திங்கள், 19 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 13

திருவிழாவில் தொலைந்த குழந்தைகள் அங்குள்ள
வரவேற்பு அறையில் பெற்றோர்கள் வருகைக்காக
காத்திருக்குமே,அதுபோல் தார்வார் பேருந்து நிலைய
கண்காணிப்பாளர் அறையில்,சப்தாப்பூர் செல்லும்
பேருந்தின் ஓட்டுனர் வருகைக்காக காத்திருந்தேன்.

சில மணித் துளிகளுக்குப் பிறகு,அங்கு
கையொப்பமிட வந்த ஒரு ஓட்டுனரிடம் அந்த
கண்காணிப்பாளர் என்னைப்பற்றி சொல்லிவிட்டு,
என்னிடம்,‘இவர் ஒட்டி செல்லும் பேருந்து நீங்கள்
செல்லும் இடம் வழியாக செல்லும்.இவரிடம்
சொல்லியிருக்கிறேன்.இவர் நீங்கள் அந்த
நிறுத்தத்தில் இறங்க உதவுவார்.’என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த
ஓட்டுனரைப் பின் தொடர்ந்தேன்.அவர் பேருந்தில்
ஏறியதும்,என்னிடம் முதலில் கன்னடத்திலும்
பின் இந்தியிலும் ஏதோ சொன்னார்.நான்
அவரிடமும் ஆங்கிலத்தில் எனக்கு கன்னடமும்,
இந்தியும் தெரியாது என்றதும்,அவர் சைகை மூலம்
அவருக்கு அருகில் உள்ள இருக்கையில்
அமரச் சொன்னார்.

(தார்வார் மாவட்டத்தில் உள்ள அனைவரும்
கன்னடத்திற்கு பிறகு இந்தியில் சரளமாக பேசுவதற்கு
காரணம் ஒன்று உண்டு.இப்போதைய கர்நாடக
மாநிலத்தில் உள்ள அநேக மாவட்டங்கள் இந்தியா
சுதந்திரம் அடைந்தபோது வெவ்வேறு மாநிலத்தோடு
இருந்தன.

மாநில சீரமைப்புக்கு(States Reorganisation)முன்பு
அதாவது 1956 க்கு முன்பு,தார்வார் மாவட்டம்
ஒருங்கிணைந்த பம்பாய் மாநிலத்தோடு இருந்தது.
நிர்வாகத் தலைநகர் பம்பாயாக இருந்ததால்
இங்குள்ளவர்கள் அங்கு அடிக்கடி சென்று வந்ததால்
இவர்களுக்கு இந்தி இரண்டாவது மொழியாகிவிட்டது.

இது மட்டுமல்ல, கார்வாரைத் தலைநகராகக்
கொண்ட வட கன்னடம்(North Kanara),பெல்காம்,
பிஜப்பூர் மாவட்டங்களும் பம்பாய்
மாநிலத்தோடுதான் இருந்தன.

பீதார்(Bidar),குல்பர்கா, ரெய்ச்சூர் மாவட்டங்கள்,
ஹைதராபாத் நிஜாம் ஆளுகையின் கீழும்,
பெல்லாரி,மங்களூரைத் தலைநகராகக் கொண்ட
தென் கன்னடம்(South Kanara) மாவட்டங்கள்,
சென்னை இராஜதானியிலும்(Madras Presidency),
மைசூர், மாண்டியா,பெங்களூர்,தும்கூர், ஹாசன்,
சிமோகா,சிக்மகளூர்,சித்ரதுர்கா,கோலார்
உள்ளடக்கிய தென் மாவட்டங்கள் மைசூர்
மகாராஜாவின் ஆளுகையின் கீழும்,
குடகு(Coorg)யூனியன் பிரதேசமாகவும் இருந்தன.

மொழிவாரி மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற
அரசின் கொள்கைப்படி,கன்னடம் பேசுகின்ற இந்த
மாவட்டங்களையெல்லாம் ஒன்றிணைத்து 1956 ல்
மைசூர் மாநிலம் (Mysore State) என்ற புதிய மாநிலம்
உருவானது.ஆனால் 1973 ல் இந்த மாநிலத்தின்
பெயர் கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதனால் தான் இன்றும், இந்த மாநிலத்தில் குறிப்பாக
பெங்களூரில் உள்ள மக்கள் அநேக மொழிகளை
தெரிந்திருக்கின்றார்கள்.)

நடத்துனர் வந்ததும்,ஓட்டுனர் அவரிடம் கன்னடத்தில்
நான் இறங்கும் இடமான ஹலியால் ரோடுக்கு
ஒரு சீட்டு கொடுக்க சொன்னார்.நான் உட்கார்ந்த
சிறிது நேரத்தில் பேருந்தில் நிறைய மாணவர்கள்
ஏறினார்கள்.

அந்த பேருந்து, சோட்டா மஹாபலேஷ்வர்
(Chota Mahabaleshwar)என்ற குன்றில் இருந்த கர்நாடக
பல்கலைக்கழகம் வரை செல்லுமாம்.அது கல்லூரி
நேரம் என்பதால் மாணவர் கூட்டம் அதிகம் இருந்தது.

பேருந்து மெல்ல நகர்ந்து, தார்வார் நகரின் மையப்
பகுதியைக் கடந்து புற நகர் பகுதியை அடைந்தது.
ஒரு குறிப்பிட்ட சாலை சந்திப்பில்,ஓட்டுனர் பேருந்தை
நிறுத்திவிட்டு சிறிது தூரத்தில் உள்ள மேடான பகுதில்
உள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டி,கன்னடத்தில் ஏதோ
சொன்னார்.‘ஹளுதி கலர்’ என்று அடிக்கடி சொன்னார்,
எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் விழிப்பதைப் பார்த்து,அவர் என்னைப் பார்த்து
‘சொல்ப தடிரி. நானு ஹெல்ப் மாடுத்தேன்றி’ என்றார்.
(கொஞ்சம் பொறுங்கள். நான் உதவி செய்கிறேன் என்று
பொருள்)

பிறகு கீழே இறங்கி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு
இருந்தார் யாராவது வந்தால் என்னை அவர்களிடம்
ஒப்படைக்கலாமென்று! அதற்குள் வகுப்புக்கு செல்ல
நேரம் ஆகிவிட்டதென்று பேருந்தில் இருந்த
மாணவர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களிடம் அவர் என்னைக் காட்டி ஏதோ
சொன்னதும் அவர்களும் அமைதியாகிவிட்டனர்.
நல்ல வேளையாக அப்போது அங்கே அரசுப்
பேருந்துவின் Checking Inspector ஒருவர் வந்தார்.
அவரிடம் என்னைப்பற்றி சொன்னதும் அவர்
என்னிடம் ஆங்கிலத்தில் ‘கீழே இறங்கி வாருங்கள்.
நான் வழி காட்டுகிறேன்.’என்றார்.

அவரிடம் ஓட்டுனர் எனது மொழிப் பிரச்சினையை
சொல்லியிருப்பார் போலும்.அதனால்தான்
ஆங்கிலத்தில் பேசினார் என நினைக்கிறேன்.

நான் அந்த ஓட்டுனருக்கு பலமுறை நன்றி
சொல்லி விடை பெற்றபோது,சிரித்துக்கொண்டே
அவர் சொன்னார்,‘கன்னடா கலிபேக்கரி சாயபுரே’.
என்று.

(அதற்கு பொருள் ‘கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள்
சார்.’ என்று பின்பு தெரிந்துகொண்டேன்.)

நான் அந்த பேருந்து ஆய்வாளரைப் பின் தொடர்ந்தேன்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. மொழி அறியாமால் தாங்கள் தவித்த விதம் கண் முன் காட்சி ஆனது .
    மனித நேயம் இருக்கத்தான் செய்கிறது .

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. எப்படியோ,பலர் உங்களுக்கு உதவியி ருக்கிறார்கள்!சுவாரஸ்யமாகப் போகிறது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. அப்பப்பா! ஓஓஓஓ!!!! மொழி தெரியாது படும் பாடு...நாமும் அனுபவப்பட்டோமே! நாடுவிட்டு நாடு வந்து...வாழ்த்துகள். இன்று தான் கணனி பக்கம் வந்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு