கல்விக்கடன்
பெற்று, திருப்பி அதைக் கட்டாமல்
இருந்த,
அந்த பொறியியல் பட்டதாரி சொன்னது போலவே அன்று
மதியமே
எங்கள் கிளைக்கு வந்தார். அவர் வந்ததும்,
மேலாளரும் சார்பு
மேலாளரும் எனது அறைக்கு வந்து
எங்களது உரையாடலில் கலந்து கொண்டனர்.
அவரை வரவேற்று
உட்கார சொன்னதும், அவர்
கேட்ட
முதல் கேள்வி ‘என்னை எதற்காக சந்திக்க விரும்பினீர்கள்?’ என்பதுதான்.அப்போது கூட அவருக்கும் எங்கள் வங்கிக்கும்
தொடர்பு இருப்பதுபோல
காட்டிக்கொள்ளவில்லை!
(ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம் அவரது கடனை
தள்ளுபடி செய்திருப்போம்
என்று.)
எனக்குள் கோபம்
வந்த போதும், அதைக்
காட்டிக்கொள்ளாமல்
முகத்தில் புன்முறுவலை
வரவழைத்துக்கொண்டு ‘நீங்கள் ஏற்றுமதி
வணிகம்
செய்வதாக அறிகிறேன். வணிகம் எப்படி இருக்கிறது?’
என்றேன். அதற்கு அவர் ‘நன்றாக இருக்கிறது. இதைக்
கேட்கவா என்னை சந்திக்க விரும்பினேர்கள்?’
என்றார்.
‘இல்லை. இல்லை.
உங்களை சந்திக்க விரும்பியதற்கு
வேறொரு காரணமும் உண்டு. அதை பின் சொல்கிறேன்.
நீங்கள் இப்போது எந்த வங்கியில் கணக்கு
வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்
வணிகம் ஆரம்பித்ததிலிருந்தே கணக்கும்
வைத்திருக்கும் வங்கி ஒன்றின் பெயரை
சொன்னார்.
(அது இந்தியாவின் பெரிய வங்கி ஆகும்)
பணத்தை திருப்பிக்
கட்டும் எண்ணம் இருந்திருந்தால்,
எங்கள் வங்கியில் கணக்கை ஆரம்பித்து இருப்பார்.
வேறொரு வங்கியில் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்
என்று அறிந்தபோதே இவர் Wilful Defaulter தான் என நினைத்துக்கொண்டேன்.
எனவே இவரிடம்
சிரித்துப் பேசி பிரயோசனமில்லை
என எண்ணி, சற்று வேகமாக கேட்டேன். ‘இந்த வங்கியில்
நீங்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கடன் பெற்றீர்களா
இல்லையா?’ என்று. எனது கேள்வியை அவர்
எதிர்பார்க்கவில்லை போலும்.
சிறிது தயங்கி, ‘ஆமாம்.’என்றார். உடனே நான் ‘வாங்கிய
கடனை படித்து முடித்து
பணியில் அமர்ந்த பிறகோ
அல்லது ஒரு ஆண்டு கழித்தோ கடன் பெற்ற
தொகையை வட்டியோடு 7
ஆண்டுகளில் திருப்பிக்
கட்டவேண்டும் என உங்களுக்குத் தெரியாதா?
வங்கி மூலம் படித்துவிட்டு நல்ல முறையில் வணிகம்
செய்யும் நீங்கள், வங்கிக்கு ஒரு பைசா கூட கட்டாதது
ஏன் ?’ என்றேன். அதற்கு அவர், நானோ அல்லது எனது சக அலுவலர்களோ
எதிர்பார்க்காத பதிலை சொன்னார். ‘கட்டவேண்டும் என்பதை
மறந்துவிட்டேன்’ என்று.
உடனே நான் குரலை
உயர்த்தி, ‘என்ன இப்படி
பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறீர்கள்? கடன்
எங்கே
வாங்குவது எனத் தெரிந்த உங்களுக்கு அதை
திருப்பிக்கட்டவேண்டும் எனத் தெரியாதா? படித்து முடித்து
தொழில் ஆரம்பித்தபோது கணக்கு தொடங்கினீர்களே,
அப்போதுகூட அதை இந்த வங்கியில்
தொடங்கவேண்டும்
என எண்ணம் வரவில்லையே உங்களுக்கு.
கைதூக்கிவிட்ட
வங்கியையும், அதில்
பெற்ற கடனையும்
மறந்துவிட்டேன் என சொல்வது, வளர்த்து
ஆளாக்கிய
பெற்றோரை மறந்துவிட்டேன் என சொல்வது போல.
இதை சொல்ல உங்களுக்கு
வெட்கமாயில்லயா? நீங்கள்
கல்லூரியில் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா? படித்தபின் வேலையில்லாமல்
இருந்தால் கடனை திருப்பி கட்டுவது
கடினம்தான்.
ஆனால் நீங்களோ ஏற்றுமதி
வணிகத்தை இலாபகரமாக
நடத்திக் கொண்டு
இருக்கிறீர்கள்.அப்படி இருக்கும்போது
வாங்கிய கடனை திருப்பிக் கட்டாமல்
இருப்பது எப்படி
நியாயம் ஆகும்?
உங்களைப்போல படிக்க கடன் வாங்கியவர்கள் எல்லோரும்
திருப்பிக் கட்ட மறந்துவிட்டால் நாங்கள் எப்படி மற்ற
தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவி செய்யமுடியும்?’
என நான்
பொரிந்து தள்ளிவிட்டேன்.
நான் கோபமாக
பேசுவதை பார்த்த எனது சக அலுவலர்கள்
என்னை சாந்தமாக பேசும்படி கண்ணால் எனக்கு சைகை
காட்டினார்கள்.
நான் சற்று உரக்க
கோபமாக பேசியது, அதுவும்
மற்ற
இரு அலுவலர்கள் முன் பேசியது சங்கடத்தை
உண்டாக்கியது போலும். சிறிது நேரம் அவர்
பதில்
ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தார்.
அந்த இறுக்கத்தைக்
குறைக்க ‘சரி
நடந்ததைப்பற்றி
பேசவேண்டாம். முழுத் தொகையையும் எப்போது கட்டி
கணக்கை
முடிக்கிறீர்கள்?சொல்லுங்கள்.
இல்லாவிட்டால் நாங்கள் மேல்
நடவடிக்கை
எடுக்கவேண்டியிருக்கும்.’ என்றேன்.
அவர் உடனே எனது
சார்பு மேலாளர் பக்கம்
(அவர் உள்ளூர்க்காரர்) திரும்பி நான் கட்ட வேண்டியது
எவ்வளவு எனச் சொல்லுங்கள்.’ என்றார். அவர்
அந்த விவரத்தை கையிலேயே கொண்டு வந்திருந்ததால்
உடனே அந்த
தொகையை சொன்னார்.
அவர் ‘இதோ வருகிறேன்’.
என்று கூறி வெளியே
சென்றார். அவர் சென்றவுடன் எனது மேலாளரும்,
சார்பு மேலாளரும், ‘என்ன சார். இப்படி குரலை
உயர்த்தி பேசிவிட்டீர்கள்? இங்கேயெல்லாம் இப்படி
பேசமாட்டார்கள்? நல்ல வேளை அவர் திருப்பி
ஒன்றும் சொல்லவில்லை.’ என்றார்கள்.
‘நம் மீது
நியாயம் இருக்கும்போது நாம் ஏன்
பயப்படவேண்டும்.’ என்று
சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே, அவர் திரும்பவும் வங்கி காசோலை
புத்தகத்துடன் உள்ளே வந்தார்,
வங்கிக்கு
தரவேண்டிய தொகையை காசோலையில்
எழுதி கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு. ‘சாரி. பணத்தை
திருப்பிக்
கட்டாதது எனது தவறுதான்.’ என்று என்னிடம்
சொல்லிவிட்டு நிற்காமல் உடனே கிளம்பிவிட்டார்.
எனது சக அலுவலர்கள்
மட்டுமல்ல நானும் அவர்
உடனே பணத்தை தருவார் என்று எதிர்பார்க்கவில்லை.
‘சார். நீங்கள் அப்படி பேசியதால் அவர்
கட்டமாட்டார் என நினைத்தோம்.ஆனால் அவர் உடனே பணத்தை
கொடுத்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.’ என்று
சக அலுவலர்கள்
சொன்னார்கள்.
அதற்கு நான்
சொன்னேன். ‘எங்கள் ஊரில்
சொல்வார்கள்
“ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கற, பாடிக் கறக்கிற
மாட்டை பாடிக் கற.” என்று. அதைத்தான் செய்தேன்
இப்போது. ஆனால்
இந்த முறையை
எல்லோரிடமும் உபயோகிக்கக்கூடாது.’ என்றேன்.
தொடரும்
சிலருக்கு அவ்வளவு சீக்கரத்தில் கோபம் வராது தான் எனினும் இப்படி ஒரு பதிலை மறந்துவிட்டேன் கேட்டால் உடனே வரத்தான் செய்யும் . தங்கள் கோபம் நியாயமானது தான் ..
பதிலளிநீக்கு“ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கற, பாடிக் கறக்கிற
மாட்டை பாடிக் கற.”நல்ல பழமொழி.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!
நீக்குசில நேரங்களில் மென்மையைக் கடைபிடித்தால் வேலை நடக்காது என்பதை அருமையாக உணர்த்திவிட்டீர்கள். நல்ல அலுவலரின் தகுதி அதுதான்.
பதிலளிநீக்குவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!
நீக்குஆடுகிற காட்டை ஆடிக்கற, பாடுற மாட்டை பாடிக்கற. இது நல்ல டெக்னிக். என்னுடைய இந்தப் பதிவைப் பார்க்கவும்.
பதிலளிநீக்குhttp://swamysmusings.blogspot.com/2012/09/i-have-no-powers.html
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தாங்கள் குறிப்பிட்டுள்ள தங்கள் பதிவையும் படித்தேன். இரசித்தேன்.
நீக்கு“ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கற, பாடிக் கறக்கிற
பதிலளிநீக்குமாட்டை பாடிக் கற.”
ஆனால் இந்த முறையை
எல்லோரிடமும் உபயோகிக்கக்கூடாது.’ //
அருமையான பாடம் !!
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நீக்கு//எனது சக அலுவலர்கள் மட்டுமல்ல நானும் அவர்
பதிலளிநீக்குஉடனே பணத்தை தருவார் என்று எதிர்பார்க்கவில்லை. //
அந்த ஆசாமிக்கு இப்போது தான் செய்யும் ஏற்றுமதி தொழிலுக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து இருப்பார். ஒருவேளை நீங்களும் கேட்காமலே இருந்திருந்தால் உங்கள் வங்கிக்கு இழப்புதான் ஏற்பட்டு இருக்கும்.
நீங்கள் சொல்வது உண்மைதான் திரு தி.தமிழ்.இளங்கோ அவர்களே! தங்களது வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
நீக்குநீங்கள் அடித்த அடியில் மனிதன் ஆடிப்போய் விட்டார்!
பதிலளிநீக்குஉண்மைதான் திரு குட்டன் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅன்பின் நடன சபாபதி - அவர் உடனே முழுத்தொகையினையும் செலுத்தக் கராணமாய் இருந்தது தங்களின் கோபமிகு பேச்சுதான் - எதிர் பாராத நிலையில் - யாரும் இதுவரை அவரிடம் அப்படிப் பேசாத நிலையில் தாங்கள் பேசியது - அவருக்கு ரோஷத்தினைத் தூண்டி விட்டிருக்கும் - மற்றும் தமிழ் இளங்கோ அவரது மறுமொழியில் கூறியது போல - அவர் செய்யும் தொழிலுக்குக் கடன் வழங்கிய வங்கியினை நீங்கள் தொடர்பு கொண்டால் அவர் தொழிலிற்குப் பிரச்னை வருமெனபதும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியோ வ்ங்கியின் வாராக் கடன் குறைந்தது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! எப்படியோ அந்த வாராக்கடன் தீர்ந்த கடனாக மாறியதில் எனக்கு மகிழ்ச்சியே!
பதிலளிநீக்கு