ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 21



கேரளாவில் இருந்த எங்கள் வங்கியின் கிளை ஒன்றில் 
முதன்மை மேலாளராக நான்கு ஆண்டுகள் 
பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடந்த நிகழ்வு 
சுவாரஸ்யமானது.

கேரளாவைப் பொறுத்தவரையில் அங்கு உள்ள
எல்லா வங்கிக் கிளைகளிலும் NRE Deposit எனப்படும்   
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வைத்துள்ள 
வைப்புத் தொகைகள் கணிசமாக இருக்கும்.

(1996-1997 ல் (அதாவது நான் பணிபுரிந்த சமயம்) 
கேரளாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பிய 
தொகை 9999.62 கோடி ரூபாய்கள் என்றும் அதில் 
வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டவை மட்டும் 2075 கோடி 
ரூபாய்கள் என்கிறது புள்ளிவிவரம். இப்போது 
இது பன் மடங்காயிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.)

ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த 
ஊருக்கு வரும் வெளிநாட்டில் பணிபுரிவோர் தாங்கள் 
சம்பாதித்து சேர்த்த பணத்தை வங்கிக் காசோலையாக 
கொண்டு வந்து வங்கிகளில் அதை வைப்புத்
தொகையாக வைப்பது வழக்கம்.

எனவே வங்கிகள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து 
ஜனவரி மாதம் வரை வெளி நாட்டு இந்தியர்களின் 
வருகையால் களை கட்டி இருக்கும். அந்த சமயம் 
முதிர்வு அடைந்த வைப்புத்தொகைகளை திரும்பவும் 
புதுப்பிப்பதும் புதிய வைப்புக்களை பெறுவதும் 
போன்ற பணிகளில் வங்கிகள் மும்முரமாக இருக்கும்.
   
அதே நேரத்தில் NRE வாடிக்கையாளர்களும் தாங்கள் 
கொண்டுவரும் காசோலைகளை மாற்றி அவர்கள் 
கணக்கு வைத்திருக்கும் கிளைகளிலேயே 
வைப்புத்தொகையாக வைப்பார்கள் எனவும் 
சொல்லமுடியாது. 

ஊரில் உள்ள அனைத்து வங்கிகளிலும் விசாரித்துவிட்டு, 
எந்த வங்கி அதிக நாணய மாற்று விகிதம் 
(Exchange Rate) தருகிறதோ அந்த வங்கியில்தான் 
அவைகளை Deposit செய்வார்கள்.இதை என் னுபவத்தில் 
நேரடியாகவே கண்டேன். 

ஒரு கிறிஸ்துமஸ் வாரத்தின் போது ஒரு நாள்  
NRE வாடிக்கையாளர் ஒருவர் தன் மனைவி மற்றும் 
இரு குழந்தைகளோடு வந்தார். நேரே எனது அறைக்கு 
வந்தவர் தன்னிடம் ரூபாய் 50 இலட்சத்திற்கான 
வெளி நாட்டு காசோலை இருப்பதாகவும், அன்றைய 
 Exchange Rate என்ன என்று தெரிந்தால் அதை 
எங்கள் வங்கியிலேயே வைப்பாக வைக்க 
விரும்புவதாகவும் சொன்னார்.

அப்போதெல்லாம் NRE வாடிக்கையாளர்களை கவர 
சந்தையில் இருக்கும்  Exchange Rate விட கொஞ்சம் 
அதிகம் தருவது எல்லா வங்கிகளும் கடைபிடிக்கின்ற 
நடமுறைதான். 

ஆனால் Finer Rate என சொல்லப்படுகின்ற அந்த 
சலுகையை கிளைகள் மட்டத்தில் தர முடியாது. 
வங்கியின் குறிப்பிட்ட இடங்களில் உள்ள Dealing Centre 
எனப்படும் அந்நிய செலாவணிகளை கையாளும் 
இடத்தில் Dealer கள் எனப்படும் அலுவலர்கள்தான் 
Quote செய்வார்கள்.

எனது கிளை பெங்களூருவில் இருந்த எங்கள் 
வங்கியின் அந்நிய செலாவணி மய்யத்துக்கு 
ஒதுக்கப்பட்டு இருந்ததால், உடனே  பெங்களூரு 
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் 
சொல்லி நல்ல Rate ஐ தருமாறு கேட்டேன்.

அதற்குள் வந்திருந்த வாடிக்கையாளருக்கும், அவர் 
குடும்பத்தாருக்கும் குளிர்பானங்கள் வரவழைத்துக் 
கொடுத்து அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். 
சிறிது நேரத்தில் பெங்களூருவிலிருந்து Rate  
சொன்னார்கள்.

அதை சொல்லிவிட்டு சார். நீங்கள் எவ்வளவு 
காலம் வைப்பு வைக்க இருக்கிறீர்கள் என்றேன். 
அதற்கு அவர் என்னிடம், கொஞ்சம் இருங்கள் இதோ 
வருகிறேன். என்று சொல்லிவிட்டு அவரது 
குடும்பத்தினரை எனது அறையிலேயே இருக்க 
சொல்லிவிட்டு வெளியே சென்றார். 
 
சிறிது நேரம் கழித்து வந்த அவர் சாரி சார். அருகில் 
உள்ள இன்னொரு நாட்டுடைமையாக்கப்பட்ட 
வங்கியில் உங்கள் Rate விட கூட தருகிறேன் 
என்கிறார்கள்.எனவே அங்கேயே வைப்புத் 
தொகையை வைக்க விரும்புகிறேன் எனக்
கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கு அதுதான் முதல் அனுபவம். வைப்பு கிடைக்கும் 
என நினைத்து முயற்சித்தது வீணாகிவிட்டதே 
என வருத்தப்பட்டு  சக அலுவலர்களிடம் 
சொன்னபோது அவர்கள், 'சார்.NRE வாடிக்கையாளர்கள் 
எல்லோரும் விவரமானவர்கள். நமது நிரந்தர 
வாடிக்கையாளரானாலும், நம்மிடம் Rate கேட்டு 
வாங்கிக்கொண்டு போய் அதை வேறொரு வங்கியில் 
சொல்லி அவர்களிடம் அதைவிட அதிக Rate வாங்குவது 
வழக்கமான ஒன்றுதான். கவலை வேண்டாம். என 
சொல்லி சமாதானப்படுத்தினார்கள். 

அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு அதிக 
இலாபம் கிடைக்கும் வங்கிகளில் முதலீடு செய்வதை 
நாம் குறை சொல்லமுடியாது என நான் 
நினைத்துக்கொண்டேன். 

ஆனால் எல்லா வாடிக்கையாளர்களும் அப்படி 
இருக்கமாட்டார்கள் என்பதை வேறொரு நிகழ்வு 
எனக்கு உணர்த்தியது. 

ஒருதடவை ஓணம் விழா தொடங்க ஒரு வாரம் 
இருக்கும்போது ஒரு நாள் காலை ஒரு வாடிக்கையாளர் 
எனது அறைக்கதவை திறந்து உள்ளே வரலாமா?’ என்று 
கேட்டார். 

நான் அவரை நிமிர்ந்து பார்த்து, வாருங்கள் 
திரு கிருஷ்ண வாரியர் அவர்களே?’ என்றதும் அப்படியே 
அசந்து நின்று விட்டார்.


அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


தொடரும்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தோற்றத்தை வைத்து ஒருவரை எள்ளி நகையாடலாமா?



நம்மில் சிலர் ஒல்லியாய் இருப்பவர்களைப் பார்த்து, 
கொத்தவரைக்காய் உடம்பு என்று கேலியாக சொல்வதுண்டு. 
ஆனால் கொத்தவரைக்காயின் (கொத்தவரங்காயின்) அருமை 
பெருமை பற்றி தெரிந்தால் நாம் அவ்வாறு சொல்லமாட்டோம்.





Fabaceae  என்ற தாவர குடும்பத்தைச்சேர்ந்த Cyamopsis tetragonoloba என்ற 
தாவரப் பெயர் (Botanical Name) கொண்ட கொத்தவரைக்காய், ஒரு பயறுவகை (Legume) தாவரம். இதை இந்தியில் பசுவிற்கான 
தீவனம் என்ற பொருளில் குவார் (Guar) என்பார்கள்.

இந்தியாவில் இது வளர்வதற்கான தட்பவெட்ப நிலை 
காரணமாக இது அதிகமாக இராஜஸ்தான் மாநிலத்தில் 
பயிரிடப்படுகிறது என்பதும் உலகில் பயிரிடப்படும் 
கொத்தவரைக்காய் பயிர்களில் 80 சதம் 
இராஜஸ்தானில் பயிரிடப்படுகின்றன என்பது 
வியப்பூட்டும் செய்தி. 
 
கொத்தவரைக்காயைப் பற்றி நாம் 
வேண்டுமானால் சாதாரணமாக   
நினைக்கலாம். காரணம் நம்மைப் 
பொறுத்தவரையில் கொத்தவரைக்காய் 
என்பது சாம்பாருக்கு உபயோகிப்பதற்கும், 
உசிலி செய்வதற்கும், பொரியல் 
செய்வதற்கும், வத்தல் போடுவதற்கும் தான் 
இலாயக்கான காய்கறி வகை என நினைத்துக் 
கொண்டு இருப்பதால்.


ஆரம்பத்தில் இராஜஸ்தானில் இதை கால்நடைகளுக்கு 
தீவனமாகத்தான் உபயோகித்து வந்தனர். பின்னால் இதற்கு 
ஏற்பட்ட கிராக்கி காரணமாக இதனுடைய மதிப்பு எங்கோ 
போய்விட்டது.  

இன்றைய நிலையில் இராஜஸ்தானில் உள்ள வேளாண் 
பெருங்குடி மக்களுக்கு இது வாழ்வை உயர்த்த வந்துள்ள 
பணப்பயிர் (Cash Crop) என்று சொல்லலாம்.




கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm  எனப்படுகிற
முளைசூழ்தசையில் கிடைக்கும் பிசின் (Gum) ஐஸ் கிரீம்
செய்வதற்கும், தக்காளிசுவைச்சாறுக்கு (Ketchup) 
பிசுபிசுப்பை (Gloopiness) கொடுப்பதற்கும் பாலாடைக்கட்டியை 
(Cheese) நிலைப்படுத்தவும், இறைச்சியையும் பதப்படுத்தவும்,
காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும்  பற்பசை தயாரிக்கவும், உபயோகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறதாம்.

                                                     கொத்தவரைக்காய் பிசின்




சமீபகாலமாக இதன் பிசின் Shale எனப்படும் நிலத்தடியில் 
உள்ள மென் களிக்கல்லிலிருந்து எண்ணையையும் 
எரி வாயுவையும் Fracking என்கிற Hydraulic fracturing மூலம் 
எடுக்க உதவுகிறது என்பது மற்றொரு செய்தி. 

களிக்கல்லிலிருந்து, எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க துரப்பணம் இடும்போது இந்த பிசின்களை 
உபயோகிப்பதால் கருவிகளின் பாகுநிலை (Viscosity)யை 
அதிகரிப்பதால்,அவைகள் களிகல்லை விரிவாக்கி 
அதிலிருந்து அதிக  எண்ணையையும் எரி வாயுவையும் 
எடுக்க உதவுகிறதாம். மேலும் உராய்வை தடுக்க 
உதவுவதால் எரிபொருள் மிச்சமாகிறதாம்   

இதன் காரணமாக பல கோடி அமெரிக்க டாலர்களை 
ஈட்டி தரும் Shale Energy நிறுவனங்கள் இராஜஸ்தானில் 
பயிராகும் கொத்தவரைக்காய்களின் விதைகளுக்கு 
அதிக விலை கொடுத்து (அதாவது ஒரு கிலோ 
விதைக்கு 5.5 அமெரிக்க டாலர்கள் கொடுத்தவர்கள் 
தற்போது 25 அமெரிக்க டாலர்கள் கொடுத்து) வாங்கி 
செல்கின்றன. 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 33,800 மெட்ரிக் டன் கொத்தவரைக்காய் பிசின்களை அவைகள் இந்தியாவில் வாங்கியிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு அந்த 
நிறுவனங்களுக்கு தேவையான பிசின்கள் மட்டும் 
3 இலட்சம் டன்களாம். 

இந்த பயிருக்கு ஏற்பட்டுள்ள இந்த மவுசு காரணமாக 
இராஜஸ்தான் மாநில விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் 
உயர்ந்துவிட்டது என்பதும் அவர்களில் சிலர் தங்கம் 
வாங்க வெளி நாடு சென்று வரும் அளவிற்கு பணம் 
ஈட்டியிருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படுத்தும் 
செய்திகள். அதனால்தான் அவர்கள் கொத்தவரைக்காய் 
பயிரை கருப்புத் தங்கம் என்று செல்லமாக 
அழைக்கிறார்கள். 

விவசாயிகள் கொத்தவரைக்காய் விதைகளின் விலை 
ஏற்றத்தை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் 
அதை வாங்கும் நிறுவனங்கள் இவைகளுக்கு பதில் 
மாற்றாக வேறு ஒன்றை தேடும் ஆராய்ச்சியில் 
உள்ளனராம். எது எப்படியோ அப்படியே விலை 
குறைந்தாலும் அதுவும் விவசாயிகளுக்கு வழக்கமாக 
கிடைக்கும் வருவாயை விட அதிகமாகத்தான் இருக்கும்.

எனவே இனி ஒல்லியானவர்களைப் பார்த்தால் 
கொத்தவரைக்காய் போல் இருக்கிறார்கள் என 
சொல்லாதீர்கள். ஏனெனில் எந்த புற்றில் எந்த 
பாம்பு இருக்குமோ?’

பி.கு உருவத்தை வைத்து ஒருவரை எடை போடுவது 
பற்றி  எனக்குப் பிடித்த பாடல்கள் 5 என்ற பதிவில் 
ஏற்கனவே வேறொரு பொருளில் எழுதியிருக்கிறேன்.   

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நாள் நல் வாழ்த்துக்கள்!



படங்கள் தந்த கூகிளார்க்கு நன்றி.