சனி, 19 ஜனவரி, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 25



எதிர்பார்த்தது போலவே சுமார் 12.30 மணிக்கு எங்கள் 
வங்கி ஊழியர் கொண்டு வந்திருந்த காசோலைகளில், 
அந்த காசோலையும் இருந்தது.உடனே அந்த 
வாடிக்கையாளரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு, எனது 
பரிந்துரையை  தொலையச்சு (Telex) மூலம் 
அனுப்பினேன்.

பின் தொலைபேசியில் வட்டார அலுவலகத்தில் எனது 
கிளையை கவனிக்கும் அலுவலரைக் கூப்பிட்டு,   
உடனே அலுவலக குறிப்பை (Office Note) தயார் செய்து 
துணைப் பொது மேலாளரிடம் அனுமதி வாங்கி, 
திரும்பவும் எனக்கு தொலையச்சு மூலம் அதைத் 
தெரிவிக்க கேட்டுக்கொண்டேன்.

அவர் எனது தொலையச்சு நகல் அவரது மேசைக்கு 
வந்ததும் பார்த்துவிட்டு, வேறு ஏதேனும் மேல் 
விவரம் வேண்டுமென்றால், திரும்ப 
கூப்பிடுவதாக சொன்னார். 

அதுபோலவே சிறிது நேரம் கழித்து அவர் என்னை 
கூப்பிட்டு, சார். அந்த வாடிக்கையாளர் கேட்டுள்ள 
தொகையை அனுமதித்தால், அவருக்கு ஏற்கனவே 
அனுமதிக்கப்பட்ட மிகைப்பற்று வசதியின் வரம்பை 
மீறும். அவர்களது கோரிக்கையை அனுமதிக்க அந்த 
நிறுவனத்தின் சமீபத்திய இருப்பு நிலை குறிப்பு 
(Balance Sheet) இருந்தால்தான் இந்த வசதியை 
தரமுடியுமா என ஆய்ந்து முடிவு செய்யமுடியும். 
எனவே அலுவலக குறிப்பை வாங்கி அனுப்புங்கள். 
என்றார். 

எனக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. ஆனாலும் 
அதை அடக்கிக்கொண்டு என்ன சொல்கிறீர்கள்? ஒரு 
தற்காலிக மிகைப்பற்றுக்கு,அதுவும் நாளையே அவர்கள் 
பணத்தை கட்டுவதாக சொல்லும்போது, இருப்பு நிலை 
குறிப்பு வந்தால்தான் முடிவெடுக்க முடியும் என்பது   
சரியா? அப்படியே அவர்கள் அதைத் தந்தாலும் அதை 
அஞ்சலில் அனுப்பி, நீங்கள் முடிவெடுக்கும் வரை 
நான் Clearing ல் வந்த அவர்களது காசோலையை 
வைத்திருக்கமுடியுமா? என்றேன்.

அதற்கு அவர், சாரி.சார்.இப்போதுள்ள நிலையில் 
அது இல்லாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. 
நீங்கள் வேண்டுமானால் துணைப் பொது மேலாளரிடம் 
பேசுங்கள். எனக் கூறிவிட்டார்.

எனக்கு அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை. நான் 
படும் பாட்டை அந்த வாடிக்கையாளர் பார்த்துக்
கொண்டுதான் இருந்தார். நான் உடனே துணைப் பொது 
மேலாளரை தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். 

அதற்கு அவர். அலுவலக் குறிப்பு வராமல் என்னால் 
ஆணை தர இயலாது. அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் 
தானே? அவர்கள் சொன்னபடி பணத்தை கட்டுவார்கள் 
என்றால் நீங்கள் அனுமதியுங்கள்.என்றார்.

உடனே நான், சார் அந்த காசோலையை   
அனுமதித்துவிட்டு, அவ்வாறு செய்தது  குறித்து கடிதம் 
ஒன்றை தங்களது ஏற்புக்கு (Approval) அனுப்புகிறேன். 
தயை செய்து எனது செயலை அங்கீகரிக்கவேண்டும். 
என்றேன். அவர் சரி.பார்ப்போம்.எனக் கூறி தொலை 
பேசியை துண்டித்துவிட்டார். 

வாடிக்கையாளருக்கு நல்லது தானே செய்கிறோம். 
இனி நடப்பது நடக்கட்டும்.என எண்ணி, அந்த 
காசோலையை கணக்கில் பற்று வைக்க 
சொல்லிவிட்டேன். அந்த வாடிக்கையாளரும் நன்றி 
சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

சொன்னது போலவே மறுநாள் அந்த நிறுவனம் 
தந்த வேறொரு காசோலை மூலம் அவர்களது  
கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது.

அதன் பின்னர் அந்த காசோலையை கணக்கில் 
அனுமதித்தது பற்றியும் மறுநாள் அந்த கணக்கு 
அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு
வரப்பட்டதையும் விரிவாக வட்டார அலுவலகத்திற்கு 
எழுதி, அவர்களது ஒப்புதலையும் தரும்படி கேட்டேன். 
ஆனால் பல நாட்கள் ஆகியும் எந்த பதிலும் 
வரவில்லை. நானும் அதுபற்றி கவலைப்படவில்லை. 
ஏனெனில் எல்லாவற்றையும் வட்டார அலுவலகத்தின் 
பார்வைக்கு கொண்டு வந்தே அந்த செயலை 
அனுமதித்து இருந்தேன்.

கதை இத்தோடு முடிந்துவிட்டது என நினைக்காதீர்கள். 
இது நடந்து ஓராண்டிற்குப் பிறகு அந்த வாடிக்கையாளர் 
என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் என்னிடம், சார்.
இந்த தொழிலில் இலாபம் அதிகம் இல்லாததால் இந்த 
நிறுவனத்தை விற்க முடிவு செய்துவிட்டோம். 
வாங்குபவர்கள் உள்ளூர் காசோலை மூலம் எங்களுக்கு 
பணத்தை தருவதாக இருக்கிறார்கள். நாங்கள் 
வட்டியுடன் சேர்த்து நாளை எவ்வளவு கட்டவேண்டும் 
எனக் கணக்கிட்டு சொன்னால். நாளை காலை அவர்கள் 
தரும் காசோலையை வந்து தருகிறேன். என்றார். 

நானும் அவரது கணக்கை கவனிக்கும் அலுவலரைக் 
கூப்பிட்டு அவர்கள் கட்டவேண்டிய அசலுடன் மறுநாள் 
வரை உள்ள வட்டியையும் கணக்கிட்டு சொல்லுமாறு 
சொன்னேன். அவர்கள் கட்டவேண்டிய தொகையைக் 
குறித்துக்கொண்ட போன அவர் மறுநாள் 
காலை 10 மணிக்கு வந்து அதே தொகைக்கு 
காசோலையைக் கொடுத்தார். உடனே அதை 
அன்றைய Clearing லேயே சேர்க்கச் சொன்னேன்.

மதியம் அந்த காசோலை திரும்பி வராததால், 
அவரது ணக்கை முடித்துவிட்டு, அப்போதே அந்த 
நிறுவனம் அந்த கடனுக்கு ஈடாகத் தந்திருந்த 
ஆவணங்களை திருப்பித்தர அனுமதிக்குமாறு 
வட்டார அலுவலகத்திற்கு கடிதம் எழுதிவிட்டேன்.

எங்கள் வங்கியின் விதிமுறைப்படி 
(எல்லா வங்கியிலும் அதே முறைதான்) கடனை யார் 
ஒப்பளிப்பு செய்தார்களோ அவர்கள் தான்  கடனுக்காகத் 
தந்த சொத்துக்களை/ ஆவணங்களை கடன் பெற்றோருக்கு 
திருப்பித்தர அனுமதிக்கமுடியும். இந்த குறிப்பிட்ட 
வாடிக்கையாளருக்கு எங்களது வட்டார அலுவலகம் 
அந்த வசதியை ஒப்பளிப்பு செய்து இருந்ததால் 
அவ்வாறு கடிதம் எழுதினேன்.

அன்று மாலை சுமார் 4 மணி இருக்கும் அந்த 
வாடிக்கையாளர் எனது அறைக்கு  வந்தார். ‘சார்
அந்த காசோலை Pass ஆகிவிட்டதல்லவா? எங்கள் 
கணக்கை முடித்து, இப்போதே எங்கள் 
ஆவணங்களைத் தாருங்கள். நாங்கள் அவைகளை
இந்த நிறுவனத்தை வாங்கியவர்களுக்கு 
தரவேண்டும்.’ என்றார்.



தொடரும்








16 கருத்துகள்:

  1. சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்தது போல் இருக்கிறது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! வாழ்க்கையே சிக்கல் நிறைந்தது தானே.

      நீக்கு
  2. வியாபாரிகள் வியாபாரத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். வங்கி ஊழியர்கள் வங்கி நடைமுறையில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.

    தங்களது அடுத்த பதிவில் சஸ்பென்ஸ் உடையும் என்று நினைக்கிறேன்!





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது உண்மையாய் இருந்தாலும், அவர்களும் நமது வாடிக்கையாளர்கள் தானே. சில நேரங்களில் அனுசரித்து போகவேண்டிய நிலை. என் செய்ய? நீங்கள் ஸஸ்பென்ஸ் என நினைத்தது என்ன என்பது நிச்சயம் அடுத்த பதிவில் தெரிய வரும்!

      நீக்கு
  3. ஆமாம் பிறகு என்ன ஆச்சி என்று அறியும் ஆவல். ஒரு தொடர் நாவல் படிக்கும் ஆவலே ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தொடர்வதற்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தயைசெய்து அடுத்த பதிவைப்பாருங்கள் அது சஸ்பென்சா இல்லையா என்று.

      நீக்கு
  5. It is clear that discretionary powers were limited during pre K.v.Krishnamoorthy, (Ex chairman of the Bank) era , who understood the needs of enlarged discretionary powers that benefited the customer as well as the Bank . In so far as the second issue is concerned,the rules remain the same with the only difference that with advanced and improved communication systems existing now getting permission for an act has been simplified. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஆனால் நான் சொல்லும் நிகழ்வு நடந்தபோது, எல்லோரும் முடிவு எடுக்கத் தயங்கியதின் காரணம் உச்ச நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்புதான்.

      நீக்கு
  6. கிளையில் இருப்பவர் கஷ்டத்தை புரிந்து கொள்ள மறுக்கும் நிர்வாக அலுவலகங்கள்!ஆனால் இலக்குகளை மட்டும் கிளைகள் எட்ட வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு குட்டன்அவர்களே! நீங்கள் சொல்வது உண்மை. வங்கியில் கிளை மேலாளர்கள் படும் பாடு பற்றி பின் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! பதிவைத் தொடர்வதற்கும் பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
  8. அன்பின் நடன சபாபதி - குட்டன் எழுதிய மறுமொழியினை வழி மொழிகிறேன். தவிர்க்க இயலாத செயல்கள் - நம் கையைக் கட்டிப் போட்டு விட்டு அவர்கள் கூறும் இலக்கினை எட்டச் சொல்வார்கள் - இயலவில்லை எனில் பதவி உயர்வு அடிபடும். அலுவலகங்களில் இவை எல்லாம் இயல்புதான்.

    கடனை ஒப்பளிப்பு செய்தவர் தான் கடனுக்கு ஈடாகக் கொடுத்த சொத்து ஆவணங்களை கடன் முடிந்துடன் திரும்பக் கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்பது வங்கிக்கு வங்கி வேறுபடும்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! ??கடனை ஒப்பளிப்பு செய்தவர் தான் கடனுக்கு ஈடாகக் கொடுத்த சொத்து ஆவணங்களை கடன் முடிந்துடன் திரும்பக் கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்பது வங்கிக்கு வங்கி வேறுபடும்.// என்ற கருத்துக்கு நன்றி.

      நீக்கு