புதன், 9 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 23



வாடிக்கையாளர்களில் சிலர் ஆரம்பத்தில் 
இருப்பதுபோல் கடைசிவரை இருப்பதில்லை. 
சிலர் நன்றாக பழகுவார்கள். அவர்களது வேலை 
முடிந்ததும் அவர்களது போக்கே மாறிவிடும்.
மனித இயல்பே அதுதானே! எனவே அதை தவறு 
என்று நான் சொல்லமாட்டேன். 

ஆனால் பணியில் சேர்ந்தபோது அனுபவமின்மை 
காரணமாக எல்லோரும் அப்படி இருக்கமாட்டார்கள் 
என நினைத்திருந்தேன்.ஆனால் எனது எண்ணம் 
தவறு என்பதை கேரளாவில் நான் முதன் முதல் 
பணியாற்றிய கிளையில் நடந்த ஒரு நிகழ்வு 
நிரூபித்தது.

அந்த ஊரில் ட்டுப்பலகை (Plywood) தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று எங்கள் கிளையில் பல 
ஆண்டுகளாக கணக்கு வைத்திருந்தது. அந்த 
நிறுவனம் எங்கள் வங்கியில் தங்களது 
நடைமுறை மூலதன (Working Capital) செலவுக்காக 
மிகைப்பற்று வசதியும் (Overdraft Facility) 
பெற்றிருந்தது

நான் அந்த கிளையில் முதன்மை மேலாளராக 
பதவியேற்றபின், ஒரு நாள் அந்த நிறுவனத்தின் 
தலைமை பொறுப்பில் இருந்த சிரித்த முகத்தோடு 
கூடிய இளைஞர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 
பேச்சுவாக்கில் நான் சென்னையிலிருந்து 
வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும், தானும் 
சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற 
கல்லூரியில் படித்ததாக சொன்னார்.

இந்த நிறுவனம் அவர்களது குடும்ப 
நிறுவனமாகையால் படித்து முடித்ததும் வெளியில் 
வேலைக்கு செல்லாமல் இங்கு வந்து பொறுப்பை 
ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னார். மேலும் தான் 
படித்த சென்னையில் இருந்து நான் வந்திருப்பதால் 
தனக்கு அது சந்தோஷம் என்றும் சொன்னார். 

பிறகு அவர்களது வணிக நிலை பற்றி 
விசாரித்தபோது, அது சம்பந்தமாகத்தான் பேச 
வந்திருப்பதாக சொன்னார். தங்கள் நிறுவனத்திற்கு 
கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) நிறைய 
இருப்பதால் தங்களுக்கு இருக்கின்ற மிகைப்பற்று 
வசதியின் வரம்பை அதிகரித்து தருமாறு 
கேட்டுக்கொண்டார். நானும் அவரது 
தொழிற்சாலையை பார்வையிட்டபிறகு ஆவன 
செய்வதாக உறுதி அளித்தேன். 

பின்பு அவரது இடத்திற்கும் சென்று ஆய்வு 
செய்துவிட்டு, அவரது கோரிக்கையில் நியாயம் 
இருந்ததால், அவரிடமிருந்து விண்ணப்பம் பெற்று 
எனது பரிந்துரையோடு திருவனந்தபுரத்தில் இருந்த 
எங்களது வட்டார அலுவலகத்திற்கு அனுப்பி 
அந்த நிறுவனம் கேட்டிருந்த அதிகரிக்கப்பட்ட 
மிகைப்பற்று வசதியை பெற்றுத் தந்தேன்.

அதற்குப்பிறகு அவர் எப்போது கிளைக்கு வந்தாலும், 
எனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் என்னோடு 
குறைந்தது 10 மணித்துளிகளாவது பேசாமல் 
சென்றதில்லை.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் வந்து தாங்கள் 
கொடுத்த காசோலை அன்று Clearing ல் வரும் 
என்றும், அந்த காசோலையை அவர்களது கணக்கில் 
பற்று (Debit) வைத்தால் அவர்களது கணக்கில் 
உள்ள தொகை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 
ரூபாய் 15,000 அதிகமாகிவிடும் என்றும், எனவே 
அந்த காசோலையை திருப்பாமல் Pass செய்யுமாறும் 
அந்தக் தொகையை மறு நாள் கட்டிவிடுவதாகவும் 
சொன்னார். 

வழக்கமாக வங்கிகளில் சில நேரங்களில் Clearing 
மூலம் வரும் காசோலைகளை Pass செய்யும்போது 
வாடிக்கையாளர்களின் நடப்பு கணக்கிலோ 
(Current Account) அல்லது மிகைப்பற்று கணக்கிலோ 
(Overdraft Account) போதிய அளவு பணம் 
இல்லாவிடில் Temporary Overdraft எனப்படும் 
தற்காலிக மிகைப்பற்று தருவது நடைமுறை.

ஆனால் இதை பழைய வாடிக்கையாளர்களுக்கு 
மட்டுமே அனுமதிப்பது வழக்கம். வங்கி மேலாளர்கள் 
இந்த வசதியை தங்கள் விருப்புரிமை (Discretion) யை 
உபயோகித்து அனுமதிப்பார்கள். அப்படி 
அனுமதிக்கப்பட்ட பணத்தை ஒரு வாரத்திற்குள் 
திருப்பிக் கட்டிவிடவேண்டும். மாதக் கடைசியில் 
அந்த மாதம் அனுமதிக்கப்பட்ட Temporary Overdraft  
பற்றி மேலதிகாரிகளுக்கு அறிக்கை 
அனுப்பவேண்டும் என்பது வங்கியின் நடைமுறை.
 
ஆனால் அந்த வாடிக்கையாளர் வந்து அந்த தற்காலிக 
வசதியை அனுமதிக்க கேட்டுக்கொண்டபோது 
என் அளவில் செய்யமுடியாத நிலை அப்போது. 
அதற்கு காரணம் அப்போது உச்ச நீதிமன்றம் தந்த 
ஒரு தீர்ப்புதான்

அது என்னவென்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

பி.கு. வங்கியில் பயன்படுத்தும் சொற்களை 
உபயோகப்படுத்தவேண்டி இருந்ததால் 
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதவேண்டியை 
நிலை.பொறுத்தருள்க.



தொடரும்

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. வங்கியில் பயன்படுத்தும் சொற்களை
    அறிந்துகொள்ள முடிந்தது .. நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  3. என்ன தீர்ப்பாக இருக்கும் அப்படி ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தீர்ப்பு பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  4. தங்கள் பதிவுகளில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஆங்கில – தமிழ் கலைச் சொற்களை பயன்படுத்தி தமிழ் தொண்டாற்றி வருவதற்கு நன்றி! உதாரணத்திற்கு இந்த பதிவில் நீங்கள் கையாண்ட கலைச் சொற்கள்:
    ஒட்டுப்பலகை (Plywood) ,
    நடைமுறை மூலதனம்(Working Capital),
    மிகைப்பற்று வசதி(Overdraft Facility) ,
    கொள்முதல் ஆணைகள் (Purchase Orders),
    பற்று (Debit),
    நடப்பு கணக்கு(Current Account),
    மிகைப்பற்று கணக்கு (Overdraft Account),
    தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdraft),
    விருப்புரிமை (Discretion),


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கியில் நாம் உபயோகிக்கும் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களை எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் அவைகளை எழுதினேன். ஆனால் தங்கள் வங்கிதான்
      (பாரத ஸ்டேட் வங்கி) தமிழுக்கு தொண்டாற்றியது என்பது மறை(ற)க்கமுடியாத உண்மை.

      நீக்கு
  5. அடுத்த நிகழ்வை அறிய ஆவல்!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நடன சபாபதி - தற்காலிக மிகைப் பற்று அவ்வப்போது அளிப்பது இயல்பான செயல் தான் - ஆனால் அம்முடிவினை எடுப்பது ந்மது விருப்ப உரிமைக்குள் இருந்து விட்டால் சரி - மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை வந்தால் சற்றே சிரமம தான். உச்ச நீதி மனறத் தீர்ப்பினைப் பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு