புதன், 29 டிசம்பர், 2010

நினைவோட்டம் 34

அடுத்து என் நினைவுக்கு வருபவர் எங்கள் தலைமை
ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள். மிகவும்
கண்டிப்புக்கு பெயர் போனவர்.

மாணவர்கள் நன் முறையில் படித்து வெளிவர வேண்டும்
என்ற எண்ணம் கொண்டவர்.படிப்பைத்தவிர வேறு
எதிலும் கவனம் சிதறக்கூடாது என்பது அவரது கருத்து.

பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவத்தலைவனை (School Pupil Leader)தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அப்போதெல்லாம் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள்
பிப்ரவரி மாதமே தேர்வு முடிந்து சென்று விடுவதால்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே ஒருவரை,
ஆசிரியர்களே தேர்ந்தெடுத்து வருட ஆரம்பத்தில்
காலையில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
அறிவிக்கப்படுவது வழக்கம்.

இது சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை.'தேர்தல்
நடத்தாமலே ஆசிரியர்கள் விருப்பத்துக்கு SPL ஐ
தேர்ந்தெடுக்கிறார்களே. இதை நாம் எதிர்க்கவேண்டும்’
என முடிவெடுத்தனர்.

அந்த ஆண்டு ஆரம்பத்தில் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் SPL
தேர்ந்தெடுப்பது சொன்னதும், கூட்டத்திலிருந்து எனது
வகுப்பு மாணவர் ஒருவர்(பெயரை எழுதாமல்
விடுகிறேன்)‘சார்.இந்த ஆண்டு மாணவர்களிடையே
மனுக்களை பெற்று,தேர்தல் நடத்திதான் SPL ஐ
தேர்ந்தெடுக்கவேண்டும்.நீங்களாக தேர்வு
செய்யக்கூடாது’. என சொன்னதும் தலைமை ஆசிரியர்
கோபத்துடன்‘யார் அது? வெளியே வா.’ என்றார்.

அந்த மாணவன் தைரியத்தோடு வெளியே வந்ததும்
அருகில் அழைத்து ‘பளீர்’ என அவரது கன்னத்தில்
அறை விட்டார்.அதைப்பார்த்ததும் நாங்கள் அனைவரும்
சப்த நாடியும் ஒடுங்கி நின்றோம்.

காரணம் அந்த மாணவன் தான் பள்ளியிலேயே
உயரமான வாட்டசாட்டமான மாணவர். அவரையே
தலைமை ஆசிரியர் அடித்துவிட்டார் என்றதும்
எங்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது.

பிறகு அவர் ‘வேண்டுமானால் நான் சொல்லும்
இருவரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள்’ எனக்கூறி
இரண்டு மாணவர்கள் பெயரைக்கூறினார்.

நாங்கள் கைதூக்கி எங்களது வாக்கை பதிவு(!)
செய்து ஒருவரை தேர்ந்தெடுத்தோம்.

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இந்த கால
கட்டத்தில் இவ்வாறு மாணவர்களை அடிக்க முடியுமா?
அப்படி அடித்தால்தான் பெற்றோர்களும் மாணவர்களும்
சும்மா இருப்பார்களா என்று.

ஆனால் அப்போது இருந்த கண்டிப்பு ஓரளவுக்கு
தேவை என்றே கருதுகிறேன். மாணவர்களுக்கு
இளம் வயதிலேயே பள்ளியில் தேர்தல் நடத்தினால்
அவர்களுக்குள்ளே பிரிவும் வெறுப்பும் வரும்
என்பதினால்தான் அவர் அவ்வாறு செய்தார்
என நினைக்கிறேன்.

ஆனால் இன்றோ பொதுத்தேர்தலையும் தோற்கடிக்கும்
அளவுக்கு பள்ளிகளில் தேர்தல் நடக்கின்றன. மாணவர்கள்
இளம் வயதிலேயே அரசியல் கற்று(!) தங்கள்
வாழ்க்கையை பாழாக்கிக்கொள்கிறார்கள் என்பது
எனது தனிப்பட்ட கருத்து.

படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு கட்டுப்பாடு தேவை.
அது தற்சமயம் இல்லை என்பது வருத்தத்துக்கு
உரியதே.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 27 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 13

எனது ஓவியங்கள் 12 இல், என் பதிவுக்கு
வருபவர்களை 'துன்புறுத்த' விரும்பாததால்
இன்னும் ஓரிரு பதிவுகளோடு ஓவியங்கள்
பற்றிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு
மீண்டும் நினைவோட்டத்தை தொடர
எண்ணியுள்ளதாக எழுதியிருந்தேன்.

அவ்வாறே நினைவோட்டத்தை
தொடர்ந்தும் விட்டேன்.
விட்டுப்போன ஓரிரு ஓவியங்களை
இந்த பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்.


11 –01-1978 அன்று 'மாயா சித்ராலயா'
அனுப்பிய படத்தைப்பார்த்து வரைந்த படம் கீழே.





‘ மாடல்’ களைப்பார்த்து படம் வரைவதே
ஒரு தனி கலை தான். ஓவிய பயிற்சியின்
போது ஒரு மாடலைப்பார்த்து வரைய,
திரு மாயா அவர்கள் பணித்திருந்தார்.
என்னை ‘மாயா சித்ராலயா’வில் சேர
சொன்ன நண்பர் திரு ஸ்ரீதரை சுமார்
ஒரு மணி நேரம் உட்காரவைத்து
11 –01-1978 அன்று வரைந்த படம் கீழே.


சமீபத்தில் இந்த படத்தை அவருக்கு
மின் அஞ்சலில் அனுப்பி, ‘நினைவிருக்கிறதா’,
எனக்கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு
அந்த படம் வரைந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.





கீழே உள்ள படமும் ஒரு
சுண்டை செடியை பார்த்து அதே
நாளில் வரைந்தது




நான் வரைந்த படங்கள் அநேகம்
இருந்தாலும்,பழைய படங்கள்
பதிவேற்றுவதை தற்சமயம் நிறுத்திவைக்கிறேன்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

நினைவோட்டம் 33

பத்தாம் வகுப்பில் எங்களது வகுப்பு ஆசிரியர் A.K என

அழைக்கப்பட்ட திரு A.கிருஷ்ணசாமி அவர்கள்.

இவர் முகத்திலும் சிரிப்பை பார்ப்பது அபூர்வம்.


ஒருதடவை பள்ளிக்கு கடலூரிலிருந்து ஆய்வாளர்

வருகிறார் என்றதும், அவர் வரும் நேரம் பாடம்

நடத்த மன்னர் அசோகன் பற்றிய ஆங்கில பாடத்தை

முதல் நாளே நடத்தி, அதில் மறுநாள் கேட்கப்போகிற

சில கேள்விகளையும் பதில்களையும் சொல்லி,

யார் யார் எந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்

என்றும் சொல்லியிருந்தார்.


அதே போல் மறுநாள் ஆய்வாளர் வந்ததும்

தலைமை ஆசிரியர் அவரை அழைத்துக்கொண்டு

நேரே எங்கள் வகுப்புக்கு வந்துவிட்டார்.

முதல் வகுப்பு ஆங்கில வகுப்பு என்பதால்

திரு A.K அவர்கள் பாடம் நடத்திக்கொண்டு

இருந்தார்.


வகுப்புக்கு வந்த ஆய்வாளர் என்ன பாடம்

நடத்துகிறீர்கள் எனக்கேட்டுவிட்டு

அமர்ந்துவிட்டார். ஆசிரியர் பாடம் நடத்தி

முடிந்தவுடன் ஏற்கனவே சொல்லிவைத்தபடி

கேள்வி கேட்க தொடங்கினார்.


முதல் இரண்டு கேள்விகளுக்கு அவர்

சொல்லிக்கொடுத்தபடி இரு மாணவர்கள்

பதில் அளித்தனர். மூன்றாவது கேள்வியை

அவர் எங்கள் வகுப்பு தோழன்

திரு ராஜசேகரன் ராஸிடம் கேட்பதாக ஏற்பாடு.

திரு A.K அவர்கள், ‘ராஸ்’என கூப்பிட்டு

கேள்வி கேட்பதற்கு முன்பே அவன் எழுந்து

பதிலை சொன்னதும் நாங்கள் எல்லோரும்

எங்களை மறந்து சிரித்துவிட்டோம்.


உடனே ஆய்வாளார் அவர்கள் ‘ஏதேது பையன்கள்

கேள்வி கேட்கு முன்பே என்ன கேட்கப்போகிறீர்கள்

எனத்தெரிந்துகொண்டு பதில் சொல்கிறார்களே.

புத்திசாலிகள்தான். பேஷ்.பேஷ்.’ என சொன்னதும்

எங்கள் ஆசிரியர் முகம் போன போக்கை பார்க்கவே

பயங்கரமாக இருந்தது. ஆய்வாளர் போனதும்

ராஸுக்கு திட்டு கிடைத்தது வேறு கதை.


(இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர்

தங்கர் பச்சான் இயக்கி வெளிவந்த ‘பள்ளிக்கூடம்’

திரைப்படத்தில் பள்ளியில் ஆய்வாளர் வரும்போது

நடக்கின்ற சம்பவங்களை அவர் காண்பித்தபோது

எல்லா அரசுப்பள்ளிகளிலும், அன்றிலிருந்து இன்று

வரை இதுதான் நடக்கிறது போலும்

என நினைத்துக்கொண்டேன்.)


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 21 டிசம்பர், 2010

நினைவோட்டம் 32

மற்ற ஆசிரியர்களை பற்றி சொல்லவேண்டுமென்றால்

சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும்

சிலரை பற்றி மட்டும் எழுதலாம் என

நினைக்கிறேன்.



எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் அறிவியல் சொல்லிக்கொடுத்த

ஆசிரியர் S.R.N என அன்புடன் அழைக்கப்பட்ட

திரு S.R. நடராஜன் அவர்கள்.எப்போதும்

சிரித்த முகத்தோடு, மென்மையாக பேசி

பாடம் நடத்துவார்.நாங்கள் பயப்படாத

ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.



எங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் (S.S.L.C)

வகுப்புகளில் சமூகவியல் பாடம் நடத்திய

திரு P.திருஞானசம்பந்தம் அவர்கள்

மிகவும் கண்டிப்பானவர். அவர் முகத்தில்

சிரிப்பையே நாங்கள் பார்த்தது இல்லை.

எப்போதும் கடுகடு என்றே இருப்பார்.



எங்கள் வகுப்பு தோழன் திரு ராஜசேகரன் ராஸ்

அவரிடம் டியூஷன் படித்து வந்தான்.

அவன் எங்களிடம் 'P.T.S சார் பள்ளியில் தான்

அப்படி இருக்கிறாரே தவிர மற்றபடி

தனியாக பேசும்போது இதமாக பேசுவார்'

என்று கூறியிருந்தாலும் எங்களுக்கு

நம்பிக்கை இருந்தது இல்லை.



ஒருதடவை எனது காலாண்டு தேர்வு

விடைத்தாளை எடுத்து வைத்துக்கொண்டு

எல்லோர் முன்பும் "என்ன எழுதியிருக்கிறாய்?

ஒன்றுமே புரியவில்லை. பெரிய கலெக்டர்

என்று நினைப்பா?" என என்னை திட்டியபோது

மனதிற்குள் இவருக்காகவாவது கலெக்டர்

ஆகவேண்டும் என நினைத்ததுண்டு.


நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்???


மிகவும் சிரத்தையோடு பாடங்களை

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில்

இவரும் ஒருவர்.



எங்களுக்கு தமிழ் ஆசிரியர்

திரு குப்புசாமி அய்யா என்றாலும்

மற்றொரு தமிழ்ஆசிரியரான

புலவர் ஞானப்பிரகாசம் பிள்ளை

அவர்களைப்பற்றியும் இங்கே சொல்ல

விரும்புகிறேன்.



எப்போதும் வெள்ளை சட்டையும்

வேட்டியும்அணித்து வருவார்.

மிகவும் எளிமையானவர். எங்கள்

ஆசிரியர் வராதபோது எங்களுக்கு பாடம்

எடுத்திருக்கிறார். பார்த்தால் அமைதியாய்

இருப்பாரே தவிர யாரும் அவரிடம்

வாலாட்ட முடியாது. தமிழை

ஆர்ப்பாட்டமில்லாத நடையில்

எளிய முறையில் நடத்தியவர் அவர்.


அவர் மாதிரி தமிழ் ஆசிரியர்களை

தற்போது பார்க்கமுடியவில்லை

என்பது வருந்தக்கூடிய விஷயந்தான்.




நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

சனி, 18 டிசம்பர், 2010

நினைவோட்டம் 31

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில்
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களைப்பற்றி
எழுதும்போது,அடுத்து என்னால் மறக்க இயலாதவர்
எங்களது கணித ஆசான் திரு இராஜகோபால் ஆவார்கள்.


அப்போதெல்லாம் கணித வகுப்பை இரண்டாக
பிரித்திருப்பார்கள்.General mathematics என்றும்
Composite Mathematics என்றும் பிரித்திருப்பார்கள்.
அல்ஜீப்ரா, தேற்றம்(Theoram)போன்றவைகளை
Composite Mathematics ல் நடத்துவார்கள்.


பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம்(S.S.L.C) வகுப்பில்
நடத்தும் பாடங்கள் இரண்டிலிருந்தும் S.S.L.C தேர்வில்
கேள்விகள் வரும். எனவே ஒரே ஆசிரியர் நடத்தினால்
ஒரு தொடர்ச்சி இருக்கும் என்பதால்
பத்தாம் வகுப்பில் கணிதம் எடுக்கும் ஆசிரியரே
பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போதே பாடம்
நடத்துவார்.அதனால்தான் திரு இராஜகோபால்
அவர்கள் எங்களுக்கு இரண்டு ஆண்டுகள்
கணிதம்(Composite Mathematics )
சொல்லிக்கொடுத்தார்.


எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் இன்னொரு
கணித ஆசிரியர். அவர் General mathematics
எடுத்திருந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
பத்தாம் வகுப்பில் திரு இராஜகோபால் அவர்கள்
Composite Mathematics நடத்தியபோது எனது அண்ணன்
S.S.L.C மாணவர்களுக்குComposite Mathematics நடத்தினார்.


இதை எதற்காக எழுதுகிறேன் என்றால்,எனது அண்ணன்
எங்களுக்கு கணக்கு வகுப்பு எடுக்கவில்லை என்பதற்காக.
ஆனால் வீட்டில் அவர் மாணவர்களுக்கு டியூஷன்
சொல்லிக்கொடுக்கும்போது அவரிடம் படித்திருக்கிறேன்.
அது பற்றி பின் எழுதுகிறேன்.


திரு இராஜகோபால் அவர்கள் தி.மு.க அனுதாபி.
(அப்போதெல்லாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
படித்தவர்களில் பெரும்பாலோர் தி.மு.க வை
ஆதரித்தார்கள் என்பது உண்மை.) அவர் பாடம்
நடத்தும்போதே தி.மு.க பற்றி ஏதாவது சொல்லுவார்.



அதோடல்லாமல் கணக்கு போடும்போது அதன்
குறியீட்டுக்களை கூட தி.மு.க தலைவர்களின்
பெயர்களின் முதல் எழுத்துக்களை உபயோகித்தே
போடுவார்.அதாவது திரு அண்ணாதுரை மற்றும்
திரு கருணாநிதி அவர்கள் பெயர்களின் முதல்
எழுத்துக்களை உபயோகித்து,(a+b)2என்பதை
(அ+க)2 என்றே எழுதுவார்.



ஆனாலும் பாடங்களை மாணவர்கள் விரும்பும் விதம்
நடத்தினார். மாணவர்களிடையே நட்புரிமையுடன்
பழகினார். அதே நேரம் தவறு செய்தால் கண்டிக்கவும்
தயங்கமாட்டார்.


எனது வகுப்பு நண்பர் திரு துரைராஜ் அவர்கள்
(அப்போது 'கரிகாலன்' என்ற புனைப்பெயரில் கவிதை
எழுதுவார்.) கவிஞர் கண்ணதாசன் நடத்திவந்த
'தென்றல்' இதழில் வந்த ஒரு போட்டிக்கு அனுப்ப
எழுதிய ஒரு'வெண்பா'வை மறந்து போய் கணக்கு
நோட்டில் எழுதிவிட்டார்.


எங்கள் ஆசிரியர் அதைப்பார்த்ததும் அடிப்பாரோ என
நாங்கள் எண்ணியபோது,அவர் 'தம்பி!கவிதை
எழுத கணக்கு நோட்டை உபயோகிக்காதே.
வேறு நோட்டில்எழுதிப்பழகு' என சொல்லி
அவரை ஊக்கப்படுத்தியது எங்களுக்கெல்லாம்
ஆச்சரியத்தை தந்தது.


(தற்சமயம் முருகடிமை துரைராஜ் என்ற பெயரில்
திருவல்லிக்கேணியில் சோதிட நிலையம் நடத்திவருபவர்
எனது பள்ளி நண்பர் துரைராஜ் அவர்கள்தான்.)


அதே போல் பள்ளி இறுதியாண்டு முடிய ஒரு மாதம்
இருக்கும்போது ஒரு நாள் பாடம் நடத்தாமல் எங்கள்
அனைவரையும் ஒவ்வொருவரும் மேற்கொண்டு
என்ன படிக்கபோகிறோம் என்பதையும், என்னவாக
விரும்புகிறோம் என்பதையும் சொல்லச்சொன்னார்.


1960 களில், இன்று போல எந்த மாணவரும்
எதிர்காலத்தை பற்றி சிந்தித்தது இல்லை.
அதனால் எங்களில் அநேகம் பேர் 'தெரியவில்லை'
என்றதும், அவர் உரிமையோடு கடிந்துகொண்டு,
'நீங்கள் என்னவாக வேண்டும் என சிந்தித்தால்தான்,
அந்த இலக்கை அடைய முயற்சி செய்யமுடியும்'
எனச்சொல்லி, அப்போதே எங்களை எதிர்காலம்
பற்றி சிந்திக்க வைத்ததை இன்னும்
என்னால் மறக்க இயலவில்லை.


பள்ளியின் கடைசி நாளன்று அவரிடம் நான்
எனது 'ஆட்டோகிராப்' நோட்டில் கையொப்பம்
கேட்டபோது அவர் இவ்வாறு எழுதி
கையொப்பம் இட்டார்


"வாழ்கின்றார் முப்பத்து கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அவ்வளவு இருக்கும். அதை போக்க
நீ பாடுபடு'
என்று.


இப்போது நம் மக்கள் தொகை நூறு
கோடியைத்தாண்டிவிட்டது.
ஆனால் நம்மிடையே பேதங்கள் ?



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வியாழன், 16 டிசம்பர், 2010

துன்பம் எப்போதும் தொடர்கதை தான் !!



இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை.

ஆனால் துன்பமே தொடர்ந்து வந்தால்??


'பட்ட காலிலே படும்' என்பது போல், நம்மில்

அநேகருக்கு கஷ்டங்கள் ஒன்றன் பின்

ஒன்றாக வருவது உண்டு.


அந்த துன்பங்களை எவ்வளவு பேர் மனத்திடத்தோடு

எதிர்கொள்கிறோம் என்பது கேள்விக்கு உரியதே.


இன்றைக்கு இருக்கின்ற மாறுபட்ட சூழலில், நமக்கு

ஒரு சிறு துன்பம் வந்தால் கூட நாம்

அதைத்தாங்கிக்கொள்கின்ற பக்குவம் இல்லாமல்

மன உளைச்சல் கொண்டு நம்மை வருத்திக்கொண்டு

கவலைப்பட்டுக்கொண்டே வாழ்க்கையை கழிக்கிறோம்.


ஆனால் ஒரு விவசாயிக்கு அடுத்தடுத்து வந்த

சோதனைகள் பற்றி, ஒரு புலவர் எழுதிய பாடலை படித்தால்

'நல்லவேளை நமக்கு இவ்வாறு சோதனை வரவில்லையே'

என மகிழ்ச்சி கொள்ளலாம்.

இந்த பாடலை நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது படித்தது.


என் நெஞ்சைத் தொட்ட பாடல் இது.


ஒரு விவசாயின் வீட்டில் பசு மாடு கன்று போட,

அதிக மழையின் காரணமாக வீடு இடிந்து விழ,

அவரது மனைவிக்கு உடல் நலம் குன்ற,

நிலத்தில் வேலை செய்யும் ஆள் இறந்து போக,

நிலத்தில் ஈரம் குறையுமுன் விதைக்கலாமே என விதை

எடுத்துப்போகுமுன், வழியில் கடன்கொடுத்தவர் மறிக்க,

அப்போது இறப்பு செய்தி கொண்டு ஒருவர் வர,

தவிர்க்கமுடியாத விருந்தினர் ஒருவர் வர,

அந்த நேரத்தில் பாம்பு கடிக்க,

அரசுக்கு தரவேண்டிய  நில வரியைக்கேட்டு அரசு ஊழியர் வர,

குருக்கள் 'தட்சிணை' கேட்டு வர,

புலவர் ஒருவர் கவிதை பாடி பரிசு கேட்க,

அந்த மனிதரின் துன்பத்தை பார்க்கவே கஷ்டம் என்கிறார்.

இதோ அந்த பாடல்!


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்ந்நோவ வடிமை சாவ

மா ஈரம் போகுதென்று விதைகொண் டோட


வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டோருவ னெதிரே செல்லத்

தள்ளவோண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்

கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள் வந்து தட்சிணைக்கு குறுக்கே நிற்க

பாவாணர் கவிதை பாடி பரிசுகேட்க

பாவி மகன் படுந் துயரம் பார்க்கொணாதே




நமக்கு துன்பங்கள் வரும்போது நம்மைவிட

அதிக துன்பம் அனுபவிப்பவர்களை பார்த்து

'பரவாயில்லை. நமது துன்பம் இந்த அளவோடு

இருக்கிறதே' என எண்ணி அந்த துன்பத்தை

எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.


சனி, 11 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 12

நான் வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும்

'மாயா சித்ராலயா' வில் அஞ்சல் வழியில்

ஓவியம் முறைப்படி வரைய கற்றபோது

வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும்

இதுவரை இந்த பதிவில் பதிவேற்றம்

செய்துள்ளேன். நான் வரைந்த படங்கள்

அநேகம் இருந்தாலும் அவைகள் அனைத்தையும்

பதிவேற்றி, என் பதிவுக்கும் வருபவர்களை

'துன்புறுத்த' விரும்பாததால் இன்னும்

ஓரிரு பதிவுகளோடு இதை தற்காலிகமாக

நிறுத்திவிட்டு மீண்டும் 'நினைவோட்ட'த்தை

தொடர எண்ணியுள்ளேன்.



16 -10-1977 அன்று 'மாயா சித்ராலயா'

அனுப்பிய படங்களைப்பார்த்து வரைந்த

படங்கள் கீழே.










கீழே உள்ள படம் 'Indian Ink'

உபயோகித்து 25 -10-1977

அன்று வரைந்தேன்.




வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

சனி, 4 டிசம்பர், 2010

எனது ஓவியங்கள் 11

'மாயா சித்ராலயா' வில் அஞ்சல் வழியில் ஓவியம்

முறைப்படி வரைய கற்றபோது திரு மாயா அவர்கள்,

நம் வீட்டில் உள்ள சில பொருட்களைப்பார்த்து

வரைந்து அனுப்ப சொல்லுவார். அப்படி

16 -05-1977 அன்று வரைந்த படம் கீழே.





கீழே உள்ள படத்தை அவர்கள் அனுப்பிய

படத்தைப்பார்த்து 31 -05-1977 அன்று 'Indian Ink'

மூலம் புள்ளிகள் வைத்தேவரைந்தேன்.

என்னைப்பொறுத்தவரை நன்றாக வரைந்ததாக

எண்ணியபோது திரு மாயா அவர்கள் அதில்

உள்ள குறையை சுட்டிக்காண்பித்து இருந்தார்.




கீழே உள்ள படம்,'தினமணி கதிர்'பத்திரிக்கையில்

வந்த படத்தைப்பார்த்து 01 -09-1977 அன்று

வரைந்தது.




நான் வரைந்த ஓவியங்களில்,அதிக நேரம்

எடுத்துக்கொண்டது கீழே உள்ள படத்திற்குத்தான்.

சுமார் நான்கு மணி நேரம் கஷ்டப்பட்டு

இதை வரைந்தேன். வரைந்த பின் பார்த்ததும்,

நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை

என நினைத்தேன்.

வரைந்த நாள்: 16 -10-1977




வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

செவ்வாய், 30 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 10

கீழே உள்ள படங்கள் ' மாயா சித்ராலயா'அனுப்பிய

படங்களைப்பார்த்து 09 -01-1977 அன்று வரைந்தது.






கீழே உள்ள படம் ,' கல்கி' பத்திரிக்கையில்

திரு வினு அவர்கள் வரைந்திருந்த

படத்தைப்பார்த்து 07 -02-1977 அன்று வரைந்தது.




'Indian Ink' உபயோகித்து மேலே உள்ள

மூன்று படங்களையும் வரைந்திருந்தேன்



கீழே உள்ள படங்களும் 'மாயா சித்ராலயா'

அனுப்பிய படங்களைப்பார்த்து வரைந்ததுதான்.

வரைந்த நாள்: 09 -05-1977










வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 9

கீழே உள்ள படம் , 'தினமணி கதிர்'

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.



'பாவை விளக்கு' மேலட்டையில்

வந்த படத்தை பார்த்து 06 -12-1976

அன்று வரைந்த படத்தை

கீழே தந்திருக்கிறேன்.



கீழே உள்ள படம் , ஆனந்த விகடன்

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.





இந்த படத்திற்கு 'Good' என

திரு மாயா அவர்கள் மதிப்பிட்டிருந்தாலும்

45 மதிப்பெண்கள்தான் கொடுத்திருந்தார்.


மேலே உள்ள மூன்று படங்களையும்

'Indian Ink'

உபயோகித்து வரைந்தேன்.



கீழே உள்ள படம் , 'மங்கை' இதழில்

வந்த படத்தைப்பார்த்து Ball Pen ஆல்

நேரடியாக வரைந்தது.

வரைந்த நாள் 27 -12-1976 .




வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 8

பழைய பதிவுகளில் சொல்லியதுபோல்

அஞ்சல் மூலம் ஓவியம் கற்றபோது

அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும்,

மற்ற இதழ்களில் வந்த படங்களை

பார்த்து போட்ட படங்களையும்

கீழே தந்திருக்கிறேன்.


கீழே உள்ள படம் , 'ஆனந்த விகடன்'

அட்டைபடத்தைப்பார்த்து, 18 -10-1976 அன்று

வரைந்தது.ஆனால் இந்த படம் எனக்கு

முழு நிறைவை தரவில்லை.காரணம்

அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல்

நேரடியாக Ball Point பேனாவால்,

வரைந்ததால் சிறு தவறுகளை

திருத்த இயலவில்லை.




கீழே உள்ள படம் , ஒரு பத்திரிக்கையில்

வந்த புகைப்படத்தைப்பார்த்து

24 -10-1976 அன்று வரைந்தது.

அப்போதுதான் தெரிந்தது,

புகைப்படத்தைப்பார்த்து வரைவது

அவ்வளவு சுலபமல்ல என்று.





கீழே உள்ள படங்கள் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து 24 -10-1976

அன்று வரைந்தது.








வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

புதன், 17 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 7

மாயா சித்ராலயாவில் அஞ்சல் மூலம் ஓவியம்

கற்றபோது அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும், மற்ற

இதழ்களில் வந்த படங்களை பார்த்து

போட்ட படங்களையும் கீழே தந்திருக்கிறேன்.



கீழே உள்ள படம், எனக்கு வந்த வாழ்த்து

அட்டையைப்பார்த்து 28 -01-1976 அன்று வரைந்தது.





கீழே உள்ள படங்கள் அதே நாளில் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து வரைந்தது.









கீழே உள்ள படம்,'கல்கி'யில் வந்த

அட்டைபடத்தைப்பார்த்து

11 -10-1976 அன்று வரைந்தது.







வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 6

1976-1980 களில் மணிப்பாலில் பணி புரிந்தபோது ,

உடுப்பில் தங்கியிருந்தேன்.

அங்கு உடுப்பி பாரத ஸ்டேட் வங்கியில்

மேலாளராக இருந்த திரு C.S.இராதாகிருஷ்ணன்

அவர்களது மகன் திரு ஸ்ரீதர் எனது

ஓவியங்களைப்பார்த்துவிட்டு'நீங்கள் ஏன் ஓவியர்

திரு மாயா நடத்தும்,மாயா சித்ராலயாவில்

சேர்ந்து முறைப்படி அஞ்சல் மூலம் ஓவியம்

கற்கக்கூடாது?' என சொன்னார்.


அவரும் அதில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாக

சொன்னதும்,நானும் உடனே சேர்ந்துவிட்டேன்.

மாதம் ரூபாய் 12 தான் கட்டணம்.

படிப்பு காலம் இரண்டு ஆண்டுகள்.


முதலில் பென்சில் உபயோகித்து வட்டங்கள்,

கோடுகள், வளைவுகள் போடவேண்டும். பின்பு

அவர்கள் அனுப்பும் படங்களைப்பார்த்து

போடவேண்டும்.


படங்களை அஞ்சலில் அனுப்பினால்

ஓவியர் திரு மாயா அவர்களே அதை திருத்தி

அவரது குறிப்புகளோடு அனுப்புவார். நம்மையும்

காணும் சில பொருட்களை பார்த்து படம்

போட்டு பழகச்சொல்லுவார்.


பென்சிலால் போட்டு பழகியபின், இந்தியன் இங்க்

உபயோகித்து படம் போடவேண்டும். பின்பு பிரஷ்

மூலம் படம் போட பழக்குவார்கள். கடைசியில்

வண்ணபடங்கள் போடுவதையும் சொல்லித்தருவார்கள்.

இடையிடையே தேர்வுகளும் உண்டு.


பணிச்சுமை காரணமாக என்னால்

பதினெட்டு மாதங்களுக்கு பிறகு அஞ்சல்

படிப்பை தொடர இயலவில்லை.

ஆனாலும் முறைப்படி ஓவியம் வரைவது

எப்படி என்பதை கற்றுக்கொண்டது நிஜம்.


திரு மாயா அவர்கள் மிகவும் பொறுமையோடு

எனது பா(ப)டங்களை திருத்தி என்னை

வழி நடத்தியதை இந்த நேரத்தில்

சொல்லியே ஆகவேண்டும். ஒருவேளை

முழுமையாக அவரிடம் பயின்றிருந்தால்

நல்ல ஓவியனாகியிருப்போனோ என்னவோ!!


மாயா சித்ராலாயாவில் 1976-1977 களில்,

ஓவியம் கற்றபோது போட்ட

சில படங்களை அடுத்த பதிவுகளில்,

வெளியிட இருக்கிறேன்.

புதன், 3 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 5

கீழே உள்ள படங்கள் பொள்ளாச்சியில் பணி

புரிந்தபோது,குமுதத்தில் வந்த கார்ட்டூன்களைப்பார்த்து,

27 -03-1971 அன்று Ball Point பேனாவால் இரவு 9 .15 மணிக்கு

வரையப்பட்டது









குமுதத்தில் வந்த அப்புசாமியும் சீதாப்பாட்டியும்

என்ற கதைக்கு,ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களால்

வரையப்பட்ட படத்தைப்பார்த்து 21- 06 -1971 ல்

இரவு 9 .10 க்கு வரைந்த படம் கீழே.






கீழே உள்ள படம் குமுதத்தில் வந்த திரு கருணாநிதி

அவர்களுடைய படத்தைப்பார்த்து,20-07-1972 ல்

இரவு 10.25 க்கு வரையப்பட்டது.






1973 மார்ச் மாதம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை

நிறுத்தம் செய்தபோது,அதை எவ்வாறு தமிழக அரசு

கையாண்டது என்பதை குறிக்கும் விதமாக குமுதம்

28- 03 -1973 தேதியிட்ட இதழில் வெளியிட்ட

கார்ட்டூனைப்பார்த்து,25- 03 -1973 ந்தேதி

இரவு 10 .05 க்கு வரைந்த படம் கீழே.







இவைகள் யாவும் Free Hand ல் அழிப்பான் (Eraser)

உபயோகப்படுத்தாமல் வரைந்ததுதான் .





வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 4

எனக்கு கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் கார்ட்டூன்படங்களைப்பார்த்ததும் உடனே அவைகளைப்பார்த்து வரைந்து இருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை கார்ட்டூன் படங்கள் வரைவது
கடினம் என எண்ணுகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் பொள்ளாச்சியில் பணி
புரிந்தபோது,குமுதத்தில் வந்ததைப்பார்த்து,
14-11-1970 அன்று வரைந்தது.

இந்த கார்ட்டூனை Ball Point பேனாவால் இரவு 9 .40 மணிக்கு
வரைந்தேன்




கீழே உள்ள கார்ட்டூனையும் குமுதம் இதழைப்பார்த்து

அதே நாள் இரவு 9 .45 மணிக்கு Ball Point பேனாவால்,

வரைந்தேன்.



கீழே உள்ள கார்ட்டூன் படங்களை, 29 -11 -1969 அன்று,

குமுதம் இதழைப்பார்த்து Ball Point பேனாவால்,

இரவு 8 .10 க்கும், 8 .30 க்கும் வரைந்தேன்.



திரைப்பட இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்களின்
சித்ராலாயாவின் 'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற
படத்தின் விளம்பரத்தைப்பார்த்து கீழே உள்ள
படத்தை வரைந்தேன்.
வரைந்த நாள் 13 - 02 -1971.நேரம் மாலை மணி 6 .50




இந்த படங்கள் அனைத்தும் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 3

புது தில்லியில் பணி புரிந்தபோது , 'பால்கி' என்ற இந்தி
திரைப்பட விளம்பரத்தைப்பார்த்து,27-08-1968 அன்று
வரைந்தது கீழே உள்ள படம்.
(இந்த திரைப்படத்தில் வஹிதா ரஹ்மானும்,
ராஜேந்திர குமாரும் நடித்தாக நினைவு.)
இந்த படத்தை Ball Point பேனாவால்
மாலை 5 மணிக்கு வரைந்தேன்




கீழே உள்ள படங்கள் 02-10-1968 தேதியிட்ட ஆந்திர பிரபா இதழில் வந்த படத்தைப்பார்த்து,01 -10-1968 அன்று, Ball Point பேனாவால், வரைந்தது.
நேரம் இரவு பத்து மணி.








கீழே உள்ள படம் திரு கருணாநிதி அவர்கள்,
அண்ணா மறைவுக்குப்பின் முதல்வர் ஆனபிறகு
அவரைப்பற்றி Film Fare இதழில் வந்த
கட்டுரையின் கூட வந்த போட்டோவைப்பார்த்து ,
15 -o4 -1969 அன்று, பெங்களூருவில் பணி புரிந்தபோது,
Ball Point பேனாவால், வரைந்தது. நேரம் இரவு 10.30






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 21 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 2

கீழே உள்ள படம் 1968 ல் புது தில்லியில், தேசிய விதைக்
கழகத்தில் பணி புரிந்தபோது , 27-06-1968 தேதியிட்ட குமுதம்
இதழில் வந்த படத்தைப்பார்த்து, 23 -06-1968 ல் வரைந்தது.





கீழே உள்ள படம் 04-07-1968 தேதியிட்ட குமுதம் இதழில்
வந்தபடத்தைப்பார்த்து, 30 -06-1968 ல் வரைந்தது.
(அப்போதெல்லாம் குமுதம் வெளியிடும் தேதிக்கு முன்பே கடைக்கு வந்துவிடும்)





கீழே உள்ள படம் 21-07-1968 அன்று வெளிவந்த ஆனந்த
விகடனின் அட்டைப்படத்தை பார்த்து 28 -08 -1968 ல் வரைந்தது.






இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

திங்கள், 18 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 1

கீழே உள்ள படம் 1967 ல் கர்நாடக மாநிலம் (அப்போது மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்டது ) தார்வாரில், தேசிய விதைக் கழகத்தில் பணி புரிந்தபோது வரைந்தது.

18-09-1967 அன்று வெளிவந்த ஒரு செய்தித்தாளில் வெளியான ஒரு இந்தி படத்தின் விளம்பரத்தைப் பார்த்து வரைந்தேன்.








அந்த விளம்பரத்தில் அந்த குழந்தை அழுதுகொண்டே நடப்பதுபோல் வெளியான அப்படம் ஏனோ என்னைக்கவர்ந்தது. உடனே அதை வரையவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், கையில் கிடைத்த தாளில், Ball Point பேனா கொண்டு வரைந்தேன்.

இந்த படம் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்தேன்.

வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

வியாழன், 14 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள்

ஓவியம் வரையும் ஆர்வம் எப்படி எனக்கு ஏற்பட்டது எனத்தெரியவில்லை.அரியலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மாணவர்களுக்காக ஒரு ஓவிய போட்டி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு ஆர்வத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமலே அதில் கலந்துகொண்டேன்.

எங்களை ஒரு இயற்கை காட்சியை வரையச்சொன்னார்கள். ஒரு ஆறும், அதில்
ஒரு படகும், அருகில் ஒரு தென்னை மரமும் , மற்றும் எதிர் கரையில் ஒரு மலையும் உள்ளது போல் படம் வரைந்தேன். பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் பலபேருக்கு நடுவில் தரையில் அமர்ந்து படம்
போட்ட ஒரு இனிய அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அரியலூர் மற்றும் பெண்ணாடம் பள்ளிகளில் ஓவிய
வகுப்பு இல்லாததால் என்னால் ஓவியம் வரையும் முயற்சியை தொடர முடியவில்லை. ஆனால் விருத்தாசலம் பள்ளியில்எங்களுக்கு ஓவிய வகுப்பு இருந்தது. எங்கள் ஓவிய ஆசிரியர் திரு ஜெயராமன் அவர்கள் மூன்று வருடங்களும் சொல்லிக்கொடுத்த முறை எனக்கு ஓவியம் வரைவதில் ஒரு விருப்பத்தை உண்டாக்கியது.

அதுவும் அவர் கரும்பலகையில் பூக்களின் Design ஐ
பாதியாக வரைந்து. அதைப்பார்த்து எங்களது ஓவிய
நோட்டு புத்தகத்தில் முழு Design யும் வரையச்சொல்லி
பழக்கியது, பின்னால் ஒரு படத்தைப்பார்த்து Free Hand
முறையில் படம் வரைய உதவியது.

பத்தாம் வகுப்பில்'தண்டலை மயில்கள் ஆட" என்ற
கம்ப இராமாயண பாடலுக்கு படம் வரைந்து பார்த்ததும்,
நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறையில், இளம் அறிவியல்
பட்ட படிப்பில் சேர்ந்தபோது தான்ஓவியம் வரையத்தெரிவது எவ்வளவு
முக்கியம் எனத் தெரிந்துகொண்டேன்.

காரணம் விலங்கியல், தாவரவியல்,பூச்சிஇயல் போன்ற பாடங்களில் செய்முறை வகுப்புகளில் குறிப்பிட்ட
செடியையோ அல்லது விலங்கு அல்லது பூச்சியை படம்
வரைந்தோ தான் விளக்குவார்கள்.

அதோடல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும்
தாவரகுடும்பத்தில்ஒவ்வோவோன்றிலிருந்தும் ஒரு செடியை பூக்களோடு கொடுத்து அதைப்பார்த்துவரையச்சொல்வார்கள். எனவே அவைகளை எங்களது Record Note களில்வரைந்து ஆசிரியர்களிடம் காட்டி கையொப்பம் பெறவேண்டும்.அப்படி பெற்றால் தான் செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் பெறமுடியும்.

எனக்கு பள்ளியில் கற்ற அனுபவத்தால் எந்த ஒரு
Specimen யும் பார்த்துவரைவது சுலபமாக இருந்தது. நான் சுலபமாக படம் போடுவதை பார்த்தஎனது வகுப்பு தோழர்கள் அவர்களது Record லும் என்னை வரையச்சொல்லி கேட்டபோது,தயங்காமல் வரைந்துகொடுத்தேன். அது பின்னால் தேர்வில் அந்த படங்களை சுலபமாக வரைய எனக்கு உதவியது.

எங்களது துறையின் ஆண்டுமலருக்கு
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களது உருவத்தை
Indian Ink ல் நான் வரைந்து தந்ததும் அந்த படம் ஆண்டு
மலரில் வெளியானதும் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

கல்லூரியை விட்டு வந்தபிறகு ஓவியம் வரைவதை
மறந்தேவிட்டேன். 1967 ல் கர்நாடகாவில் உள்ள தார்வார்
என்ற ஊரில் பணி செய்தபோது,தனிமை என்னை
வாட்டியபோது அதை மறக்க ஓவியம் வரைந்தாலென்ன
என யோசித்து வரையத்தொடங்கினேன்.

அப்படி வரைந்த சில படங்களை இந்த பதிவில் வெளியிட இருக்கிறேன்.

அவைகள் அடுத்த பதிவில் ......

புதன், 6 அக்டோபர், 2010

நினைவோட்டம் 30

எந்த ஒரு நிகழ்வையும் நினைவில் இருத்த, அதோடு தொடர்புடைய நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை நினைவில் வைத்தால் அந்த நிகழ்வை எப்போதும் மறக்காமல் இருக்கமுடியும் என்பதே எங்கள் ஆசான் திரு M .R .G எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது.

குறு நில மன்னர்கள் தத்து எடுப்பதை தடுக்க கொண்டுவந்த திட்டம் யாரால்
கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் இருத்த, 'தத்து எடுப்பது எப்போது நடைபெறும்?' என எங்களிடம் கேட்டார்.

'நாங்கள் குழந்தை இல்லாதபோது' என சொன்னபோது 'குழந்தை இல்லாத வீடு எப்படி இருக்கும்?' எனக்கேட்டு அவரே சொன்னார். "Dull ஆக இருக்கும். அதாவது அந்த House Dull ஆக இருக்கும். இதை நீங்கள் நினைவில் வைத்தால் அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் Dalhousie பிரபு என சுலபமாக சொல்லிவிடலாம்" என்று.

அது போல மன்னர் அக்பர் தன்னுடைய குதிரைப்படையில் உள்ள குதிரைகளை யாரும் களவாடி செல்லாமல் இருக்க, கால் நடை மருத்துவர்கள் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை பரிசோதித்தபின் அவைகளுக்கு முத்திரை இடுவதுபோல், அந்த குதிரைகளின் உடலின்மேல் எண்ணிக்கை முத்திரை (Tattoo) வைத்தார் என சொன்னது இன்றும் நினைவுக்கு வருகிறது.

அப்போதெல்லாம் S.S.L.C தேர்வில், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி இறுதி படிப்பான S.S.L.C வரை சொல்லிக்கொடுத்த சமூகவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்பார்கள் என்பதால் ஒன்பதாம் வகுப்பில் படித்ததையும் மறக்காமல் இருந்து தேர்வு எழுதவேண்டும்.

எனவேதான் எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையால் எங்களுக்கு தேர்வு எழுத எந்த கஷ்டமும் இருந்தது இல்லை.

அவர் சொல்லிக்கொடுத்தது 1956 ல். ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நினைவில் இருக்கிறது என்றால் அவர் சொல்லிகொடுத்த முறைதான்.

அவரது பயிற்சி எவ்வாறு பிறகு நான் வங்கியில் பணிபுரிந்தபோது உதவியது என்பதை பின்னால் எழுதுகிறேன்.

என்னால் இன்னும் மறக்க முடியாத ஆசிரியர்களில் திரு M.R.G அவர்களும் ஒருவர்.





நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

சனி, 25 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 29

அப்போதெல்லாம் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியராக இருப்பார்கள்.
அவர்கள் ஆங்கிலம் அல்லாமல் வேறொரு பாடமும் எடுப்பார்கள்.

அப்படி எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்த
M.R.G என அன்புடன் அழைக்கப்பட்ட திரு.M.R.கோவிந்தசாமி அவர்கள்,
ஆங்கிலத்தோடு சமூகவியல் (Social Studies ) பாடமும் நடத்தினார்.

அவருடைய வகுப்பு என்றாலே எங்களுக்கு சந்தோஷம் தான். ஆங்கில படத்தையும், சமூக பாடத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நகைச்சுவையோடும்,உவமையோடும் அவர் நடத்தியதால்,அவரது வகுப்புகளை எவரும் தவற விட்டதில்லை.

சமூக இயல் பாட வகுப்பு என்றால், அநேகருக்கு நான் முன்பே சொன்னதுபோல் அது எட்டிக்காய்தான்.
அந்த பாடத்தில் வரும் வரலாற்று சம்பவங்களையும் அது நடைபெற்ற வருடங்களையும், தேதிகளையும் நினைவில்
இருத்தி தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்ததுதான் காரணம்.

எட்டாம் வகுப்பில் எப்படி எங்கள் ஆசிரியர் திரு E .C. நாத் அவர்கள் சமூகவியல் பாடத்தை சுவைபட நடத்தி விரும்பச்செய்தாரோ,அது போல
திரு M.R.G அவர்கள் சிரிக்க சிரிக்க பேசி அந்த பாடத்தின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கினார் என்பதே நிஜம்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இருந்த கவர்னர் ஜெனெரல்கள் பெயர்களையும்,அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தம் அல்லது சட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டபோது,
திரு.M.R.G அவர்கள் அவைகளை நினைவில் வைக்க மிக
சுலபமான வழிகளை சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அப்போது இருந்த சமஸ்தானங்களின்(Princely states)
குறுநில மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்து
இறந்தால்,அவர்களுக்கு பின் அந்த சமஸ்தானங்களை
ஆள குடி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு
முடிசூட்டுவது வழக்கமாக இருந்தது.

இதை ஒழிப்பதற்காக, அப்போது இருந்த கவர்னர் ஜெனெரல் ஒருவர் அந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி,அவைகளை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர ஏற்படுத்தியதுதான் Doctrine of lapse
எனப்படும் தத்து எடுப்பதை தடுக்கும் திட்டம்.

அந்த திட்டத்தை கொண்டுவந்தது யார் என்பதை நினைவில் இருத்த எங்கள் M.R.G அவர்கள் சொன்னது ....?

புதன், 8 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 28

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டவை அநேகம். அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வணங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.

எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.

அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.

ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.

அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.

(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)

எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.

இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.

'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 27

ஒரு வழியாக எனது அண்ணனுக்கு விருத்தாசலம்
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.

விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.

விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.

வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.

சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.

நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.

காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),

ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),

ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),

ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),

ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),

ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),

அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.

சாப்பாடு 50 பைசா தான்.

(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)



நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 26

நான் விருத்தாசலத்தில் மூன்று ஆண்டுகள் அதாவது 1957 ஜூன் முதல் 1960 பிப்ரவரி வரை படித்தேன்.

(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)

நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.

என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!

இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.

திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.

இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!

இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.

இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.

இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.

இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வெள்ளி, 23 ஜூலை, 2010

எனக்குப்பிடித்த பாடல்கள் 7

சாதிகள் எத்தனை சாதியடி!


ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.

இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.

எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.

காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.

இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.

இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.

இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.

இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.

இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி


என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.

'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.

ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!

வியாழன், 15 ஜூலை, 2010

நினைவோட்டம் 25

இன்றைக்கு நாம் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் கூட நடந்து செல்வதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது ஆட்டோ (அ) ஷேர் ஆட்டோவிலோ பயணிக்கிறோம்.

ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.

பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.

காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.

காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)

காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.

வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.

வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.

ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

புதன், 30 ஜூன், 2010

நினைவோட்டம் 24

விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபோது எதிர்பார்த்தது போலவே, நான் மூன்றாம் படிவத்தில்(எட்டாம் வகுப்பில் ) தேர்ச்சி பெற்றிருந்தேன்.

முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.

பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.

ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.

எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.

முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.

ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 15 ஜூன், 2010

நினைவோட்டம் 23

நான் படித்தபோது பெண்ணாடம் சிறிய ஊராக இருந்தபோதும், பஸ், ரயில் போன்ற வசதிகள் இருந்தன.ஆனால் மின்வசதி இல்லாததால் லாந்தர் விளக்குகள்தான் உபயோகத்தில் இருந்தன.

ஆனால் ஒவ்வொரு தெருவிலும் ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட விளக்கு கம்பங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரவு முழுவதும் எரிவதற்கு ஏற்பாடு செய்திருந்ததால் மின் வசதி இல்லாத குறை தெரியவில்லை.

பேரூந்து நிறுத்தத்திலிருந்து இரயில் நிலையம் வரை வரிசையாய் இரு மருங்கிலும் மரங்கள் அணி வகுத்து நிற்பது ஒரு கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (ஆனால் இன்றோ அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு வரிசையாய் கான்க்ரீட் கட்டிடங்கள் அவைகளின் இடத்தை
ஆக்கிரமித்துள்ளன.)

அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சமே பெண்ணாடத்தில் இருந்ததில்லை. நிலத்தடி நீர் சுமார் பத்தடிக்கு கீழேயே கிடைத்ததால் ஒவ்வொரு வீட்டிலும் கைகளால் இயக்கும் நீரேற்றும் பம்புகள் இருந்தன.

இருந்தாலும் நான் இருந்த தெருவில் உள்ள என் வயது பையன்கள் அனைவரும் அருகே ஓடும் கால்வாய்க்கு சென்றே குளித்துவருவோம். போகும் வழியில் உள்ள இலுப்பை தோப்பினூடே காலையில் செல்வது ஒரு இனிய அனுபவம். (இப்போது அந்த இலுப்பை தோப்பும் காணாமல் போய்விட்டது.)

காலையில் வீட்டை விட்டு 6 மணி சுமாருக்கு குளிக்க கிளம்பினால் வாய்க்காலில் கும்மாளம் போட்டுவிட்டு திரும்பும்போது 7 மணிக்கு மேல் ஆகிவிடும். வந்தவுடன் பெரியம்மாவின் சொல்படி திருநீறு பூசி ,சாமி கும்பிட்டுவிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்ல தயாராவேன்.

பள்ளிக்கு நாங்கள் ஒரு கூட்டமாக சென்று மதிய இடைவேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வோம். இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. மதிய இடைவேளை நேரம் ஒரு மணி நேரம்தான். அதற்குள் ஓடோடி வந்து (காலில் செருப்பில்லாமல் தான்) சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும். காரணம் நான் முன்பே சொன்னபடி எங்கள் வகுப்பு அறைகள், பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால்.

மாலையில் இந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவிவிட்டு காப்பி குடித்துவிட்டு, இரவு படிப்பதற்காக லாந்தர் விளக்கின் கண்ணாடியை துடைப்பேன். அந்த லாந்தர் எனது பெரியம்மாவால் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டதாம். ஒவ்வொரு நாளும் அதை எடுக்கும்போதும் எனது பெரியம்மா 'பார்த்து துடைப்பா.பத்திரம். இதை நான் வாங்கி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. கீழே போட்டுவிடாமல் மெதுவாக துடை' என்பார்கள்.

லாந்தரை எடுத்து, அதன் கம்பி கூட்டிலிருந்து கண்ணாடியை வெளியே எடுத்து என் மடி மீது வைத்துக்கொண்டு விபூதியைக்கொண்டு, அதை துடைத்து, திரும்பவும் மாட்டுவதற்குள் வேர்த்து விறுவிறுத்துவிடும். அப்படி ஒரு நாள் துடைக்கும்போது , அதை கீழே போட்டு உடைத்துவிட்டேன். அதற்காக பெரியம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் மறக்க முடியாதவை.

இந்த நேரத்தில் எனது பெரியம்மாவைப்பற்றி சொல்லவேண்டும். அவர்கள் இளம் வயதிலேயே திருமணமாகி, அறியாப்பருவத்திலேயே கணவனை இழந்தவர்கள். அதனால் எந்த நேரமும் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பார்கள். தினம் சாமி கும்பிட்டுவிட்டுதான் எதையும் தொடங்கவேண்டும் என்று சொல்வார்கள். என்னிடம் கண்டிப்பாக இருந்தாலும், என் பேரில் ஆசையாக இருந்தார்கள்.

எனக்காக அவர்கள் தன் சௌகரியத்தை பாராது, என் விருப்பப்படி சமையல் செய்து என்னை படிக்கவைத்ததை இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த ஆண்டு பள்ளியில் ஒரு கட்டுரைப்போட்டி வைத்திருந்தார்கள். எதோ ஒரு குருட்டு தைரியத்தில் நானும் கலந்துகொண்டேன். கட்டுரையை பாதி எழுதும்போதே பேனாவில் மை தீர்ந்துவிட்டதால் மேலே எழுதமுடியாமல் தாளை கொடுத்துவந்துவிட்டேன். போட்டியின் முடிவை அறிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதில் மூன்றாவது பரிசு எனக்கு கிடைத்து இருந்தது.

பரிசாக பெண்ணாடத்தில் அப்போது இருந்த 'புதுமை பிரசுரம்' என்ற நூல்கள் வெளியிடும் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட 'கடல் கன்னி' என்ற புதினம் ஒன்றை கொடுத்தார்கள்.

கல்வி ஆண்டு முடிந்தபோது, 'ப்ராத்மிக்' என்ற இந்தி தேர்வையும், எட்டாம் வகுப்பின் இறுதித் தேர்வையும் எழுதிவிட்டு ஊருக்கு திரும்பினேன். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது வேறு ஊருக்கு செல்லவேண்டும் என்பதை நினைத்தபோது வருத்தமாக இருந்தது.

ஏனெனில் அரியலூரைவிட பெண்ணாடத்தில் சுதந்திர காற்றை சுவாசித்தேன் என்பதால்தான்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 10 ஜூன், 2010

நினைவோட்டம் 22

தமிழ் ஆசிரியரும்இந்தி ஆசிரியரும் வகுப்பில் தேர்தலை பற்றி சொல்லச்சொல்ல எனக்கு அதில் நாட்டம் வந்ததென்னவோ உண்மை. எனவே தினம் தேர்தல் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அப்போதெல்லாம் வாக்கு சீட்டில் முத்திரை இடும் முறை பின்பற்றப்படவில்லை.ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவைகள் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் விரும்பும்(?) வேட்பாளர்களின் பெட்டியில் போடவேண்டும்.

விவரம் தெரியாதவர்கள் பெட்டியின் மேலேயே சீட்டை வைத்து வருவதுண்டு. அவர்களுக்கு பின்னால் செல்பவர் அதை எடுத்து தாங்கள் விரும்பும் பெட்டியில் போடுவதும் உண்டு. (ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் தருவதற்கு பதிலாக வண்ணம் கொடுத்திருந்தார்கள். எனவே வாக்கு பேட்டிகள் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்திலேயே இருக்கும். )

1957 பொது தேர்தல், தமிழ் நாட்டு மக்களை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அண்ணா மற்றும் தி மு க முன்னணி பேச்சாளர்களின் மேடைப்பேச்சும், தி மு க வெளியிட்ட விளம்பர சுவரொட்டிகளும்அவற்றுள் சில.

அப்போது பெண்ணாடம் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் சார்பில் திரு ராஜவேல் படையாட்சி அவர்களும், தி மு க சார்பில் திரு செல்வராஜ் அவர்களும் ,கம்யுனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளராக திரு வீராசாமி படையாட்சி அவர்களும் போட்டியிட்டது நினைவுக்கு வருகிறது.காங்கிரசுக்கு இரட்டை காளைகள் சின்னமும் தி மு க விற்கு உதய சூரியன் சின்னமும் இருந்தது.

தேர்தல் சமயத்தில் தினம் ஒவ்வொரு கட்சி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கும் அதன் பின் நடக்கும் தேர்தல் நாடகத்தையும் பார்க்க நாங்கள் கூட்டமாக சென்றது உண்டு.

அந்த தேர்தலில் தான் தி மு க, அதுவரை அபேட்சகர் என அழைக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாகவும், ஓட்டுகளை வாக்குகள் எனவும் அழைக்கும் முறையை கொண்டுவந்தது.

தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தி மு க வை சேர்ந்த திரு செல்வராஜ் வெற்றிபெற்றபோது பெண்ணாடம் விழாக்கோலம் பூண்டது உண்மை.

அவர் வெற்றி பெற்றது, எங்கள் எல்லோருக்கும் நாங்களே தேர்வில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு பெற்றோம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வியாழன், 20 மே, 2010

நினைவோட்டம் 21

நான் பெண்ணாடத்தில் படித்த ஆண்டில்

(1956-57) நடந்த பல நிகழ்வுகள் மறக்க இயலாதவை.


அந்த ஆண்டில் தான் அரியலூர் அருகே மருதையாற்று ரயில் பாலத்தில் நடந்த கோர விபத்தில் பலர் இறந்ததால், அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு லால் பகதூர் சாஸ்த்ரி பதவியை துறந்தார்.


அதுவரை புழக்கத்தில் இருந்த ரூபாய், அணா பைசாவுக்கு பதில் ரூபாய், நயா பைசா என்ற

புதிய நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் அப்போதுதான்.


(அப்போது இருந்த ஒரு ரூபாய்க்கு 16 அணாவும், ஒரு அணாவுக்கு 12 பைசாவும் என கணக்கிடப்பட்டன.)


புதிய நாணய முறை(ரூபாயும், பைசாவும்)

1 - 4 -1957 லிருந்து நடைமுறைக்கு வந்ததும், பழைய நாணயங்களும் புழக்கத்தில் இருந்ததால் புதிய முறைக்கு மாறுவதில் மக்கள் சிரமப்பட்டது உண்மை.


அரசால் செய்தி தாட்களில் வெளியிடப்பட்ட நாணய மாற்று அட்டவணையை(Conversion Table) கையில் வைத்துக்கொண்டுதான் எதையும் விற்கவோ, வாங்கவோ முடிந்தது.


அந்த ஆண்டில் தான் இரண்டாவது பொதுத்தேர்தல் வந்தது. திராவிட முன்னேற்ற கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலுக்கு

போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றதும் அந்த தேர்தலில்தான்.


அரசியல் பற்றியோ, தேர்தல் பற்றியோ அறியாத என் வயதொத்த மாணவர்களுக்கு அந்த வேளையில் நடந்த தேர்தல் பிரச்சாரம்

ஒரு விநோதமாக தெரிந்தது.


அப்போது தி. மு.க தினம் ஒரு சுவரொட்டியை வெளியிடும். அதை பார்க்க, படிக்க எங்களிடையே போட்டி இருந்தது உண்மை.


மேலும் எங்களது தமிழ் ஆசான் புலவர் குஞ்சிதபாதனார் வகுப்புக்கு வந்ததும் எங்களை பார்த்து 'இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள

சுவரொட்டி என்ன?' என்று கேட்பார்.


(அப்போதெல்லாம் தமிழ் ஆசிரியர்கள் தான் தி.மு,க வளர உதவினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதில் வேடிக்கை என்ன வென்றால் எங்களது இந்தி ஆசிரியரும், இந்தி பாடத்தை நடத்திவிட்டு அப்போதைய அரசியல் பற்றி பேசி, மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பை வளர்த்தார் என்பதே! )


தமிழ் ஆசிரியர் கேட்பாரே என்பதற்காக, பள்ளி வரும்போது தி.மு.க தேர்தல் அலுவலகத்தின் முன் ஒட்டப்பட்டுள்ள

சுவரோட்டியைப்படித்துவிட்டுவந்து போட்டிபோட்டுக்கொண்டு ஆசிரியர் கேட்கு முன்னே சுவரொட்டியில் உள்ள வரிகளை சொல்வோம்.



அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் படித்தவற்றில் நினைவுக்கு வருபவை.



அரியலூர் அழகேசா

ஆண்டது போதாதா?

மக்கள் மாண்டது போதாதா?


வடக்கு வாழ்கிறது

தெற்கு தேய்கிறது.


ரயில் எஞ்சின்கள் செய்வது வடக்கே

ரயில் பெட்டிகள் செய்வது தெற்கே.


நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார்

நோட்டு அடித்தால் போதாது.


காகிதப்பூ மணக்காது
காங்கிரஸ் ஆட்சி இனிக்காது


டாட்டா பிர்லா கூட்டாளி

பாட்டாளிக்கு பகையாளி.



கடைசியில் உள்ள வரிகளை இப்போது படிக்கும்போது, காலம் தான் எத்தனை பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என

நினைக்க தோன்றுகிறது.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி