புதன், 27 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 39வங்கிக்கு புதிதாய் கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் வங்கியில் வாங்கும் கடனை நல்லபடியாக தங்களது தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி இலாபம் ஈட்டி பின் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக்கட்டவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

ஆனால் எல்லோருமே அப்படி இருக்கமாட்டார்கள் என்பதால், வங்கியில் மேலாளர்களும், அலுவலர்களும் யாரும் கேட்டவுடன் கடன் தர மாட்டார்கள். கடன் கேட்டு வருபவரைப்பற்றி தீவிர விசாரித்துத்தான் கடன் ஒப்பளிப்பு செய்வார்கள்.

வங்கியில் கடன் கேட்டு வருபவர்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி திருப்பிக் கட்டாமல் இருந்திருக்கக்கூடும் அல்லது பல்வேறு வங்கிகளில் அதே சொத்தை ஈடாக காட்டி கடன் வாங்கி இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு கடன் தந்தால் அவர்கள் திருப்பிக்கட்டமாட்டார்கள் என்பது நிச்சயம்

ஒரு வேளை வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்கல் (Dealings) பற்றி சரியாக விசாரிக்காமல் கொடுத்த கடன், வாராக் கடனாக ஆகிவிட்டால் அந்த கடனை ஒப்பளிப்பு செய்த அந்த மேலாளர் மேல் வங்கி நடவடிக்கை வாய்ப்புண்டு. அதனால் தான் கடன் கேட்டவுடன் கடன் கேட்பவர்களின் பின்புலம் தெரியாமல் வங்கி மேலாளர்கள் கடன் தருவதில்லை.

இதனால் சில சமயம் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமென்றே மேலாளர்கள் காலம் கடத்துவது போல் தோன்றலாம். ஒரு சிலர், இந்த மேலாளர் எதையோ எதிர்பார்க்கிறார் போல அது தான் வேண்டுமென்றே கடன் தர இழுத்தடிக்கிறார் என்று கூட நினைப்பதுண்டு. (அப்படி எதிர்பார்க்கும் கருப்பு ஆடுகளும் வங்கிகளில் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வேன்.)

தமிழ்நாட்டில் ஒரு கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை  துடிப்புள்ள இளைஞர்கள் இருவர் என்னைப் பார்க்க வந்தனர்.உருவ ஒற்றுமையில் ஒன்று போலவே இருந்தததால் அவர்கள் சகோதரர்களாக இருக்கூடும் என நினைத்தேன். அவர்களை உட்காரச் சொல்லி வந்த நோக்கம் பற்றி விசாரித்தேன்.

நான் நினைத்ததுபோலவே இருவரும் சகோதரர்கள் தான். அவர்களில் மூத்தவர் தன்னையும் தன் தம்பியையும் அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்கள் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்றும், Pigmy எனப்படும் எங்கள் வங்கியின் தின சேமிப்பு திட்டத்தில் தினம் சேமித்து வருவதாக கூறினார்.

(இந்தியாவிலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அல்லது தொழிற் கூடங்களுக்கு அவர்கள் விரும்பும் நேரத்திற்கு முகவர்களை அனுப்பி சேமிப்புகளை திரட்டும்  திட்டத்தை தொடங்கிய வங்கி எங்கள் சிண்டிகேட் வங்கிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.)

அவர்கள், ஜவுளி கடைகளில் புடவைகளை வைத்துத்தரும் காகிதப் பைகளை அச்சிட்டுத்தரும் அச்சகம் வைத்திருப்பதாகவும், அவைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால், தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் வேண்டும் என்றும் சொன்னார்.

நான் உடனே அப்போது வங்கியில் இருந்த தின சேமிப்பு முகவரை (Pigmy Agent) ஐ அழைத்து அவர்கள் தினம் எவ்வளவு தொகை சேமிக்கிறார்கள் அதுவரை அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள மொத்த சேமிப்பு எவ்வளவு என்ற விவரங்களைக் கேட்டேன்.  

அவர் தந்த விவரங்கள் மூலம் அவர்கள் ஓராண்டு காலமாக இந்த திட்டத்தில் சேமிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். பின்பு அவரிடம் அச்சு இயந்திரம் சொந்த பணத்தில் வாங்கினீர்களா? அல்லது வேறு எந்த வங்கியிலாவது கடன் பெற்று வாங்கினீர்களா?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர், மய்ய அரசு தொழில் முனைவோருக்குத் தரும் நீண்ட கால கடனைப்பெற்று இயந்திரம் வாங்கி நிறுவியிருக்கிறோம். இதுவரை தொழிற்படு மூலதனத்திற்காக (Working Capital) எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. கையில் உள்ள பணத்தைக் கொண்டே மூலப்பொருட்களை வாங்கினோம். இப்போது ஆர்டர்கள் அதிகமாக குவிந்துள்ளதால் அதிக மூலதனம் தேவைப்படுகிறது. அதனால்தான் தொழிற்படு மூலதன கடன் வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கடன் அவசரம் என்பதால் உடனே ஒப்பளிப்பு செய்யவேண்டும்  என்றார்.

உங்களுக்குக் கடன் தரத்தான்  நாங்கள் இருக்கிறோம். ஆனால் உடனே கொடுத்துவிடமுடியாது. நான் உங்களது அச்சகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து விட்டு மற்றும் உங்களுடைய கணக்கு வழக்குகள், உங்களிடம் காகிதப்பைகள் வழக்கமாக வாங்கும் நிறுவனங்கள் பற்றிய விவரம், அவர்களோடு உள்ள வரவு செலவு கணக்குகள் இதுவரை வேறு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தால் அந்தக் கணக்கின் விவரம் போன்றவைகளை ஆராய்ந்து தற்போதுள்ள நிலையில் உங்களுக்கு மேலதிக தொழிற்படு மூலதனம் தேவையென்றால் அவசியம் தருவோம். நீங்கள் கேட்பதுபோல் உடனே கொடுத்துவிடமுடியாது. என்றேன்.

உடனே அவர், எல்லா ஆவணங்களையும் உங்களுக்குத் தருகிறோம். நீங்கள் எப்போது எங்கள் அச்சகத்திற்கு ஆய்வுக்கு வருகிறீர்கள் என்று சொன்னால் நாங்கள் வந்து அழைத்து செல்கிறோம்.என்றார்.

அதற்கு நான், ஆய்வுக்கு வருவது பற்றி தின சேமிப்பு முகவர் மூலம் சொல்லி அனுப்புகிறேன்.நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள் என அனுப்பி வைத்தேன்.

அவரது பேச்சிலும் நடையிலும் அவசரம் இருந்ததை நான் கவனித்ததை காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் வெளியே சென்றதும், கள அலுவலரிடம் அவர்கள் வந்து சென்றது பற்றி கூறிவிட்டு  இன்று மதியம் நாம் அவர்கள் இடத்திற்கு சொல்லாமல் திடீரென ஆய்வுக்கு செல்கிறோம். சீக்கிரம் சாப்பிட்டு வாருங்கள். என்றேன். தொடரும்

17 கருத்துகள்:

 1. அவரது பேச்சிலும் நடையிலும் அவசரம் இருந்ததை நான் கவனித்ததை காட்டிக்கொள்ளவில்லை///

  திடீரென ஆய்வுக்கு செல்கிறோம். //

  ஏதோ துப்பறிகிற மாதிரி விறுவிறுப்பான நிகழ்வுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வங்கியாளர்கள் விழிப்போடு இருப்பது நல்லது என்பதையே இந்த பதிவின் மூலம் கூற விரும்புகிறேன்.

   நீக்கு
 2. இனிமேல் மேலும் சுவாரஸ்யம் கூடுகிறது...

  ( மாட்டிக்கிட்டாரா...? ) காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 3. வழக்கம் போல் கடைசியில் தூண்டிலா!
  வங்கி மேலாளரின் பிரச்சினைகள் பற்றி அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
  கத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் பாராட்டு என்னை ‘வங்கி மேலாளர்கள் படும் பாடு’ என்ற தலைப்பில் தனிப்பதிவே போட தூண்டியிருக்கிறது. நன்றி.

   நீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களின் பாராட்டு என்னை ‘வங்கி மேலாளர்கள் படும் பாடு’ என்ற தலைப்பில் தனிப்பதிவே போட தூண்டியிருக்கிறது. நன்றி.

   நீக்கு
 4. Here we have something called credit history, meaning all of our financial background is maintained by independent organizations. So, the bank can easily check, if anyone defaulted anywhere. Even if someone defaulted phone bill, they will come to know. We can’t imagine such thing in India. Because it was easier (I don’t know now) to have multiple identities. For banks, the job is comparatively easier.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இங்கும் அது போன்ற சேவை வந்துவிட்டது. நான் சொல்லும் நிகழ்வு 1980 களில் நடந்தபோது இவ்வித வசதி இல்லை

   நீக்கு
 5. ஆய்வு என்பது பலருக்கு ஒரு formality ஆகவே உள்ளது. அதன் முக்கியதுவம் பலருக்கும் புரிவது இல்லை. RDO ஆக பணி புரிந்த தங்களிடம் அது பற்றி விளக்கமாக அறிவதற்கு ஆவலாக உள்ளோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் யோசனைக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! இந்த ஆய்வுகள் பற்றி தனிப் பதிவே எழுத இருக்கிறேன்.

   நீக்கு
 6. I confess. When I was a child, sometimes, when I wanted something (not need- but want- something just to show off to friends)- I end up asking for that thing from my parents the day before I need it. I would think that this would give them less time to think and validate my demand. But as most parents are, my parents were also smart and wouldn't yield to my demands that soon. :)So I guess, like charity, credit too begins at home... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதங்கி மாலி அவர்களே! சரியாய் சொன்னீர்கள். கேட்டவுடன் கிடைக்கும் எந்த பொருளுக்குமே மதிப்பு குறைவுதான்.

   நீக்கு
 7. சொல்லுங்க சொல்லுங்க வாடிக்கையாளர்களும் நானும் 39 ம் அரும அரும

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால சுப்ரமணியன் அவர்களே!

   நீக்கு
 8. சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடருங்கள், தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு செல்லப்பா யக்யசாமி அவர்களே!

   நீக்கு