ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 27



ஒட்டுப்பலகை (Plywood) தயாரிப்பில் இருந்த இன்னொரு வாடிக்கையாளரால் அதே கிளையில் ஏற்பட்ட ஒரு 
இடியாப்பச் சிக்கலைப்பற்றி சொல்லுமுன், வேறொரு 
நிகழ்வை சொல்லலாமென எண்ணுகிறேன். இது 
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிளையில் நான் 
மேலாளராக இருந்தபோது நடந்தது.

ஒரு நாள் காலை ஒருவர் அதிவேகமாக எனது 
அறைக்குள் நுழைந்தார். நுழைந்த வேகத்தில் என்னிடம்,
என்ன சார். உங்கள் வங்கியில் வாங்கிய 
கேட்பு காசோலைக்கு (Demand Draft) Counter ல் பணம் 
தரமாட்டீர்களா? அங்கு கேட்டால், தரமுடியாது. 
வேண்டுமானால் மேலாளரைப் பாருங்கள்.என்று   
சொல்கிறார்கள்.

என் பெயரில் உள்ள இந்த கேட்பு காசோலைக்கு 
பணம் தருமாறு கேட்கும்போது (on Demand) சட்டப்படி 
அதை நீங்கள் தந்தே ஆகவேண்டும். அப்படியிருக்கையில் 
எனக்கு தரமுடியாது என்று எப்படி சொல்லமுடியும். என 
பட பட வென பொரிந்தார்.

நான் அவரை அமர சொல்லி சாந்தப்படுத்திவிட்டு 
என்னவென்று விசாரித்தேன். வெளியூரிலிருந்த அவரது 
நண்பர் அவர் பெயரில் எங்கள் வங்கியின் கேட்பு காசோலை 
ஒன்றை எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார். அது Cross 
செய்யப்படாத ஒன்று. அதனால் நேராக எங்கள் வங்கிக்கே 
வந்து Counter இல் கொடுத்து பணம் வாங்க 
நினைத்திருக்கிறார். அங்கே அவர்கள் தர மறுத்ததால் 
என்னிடம் வந்திருக்கிறார்.

நான் அவரிடம் உங்களுக்கு வேறு வங்கியில் கணக்கு 
இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் இருக்கிறது என்று 
சொன்னதும், அப்படியானால் நீங்கள் அங்கேயே கொடுத்து  
Clearing மூலம்  பணத்தைப் பெற்றிருக்கலாமே?’ என்றேன்.

அதற்கு அவர், Cross செய்திருந்தால்தானே வங்கி 
மூலம் அனுப்பவேண்டும். Open ஆக இருப்பதால் 
தான் நேரே வாங்க வந்தேன். ஆனால் உங்கள் கிளையில் 
தரமாட்டேன் என்கிறார்களே. என்றார்.  

என்ன காரணத்தாலோ அந்த கேட்பு காசோலையை அவருக்கு 
வேறு வங்கியில் கணக்கு இருந்தும், அங்கு கொடுத்து  
Clearing இல் அனுப்பாமல் எங்கள் கிளையில் நேரே 
பணம் பெற வந்திருக்கிறார் எனத் தெரிந்தது.

அவரிடம் பொறுமையாக, இது கேட்பு காசோலைதான். 
ஆனால் Cross செய்யப்படாமல் Open ஆக இருப்பதால் இதில் 
உள்ள தொகையை இது யாருக்காக வாங்கப்பட்டிருக்கிறதோ 
அவருக்கோ அல்லது அவரது ஆணை (Order) பெற்றவருக்கோ 
தான் தரமுடியும். இதில் குறிப்பிட்டுள்ளவர் நீங்கள் தான் 
என்று தெரிந்தால் தான் எங்களால் பணத்தைத் தரமுடியும்.
உங்களை எங்களுக்குத் தெரியாததால் தான், பணத்தை   
Counter இல் தர இயலாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரிந்த எங்கள் வாடிக்கையாளர்கள் யாரேனும் 
உங்களை கண்டுணர்ந்தால் (Identify) நாங்கள் பணத்தைத் தர 
இயலும்.இல்லாவிடில் நீங்கள் கணக்கு வைத்துள்ள 
வங்கியில் கொடுத்தால் அவர்கள் உங்களுக்காக 
இதை Clearing இல் அனுப்பி பணத்தை வசூலித்து 
உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். என்றேன்.

கேட்புக் காசோலை வாங்கியவர்களுக்குத் தெரியும். 
அதில் On Demand Pay  .......... Or order என்றிருக்கும். 
(இப்போது  எல்லாமே On Line Payment என்று 
ஆகிவிட்டதால் இதனுடைய பயன்பாடு குறைந்துவிட்டது. 
அதனால் இது பற்றி இளைய வாடிக்கையாளர்களுக்கு 
தெரிய வாய்ப்பில்லை)  

யாருக்காக அந்த கேட்பு காசோலை வாங்கப்பட்டதோ 
அவர் பெயர் தான் On Demand Pay  க்கு பின் எழுதப்பட்டு 
இருக்கும். மேலும் அது Order காசோலை என்பதால் 
அவரோ அல்லது அவர் உத்திரவு பெற்றவரோ தான் அதில் 
உள்ள தொகையைப் பெறமுடியும். வங்கியைப் 
பொருத்தவரையில் கேட்பு காசோலையில் குறிப்பிட்டுள்ள 
நபருக்குத்தான் பணத்தைத் தர இயலும். அதற்கு முன் 
அந்த பணத்தைப் பெறுபவர் காசோலையில் 
குறிப்பிட்டுள்ள நபர் தான் என்பது கண்டிப்பாகத் 
தெரிந்திருக்கவேண்டும்.

அன்று வந்தவர் எங்கள் வாடிக்கையாளருமல்லர். எங்கள் 
வங்கிக்குத் தெரிந்தவருமல்ல. எங்களுக்குத்தெரிந்த யாரும் 
அவரை அறிமுகப்படுத்தாததால் அந்த தொகையைத் தர 
இயலவில்லை.

அவரிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும் அவர் 
கேட்பதாக இல்லை. விடாப்பிடியாக நீங்கள் பணத்தை 
தந்தே ஆகவெண்டும். இல்லாவிடில் தரமுடியாது 
என்று எழுதிக்கொடுங்கள். என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு, நீங்கள் தயை செய்து 
வெளியே காத்திருங்கள். கடிதத்தை  தட்டச்சு செய்து 
கையொப்பமிட்டு தருகிறேன். என்றேன். அவர் வெளியே 
சென்று அமர்ந்ததும், சுருக்கெழுத்தாளரைக் கூப்பிட்டு 
கடிதத்தில் எழுதவேண்டியதை சொல்லி தட்டச்சு செய்து 
வரச் சொன்னேன்.

சுருக்கெழுத்தாளர் தட்டச்சு செய்து கொண்டு வந்த 
கடிதத்தில் கையொப்பமிட்டு, வெளியே கோபமாய் 
அமர்ந்திருந்தவரை கூப்பிட்டு கொடுத்தேன். அதை 
வாங்கிப் படித்த அவர் முகம் சுருங்கிப்போயிற்று.  
ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

அவரது முகத்தை சுருங்கச் செய்யும்படி என்ன 
எழுதியிருந்தேன் என நினைக்கிறீர்கள்? 
வேறொன்றுமில்லை. கடிதத்தின் தலைப்பை  
 To Whomsoever it may concern என்று கொடுத்துவிட்டு, 
அதற்கு கீழே, அவர் கொண்டு வந்த கேட்பு 
காசோலையின் எண் மற்றும் தொகையைக் குறிப்பிட்டு 
அது ஒரு Order Instrument என்பதால், அதில் 
குறிப்பிட்டுள்ள பணம் பெறுபவர் (Payee) யாரெனத் 
தெரியாததால், அந்த காசோலையைக் கொண்டு
வந்தவரிடம் அதில் உள்ள தொகையை 
தரமுடியவில்லை என ஒரு சான்றிதழ்போல் 
எழுதியிருந்தேன்.

அதற்கு  கீழே  To என எழுதி, The Bearer of the above 
mentioned Demand Draft எனக் குறிப்பிட்டிருந்தேன். அந்த 
வரிதான் அவர் முகத்தை சுருங்க வைத்துவிட்டது. அவர் 
என்ன நினைத்திருப்பார் என்றால் நான் அந்த கடிதத்தை 
அந்த காசோலை யார் பெயரில் எடுக்கப்பட்டிருந்ததோ 
அவர் பெயருக்கு எழுதிக் கொடுப்பேன் என்று.

அப்படி எழுதி இருந்தால் அவர் வங்கி மேல் நீதிமன்ற 
நடவடிக்கை எடுத்திருக்கமுடியும். காரணம். 
காசோலையில் உள்ளவர் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு 
தரமுடியாது என எழுதியிருந்தால், வங்கிக்கு அவர் 
யாரென தெரிந்ததால்தான் அவர் பெயருக்கு கடிதம் 
தந்திருக்கிறார்கள் என்றும் அவர் யாரெனத் தெரிந்தபிறகு 
வேண்டுமென்றே பணத்தைத் தரவில்லை என்றும் 
அவரது வழக்கறிஞர் வாதாடியிருப்பார். அப்படி 
செய்யமுடியாது என்பதால்தான் அவர் முகம் 
வாடிப்போயிற்று.

இது நடந்த மறுநாள் Clearing இல் அந்த கேட்பு காசோலை 
அவரது வங்கி மூலம் அனுப்பப்பட்டு அந்த தொகையை 
அவர் பெற்றுக்கொண்டார்.

இப்படி  சில வாடிக்கையாளர்கள் தடுக்குக்கு 
கீழே நுழைபவர்கள் போல் இருக்கும்போது, 
வங்கி மேலாளர்கள் கோலத்தின் கீழ் நுழைபவர்கள் 
ஆக இருந்தால்தானே சமாளிக்கமுடியும்!   


தொடரும்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 26




அன்று மாலை சுமார் 4 மணிக்கு வந்த அந்த வாடிக்கையாளர், 
எங்கள் கணக்கை முடித்து, இப்போதே எங்கள் ஆவணங்களைத் 
தாருங்கள் என்று சொன்னபோது,  நான் அவரிடம்,நீங்கள் 
வருமுன்பே அவைகளை உங்களிடம் திருப்பித்தர 
அனுமதிக்கும்படி எனது வட்டார அலுவலகத்திற்கு 
கடிதம் எழுதிவிட்டேன்.

இன்றைய அஞ்சலில் அதை அனுப்ப இருக்கிறோம். 
நாளை அது அவர்களுக்கு கிடைத்துவிடும்.அனேகமாக 
நாளையே அனுமதி தந்துவிடுவார்கள். நாளையே அவர்கள் 
அதை அஞ்சலில் அனுப்பினால்  அந்த அனுமதி கடிதம் 
நிச்சயம் நாளை மறுநாள் வரும். அது வந்ததும் உடனே 
தந்துவிடுகிறேன். என்றேன்.

அவர் முகத்தில் அதுவரை இருந்த புன்சிரிப்பு மறைந்து 
விட்டது. அவர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு, 
என்ன சார் இது.  கடனை அடைத்த பிறகு உடனே 
ஆவணங்களை தருவதுதானே முறை.நீங்கள் 
என்னவென்றால் திருவனந்தபுரம் எழுதி கேட்டுத் 
தருகிறேன் என்கிறீர்கள்.அவர்கள் அனுமதி தரும் 
வரையெல்லாம் என்னால் காத்திருக்கமுடியாது. 
நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. 
அவைகள் இன்று மாலை 5 மணிக்குள் எனக்கு 
வேண்டும். என்றார் கறாராக. 

நானோ பொறுமையாக, சார், உங்களுக்கு யார் கடனை 
ஒப்பளிப்பு செய்தார்களோ அவர்களுக்குத்தான் உங்கள் 
ஆவணங்களை திருப்பித்தர அதிகாரம் உண்டு. நான் இந்த 
வசதியை ஒப்பளிப்பு செய்யாததால் எனக்கு ஆவணங்களை 
திருப்பித்தர அதிகாரம் இல்லை. எனவே என்னால் உடனே 
தர இயலாது. தயை செய்து ஒரு நாள் பொறுங்கள். நாளை 
காலை எனது கடிதம் அங்கு சென்றடைந்ததும், 
தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுமதி பெற்று 
தருகிறேன். என்றேன்.

அதற்கு அவர், அனுமதி பெற்றுத் தருவது அல்லது பெறாமல் 
தருவது உங்களுடைய வேலை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.எனக்கு இப்போது உடனே ஆவணங்கள் வேண்டும்.
அதைப் பெறாமல் இங்கிருந்து நான் போவதாக இல்லை. 
எனக் கூறி எனது அறையிலேயே அமர்ந்துவிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் வங்கியில் செலவைக் 
குறைக்கும் நடவடிக்கையாக, கிளையில் இருந்த 
தொலைபேசியில் STD வசதியை எடுத்துவிட்டார்கள்.

Trunk Call செய்து அனுமதி பெற நேரம் ஆகும் என்பதால் 
அவரது கோப்பை எடுத்துக்கொண்டு (என் தலைவிதியையும் நொந்துகொண்டு) நான்கு கட்டிடங்கள் தள்ளி இருந்த 
ஒரு STD கூடம் சென்று, எனது துணைப் 
பொதுமேலாளரை தொடர்புகொண்டு விவரம் சொல்லி, 
அனுமதி கேட்டேன்.

அதற்கு அவர். கடிதம் அனுப்பிவிட்டீர்களா?’ என்றார். நான், 
இல்லை சார் இன்றைய அஞ்சலில் தான் அனுப்புகிறேன். 
ஆனால் அந்த வாடிக்கையாளர் இன்றே வேண்டும் 
என்கிறார். அதனால்தான் உங்களிடம் தொலைபேசி மூலம் 
அனுமதி கேட்கிறேன்.என்றேன்.

அவர்,’என்ன சபாபதி. அந்த கணக்கு முழுமையாக 
முடிக்கப்பட்டுவிட்டது என்று எழுத்து மூலம் வந்தால்தானே 
நாங்கள் அனுமதி தர இயலும். அன்றைக்கு என்னவோ 
அவர்களது காசோலையை Pass செய்ய அனுமதி கேட்டபோது, 
அவர்கள் நல்ல வாடிக்கையாளர்கள் என்றீர்கள்.அவர்களால் 
ஒரு நாள் பொறுத்துக்கொள்ள முடியாதா? என்றார்.

சார். அன்று நான் சொன்னது சரிதான். ஆனால் இன்று 
அவர் பிடிவாதமாக இப்போதே ஆவணங்கள் வேண்டும் 
என்று சொல்லி நட்சத்திரேயன்போல் என் அறையிலேயே 
உட்கார்ந்து இருக்கிறார். என்னால் எந்த வேலையையும் 
செய்ய இயலவில்லை. அதனால்தான் வெளியில் வந்து  
உங்களை தொடர்பு கொண்டுள்ளேன். தயை செய்து நீங்கள் 
எனக்காக அனுமதி தரவேண்டும். என்றேன். 

அவர் எனது பரிதாப(!) நிலையை அறிந்து , சரி நீங்கள் 
கிளைக்கு சென்று உடனே தொலையச்சு மூலம் உங்கள் 
பரிந்துரையை அனுப்புங்கள். நான் அதைப் பார்த்து அனுமதி 
தருகிறேன். என்றார்.

உடனே திரும்பி வந்து கடித்ததில் எழுதியிருந்ததை 
தொலையச்சு மூலம் அனுப்பினேன். நான் இவ்வாறு 
கஷ்டப்பட்டு கோப்பைத் தூக்கிக்கொண்டு சென்று வெளியே 
பேசிவிட்டு வருவதை அந்த வாடிக்கையாளர் 
வேடிக்கை பார்த்துக்கொண்டு  இருந்தார்.

நல்ல வேளையாக சற்று நேரத்தில் எனது வட்டார 
அலுவலகத்தில் இருந்து அனுமதி தொலையச்சு மூலம் 
வந்து விட்டது.

உடனே அவரிடம் அவரது ஆவணங்களைக் கொடுத்து 
கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அவர் நன்றி கூட 
சொல்லாமல் (அதை எதிர்பார்ப்பதும் தவறுதானே) 
கிளம்பிவிட்டார். 

அவர் வெளியே சென்றதும் தான் எனக்கு அதுவரை 
இருந்த மன அழுத்தம் குறைந்தது. பின்னர் உள்ளே வந்த 
எனது சக அலுவலர்கள்,’சார். நீங்கள் அன்று செய்த 
உதவிக்கு அவர் செய்த கைமாறை பார்த்தீர்கள் அல்லவா? 
இப்படி பேசி உங்களை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கிய 
அவருக்கு நீங்கள் அன்று அப்படி Personal Risk எடுத்து 
உதவியிருக்க வேண்டியதில்லை. என்றார்கள்.

நான் சொன்னேன்.அவர் நாம் செய்த உதவியை 
நினைத்துக்கொண்டு இருப்பார் என்று எதிர்பார்த்து அந்த 
உதவியை செய்யவில்லை. நீண்ட காலம் நம்மோடு 
வணிகம் செய்த நல்ல வாடிக்கையாளர் என்பதால் 
என்னாலான உதவியை செய்தேன். கடமையை 
செய்துவிட்டு நன்றியை எதிர்பார்ப்பது தவறு. 
மேலும் மறப்பது மனித இயல்பு தானே. என்ன செய்ய.
நல்ல வேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. 
என்றேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சில நேரங்களில் 
சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று!



தொடரும்