வியாழன், 29 ஆகஸ்ட், 2013

சகாரம் என்றால் தெரியுமா?






சாகரம் என்றால் மாக்கடல் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சகாரம் என்று சொன்னால் எல்லோருக்கும் புரியுமா எனத் தெரியவில்லை.ஒருவேளை எழுத்து மாறாட்டம் அல்லது சொற்கள் மாறாட்டம் என்று சொன்னால் புரிய வாய்ப்புண்டு. இதை Spoonerism என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

நம்மில் சிலர் வேகமாக பேசும்போது தம்மையறியாமல் அடுத்தடுத்துள்ள சொற்றொடர்களின் எழுத்துக்களையோ அல்லது அந்த சொற்றொடரையோ மாற்றிப்போட்டு பேசுவதுண்டு.

நமது மூளையின் வேகத்தை விட சிலசமயம் நமது வாய் வேகமாக செயல்படுவதுதான் அவ்வாறு எழுத்துக்கள் அல்லது சொற்கள் இடம் மாறுவதன் காரணம் என்கிறார்கள் அறிவியலார்.

இதை Slips of the tongue என்பார்கள்.இதை வேடிக்கையாக Tips of the slung என்று சொல்வதும் உண்டு.ஆனால் சிலர் வேண்டுமென்றே சிலசமயம் இது போன்று பேசுவதும் உண்டு.

ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக் கல்லூரியின் தலைவராக இருந்த Reverend  William Archebald Spooner அவர்கள் அடிக்கடி இது போன்ற தவறுதலான சொற்றொடர்களை உபயோகிப்பாராம். அதனால் இவ்வாறு மாற்றி பேசுவதை அவர் பெயரால் Spoonerism என்று பெயரிட்டிருக்கிறார்களாம்.அவர் சொன்ன சொற்றொடர்கள் பல உண்டு.அவற்றில் ஒன்று. “Mardon me, Padam

இந்த Spoonerism பற்றி திரு தருமி அவர்கள் 2005 ஜூலை 31 இல்  சுஜாதா சொன்ன Spoonerism’ என்ற தலைப்பிலும், திரு ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் 2009 டிசம்பர் 30 இல் மாஸ்டர் என்ற தலைப்பிலும் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்கள். இன்னும் பலர் எழுதியிருக்கக்கூடும்.

இருப்பினும் எனக்கும் இதுபோன்று பேசியவர்களின் பேச்சைக் கேட்ட அனுபவம் உண்டு.ஆனால் இவ்வாறு பேசுவதற்கு பெயர்  Spoonerism  என எனக்கு அப்போது தெரியாது. அப்படி நான் இரசித்த மூன்று சகாரங்களை இங்கே சொல்லலாமென நினைக்கிறேன்.  

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் (1962-66) படிக்கும்போது முதலாம் ஆண்டில்  வேதியல் செய்முறைத் தேர்வை செய்து கொண்டு இருந்தேன். Salt Analysis க்குக்காக கொடுத்திருந்த வேதிப்பொருளில் உள்ள Salt என்ன என்று கண்டுபிடித்து எழுதவேண்டும்.

அதற்காக செய்யவேண்டிய பரிசோதனைகளை செய்துகொண்டு இருக்கும்போது இடையில் அடுத்து செய்யவேண்டிய பரிசோதனை மறந்து விட்டது. எனக்கு அடுத்து பரிசோதனையில் ஈடுபட்டிருந்த எனது நெருங்கிய நண்பனான திரு நாச்சியப்பனிடம் அடுத்து என்ன செய்யவேண்டும்?’ என மெதுவாக கேட்டேன்.

(என் நண்பர் திரு நாச்சியப்பன். பூச்சியியலில்(Agricultural Entomology) முனைவர் பட்டம் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பூச்சியியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் சிதம்பரத்தில் வசிக்கிறார்.)

அவர் உடனே அவசரமாக  ‘Wad Ater. Wad Ater.’ என்றார். அதாவது Add Water என சொல்வதாக நினைத்துக்கொண்டு! இக்கட்டான நிலையில் இருந்த எனக்கு உதவி செய்த அவருக்கு, நன்றி கூட சொல்லாமல், தேர்வு கூடத்தில் இருக்கிறோம் என்பதையும்  மறந்து வாய் விட்டு சிரித்துவிட்டேன்.

அவ்வளவுதான். அந்த ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக பரிசோதனையில் ஈடுபட்டிருந்த எனது வகுப்புத்தோழர்கள் அனைவருமே, என்ன ஆயிற்று எனக்கு என்று வியப்போடு பார்த்தபோது, அங்கிருந்த External Examiner என் அருகில்வந்து  என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

ஒன்றுமில்லை என்றதும், ‘கோபமாக இது ஒன்றும் விளையாட்டுத் திடல் அல்ல. ஆண்டுத் தேர்வு என்பது நினைவிருக்கட்டும். அடுத்த தடவை இதுபோல் நடந்தால் தேர்வை மேற்கொண்டு தொடர அனுமதிக்க மாட்டேன். வெளியேற்றிவிடுவேன். என சொல்லிவிட்டு சென்றார்.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தேர்வை முடித்தேன். பின்பு வெளியே வந்ததும் அது பற்றி எல்லோரிடமும் சொல்லி நண்பர் நாச்சியப்பனை கேலி செய்து கொண்டு இருந்தேன். இப்போது கூட நண்பர் நாச்சியப்பனைப் பார்க்கும்போது அதைப் பற்றி சொல்லித்தான் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கிறோம்.

அடுத்து நடந்தது இறுதியாண்டு படிக்கும்போது. இறுதி ஆண்டில் வேளாண் விரிவாக்க (Agricultural Extension) பாடத் திட்டத்தின் படி, முதல் ஆறு மாதங்கள் கட்டாயம் அருகில் உள்ள சிற்றூர்களுக்கு சென்று அங்குள்ள உழவர்களின் வயல்களில் Result Demonstration எனப்படும் செயல்முறை விளக்கம் நடத்தி பயிற்சி பெறவேண்டும்.

அதனால் தினம் காலையில் கல்லூரி பேருந்தில் அழைத்து சென்று, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், அவரவர்களுக்கென  ஒதுக்கப்பட்ட ஊர்களில்  விட்டு செல்வார்கள். மதியம் வரை அங்கிருந்து, செய்முறை பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட வயல்களில் புதிய சாகுபடி முறைகளை கையாள்வது பற்றி  அங்குள்ள வேளாண் பெருமக்களுக்கு எடுத்து சொல்லி, அதை அவர்கள் பின்பற்ற உதவ வேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஊரில் Urea என்கிற தழைச்சத்து உரம், Super Phosphate என்கிற மணிச்சத்து உரம்,  Muriate of Potash என்கிற சாம்பல் சத்து உரம் ஆகிய உரங்களில் ஏதேனும் ஒன்றை, செயல்முறை விளக்கத்திற்காக (Demonstration) எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தார் எங்களது வேளாண் விரிவாக்க (Agricultural Extension) பேராசிரியர்.

முதல் நாள் பயிற்சிக்கு கிளம்புமுன் எங்களது பேராசிரியர். ஒவ்வொரு மாணவனும்  எழுந்து, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊரின் பெயரையும், அங்கு செயல்முறை விளக்கத்திற்கு எடுத்துக்கொண்ட உரத்தின் பெயரையும் சொல்லச் சொன்னார்.

ஒவ்வொருவரும் எழுந்து  நின்று விவரங்களை சொன்னோம். என் முறை வந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஊர் ஓரத்தூர் அருகே இருந்த பரதூர் சாவடி என்றும், செயல் விளக்கம் தர இருக்கும் உரம் Urea என்றும் சொன்னேன்.

எனது வகுப்பு நண்பர் ஒருவர், அவர் முறை வந்தபோது எழுந்து வேகமாக Muriate நல்லூரில், முடிகொண்ட Potash என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.அதாவது முடிகொண்டநல்லூர் என்ற ஊரில் Muriate of Potash என்று சொல்வதற்கு பதிலாக!

நாங்கள் அனைவரும், கண்டிப்புக்கு பெயர் போன பேராசிரியரின் வகுப்பில் இருக்கிறோம் என்பதையும் மறந்து வாய்விட்டு சிரித்தோம்.பேராசிரியரும்தான்.

அடுத்து நடந்தது வங்கிப்பணியில் இருக்கும்போது. எனது சக ஊழியர் ஒருவர் வாடகைக்காரில் பயணம் செய்தபோது ஒரு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். அவரது நலம் குறித்து விசாரிக்க சென்றிருந்தேன். எப்படி அந்த விபத்து நடந்தது? என விசாரித்தபோது அவர் சார். எங்களது காரோட்டுனர் மிக வேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கம்பி தந்தங்களில் மோதிவிட்டார்.; என்றார்.

அவர் சொல்ல நினைத்தது தந்திக் கம்பங்கள். ஆனால் சொன்னதோ
கம்பி தந்தங்கள்! அவர் சொன்னது சிரிப்பை வரவழைக்கக்கூடிய சொற்கள் மாறாட்டம் என்றாலும், விபத்து பற்றி விசாரிக்க சென்ற இடத்தில் சிரிக்க முடியுமா என்ன?

சென்ற வாரம் நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.எங்கே ஆளையே காணோம்?’ என்றதற்கு, அவர் மழனி பலைக்குபோயிருந்தேன். என வேகமாக சொன்னார். அதன் விளைவுதான் இந்த பதிவு!





புதன், 21 ஆகஸ்ட், 2013

நினைவோட்டம் 69





வகுப்புத் தொடங்கும் மணியை அடித்ததும், அறிவிப்புப் பலகையின் முன்
நின்றிருந்த கூட்டம் முழுதும் திடீரென கலைந்து செல்ல, நான் மட்டும் 
தன்னந்தனியாய் அங்கு செய்வதறியாது நின்றிருந்தேன்.

அதுவரை கேட்ட இரைச்சல் சொல்லிவைத்தாற்போல் திடீரென நின்றுவிட்டது. ஆயிரக்கணக்கான  மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ள ஒரு கல்லூரியில் 
இருப்பது போன்றே தோன்றவில்லை எனக்கு. ஒரு சிறிய ஊசி கீழே விழுந்தால் ஏற்படும் ஒலியைக் கூட கேட்கக்கூடிய அளவுக்கு அப்படியொரு
ஒரு அரவமின்மை.

அப்போது எனக்குப் பின்னால் சரக் சரக் என எழுந்த சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் 
(Rev Fr Ehrhart  SJ) அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும்
என்னுள் இருந்த பயமும், படபடப்பும்  இன்னும் கூட ஆரம்பித்தது.

ஆனால் அவர் புன்னகையுடன் என் அருகில் வந்து. ஏன் இங்கு நின்று கொண்டு இருக்கிறாய்?’ வகுப்புக்கு செல்லவேண்டியது தானே?’ என்றார் ஆங்கிலத்தில்.
எனக்கோ தொண்டை வறண்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
போன்ற பிரமை. வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

உடனே அவர் அதே புன்னகை மாறாமல் உனது D.No. என்ன என்று கேட்டார்?’ அப்போது தட்டுத்தடுமாறி எனக்குத் தெரியாது. என்று ஆங்கிலத்தில்
பதிலளித்தேன். அவர் எனது தோளின் மேல் கை போட்டு என்னுடன் வா.
என்று கூறி கல்லூரி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற எழுத்தர் ஒருவரிடம், என்னைக்காட்டி
இந்த பையனுடைய Department No. மற்றும் வகுப்பு அறை எண் என்ன வென்று 
பார்த்து சொல்லுங்கள். என்றார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது D.No.  
என்றால் Department No. என்று!  

