வியாழன், 15 மார்ச், 2012

எல்லோரும் நல்லவரே 12

இருக்கையில் அமர்ந்ததும்,திரு சுப்ரமணியம் அவர்கள்
தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.தான்
பெங்களூர்வாசி என்றும்,தாய்மொழி கன்னடமானாலும்
தமிழும் தெரியும் என்றார்.என்னைப்பற்றி
விசாரித்துவிட்டு,‘தார்வாரில் எந்த இடத்திற்கு
செல்லவேண்டும்?’ என்று கேட்டார்.

நான் தார்வாரில், சப்தாப்பூர் (Saptapur) என்ற
இடத்தில் ஹலியால் ரோடில் (Haliyal Road) இருக்கும்
தேசிய விதைக் கழகத்திற்கு (National Seeds
Corporation Ltd.,) செல்லவேண்டும் என்றேன்.

அதற்கு அவர், ‘கவலை வேண்டாம். தார்வார்,
மாவட்ட தலைநகர் என்றாலும் அவ்வளவு பெரிய ஊர்
அல்ல. நீங்கள் சேரவேண்டிய இடத்திற்கு செல்ல நான்
உதவுகிறேன். ஊரும் அமைதியான ஊர். இங்குள்ள
மக்களும் மிக நல்லவர்கள். நிச்சயம் இந்த இடம்
உங்களுக்கு பிடித்துவிடும் ஒரு தடவை இங்கு வேலை
பார்த்துவிட்டால் வேறு இடத்திற்கு செல்ல
மனது வராது.என்றார்.

(அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை
என்பதைப் பின்னால் தெரிந்துகொண்டேன்.)

பின் அவரிடம் பொதுவாக பேசிக்கொண்டே வெளியே
பார்த்துக்கொண்டு இருந்தேன்.தார்வாருக்கும்
ஹுப்ளிக்கும் இடையே தூரம் 20 கிலோ மீட்டர்
தான்.அவை இரண்டும் ஹைதராபாத்-செகந்திராபாத்
போல இரட்டை நகரங்கள்.இரண்டும் சேர்ந்து ஒரு
நகரசபையின் (Hubli-Dharwar Municipal
Corporation)
கீழ் இருந்தன அப்போது.
(இப்போது எப்படியோ?)

நான் பயணம் செய்தது பாசஞ்சர் இரயில் என்பதால்
இடையில் உள்ள எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று
தார்வார் சென்றடைய ஒரு மணி நேரத்திற்கு மேல்
ஆகிவிட்டது.தார்வார் சென்றதும், திரு சுப்ரமணியம்
அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வெளியே
வந்தார்.

அங்கு நின்றுகொண்டு இருந்த ஒரு நகரப்பேருந்து
(Town Bus) வின் நடத்துனரிடம் சென்று ஏதோ
விசாரித்துவிட்டு வந்து என்னிடம்,‘இங்கிருந்து நீங்கள்
செல்லும் இடத்திற்கு நேரடி பேருந்து இல்லையாம்.
இந்த பேருந்தில் ஏறி,மையப் பேருந்து நிலையம்
சென்றால் அங்கிருந்து நிறைய பேருந்துகள் உண்டாம்.
வாருங்கள்.நான் இந்த நடத்துனரிடம்,உங்களை
மையப் பேருந்து நிலையத்தில்,சப்தாப்பூர் செல்லும்
பேருந்தில் ஏற்றிவிட சொல்கிறேன்.’என்றார்.

நானும் சரியென்று அவருடன் சென்றேன்.என்னைக்
காட்டி அவர் கன்னடத்தில் ஏதோ சொன்னார்.அந்த
நடத்துனரும் தலையை ஆட்டினார்.(நான் ஊருக்கு
புதியவன் என்பதையும்,மையப்பேருந்து நிலையம்
சென்றதும் என்னை சப்தாப்பூர் பேருந்தில் ஏறி
செல்ல உதவும்படியும் சொல்லியிருப்பார்
என்பதைப் புரிந்துகொண்டேன்.)

என்னிடம் திரு சுப்ரமணியம்,‘இந்த நடத்துனர்
உங்களுக்கு உதவுவார்.கவலைவேண்டாம் நான்
வரட்டுமா?’ எனக்கூறி விடை பெற்றுக்கொண்டார்.

நான் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அந்த நடத்துனர்
வந்து ஏதோ இந்தியில் சொன்னார்.எனக்கு கன்னடம்
தெரியாது என்பதால் இந்தியில் பேசினால்
புரிந்துகொள்வேன் என நினைத்து பேசினார் போலும்.

எனக்குத்தான் அதுவும் தெரியாதே!நான் உடனே
ஆங்கிலத்தில் எனக்கு இந்தி தெரியாது என்றேன்.
உடனே அவர் ‘ஓ.கே ஓ.கே’ என சொல்லிவிட்டு
என்னை அழைத்துக்கொண்டு,போய் ஓட்டுனர்
அருகே உள்ள இருக்கையில் அமரவைத்து கையில்
10 பைசாவுக்கான பயணசீட்டைக்கொடுத்தார். நான்
அந்த தொகையைக் கொடுத்ததும்,அவர் ஓட்டுனரிடம்
என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு மற்ற
பயணிகளுக்கு சீட்டு கொடுக்க சென்றுவிட்டார்.

நான் பயணித்த பேருந்து மையப் பேருந்து நிலையம்
சென்றதும் அந்த ஓட்டுனர் இறங்கும்போது என்னைப்
பார்த்து ‘பர்ரி பர்ரி’ என்று சொல்லிவிட்டு
இறங்கினார்.அவரது சைகையைப் பார்த்து அவர்
தன்னுடன் வரச்சொல்கிறார் எனப் புரிந்துகொண்டு
அவரைப் பின் தொடர்ந்தேன்.

(பின்பு கன்னடம் பேசக் கற்றுக்கொண்டபோது,
’பா’ என்றால் வா என்றும் ‘பர்ரி’ என்றால்
வாருங்கள் எனப்பொருள் என்று தெரிந்து
கொண்டேன். ஆனால் பெங்களூர் மைசூர்
ஆகிய தென் மாவட்டங்களில் அதையே
‘பன்னி’என்பார்கள்.நம் தமிழகத்தில்
வட்டாரத்துக்கு வட்டாரம், பேச்சு வழக்கு
மாறுபடுவதுபோல,அங்கும் தார்வாரில்
பேசப்படும் கன்னடத்திற்கும் பெங்களூர்,
மைசூர்,உடுப்பி போன்ற இடங்களில்
பேசப்படும் கன்னடத்திற்கும் சிறிய
வேறுபாடு உண்டு.நான் இரண்டு பகுதிகளிலும்
பணி செய்ததால்,பிற்காலத்தில் இரண்டு
விதமாகவும் பேசக் கற்றுக்கொண்டேன்
என்பது தனிக் கதை.)

அந்த ஓட்டுனர் நேரே அங்கு இருந்த நேரக்
கட்டுப்பாட்டு அறைக்கு சென்றார்.அப்போது
மைசூர் மாநிலத்தில் (கர்நாடகாவில்) 90 சதம்
பேருந்துகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
மாநில பேருந்து கழகத்தால் இயக்கப்பட்டன.

பேருந்துகளின் Movement ஐ கண்காணிக்க,
ஒவ்வொரு ஊரிலும் இருந்த மாநில பேருந்து
கழகத்தின் நிலையத்தில் நேரக் கட்டுப்பாடு
அறையில் ஒரு கண்காணிப்பாளர் இருப்பார்.

ஒவ்வொரு ஓட்டுனரும் அந்த நிலையத்திற்குள்
நுழைந்ததும் நேரே கண்காணிப்பாளரிடம் சென்று
அங்குள்ள பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.
அதற்காக அங்கு சென்ற அந்த ஓட்டுனர்
கண்காணிப்பாளரிடம் என்னைக் காட்டி
கன்னடத்தில் ஏதோ சொன்னார்.

உடனே அந்த கண்காணிப்பாளர் எனக்கு கன்னடம்
தெரியாது என்பதை தெரிந்து கொண்டு, ஆங்கிலத்தில்
நான் எங்கிருந்து வருகிறேன் மற்றும் எங்கு போக
விரும்புகிறேன் என விசாரித்தார்.

நான் ‘சப்தாப்பூர் போகவேண்டும்.’ என்றதும்
‘உட்காருங்கள். நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து
வந்ததும், அந்த ஓட்டுனரிடம் சொல்லி உங்களை
அழைத்துச் செல்ல சொல்கிறேன்.’ என்றார்.

நான் சப்தாப்பூர் செல்லும் பேருந்துக்காக அவரது
அறையில் காத்திருந்தேன்.

தொடரும்

8 கருத்துகள்:

 1. பேருந்துக்காக நீங்கள் தங்களின் பயணம் பற்றி அறிய நாங்கள் .

  பதிலளிநீக்கு
 2. மொழி புரியாத ஊரில் சமாளித்த உங்கள் அனுபவங்கள் படிக்க படிக்க சுவை. பல நல்ல மனிதர்கள் உதவி இருக்கிறார்கள் என்பதைக் படிக்கையில் மகிழ்வு. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! மொழி தெரியாமல் கஷ்டப்பட்டதும், பல நல்ல உள்ளங்கள் உதவியதும் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் பேருந்துக்காகக் காத்திருக்கிறீர்கள்.நாங்கள் அதன்பின் என்ன நடந்தது என அறியக் காத்தி ருக்கிறோம்.பல நல்லவர்களை அன்புடன் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. மொழி புரியாத அவதியைக் கண்டோம். இனி அவர்கள் சரியாக உதவினார்கள் என்று அறிய ஆவல் தொடருங்கள் வாழ்த்துகள். (ஏதோ வசதியீனம் தங்கள் பக்கம் வர பிந்திவிட்டது. தாங்களும் வராமலே நின்று விட்டீர்களே..! ஆனால் இனி புதன் தான் வருவேன். சந்திப்பேன்.)
  வேதா.இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நல்லவர்களை நினைவு கூர்ந்துள்ளதாக கூறியுள்ளீர்கள். ‘நன்றி மறப்பது நன்றன்று’என்பதால் அவர்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!
  மின் தடை காரணமாக வலைப்பதிவில் முன்போல் உலா வர இயலவில்லை. இனி வருவேன்.

  பதிலளிநீக்கு