இன்றைக்கு நாம் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் கூட நடந்து செல்வதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது ஆட்டோ (அ) ஷேர் ஆட்டோவிலோ பயணிக்கிறோம்.
ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.
நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.
பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.
காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.
காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)
காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.
வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.
வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.
ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
வணக்கம்.
பதிலளிநீக்குஅன்றிருந்த பாதை கண்பட்ட இடங்கள் இன்று எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை கடந்த காலத்துடன் ஒப்பிட்டுக் காண்பதும் ஒரு இனிய அனுபவம்தானே ஐயா!
தொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இன்றைக்கு அந்த காடுகள் இல்லை. ஓடைகள் மேல் பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பேருந்துவசதிகளும் வந்துவிட்டன. ஆனால் அந்த பழைய இடங்கள் தான் இல்லை.
நீக்கு