திங்கள், 14 ஜனவரி, 2013

நித்தநித்தம் பொங்கல்!


 அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! 


(மேலே உள்ளவை இன்று எனது வீட்டின் முன்பு எனது மனைவி 
போட்ட கோலங்களின் புகைப்படங்கள்) 

பொங்கல் என்றாலே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 
வாழ்த்து அட்டை அனுப்புவது நம்முடைய வழக்கம். 
நான் சொல்லுவது இந்த கைப்பேசியும் மின்னஞ்சலும் 
இல்லாத காலங்களில். இப்போது இது மெல்ல மறைந்து 
வருவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஆங்கிலப் 
புத்தாண்டு வாழ்த்து அட்டைகளுக்கு இருந்த கிராக்கி 
பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்கு இல்லை என்கிறது 
பத்திரிக்கை செய்தி.

நானும் 1961 முதல் 2004 வரை 44 ஆண்டுகள் 
அனுப்பிக்கொண்டு இருந்தேன் என்பதை  
இருந்தேன்.

புது தில்லியில் கரோல்பாக்கில்  திரு இராமநாத ஐயர் 
மெஸ்ஸில் 1968 ல் தங்கியிருந்த போது எனக்கு  
அறைத் தோழனாக இருந்தவரும், எனக்கு 
எல்லா விதத்திலும் உதவியாக இருந்தவரும்,  
எனது சுக துக்கங்களில் பங்கேற்றவரும் என்னால்  
வாழ்நாள் முழுதும் மறக்க இயலாதவருமான 
நண்பர் திரு S.சிவக்குமார் அவர்களுக்கு,
1974 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழக்கம்போல் 
வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தேன்.

அப்போது புது தில்லியில் சிண்டிகேட் வங்கியில் 
பணி புரிந்துகொண்டு இருந்தேன். எனக்கு திருமணம் 
ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகி இருந்தன.

எனது வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 
திரு சிவக்குமார் அவர்கள் அப்போது 9 மாத 
கைக்குழந்தையாயிருந்த அவரது மகனின் 
புகைப்படத்திற்குப் பின்னால் தனது நன்றியை 
கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். அவரது 
கவிதை நடையும், அதன் ஊடே அவர் எங்களை 
வாழ்த்திய விதமும் என்னைக் கவர்ந்ததால் 
அதை 39 ஆண்டுகள் ஆனாலும் பாதுகாத்து 
வைத்திருக்கிறேன்.

அதை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.


அவரது மகனின் புகைப்படம் (இப்போது 39 அகவை உள்ள  இளைஞர்)

“வாழ்த்துக்கு நன்றி நண்ப!
ஆயினும்-

பொங்கலன்று பொங்கலன்று
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
தங்கச்சிரிப்பால்,தேனான மழலையினால்
       இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
செங்கரும்பாம் செவ்வாய் பெருக்கால்
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
குங்குமச்சிமிழ் உதட்டால், பதிமுத்தத்தால்
      இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
மங்கா மகிழ்வளிக்கும் மகனின் குறும்பால்
       இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!
இங்ஙனமே,மனையறத்தின் மலர் வரவால்
       பொங்கல் தினமுமக்கும் பொங்குக!

                         என வாழ்த்தும் 
                         குமார் & ராதா”  
9 கருத்துகள்:

 1. தங்கச்சிரிப்பால்,தேனான மழலையினால்
  இங்கெமக்கு நித்தநித்தம் பொங்கல்!

  பொங்கும் மங்களம் என்றும் தங்க நிறைவான
  பொங்கல் திருநாள் இனிய நல்வாழ்த்துகள்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 3. தங்கள் நண்பர் அனுப்பிய புகைப்படமும் வாழ்த்தும் அருமை.
  இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு T.N. முரளிதரன்அவர்களே! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. அழகான இந்தக் கோலங்கல் அழியும்.ஆனால் பழைய நினைவுகள் அழியாத கோலங்கள் ஆயிற்றே!நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு சரியே!

   நீக்கு