வியாழன், 22 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 14

சிறிது தூரம் சென்றதும் அந்த ஆய்வாளர் கேட்டார்.
‘நீங்கள் காலை டிஃபன் சாப்பிட்டீர்களா?’ என்று.
நான் ‘இல்லை’என்றதும் அருகில் இருந்த ஒரு
உணவகத்தைக் காட்டி,‘வாருங்கள் இந்த உணவகத்திற்கு
போவோம்.நீங்கள் சாப்பிட்டு முடித்ததும்,உங்களை
நீங்கள் சேரும் இடத்தில் விட்டு விட்டு திரும்புகிறேன்.
ஏனெனில் இதை விட்டால்,வழியில் வேறு உணவகம்
கிடையாது.'என்றார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு,‘என்னால்
உங்களுக்கு சிரமம்.உங்கள் வேலையை விட்டுவிட்டு
வந்திருக்கிறீர்கள்.’என்றதும்,‘இதிலென்ன சிரமம்.
நீங்கள் ஊருக்குப் புதியவர்.எங்கள் விருந்தாளி
போன்றவர்.உங்களுக்கு உதவுவது எனது கடமை.’
என்றார்.எனக்கு என்ன சொல்வதென்றே
தெரியவில்லை.

அவருடன் சென்று அருகில் இருந்த உணவகத்தில்
டிஃபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன்.அவரோடு
நடக்கையில்,அந்த ஓட்டுனர் ‘ஹளுதி கலர்’ என்று
சொன்னதை சொல்லி அதற்கு பொருள் என்ன
என்று கேட்டேன்.

அதற்கு அவர் ஹளுதி என்றால் மஞ்சள் என்றும்,
எனது அலுவலகம் மஞ்சள் நிற கட்டிடத்தில்
இருப்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்றார்.

சிறிது தூரத்தில் வந்த ஒருவரைப் பார்த்து,அவரிடம்
பேசிவிட்டு என்னிடம் சொன்னார்.‘இவர் பெயர்
மானே.எனது வீட்டருகே இருக்கிறார். இவர் உங்கள்
அலுவலகத்தில்தான் உதவியாளராக வேலை
பார்க்கிறார்.இவரிடம் உங்களைப் பற்றி சொன்னேன்.
இவர் இனி உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்திற்கு
அழைத்து செல்வார்.’என்றார். நான் அவருக்கு
நன்றி சொல்லிவிட்டு திரு மானே வுடன் நடந்தேன்.

அவரும் ஹிந்தியில் பேசி எனக்குப் புரியாததால்
அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.
அவரோடு பேசிக்கொண்டு நடந்தபோது அவருடைய
பெயர் S.R.மானே என்றும்,தேசிய விதைக் கழகத்தில்
கடைநிலை ஊழியராக பணி புரிகிறார் என்றும்,
தற்போது அந்த அலுவலகத்தில் பொறுப்பாளராக
இருக்கும் அலுவலர் திரு V.S.Khare என்பவர்
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும்
அறிந்துகொண்டேன்.

ஒருவழியாக திரு மானே வழி காட்ட,நான் பணியில்
சேர இருந்த அலுவலகத்தை அடைந்தேன்.அலுவலகம்
அடைந்ததும் திரு மானே அங்கிருந்த திரு பாட்டீல்
என்ற எழுத்தரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
நல்ல வேளையாக திரு பாட்டீல் ஆங்கிலத்திலேயே
உரையாடி,என்னை வரவேற்று திரு காரே அவர்கள்
வரும் நேரம் வரை அவரது அறையில் அமரச்சொன்னர்.
அங்கு சென்று திரு காரே யை எதிர்பார்த்து
அமர்ந்து இருந்தேன்.

திரு காரே அவர்களது அறையில் அமர்ந்திருந்தபோது
நினைத்துப்பார்த்தேன்.நான் சந்தித்த அனைவருமே,
முன்னேற்பாடாக ஏதோசொல்லிவைத்தது போல்
எனக்கு உதவியிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில்
ஏதோ அது ஒரு கனவுபோல் இருந்தது.

ஹூப்ளி சந்திப்பில் முன்பின் தெரியாத,என்னை
முதல் நாள் இரவு சௌகரியமாக தங்க வைத்து,
மறுநாள் காலையில் தார்வார் சென்றதும்,பணியில்
சேருமிடம் செல்ல வழி காண்பிப்பதற்கும் உதவ,
திரு சுப்ரமணியம் அவர்களை கேட்டுக்கொண்ட
திரு சோமசுந்தரம் அவர்களும்,தார்வார் இரயில்
நிலையத்தில் பேருந்து நிலையம் செல்ல உதவிய
திரு சுப்ரமணியம் அவர்களும்,பேருந்து நிலையம்
செல்ல உதவிய அந்த நடத்துனரும், ஓட்டுனரும்,
அங்கு நான் சரியான பேருந்தில் பயணிக்க உதவி
செய்த தார்வார் பேருந்து நிலைய கண்காணிப்பாளரும்,
எனக்காக ஹலியால் சாலை சந்திப்பில் பேருந்தை
நிறுத்தி என்னை அக்கறையோடு Checking
இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த அந்த நகரப்பேருந்து
ஓட்டுனரும்,என்னை எங்கள் அலுவலகத்தில் விட்டு
செல்ல தனது பணியை விட்டு வந்த அந்த
ஆய்வாளரும், கேட்காமலே உதவி செய்தார்களே.
அப்படி அவர்களை உதவி செய்ய வைத்தது எது?
எனது அதிர்ஷ்டமா? அல்லது பல பேர்களுடைய
உயிரைக் காப்பாற்றிய என் அப்பாவின் நற்செயலா?
அல்லது அந்த நல்ல மனிதர்களின் உதவி செய்யும்
பிறவிக் குணமா? எனக்கு அது புரியாத புதிராகவே
இருந்தது.

ஹைதராபாத் பயணத்தின் போது ஏற்பட்ட ஒரு
நிகழ்வை வைத்து அனைவரையும் எடைப்
போடக்கூடாது, எல்லோரும் நல்லவர்கள் தான்
அவர்கள் எங்கும் இருக்கிறார்கள் என
நினைத்துக்கொண்டேன்.

(எனது தார்வார் மற்றும் கதக் அனுபவம் பற்றி
விரிவாக ‘நினைவோட்டம்’ தொடரில் எழுதுவேன்.)

இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த அந்த
நல்ல மனிதர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள்
‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என வாழ்த்துகிறேன்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்போது நான் பணியில்
சேர இருக்கின்ற அலுவலகத்தின் முகவரியைக்கூட
அப்பாவிடம் கொடுத்து வரவில்லை.எனது
அலுவலகத்தின் தொலைபேசி எண்ணும் அவர்களுக்கு
தெரியாது.எங்கள் ஊரிலும் தொலைபேசிவசதி அப்போது
இல்லை. ஏதேனும் அவசரம் என்றால் கூட என்னைத்
தொடர்பு கொள்ளமுடியாது. நான் பணியில் சேர்ந்து
கடிதம் போட்டு முகவரி தெரிவிக்கும் வரை அவர்கள்
நான் சௌகரியமாகப் போய் சேர்ந்தேனா என்று
கூடத்தெரியாது.

ஆனாலும் எப்படி தார்வார் செல்லப்போகிறேன்,
எங்கு தங்கப் போகிறேன், என்றெல்லாம் நினைத்துக்கூட
பார்க்காமல் தைரியமாக விடை கொடுத்து அனுப்பியது
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.
(நான் பணியில் சேர்ந்தபின் ஊருக்கு கடிதம் எழுதியது
6 நாட்களுக்குப் பின் தான் அவர்களுக்கு
கிடைத்திருக்கிறது.அதுவரை எல்லாம் நல்லபடியாக
நடக்கும் என்ற நம்பிக்கையோடு என் அப்பா அம்மா
இருந்திருக்கிறார்கள்.)

ஆனால் இன்றோ என் மகன் ஊருக்கு கிளம்பி
2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமங்கலம்
தாண்டுவதற்குள்ளேயே நான் கைப்பேசிமூலம்
தொடர்புகொண்டு எங்கு இருக்கிறாய் எனக் கேட்டுக்
கொண்டு இருக்கிறேன்! இந்த தொழில் நுட்ப வளர்ச்சி
நல்லது என்றாலும் கூட, ஒவ்வொன்றிற்கும் நாம்
தொழில் நுட்பத்தை முழுதும் சார்ந்திருக்கின்ற நிலை
வந்துவிட்டதால், தன்னம்பிக்கை குறைந்து விடுமோ
என்ற அச்சம் எனக்கு எழுகிறது.

கடைசியாக முடிக்கு முன்பு – தார்வார் போய் மூன்று
மாதங்களுக்குப் பிறகு நான் முதன் முதல் எனது
அலுவலகம் சென்றபோது, உதவி செய்த ஓட்டுனரை
ஒருநாள் பேருந்தில் பார்த்தேன்.அவரிடம் போய்
எனக்குத் தெரிந்த கன்னடத்தில், ‘நமஸ்கார்ரி.
யாக இதீரே? சௌக்கியதல்லிதீரா?என்றேன்.
(வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே?
என்று பொருள்.சௌக்கியதல்லிதீரா?என்பதை
தென் மாவட்டங்களில் சன்னாகீதீரா?என்பார்கள்.)

நான் கன்னடத்தில் பேசுவேன் என்பதை எதிர்பாராத
அவர் உடனே எழுந்து என் கையைப் பிடித்துக்கொண்டு,
‘நானு ஹேளித பிரகாரா கன்னடா கலிதுபிட்டீரல்ல
சாயபுரே. பகள சந்தோஷ.’ என்றார். (‘நான் சொன்னபடி
கன்னடம் கற்றுக்கொண்டீர்களே சார்.மிகவும் மகிழ்ச்சி.’
என்று பொருள்)

அந்த பாராட்டைக் கேட்டபோது ஏற்பட்ட
சந்தோஷத்தை இப்போது என்னால் எழுத்தில்
கொண்டுவரமுடியவில்லை என்பதே உண்மை.

13 கருத்துகள்:

 1. நீங்கள் நிறைய புண்ணியமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் செய்தவராக இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் பலரும் உதவி இருக்கிறார்கள். கடைசியில் நீங்கள் சொன்னது மிகச் சரியே. அந்த மகிழ்வை வார்த்தைகள் சரியாகப் பிரதிபலிக்காதுதான். அருமை.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  திரு கணேஷ் அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. அனைவரும் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்றால் அதைப் பூர்வ புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

  பதிலளிநீக்கு
 5. //நான் சந்தித்த அனைவருமே,
  முன்னேற்பாடாக ஏதோசொல்லிவைத்தது போல்
  எனக்கு உதவியிருக்கிறார்கள் //

  Dear Sir
  In my belief, all the happenings are predestined. One cannot be proud or embarrassed of anything. If one happened to be clever and have a decent life, it is just his luck. “Voozh” , ” karma”, may not be true. But, at least this belief helps to maintain a peaceful society. Your experiences remind me, many of the incidents happened in my life. Thanks.
  Packirisamy N

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!நான் எனது பதிவில் ‘அப்படி அவர்களை உதவி செய்ய வைத்தது எது?எனது அதிர்ஷ்டமா? ‘என்றே குறிப்பிட்டுள்ளேன். தங்களுக்கும் என்னைப்போல் அனுபவம் ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள்.நீங்கள் என் அந்த அனுபவங்களை பதிவாக வெளியிடக்கூடாது? தாங்களும் என்னோடு பயணித்தது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 7. நீங்குள் கொடுத்து வைத்தவர் இறையருள் கிடைத்துள்ளது. எல்லோருக்கும் இப்படி வாய்க்கும் என்பது திடமில்லை. நல்லது. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. பழகியவர்களே உதவ மறுக்கும் உலகில் உங்களுக்கு உதவியவர்களை பார்க்கும் போது உங்கள் அதிஷ்டம் என்றே சொல்லவேண்டும் .

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. //நீங்கள் என் அந்த அனுபவங்களை பதிவாக வெளியிடக்கூடாது? //

  Yes Sir. I do have plans to write, but not my experiences. I am planning to translate a few books to Tamil. Hope, it will materialise.
  Thanks.

  Packirisamy N

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் சில நூல்களை தமிழாக்கம் செய்ய இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி திரு பக்கிரிசாமி அவர்களே!. அவைகளைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு