள்ளோர் வாஹ்! வாஹ்!!என
ஆர்ப்பரிப்பார்கள். (நன்றாயிருந்தால்!)

ஒவ்வொரு SPA யும் ஷாயர்' சொன்னதும் மற்ற எல்லோரும்
தாங்கள் RM உடன் இருக்கிறோம் என்பதை மறந்து கல்லூரி
மாணவர்கள் போல் சத்தம் போட்டு மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர். RM அவர்களும் அவர்களோடு 
சேர்ந்துகொண்டார். நான் மட்டும் மொழி புரியாததால்
தேமே என்று உட்கார்ந்து இருந்தேன்.

அதைக்கவனித்த திரு மோகன் அவர்கள். அரே.யார். பொறுங்கள்.
சபாபதிக்கு நாம் சொல்வது ஒன்றும் புரியவில்லை. இனி ஷாயர்
சொல்லி முடித்ததும் மொழி பெயர்க்கிறேன்.அவரும் இரசிக்கட்டும்.’ என்றார்.

பின்பு எல்லா ஷாயர்களையும் திரு மோகன் மொழிபெயர்க்க,
நானும் அவர்களோடு சந்தோஷத்தில் கலந்துகொண்டேன்.

அதில் சொன்ன ஒரு ஷாயர்' எனக்குப் பிடித்து இருந்ததால்
அதை நினைவில் வைத்திருந்து கீழே தருகின்றேன்.

(எப்படி நினைவில் வைத்திருந்தேன் என்று கேட்காதீர்கள்

எனக்குத் தெரிந்த இந்தியில் முதலிலும், பின் அதை அப்படியே
தமிழிலும் தந்திருக்கின்றேன். (இந்தியில் உள்ளது சரியா என
நண்பர் திரு வாசுதேவன் அவர்கள் தான் சொல்லவேண்டும்)


जुल्फों को देख कर  प्यार आया
जुल्फों को देख कर प्यार आया
मगर पलट कर देखा तो सरदार पाया


ஜூல்போன் கோ தேக் கர் ப்யார் ஆயா
ஜூல்போன் கோ தேக் கர் ப்யார் ஆயா
மகர் பலட் கர் தேகா தோ சர்தார் பாயாஇதன் பொருள் என்ன என்றால் ஒரு இளைஞனுக்கு
மாடியில் நின்றுகொண்டிருக்கும்போது,அடுத்தவீட்டு மாடியில்
சுருண்ட முடியோடு நீண்ட கூந்தலுடன் ஒருவர் நிற்பதைப்
பார்த்தவுடன் காதல் பிறந்துவிடுகிறதாம்.அந்த கூந்தலுக்கு
உரியவர் திரும்பியதும் தான் தெரிந்ததாம் அவர்
ஒரு சர்தார்ஜி என்று!!!

(zulf என்றால் உருது மொழியில் சுருண்ட முடி என்று பொருள்)

வட இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தெரியும் சர்தார்ஜிக்கள்
தங்கள் தலைப்பாகையில் கட்டி வைத்திருக்கும் முடியை வாரம்
ஒரு முறை குளித்தவுடன், அவைகளை காற்றில் உலர
வைப்பதற்காக மாடியில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
பின் பக்கம் பார்த்தால் நிற்பது ஆணாஅல்லது பெண்ணா எனத்தெரியாது.அதை வைத்து எழுதப்பட்டது தான்
இந்த கவிதை.

நான் கூட இந்த கவிதையை தமிழாக்கம் செய்ய நினைத்தேன்.
எனக்குத் தெரியும் நான் ஒன்றும் கவிஞர் மதுமதியோ அல்லது கவிதாயினிகள் சசிகலா மற்றும் வேதா.இலங்காதிலகமோ
அல்ல என்று.

இருப்பினும் கவிதையை அப்படியே அப்பட்டமாக மொழி
பெயர்க்காமல் பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்குத்
தெரிந்த முறையில் கீழே தமிழில் தந்திருக்கிறேன்
(கவிஞர்கள் மன்னிக்க!)


சுருள்முடி கூந்தலைப் பார்த்தபோது காதல் பிறந்தது!
சுருள்முடி கூந்தலைப் பார்த்தபோது காதல் பிறந்தது!!
அதற்குரியவர் சர்தார்ஜி என்றதும் காதல் சுருண்டது!!!


இரவு உணவு முடித்தபோது, மணி 10 க்கு மேல் ஆகிவிட்டது.
அங்கிருந்து கிளம்பி தார்வார் அலுவலகம் வந்தபோது
இரவு மணி 11. எல்லோரும் சொல்லிக்கொண்டு கிளம்பலாம்
என நினைத்தபோது,திரு மோகன் அவர்கள் சொன்னதை
கேட்டதும், அனைவரும் சிலையாகி நின்றோம்!

தொடரும்

16 கருத்துகள்:

 1. எப்படி நினைவிருந்தது என்று கேட்க மாட்டேன் நணபரே... ஞாபக சக்தியில் நீங்கள் ஒரு யானை என்பது தெரிந்ததாயிற்றே... உங்களுக்குள் ஒரு கவிஞர் இருப்பதையும் இப்போது தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நல்லா இருக்குது சர்தார்ஜி பத்தின ‘ஷேர்’.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும், பதிவைப் பாராட்டியதற்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. மலரும் நினைவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. என் கருத்தினை கேட்டதிற்கு நன்றி. நாட்டின் தலை நகரில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் நான் இருந்த காரணத்தினால் என்னை கேட்கிறீர்கள் என நினைக்கிறன் ..... நிற்க ...மூன்றாவது வரியில் சிறு பிழை என எண்ணுகிறேன் ..பல ட் கோ என்பதற்கு பதில் பலட் கர் தேகா தோ சர்தார் பாயா என்றிருக்க வேண்டும் என எண்ணுகிறேன் ..
  தமிழ் ஷாயரி நன்கு ...எதுகை மோனை கருத்தில் கொண்டு ஒரு சிறு மாற்றம் செய்ய விரும்புகிறேன் ..

  காதல் சுருண்டது என்பதிற்கு பதில் இறந்தது அல்ல மறந்தது என்று இருந்தால் ...
  அனுபவங்கள் அருமை ..தெளிந்த நீரோடை போல் எப்போதும் ...வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

  உண்மைதான். தலை நகரில் அதிக ஆண்டுகள் இருந்ததால் தாங்கள் இதில் உதவமுடியும் என்பதால் உங்களை நாடினேன்.

  நீங்கள் குறிப்பிட்ட அந்த திருத்தத்தை மூன்றாவது வரியில் செய்துள்ளேன். தமிழாக்கம் செய்யும்போது எதுகை மோனை இருக்கவேண்டும் என எண்ணினேன்.

  ஆனால் இறந்தது என எழுத விரும்பாததால் ‘கிரிக்கெட்’டில் தோல்வியை சுருண்டது என்று கூறுவதால் அதையே உபயோகப்படுத்தினேன்.

  உதவிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. என்ன நடந்தது சிலையாக!...குடையுதே!....மிக சுவையாகப் போகிறது....நல்வாழ்த்து....தங்களுடன் நடந்தபடி...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. பல பதிவுகளைப் பார்க்காது விட்டு விட்டேன். ஏன் என்று தெரியவில்லை. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி
  திரு பழனி கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 12. சுருண்ட முடி பார்த்து வந்த காதல் பின் சுருண்டது எனச் சொல்வதும் ஒரு நயம்தான்!நன்று

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
  திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. விருந்து ஜாலியாக இருந்ததுடன், பல்சுவை நிகழ்ச்சிகள் போல பலரும் பலவற்றை சொல்லியுள்ளதும், அதனை தங்கள் BOSS அவர்களே தங்களுக்கு மொழியாக்கம் செய்து சொல்லியுள்ளதும் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

  இது போன்ற FRIENDLY MEETINGS அதிகாரி தொழிலாளி என்ற கூச்சத்தையெல்லாம் போக்கி மிகவும் ஜாலியாகத்தான் இருக்கும்.

  நானும் இவற்றையெல்லாம் நிறைய அனுபவித்துள்ளேன். ROUTINE WORK லிருந்து மனது ரிலாக்ஸ் ஆவதுடன், ஒருவருக்கொருவர் நல்ல FRIENDSHIP DEVELOP ஆகும். சிலரின் தனித்திறமைகளை அனைவரும் அறியும் வாய்ப்பும் ஏற்படும்.

  2008-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ஒரு 15 நாட்கள், ஹைதராபாத்தில் EXECUTIVE ORIENTATION PROGRAMME இல் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தியா முழுவதிலிருந்தும் BHEL EXECUTIVES சுமார் 60-70 பேர்கள் பங்கேற்றோம். பலவற்றை கற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் ஜாலியாகவும் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அலுவலகத்தில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருப்பது தமிழகத்தில் தான். தமிழக அதிகாரிகள் தாங்கள் ஏதோ மேலிருந்து வந்தவர்கள் போல் நடந்துகொள்கிறார்கள் என்பது எனது கணிப்பு. அதை நான் தமிழக பணியை விட்டு NSC யில் சேர்ந்ததும் உணர்ந்தேன்.
   தாங்களும் இதுபோல் மகிழ்வான அனுபவத்தை பெற்றிருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு