திங்கள், 12 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 11

நான் பேசாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து,
‘என்ன யோசனை?’ என்றார் திரு சோமசுந்தரம்.
நான் மகிழ்ச்சியோடு கூடிய திகைப்பில்
ஆழ்ந்திருக்கிறேன் என்பதை சொல்லாமல்,
‘ஒன்றுமில்லை.’என்றதும்,‘மதியம்
சாப்பிட்டீர்களா,இல்லையா?ஏன் கேட்கிறேன்
என்றால், நீங்கள் வந்தது பாசஞ்சர் வண்டி
என்பதால் அதில் உணவு வழங்கும்
பெட்டி இருக்காது.அதனால் தான் என்றார்.

நான் மதியம் சாப்பிடாது,மாலை ‘கதக்’கில் பன்னும்
தேநீரும் மட்டும் சாப்பிட்டதை சொன்னேன்.உடனே
அவர்,இந்த ஜங்க்ஷனுக்கு நேர் எதிரே ஹோட்டல்
துவாரகா என்ற பெயரில் ஒரு ஹோட்டல் உள்ளது.
அங்கு சென்றால் இட்லி, தோசை கிடைக்கும்.
ஏன் உப்புமாவும் கூட கிடைக்கும். ஆனால்
அதை இங்கு உப்பீட்டு என்பார்கள்.’ என்றார்.

(உப்பீட்டு- நான் தெரிந்துக்கொண்ட இரண்டாவது
கன்னட சொல். கன்னடத்தில் மாவுக்கு ஹிட்டு
எனப்பெயர்.உப்பு+ஹிட்டு = உப்பீட்டு என ஆயிற்று
என பின்னால் தெரிந்துகொண்டேன்.)

அவர் சாப்பிட்டீர்களா எனக் கேட்டதும் தான்,நான்
மதியம் சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வந்தது.
உடனே பசியும் வயிற்றைக் கிள்ளியது.சரி என
சொல்லிவிட்டு எனது கைப் பையை அவரது அறையில்
வைத்துவிட்டு வெளியே போய் அந்த ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டு திரும்பினேன்.

திரும்பியதும் அவர் எனது ஊரைப் பற்றியும்,
எனது படிப்பு மற்றும் நான் சேர இருக்கின்ற
நிறுவனம் பற்றியும் கேட்டார்.ஆனால் ஏனோ
தயக்கத்தால் அவரைப்பற்றிய விவரங்களைக்
கேட்கவில்லை.

பிறகு அவர் ‘நீங்கள் ஒரு இரவு, ஒரு பகல்
இரயிலில் வந்ததால் களைப்பாய் இருப்பீர்கள்.
நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் முதல் வகுப்பு
பயணிகள் தங்கும் அறையில் தூங்கலாம் யாரும்
தொந்தரவு செய்யமாட்டார்கள்.’ என்றார்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு முதல் வகுப்பு
பயணிகள் தங்கும் அறைக்கு சென்று அங்கிருந்த
‘சோபா’ ஒன்றில் என்னைப் படுத்து உறங்கச் சொன்னார்.
அங்கிருந்த ஒரு போர்ட்டரை அழைத்து,நான் அவரது
விருந்தாளி என்றும் என்னை எழுப்பித் தொந்தரவு
செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவரது
அறைக்கு சென்றுவிட்டார்.

(வழக்கமாக முதல் வகுப்பு பயணச்சீட்டு உள்ளவர்கள்
மட்டும் தான் அந்த தங்குமிடத்தில் வண்டி வரும்
வரை தங்க அனுமதிப்பார்கள். நானோ மூன்றாம்
வகுப்புப் பயணி.அதுவும் அப்போது என்னிடம்
மேற்கொண்டு பயணிக்க பயணச்சீட்டும் இல்லை.
அவர் மட்டும் சொல்லாமலிருந்தால், அங்கு
நான் தூங்கி(தங்கி)யே இருக்கமுடியாது)

முதல் நாள் இரவு முழுதும் சரியாகத் தூங்காமல்
‘கோழித்தூக்கம்’ போட்டிருந்ததால், படுத்ததும்
அசதியில் உடனே தூங்கிவிட்டேன்.

திடீரென யாரோ எழுப்பதுபோல் உணர்ந்து கண்ணைத்
திறந்து பார்த்தபோது,திரு சோமசுந்தரம் அவர்கள்
என் அருகே நின்றிருந்தார்.என்னிடம் ‘எழுந்திருங்கள்.
மணி 5 ஆகிறது. நீங்கள் பல் துலக்கி குளித்து பயணிக்க
தயாராக வேண்டுமல்லவா? அதனால்தான்
எழுப்பினேன்.’ என்றார்.

எழுந்து காலைக்கடன் முடித்து, பல்துலக்கியதும்,
அவர் என்னிடம் ‘நேற்று நீங்கள் சாப்பிட்ட
ஹோட்டலுக்கு பக்கத்தில் உள்ள லாட்ஜில் 30 பைசா
கொடுத்தால் குளிக்க அனுமதிப்பார்கள்.அங்கு போய்
'பிஸி நீரு’ என்று மட்டும் சொல்லுங்கள்.ஒரு வாளி
‘சுடச்சுட’ வெந்நீர் கொடுப்பார்கள். போய் குளித்து
வாருங்கள்.’ என்றார்.

அவர் சொன்னபடியே வெளியே சென்று அந்த லாட்ஜில்
நான் புதிதாக கற்றுக்கொண்ட அந்த மூன்றாவது
கன்னட சொல்லான ‘பிஸி நீரு’ என்பதை சொல்லி
30 பைசா கொடுத்து, குளித்து திரும்பினேன்.

திரும்பி வந்து அவர் அறையிலேயே எனது உடையை
மாற்றிக்கொண்டதும், உடனே எனக்கு சூடாக காஃபி
வரவழைத்துக் கொடுத்து, ‘தார்வாருக்கு செல்லும் முதல்
இரயில் 7 மணிக்கு இருக்கிறது.இந்தாருங்கள் உங்கள்
பயண சீட்டு.’என்று எனது பயண சீட்டையும் கொடுத்தார்.

நான் அவருக்கு பல முறை நன்றி சொல்லி கிளம்ப
எத்தனித்தபோது, ‘இருங்கள்.நான் வந்து உங்களை
வண்டியில் ஏற்றி வழி அனுப்புகிறேன்.’ என்று கூறிவிட்டு,
வெளியே சென்று அவரது நண்பர் ஒருவரை
‘கௌண்டரை’ பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு
என்னுடன் வந்தார்.

அங்கு நடைமேடையில் (பிளாட்ஃபாரத்தில்)
நின்றுகொண்டிருந்த பாசஞ்சர் வண்டியில் என்னை
உட்கார சொல்லிவிட்டு,‘இருங்கள். இதோ வருகிறேன்.
எனக் கூறி சென்றவர்,சிறிது நேரத்தில் இன்னொரு
நண்பரோடு வந்தார்.

என்னிடம்,'இவர் என் நண்பர். பெயர் சுப்ரமணியம்.
பெங்களூர்க்காரர். இவரும் இரயில்வே ஊழியர்தான்.
இவரும் பணிக்காக தார்வாருக்குத்தான் செல்கிறார்.
உங்களுக்கு உதவ இவரும் உங்கள் பெட்டியில்
பயணம் செய்வார்.தார்வார் சென்றதும் உங்களை
ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து சென்று, நீங்கள்
செல்ல வேண்டிய இடம் செல்ல உதவுவார்.’ என்றார்.

அவர் செய்த எதிர்பாராத உதவியால், திகைத்து
நின்றதால், சில மணித்துணிகள் எனக்கு என்ன
சொல்வது என்றே தெரியவில்லை. அவருக்கு
திரும்பவும் நன்றி சொல்ல முற்பட்டபோது,
அவர்,‘அதெல்லாம் ஒன்றும் நீங்கள்
சொல்லவேண்டாம்.நம் ஊர்க்காரராகிய உங்களுக்கு
நான் இதுகூட செய்யாவிட்டால் எப்படி. நீங்கள்
நல்லபடியாக போய் பணியில் சேருங்கள்.
போய் வாருங்கள்.’என்றார்.

இரயில் நகரத் தொடங்கியதும் பார்வையிலிருந்து
மறையும் வரை அவருக்கு கை அசைத்துக்கொண்டு
இருந்துவிட்டு வந்து திரு சுப்ரமணியம் அவர்கள்
அருகில் இருக்கையில் அமர்ந்தேன்.


தொடரும்

8 கருத்துகள்:

  1. மறக்க முடியாத மனிதர்தான் சோமசுந்தரம் அவர்கள்.ஒரு விவரம் விடாமல் அத்தனையும் நினவில் வைத்து எப்படித்தான் எழுதுகிறீர்களோ!அருமை

    பதிலளிநீக்கு
  2. இவரைப் போன்ற பிறருக்கு உதவும் நல்லவர்கள் சிலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்லோர் ஒருவர் உளரேல்... என்ற வாக்குத்தான் இதைப் படிக்குமபோது நினைவில் நிழலாடியது. நற்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உண்மைதான். திரு சோமசுந்தரம் அவர்களை என்னால் மறக்க இயலாது.அதனால்தான் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பயணத்தில் என்னுடன் தொடர்வதற்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. ''..அவர் செய்த எதிர்பாராத உதவியால், திகைத்து
    நின்றதால், சில மணித்துணிகள் எனக்கு என்ன
    சொல்வது என்றே தெரியவில்லை...''
    எவ்வளவு நல்ல மனிதர். நீங்கள் அதிஷ்ட சாலி. வாழட்டும் இப்படியானவர்கள்.(இப்போதெல்லாம் உலகம் மாறிவிட்டதல்லவா?) வாழ்த்துகள், தொடருங்கள் மிக நன்று உங்கள் விவரங்கள். இனி புதன் தான் வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு