புதன், 27 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 39



வங்கிக்கு புதிதாய் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் வங்கியில் வாங்கும் கடனை நல்லபடியாக தங்களது தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி இலாபம் ஈட்டி பின் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக்கட்டவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

ஆனால் எல்லோருமே அப்படி இருக்கமாட்டார்கள் என்பதால், வங்கியில் மேலாளர்களும், அலுவலர்களும் யாரும் கேட்டவுடன் கடன் தர மாட்டார்கள். கடன் கேட்டு வருபவரைப்பற்றி தீவிர விசாரித்துத்தான் கடன் ஒப்பளிப்பு செய்வார்கள்.

வங்கியில் கடன் கேட்டு வருபவர்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி திருப்பிக் கட்டாமல் இருந்திருக்கக்கூடும் அல்லது பல்வேறு வங்கிகளில் அதே சொத்தை ஈடாக காட்டி கடன் வாங்கி இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு கடன் தந்தால் அவர்கள் திருப்பிக்கட்டமாட்டார்கள் என்பது நிச்சயம்

ஒரு வேளை வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்கல் (Dealings) பற்றி சரியாக விசாரிக்காமல் கொடுத்த கடன், வாராக் கடனாக ஆகிவிட்டால் அந்த கடனை ஒப்பளிப்பு செய்த அந்த மேலாளர் மேல் வங்கி நடவடிக்கை வாய்ப்புண்டு. அதனால் தான் கடன் கேட்டவுடன் கடன் கேட்பவர்களின் பின்புலம் தெரியாமல் வங்கி மேலாளர்கள் கடன் தருவதில்லை.

இதனால் சில சமயம் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமென்றே மேலாளர்கள் காலம் கடத்துவது போல் தோன்றலாம். ஒரு சிலர், இந்த மேலாளர் எதையோ எதிர்பார்க்கிறார் போல அது தான் வேண்டுமென்றே கடன் தர இழுத்தடிக்கிறார் என்று கூட நினைப்பதுண்டு. (அப்படி எதிர்பார்க்கும் கருப்பு ஆடுகளும் வங்கிகளில் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வேன்.)

தமிழ்நாட்டில் ஒரு கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை  துடிப்புள்ள இளைஞர்கள் இருவர் என்னைப் பார்க்க வந்தனர்.உருவ ஒற்றுமையில் ஒன்று போலவே இருந்தததால் அவர்கள் சகோதரர்களாக இருக்கூடும் என நினைத்தேன். அவர்களை உட்காரச் சொல்லி வந்த நோக்கம் பற்றி விசாரித்தேன்.

நான் நினைத்ததுபோலவே இருவரும் சகோதரர்கள் தான். அவர்களில் மூத்தவர் தன்னையும் தன் தம்பியையும் அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்கள் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றும், Pigmy எனப்படும் எங்கள் வங்கியின் தின சேமிப்பு திட்டத்தில் தினம் சேமித்து வருவதாக கூறினார்.

(இந்தியாவிலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அல்லது தொழிற் கூடங்களுக்கு அவர்கள் விரும்பும் நேரத்திற்கு முகவர்களை அனுப்பி சேமிப்புகளை திரட்டும்  திட்டத்தை தொடங்கிய வங்கி எங்கள் சிண்டிகேட் வங்கிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)

அவர்கள், ஜவுளி கடைகளில் புடவைகளை வைத்துத்தரும் காகிதப் பைகளை அச்சிட்டுத்தரும் அச்சகம் வைத்திருப்பதாகவும், அவைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால், தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் வேண்டும் என்றும் சொன்னார்.

நான் உடனே அப்போது வங்கியில் இருந்த தின சேமிப்பு முகவரை (Pigmy Agent) ஐ அழைத்து அவர்கள் தினம் எவ்வளவு தொகை சேமிக்கிறார்கள் அதுவரை அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள மொத்த சேமிப்பு எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டேன்.  

அவர் தந்த விவரங்கள் மூலம் அவர்கள் ஓராண்டு காலமாக இந்த திட்டத்தில் சேமிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்பு அவரிடம் அச்சு இயந்திரம் சொந்த பணத்தில் வாங்கினீர்களா? அல்லது வேறு எந்த வங்கியிலாவது கடன் பெற்று வாங்கினீர்களா?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர், மய்ய அரசு தொழில் முனைவோருக்குத் தரும் நீண்ட கால கடனைப்பெற்று இயந்திரம் வாங்கி நிறுவியிருக்கிறோம். இதுவரை தொழிற்படு மூலதனத்திற்காக (Working Capital) எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. கையில் உள்ள பணத்தைக் கொண்டே மூலப்பொருட்களை வாங்கினோம். இப்போது ஆர்டர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அதிக மூலதனம் தேவைப்படுகிறது. அதனால்தான் தொழிற்படு மூலதன கடன் வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கடன் அவசரம் என்பதால் உடனே ஒப்பளிப்பு செய்யவேண்டும்  என்றார்.

உங்களுக்குக் கடன் தரத்தான்  நாங்கள் இருக்கிறோம். ஆனால் உடனே கொடுத்துவிடமுடியாது. நான் உங்களது அச்சகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து விட்டு மற்றும் உங்களுடைய கணக்கு வழக்குகள், உங்களிடம் காகிதப்பைகள் வழக்கமாக வாங்கும் நிறுவனங்கள் பற்றிய விவரம், அவர்களோடு உள்ள வரவு செலவு கணக்குகள் இதுவரை வேறு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தால் அந்தக் கணக்கின் விவரம் போன்றவைகளை ஆராய்ந்து தற்போதுள்ள நிலையில் உங்களுக்கு மேலதிக தொழிற்படு மூலதனம் தேவையென்றால் அவசியம் தருவோம். நீங்கள் கேட்பதுபோல் உடனே கொடுத்துவிடமுடியாது. என்றேன்.

உடனே அவர், எல்லா ஆவணங்களையும் உங்களுக்குத் தருகிறோம். நீங்கள் எப்போது எங்கள் அச்சகத்திற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள் என்று சொன்னால் நாங்கள் வந்து அழைத்து செல்கிறோம்.என்றார்.

அதற்கு நான், ஆய்வுக்கு வருவது பற்றி தின சேமிப்பு முகவர் மூலம் சொல்லி அனுப்புகிறேன்.நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

அவரது பேச்சிலும் நடையிலும் அவசரம் இருந்ததை நான் கவனித்ததை காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் வெளியே சென்றதும், கள அலுவலரிடம் அவர்கள் வந்து சென்றது பற்றி கூறிவிட்டு  இன்று மதியம் நாம் அவர்கள் இடத்திற்கு சொல்லாமல் திடீரென ஆய்வுக்கு செல்கிறோம். சீக்கிரம் சாப்பிட்டு வாருங்கள். என்றேன். 



தொடரும்

வியாழன், 21 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 38




மறு நாள் காலை பேராசிரியை சொல்லியிருந்த ஊருக்கு செல்ல தயாரானேன். அப்போது எனக்கு அலுவலக உபயோகத்திற்கு ஸ்கூட்டர் தான் கொடுத்கிருந்தார்கள்.

வைப்புத்தொகை  சுமார் 10 இலட்சம் இருக்கலாம் என்று அந்த பேராசிரியை சொல்லியிருந்ததால், அதை பாதுகாப்பாக கொண்டுவர ஸ்கூட்டரில் சென்று எடுத்துவருவதை விட காரில் சென்றால் பாதுகாப்பாக கொண்டு வரலாம் என்று வாடகைக் காரை ஏற்பாடு செய்தேன்.

அவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக பெற, இப்போது உள்ளது போல் அப்போது எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. மேலும் KYC (Know your Customer) விதிகளும் இல்லை.

வங்கியை விட்டு கிளம்பு முன் காசாளரை அழைத்து, நான் வர மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகலாம். நான் வரும் வரை கணைக்கை முடித்துவிடாதீர்கள். கொண்டுவரும் பணத்தை இன்றைய கணக்கில் சேர்க்கவேண்டும்.’என சொல்லிவிட்டு தேவையான வைப்புத்தொகை விண்ணப்ப படிவங்களோடு, உதவிக்கு தொழில் துறை கடன்களை கவனிக்கும் தொழில் வளர்ச்சி உதவி மேலாளரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   

அந்த பேராசிரியை சொன்ன ஊரை அடைந்தும் கவனித்தேன் அது ஒரு மிகவும் சிறிய ஊரென்பதை. இங்கு அவ்வளவு பெரிய தொகையை காலவரை வைப்புத் தொகையாக (Fixed Deposit) வைப்பவர்கள் இருப்பார்களா?’  என கூட வந்த அலுவலர் சந்தேகப்பட்டபோது. தோற்றத்தை வைத்து எடை போடவேண்டாம். யார் கண்டது? இங்குள்ளவர்கள் எளிமையாய் வாழ்பவர்களாக இருக்கலாம். என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு சிறிய சர்ச் அருகே சென்று அந்த பேராசிரியை பெயரை சொல்லி அவர் இருப்பிடம் எங்கிருக்கிறது என விசாரித்தேன்.

அங்கிருந்த ஒருவர், கிராமத்துக்கே உரிய பாணியில் நாங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறோம்? என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாமல், அவரை பார்க்கவேண்டும். என்று மட்டும் சொன்னேன். அவர் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சிறிது தொலைவில் இருந்த ஒரு சிறிய குன்று அருகே இருந்த ஒரு குடிசை வீட்டைக் காட்டி அங்கு போய் கேளுங்கள். என்றார்.

எங்களுக்கு சந்தேகம். நாம் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாததால் ஒருவேளை அவர் தவறான இடத்தைக் காண்பிக்கிறாரோ என நினைத்தோம். சரி எதற்கும் அங்கு போய் விசாரிப்போம்  என நினைத்துக்கொண்டு அவர் காண்பித்த இடத்திற்கு சென்றோம். அங்குள்ள குடிசைக்கு அருகில் சென்றதும் எங்களது காரின் சப்தத்தைக் கேட்டு குடிசையின் உள்ளிருந்து வயதான பெரியவர் வெளியே வந்தார்.

எங்களைப் பார்த்து, என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்குள் அவரது மனைவியும் வெளியே வந்தார். நான் அந்த பேராசிரியரின் பெயரை சொல்லி “அவரது வீடு எது என சொல்லமுடியுமா?’ எனக் கேட்டேன். அந்த குடிசை அவர் தங்கியிருக்கும் வீடாக இருக்கமுடியாது என்ற எண்ணத்தில்.

அதற்கு மிகவும் அமைதியாக இருவரும் ஒரே குரலில், இங்குதான் தங்கியுள்ளார். இப்போது வெளியே சென்றிருக்கிறார். எதற்காக அவரை பார்க்க விரும்புகிறீர்கள்?’ என்றனர்.

எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். அந்த பேராசிரியர் அவரும் அவரது கணவரும் நல்ல வேலையில் இருக்கும்போது ஏன் குடிசையில் தங்கவேண்டும் என்ற குழப்பத்தோடு, அவர்களிடம் நாங்கள் வங்கியிலிருந்து வருவதாகவும் அவர் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாகவும் சொன்னதால் வந்திருப்பதாக கூறிவிட்டு, அவர் அந்த வீட்டில் தான் இருக்கிறாரா? என சந்தேகத்தோடு கேட்டோம்.

அதற்கு அந்த பெரியவர், ஆமாம். அவர் இந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர் சொன்னதை நம்பி நீங்கள் வந்துவிட்டீர்களா?’ எனக் கேட்டதும், என்ன இப்படி சொல்கிறாரே என நினைத்துக்கொண்டு, அவர் தான் இன்று காலை வந்தால் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாக சொன்னார். அதனால்தான் வந்தோம். ஏன்.வந்தது தவறுங்களா?’ என்று கேட்டேன்.

உடனே அவர் அந்த கதையை ஏன் கேட்கிறீர்கள். இது அவருடைய வீடு அல்ல. அவருக்கு மன நிலை சரி இல்லாததால் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வெளி நாடு போய்விட்டார். அவர் வேலை பார்த்த கல்லூரியிலும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

அவரது ஊர் எது எனத்தெரியவில்லை. ஒரு நாள் இந்த  ஊருக்கு வந்து தங்கிவிட்டார். நாங்கள் பரிதாபப்பட்டு எங்களோடு தங்க வைத்திருக்கிறோம். தினம் காலையில் வெளியே செல்வார். மாலை ஆனதும் வீட்டுக்கு வந்துவிடுவார். எங்கு போகிறார் என எங்களுக்குத் தெரியாது. ஆனால் இவரால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

யாரிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டார். இவர் சாதாரணமாக நாம் பேசுவது போல் பேசுவதாலும், நடந்துகொள்வதாலும் பார்ப்பவர்களுக்கு இவர் மன நிலை சரி இல்லாதவர் எனத் தெரியாது.

ஆனால் பாவம். இவர்தான்  தன் கணவர் வந்து தன்னை அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இன்னும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். எங்களுக்கும் யாரும் இல்லாததால் இவரை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். ஏனோ தெரியவில்லை அவர் உங்களிடம் வந்து இங்கு வந்தால் வங்கியில் பணம் போட உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்.  பாவம். நீங்களும் அவர் சொன்னதை  நிஜம் என நம்பி வீணே வந்துவிட்டீர்கள். உங்களுக்குத்தான் சிரமம். என்றனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள், ஒரு நொடி வாயடைத்து பேசாமல் நின்றோம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு,’பரவாயில்லீங்க. நாங்கள் வருகிறோம். என்று சொல்லிவிட்டு, நம் வங்கியை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?  நம்மை  ஏன் அலைக்கழித்தார்? என்ற விடை தெரியா கேள்விகளுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அவர் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்படுவதா எனத் தெரியாமல், திரும்பி வரும்போது, நாமும் இப்படி தீர விசாரிக்காமல் வந்து விட்டோமே என்று எங்களை நொந்துகொண்டே வந்தோம்.

வங்கி கிளைக்கு வெறுங்கையோடு வந்த எங்களைப் பார்த்ததும், வங்கியில் இருந்த சக ஊழியர்கள் நடந்த விஷயத்தை  பற்றி தெரிந்துகொண்டு  என்னிடம் வந்து, என்ன சார். நீங்கள் விசாரித்துவிட்டு போயிருக்கவேண்டாமா?’ என்று சொல்லி நான் ஏதோ தவறு செய்துவிட்டது போல் துக்கம் விசாரித்தார்கள்.

ஒரு சிலர் சார். நீங்கள் கிளம்பு முன் அந்த கல்லூரியில் அவர் வேலை செய்கிறாரா என சரி பார்த்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் இவ்வாறு வீணே சென்று ஏமாற்றத்தொடு வெறுங்கையோடு திரும்பியிருக்கவேண்டாம். என்று சொல்லி என்னை மேலும் வெறுப்பேற்றினார்கள்.  

நான்  அவர்களிடம் சொன்னேன். Trial costs nothing என்பார்கள். ஆனால் அது என் விஷயத்தில் சரியல்ல. அதற்கும் விலை உண்டு என்பதை இன்று தெரிந்துகொண்டேன். நான் செய்ததும் ஒரு முயற்சிதான். அது பலனளிக்காமல் போய்விட்டது.அவ்வளவுதான். என வேடிக்கையாக சொன்னேன்.  

வட்டார அலுவலகத்தின் அனுமதி பெறாமல் வாடகைக் கார் எடுத்து சென்றதால் நிச்சயம் அதற்கான செலவை நானே ஏற்கவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு சொன்னேன்.

அதற்குப் பிறகு வைப்புக்கள் என்றால் நான் வாயைப் பிளந்ததில்லை!



தொடரும்