புதன், 28 மார்ச், 2012

Boss கள் பல விதம்! 2

மனித வள ஆய்வாளர்கள் கூற்றுப்படி Boss கள்
அனைவரும் கீழ்க்கண்ட நான்கு பிரிவின் கீழ்
வருகிறார்களாம்.

1.ஆலமரம் போன்றவர்கள்எப்படி ஆலமரத்தின் கீழ் எந்த செடியும் வளராதோ,
அதுபோல் இவர்களுக்கு கீழே உள்ளவர்கள் மேலே
வரமுடியாது.காரணம் எங்கே தனது முக்கியத்துவம்
போய்விடுமோ என்ற பயத்தில் அவர்களை
வளர விடமாட்டார்களாம்.

இவர்கள் எப்போதும் தாங்கள் தான் நிறுவனத்திற்கு
இன்றியமாதவர்கள் என்ற எண்ணத்தோடு
(Indispensability Syndrome) வாழ்பவர்களாம்.
இவர்கள் எப்போதும் தன்னோடு ‘ஆமாம் சாமி’
போடுபவர்களை அருகில் வைத்துக்கொண்டு
இருப்பார்களாம். மாறுபட்ட சிந்தனைகள் மற்றும்
கருத்துக்கள் உள்ள ஊழியர்களை அறவே
வெறுப்பவர்களாம்.


2. ‘பைன்’(Pine) மரம் போன்றவர்கள்
நம்ம ஊர் மரத்தை உவமையாக சொல்வதானால்,அசோகா
(Polyalthia longifolia) மரம் போன்றவர்கள் என்று கூட
சொல்லலாம்.இதை நெட்டிலிங்க மரம் என்றும்
சொல்வார்கள்.இந்த மரம் ஆலமரம் போல் வளராமல் செங்குத்தாக
வளர்வதால் மற்ற செடிகளை அருகே வளரவிடும்.
இந்த வகை Boss கள் தன்னோடு பணிபுரியும்
ஊழியர்களின் வேலையில் அனாவசியகமாக
தலையிடமாட்டார்களாம். ‘வாழு வாழவிடு’
(Live and let live) என்ற கொள்கையை
உடையவர்களாம் இவர்கள்.

நீங்கள் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள் நான்
என் பங்களிப்பைத் தருகிறேன் என்ற கருத்தில்
நம்பிக்கை உடையவர்களாம்.இவர்கள்
கற்பனைத்திறனும்,புதுமையான எண்ணங்களை
உடைய ஊழியர்களை தன்னுடன் பணிபுரிய
அனுமதிப்போடு,அவர்களை ஊக்குவிப்பவர்களாம்.


3.வாழை மரம் போன்றவர்கள்ஒரு வாழைக் கன்றை நட்டால்,அது மரமாகி,இலையும்,
பூவும்,பழமும் கொடுத்து அழியுமுன்பு,அதன்
தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாழைக்கன்றுகள் தோன்றி
பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும்.அதனால்தான்
‘வாழையடி வாழை’ என்ற சொல்லாட்சியே
வழக்கில் உள்ளது.

ஒரு வாழைமரம் தான் அழியுமுன்பு,தனது கன்றை
கொடுத்து மறைவதைப் போல,இந்த வகை Boss கள்
தனக்குப்பின் நிறுவனத்தை,நன் முறையில் நடத்த
அடுத்த தலைமுறையினரை தயார்படுத்துவேண்டும்
என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாம்.

தங்கள் நிறுவனத்தின் பண்பு நலம்(Ethos),
பண்பாடு(Culture),துறைமைத்திறம்(Professionalism),
ஆகியவை நிறுவனத்தின் மரபுரிமைப் பேறு(Legacy)
என்பதால் அவைகளை இளைய தலைமுறைக்கு
விருப்பக் கொடையாக விட்டு செல்ல
விரும்புவார்களாம்.அப்படிபட்ட Boss கள் ஒரு
குழுவாக ஒற்றுமையுடன் வேலை செய்வதையே
போற்றிப் பேண விரும்புவார்களாம்.


4.சுறுசுறுப்பான தேனீ போன்றவர்கள்
இந்த வகை Boss கள் ‘நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
எனவே நீங்களும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் என்ற
கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களாம்.

இவர்கள் கண்டிப்பாக இருப்பதோடு மற்றும்
பணியை செம்மையாய் முடிக்கவேண்டும்
என எதிர்பார்ப்பவர்களாம்.பணியில்லாமல்
சும்மா இருக்க இவர்களால் இருக்கமுடியாதாம்.

தங்களுக்கும் பணியை ஏற்படுத்திக்கொண்டு
தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்க்கும் பணியை
ஏற்படுத்திக்கொடுப்பார்களாம்.மொத்தத்தில்
இவர்களுக்கு பணி செய்வது ஒன்றே குறிக்கோளாம்.

சில Boss கள் மேற்கூறிய பிரிவின் கீழ் வராமல்
இருக்கலாம். ஆனால் எப்போதுமே விதிகளுக்கு விலக்கு
உண்டு என்பதால் அவர்கள் சிறப்புப் பிரிவின் கீழ்
வருகிறார்கள்.

நம்மில் பலர் தங்களது Boss தங்களை சரியாக
நடத்துவதில்லை என்றும் மிகவும் கண்டிப்பானவராக
இருக்கிறார் என்றும் கூறுவதுண்டு.ஆனால் அவர்களே
Boss ஆகும்போது அவர்கள் தங்களின் கீழ்
பணிபுரிவோரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்
பார்த்தால் அது மாமியார் மருமகள் கதை போலத்தான்.

ஆனால் எனக்கு கிடைத்த அனுபவங்களோ
மறக்கமுடியாதவை.தொடரும்

திங்கள், 26 மார்ச், 2012

Boss கள் பல விதம்! 1

இந்த பதிவை எழுதும்போது Boss என்பதை தமிழில்
குறிப்பிடவேண்டும் என்று நினைத்து Boss என்பதற்கு
சரியான தமிழாக்கம் என்ன என்று பார்த்தேன்.

தலைவர் என்றும் முதலாளி என்றும் மேலதிகாரி
என்றும் பல் வேறு சொற்கள் கிடைத்தாலும்,
ஒவ்வொரு சொல்லும், வெவ்வேறு குழுவுக்கு
பொருந்துவதால் ஒன்றை குறிப்பிட்டால் அது
எல்லோருக்கும் பொருந்தாது என்பதால்
எல்லோருக்கும் பொதுவான சொல்லை குறிப்பிட
நினைத்தேன்.

அப்படி பார்க்கும்போது Boss என்பதை மொழிமாற்றம்
செய்வதைவிட,அப்படியே சொல்வதே சொல்வதே
சரியெனப் பட்டது எனக்கு.

சில ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்வதை விட
அவற்றை அப்படியே தமிழில் எழுதலாம்.
எடுத்துக்காட்டாக Mayor என்பதற்கு நகரத்தந்தை என
சொன்னாலும், Mayor என்ற சொல்லும்போது
இருக்கின்ற அந்த வீச்சு மொழிமாற்றம் செய்யும்போது
இல்லை என்பது எனது கருத்து.

இதே போல்தான் தமிழில் உள்ள சில சொற்களுக்கு
இணையான ஆங்கில சொற்கள், சரியான
பொருளை/அழுத்தத்தைத் தருவதில்லை என்பது
உண்மை.

Boss கள் பற்றி எழுத எண்ணியபோது நினைவுக்கு
வந்தது அக்டோபர் 16 ஆம் தேதி. ஏன் ஏனெனில்
அன்றைய தினம் தான் Boss கள் தினமாம்!

நம் நாட்டில் இது இன்னும் பிரபலமாக வில்லை
என்றாலும் வரும் ஆண்டுகளில், இந்த நாளும்
‘எல்லோராலும்’ கொண்டாடப்படுவது நிச்சயம்.
மகளிர் தினம்,குழந்தைகள் தினம்,அன்னையர் தினம்,
தந்தையர் தினம், காதலர் தினம்,மூத்த குடிமக்கள்
தினம், என குறிப்பிட்டு ஏற்கனவே பல தினங்கள்
இருக்கும்போது இதுபோன்று இனி வரும் காலங்களில்
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு
பிரிவினருக்கு ஒரு தினம் என கொண்டாட
ஆரம்பித்து விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

வெளி நாட்டில் ஆரம்பித்த இந்த ‘வியாதி’
சமீபகாலமாக நம்மையும் தொற்றிக்கொண்டது
என்பதுதான் வருந்தக்கூடிய விஷயம்.
பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை
நுகர்வோர் ‘தலையில் கட்ட’ இந்த சமயத்தைப்
பயன்படுத்திக்கொண்டு விளம்பரப்படுத்தி இலாபம்
சம்பாதிப்பது தான் அதைவிட கொடுமை.

ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த தினத்துக்கு
உரியவர்களை மரியாதை செய்து விட்டு மற்ற
நாளில் மறப்பதை விட இந்த நாட்களை
கொண்டாடாமல் இருப்பதே மேல்.

எடுத்துக்காட்டாக,அன்னையையும்,தந்தையையும்
தினம் போற்றி வந்தால்,ஆண்டில் ஒரு நாள் மட்டும்
கொண்டாடவேண்டிய அவசியம்தான் என்ன?

காலஞ்சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள்
உயிரோடு இருக்கையில் அவர் கஷ்டப்பட்டபோது,
உதவாதவர்கள் தான் இறந்தபின் சிலை திறந்து,
விழா நடத்தி கொண்டாடவேண்டாம் என்பதை
வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில்
எழுதியிருந்த கவிதை இப்போது என் நினைவுக்கு
வருகிறது.

இத்தனைக்கும் மேலே இனி ஒன்று
ஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம் -
அடியேனை விட்டு விடும்


எனவே விழா கொண்டாடி ‘அன்பை’ தெரிவிப்பதை
விட அவர்கள் நம்மோடு இருக்கும் காலங்களில்
காட்டவேண்டிய அன்பையும் பரிவையும் பாசத்தையும்
காட்டினால் இந்த தினங்கள் தேவையில்லை என்பது
என் கருத்து.

இனி தலைப்புக்கு வருவோம்.Boss கள் ஒவ்வொருவர்
கணிப்பிலும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும்
அவர்கள் அனைவரும் நான்கு பிரிவின் கீழ் வருவதாக
மனித வள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


தொடரும்

வியாழன், 22 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 14

சிறிது தூரம் சென்றதும் அந்த ஆய்வாளர் கேட்டார்.
‘நீங்கள் காலை டிஃபன் சாப்பிட்டீர்களா?’ என்று.
நான் ‘இல்லை’என்றதும் அருகில் இருந்த ஒரு
உணவகத்தைக் காட்டி,‘வாருங்கள் இந்த உணவகத்திற்கு
போவோம்.நீங்கள் சாப்பிட்டு முடித்ததும்,உங்களை
நீங்கள் சேரும் இடத்தில் விட்டு விட்டு திரும்புகிறேன்.
ஏனெனில் இதை விட்டால்,வழியில் வேறு உணவகம்
கிடையாது.'என்றார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு,‘என்னால்
உங்களுக்கு சிரமம்.உங்கள் வேலையை விட்டுவிட்டு
வந்திருக்கிறீர்கள்.’என்றதும்,‘இதிலென்ன சிரமம்.
நீங்கள் ஊருக்குப் புதியவர்.எங்கள் விருந்தாளி
போன்றவர்.உங்களுக்கு உதவுவது எனது கடமை.’
என்றார்.எனக்கு என்ன சொல்வதென்றே
தெரியவில்லை.

அவருடன் சென்று அருகில் இருந்த உணவகத்தில்
டிஃபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன்.அவரோடு
நடக்கையில்,அந்த ஓட்டுனர் ‘ஹளுதி கலர்’ என்று
சொன்னதை சொல்லி அதற்கு பொருள் என்ன
என்று கேட்டேன்.

அதற்கு அவர் ஹளுதி என்றால் மஞ்சள் என்றும்,
எனது அலுவலகம் மஞ்சள் நிற கட்டிடத்தில்
இருப்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்றார்.

சிறிது தூரத்தில் வந்த ஒருவரைப் பார்த்து,அவரிடம்
பேசிவிட்டு என்னிடம் சொன்னார்.‘இவர் பெயர்
மானே.எனது வீட்டருகே இருக்கிறார். இவர் உங்கள்
அலுவலகத்தில்தான் உதவியாளராக வேலை
பார்க்கிறார்.இவரிடம் உங்களைப் பற்றி சொன்னேன்.
இவர் இனி உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்திற்கு
அழைத்து செல்வார்.’என்றார். நான் அவருக்கு
நன்றி சொல்லிவிட்டு திரு மானே வுடன் நடந்தேன்.

அவரும் ஹிந்தியில் பேசி எனக்குப் புரியாததால்
அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.
அவரோடு பேசிக்கொண்டு நடந்தபோது அவருடைய
பெயர் S.R.மானே என்றும்,தேசிய விதைக் கழகத்தில்
கடைநிலை ஊழியராக பணி புரிகிறார் என்றும்,
தற்போது அந்த அலுவலகத்தில் பொறுப்பாளராக
இருக்கும் அலுவலர் திரு V.S.Khare என்பவர்
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும்
அறிந்துகொண்டேன்.

ஒருவழியாக திரு மானே வழி காட்ட,நான் பணியில்
சேர இருந்த அலுவலகத்தை அடைந்தேன்.அலுவலகம்
அடைந்ததும் திரு மானே அங்கிருந்த திரு பாட்டீல்
என்ற எழுத்தரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
நல்ல வேளையாக திரு பாட்டீல் ஆங்கிலத்திலேயே
உரையாடி,என்னை வரவேற்று திரு காரே அவர்கள்
வரும் நேரம் வரை அவரது அறையில் அமரச்சொன்னர்.
அங்கு சென்று திரு காரே யை எதிர்பார்த்து
அமர்ந்து இருந்தேன்.

திரு காரே அவர்களது அறையில் அமர்ந்திருந்தபோது
நினைத்துப்பார்த்தேன்.நான் சந்தித்த அனைவருமே,
முன்னேற்பாடாக ஏதோசொல்லிவைத்தது போல்
எனக்கு உதவியிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில்
ஏதோ அது ஒரு கனவுபோல் இருந்தது.

ஹூப்ளி சந்திப்பில் முன்பின் தெரியாத,என்னை
முதல் நாள் இரவு சௌகரியமாக தங்க வைத்து,
மறுநாள் காலையில் தார்வார் சென்றதும்,பணியில்
சேருமிடம் செல்ல வழி காண்பிப்பதற்கும் உதவ,
திரு சுப்ரமணியம் அவர்களை கேட்டுக்கொண்ட
திரு சோமசுந்தரம் அவர்களும்,தார்வார் இரயில்
நிலையத்தில் பேருந்து நிலையம் செல்ல உதவிய
திரு சுப்ரமணியம் அவர்களும்,பேருந்து நிலையம்
செல்ல உதவிய அந்த நடத்துனரும், ஓட்டுனரும்,
அங்கு நான் சரியான பேருந்தில் பயணிக்க உதவி
செய்த தார்வார் பேருந்து நிலைய கண்காணிப்பாளரும்,
எனக்காக ஹலியால் சாலை சந்திப்பில் பேருந்தை
நிறுத்தி என்னை அக்கறையோடு Checking
இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த அந்த நகரப்பேருந்து
ஓட்டுனரும்,என்னை எங்கள் அலுவலகத்தில் விட்டு
செல்ல தனது பணியை விட்டு வந்த அந்த
ஆய்வாளரும், கேட்காமலே உதவி செய்தார்களே.
அப்படி அவர்களை உதவி செய்ய வைத்தது எது?
எனது அதிர்ஷ்டமா? அல்லது பல பேர்களுடைய
உயிரைக் காப்பாற்றிய என் அப்பாவின் நற்செயலா?
அல்லது அந்த நல்ல மனிதர்களின் உதவி செய்யும்
பிறவிக் குணமா? எனக்கு அது புரியாத புதிராகவே
இருந்தது.

ஹைதராபாத் பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு
நிகழ்வை வைத்து அனைவரையும் எடைப்
போடக்கூடாது, எல்லோரும் நல்லவர்கள் தான்
அவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என
நினைத்துக்கொண்டேன்.

(எனது தார்வார் மற்றும் கதக் அனுபவம் பற்றி
விரிவாக ‘நினைவோட்டம்’ தொடரில் எழுதுவேன்.)

இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த அந்த
நல்ல மனிதர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள்
‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என வாழ்த்துகிறேன்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்போது நான் பணியில்
சேர இருக்கின்ற அலுவலகத்தின் முகவரியைக்கூட
அப்பாவிடம் கொடுத்து வரவில்லை.எனது
அலுவலகத்தின் தொலைபேசி எண்ணும் அவர்களுக்கு
தெரியாது.எங்கள் ஊரிலும் தொலைபேசிவசதி அப்போது
இல்லை. ஏதேனும் அவசரம் என்றால் கூட என்னைத்
தொடர்பு கொள்ளமுடியாது. நான் பணியில் சேர்ந்து
கடிதம் போட்டு முகவரி தெரிவிக்கும் வரை அவர்கள்
நான் சௌகரியமாகப் போய் சேர்ந்தேனா என்று
கூடத்தெரியாது.

ஆனாலும் எப்படி தார்வார் செல்லப்போகிறேன்,
எங்கு தங்கப் போகிறேன், என்றெல்லாம் நினைத்துக்கூட
பார்க்காமல் தைரியமாக விடை கொடுத்து அனுப்பியது
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.
(நான் பணியில் சேர்ந்தபின் ஊருக்கு கடிதம் எழுதியது
6 நாட்களுக்குப் பின் தான் அவர்களுக்கு
கிடைத்திருக்கிறது.அதுவரை எல்லாம் நல்லபடியாக
நடக்கும் என்ற நம்பிக்கையோடு என் அப்பா அம்மா
இருந்திருக்கிறார்கள்.)

ஆனால் இன்றோ என் மகன் ஊருக்கு கிளம்பி
2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமங்கலம்
தாண்டுவதற்குள்ளேயே நான் கைப்பேசிமூலம்
தொடர்புகொண்டு எங்கு இருக்கிறாய் எனக் கேட்டுக்
கொண்டு இருக்கிறேன்! இந்த தொழில் நுட்ப வளர்ச்சி
நல்லது என்றாலும் கூட, ஒவ்வொன்றிற்கும் நாம்
தொழில் நுட்பத்தை முழுதும் சார்ந்திருக்கின்ற நிலை
வந்துவிட்டதால், தன்னம்பிக்கை குறைந்து விடுமோ
என்ற அச்சம் எனக்கு எழுகிறது.

கடைசியாக முடிக்கு முன்பு – தார்வார் போய் மூன்று
மாதங்களுக்குப் பிறகு நான் முதன் முதல் எனது
அலுவலகம் சென்றபோது, உதவி செய்த ஓட்டுனரை
ஒருநாள் பேருந்தில் பார்த்தேன்.அவரிடம் போய்
எனக்குத் தெரிந்த கன்னடத்தில், ‘நமஸ்கார்ரி.
யாக இதீரே? சௌக்கியதல்லிதீரா?என்றேன்.
(வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே?
என்று பொருள்.சௌக்கியதல்லிதீரா?என்பதை
தென் மாவட்டங்களில் சன்னாகீதீரா?என்பார்கள்.)

நான் கன்னடத்தில் பேசுவேன் என்பதை எதிர்பாராத
அவர் உடனே எழுந்து என் கையைப் பிடித்துக்கொண்டு,
‘நானு ஹேளித பிரகாரா கன்னடா கலிதுபிட்டீரல்ல
சாயபுரே. பகள சந்தோஷ.’ என்றார். (‘நான் சொன்னபடி
கன்னடம் கற்றுக்கொண்டீர்களே சார்.மிகவும் மகிழ்ச்சி.’
என்று பொருள்)

அந்த பாராட்டைக் கேட்டபோது ஏற்பட்ட
சந்தோஷத்தை இப்போது என்னால் எழுத்தில்
கொண்டுவரமுடியவில்லை என்பதே உண்மை.

திங்கள், 19 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 13

திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் அங்குள்ள
வரவேற்பு அறையில் பெற்றோர்கள் வருகைக்காக
காத்திருக்குமே,அதுபோல் தார்வார் பேருந்து நிலைய
கண்காணிப்பாளர் அறையில்,சப்தாப்பூர் செல்லும்
பேருந்தின் ஓட்டுனர் வருகைக்காக காத்திருந்தேன்.

சில மணித் துளிகளுக்குப் பிறகு,அங்கு
கையொப்பமிட வந்த ஒரு ஓட்டுனரிடம் அந்த
கண்காணிப்பாளர் என்னைப்பற்றி சொல்லிவிட்டு,
என்னிடம்,‘இவர் ஒட்டி செல்லும் பேருந்து நீங்கள்
செல்லும் இடம் வழியாக செல்லும்.இவரிடம்
சொல்லியிருக்கிறேன்.இவர் நீங்கள் அந்த
நிறுத்தத்தில் இறங்க உதவுவார்.’என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த
ஓட்டுனரைப் பின் தொடர்ந்தேன்.அவர் பேருந்தில்
ஏறியதும்,என்னிடம் முதலில் கன்னடத்திலும்
பின் இந்தியிலும் ஏதோ சொன்னார்.நான்
அவரிடமும் ஆங்கிலத்தில் எனக்கு கன்னடமும்,
இந்தியும் தெரியாது என்றதும்,அவர் சைகை மூலம்
அவருக்கு அருகில் உள்ள இருக்கையில்
அமரச் சொன்னார்.

(தார்வார் மாவட்டத்தில் உள்ள அனைவரும்
கன்னடத்திற்கு பிறகு இந்தியில் சரளமாக பேசுவதற்கு
காரணம் ஒன்று உண்டு.இப்போதைய கர்நாடக
மாநிலத்தில் உள்ள அநேக மாவட்டங்கள் இந்தியா
சுதந்திரம் அடைந்தபோது வெவ்வேறு மாநிலத்தோடு
இருந்தன.

மாநில சீரமைப்புக்கு(States Reorganisation)முன்பு
அதாவது 1956 க்கு முன்பு,தார்வார் மாவட்டம்
ஒருங்கிணைந்த பம்பாய் மாநிலத்தோடு இருந்தது.
நிர்வாகத் தலைநகர் பம்பாயாக இருந்ததால்
இங்குள்ளவர்கள் அங்கு அடிக்கடி சென்று வந்ததால்
இவர்களுக்கு இந்தி இரண்டாவது மொழியாகிவிட்டது.

இது மட்டுமல்ல, கார்வாரைத் தலைநகராகக்
கொண்ட வட கன்னடம்(North Kanara),பெல்காம்,
பிஜப்பூர் மாவட்டங்களும் பம்பாய்
மாநிலத்தோடுதான் இருந்தன.

பீதார்(Bidar),குல்பர்கா, ரெய்ச்சூர் மாவட்டங்கள்,
ஹைதராபாத் நிஜாம் ஆளுகையின் கீழும்,
பெல்லாரி,மங்களூரைத் தலைநகராகக் கொண்ட
தென் கன்னடம்(South Kanara) மாவட்டங்கள்,
சென்னை இராஜதானியிலும்(Madras Presidency),
மைசூர், மாண்டியா,பெங்களூர்,தும்கூர், ஹாசன்,
சிமோகா,சிக்மகளூர்,சித்ரதுர்கா,கோலார்
உள்ளடக்கிய தென் மாவட்டங்கள் மைசூர்
மகாராஜாவின் ஆளுகையின் கீழும்,
குடகு(Coorg)யூனியன் பிரதேசமாகவும் இருந்தன.

மொழிவாரி மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற
அரசின் கொள்கைப்படி,கன்னடம் பேசுகின்ற இந்த
மாவட்டங்களையெல்லாம் ஒன்றிணைத்து 1956 ல்
மைசூர் மாநிலம் (Mysore State) என்ற புதிய மாநிலம்
உருவானது.ஆனால் 1973 ல் இந்த மாநிலத்தின்
பெயர் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதனால் தான் இன்றும், இந்த மாநிலத்தில் குறிப்பாக
பெங்களூரில் உள்ள மக்கள் அநேக மொழிகளை
தெரிந்திருக்கின்றார்கள்.)

நடத்துனர் வந்ததும்,ஓட்டுனர் அவரிடம் கன்னடத்தில்
நான் இறங்கும் இடமான ஹலியால் ரோடுக்கு
ஒரு சீட்டு கொடுக்க சொன்னார்.நான் உட்கார்ந்த
சிறிது நேரத்தில் பேருந்தில் நிறைய மாணவர்கள்
ஏறினார்கள்.

அந்த பேருந்து, சோட்டா மஹாபலேஷ்வர்
(Chota Mahabaleshwar)என்ற குன்றில் இருந்த கர்நாடக
பல்கலைக்கழகம் வரை செல்லுமாம்.அது கல்லூரி
நேரம் என்பதால் மாணவர் கூட்டம் அதிகம் இருந்தது.

பேருந்து மெல்ல நகர்ந்து, தார்வார் நகரின் மையப்
பகுதியைக் கடந்து புற நகர் பகுதியை அடைந்தது.
ஒரு குறிப்பிட்ட சாலை சந்திப்பில்,ஓட்டுனர் பேருந்தை
நிறுத்திவிட்டு சிறிது தூரத்தில் உள்ள மேடான பகுதில்
உள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டி,கன்னடத்தில் ஏதோ
சொன்னார்.‘ஹளுதி கலர்’ என்று அடிக்கடி சொன்னார்,
எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் விழிப்பதைப் பார்த்து,அவர் என்னைப் பார்த்து
‘சொல்ப தடிரி. நானு ஹெல்ப் மாடுத்தேன்றி’ என்றார்.
(கொஞ்சம் பொறுங்கள். நான் உதவி செய்கிறேன் என்று
பொருள்)

பிறகு கீழே இறங்கி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு
இருந்தார் யாராவது வந்தால் என்னை அவர்களிடம்
ஒப்படைக்கலாமென்று! அதற்குள் வகுப்புக்கு செல்ல
நேரம் ஆகிவிட்டதென்று பேருந்தில் இருந்த
மாணவர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களிடம் அவர் என்னைக் காட்டி ஏதோ
சொன்னதும் அவர்களும் அமைதியாகிவிட்டனர்.
நல்ல வேளையாக அப்போது அங்கே அரசுப்
பேருந்துவின் Checking Inspector ஒருவர் வந்தார்.
அவரிடம் என்னைப்பற்றி சொன்னதும் அவர்
என்னிடம் ஆங்கிலத்தில் ‘கீழே இறங்கி வாருங்கள்.
நான் வழி காட்டுகிறேன்.’என்றார்.

அவரிடம் ஓட்டுனர் எனது மொழிப் பிரச்சினையை
சொல்லியிருப்பார் போலும்.அதனால்தான்
ஆங்கிலத்தில் பேசினார் என நினைக்கிறேன்.

நான் அந்த ஓட்டுனருக்கு பலமுறை நன்றி
சொல்லி விடை பெற்றபோது,சிரித்துக்கொண்டே
அவர் சொன்னார்,‘கன்னடா கலிபேக்கரி சாயபுரே’.
என்று.

(அதற்கு பொருள் ‘கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள்
சார்.’ என்று பின்பு தெரிந்துகொண்டேன்.)

நான் அந்த பேருந்து ஆய்வாளரைப் பின் தொடர்ந்தேன்.


தொடரும்

வியாழன், 15 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 12

இருக்கையில் அமர்ந்ததும்,திரு சுப்ரமணியம் அவர்கள்
தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.தான்
பெங்களூர்வாசி என்றும்,தாய்மொழி கன்னடமானாலும்
தமிழும் தெரியும் என்றார்.என்னைப்பற்றி
விசாரித்துவிட்டு,‘தார்வாரில் எந்த இடத்திற்கு
செல்லவேண்டும்?’ என்று கேட்டார்.

நான் தார்வாரில், சப்தாப்பூர் (Saptapur) என்ற
இடத்தில் ஹலியால் ரோடில் (Haliyal Road) இருக்கும்
தேசிய விதைக் கழகத்திற்கு (National Seeds
Corporation Ltd.,) செல்லவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், ‘கவலை வேண்டாம். தார்வார்,
மாவட்ட தலைநகர் என்றாலும் அவ்வளவு பெரிய ஊர்
அல்ல. நீங்கள் சேரவேண்டிய இடத்திற்கு செல்ல நான்
உதவுகிறேன். ஊரும் அமைதியான ஊர். இங்குள்ள
மக்களும் மிக நல்லவர்கள். நிச்சயம் இந்த இடம்
உங்களுக்கு பிடித்துவிடும் ஒரு தடவை இங்கு வேலை
பார்த்துவிட்டால் வேறு இடத்திற்கு செல்ல
மனது வராது.என்றார்.

(அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை
என்பதைப் பின்னால் தெரிந்துகொண்டேன்.)

பின் அவரிடம் பொதுவாக பேசிக்கொண்டே வெளியே
பார்த்துக்கொண்டு இருந்தேன்.தார்வாருக்கும்
ஹுப்ளிக்கும் இடையே தூரம் 20 கிலோ மீட்டர்
தான்.அவை இரண்டும் ஹைதராபாத்-செகந்திராபாத்
போல இரட்டை நகரங்கள்.இரண்டும் சேர்ந்து ஒரு
நகரசபையின் (Hubli-Dharwar Municipal
Corporation)
கீழ் இருந்தன அப்போது.
(இப்போது எப்படியோ?)