அந்த எழுத்தர் எனது பெயரையும், Group யும்  கேட்டபோது, நான் எனது 
பெயரை சொல்லி Natural Science, Physical Sciences, Commerce, Logic Group 
என்றேன். அந்த Group இல் ஒரு வகுப்பு மட்டும் இருந்ததால், உடனே அவர் 
அருகில் இருந்த பேரேட்டை (Ledger) பிரித்துப் பார்த்து, எனது D.No. என்ன என்று பார்த்துவிட்டு,அது 2292 என்றும் எனது Section E’ என்றும் சொன்னார்.

உடனே முதல்வர் அவர்கள், அதே பரிவுடன் தோளில் கை போட்டு என்னை அழைத்துக் கொண்டு எனது வகுப்பு இருந்த முதல் தளத்திற்கு அழைத்து
சென்றார்.  

இந்த இடத்தில் புனித வளவனார் கல்லூரியில் வகுப்புக்கள் இருந்த அமைப்பு
பற்றி சொல்லவேண்டும் என எண்ணுகிறேன். கல்லூரியில், கிழக்கு திசை
நோக்கி இருந்த Lawley Hall என அழைக்கப்பட்ட இரு தளங்கள் உயரம் 
கொண்ட பெரிய கலையரங்கம் (Auditorium) த்தின் இரு பக்கங்களிலும் முதல் தளத்திலும்,கீழ் தளத்திலும் வரிசையாய் வகுப்பறைகள் இருக்கும்.

அந்த வகுப்பறைகளின் நுழை வாசல் உள்ள பக்கத்தில் சன்னல்களுடன் கூடிய வராந்தாவும், Auditorium உள்ள மறுபக்கத்தில் சன்னல்களும் இருக்கும். அந்த சன்னல்கள் வழியே பார்த்தால் கலையரங்கம் முழுதும் தெரியும் வண்ணம்
அவைகள் கட்டப்பட்டிருக்கும்.

எனது வகுப்பறை Lawley Hall இன் தென்பகுதியில் இருந்த முதல் தளத்தில் இருந்ததால், கல்லூரி முதல்வர் அவர்கள் என்னை அங்கு அழைத்து சென்றார். 
நானோ அவருடன் மிகுந்த கூச்சத்தோடும் பயத்தோடும் சென்றேன். பல
வகுப்பறைக் கடந்து சென்றபோது அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த
ஆசிரியர்களின் குரலைத் தவிர வேறு ஓசை ஏதும் கேட்கவில்லை.

எனது வகுப்பு அறை முன் சென்றதும் அங்கு அப்போதுதான் வகுப்பை நடத்த ஆரம்பித்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் கல்லூரி முதல்வரைப் பார்த்ததும்
வணக்கம் சொல்லிக்கொண்டே வெளியே வந்தார். அவரிடம் என்னைக் காட்டி.
இதோ உங்கள் வகுப்பு மாணவன். உள்ளே அனுமதியுங்கள். என்னைப் பார்த்து.
இனி காலை வகுப்பு தொடங்கு முன் வகுப்பில் இருக்கவேண்டும். அதோடு
D.No. யும் மறக்காதிருக்கவேண்டும். எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு முதல்வரே கல்லூரிக்கு புதிதாய் வந்துள்ள மாணவனை அழைத்து
சென்று வகுப்பில் விடுவது என்பது எப்போதுமே நினைத்துப் பார்க்கமுடியாத
ஒன்று. அது அவரது வேலையும் அல்ல. இப்போது நினைத்தாலும் அந்த காட்சி
என் மனக்கண் முன் நிழலாடும்போது, அது ஒரு கனவோ என எண்ணத்
தோன்றுகிறது.

அவர் நினைத்திருந்தால் எனது வகுப்புப் பிரிவை, அந்த எழுத்தர் சொன்னதும் 
என்னை அங்கு போகச் சொல்லியிருக்கலாம். அல்லது  கல்லூரியில் உள்ள உதவியாளர் ஒருவரை  என்னுடன் அனுப்பி வகுப்பறையைக் காட்டச் சொல்லியிருக்கலாம். ஆனால் பெற்றோர் வந்து தங்களது பிள்ளைகளை விட்டு செல்வது போல பொறுப்புடன் அவரே வந்து என்னை விட்டு சென்றதை
என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

அவர் கண்டிப்பானவர்தான் ஆனால் அதே நேரம் மாணவர்களிடம், அதுவும்
புதிய மாணவர்களிடம் பரிவுடனும் கனிவுடனும் நடந்துகொள்வார் என்பதை
பின்னர் கேள்விப்பட்டேன். அந்த அனுபவத்தை நான் கல்லூரியில் சேர்ந்த
முதல் நாளே பெற்றேன்.

