சனி, 16 மார்ச், 2013

வாடிக்கையாளர்களும் நானும் 37அப்போது தமிழ் நாட்டில் ஒரு மாவட்டத் தலைநகரில் இருந்த கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் காலை சுமார் 11 மணி இருக்கும் எனது அறைக்கு காலை வணக்கம்! என ஆங்கிலத்தில் கூறிக்கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.

வந்தவரை அமர சொல்லி என்ன வேண்டும்?’ என விசாரித்தேன். அவர் அந்த ஊரில் இருந்த ஒரு புகழ் பெற்ற மகளிர் கல்லூரியில் தான் ஒரு  ஆங்கிலப் பேராசிரியை என்றும் தனக்கு எங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு இருப்பதாகவும் அதில் உள்ள இருப்புதொகை எவ்வளவு இருக்கிறது என அறிந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார். மேலும் அவரது சேமிப்புக் கணக்கின் இருப்புக் கையேட்டை (Pass Book) தந்து, அதுவரை உள்ள பற்று வரவு பதிவுகளை பதிந்து தர சொன்னார்.

உடனே அதை சேமிப்புக் கணக்கு பிரிவுக்கு அனுப்பி. பதிவுகளை பதிந்து தர சொன்னேன். அது திரும்பி வந்தபோது அதைப் பார்த்தபோது இருப்பு வெறும் பத்து ரூபாய் எனக் காட்டியது. மேலும் கணக்கு துவங்கிய பிறகு சில மாதங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை (அவரது சம்பள பணம் போலும்) வரவு வைக்கப்பட்டு பின் அவர் அதை எடுத்திருப்பதும், அதற்கு பிறகு எந்தவித வரவும் வைக்கப்படவில்லை என்பதையும் கவனித்தேன்.

அவரிடம் இப்போது உங்கள் சம்பள பணத்தை இங்கு வைப்பதில்லையா? வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஏன் எங்கள் வங்கியின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதில்லை? எங்கள் சேவையில் ஏதேனும் குறை உண்டா என நான் தெரிந்துகொள்ளலாமா?’எனக் கேட்டேன்.

அதற்கு அவர். அதெல்லாம்  ஒன்றுமில்லை. ஒரு தடவை உங்கள் வங்கியில் ஆசிரியர்கள் வாரம் கொண்டாடியபோது உங்கள் அலுவலர்கள் வந்து எங்கள் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து ஆசிரியர்களிடமும் சேமிப்புக் கணக்கு தொடங்க சொன்னார்கள்.

நானும் அப்போதுதான் இந்த கணக்கை ஆரம்பித்தேன். முதலில் சில மாதங்கள் சம்பள பணத்தை இங்குதான் எனது கணக்கில் போட்டு வந்தேன். எங்கள் கல்லூரி இங்கிருந்து சிறிது தூரத்தில் இருப்பதால் கணக்கை இயக்க எனக்கு கஷ்டமாக இருந்தது. எனவே கல்லூரிக்கு அருகில் புதிதாய் திறக்கப்பட்ட  வங்கிக் கிளை ஒன்றில் கணக்கை ஆரம்பித்துவிட்டேன். அதனால் தான் இங்குள்ள எனது கணக்கில் எந்த வித வரவும் இல்லை. மற்றபடி உங்கள் வங்கியின் சேவைபற்றி எந்தவித குறையும் இல்லை. என்றார்.

அப்படியானால்  சரி. சேமிப்பு கணக்கு அங்கேயே இருக்கட்டும். காலவரை வைப்புத் தொகையை (Fixed Deposit) இங்கு வைக்கலாமே?’ என்றேன். அதற்கு அவர் வைப்புத்தொகை வைக்கும் அளவுக்கு என்னிடம் சேமிப்பு இல்லை. ஆனால் உங்கள் வங்கி நல்ல சேவையைத் தந்ததால், என் கணவரிடம் சொல்லி உங்கள் வங்கியில் ஒரு பெருந்தொகையை நீண்டகால வைப்புத்தொகை வைக்க உதவி செய்கிறேன். என்றார்.

எனக்கு பயங்கர சந்தோஷம். நாம் வெளியில் செல்லாமலேயே ஒரு கணிசமான தொகை வைப்புத்தொகையாக வருகிறதே என்று. உடனே அவரிடம். மேடம்! சொல்லுங்கள் எப்போது வந்து உங்கள் கணவரைப் பார்க்க வேண்டுமென்று. இன்றே வரவேண்டும் என்றாலும் வருகிறேன். என்றேன்.

அதற்கு அவர், நீங்கள் அவரைப் பார்க்கவேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்குத் தான் செல்லவேண்டும். அங்குதான்  அவர் பொறியாளராக இருக்கிறார். நான் இன்று தொலைபேசியில் பேசும்போது உங்கள் வங்கியில் NRE/FCNR வைப்புத்தொகைகள் வைக்க சொல்கிறேன். நீங்களும் அவருக்கு கடிதம் எழுதுங்கள். என்றார்.

இன்றே அவருக்கு கடிதம் எழுதுகிறேன். நீங்கள் அவரது முகவரியைக் கொடுங்கள். என்றேன். அவரும் ஒரு தாளில் அவரது முகவரியை எழுதிக்கொடுத்து விட்டு அவரது கணவரிடம் பேசிவிட்டு வந்து பார்ப்பதாக சொல்லி சென்றார்.

அந்த பேராசிரியை சென்ற உடனேயே. அவர் கொடுத்த அவரின் கணவருக்கு  எங்கள் வங்கியின் சேவை பற்றியும் NRE வாடிக்கையாளருக்கு நாங்கள் தரும் வசதிகள் பற்றியும் எழுதி அவரை எங்கள் வங்கியில் ஒரு NRE கணக்கைத் தொடங்க கேட்டுக்கொண்டேன். அத்தோடு கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தையும் அன்றே அனுப்பினேன்.

மறுநாள் காலை அந்த பேராசிரியை திரும்பவும் வந்தார்.என்ன கடிதம் அனுப்பிவிட்டீர்களா?’ என்று விசாரித்தார். ஆமாம் மேடம். நீங்கள் சென்ற உடனேயே விரிவான கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன். நீங்கள் உங்கள் கணவரிடம் இது பற்றி பேசினீர்களா?’ என்றேன்.

அதற்கு அவர் நேற்றிரவே இது பற்றி பேசிவிட்டேன். அவர் உங்கள் வங்கியில் வைப்புத்தொகை வைக்க சரி என சொல்லிவிட்டார். மேலும் உங்கள் கடிதம் பார்த்து கேட்பு காசோலை அனுப்புவதாக சொல்லியுள்ளார். என்றார்.

அதற்கு நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. என்றதும், அவர்,’பரவாயில்லை. உங்களுக்காக எங்கள் ஊரில் எனது உறவினர்களிடமும் சொல்லியிருக்கிறேன். அவர்களும் உங்கள் வங்கியில் பணத்தை வைக்க தயாராக இருக்கிறார்கள். நீங்கள் நாளை வந்தால் குறைந்தது ரூபாய் 10 இலட்சம் வரை வைப்புத்தொகை கிடைக்கும். என்றார்.

எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நாளையே வருகிறேன். இடத்தை சொல்லுங்கள். என்றேன். அதற்கு அவர் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஊரின் பெயரைச் சொல்லி, அங்கு உள்ள மாதா கோவில் அருகே வந்து தன் பெயரை சொன்னால் அங்குள்ளவர்கள் தனது வீட்டைக் காண்பிப்பார்கள் என்று சொன்னார்.

நானும்  சந்தோஷத்தோடு மறு நாள் வருவதாக சொன்னேன். தொடரும்

19 கருத்துகள்:

 1. நானும் சந்தோஷத்தோடு மறு நாள் வருவதாக சொன்னேன்.

  சந்தோஷம் நிலைத்ததா என
  சந்தேகமாக இருக்கிறதே ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! என்னவாயிற்று என அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள்!

   நீக்கு
 2. கொஞ்சம் வில்லங்கம் வரும்போல் தோன்றுகிறதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வில்லங்கமா இல்லையா என்பது அடுத்த பதிவில்!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தொடர்வதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. If it sounds too good to be true ... most likely it is not true. Wait to see what happened.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்களது கூற்று மெய்யா என அறிய காத்திருங்கள்!

   நீக்கு
 5. மறு நாள் ஏதோ ஒன்று எதிர்பாராதது இருக்கும் என்று நினக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

   நீக்கு
 6. Respected Sir,
  I retired form IB. Last branch E A Puram.
  For the past 10 days I am visiting. Only today I wanted to write and hence this.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு Prinatgi அவர்களே!

   நீக்கு
 7. சந்தோஷம் நிலைத்திருக்குமா என்று அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! சந்தோஷப்பட்டது சரியா என சரி பார்க்க அடுத்த பதிவு வரை காத்திருக்கவும்.

   நீக்கு
 9. தாமதத்துக்கு மன்னிக்கவும்!என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியவில்லை!சரியாகக் கொக்கி போட்டு விட்டீர்கள்.காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

   நீக்கு
 10. மறு நாள் ஏதோ ஒன்று எதிர்பாராதது இருக்கும் என்று நினக்கிறேன்.

  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! நீங்கள் நினைத்தது சரியே.

   நீக்கு