நான் பயணம் செய்தது பாசஞ்சர் இரயில் என்பதால்
இடையில் உள்ள எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று
தார்வார் சென்றடைய ஒரு மணி நேரத்திற்கு மேல்
ஆகிவிட்டது.தார்வார் சென்றதும், திரு சுப்ரமணியம்
அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே
வந்தார்.

அங்கு நின்றுகொண்டு இருந்த ஒரு நகரப்பேருந்து
(Town Bus) வின் நடத்துனரிடம் சென்று ஏதோ
விசாரித்துவிட்டு வந்து என்னிடம்,‘இங்கிருந்து நீங்கள்
செல்லும் இடத்திற்கு நேரடி பேருந்து இல்லையாம்.
இந்த பேருந்தில் ஏறி,மையப் பேருந்து நிலையம்
சென்றால் அங்கிருந்து நிறைய பேருந்துகள் உண்டாம்.
வாருங்கள்.நான் இந்த நடத்துனரிடம்,உங்களை
மையப் பேருந்து நிலையத்தில்,சப்தாப்பூர் செல்லும்
பேருந்தில் ஏற்றிவிட சொல்கிறேன்.’என்றார்.

நானும் சரியென்று அவருடன் சென்றேன்.என்னைக்
காட்டி அவர் கன்னடத்தில் ஏதோ சொன்னார்.அந்த
நடத்துனரும் தலையை ஆட்டினார்.(நான் ஊருக்கு
புதியவன் என்பதையும்,மையப்பேருந்து நிலையம்
சென்றதும் என்னை சப்தாப்பூர் பேருந்தில் ஏறி
செல்ல உதவும்படியும் சொல்லியிருப்பார்
என்பதைப் புரிந்துகொண்டேன்.)

என்னிடம் திரு சுப்ரமணியம்,‘இந்த நடத்துனர்
உங்களுக்கு உதவுவார்.கவலைவேண்டாம் நான்
வரட்டுமா?’ எனக்கூறி விடை பெற்றுக்கொண்டார்.

நான் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அந்த நடத்துனர்
வந்து ஏதோ இந்தியில் சொன்னார்.எனக்கு கன்னடம்
தெரியாது என்பதால் இந்தியில் பேசினால்
புரிந்துகொள்வேன் என நினைத்து பேசினார் போலும்.

எனக்குத்தான் அதுவும் தெரியாதே!நான் உடனே
ஆங்கிலத்தில் எனக்கு இந்தி தெரியாது என்றேன்.
உடனே அவர் ‘ஓ.கே ஓ.கே’ என சொல்லிவிட்டு
என்னை அழைத்துக்கொண்டு,போய் ஓட்டுனர்
அருகே உள்ள இருக்கையில் அமரவைத்து கையில்
10 பைசாவுக்கான பயணசீட்டைக்கொடுத்தார். நான்
அந்த தொகையைக் கொடுத்ததும்,அவர் ஓட்டுனரிடம்
என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு மற்ற
பயணிகளுக்கு சீட்டு கொடுக்க சென்றுவிட்டார்.

நான் பயணித்த பேருந்து மையப் பேருந்து நிலையம்
சென்றதும் அந்த ஓட்டுனர் இறங்கும்போது என்னைப்
பார்த்து ‘பர்ரி பர்ரி’ என்று சொல்லிவிட்டு
இறங்கினார்.அவரது சைகையைப் பார்த்து அவர்
தன்னுடன் வரச்சொல்கிறார் எனப் புரிந்துகொண்டு
அவரைப் பின் தொடர்ந்தேன்.

(பின்பு கன்னடம் பேசக் கற்றுக்கொண்டபோது,
’பா’ என்றால் வா என்றும் ‘பர்ரி’ என்றால்
வாருங்கள் எனப்பொருள் என்று தெரிந்து
கொண்டேன். ஆனால் பெங்களூர் மைசூர்
ஆகிய தென் மாவட்டங்களில் அதையே
‘பன்னி’என்பார்கள்.நம் தமிழகத்தில்
வட்டாரத்துக்கு வட்டாரம், பேச்சு வழக்கு
மாறுபடுவதுபோல,அங்கும் தார்வாரில்
பேசப்படும் கன்னடத்திற்கும் பெங்களூர்,
மைசூர்,உடுப்பி போன்ற இடங்களில்
பேசப்படும் கன்னடத்திற்கும் சிறிய
வேறுபாடு உண்டு.நான் இரண்டு பகுதிகளிலும்
பணி செய்ததால்,பிற்காலத்தில் இரண்டு
விதமாகவும் பேசக் கற்றுக்கொண்டேன்
என்பது தனிக் கதை.)

அந்த ஓட்டுனர் நேரே அங்கு இருந்த நேரக்
கட்டுப்பாட்டு அறைக்கு சென்றார்.அப்போது
மைசூர் மாநிலத்தில் (கர்நாடகாவில்) 90 சதம்
பேருந்துகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
மாநில பேருந்து கழகத்தால் இயக்கப்பட்டன.

பேருந்துகளின் Movement ஐ கண்காணிக்க,
ஒவ்வொரு ஊரிலும் இருந்த மாநில பேருந்து
கழகத்தின் நிலையத்தில் நேரக் கட்டுப்பாடு
அறையில் ஒரு கண்காணிப்பாளர் இருப்பார்.

ஒவ்வொரு ஓட்டுனரும் அந்த நிலையத்திற்குள்
நுழைந்ததும் நேரே கண்காணிப்பாளரிடம் சென்று
அங்குள்ள பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.
அதற்காக அங்கு சென்ற அந்த ஓட்டுனர்
கண்காணிப்பாளரிடம் என்னைக் காட்டி
கன்னடத்தில் ஏதோ சொன்னார்.

உடனே அந்த கண்காணிப்பாளர் எனக்கு கன்னடம்
தெரியாது என்பதை தெரிந்து கொண்டு, ஆங்கிலத்தில்
நான் எங்கிருந்து வருகிறேன் மற்றும் எங்கு போக
விரும்புகிறேன் என விசாரித்தார்.

நான் ‘சப்தாப்பூர் போகவேண்டும்.’ என்றதும்
‘உட்காருங்கள். நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து
வந்ததும், அந்த ஓட்டுனரிடம் சொல்லி உங்களை
அழைத்துச் செல்ல சொல்கிறேன்.’ என்றார்.

நான் சப்தாப்பூர் செல்லும் பேருந்துக்காக அவரது
அறையில் காத்திருந்தேன்.

தொடரும்

திங்கள், 12 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 11

நான் பேசாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து,
‘என்ன யோசனை?’ என்றார் திரு சோமசுந்தரம்.
நான் மகிழ்ச்சியோடு கூடிய திகைப்பில்
ஆழ்ந்திருக்கிறேன் என்பதை சொல்லாமல்,
‘ஒன்றுமில்லை.’என்றதும்,‘மதியம்
சாப்பிட்டீர்களா,இல்லையா?ஏன் கேட்கிறேன்
என்றால், நீங்கள் வந்தது பாசஞ்சர் வண்டி
என்பதால் அதில் உணவு வழங்கும்
பெட்டி இருக்காது.அதனால் தான் என்றார்.

நான் மதியம் சாப்பிடாது,மாலை ‘கதக்’கில் பன்னும்
தேநீரும் மட்டும் சாப்பிட்டதை சொன்னேன்.உடனே
அவர்,இந்த ஜங்க்ஷனுக்கு நேர் எதிரே ஹோட்டல்
துவாரகா என்ற பெயரில் ஒரு ஹோட்டல் உள்ளது.
அங்கு சென்றால் இட்லி, தோசை கிடைக்கும்.
ஏன் உப்புமாவும் கூட கிடைக்கும். ஆனால்
அதை இங்கு உப்பீட்டு என்பார்கள்.’ என்றார்.

(உப்பீட்டு- நான் தெரிந்துக்கொண்ட இரண்டாவது
கன்னட சொல். கன்னடத்தில் மாவுக்கு ஹிட்டு
எனப்பெயர்.உப்பு+ஹிட்டு = உப்பீட்டு என ஆயிற்று
என பின்னால் தெரிந்துகொண்டேன்.)

அவர் சாப்பிட்டீர்களா எனக் கேட்டதும் தான்,நான்
மதியம் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
உடனே பசியும் வயிற்றைக் கிள்ளியது.சரி என
சொல்லிவிட்டு எனது கைப் பையை அவரது அறையில்
வைத்துவிட்டு வெளியே போய் அந்த ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டு திரும்பினேன்.

திரும்பியதும் அவர் எனது ஊரைப் பற்றியும்,
எனது படிப்பு மற்றும் நான் சேர இருக்கின்ற
நிறுவனம் பற்றியும் கேட்டார்.ஆனால் ஏனோ
தயக்கத்தால் அவரைப்பற்றிய விவரங்களைக்
கேட்கவில்லை.

பிறகு அவர் ‘நீங்கள் ஒரு இரவு, ஒரு பகல்
இரயிலில் வந்ததால் களைப்பாய் இருப்பீர்கள்.
நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் முதல் வகுப்பு
பயணிகள் தங்கும் அறையில் தூங்கலாம் யாரும்
தொந்தரவு செய்யமாட்டார்கள்.’ என்றார்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு முதல் வகுப்பு
பயணிகள் தங்கும் அறைக்கு சென்று அங்கிருந்த
‘சோபா’ ஒன்றில் என்னைப் படுத்து உறங்கச் சொன்னார்.
அங்கிருந்த ஒரு போர்ட்டரை அழைத்து,நான் அவரது
விருந்தாளி என்றும் என்னை எழுப்பித் தொந்தரவு
செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரது
அறைக்கு சென்றுவிட்டார்.

(வழக்கமாக முதல் வகுப்பு பயணச்சீட்டு உள்ளவர்கள்
மட்டும் தான் அந்த தங்குமிடத்தில் வண்டி வரும்
வரை தங்க அனுமதிப்பார்கள். நானோ மூன்றாம்
வகுப்புப் பயணி.அதுவும் அப்போது என்னிடம்
மேற்கொண்டு பயணிக்க பயணச்சீட்டும் இல்லை.
அவர் மட்டும் சொல்லாமலிருந்தால், அங்கு
நான் தூங்கி(தங்கி)யே இருக்கமுடியாது)

முதல் நாள் இரவு முழுதும் சரியாகத் தூங்காமல்
‘கோழித்தூக்கம்’ போட்டிருந்ததால், படுத்ததும்
அசதியில் உடனே தூங்கிவிட்டேன்.

திடீரென யாரோ எழுப்பதுபோல் உணர்ந்து கண்ணைத்
திறந்து பார்த்தபோது,திரு சோமசுந்தரம் அவர்கள்
என் அருகே நின்றிருந்தார்.என்னிடம் ‘எழுந்திருங்கள்.
மணி 5 ஆகிறது. நீங்கள் பல் துலக்கி குளித்து பயணிக்க
தயாராக வேண்டுமல்லவா? அதனால்தான்
எழுப்பினேன்.’ என்றார்.

எழுந்து காலைக்கடன் முடித்து, பல்துலக்கியதும்,
அவர் என்னிடம் ‘நேற்று நீங்கள் சாப்பிட்ட
ஹோட்டலுக்கு பக்கத்தில் உள்ள லாட்ஜில் 30 பைசா
கொடுத்தால் குளிக்க அனுமதிப்பார்கள்.அங்கு போய்
'பிஸி நீரு’ என்று மட்டும் சொல்லுங்கள்.ஒரு வாளி
‘சுடச்சுட’ வெந்நீர் கொடுப்பார்கள். போய் குளித்து
வாருங்கள்.’ என்றார்.

அவர் சொன்னபடியே வெளியே சென்று அந்த லாட்ஜில்
நான் புதிதாக கற்றுக்கொண்ட அந்த மூன்றாவது
கன்னட சொல்லான ‘பிஸி நீரு’ என்பதை சொல்லி
30 பைசா கொடுத்து, குளித்து திரும்பினேன்.

திரும்பி வந்து அவர் அறையிலேயே எனது உடையை
மாற்றிக்கொண்டதும், உடனே எனக்கு சூடாக காஃபி
வரவழைத்துக் கொடுத்து, ‘தார்வாருக்கு செல்லும் முதல்
இரயில் 7 மணிக்கு இருக்கிறது.இந்தாருங்கள் உங்கள்
பயண சீட்டு.’என்று எனது பயண சீட்டையும் கொடுத்தார்.

நான் அவருக்கு பல முறை நன்றி சொல்லி கிளம்ப
எத்தனித்தபோது, ‘இருங்கள்.நான் வந்து உங்களை
வண்டியில் ஏற்றி வழி அனுப்புகிறேன்.’ என்று கூறிவிட்டு,
வெளியே சென்று அவரது நண்பர் ஒருவரை
‘கௌண்டரை’ பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு
என்னுடன் வந்தார்.

அங்கு நடைமேடையில் (பிளாட்ஃபாரத்தில்)
நின்றுகொண்டிருந்த பாசஞ்சர் வண்டியில் என்னை
உட்கார சொல்லிவிட்டு,‘இருங்கள். இதோ வருகிறேன்.
எனக் கூறி சென்றவர்,சிறிது நேரத்தில் இன்னொரு
நண்பரோடு வந்தார்.

என்னிடம்,'இவர் என் நண்பர். பெயர் சுப்ரமணியம்.
பெங்களூர்க்காரர். இவரும் இரயில்வே ஊழியர்தான்.
இவரும் பணிக்காக தார்வாருக்குத்தான் செல்கிறார்.
உங்களுக்கு உதவ இவரும் உங்கள் பெட்டியில்
பயணம் செய்வார்.தார்வார் சென்றதும் உங்களை
ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து சென்று, நீங்கள்
செல்ல வேண்டிய இடம் செல்ல உதவுவார்.’ என்றார்.

அவர் செய்த எதிர்பாராத உதவியால், திகைத்து
நின்றதால், சில மணித்துணிகள் எனக்கு என்ன
சொல்வது என்றே தெரியவில்லை. அவருக்கு
திரும்பவும் நன்றி சொல்ல முற்பட்டபோது,
அவர்,‘அதெல்லாம் ஒன்றும் நீங்கள்
சொல்லவேண்டாம்.நம் ஊர்க்காரராகிய உங்களுக்கு
நான் இதுகூட செய்யாவிட்டால் எப்படி. நீங்கள்
நல்லபடியாக போய் பணியில் சேருங்கள்.
போய் வாருங்கள்.’என்றார்.

இரயில் நகரத் தொடங்கியதும் பார்வையிலிருந்து
மறையும் வரை அவருக்கு கை அசைத்துக்கொண்டு
இருந்துவிட்டு வந்து திரு சுப்ரமணியம் அவர்கள்
அருகில் இருக்கையில் அமர்ந்தேன்.


தொடரும்

வெள்ளி, 9 மார்ச், 2012

பல்திறப் புலமை விருதும் நானும்!

கவிஞர் மதுமதி அவர்கள் எனக்கு Liebster விருது
கொடுத்த ஒரு வாரத்திற்குள் 17-02-2012 அன்று
நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள்
வலைப்பதிவில் ஜாம்பவான்களான நான்கு
பதிவர்களோடு என்னையும் சேர்த்து ஐவருக்கு
“Versatile blogger award” என்ற விருதை வழங்கி
கௌரவப்படுத்தியிருந்தார். அவருக்கு
முதற்கண் எனது மனமார்ந்த நன்றி!
விருது கிடைத்த உடனேயே இது பற்றி எழுதாது
மௌனம் காத்ததன் காரணம் உண்மையிலேயே
நான் இந்த விருது பெறத்தகுதி உடையவனா என
யோசித்துக்கொண்டு இருந்ததால் தான்.

நான் 2009 சனவரியில் இருந்து தான் வலைப் பதிவில்
எனது அனுபவங்களை வெவ்வேறு தலைப்புகளில்
எழுதிக்கொண்டு இருக்கிறேன். மூத்த பதிவர்கள்
மற்றும் புதியாய் வந்துள்ள பதிவர்களைப்
பார்க்கும்போது,நான் ஒன்றும் பெரிதாய்
சாதிக்கவில்லை என்பது எனது தாழ்மையான
கருத்து.

இருப்பினும் எனது தகுதியைவிட,விருது தந்து
கௌரவித்துள்ள நண்பர் திரு சென்னை பித்தன்
அவர்களின் தகுதியையும்,நோக்கத்தையும்
பார்க்கும்போது இந்த விருதை அவரிடமிருந்து
பெறுவதில் உண்மையிலேயே நான்
பெருமைப்படுகிறேன்.

இந்த விருதைப் பெறுவோர் தங்களுக்குப் பிடித்த
ஏழு விஷயங்களைப் பதிவிட்டது மட்டுமல்லாமல்
இந்த விருதை மேலும் ஐந்து பேருக்கு வழங்க
வேண்டுமாம்.

முதலில் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைக்
குறிப்பிட விரும்புகிறேன்.

நேரம் தவறாமை
நண்பர்களுடன் கலந்துரையாடல்
பழைய(60 களில் வந்த)திரைப்பட பாடல்கள்
கல்கியின் சரித்திர நாவல்கள்
கேலிச்சித்திரங்கள் (கார்ட்டூன்கள்)
அரசியல் செய்திகள்
பிறர்க்கு உதவுதல்

வலைப்பதிவில் எழுதுவோர் அனைவருமே
பல்துறை அறிவும், திறமையும் வாய்ந்தவர்களாக
இருப்பதால்,"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
என்ற எண்ணத்தில் வலைப்பதிவர்கள் அனைவருக்குமே
(இவ்விருதை பெற்றவர்கள் நீங்கலாக) இந்த
பல்திறப் புலமை வாய்ந்த பதிவர் விருதை
(Versatile blogger award”) அளிக்கிறேன்.

செவ்வாய், 6 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 10

’தார்வாருக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்.’ எனத்
தமிழில் கேட்டவுடன், ‘கௌண்டர்’உள்ளே இருந்தவர்
நிமிர்ந்து என்னைப் பார்த்து, ‘ஊருக்கு புதுசா?’
என்றார்.

அவர் கேட்டதன் காரணம்,கன்னடம் பேசுகின்ற
ஊரில் வந்து தமிழில் பேசுகின்றானே என்பதால்.
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது நான்
பழக்கதோஷத்தில்,தமிழ்நாட்டுக்கு வெளியே
இருக்கிறேன் என்பதை மறந்து தமிழில்
பேசிவிட்டேன் என்பதை.

இருந்தாலும்,இங்கு கூட தமிழ் பேசுபவர்கள்
இருக்கிறார்களே என்ற சந்தோஷத்தில் எதற்காகக்
கேட்கிறார் என்பதைக்கூட யோசிக்காமல்,
‘ஆமாம்.’என்றேன்.உடனே ‘எங்கிருந்து
வருகிறீர்கள்?’ என்று கேட்டார்.

இதையெல்லாம் ஏன் கேட்கிறார் என எண்ணிக்
கொண்டு நான் ‘விருத்தாசலத்திலிருந்து
வருகிறேன்.’என்றேன்.

‘தார்வாருக்கு என்ன விஷயமாகப் போகிறீர்கள்
எனத் தெரிந்துகொள்ளலாமா?அங்கு யாரையாவது
தெரியுமா? ஏன் கேட்கிறேன் என்றால் இந்த வண்டி
தார்வார் போகும்போது இரவு ஆகிவிடும்.ஊருக்குப்
புதியவர் என்றால் மொழி தெரியாவிட்டால், இடம்
தேட கஷ்டமாயிருக்கும்.அதனால்தான் கேட்டேன்.’
என்று அனுசரணையாகப் பேசினார்.

நான் புதிய வேலையில் சேர வந்திருப்பதை
சொன்னதும், அவர் ‘நீங்கள் உள்ளே வாருங்கள்.’
என்றார்.

எதற்காக வரச்சொல்கிறார் என யோசித்துக்
கொண்டே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து
பயணச்சீட்டு கொடுக்கும் அறைக்கு சென்றேன்.

அங்கு சென்றதும் என்னை உட்காரச்சொல்லிவிட்டு
அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அவரது பெயர் சோமசுந்தரம் என்றும் அவர்
கடலூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்து
கொண்டேன்.

‘தம்பி,நீங்கள் ‘டிக்கெட்’கேட்கும்போதே ஊருக்குப்
புதியவர் எனத்தெரிந்து கொண்டேன்.நீங்கள் நம்ம
மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிந்ததும்,
நீங்கள் எதற்காக தார்வார் செல்கிறீர்கள் எனக்
கேட்டேன். நீங்கள் புதிதாக வேலைக்கு சேர
வந்திருக்கிறீர்கள் என அறிந்ததும், நம்
ஊர்க்காரராகிய நீங்கள் இரவில் புதிய இடமான
தார்வாருக்கு சென்று திண்டாட வேண்டாமே
என்பதால் உங்களுக்கு உதவலாமே என்றுதான்
உள்ளே கூப்பிட்டேன்.’என்றார்.

நான் அவரது மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற
பாசத்தாலும்,தமிழன் என்ற இன உணர்வாலும்
எனக்கு உதவ வேண்டி உள்ளே அழைத்திருக்கிறார்
எனத் தெரிந்தபோது எனக்குள் ஏற்பட்ட
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என்ன பேசுவது
எனத் தெரியாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன்.


தொடரும்

வெள்ளி, 2 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! தொடர் பதிவு

நண்பர் ‘மின்னல் வரிகள்’ கணேஷ் அவர்கள்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!'என்ற தொடர்
பதிவில்,என்னையும் திரும்பவும் பள்ளிக்கு
செல்ல அன்புடன் அழைத்திருக்கிறார்.அவருக்கு
முதற்கண் எனது நன்றி!

நான் முன்பே எனது பள்ளி அனுபவம் பற்றி
‘நினைவோட்டம்’ என்ற தலைப்பில் 60 பதிவுகள்
எழுதி உள்ளேன்.(நினைவுகள் என்ற துணைத்
தலைப்பின் கீழ்) இருப்பினும் அதில்
எழுதாதவைகளையும், எழுதியவைகளையும்
இங்கே திரும்பவும் எழுதுவதற்காக
கால இயந்திரத்தில்(Time Machine) ஏறி
திரும்பவும் பள்ளிக்கு செல்கிறேன்!

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை
(1949 - 54) ஊரில் எங்களது தெரு முனையில்
இருந்த திண்ணைப் பள்ளியில் படித்தேன்.
திண்ணைப் பள்ளி என்றா சொன்னேன்.
இல்லை இல்லை அது மரத்தடிப் பள்ளி.
தெருவின் முனையில் இருந்த ‘சாவடி’க்கு
முன் இருந்த ஆலமரத்தின் கீழ்தான்
எங்கள் பள்ளி(!) இருந்தது.

சூரியன் நகர நகர,எங்களது வகுப்புகளும்
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும்.
மழைக் காலங்களில் அருகில் இருந்த
தெய்வானை அத்தை வீட்டு திண்ணைதான்
எங்களது வகுப்பறை. ஐயா என்று எங்களால்
மரியாதையுடன் (பயத்துடன்) அழைக்கப்பட்ட
திரு சாமிநாத அய்யர் அவர்கள்தான்
எங்களது ஆசிரியர்.

ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு
முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி,
வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன்,
விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி,
அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம்

முதலியவைகளை மனப்பாடம் செய்து
எங்களை அவர் கற்க வைத்ததையும்,
பிள்ளையார் சதுர்த்தியில் தொடங்கி
ஆயுத பூஜை வரை உள்ள நாட்களில்
எங்களுக்கு அவர் கற்றுக்கொடுத்த
கோலாட்டத்தையும், இன்னும் நான்
மறக்கவில்லை.

கிராம வாழ்க்கைக்கு உபயோகப்படக்கூடிய,
பிராமிசரி நோட்டும் குத்தகை சீட்டும் எழுத
நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் பயிற்சி
பெற்றதும் வேறெந்த பள்ளியிலும் நினைத்துப்
பார்க்கமுடியாதவை.

நான்காம் வகுப்பு படிக்கும்போது காலம்சென்ற
என் அண்ணன் டாக்டர்.வே.சிவசுப்ரமணியன்
(வேளாண் மரபியல் விஞ்ஞானி) அவர்கள்
எங்களை அய்யாவுடன் நிற்க வைத்து எடுத்த
ஒரு அரிய புகைப்படம் கீழே. என்னைப்
பொருத்தவரை இது ஒரு பொக்கிஷமே!

புகைப்படத்தில் மரத்திற்குப் பின்னால் தெரிவது
தான் சாவடி.படத்தில் வலமிருந்து ஏழாவதாக
நிற்பது நான். நாடு சுதந்திரம் அடைந்த பொழுது
இருந்த பள்ளிகளின் நிலை இதுதான்.

ஐந்தாவது படிக்கும்போது எங்கள் ஊர்
ஆற்றங்கரையில் என் அண்ணன்
டாக்டர்.வே. ஞானப்பிரகாசம் அவர்களுடன்
(பின் நாட்களில் தமிழ்நாடு
கால்நடை அறிவியல் பல்கலைக் கழக துணை
வேந்தர் ஆக இருந்தவர்)என்னை வைத்து,
எனது இன்னொரு அண்ணன்
திரு வே.சபாநாயகம் எடுத்த புகைப்படம் கீழே.
ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்புகளை
(1954 - 56) அரியலூர் கழக உயர்நிலைப் பள்ளியில்
படித்தபோது,ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடல்களை
அங்க அசைவுகளோடு ஒப்புவிக்கும் போட்டியில்
பங்குபெற்றதும்,என் ஆசிரியர் திரு கல்யாண சுந்தரம்
அய்யர் அவர்கள் சொல்லிக்கொடுத்தபடி, என்னை
அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது
‘People call me Nadanasabapathy’ என்று சொல்லி
எல்லோரிடமும் கைத்தட்டல் வாங்கியதும்,
(அப்போது அவ்வாறு சொல்வது புதிது) எதிர்பார்த்தபடி
முதல் பரிசு பெற்று எழுத்தாளர் திரு கி.வா.ஜ
அவர்களிடமிருந்து, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய
காந்தி மகான் கதையை பரிசாக பெற்றதும்,ஏதோ
நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது.

எட்டாம் வகுப்பை (1956 - 57)பெண்ணாடம் கழக
உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.அங்குதான்
‘பிராத்மிக்’ எனப்படும் இந்தித் தேர்வை எழுதியதும்,
1957 பிப்ரவரியில் நடந்த பொதுத்தேர்வில்
அரசியலில் ஆர்வம் காட்டியதும், கட்டுரைப்போட்டியில்
கலந்துகொண்டு மூன்றாம் பரிசாக 'கடல் கன்னி'
என்ற புதினத்தை பரிசாக பெற்றதும், எனக்காக
என் பெரியம்மா தன் சௌகரியத்தை பாராது,
என் விருப்பப்படி சமையல் செய்து என்னை
படிக்கவைத்ததையும் எப்படி மறக்கமுடியும்?

எட்டாவது படிக்கும்போது என் மாமா மகன்
திரு J.M.கல்யாணசுந்தரம் எடுத்த
எனது படம் கீழே!
ஒன்பது, பத்து, மற்றும் பதினொன்றாம்(S.S.L.C)
வகுப்புகளை(1957 – 60)விருத்தாசலத்தில் என்
அண்ணன் திரு சபாநாயகம் அவர்களோடு
தங்கி படித்தேன்.

தமிழ் பாடத்தில் ஆர்வம் வந்தும்,கிருஷ்ணன்,
துரைராஜ், பழமலை, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி,
ராஜாமணி, பார்த்தசாரதி,சிகாமணி,
இராஜசேகரன் ராஸ்,மற்றும் சுப்பிரமணியன்
ஆகியோரை நண்பர்களாக பெற்றதும், ஓரங்க
நாடகத்தில் நடித்ததும், ‘நதி’ என்ற
கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதும்,
‘கணையாழி’ ‘சரஸ்வதி’‘எழுத்து’
இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததும்
திரு சுந்தர ராமசாமி திரு ஜெயகாந்தன்
திரு.புதுமைப்பித்தன், திரு.வல்லிக்கண்ணன்
திரு.ஜானகிராமன், திரு.தி.ஜ.ர
ஆகியோரது
எழுத்து அறிமுகம் ஆனதும், கதை எழுதும்
ஆசையில் கல்கி நடத்திய போட்டியில்
கலந்துகொண்டதும் (வெற்றி பெறாததும்!)
கணிதத்தில் சுமாரான மதிப்பெண்கள் பெற்று
பின் தங்கி இருந்த நான் என் அண்ணன் கொடுத்த
பயிற்சியின் காரணமாக S.S.L.C வகுப்பில்
முதல் இடத்திலும், மாவட்டத்தில் இரண்டாம்
இடத்தில் வந்ததும் விருத்தாசலத்தில்
படித்த போதுதான்.

பள்ளிகளில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை
திரும்பவும் என்னை ‘அசை’ போட வைத்த
நண்பர் கணேஷ் அவர்களுக்கு மீண்டும்
எனது நன்றிகள்!

இந்த தொடரைத் தொடர

1. திரு சென்னை பித்தன்
2. திரு க.வாசுதேவன்

ஆகியோரை அழைக்கிறேன்.

இவர்கள் முன்பே தங்கள் பள்ளிப்பருவம்
பற்றி எழுதி இருந்தாலும் எழுதாமல் விட்ட
நிகழ்வுகளை திரும்பிப்பார்க்க வேண்டுகிறேன்.