எனது வகுப்பில் இருந்த ஆங்கிலப் பேராசிரியர் (அவர் திரு பானுமூர்த்தி 
அவர்கள் என பின்னர் அறிந்துகொண்டேன்)  என்னை உள்ளே வரச் 
சொன்னதும், நான் நுழைந்தபோது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் என்னையே பார்த்தது என்னவோபோல் இருந்தது.

வேகமாக உள்ளே சென்று காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து 
கொண்டேன். நான் உட்கார்ந்ததும் அருகில் இருந்த மாணவர் என்னைப்
பார்த்து புன்னகைத்தார்.நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

என்ன பாடம் ஆரம்பித்துவிட்டாரா?’ என அவரிடம் கேட்டபோது இல்லை.
இல்லை இப்போது சுய அறிமுகம் நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயர். ஊரின் பெயர் மற்றும் படித்த பள்ளியின் பெயரை சொல்லவேண்டும்.அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.என்றார் அவர்.

அப்போதுதான் கவனித்தேன். தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, பக்கத்து
மாநிலமான கேரளாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் ஏன் ஆப்பிரிக்க நாட்டிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்கள் எனது வகுப்பில் உள்ளார்கள் என்று.

எனது முறை வந்தபோது எழுந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
எனது அடுத்த இருக்கையில் இருந்தவர் எழுந்து அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன்.

எனது வகுப்பு மாணவர்களில் சிலர் ராஜேந்திர பிரசாத், அண்ணாதுரை, 
கருணாநிதி என புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பெயரைக் 
கொண்டிருந்ததையும் கண்டேன். ஒரு பயிற்சி பாதிரியாரும் எங்களோடு 
மாணவனாக இருப்பதையும் கண்டேன்.    

அறிமுகப்படலம் முடிந்ததும் பேராசிரியர், பள்ளிமாணவனாக இருந்த நாங்கள் கல்லூரியில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டு, 
உடனே பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவர் முதன்முதல் நடத்திய பாடம் இன்னும் நினைவில் இருக்கிறது. அது Jerome K. Jerome எழுதிய  
Uncle Podger hangs a picture என்ற நகைச்சுவை கட்டுரை.

அவரது வகுப்பு முடிந்து, அடுத்து தர்க்கவியல் எனப்படும் Logic பாடம் நடத்த
ஆசிரியர் திரு ஃபெர்னாண்டெஸ் வந்தார். அவர் சிரித்த முகத்தோடு பாடம் நடத்தினாலும், ஒன்றுமே புரியவில்லை. காரணம், புரியாத பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டதால். இந்த அனுபவம் அந்த காலத்தில் தமிழ்வழிக் கல்வி படித்துவிட்டு கல்லூரி வந்த எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் இரண்டாவது மாதமே எல்லாம் சரியாகிவிட்டது.

மதிய உணவு இடைவேளை விட்டதும் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை
எங்கு வைத்து சாப்பிடுவது எனத் தெரியாமல் தயங்கியபோது, எனது பக்கத்து இருக்கை நண்பர் சொன்னார். நான் க்ளைவ் உணவுவிடுதியில் 
தங்கியுள்ளேன். அங்கு எனது அறையில் நீங்கள் வந்து  மதிய உணவை 
சாப்பிடலாம். என்றார். பழகிய சில மணி நேரத்திலேயே, எனக்கு 
நெருங்கிய நண்பராக மாறிவிட்ட அவரைப்பற்றி பின்னர் சொல்லுவேன்.    



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி