வெள்ளி, 23 ஜூலை, 2010

எனக்குப்பிடித்த பாடல்கள் 7

சாதிகள் எத்தனை சாதியடி!


ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.

இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.

எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.

காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.

இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.

இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.

இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.

இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.

இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி


என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.

'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.

ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!

2 கருத்துகள்:

  1. பறைச்சியாவ தேதடா பணத்தி யாவ தேதடா
    இறைச்சி யுள்ளோ எலும்பினுள்ளோ இலக்கமிட் டிருக்குதோ

    என்ற சித்தன் வாக்கும் நினைவுக்கு வருகிறது.

    அருள் கூர்ந்து இந்த Word / picture Verification ஐ நீக்கிடுமாறு வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! சிவவாக்கியரின் பாடலை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி!
    ஐயா! இந்த Word verification முறையை நான் என்றோ நீக்கிவிட்டேன். அது இப்போது தானாகவே வந்துள்ளது. தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் இது போல் வருமாம். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு