வியாழன், 21 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 38
மறு நாள் காலை பேராசிரியை சொல்லியிருந்த ஊருக்கு செல்ல தயாரானேன். அப்போது எனக்கு அலுவலக உபயோகத்திற்கு ஸ்கூட்டர் தான் கொடுத்கிருந்தார்கள்.

வைப்புத்தொகை  சுமார் 10 இலட்சம் இருக்கலாம் என்று அந்த பேராசிரியை சொல்லியிருந்ததால், அதை பாதுகாப்பாக கொண்டுவர ஸ்கூட்டரில் சென்று எடுத்துவருவதை விட காரில் சென்றால் பாதுகாப்பாக கொண்டு வரலாம் என்று வாடகைக் காரை ஏற்பாடு செய்தேன்.

அவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக பெற, இப்போது உள்ளது போல் அப்போது எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. மேலும் KYC (Know your Customer) விதிகளும் இல்லை.

வங்கியை விட்டு கிளம்பு முன் காசாளரை அழைத்து, நான் வர மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகலாம். நான் வரும் வரை கணைக்கை முடித்துவிடாதீர்கள். கொண்டுவரும் பணத்தை இன்றைய கணக்கில் சேர்க்கவேண்டும்.’என சொல்லிவிட்டு தேவையான வைப்புத்தொகை விண்ணப்ப படிவங்களோடு, உதவிக்கு தொழில் துறை கடன்களை கவனிக்கும் தொழில் வளர்ச்சி உதவி மேலாளரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.   

அந்த பேராசிரியை சொன்ன ஊரை அடைந்தும் கவனித்தேன் அது ஒரு மிகவும் சிறிய ஊரென்பதை. இங்கு அவ்வளவு பெரிய தொகையை காலவரை வைப்புத் தொகையாக (Fixed Deposit) வைப்பவர்கள் இருப்பார்களா?’  என கூட வந்த அலுவலர் சந்தேகப்பட்டபோது. தோற்றத்தை வைத்து எடை போடவேண்டாம். யார் கண்டது? இங்குள்ளவர்கள் எளிமையாய் வாழ்பவர்களாக இருக்கலாம். என சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு சிறிய சர்ச் அருகே சென்று அந்த பேராசிரியை பெயரை சொல்லி அவர் இருப்பிடம் எங்கிருக்கிறது என விசாரித்தேன்.

அங்கிருந்த ஒருவர், கிராமத்துக்கே உரிய பாணியில் நாங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறோம்? என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாமல், அவரை பார்க்கவேண்டும். என்று மட்டும் சொன்னேன். அவர் எங்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சிறிது தொலைவில் இருந்த ஒரு சிறிய குன்று அருகே இருந்த ஒரு குடிசை வீட்டைக் காட்டி அங்கு போய் கேளுங்கள். என்றார்.

எங்களுக்கு சந்தேகம். நாம் எதற்காக வந்திருக்கிறோம் என சொல்லாததால் ஒருவேளை அவர் தவறான இடத்தைக் காண்பிக்கிறாரோ என நினைத்தோம். சரி எதற்கும் அங்கு போய் விசாரிப்போம்  என நினைத்துக்கொண்டு அவர் காண்பித்த இடத்திற்கு சென்றோம். அங்குள்ள குடிசைக்கு அருகில் சென்றதும் எங்களது காரின் சப்தத்தைக் கேட்டு குடிசையின் உள்ளிருந்து வயதான பெரியவர் வெளியே வந்தார்.

எங்களைப் பார்த்து, என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்குள் அவரது மனைவியும் வெளியே வந்தார். நான் அந்த பேராசிரியரின் பெயரை சொல்லி “அவரது வீடு எது என சொல்லமுடியுமா?’ எனக் கேட்டேன். அந்த குடிசை அவர் தங்கியிருக்கும் வீடாக இருக்கமுடியாது என்ற எண்ணத்தில்.

அதற்கு மிகவும் அமைதியாக இருவரும் ஒரே குரலில், இங்குதான் தங்கியுள்ளார். இப்போது வெளியே சென்றிருக்கிறார். எதற்காக அவரை பார்க்க விரும்புகிறீர்கள்?’ என்றனர்.

எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். அந்த பேராசிரியர் அவரும் அவரது கணவரும் நல்ல வேலையில் இருக்கும்போது ஏன் குடிசையில் தங்கவேண்டும் என்ற குழப்பத்தோடு, அவர்களிடம் நாங்கள் வங்கியிலிருந்து வருவதாகவும் அவர் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாகவும் சொன்னதால் வந்திருப்பதாக கூறிவிட்டு, அவர் அந்த வீட்டில் தான் இருக்கிறாரா? என சந்தேகத்தோடு கேட்டோம்.

அதற்கு அந்த பெரியவர், ஆமாம். அவர் இந்த வீட்டில் தான் வசிக்கிறார். அவர் சொன்னதை நம்பி நீங்கள் வந்துவிட்டீர்களா?’ எனக் கேட்டதும், என்ன இப்படி சொல்கிறாரே என நினைத்துக்கொண்டு, அவர் தான் இன்று காலை வந்தால் வங்கிக்கு வைப்புத்தொகைகள் வாங்கி தருவதாக சொன்னார். அதனால்தான் வந்தோம். ஏன்.வந்தது தவறுங்களா?’ என்று கேட்டேன்.

உடனே அவர் அந்த கதையை ஏன் கேட்கிறீர்கள். இது அவருடைய வீடு அல்ல. அவருக்கு மன நிலை சரி இல்லாததால் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வெளி நாடு போய்விட்டார். அவர் வேலை பார்த்த கல்லூரியிலும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

அவரது ஊர் எது எனத்தெரியவில்லை. ஒரு நாள் இந்த  ஊருக்கு வந்து தங்கிவிட்டார். நாங்கள் பரிதாபப்பட்டு எங்களோடு தங்க வைத்திருக்கிறோம். தினம் காலையில் வெளியே செல்வார். மாலை ஆனதும் வீட்டுக்கு வந்துவிடுவார். எங்கு போகிறார் என எங்களுக்குத் தெரியாது. ஆனால் இவரால் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

யாரிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டார். இவர் சாதாரணமாக நாம் பேசுவது போல் பேசுவதாலும், நடந்துகொள்வதாலும் பார்ப்பவர்களுக்கு இவர் மன நிலை சரி இல்லாதவர் எனத் தெரியாது.

ஆனால் பாவம். இவர்தான்  தன் கணவர் வந்து தன்னை அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இன்னும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். எங்களுக்கும் யாரும் இல்லாததால் இவரை கவனித்துக்கொண்டு இருக்கிறோம். ஏனோ தெரியவில்லை அவர் உங்களிடம் வந்து இங்கு வந்தால் வங்கியில் பணம் போட உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்.  பாவம். நீங்களும் அவர் சொன்னதை  நிஜம் என நம்பி வீணே வந்துவிட்டீர்கள். உங்களுக்குத்தான் சிரமம். என்றனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள், ஒரு நொடி வாயடைத்து பேசாமல் நின்றோம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு,’பரவாயில்லீங்க. நாங்கள் வருகிறோம். என்று சொல்லிவிட்டு, நம் வங்கியை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?  நம்மை  ஏன் அலைக்கழித்தார்? என்ற விடை தெரியா கேள்விகளுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அவர் நிலையை எண்ணி பரிதாபப்படுவதா அல்லது எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்படுவதா எனத் தெரியாமல், திரும்பி வரும்போது, நாமும் இப்படி தீர விசாரிக்காமல் வந்து விட்டோமே என்று எங்களை நொந்துகொண்டே வந்தோம்.

வங்கி கிளைக்கு வெறுங்கையோடு வந்த எங்களைப் பார்த்ததும், வங்கியில் இருந்த சக ஊழியர்கள் நடந்த விஷயத்தை  பற்றி தெரிந்துகொண்டு  என்னிடம் வந்து, என்ன சார். நீங்கள் விசாரித்துவிட்டு போயிருக்கவேண்டாமா?’ என்று சொல்லி நான் ஏதோ தவறு செய்துவிட்டது போல் துக்கம் விசாரித்தார்கள்.

ஒரு சிலர் சார். நீங்கள் கிளம்பு முன் அந்த கல்லூரியில் அவர் வேலை செய்கிறாரா என சரி பார்த்திருக்கலாமே. அப்படி செய்திருந்தால் இவ்வாறு வீணே சென்று ஏமாற்றத்தொடு வெறுங்கையோடு திரும்பியிருக்கவேண்டாம். என்று சொல்லி என்னை மேலும் வெறுப்பேற்றினார்கள்.  

நான்  அவர்களிடம் சொன்னேன். Trial costs nothing என்பார்கள். ஆனால் அது என் விஷயத்தில் சரியல்ல. அதற்கும் விலை உண்டு என்பதை இன்று தெரிந்துகொண்டேன். நான் செய்ததும் ஒரு முயற்சிதான். அது பலனளிக்காமல் போய்விட்டது.அவ்வளவுதான். என வேடிக்கையாக சொன்னேன்.  

வட்டார அலுவலகத்தின் அனுமதி பெறாமல் வாடகைக் கார் எடுத்து சென்றதால் நிச்சயம் அதற்கான செலவை நானே ஏற்கவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டே அவ்வாறு சொன்னேன்.

அதற்குப் பிறகு வைப்புக்கள் என்றால் நான் வாயைப் பிளந்ததில்லை!தொடரும்

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

   நீக்கு
 2. ‘Trial costs nothing என்பார்கள். ஆனால் அது என் விஷயத்தில் சரியல்ல. அதற்கும் விலை உண்டு என்பதை இன்று தெரிந்துகொண்டேன். நான் செய்ததும் ஒரு முயற்சிதான். அது பலனளிக்காமல் போய்விட்டது.அவ்வளவுதான்/

  புத்தி கொள்முதலுக்கு கொடுத்த விலையும் ,
  ஏற்பட்ட அலைச்சலும் அதிகம் தான் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! சில சமயம் விலை கொடுத்துத்தான் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது!

   நீக்கு
 3. (மறக்க முடியாத) அனுபவத்தால் கிடைத்த பாடம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! மறக்கமுடியாத அனுபவம் தான்!

   நீக்கு
 4. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்ற மாதிரி ஆய்ட்டுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான் முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 5. கதையல்ல நிஜம் என்று தலைப்பிட வேண்டிய பதிவு!எதிர்பார்க்கவே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 6. This is very a strange case... Analysing ppl is the most important aspect in banking. My father would say such bank related stories to me. He used to be "transactional analysis" faculty in staff training college. when a man in rags wants a million dollar loan then that money is not to be given and such money, if given, is bound not to come back. 2 things are important in credit- he would say. Ability to pay and willingness to pay. But your case is very strange. I have not heard of anything like this. Nothing could be said. But very interesting...

  PS: Sorry- if the comment is repeatedly getting published. Some problem in using the tab...

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும், தங்கள் தந்தையார் சொன்ன கருத்தை பகிர்ந்துகொண்டமைக்கும், பாராட்டுக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. ''..அதற்குப் பிறகு வைப்புக்கள் என்றால் நான் வாயைப் பிளந்ததில்லை!...'''Oh!....என்ன ஓர் அனுபவம்...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

   நீக்கு
 9. எல்லா அனுபவங்களையும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும் மனப பக்குவம் உங்களிடம் உள்ளது. அது எல்லோருக்கும் இருப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
  2. வங்கி அதிகாரியாகப் பணியேற்ற ஆரம்ப நாட்களில் இத்தகைய அனுபவங்கள் எனக்கும் நிறைய ஏற்பட்டதுண்டு. என்ன செய்வது? ‘டெபாசிட் டார்கெட்’ அடைந்தாக வேண்டுமே! இல்லையெனில் அடுத்த ரீஜினல் கான்ஃபரன்சில் அவமானப்பட வேண்டியிருக்குமே!

   நீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு செல்லப்பா யக்யசாமி அவர்களே!

   நீக்கு